Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் நதி

காதல் நதி 32 (Pre Final)

 மலரும் சரவணனும் ஆளுக்கொரு சேரில் உட்கார்ந்திருக்க, எதிரே இருந்த நீண்ட பெஞ்சில் ரமணி அமர்ந்திருந்தாள். அவள் மடியில் தலை வைத்தவாறு படுத்துக்கொண்டே தன் போனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுமதி.
“உங்க பிள்ளைங்க எப்ப வர்றாங்களாம்கா?” என்று கேட்டாள் மலர்.
“வர்ற வெள்ளிக்கிழமை மதன் அம்மாவோட லாயர் வர்றார். அவர்கூட வர்றாங்க.”
“ம்மா..” வசுமதி, ரமணியின் கன்னத்தைப் பிடித்து இழுத்தாள்.
“ம்?”
“தம்பிங்க ரெண்டு பேர் பேரும் சரண், ஹரன்-னுதானே சொல்லியிருந்தீங்க?”
“ஆமா இப்ப என்ன அதுக்கு?”
“சரண்-ணா எங்க அப்பாவோட பேர்தானே?”
மகள் திடீரென்று இப்படிக் கேட்டதும், சரவணன் பதறிப்போனார். மலருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
பிச்சை வாத்தியார் இருந்த அறையை ஒரு நொடி பார்த்துவிட்டுத் திரும்பிய ரமணி, அவள் தலையில் குட்டினாள்.
“சொல்லுங்கம்மா.. அந்தப் பேர் இல்லையா?”
“ஒன் தலை..”
“பின்னே?”
“என் வீட்டுக்காரரோட அம்மா பேரு சரண்யாவாம். அந்தப் பேரைத்தான் அவனுக்கு வச்சிருக்கு.” என்றபடி வசுமதியின் கன்னத்தைப் பிடித்துத் திருகினாள்.
“ஓ.. சரிசரி..”
“மதன் போன் பண்ணியிருந்தான். தெரியுமா?”
“அப்படியா?”
“ம்ம்.. அவங்க அம்மாவோட அஸ்தியைக் கரைக்கப் போயிட்டு இருக்கான்.”
“தனியாவா?”
“எனக்கென்ன தெரியும் இதெல்லாமா நான் கேட்க முடியும்?”
“நானே கேட்டுக்கறேன். ரமணிம்மா, அவனை ஒரு பொண்ணு லவ் பண்ணுது தெரியுமா?”
“எனக்கெதுக்கு தெரியணும்? அது அவனுக்குத்தான் தெரியணும்.”
“சீரியஸாத்தாம்மா?”
மலருக்குக் கோபம் வந்தது. “வேற எதையாச்சும் பேசுடி. ஒரே அவன் இவளை லவ் பண்றான்.. இவன் அவளை லவ் பண்றான்னு நாடே நாசமாப் போயிட்டு இருக்கு. என்ன காதலோ என்ன கண்றாவியோ? எவன்தான் இதைக் கண்டுபிடிச்சான்னு தெரியலை.”
வசுமதி எழுந்து உட்கார்ந்தாள். “மம்மீ உங்களுக்குக் காதல்ன்னா தெரியாதா?”
அவளை முறைத்தாள் மலர். “ஐய்யோ.. வாயை மூடு. கேவலப்படுத்தாத.”
“ம்மா.. அன்புதாம்மா எல்லாம்.. பேர்தான் வேற வேற.”
“நீங்க என் மேல வச்சிருக்குற அன்புக்குப் பேரு பாசம். அப்பா மேல வச்சிருக்குற அன்புக்குப் பேரு காதல், அவ்ளோதான் சிம்ப்பிள். மனுசன் மனுசியா பிறந்துட்டா, மனசுக்குப் பிடிச்சவங்களோட கல்யாணத்துக்கு முந்தியோ இல்ல கல்யாணத்துக்குப் பிறகோ காதல் வர்றதுதானே இயற்கை?”

வாசலில் சத்தம் கேட்டது. துரைப்பாண்டியும் மாரிமுத்துவும் வந்தார்கள்.
“வா சரவணா.. என்ன சொல்றாரு ஒங்க மச்சான்? காலையில் வந்திங்களோ?”
“ஆமா அண்ணாச்சி, வாங்க வாங்க. நல்லாருக்கிங்களா?”
“அட எனக்கென்னப்பா.. எந்தக் கொறையுமில்ல. என்ன அதிசயம்.. வராத மகராசி வந்துருக்கா…என்ன ரமணி, சவுரியந்தானா? மாப்ள பிள்ளைகளை எல்லாம் காணோம்?”
“நல்லாருக்கேம்ணே. அவங்க அடுத்த வாரம் வருவாங்க.”
“இப்படி இருந்துட்டியே தாயி.. அண்ணனை ஒதுக்கி வச்சிட்டு. வசுமதிஇயைப் பார்த்தார். அட நீயும் வந்துருக்கியாம்மா?”
“எண்ணமோப்பா.. வாத்தியாரு என்ன என்னவெல்லாமோ நெனைச்சாரு. கடைசில ஒண்ணும் நடக்காமப் போச்சி. எப்படி இருந்த மனுசன் அப்படியே சாஞ்சிட்டாரே!”
அவர் பேசிய விதம் வசுமதிக்கு எரிச்சலாக இருந்தது. அவரது வழுக்கைத் தலையில் ஓங்கி ஒன்று வைக்க வேண்டும் போல் இருந்தது.
“திரும்பத் திரும்ப எதுக்கு பழைய கதையவே பேசுதீங்க? வேற எதையாவது பேசுங்கண்ணாச்சி.”
“அதுக்கில்லை சரவணா.. குடும்பம் ஒண்ணு சேரணும்னுதான பெரியங்க நெனைப்பாங்க..”
“இங்க யாரு இப்ப மல்லுக்கட்டிக்கிட்டு கெடக்காங்க? ஒண்ணாத்தான இருக்கோம்..”
உள்ளே இருந்து பிச்சை வாத்தியார் தொண்டையை செருமும் சத்தம் கேட்டது.
அவருக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான் துரைப்பாண்டி
“மாரிமுத்து சொல்றதுல.. என்ன தப்பு இருக்கு..?”
ரமணி எழுந்து அண்ணனிடம் போனாள். “அப்ப நீங்க பொண்ணு எடுக்கணும்கிற எண்ணத்துலதான் மச்சினங்கிட்டத் தேடிப் போய் சேர்ந்தீங்களா?”
“நீங்களே கேளுங்க அத்தை, சும்மாயிருந்தவனை ஆசை காட்டிப்புட்டு, ஏமாத்திட்டாங்க.”
“நீ வாயை மூடு. இவங்க ஆசை காட்டுனாங்கண்ணா ஒனக்கு அறிவில்லை?
ரமணி, மாரிமுத்துவிடம் திரும்பினாள். “எண்ணே..நீங்க என்ன, இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கணும்னு வந்துருக்கிங்களா?” ரமணியின் கோபத்தை எல்லோரும் பார்த்தார்கள். சரவணனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அண்ணனுக்கு முன்னால் அவள் அப்படிப் பேசுவாள் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை.
“விடு விடு.. மெதுவாகப் பேசு. அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாம் வேடிக்கை பார்க்குற மாதிரி ஆயிடப் போவுது. போ. பெஞ்சில போயி உக்காரு.” சரவணனின் பேச்சுக்கு அமைதியானாள் ரமணி.

பிச்சை வாத்தியார் சரவணனைப் பார்த்தார். அவர் முகத்தில் ஏளனம் தெரிந்தது.
“நான் உன் மக.. பேசுறதெல்லாம்.. கேட்டுட்டுத்தான் இருந்தேன்.”
சரவணன் அவரை கேள்விக்குறியோடு பார்த்தார்.
“பொட்ட புள்ளைய இப்படி வளர்த்துட்டீங்களே மாப்ளை.” அந்த வார்த்தை வாசலுக்கு அருகே இருந்து கேட்டுக் கொண்டிருந்த மலருக்கு சுருக்கென்று தைத்தது. அவளுக்கு கோபம் வந்தது. வசுமதிக்கும் கோபம் வந்தது. ரமணிக்கும் கோபம் வந்தது.
“என்னண்ணா பேசுற நீ, அப்ப ஆம்பளப் புள்ளையன்னா எப்படி வேணா வளர்க்கலாமா? இது என்ன பேச்சு.. இவன் என்னடான்னா. எல்லாரும் சேர்ந்து என்னை ஆசை காட்டி மோசம் பண்ணிட்டீங்கன்னு சொல்றான். நான் கேக்குறேன்.. சமையல் அறைக்குள்ள வேலை பாத்துட்டு இருக்காளே அந்தப் புள்ளைய ஆசை காட்டி மோசம் பண்ணது யாரு? அது உன் வளர்ப்புதானே?”
நகர்ந்து ரமனியருகே வந்து நின்ற மலர், பிச்சை வாத்தியாரை ஒரு பார்வை பார்த்தாள்.
“எங்க புள்ள வளர்ப்பு பத்தி நீங்க ஒண்ணும் சொல்லத் தேவையில்லை. நான் உங்க மேல நிறைய மரியாதை வச்சிருந்தேன் இப்படி பேசிட்டீங்களே.” கோபத்துடன் சொன்னாள்.
“சரி சரி இப்ப எதுக்கு பழைய கதைய எல்லாம் பேசிக்கிட்டு உங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டு.. அடுத்து நடக்கப் போறதப் பாருங்க.” என்றபடி எழுந்தார் மாரிமுத்து.
மலர் விடவில்லை. “என் மகளுக்கு நாங்க மாப்பிள்ளை பார்த்துட்டோம். பேசிட்டோம். இனிமே அதைப்பத்தி நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்க உங்க பிள்ளையைப் பத்தி மட்டும் கவலைப் போட்டுக்கோங்க.” அடுத்து மாரிமுத்துவிடம் திரும்பினாள். “ஏன் அண்ணாச்சி நான் கேள்விப்பட்டேன்.. உங்க ரெண்டாவது பையன் ஊரு விட்டு ஓடிட்டானாமே? அது உங்க வளர்ப்பா?”
“யார் சொன்னா அவன் ஊரை விட்டு ஓடிட்டான்னு..? அவன் வேலைக்காக வெளியூர் போயிருக்கான்.” என்றபடி எழுந்தார் மாரிமுத்து.
“தெரியும் தெரியும்.. எங்களுக்கு எல்லாம் தெரியும். தனியாப் போய் கல்யாணம் முடிச்சுக்கிட்டான் அதை வெளியில சொல்ல உங்களுக்கு அவமானமா இருக்கு. நினைச்சதை நடத்திக்குற தைரியம் என் மகளுக்கு இருக்கு. அதை ஏத்துக்குற பக்குவமும் தைரியமும் எங்களுக்கு இருக்கு. இந்த தைரியம் துரைபாண்டிக்கோ உங்களுக்கோ இல்லையே.. நீங்க எல்லாம் பேசலாமா?”
அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மரியா, அமைதியாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதற்குமேல் ஒரு நிமிடம்கூட அங்கே நிற்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார் மாரிமுத்து.
வசுமதிக்குத் தன் அம்மாவைப் பார்க்கையில் ரொம்பவும் பெருமிதமாக இருந்தது.
“சரி, வந்தோம், பார்த்துட்டோம். நீங்க ஒடம்பப் பார்த்துக்கங்க மச்சான். நாங்க கிளம்பறோம்.” என்றபடி எழுந்தார் சரவணன். இதற்காகவே காத்திருந்ததுபோல மலரும் வசுமதியும் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
“இந்நேரம் எப்படி அத்தான் போவீங்க.. காலையில போகலாம்ல?” என்றாள் ரமணி.
“இல்ல.. மதுரை போயி மாறிப்போம். இல்லேன்னா கார் வச்சுக்குவோம். துரைப்பாண்டி சரவனன் அருகே “வந்தான். மாமா ரெண்டு நிமிஷம் உட்காருங்க.. காரை எடுத்துக்கிட்டு வரச்சொல்றேன். மைக்கலு உங்களை ராஜபாளையத்துல விட்ருவான்.” சரவனன் அதை ஆமோதித்தாலும் உட்காரவில்லை.
***

முன்னரே பேசியதுபோல மறு வெள்ளிக்கிழமை மாணிக்கமும் சரசுவும் சங்கரோடு வசுமதியின் வீட்டுக்கு வந்தார்கள். கூடவே மதனும் அவனது பாட்டியும் வந்திருந்தார்கள். அதற்கு முதல் நாளே தன் கணவர் ப்ரவீணுடன் வந்து அத்தான் வீட்டில் தங்கியிருந்தாள் ரமணி. வரவேற்பு தடபுடலாக இருந்தது. எந்தவித படாடோபமும் இன்றி எளிமையாக இயல்பாகப் பேசிய மாணிக்கத்தையும் சரசுவையும் பார்க்க மலருக்கு நிறைவாக இருந்தது.
“ஹாய் மதன்.. எப்படியிருக்க?” அவனை உரிமையாய்த் தன்னோடு அணைத்துக்கொண்டார் ப்ரவீண்.
“பெரிய ஆளா இருப்ப போலிருக்கே!”
“ஐயோ அப்படியெல்லாம் இல்ல சார். நீங்க ஏன் இப்படிச் சொல்றீங்கன்னுதான் புரியல.” சிரித்துக்கொண்டே ரமணியைப் பார்த்தான் மதன். வந்த ஒருநாளுக்குள்ளே ப்ரவீணுக்கு செல்லக்குட்டியாகவிட்ட பிரபுவும் அவரருகே வந்து நின்றுகொண்டான். “அப்பா, இந்தண்ணா உண்மையிலயே பெரியாளுதான் தெரியுமா?” என்று சிரித்தான்.
எல்லோருக்கும் எல்லோரையும் அறிமுகப்படுத்திவைத்தார் சரவணன்.
சிறிது நேரத்தில கையில் காபி ட்ரேயுடன் வந்தாள் வசுமதி. மழைநாள் இரவில் சங்கர் கொடுத்த அந்த அடர் பச்சை நிற சேலையில் தேவதைபோல் ஜொலித்தாள். வெளி உலகை மறந்து அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தான் சங்கர். அங்கேதான் மதனுக்கான சர்ப்ரைஸும் இருந்தது. வசுமதிக்குப் பின்னால் இளஞ்சிவப்பு வண்ணப் புடவையில், ஸ்நாக்ஸ் வைக்கப்படிருந்த சிறு சிறு பேப்பர் தட்டுகள் இருந்த ட்ரேயுடன் ஜனனி வந்தாள். மதன் வாயைப் பிளந்தான். அந்த நாள்.. அன்பும் ஆனந்தமும் மட்டுமே அங்கே தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
***
அடுத்துவந்த முதல் முகூர்த்தத்திலேயே சென்னையின் ஒரு பிரபலமான மண்டபத்தில் சங்கர், வசுமதி கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. சரணும் ஹரனும் பிரபுவோடு ஓடியாடி வந்தவர்களைக் கவனித்தார்கள். சுரேஷும் பிரபாவும் மகள், மருமகன் சகிதமாக வந்திருந்தார்கள். மித்ரா வெளியூர் போயிருந்ததால் அவளால் வரமுடியவில்லை. சங்கருக்கும் வசுமதிக்கும் பின்னால் நின்றவாறு மதனும் ஜனனியும் ஒருவரை ஒருவர் கண்களால் விழுங்கிகொண்டு இருந்தார்கள். உடல்நிலை காரணமாக பிச்சை வாத்தியாரால் வரமுடிவில்லை. மாரிமுத்து வந்திருந்தார். துரைப்பாண்டி, எஸ்தரையும் மரியாவையும் கூட்டி வந்திருந்தான். அவன் இப்படி மாறியது வசுமதிக்கு சந்தோசமாகவும் நிறைவாகவும் இருந்தது. கண்களில் கண்ணீர் மல்க வசுமதியைக் கட்டிக்கொண்டாள் மரியா.
“இப்ப எனக்குத் தைரியம் வந்துருச்சி அத்தை.” என்று போகும்போது மலரிடம் சொல்லிவிட்டுப் போனான் துரைப்பாண்டி.
***



Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!