Skip to content
Post Views: 3,620
புசிக்க புசிக்க
பசியைத் தூண்டுகிறாய்
நீ..
வசுமதியின் காதோரம் கவிதை சொன்னான் சங்கர்.
“மணி ஏழாச்சு.. மாமா அத்தை என்ன நினைப்பாங்க.. எழுந்திருங்க.” என்றாள் வசுமதி.
“எல்லாரும் என்ன நினைப்பாங்களோ அதையே நினைச்சிட்டு போவட்டும்.” அவளை இறுக்கி அணைத்தபடி கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கிடந்தான். என்னவொரு வாழ்க்கை.. எல்லாம் இவளால்தான். இருவரும் சேர்ந்து பிசினஸ் லோன் போட்டிருக்கிறார்கள். மதனுக்கு அவனது அம்மாவின் இன்சூரன்ஸ் பணம் நாற்பத்தெட்டு லட்சம் கிடைத்திருக்கிறது. இருவரும் சேர்ந்து டூ-வீலர் ஷோரூம் வைக்கப் போகிறார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதனின் பாட்டிக்கும் அவ்வளவு நிறைவு. அத்தனை ஐஸ்வர்யங்களையும் தன்னோடு கொண்டுவந்த வசுமதியிடமிருந்து அவனுக்குக் கிடைத்ததெல்லாம் அள்ள அள்ள காதலும் அன்பும்தான். அவளால் இந்த உலக இன்பங்களின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தான். போன் அடித்தது.
“விடிஞ்சதுல இருந்து நாலாவது முறையா போன் அடிக்குது. எடுத்து என்னன்னு கேளுங்க. டிங்கு டிங்குன்னு வாட்சாப் மெஸேஜா வந்துட்டு இருக்கு.” எதையும் காதில் வாங்காமல் அவளை மேலும் இறுக்கி அணைத்து அவளின் காது மடலை மென்மையாக கடித்தான்.
“என்னமும் வந்துட்டுப் போகட்டும். பொண்டாட்டி இருக்கும்போது எவனாவது போனை நோண்டுவானா?”
எழப் போனவளைப் பிடித்து இழுத்துத் தன்மீது போட்டான். அவனின் மார்பில் கிடந்தவாறு வசுமதி முறைத்துப் பார்த்தாள். கண்களில் இரவின் களைப்பு தெரிந்தாலும், பூஜையறை புஷ்பம் போல முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது. “எழுந்திருப்பா.. மீதியை நைட்டு பார்த்துக்கலாம். நான் குளிக்கணும் ” கையை பக்கவாட்டில் நீட்டி போனை எடுத்து அவனிடம் தந்தாள். கலைந்திருந்த ஆடையை சரி செய்தபடியே அவள் குளியலறைக்குள் போக, சங்கர் சட்டையைப் போட்டுக்கொண்டு கதவைத் திறந்தான்.
மதன் அங்கே பல்லைக் கடித்தபடி நின்றுகொண்டிருந்தான். ஹாலில் ஜனனி உட்கார்ந்திருந்தாள்.
“ஏன்டா.. எத்தனை தடவைடா போன் அடிக்கிறது? வாட்சாப்புகூட பார்க்க மாட்டியா? ரெண்டு மாசமாச்சிடா.. என்னமோ நேத்துதான் கல்யாணமான மாதிரி உள்ளயே கெடக்க?”
“கத்தாத.. லீவுன்னா நான் போன் பார்க்க மாட்டேன் தெரியாதா? என்னாச்சு? எதுவும் ஃபங்ஷனா? ரெண்டு பேரும் பிரமாதமா கிளம்பி வந்துருக்கீங்க?” சோபாவில் அமர்ந்தபடி கேட்டான்.
“நீ ரெண்டு நாளா போன் எடுக்கலையாமே?”
ஒரு தட்டில் திருப்பதி லட்டை கொண்டு வந்து ஜனனிக்கும் மதனுக்கும் கொடுத்தார் மாணிக்கம்.
“டென்சன் ஆகாத மதன்.. திருப்பதிக்குப் போயிருந்தோம்ல.. அதனால போன் எடுத்துருக்காது.”
“என்னப்பா.. நான் இவ்ளோ நேரம் கத்திட்டு இருக்கேன், அம்மா இன்னும் காபி தரல?”
“அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் கத்திக்கிட்டு இரு. இப்பதான் பாலை அடுப்புல வச்சிருக்கேன்.” சமையலறையிலிருந்து சத்தம் கொடுத்தாள் சரசு. அப்போது சிரித்துகொண்டே அறையிலிருந்து வசுமதி வெளியே வந்தாள். முகம் கழுவி பளிச் என்று இருந்தாள். “ஹே.. ஜனனி.. எப்படி இருக்க?”
“சூப்பரா இருக்கேன்க்கா!”
வசுமதியைப் பார்த்து முறைத்த மதன் மாணிக்கத்திடம் திரும்பினான். “நீங்க ரெண்டு பேரும் மகனைத்தான் செல்லம் கொடுத்துப் பாழாக்கிட்டீங்கன்னு பார்த்தா, இப்ப மருமகளையும் ஓவர் செல்லம் கொடுத்துப் பாழாக்கிடுவீங்க போல? எந்த வீட்லயாவது மருமக இப்படி ஒம்போது மணிக்கு எந்திரிப்பாளா?”
“எங்க வீட்ல ரொம்பப் பேசுனா இனிமே காபி கிடைக்காது.” என்றபடி வசுமதி சமையலறைக்குள் போனாள்.
“ஆத்தீ!” மதன் வாயைப் பொத்திக்கொண்டான்.
“வந்த விசயத்தை சொல்றா?”
“ஆமா.. நீதான் லீவுன்னா போனை பார்க்க மாட்டியே.. இன்னிக்கு வடபழனி கோயில்ல ஒன் லவ்வருக்குக் கல்யாணமாச்சே. நீ கிளம்பி ரெடியா இருப்பேன்னு வந்தோம்..”
“என்னடா ஒளர்றே?” யோசித்தான் சங்கர்.
“அதாண்டா.. ஒன் மொத ஃப்ரெண்டு.. மித்ராவுக்கு கல்யாணம்!”
வசுமதி காபி கோப்பைகளுடன் வந்தாள். தனக்கான காபியை எடுத்துக்கொண்டு வராண்டாவுக்குப் போய்விட்டார் மாணிக்கம்.
“மித்ரா கல்யாணம் இருக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் எப்ப கல்யானம் பண்ணப்போறீங்க?” என்று வசுமதி ஆரம்பிக்க. “அதானே.. இப்படி சும்மா ஜோடியாவே சுத்திட்டு இருந்தா எப்படி?” என்றான் சங்கர்.
“சும்மால்லாம் இல்ல மச்சான்.. ஒனக்கொரு விசயம் தெரியுமா? ரெண்டு மாசத்துல கல்யாணம் முடிச்சே ஆகணும். ரமணியம்மாகிட்டயும் டிக்கெட் போடச் சொல்லியாச்சு”
“அட அந்த அளவுக்கு என்னடா ஆச்சு?” குரலைக் தழைத்துக்கொண்டு சங்கர் கேட்க, வசுமதியும் பக்கத்தில் வந்தாள்.
“அது என்னன்னா.. உங்க கல்யாணத்துக்கு முன்னால, நாங்க அஸ்தியை கரைக்கிறதுக்காக ராமேஸ்வரம் போனேன்ல..”
சங்கர் முறைத்தான்.. “நீயெல்லாம் என்கிட்ட பேசாத. நான் கூட வரவான்னு கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டு, ரெண்டு பேரும் ஜோடியா கார்ல போயிருக்கீங்க.”
“ஆமா.. நான் கூப்பிடலைடா.. இவளாத்தான் நானும் வாரேன், என் கார்லயே போயிடலாம்னு சொன்னா.. அப்பதான் போயிட்டு வரும்போது ஒரு பிரச்சினையாயிடுச்சி..”
“என்னாச்சி? காரை எங்கேயும் இடிச்சுக்கிட்டீங்களா?”
“அதெல்லாம் இல்ல மச்சான்..”
“அப்புறம்?”
“வரும்போது டயர்டுல ஒரு ஹோட்டல்ல தங்க வேண்டியதாப் போச்சி..”
“ரொம்ப இழுக்காம சட்டுன்னு சொல்லு.”
மதன் சுற்றும் முற்றும் பார்த்தான். சரசுவும் மாணிக்கமும் வராண்டாவில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“அப்ப ரூம்ல இவளை கலாட்டா பண்ணனும்கிறதுக்காக நான் சட்டையை கழட்டிட்டு..”
“கழட்டிட்டு?”
“ஒனக்கு ஆண் கொழந்தை வேணுமா பென்கொழந்தை வேணுமான்னு கேட்டுப் பயமுறுத்துனேன்.”
“அதுக்கு ஒடனே பயந்து அழுதுட்டாளா?” என்று கேட்ட வசுமதியைப் பாவமாகப் பார்த்தான் மதன்.
சங்கரிடம் திரும்பினான். “இவ என்ன சொன்னா தெரியுமா.. எனக்குப் பையனும் வேண்டாம் பொண்ணும் வேண்டாம். இப்போதைக்கு நீதாண்டா வேணும்னு என் மேல பாய்ஞ்சிட்டா மச்சான். அன்னைக்கே என்னை செதைச்சிட்டாடா..” என்றபடி சங்கரின் தோளில் சாய்ந்தான். ‘கொல்’லென்று சிரித்துவிட்டாள் வசுமதி.
ஜனனி தன் முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள். அங்கே காதல் நதி கரை புரண்டோடியது.
***
error: Content is protected !!