Skip to content
Post Views: 1,624
பிச்சை வாத்தியாருக்கு வாய் இடதுபுறம் இழுத்தபடி கோணலாக இருந்தது. கல்யாணம் முடிந்த கையோடு ஒதுங்கிக்கொண்டு, இருபத்தஞ்சு வருஷமாக போக்குவரத்தோ,பேச்சுவார்த்தையோ இல்லாமல் இருந்த தன் தங்கை வந்திருக்கிறாள். அதுவும் சரவணன் குடும்பத்தினரோடு சேர்ந்து தன்னைப் பார்க்க வந்திருக்கிறாள் என்ற செய்தி அவருக்கு சந்தோசமாக இருந்தாலும் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சரவனனும் மலரும் அவரைப் பார்த்தவாறு நிற்க, இருவருக்கும் பின்னால் வசுமதி நின்றாள். கட்டிலுக்கு அருகே போடப்பட்டிருந்த மர ஸ்டூலில் ரமணி உட்கார்ந்திருந்தாள்.
வந்தவர்கள் உட்கார இரண்டு சேர்களையும் ஒரு நீண்ட பெஞ்சையும் கொண்டு வந்து வராண்டாவில் போட்டான் துரைப்பாண்டி. பிறகு உள்ளே வந்து, அப்பாவின் தலைமாட்டில் நின்றுகொண்டான்.
“என்னடா ஆச்சு?”
“ப்ரெஷ்ஷர் அதிகமாருச்சி போல. அது அதிகமானா ஸ்ட்ரோக் வந்துடுமாமே. எனக்கென்ன தெரியும்.” ஆஸ்பத்திரி பேப்பர்கள் அடங்கிய ஃபைலை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“ஏன்.. ப்ரெஷ்ஷருக்கு மாத்திரை போடுறதில்லையா மச்சான்?”
சரவணனைப் பார்த்து மேலும் கீழுமாகத் தலையாட்டினார். கொஞ்சம் சிரமத்தோடுதான் பேசினார்.
“எப்படி வந்தீக.. ரயில்லயா?”
“நீங்க என்ன கேக்கிறீங்க, அவரு என்ன சொல்றாரு பாருங்க..”
“இடது கை, இடது கால் விழுந்துடுச்சி. பேச்சும் முன்ன மாதிரியில்ல. கஷ்டப்பட்டு மெதுவாத்தான் பேசுறாரு.
“எங்க பார்த்தீங்க?” என்றாள் ரமணி.
“விருதுநகர்ல. நாலுநாள் வச்சிருந்து பார்த்துட்டு அனுப்பிட்டாங்க. எதோ பிசியோதெரபி தரணுமாம். அதைத் தொடர்ந்து செய்தா கொஞ்சம் கொஞ்சமா சரியாவுமாம்.”
“ஒங்கண்ணனுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்க அத்தை… வயசான காலத்துல அமைதியா இருக்கணும், பக்குவமாப் பேசணும்னு தெரியமாட்டேங்கு. எப்பப் பார்த்தாலும் எதையாவது நெனைச்சிப் பொலம்பிட்டே இருக்குறது. எல்லாத்தையும் குறை சொல்றதுமா.. இவரோட ஒரே ரோதனையா இருக்கு.”
“ஏன் நின்னுட்டே.. இருக்கணும்.. அப்படி உட்காருங்க..” சரவணனையும் மலரையும் பார்த்து சொன்னார்.
அவருக்காக வாங்கி வந்த பழங்கள் அடங்கிய பையை துரைப்பாண்டியிடம் கொடுத்துவிட்டு சரவணனும் மலரும் வராண்டாவுக்கு வர, வசுமதியும் அவர்களோடு வந்துவிட்டாள்.
தங்கையையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பிச்சை வாத்தியார். ஆஸ்திரேலியா வாசம் அவளை ரொம்பவே மாற்றியிருந்தது. யாரையும் பணிய வைக்கும் பேச்சும், பார்ப்பவர்களை வீழ்த்திவிடும் அவளுடைய தேஜஸும், இவள்தான் சுவரில் மாட்டப்பட்ட பழைய போட்டோவில் இருக்கும் ரமணி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். தன் நினைவுகளின் அடுக்குகளில் இருந்த பழைய ரமணியின் பிம்பத்தை தூசி தட்டி எடுத்து இவளுடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ஓம் மாப்ளயும் பிள்ளைகளும் வரலியா..?”
“இன்னும் நாலு நாள் கழிச்சி வருவாங்க. அதுக்குள்ள எழுந்து உட்காரப் பாருங்க.”
துரைப்பாண்டியிடம் திரும்பினாள். “பிசியோதெரபிக்கு ஆள் வச்சிருக்காடா?”
“ஆமா அத்தை. சேத்தூர்ல இருந்து ஒருத்தர் வருவாரு. தெனமும் காலையில ஒரு மணி நேரம். மாசம் மூவாயிரம் ரூவா.”
“அவர் சொல்றபடி செய்தீங்கன்னா ஒரு மாசத்துல எழுந்து நடந்துடுவீங்க.”
“இருபத்தஞ்சு வருஷம்.. நிஜமாவே.. நீ பெரிய பிடிவாதக்காரிதான்.” கோணலாகச் சிரித்தபடி மெதுவாகப் பேசினார்.
“ஆமா பிடிவாதக்காரிதான். இப்பக்கூட நான் ஒண்ணும் உங்களுக்காக வரலை. என் மகளுக்காகத்தான் வந்திருக்கேன்.”
“மக..? உனக்கு.. ரெண்டும் பையனுகதானே?”
“என் மக வசுமதிக்காக வந்தேன்.”
வசுமதி என்ற பெயரைக் கேட்டதும் அவரது முகம் சுருங்கிப் போனது.
“சரவணன் மவளை.. ஒனக்குத் தெரியுமா?”
“அவளை மட்டுமல்ல, இங்க நடக்கிறது எல்லாம் எனக்குத் தெரியும்.”
“அவளுக்கு.. நீயாச்சும் கொஞ்சம்.. புத்திமதி சொல்லு!”
“அது எப்படி? உங்க பிடிவாதம் அப்படியே உங்க பையனுக்கும் இருக்கு. இதே பிடிவாதம் மத்தவங்களுக்கும் இருந்தா அதை உங்களால தாங்கிக்க முடியலையோ?”
ரமணியின் பார்வையைத் தவிர்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
சமையலறையிலிருந்து காபிக்கோப்பைகளோடு வந்தாள் மரியா. அவளைப் பார்த்ததும் பிச்சை வாத்தியாரின் முகம் மாறியது.
“சாப்பிடுற நேரத்துல.. காபியா?”கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு மெதுவாகக் கேட்டார்.
“நாங்க காலையில வரும்போதே சாப்டுட்டோம்.. நீங்க அமைதியா இருங்க? எதுக்கு அந்தப் புள்ளை மேல இவ்வளவு கோபம் வருது..?” அண்ணனை அதட்டினாள் ரமணி. காபி எடுத்துக்கண்டாள்.
“யாருடா இது? வேலைக்கா வச்சிருக்கீங்க?”
“இது நம்ம எஸ்தர் மகா அத்தை. நம்ம மில்லுல வேலை செய்ற புள்ளதான்.”
“எஸ்தரக்கா மகளா? குழந்தையா இருக்கும்போது பார்த்தது.. இவ்ளோ பெரியவளா ஆயிட்டாளா?”
வராண்டாவுக்கு காபி கொண்டு வந்த மரியாவைக் கண்டதும் நட்பாகச் சிரித்தாள் வசுமதி.
“எப்படியிருக்கீங்க?” என்ற வசுமதியின் கேள்விக்கு சிரித்தபடி தலையாட்டினாள் மரியா.
“எங்க உங்க அம்மாவை காணோம்?”
“அவங்களுக்கு ஒடம்புக்குக் முடியலை. வீட்ல இருக்காங்க. அதான் அவங்களுக்குப் பதிலா நான் வந்திருக்கேன்.”
“என்னாச்சு அவங்களுக்கு? வசுமதி உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.
“ஒண்ணுமில்ல.. ரெண்டு நாளா காய்ச்சல்தான்.”
“எனக்கு அவங்களைப் பார்க்கணும். போவமா?
“அவளைப் புதிதாகப் பார்த்தாள் மரியா. அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வந்த ரமணிக்கும் எஸ்தரைப் பார்க்கவேண்டும்போல்தான் இருந்தது.
“இல்லை எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க எல்லாம் மதியம் சாப்பிட்டதும் அப்புறமா போவலாம். என்றாள் மரியா.
காபியை குடித்துவிட்டு தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ரமணி. அவளருகில் மலரும் வந்து நின்றுகொண்டாள்.
அன்று மதன் வீட்டிலிருந்து சரவணனும் வசுமதியும் ரமணியை அழைத்துவந்தபோது, ஏதோ நீண்ட நாள் பழகிய சிநேகிதியைப்போல அவளைப் பார்த்தாள் மலர். பெண்பிள்ளை இல்லாத ரமணி, தன் மூத்த மகளாக வசுமதியைக் கொண்டாடியதும் அவளுக்காக தன் உடன்பிறந்த அண்ணன் குடும்பத்தையே எதிர்க்கத் துணிந்ததும் அவளுக்கு ரமணியிடம் பெரும் மரியாதையை ஏற்படுத்தியது. பாசம் பொங்கியது. அக்கா அக்கா என்று அவளுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள். அன்று ரமணியை அவள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போகவிடவில்லை. இரவில் தூங்காமல் நிறைய பேசினார்கள். ரெண்டு நாள் தங்க வைத்து, வகை வகையாகச் சமைத்துப் போடவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் நினைத்தது நடக்கவில்லை. மறுநாள் பத்து மணி இருக்கும். ஊரிலிருந்து துரைப்பாண்டி பேசினான். சரவணனுக்கு போன் போட்டு, அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத செய்தியைச் சொன்னான். ரமணியத்தைக்கு போன் போகவில்லை என்ற விஷயத்தையும் சொன்னான். அன்றே அவர்கள் எல்லோரும் ஊருக்குக் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. பிரபுவுக்கு விடுமுறை எடுக்க முடியாததால் அவன் ஊருக்கு வரவில்லை.
“ஒரு காலத்துல இந்த இடம் எவ்வளவு பசுமையாக இருக்கும் தெரியுமா? இங்கதான் எங்க அண்ணி துணி துவைப்பாங்க. இங்க ஒரு மரம் இருந்துச்சி. நாங்க அந்த மர நிழல்ல உட்கார்ந்து படிப்போம்.”
“இவர் சொல்லியிருக்கார்.”
“ஒருமுறை மரத்துல ஏறிப் படிக்கிறேன்னு அத்தான் கீழ விழுந்துட்டாங்க தெரியுமா? அதைக் கேட்டதும் மலர் சிரித்துவிட்டாள்.
“நான் எவ்வளவு சீரியசான கதைய சொல்லிட்டு இருக்கேன், கொஞ்சம்கூட வருத்தப்படாம சிரிக்கியே?”
தன் சிரிப்பை மறைத்து முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டாள்.
“இல்ல, அதெல்லாம் இல்ல.. அப்புறம் என்னாச்சி?”
“நல்லவேளை, பெருசா அடி ஏதும் படலை. அண்ணனுக்கோ, அவரோட வீட்டுக்கோ தெரியாது. எங்க அண்ணிக்கிட்ட நல்லா திட்டு வாங்குனாங்க.”
மறுபடியும் சிரித்தாள் மலர்.
“ஏன் இது நம்புறமாதிரி இல்லையோ?”
“இல்லக்கா.. அப்பவே உங்களை இம்ப்ரஸ் பண்ணப் பார்த்திருக்கார் பாருங்க.”
மலரைப் பொய்யான கோபத்துடன் முறைத்துப்பார்த்தாள் ரமணி. அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் புது சகோதரியாகக் கிடைத்ததில் இருவருக்குமே அளவில்லாத ஆனந்தம்தான்.
“ஒரே கும்மாளமா இருக்கு?” என்றபடி வசுமதி வந்தாள்.
“நாங்க பெரியவங்க ஆயிரம் பேசுவோம், சிரிப்போம். உனக்கென்னடி?”
“ஓ ஓல்டு லேடீஸ் மிட்டிங்கா?” சிரித்துக்கொண்டே அப்பாவிடம் போய்விட்டாள் வசுமதி.
சிரிப்பை நிறுத்திவிட்டு, அவள் போவதையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரமணி.
“என்னாச்சுக்கா? ஏன் அமைதியாகிட்டீங்க?”
“இவளுக்குக் கல்யாணம் பேசி முடிச்சிட்டீங்களா?”
“அதெல்லாம் இல்லை. நான்தான் துரைப்பாண்டிக்குக் கொடுக்கலாம்னு சொன்னேன். அதுக்கு அப்பாவும் மகளும் என் மேல கோபமா இருந்தாங்க. இவளை நேர்ல வச்சு பேசணும்கிறதுக்காகவே உங்க அண்ணனும் துரைப்பாண்டியும் அங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. அன்னைக்குப் பார்த்து இவ அந்தப் பையனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டா. ‘நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். இவரைத்தான் கட்டிக்குவேன்’னு சொல்றா. துரைப்பாண்டிக்குக் கோவம் வந்து, அந்தப் பயனை ஒரு அறை அறைஞ்சிட்டாப்ல.”
“அச்சச்சோ.. யாரு சங்கரையா?” பதறிவிட்டாள் ரமணி.
“ஆமா.. நல்லவேளை, அந்த சங்கர் பக்குவமான பையன்தான். அவன் ஒரு வார்த்தை சொல்லலைன்னா அன்னைக்கு கூட வந்த அவனோட ஃப்ரெண்டு துரையை துவைச்சி எடுத்திருப்பான்.”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன.. உடனே ரெண்டு பேரும் கோவத்துல காரை எடுத்துக்கிட்டு ஊருக்கு வந்துட்டாங்க.”
“எல்லாத்துலயும் எதிர்பார்ப்பு வச்சிக்கிட்டா அப்புறம் ப்ரஷ்ஷர் ஏறாம என்ன செய்யும்?” பெருமூச்செறிந்தாள் ரமணி.
“நாளைக்கு சங்கர் வீட்ல இருந்து வசுவைப் பார்க்க வர்றதா இருந்தாங்க இல்ல?”
“ஆமா.. நாமதான் இங்க வந்துட்டமே. உங்க அத்தான் அவங்ககிட்ட பேசிட்டார். நாம சென்னைக்குப் போனதும் இன்னொரு நாள் வரச்சொல்லிக்கலாம்.” சாதாரணமாக சொன்னாள் மலர்.
***
error: Content is protected !!