Skip to content
Post Views: 1,629
ஊருக்கு வந்ததுமே தான் வந்திருப்பதை சுரேஷுக்கு சொல்லிவிட்டார் சரவணன். அதனால் சாப்பிட்ட பிறகு அப்படியே சுரேஷ் வீட்டுக்குப் போய் வரலாம் என்பது சரவணனின் எண்ணம். மலருக்கும் கொஞ்ச நேரம் சுரேஷின் மனைவி பிரபாவிடம் பேசிவிட்டு வரலாம் போல இருந்தது. அவர்கள் அங்கே கிளம்பினார்கள். மரியாவும் சாப்பிட்டுவிட்டு, பாத்திரங்களை எல்லாம் கழுவிப் போட்டுவிட்டு, முகம் கழுவிக்கொண்டு இருந்தாள். வசுமதி மரியாவிடம் வந்தாள்.
“என்ன போலாமா?”
“ஒரு நிமிஷம்..” என்றபடி ஹாலுக்கு வந்த மரியா, துரைப்பாண்டியின் அருகே தயங்கியபடி நின்றாள்.
“..?”
“மில்லு வரைக்கும் போயிட்டு வரணும்..”
“எதுக்கு?”
“அவுக எங்கம்மாவப் பார்க்கணுமாம்.”
ஒரு கணம் வசுமதி இருந்த திசையைப் பார்த்த துரைப்பாண்டி தலையைக் கவிழ்ந்து கொண்டான். போனை எடுத்துப் பேசினான். “லே மைக்கலு.. காரை எடுத்துட்டு வீட்டுக்கு வாலெ!”
என்று சொல்லிவிட்டு மரியாவைப் பார்த்தான்.
“போனமா வந்தமான்னு இருக்கணும். இவருக்கு மாத்திரை கொடுக்கணும், நாலு மணிக்கு டீ போடணும்.. தெரியும்ல..?”
“தெரியும்.” தலையாட்டினாள் மரியா. அவளைப் பொருட்படுத்தாமல் பிச்சை வாத்தியார் இருந்த அறைக்குள் போனான். அங்கே அண்ணனை சாப்பிட வைத்துக்கொண்டிருந்தாள் ரமணி.
“அத்தை.. அவ மில்லுக்குப் போயிட்டு வரப் போறாளாம். நீங்க போப்போறீங்களா?”
“இப்ப என்னத்துக்கு அங்க போறா.. இங்க வேலைய.. யாரு பார்ப்பா?” ரமணியை முந்திக்கொண்டு கோபமாகப் பேசினார் வாத்தியார். துரைப்பாண்டி அவரை எரிச்சலோடு பார்த்தான்.
“ஒமக்கு இப்ப என்ன பிரச்சினை? சரவணன் மாமா மவா போவணும்கா.. இவா கூட்டிட்டுப் போயிட்டு, கொஞ்சநேரம் இருந்துட்டு வருவா. எந்திரிக்க முடியாம கெடந்தாலும் எங்கிட்டு இருந்துதான் இப்டிக் கோவம் வருமோ..”
“இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப்பட்டுக்கிட்டு இருந்தா ப்ரெஷ்ஷர் ஏறாம என்னண்ணா செய்யும்?”
பதில் பேசாமல், ஸ்பூனை தட்டிலேயே போட்டுவிட்டு சாய்ந்து படுத்துக்கொண்டார்.
“நானும் அதுக கூட போயிட்டு வரணும்டா.. எஸ்தர் எனக்குப் பழைய பழக்கம்..” என்றபடி எழுந்தாள்.
“ஆமாமா.. ஒரு பெரியாளு போனாத்தான் நல்லாருக்கும். அவா பாட்டுக்கு அங்குனயே ஒக்காந்துட்டா, இங்க வேல நடக்காது. ஒரு அரை மணி நேரம் இருந்துட்டு வந்துருங்க.” என்றபடி ஹாலுக்கு வந்தான்.
சிறிது நேரத்தில் மைக்கேல் வந்தான். வசுமதியும் ரமணியும் காரில் ஏறியதும் மரியா முன்புறம் ஏறிக்கொண்டாள்.
கார் மில்லுக்குக் கிளம்பியது.
“இது யாருப்பா, உன் தம்பியா?”
“ஆமாம்மா.”
“படிச்சிருக்கானா?”
“எட்டு வரைக்கு படிச்சான். முழுப்பரீட்சை வரும்போது அப்பா இறந்துட்டாரு. அதோட மில்லுக்கு வந்துட்டான். எல்லா வேலையுஞ் செய்வான். இவன் இருந்தாத்தான் ஒங்க அண்ணன் மகனுக்கு வேலையே ஓடும்.”
கார் மில்லுக்குள் நுழைந்தது. அலுவலகக் கட்டிடத்துக்கு அருகே அவர்களை இறக்கிவிட்டான் மைக்கேல். ஆஃபீஸ் கட்டிடத்தையும் குடோன்களையும் பார்த்துக்கொண்டே வந்தாள் ரமணி. மரியா முன்னே செல்ல, ரமணியும் வசுமதியும் பின்னால் நடந்தார்கள். லைன் வீடுகளில் மூன்றாவது வீட்டில் நுழைந்தாள் மரியா.
அது ஒரு பத்துக்குப்பத்து அறையும் அதை ஒட்டிய சிறு சமையலறையும் கொண்ட வீடு. ஹால் என்று தனியாக எதுவுமில்லை. அறையின் எதிர் சுவரை ஒட்டிப் போடப்பட்ட ஸ்டீல் கட்டிலில் ஒரு பாயை விரித்துப் படுத்திருந்தாள் எஸ்தர்.
“எம்மா என்ன செய்த? யாரு வந்துருக்காங்க பாரு.”
“யாரு..?” கண்களைச் சுருக்கியபடி எழுந்து உட்கார்ந்தாள்.
“அட மெட்ராஸ்காரவுக சரவணன் அவுக மகதானெ? வாங்க வாங்க..நல்லாருக்கீகளா? எப்ப வந்தீங்க?” என்றபடியே வசுமதியைப் பார்த்து சிரித்தாள். கால்களைக் கீழே வைத்து, ஓரமாக ஒதுங்கி உட்கார்ந்து, வந்தவர்கள் உட்கார இடம் கொடுத்தாள்.
“காலையில வந்தோம்.. என்னாச்சி.. இப்படி மெலிஞ்சிட்டீங்க? சரியா சாப்பிடறதில்லியா?” என்றாள் வசுமதி.
“இருங்கம்மா நான் ஆபீஸுக்குப் போய் சேர் எடுத்துட்டு வாரேன்.” என்ற மரியாவைத் தடுத்தாள் ரமனி.
“அதெல்லாம் வேண்டாம். சும்மாயிரு.” என்றபடி கட்டிலில் உட்கார்ந்தாள்.
“இது யாரு?” ரமணியை யோசனையாய்ப் பார்த்தாள்.
“என்னத் தெரியலியா எஸ்தரக்கா?”
“நீங்க..?”
“அம்மா இவங்க சலையல் சூப்பரா இருக்கும் தெரியுமா?”
“தெரியும் தெரியும்..” என்றபடி எஸ்தரையே பார்த்துக் கொண்டிருந்தள் ரமனி.
“என்ன ஒடம்புக்கு? சளி, இருமல் இருக்கா?” அவளின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.
“ர.. ரமணிப்புள்ள..? ஆத்தீ!! ஒரு வழியா அண்ணனைப் பார்க்க வந்துட்டீயளா தாயி?”
“ம்ம்.” சிரித்தாள் ரமணி.
ரமணியைச் சேர்ந்து கட்டிக்கொண்டாள் எஸ்தர். “இங்க பாரு, ஒனக்கு ரெண்டு வயசு இருக்கும்போது ஒன்னையத் தூக்கிட்டு நல்லா விளையாட்டுக் காட்டுவாக.”
“இப்படிக் காய்ச்சல் அடிக்குதே.. டாக்டரைப் பார்க்கலியா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.. எனக்கு சுடுதண்ணி குடிச்சாலே சரியாப் போவும். ரெண்டு நாளா மெளகு ரசம் வச்சிக் குடிச்சேன். அவ்வளதான். நாளைக்கிச் சரியாயிரும்.”
“ரெண்டு புள்ளிகன்னு சொன்னாங்களே.. கூட்டு வந்துருக்கீகளா?”
“இப்ப கூட்டிட்டு வரலை. அடுத்து வரும்போது வருவாங்க. வாங்க போங்கன்னெல்லாம் கூப்பிடக்கூடாது. அப்ப எப்படிக் கூப்பிடுவீங்களோ அப்படித்தான் கூப்பிடணும். இல்லேன்னா நான் உங்ககூட பேசமாட்டேன்.”
ரமணி, தன் கைப்பையைத் திறந்து ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்து ஏதோ எழுதினாள். பின் அதை மரியாவிடம் தந்தாள்.
“இதுல ஒரு டானிக்கும் கொஞ்சம் மாத்திரைகளும் எழுதியிருக்கேன். தம்பிகிட்ட கொடுத்து வாங்கிட்டு வரச்சொல்லு.”
மரியா அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள். போனை எடுத்து மைக்கேலை வரச்சொன்னாள். தோட்டத்தை ஒட்டிக் கிடந்த மர பெஞ்ச்சில் உட்கார்ந்தாள். பின்னாடியே வசுமதியும் அங்கே வந்து நின்று கொண்டாள்.
“அந்தக்காலத்துப் பழக்கம்.. அவங்களுக்குப் பேச நிறைய இருக்கும். அதான் நானும் இங்கிட்டு வந்துட்டேன்.” என்றபடி மரியாவின் அருகே உட்கார்ந்தாள். மைக்கேல் வந்தான்.
“அந்த டாக்டரம்மா.. அம்மைக்கு மருந்து எழுதிக் குடுத்துருக்காக. போய் வாங்கிட்டு வா.” என்றபடி அந்த பேப்பரை அவனிடம் தந்தாள்.
“அப்படியே வரும்போது எதாச்சும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வா. வந்தவங்களுக்கு குடுக்க ஒண்ணும் இல்ல.” அவன் போய்விட்டான்.
ரமணிக்கு மனசு கஷ்டமாக இருந்தது. எஸ்தரைப் பார்க்க வரும்போது பழமோ, இனிப்புகளோ வாங்கி வராததால், செலவுக்கு ஒரு சிறு தொகையை அவளது கையில் திணித்தாள். எஸ்தர் பதறிவிட்டாள். ரமணி எவ்வளவோ முயன்றும் அவள் அந்தப் பணத்தை வாங்கவில்லை.
“இப்படியெல்லாம் தந்து சங்கடப்படுத்தாத. நாங்க சாப்புடுற சோறே உங்க குடும்பம் போடுறதுதான். எங்களுக்கு எந்தக் குறையுமில்ல.” என்று சொல்லி மறுத்துவிட்டாள். அப்போது ரமணியின் போன் ஒலித்தது.
“உங்களுக்கு துரைப்பாண்டி அத்தானை பிடிக்குமா?” வசுமதியின் கேள்விக்கு தரையைப் பார்த்தபடி வெட்கப்பட்டாள் மரியா.
“ஏன் பிடிக்காம.. அவங்க நல்லவங்கதான். கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பாங்க. திடீர் திடீர்னு கோவம் வந்துரும். மத்தபடி அவுகளுக்கு என்ன குறை?”
“நீங்க ரெண்டு பேரும் பழகினது அவங்க அப்பாவுக்கு தெரியாதா?”
இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. தலையை கவிழ்ந்து கொண்டாள்.
“இந்த ஊருக்கே தெரியும்!”
“அப்புறம் ஏன்.. எல்லாருக்கும் தெரிஞ்சி இருந்தா ஏன் இப்படி இருக்கீங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழ வேண்டியதுதானே?”
மரியா ஒரு விரக்தியான சிரிப்பை வெளியிட்டாள்.
“ரெண்டு பேர் ஆசைப்பட்டுப் பழகுறதுக்கு, ஒருத்தருக்கு ஒருத்தரைப் பிடிச்சிருந்தா போதும். ஆனா கல்யாணம் பண்ணிட்டு வாழ்றதுக்கு அந்த ரெண்டு பேரோட சம்மதம் மட்டும் போதாதே. அப்படி இல்லாத பட்சத்துல, விதியை எதிர்த்துப் போராடுற திறமை எல்லாருக்கும் வாய்ச்சிருமா என்ன?”
“அதுவும் நாங்க இருக்குற இருப்புக்கு.. இருக்க இடமும் வயித்துக்குச் சோறும் கிடைக்கிறதே பெருசு.” அவள் கண்கள் கலங்கின. போன் பேசுவதற்காக வெளியே வந்த ரமணி இதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
Advertisement
சிறிது நேரத்தில் அங்கே தோட்ட வேலை செய்யும் முனியாண்டி ஏழெட்டு இளநீர் காய்களோடு வந்தான்.
“கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டுவரச் சொன்னீங்களாம். அது எதுக்கு? அது ஒருத்தருக்குப் புடிக்கும், ஒருத்தருக்குப் புடிக்காது. அதான் மைக்கலு எளனி குடுக்கச் சொன்னாப்ல.”
இளநீரை வெட்டி மூவருக்கும் கொடுத்தான். பத்து நிமிடத்தில் கேட் அருகே பைக் சத்தம் கேட்டது. கையில் மாத்திரை மருந்துடன் மைக்கேல் வந்தான். அதை வாங்கிக்கொண்டு எஸ்தரிடம் சென்ற ரமணி, எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை, குழந்தைக்குச் சொல்வதுபோல விளக்கிச் சொன்னாள்.
“நல்லா சாப்பிடணும், உடம்பைப் பார்த்துக்கணும் சரியா?” வசுமதியும் தன் பங்குக்கு கண்டிப்புடன் சொன்னாள். எஸ்தர் சிரித்துக்கொண்டே தலையாட்டினாள். அதன்பின் மைக்கேல் காரை எடுக்க, மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
***
Advertisement
error: Content is protected !!