Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 11

  இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. எக்மோரிலிருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயிலின் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் தன் ஊரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான் துரைப்பாண்டி.
தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப, அன்று நடந்ததை அசைபோட்டுக்கொண்டே படுத்திருந்தான். காலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே போனை கட் பண்ணிய ரமணியத்தை, இரண்டு மணி நேரம் கழித்துத் தானாகவே அழைத்துப் பேசினாள். அப்போது துரைப்பாண்டி, சரவணன் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டிருந்தான்.
அவள் நிறைய அழுதிருப்பாள் என்றே தோன்றியது. சரவணன் மாமா மற்றும் குடும்பத்தைப் பற்றி அமைதியாகவும் ஆவலாகவும் விசாரித்தாள். பிள்ளைகளைப் பற்றிக் கேட்டாள்.
“இப்ப நீங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க, நான் மட்டும் தனியாளா ஆகிட்டேன், இல்லடா?” என்று அவள் கேட்டபோது துரைப்பாண்டிக்கு வார்த்தை வரவில்லை.
“அப்படியெல்லாம் இல்லை அத்தை.. நீங்க ஊருக்கே வர்றதில்லைன்னு கேட்டதும், சரவணன் மாமா ரொம்ப வேதனைப்பட்டார் தெரியுமா? அந்த மலர் அத்தை தங்கமானவங்க, அவங்கதான் உங்களைப் பத்தி முதல்ல கேட்டது. அவங்க வீட்டுக்கு நான் போன முதல் தடவையே, போன கொஞ்ச நேரத்துக்குள்ளயே உங்களைப் பத்திக் கேட்டுட்டாங்க. அதுவும் அவங்க மக வசுமதி இருக்காளே, அவ உங்களைப் பார்த்தே ஆகணும்னு துடிக்கிறா. உங்க மேல ரொம்பவும் பாசம் வச்சிருக்கிற மாதிரித் தெரியுது. அன்னைக்கு நான் அவங்க வீட்டுக்குப் போனதுல இருந்தே, உங்களோட பேசணும்னு, உங்களுக்குப் போன் போடச் சொல்லி என்னை நச்சரிச்சுட்டா தெரியுமா?”
இதற்கு சில நீண்ட நொடிகள் அமைதியை மட்டுமே அவளால் பதிலாகத் தர முடிந்தது.
“சரிடா பார்க்கலாம். ஒடம்பைப் பார்த்துக்கோ. அப்பாகிட்ட அதிகம் சனடை போடாத.” என்ற வழக்கமான அறிவுரைகளுடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.
ரமணியத்தை பேசியதை நாளை வசுமதியிடம் சொல்லிவிடவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் துரைப்பாண்டி.
ஊருக்குப் போனதும், தன் வேலையில் வசுமதிக்கு போன் போடவே மறந்துவிட்டான் துரைப்பாண்டி.
ஆனால் ரமணி பேசினாளா என்று தெரிந்து கொள்ளாமல் தலையே வெடித்துவிடும்போல் இருந்த வசுமதி, அன்று மாலை அவனுக்குப் போன் போட்டாள்.
“ஹாய்! வசுமதி.. சொல்லு சொல்லு.. அத்தை மாமா எல்லாம் நல்லாருக்காங்களா?”
“இருக்காங்க இருக்காங்க.. உங்க அத்தைகிட்ட பேசுனீங்களா? முதல்ல அதைச் சொல்லுங்க.”
ரமணி பட்டும் படாமலும் பேசியதைச் சொன்னான் துரைப்பாண்டி. அவள் அழுதிருக்கலாம், அல்லது மன வருத்தத்தில் இருக்கலாம் என்ற தன் யூகத்தையும் சொன்னான். அமைதியாகக் கேட்டுக்கொண்டாள் வசுமதி. அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. இது சட்டென்று ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமில்லை. அதற்கு ரமணிக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். ஆனாலும் அவளைப் பார்க்கவேண்டும், அவளிடம் பேசவேண்டும் என்ற துடிப்பு வசுமதிக்குள் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
***
அதற்குப்பிறகான நாட்களில் சற்றுக் களையிழந்துதான் போனான் சங்கர். மகனுக்கு எப்படியாவது ஒரு டூ வீலர் ஷோரூம் வைத்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் மாணிக்கம். அதற்கான பணத்தை ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக இருந்தது. சரசுவும், இனி தரகரை நம்பிப் பயனில்லை என்ற எண்ணத்துடன், உறவுமுறை, சொந்த பந்தங்களில் பெண் பார்க்கும் முடிவுக்கு வந்துவிட்டாள். இப்போதெல்லாம் மித்ராவும் அடிக்கடி மெக்கானிக் ஷெட்டுக்கு வருவதை குறைத்துக் கொண்டாள். எப்போதாவது, அதுவும் உதவி தேவைப்பட்டால் மட்டுமே செல்பேசியில் பேசுவாள். இருந்தாலும் மித்ராவை அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க சங்கருக்கு மனம் வரவில்லை. அவளது வரவுக்காகவும் செல்பேசி அழைப்புக்காகவும் எப்போதும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தான்.
இடைப்பட்ட நாட்களில் வசுமதியின் கார்டை வைத்து அவளுடன் நட்பை வளர்த்துக் கொண்டான் மதன்.
வேலை கிடைக்கிறதோ இல்லையோ, ஏதோ ஒரு காரணத்தை வைத்து பெண்களிடம் பேசுவதே அவனுக்கு அலாதியான சுகம்தான். ஒருநாள் வீட்டில், பாட்டியின் முழங்கால் வலிக்குத் தைலம் தடவிக் கொண்டிருந்தபோது போன் அடித்தது,
“வாவ்! நீங்க எனக்கு போன் போட்றீங்களா.. சொல்லுங்க மேடம்..”
“மதன், உங்க ரெஸ்யூமுக்கு மவுண்ட் ரோட்ல ஒரு கம்பெனியில வேலை இருக்கு. போறீங்களா?”
“என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க? போடா நாயேன்னு சொல்லுங்க. பெட்டி படுக்கையோட போயிடுறேன்.”
எதிர்முனையில் சிரித்தாள் வசுமதி.
“ஓகே, வர்ற திங்கக் கிழமை இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணுங்க. அங்க உள்ள ஹெச்சார் என் ஃப்ரெண்டுதான், பெஸ்ட் ஆஃப் லக்!” என்றபடி இவனது நன்றிக்குக்கூட காத்திருக்காமல் போனை வைத்தாள். மதனுக்கு புதிதாக சிறகு முளைத்தது போலிருந்தது.
*****
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஊர்த் திருவிழாவுக்கு குடும்பத்தோடு வந்து திருவிழா கொண்டாடிவிட்டுப் போவார் சரவணன். வந்தால், தன் பால்ய கால நண்பரான சுரேஷ் வீட்டில்தான் சரவணன் குடும்பத்தினர் தங்குவது வழக்கம். ஊரில் தன் பூர்விக சொத்தான வீட்டை, லீஸுக்கு விட்டிருந்தார். அதன் பிறகு, பிள்ளைகள் பெரியவர்களாகி பத்து, பனிரெண்டு என்று படிக்க ஆரம்பித்ததும் கோயில் திருவிழாவுக்குப் போக முடியாமல் போயிற்று. எப்போதாவது சொந்தத்தில் கல்யாணம், காதுகுத்து என்று போய் வருவதோடு சரி. ஆனால் வருடத்துக்கு ஒருமுறையாவது சுரேஷ் தன் குடும்பத்தோடு சென்னை வந்து விடுவார். வந்து நான்கு நாட்கள் சரவணன் வீட்டில் தங்கி, சென்னையை சுற்றிப் பார்த்துவிட்டுத்தான் போவார்கள். பிரபாவுக்கும் அப்படியொரு ரிலாக்சேஷன் தேவைப்பட்டது.
  அன்று தன் மகளின் திருமணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக குடும்பத்தோடு வந்திருந்தார் சுரேஷ். சுரேஷின் மனைவி பிரபாவும் மகள் மாலாவும் வசுமதிக்கு ரொம்பவும் நெருக்கம். பிரபு மாதிரி அவர்களுக்கும் ஒரு பையன் உண்டு. பெயர் பாலாஜி. அவனும் பனிரெண்டாம் வகுப்புதான். மாலா உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியையாக வேலை பார்க்கிறாள். நிரந்தர வேலைக்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
  தனக்கு திருமண வயது வந்துவிட்டது. தனக்கும் வரன் பார்க்கிறார்கள். என்பதெல்லாம் வசுமதிக்கு எப்போதும் ஒரு விஷயமாகத் தோன்றியதே இல்லை. ஆனால் மாலாவுக்குக் கல்யாணம் என்று கேள்விப்பட்டதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
வந்ததும் பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பின், சுரேஷும் பிரபாவும், ஒரு தட்டில் பழங்கள் மற்றும் இனிப்போடு மகளின் திருமணப் பத்திரிகையை வைத்துக் கொடுக்க, சரவணனும் மலரும் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள். பையன் இஞ்ஜினீயராம். சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். தனக்குத் தேவையான தகவலை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் மலர்.
  பிரபா சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பாள். அவளது பேச்சை ஆர்வமாய்க் கேட்பதுபோல நடிப்பது மலருக்கு எப்போதுமே ஒரு சவால்தான். தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மலர் ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிந்தாலும், தனக்குத் தெரிந்ததை எல்லாம், அதுவும் இருபது வருடக் கதையைக்கூட இருபதே நிமிடத்தில் சொல்லிவிடுவதில் பிரபா திறமைசாலி. அவளின் அந்தத் திறமைக்குப் பயந்துதான் சுரேஷ், பிரபாவின் அருகில் இருக்காமல் எப்போதும் பாதுகாப்பான தூரத்தில்தான் இருப்பார். பிரபுவும் பாலாஜியும் அருகில் இருந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாலாவைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள் வசுமதி.
   பால்கனியை ஒட்டிய சிறு ஹாலில் சரவணனும் சுரேஷும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“உனக்குத் தெரியுமா? எங்க மச்சான் இங்க வந்திருந்தாரு.”
“யாரு பிச்சை வாத்தியார்தானே.. கேள்விப்பட்டேன் சரவணா. உங்க சொந்தத்தை சேர்த்து வச்சிட்டதா மாரிமுத்தண்ணனுக்கு ரொம்ப பெருமைதான். உனக்கு சந்தோஷம்தான?”
“நமக்கு சந்தோஷமென்ன வருத்தமென்ன வேண்டிக்கெடக்கு. அவங்க ஊர்ல இருக்காங்க. நாம இங்க கெடக்கோம். ஏதோ ஊருப்பக்கம் வந்தா முகம் கொடுத்துப் பேசிக்குற அளவுக்குப் பிரச்சினையில்லாம இருந்தா சரிதான். ரமணி ஊர்ப்பக்கம் வர்றதே இல்லையாமே? நீகூட என்கிட்ட சொல்லவேயில்ல.”
“இதென்னப்பா வம்பு.. ஊருக்கு வந்தான்னா, இந்தா ஒன் மச்சானோட தங்கச்சிக்காரி பொங்கலுக்கு வந்தா, தீவாளிக்கு வந்தான்னு சொல்லலாம். வராதவளைப்போயி ஏன் அவா வரலைன்னு வாத்தியாருகிட்டப் போயி விசாரிக்க முடியுமா? அவுகளுக்குள்ளயே பேச்சுவார்த்தை இல்லாதப்ப யாரைப் போயி விசாரிக்கிறது?”
“அதுசரி..”
“நீ மாரிமுத்தண்ணன்கிட்டக் கேளேன். அவருக்குத் தெரிஞ்சிருக்கும். ஏன்.. ஒனக்குப் பார்க்கணும்போல இருக்கா?” சிரித்துக்கொண்டே சொன்னார் சுரேஷ்?
“போலெ கூறுகெட்டவனே! நல்லவேளை ஒம் பொண்டாட்டி முன்னால சொல்லாமப் போன.”
“பார்றா.. அவளுக்கு ஏம்ப்பா பயப்படுறே? ஓன் வீட்டுக்காரிக்குப் பயந்தாலும் ஒரு நாயம் இருக்கு?
சரிவிடு, பிரபாகிட்டயே கேட்டுப்பாரேன். அவளுக்குத் தெரிஞ்சாலும் தெரிசிருக்கும்.”
“ஆளை விடுப்பா சாமி!” என்றபடி எழுந்தார் சரவணன்.
****
“ஹே சொல்லு சொல்லு மாப்பிள்ளை எப்படி?” மாலாவின் கன்னங்களைப் பற்றிக்கொண்டு கேட்டாள் வசுமதி.
“எப்படின்னா..? புரியலை வசு..” வெட்கத்தை மறைத்துக்கொண்டே கேட்டாள் மாலா.
“புரியாத மாதிரி நடிக்காத, அவர் எப்படி, ஜாலி டைப்பா? சிடுமூஞ்சியா? தனியாப் பேசியிருப்பதானே.. அதைப்பத்திச் சொல்லு.”
“சிடுமூஞ்சியெல்லாம் இல்லப்பா. நல்லாத்தான் பேசுறார்.” வசுமதியின் கண்களைப் பார்க்காமல் சிரித்துக்கொண்டே சொண்ணாள் மாலா.
“ஹே.. இரு இரு.. நீ எப்பவும் வட்ட பொட்டுதானே வைப்ப, இப்ப என்ன நீட்டு பொட்டு வச்சிருக்கே?”
“என் முகத்துக்கு இதுதான் நல்லாருக்குன்னு அவர்தான் சொன்னாரு.”
“ஓஹோ…அப்படிப் போடு! உண்மையச் சொல்லு.. லவ்தானே?”
“சேச்சே! அதெல்லாமில்லப்பா.. அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளைதான். இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம்.
கல்யாணத்துக்கு அப்புறமா லவ் பண்ணிக்க வேண்டியதுதான்.”
கண்களில் காதலோடு சொன்ன மாலாவைப் பெருமிதத்தோடு பார்த்தாள் வசுமதி.
யாருக்கும் எந்தவித மனத்தாங்கலும் இல்லாத, என்னவொரு பிராக்டிக்கலான காதல்! தன்னைவிட ஒரு வயது இளையவளானாலும் வசுமதிக்கு, மாலாவின் மீதான மதிப்பு இன்னும் கூடியது.
“வசு, உனக்கொண்ணு தெரியுமா? அவருக்கு இங்க சென்னையில வேலை கிடைச்சிட்டா, நாங்களும் இங்கயே வந்துடுவோம். அப்புறம் நாம அடிக்கடி பார்த்துக்கலாம்.”
“அப்படியா? ஹை.. ஜாலி!”
“ஷ்ஷ்.. இதை யாருகிட்டேயும் சொல்லிடாத. அவர் சென்னைக்கு ட்ரை பண்றது அவரோட அம்மாவுக்கே தெரியாதாம்.”
“அடிப்பாவி! அதுக்குள்ளேவா?”
*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!