Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 26

 வசுமதி யார் முகத்தையும் பார்க்க விரும்பாமல் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
சிறிது நெரத்தில் முகத்தைக் கழுவி, சட்டையை மாற்றிக் கொண்டு வந்தான் துரைப்பாண்டி. மகனைக் கேள்விக்குறியோடு பார்த்தார் பிச்சை வாத்தியார்.
“அப்பா, கிளம்புங்க.. நாம ஊருக்குப் போலாம்.”
“காலையில போகலாம். கம்முன்னு இரு.”
“இல்ல, இப்பவே போவோம் வாங்க.”
“நைட் கார் ஓட்டணும்னா, பகல்ல கொஞ்சமாச்சும் தூங்கியிருக்கணும். இப்ப நீ கார் ஓட்றது நல்லது இல்லை. சாப்ட்டுட்டு படுத்துத் தூங்கு. காலையில கிளம்பலாம்.”
“ஆமா துரை, எதுவா இருந்தாலும் காலையில பார்த்துக்கலாம். இந்தா சமையல் முடியப் போகுது. சாப்ட்டுட்டுப் படு.” என்றாள் மலர்.
அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சரவணன், துரைப்பாண்டியின் தோளைத் தொட்டுச் சொன்னார்.
“சின்னப்பையன் மாதிரி அடம்பிடிக்காதப்பா. சொன்னாக் கேளு. இந்த டென்சனோட வண்டி எடுத்தா சரியா இருக்காது.”
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் போனை எடுத்தான் துரைப்பாண்டி.
“எலே மைக்கலு, ஊருக்கு வர்றதுக்கு ஒரு ட்ரைவரை புக் பண்ணுல. மாமா வீட்டு அட்ரஸுக்கு ஒடனே வரச்சொல்லு. நான் இப்பவே கிளம்பியாவணும்.” என்றான்.
அடுத்த இருபது நிமிடத்தில் வீட்டின் முன்னால் ஆட்டோவில் வந்து இறங்கினார் ஒரு டிரைவர்.
“சார் துரைப்பாண்டி சார்..?”
“நான்தான்.”. என்றபடி டிரைவரின் கையில் சாவியைக் கொடுத்து காரைக் காட்டினான்.
பத்து நிமிடத்தில் கார் கிளம்பிவிட்டது. டிரைவர் வந்த பிறகு மகன் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டார் பிச்சை வாத்தியார். சரவணனையும் மலரையும் பார்த்து கண்களால் விடைபெற்றுக் கொண்டார்.
அமைதியாக அறையைவிட்டு வெளியே வந்த வசுமதி, ஹாலில் வந்து உட்கார்ந்தாள். வீடு அமைதியாக இருந்தது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மலரின் முகத்தில் வருத்தம் தெரிந்தது.
“சேர்த்து சமையல் செய்து வச்சிருக்கேன், இப்படி பொசுக்குண்ணு கிளம்பிப் போயிட்டாங்க.”
அவள் இப்படிச் சொன்னதும் குபீரென்று சிரித்து விட்டார் சரவணன். வசுமதியும் சிரித்துவிட்டாள். இருவரும் சிரிப்பதைப் பார்த்த மலருக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“அப்பாவுக்கும் மகளுக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கு போல?”
“பின்ன இருக்காதா? மகளுக்கு வரன் கிடைக்காம தவிச்சுக்கிட்டு இருந்தியே.. இப்பப் பாரு ரெண்டு பேரு உன் மகளுக்காக அடிச்சிக்குறாங்க.”
வசுமதி சிரிப்பை நிறுத்திவிட்டுக் கோபமாக சரவணனைப் பார்த்தாள். “எல்லாம் உங்களாலதான்பா. நீங்க ஸ்ட்ராங்கா மறுத்துப் பேசியிருக்கணும்.”
“எல்லாம் உன்னாலதான். நீ ஒருத்தனைக் காதலிக்கிற விசயத்தை எங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். நீ திடீர்ன்னு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிற!”
“சர்ப்ரைஸ்லாம் ஒண்ணும் இல்ல. இவங்க ரெண்டு பேரும் தண்ணீல பைக்ல போனதைத்தான் டிவில காட்டிட்டே இருந்தாங்களே!”
குறுக்கே புகுந்து பேசிய பிரபுவை அதிர்ச்சியோடு பார்த்தாள் வசுமதி.
“ம்ம்ம்? அப்படியா?”
“ம்ம்ம்.. அப்படித்தான்.” என்றவாறு அருகில் வந்து உட்கார்ந்தாள் மலர்.
“மக எப்பேர்ப்பட்ட காரியத்தை செய்துட்டு வந்துருக்கா.. அதுக்கு ஒரு வார்த்தைகூட கண்டிக்காம காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. நீங்கள்லாம் ஒரு அப்பா.”
“ஏன் வசு? வீட்டைவிட்டுப் போறதா முடிவு பண்ணியிருக்கே, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?
இப்படியெல்லாம் கஷ்டப்படணுமா என்ன?” மகளின் தலையைத் தடவிக் கொடுத்தவாறு கேட்டார் சரவணன்.
“உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற வயசு உனக்கு இருக்கு. உனக்கான நல்லது கெட்டதை யோசிக்கிற அளவுக்கு புத்தியும் படிப்பும் இருக்கு. அப்புறம் ஏன் யாருக்காகப் பயப்படணும்? பட்டுன்னு விஷயத்தை சொல்லியிருக்க வேண்டியதுதானே?”
‘இங்க ஆரம்பிச்ச கலாட்டாவுக்குப் பிறகுதானே நானே ஒருத்தனைத் தேடிப் போயி லவ் பண்ண ஆரம்பிச்சேன்.’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட வசுமதி, சரவணனின் கையைப் பற்றினாள். “தேங்க்ஸ்பா!”
“வெளங்கிடும்..” கோபமாய் எழுந்த மலர், மகளின் காலைப் பார்த்தாள். “என்னடி இது..கால்ல? என்னாச்சு?”
“அது ஒண்ணுமில்லம்மா.. நேத்து ஒரு இரும்பு பைப்ல இடிச்சிக்கிட்டேன்.”
ஒரே ஒரு நொடி மட்டும் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்த சரவணன், மறு நொடியே இயல்பாகிவிட்டார்.
“சரி விடு. சரியாயிடும். நீ தண்ணி ஏதும் படாமப் பார்த்துக்கோ வசு.”
“நீ என்ன சின்னப்புள்ளையா? ஈர நேரம் அதுவுமா பார்த்து நடக்கக்கூடாதா..?” குனிந்து மகளின் காலைப் பார்த்தாள் மலர். என்னதான் கோபமாக இருந்தாலும் காயம் என்று சொன்னதும் மலரின் கரிசனத்தைக் கண்டதும் நெகிழ்ந்து போனாள் வசுமதி. ராத்திரி எங்க இருந்தேன்னு ஒரு வார்த்தைகூட கேட்காத அம்மா, எதையுமே பெரிது படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அப்பா.. வசுமதிக்கு கண்கள் கலங்கின.
“காலையிலேயே டாக்டரைப் பார்த்துட்டேம்மா. ரெண்டு வேளை மாத்திரையும் சாப்பிட்டுட்டேன். சரியாகிடும்.”
“சரி.. அதான் நெனைச்சது நடக்குதுல்ல.. இப்ப ஏன் கண்ணு கலங்குது?”
அம்மாவை அமைதியாகப் பார்த்தாள் வசுமதி. “அவங்க வீட்ல என்னை எப்படிக் கவனிச்சாங்க தெரியுமா? நான் இப்படி வந்தது தப்புன்னு சொல்லி, அப்பா அம்மா சம்மதத்தோடத்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு அட்வைஸ் பண்ணாங்க. இருந்து சாப்டுட்டு, இருட்டுறதுக்குள்ள பத்திரமா வீட்டுக்குப் போயிடணும்னு சொல்லி அனுப்பி வச்சாங்க. இங்க.. என்னால அவரு அடி வாங்கிட்டார்.”
“அதெல்லாம் ஒரு அடியா? அத்தான் வாங்குனார் பாரு கும்மாங்குத்து. அந்த அண்ணா யாருக்கா? உங்கிட்ட ரொம்ப பயப்படுறார். சாரி மேடம் சாரி மேடம்னு. நீ மட்டும் இல்லேன்னா அத்தான் சட்னியாயிருப்பார்போல.” சொல்லிவிட்டு சிரித்தான் பிரபு.
“அது மதன்.. அவரோட ஃப்ரெண்டு.” பேசிக்கொண்டிருக்கும்போதே வசுமதியின் செல்போன் சிணுங்கியது.
சங்கரிடமிருந்து அழைப்பு. அம்மாவையும் அப்பாவையும் பார்த்துவிட்டு எழுந்தாள்.
“ஹ.. ஹலோ.”
சரசு பேசினாள். “என்னடாம்மா.. அங்க ஏதும் பிரச்சினையில்லையே?”
“பிரச்சினை.. அதெல்லாம் ஒண்ணும்மில்ல ஆண்ட்டி..”
“மாத்திரை சாப்டுட்டியா?”
“இதோ இனிமேத்தான் சாப்பிடணும்.”
“சரி மறக்காம சாப்பிடு. எதுக்கும் கவலைப்படாத என்ன.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
“சரி.”
“வெச்சிரவா?”
“ம்ம்.. பை ஆண்ட்டி.”
மலர், வசுமதியை விநோதமாகப் பார்த்தாள். அவளுக்கு மகளைப் பற்றி பெருமிதமாகவும் கொஞ்சம் பொறாமையாகவும்கூட இருந்தது.
“மாப்பிள்ளை என்ன, இத மாதிரி மாமியார் கிடைக்கிறதே இந்தக் காலத்துல பெரிய விஷயம்தான்.”
சிரித்துக்கொண்டே சொன்னார் சரவணன்.
******
மறுநாள் திங்கட்கிழமை. காலை பத்து மணி இருக்கும். அந்த மிகப்பெரிய உயர்தர ஹோட்டலின் கீழ்த்தளத்தில் இருந்த ரெஸ்டாரெண்டில் காத்திருந்தான் மதன். நகரின் பணக்காரர்களும் பெரும் அரசியல்வாதிகளும் புழங்கும் இடமாகத் தெரிந்ததால், கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தான். அதிக நேரம் காக்க வைக்காமல் சொன்ன நேரத்தில் சரியாக வந்தாள் அந்தப் பெண்மணி.
“ஹை மதன். நான் ப்ரியா.”
சிவப்பாக பழம் போல் இருந்த பிரியா சினேகமாய் சிரித்தாள். வயது ஐம்பதுக்குள் இருக்கலாம். பெரிய கண்ணாடி அணிந்திருந்தாள்.
“ஹ ஹலோ..”
“ஸாரிப்பா.. நேத்து ஈவ்னிங் எனக்கு ஒரு ஜூம் மீட்டிங்க் இருந்தது. அதனாலத்தான் காலையில வரச் சொன்னேன்.”
பாட்டியைப் பற்றியும் மதனின் வேலையைப் பற்றியும் பொதுவாக விசாரித்தாள் ப்ரியா.
அந்த உரையாடலில் அவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை என்பதை அப்பட்டமாய்க் காட்டிக் கொண்டான். மதன். எல்லாவற்றுக்கும் வேண்டா வெறுப்பாக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். அவனாக அவனது அம்மாவைப்பற்றி விசாரிக்க மாட்டான் என்பதை ப்ரியாவும் எதிர்பார்த்திருந்தாள்.
“உங்க அப்பா அம்மா பற்றி உன் பாட்டி எப்பாவாவது சொல்றது உண்டா?”
“இல்ல.. நீங்க சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லிட்டீங்கன்னா நான் கிளம்பிடுவேன். எனக்கு நிறைய வேலை இருக்கு.” மதன் முகத்தில் வெறுப்பைக் காட்டாமல் அமைதியாக சொன்னான்.
“நான் ஒரு கேம்ப்புக்காக கனடா போயிருந்தப்ப மேகலாவைப் பார்த்தேன். ஒரு அழகான சூது வாது தெரியாத குட்டிப்பொண்ணு, அதுக்கு அஞ்சு வயசுல ஒரு குட்டிப்பையன். குழந்தையைப் பிரிஞ்சி வேலைக்காக வெளிநாடு வந்த தமிழ்ப்பொண்ணு. அந்தப் பெண்ணோட கண்கள்ல தெரிஞ்ச மிரட்சியும் வேலையில் இருந்த துடிப்பும்தான் என்னை ரொம்பவும் ஈர்த்தது. நாங்க நண்பர்களானோம். ஒரு மாதம் ஒரே ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ணோம்.”
“ஸாரிப்பா. நான் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சிட்டேன். என்ன சாப்பிடறே?” மெனு கார்டை கையில் எடுத்தாள்.
“இல்ல வேண்டாம் நான் சாப்டுட்டேன்.”
“எனக்குப் பசிக்குதுப்பா..”
“காபி போதும்.”
“சரி, ரெண்டு காபி.” வெயிட்டரைப் பார்த்து சொன்னாள்.
“அப்பா இல்லாத பொண்ணு. காதல் கல்யாணம். கல்யாணத்துக்கு அப்புறமும் மனைவியை படிக்க வச்சு அழகு பார்த்த உன் அப்பாவுக்கு சாகுறதுக்கு ரெண்டு மாசம் முன்னாலதான் டிபி, அதுவும் முத்துன ஸ்டேஜுல இருக்குறது தெரிய வருது. இருபத்தஞ்சு வயசுக்குள்ளாற ஒரு பொண்ணு எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிற துயரம்.. அந்தக் காலத்துல உண்மையிலேயே பெரிய துயரந்தான். இப்ப, இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. வாழ்க்கையை எங்க வேணும்னாலும் ஆரம்பிக்கலாம். எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாம்.”
காபி வந்தது. அமைதியாகக் குடித்தார்கள்.
“இப்ப அவங்க எங்க இருக்காங்க?”
அவனைப் பார்த்து வேதனையோடு புன்னகைத்தாள் ப்ரியா.
“நீ கேள்விப்பட்டிருக்கலாம்.. மைக்கோபாக்டீரியாவால வர்ற இந்தக் காச நோய், சிலருக்கு எந்த அறிகுறியும் இலலாமலேயே ஒரு ஸ்லீப்பர் செல் மாதிரி அவங்களுக்குள்ள இருந்து உயிரை உருக்கிக் கொல்லும்.”
“வேலையில நல்லபேர் எடுத்து நல்லா சம்பாதிச்சி முன்னுக்கு வரும்போதுதான் மேகலாவுக்கு இன்னொரு விஷயமும் தெரிஞ்சது…”
அவளையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் மதன்.
“அவளுக்குக் காதலையும் வாழ்க்கையையும் உன்னையும் கொடுத்த உன் அப்பா, அதையும் கொடுத்துட்டுப் போனது, பாவம் அவளுக்கே தெரியலை போல. அவளுக்குத் தெரியும்போது எல்லாம் கைமீறிப் போயிடுச்சி.
தாய்ப்பாசத்தைக் கொடுக்கிறேன்னு உனக்கும் அந்த வியாதியைக் கொடுத்துடக்கூடாதுன்னுதான் உன்கிட்ட இருந்து ஒதுங்கிட்டதா சொன்னா. எவ்வளவு வேதனையான கதை.. இல்ல?”
“இ..இப்ப அவங்க எங்க .. சொல்லுங்க ப்ளீஸ்.”
“வருசக்கணக்கா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு, அந்த நோயோட போராடிட்டு இருந்த மேகலாவை எட்டு வருஷத்துக்கு முன்னால பிரிஸ்பேன்ல பார்த்தேன்.”
தன் போனை எடுத்து தேடி, ஒரு போட்டோவைக் காட்டினாள். மாஸ்க் அணிந்திருந்த ப்ரியாவின் அருகே ஹாஸ்பிட்டல் கவுன் அணிந்திருந்த மேகலா, கண்களில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் பேருக்கு சிரித்துக் கொண்டிருந்தாள். சில நொடிகளுக்குமேல் அதைப் பார்க்க முடியாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டான் மதன். ‘ஏதோ ஸ்ட்ராங்கான காரணம் இல்லாமலா இருக்கும்?’ முதல் நாள் வசுமதி சொன்னது மனதுக்குள் கேட்டது. மதனுக்கு ஓ-வென்று அழவேண்டும்போல் இருந்தது.
“மதன், ஒரு டூ மினிட்ஸ் என்னோட ரூமுக்கு வர்றியா.. ப்ளீஸ்.”
மறுப்பு சொல்லாமல் எழுந்தான். அவள் முன்னே செல்ல, மெதுவாகப் பின்தொடர்ந்தான். அறை எண் 201ஐத் திறந்தாள். ஹோட்டல் அறையே சொகுசு பங்களா போல் இருந்தது. பெரிய ஹால், பெரிய டிவி. ஹாலில் இருந்த விலையுயர்ந்த சோபாவில் நரைத்த தலையுடன் அமர்ந்திருந்த ஒருவர் ஐபேடில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். இவனைக் கண்டதும் நட்பாய்க் கையை உயர்த்த, பதிலுக்குத் தானும் கைகளைக் கூப்பினான்.
“இவர் என்னோட ஹஸ்பண்ட்..” என்றபடி அவரைக் கடந்து ஹாலைத் தாண்டி இருந்த அறைக்குள் சென்றாள்.
அந்த அறைக்குள் காத்திருக்கும் அதிர்ச்சி என்னவாக இருக்கும் என்ற தயக்கத்தோடு பிரியாவைப் பின்தொடர்ந்து சென்றான் மதன்.
*******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!