Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் (பரி)பாஷை பேசிடவா

காதல் (பரி)பாஷை பேசிடவா 1

அத்தியாயம் 1

உதயகீதன்
வெட்ஸ்
ராகவர்ஷினி

என்று கொட்டை எழுத்துகளையும், அதை சுற்றியும் பல வண்ண சிறு பல்புகளையும் சுமந்த வரவேற்பு பலகை அந்த பெரிய மண்டப வாயிலை அலங்கரித்திருந்தது.

வெளியே இருந்த பிரம்மாடத்திற்கு சற்றும் குறையாத வண்ணம், உட்புறமும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



Advertisement

அலங்காரங்கள் எல்லாம் மனதை பறிக்கும் வகையில் இருந்து என்ன பிரயோஜனம்? அங்கிருந்து ஒருவருக்கும் அதை ரசிக்கும் மனநிலை இல்லையே!

குறைந்தபட்சம் மணமகனிற்கு அந்த மனநிலை சற்றும் இல்லை என்பதை அவனின் இறுகிய முகமே காட்டிக் கொடுத்தது.

இத்தனைக்கும், அவன் பார்த்து பார்த்து சொல்லிய அலங்காரங்கள் அவை. பாராட்டுகள் முழுவதையும் அவனிற்கு கொடுத்து விட முடியாது தான்.

Advertisement

ஏனென்றால், அவன் கூறிய ஏற்பாடுகளில் சிலவற்றை நீக்கி, பலவற்றை சேர்த்து என்று இப்போது இருக்கும் அலங்காரங்களின் இறுதி முடிவை எடுத்தது அவள்.

Advertisement

அவள், ராகவர்ஷினி.

ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகமாகி, நட்பாக பழகி, காதலை பகிர்ந்து, இதோ இன்று திருமணம் செய்து கொள்ள இருந்தவள்.

ஆம், இருந்தவள் தான்!

Advertisement

அது தான், அவர்களின் திருமணம் நடைபெற முடியாத சூழ்நிலை உருவாகி விட்டதே.

தன்னை கையறு நிலையில் நிறுத்திய அந்த சூழலின் மீது தான் உதயனின் மொத்த கோபமும்.

உள்ளே இப்படியிருக்க, அதை எதுவும் அறியாமல் அந்த மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தாள் ஜீவநந்தினி.

பட்டுச்சேலை சரசரக்க அதற்கேற்ற அணிகலன்கள் அலங்கரிக்க, மேகக் கூட்டத்திற்கு நடுவே வெண்மேகமாய் மிதந்து வந்தாள் என்று கூற ஆசை தான்!

ஆனால் அவளோ, அதிக எடையில்லாத ஸாஃப்ட் சில்க் புடைவையை அணிந்து, அதிலும் தடுக்கி விழாத குறையாக அல்லவா ஊர்ந்து வந்து கொண்டிருந்தாள்.

“ஷப்பா, ஒவ்வொரு அடிக்கும் காலுக்கிடையில போய் சிக்கிக்கிது. இதையெல்லாம் எப்படி தான் கட்டுறாங்களோ?” என்று முணுமுணுத்தபடி நிமிர்ந்து பார்க்க, எதிரே அவளின் தந்தை வந்து கொண்டிருந்தார்.

தன்னை நோக்கித்தான் வருகிறார் என்று நின்றவளை தாண்டி அவர் சென்றுவிட, ‘அப்பாவே ரெகக்நைஸ் பண்ண முடியாத அளவுக்கா நம்ம மேக்கப் இருக்கு?’ என்று எண்ணிக் கொண்டவள், “ப்பா…” என்று கத்தினாள்.

அப்போது தான் மனிதருக்கு சுற்றுப்புறம் உரைத்தது போலும்.

“ப்பா, என்னை சீக்கிரம் வர சொல்லி ஃபோன்ல திட்டிட்டு, இப்போ நீங்க எதுக்கு வெளிய போயிட்டு இருக்கீங்க? உங்க க்ளோஸஸ்ட் ஃபிரெண்டோட பையன் கல்யாணத்தை விட அப்படி என்ன முக்கியமான வேலை?” என்றவளின் குரலில் கிண்டலும் கேலியுமே விரவி இருந்தது.

பின்னே, ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, இந்த நாளுக்காக அவளை எத்தனை விதமாக படுத்தி இருக்கிறார்.

அவள் ஏதாவது கூறினாலும், “நம்ம மூர்த்தி வீட்டு ஃபங்க்ஷன் நம்ம வீட்டு ஃபங்க்ஷன் இல்லையா நந்தும்மா?” என்ற ஒற்றை வரியில் அவளை அடக்கி விடுவார்.

அந்த கடுப்பு தான் இப்போது கேலியாக வெளிப்பட்டது.

அவரோ மகளின் கேலியை உணராதவராக, “நந்தும்மா, உதயா தம்பி கல்யாணம் நின்னு போச்சு.” என்று வருத்தத்தோடு கூறினார்.

அதைக் கேட்டவள் அதிர்ச்சியில் உறைய, அவளின் தந்தையோ, அலைபேசி அழைப்புகளில் மூழ்கி விட்டார்.

‘எது? அந்த முசுட்டு முசோலினி கல்யாணம் நின்னு போச்சா? லவ் மேரேஜ்னு சொன்னாங்க. ஹும், எப்பவும் முள்ளைக் கட்டி வச்சா மாதிரி இருக்குற முசோலினி மூஞ்சி, இப்போ கொஞ்ச நாளா தான் பார்க்குற மாதிரி இருந்துச்சு. இனி, திரும்ப பழைய முசோலினியை பார்க்க வேண்டி வரும் போலயே! த்ச்சு, யாரு கண்ணு பட்டுச்சோ!’ என்று அவனுக்காக பாவம் பார்த்தவளை, “இங்கேயே ஏன் நின்னுட்டு இருக்க? உள்ள வா.” என்று அவளின் தந்தை இழுத்துச் சென்றார்.

“ப்பா, அதான் கல்யாணமே நின்னு போச்சே, இப்போ எதுக்கு உள்ள போகணும்?’ என்று கேட்டுக் கொண்டே சென்றவளின் மனமோ, ‘அரை மணி நேரம் போராடி கட்டுன இந்த சேலை வேஸ்ட்டா?’ என்று கவலைப்பட்டது.

அவளின் கவலையை போக்கவென்றே அதன் பிறகான நிகழ்வுகள் நடக்க, ‘இங்க வந்துருக்கவே கூடாதோ!’ என்று ஆயிரமாவது முறையாக சலித்துக் கொள்ளப் போவதை அவளும் அறியவில்லை.

*****

மணமகனின் அறையில், பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தவனின் முகமோ பாறையென இறுகி இருந்தது.

அவனருகே நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார் அவனின் தந்தை கேசவமூர்த்தி.

“சாரி டா உதய், பொறுமையா விசாரிச்சு இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணியிருக்கணும்! இப்போ பாரு…” என்று கேசவமூர்த்தி வருந்த, அவனிடம் பதிலில்லை.

தன் வாழ்க்கையே இந்த நொடியில் நின்று விட்டதைப் போல உணர்ந்தான் அவன். ஓராண்டாக காதலித்தவளை, பெற்றோர் சம்மதத்தோடு கைபிடிக்கும் வேளையில் தெரிந்த அந்த உண்மை, அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதாக அல்லவா இருக்கிறது.

நியாயமாக, தன் தந்தையின் இந்த வேதனைக்கு அவன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆனால், இதுவரை மன்னிப்பு என்ற ஒன்றையே கேட்டிராதவனிற்கு, கேட்கும் சூழலை உண்டாக்கியிராதவனிற்கு, தந்தையிடம் கூட அத்தனை எளிதில் மன்னிப்பு என்ற வார்த்தை வரவில்லை.

அப்போது அறைக்குள் நுழைந்தார், கேசவமூர்த்தியின் நண்பரும், ஜீவநந்தினியின் தந்தையுமான சுதாகர். நந்தினி அறையின் வெளியே நின்று கொண்டாள். அவளுக்கும் அவளின் முசோலினிக்கும் தான் ஆகாதே!

‘சும்மாவே என்னைக் குதறிப் போடுற மூட்லேயே தான் சுத்திட்டு இருப்பாரு. இப்போ இருக்க சூழ்நிலைக்கு… ஹப்பா, நினைச்சு பார்க்கவே கொடூரமா இருக்கு. நம்ம எதுக்கும் வெளியவே நின்னுப்போம்.’ என்று தான் நினைக்க முடிந்தது அவளால்.

திருமணம் நின்று போனதில் கவலையும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. ‘யாருக்கு வந்த விருந்தோ!’ என்று வெளியே இருந்த அலங்காரங்களில் பார்வையை பதித்தாள்.

“மூர்த்தி, உடைஞ்சு உட்காருற நேரமா இது? அடுத்து என்னன்னு பார்க்க வேண்டாமா?” என்று சுதாகர் வினவ, அப்போது தான் அவருக்கு ‘அடுத்து என்ன’ என்று யோசிக்கவே இல்லையே என்று தோன்றியது.

“அடுத்து… அடுத்து என்ன சுதாகரா? என் ஒரே பையன்… அவன் ஆசைப்பட்ட கல்யாணம்… இப்படி நின்னு போச்சே!” என்று வருந்தினார், அந்த பாசக்கார தந்தை!

அவரின் சோகம் மகனையும் தாக்க, அங்கிருக்க முடியாமல் ஏதோ அழுத்த, அந்த அறையை ஒட்டிய பால்கனியில் தஞ்சம் புகுந்து கொண்டான்.

நண்பனின் கவலையையும், அதற்கு உதயனின் செய்கையையும் கண்ட சுதாகரோ, “ப்ச், என்ன மூர்த்தி இது?” என்று கடிந்து கொண்டார்.

மகனின் கோபமும் அதில் மறைந்திருந்த வருத்தமும் புரிந்த கேசவமூர்த்தியின் பார்வை எதேச்சையாக ஜீவநந்தினியின் மீது விழுந்தது.

அதே சமயம் சுதாகரும், “எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவெடுக்கணும் மூர்த்தி. வெளிய இருக்க சொந்தக்காரங்க எல்லாம் இப்போவே பேச ஆரம்பிச்சுட்டாங்க.” என்று அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

பின்னே, மூர்த்தியின் குடும்ப கதைகளை ஆராய்கிறேன் பேர்வழி, புரளி பேசுவதையா கூற முடியும்!

கேசவமூர்த்தியின் பார்வையோ நந்தினியின் மீது தான்.

அதைக் கவனித்த சுதாகரின் மனமோ எதற்கென்றே தெரியாமல் தவிக்க, அவரை அதிகம் தவிக்க விடாமல், அவரிடம் கேட்டிருந்தார் மூர்த்தி.

“சுதாகரா, என் மகனுக்கு உன் மகளை கல்யாணம் பண்ணி தர சம்மதமா?”

*****

மணமகள் அறையில்…

அவள் வாழ்வின் முக்கிய நாளுக்காக பார்த்து பார்த்து தயாராகிக் கொண்டிருந்தாள் மணமகள் ராகவர்ஷினி.

அங்கே இருந்த அவளின் தோழிகளின் கேலியில் உண்டான வெட்கச்சிரிப்பு அவளின் அழகை பலமடங்கு உயர்த்திக் காட்டியது.

“வர்ஷி, சொன்ன மாதிரியே அவரையே கல்யாணம் பண்ண போற. ஹ்ம்ம், கொடுத்து வச்சவ!” என்று சிலரின் பொறாமையும், “சூப்பரா இருக்காரு டி உன் ஆளு. நீயும் அவரும் செம ஜோடி!” என்று பலரின் உண்மையான வாழ்த்துகளும், அவளின் செவியுடன் மனதையும் நிறைத்துக் கொண்டிருந்தது.

மனதிற்குள் அவளே அறியாத ஒரு கர்வமும் வந்து ஒட்டிக் கொண்டது.

‘இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உதயோட வொய்ஃப். எனக்காக அவனும், அவனுக்காக நானும் படைக்கப்பட்டவங்க. அழகு, படிப்பு, அந்தஸ்துன்னு எல்லாத்துலயும் சரிசமமான மேட் ஃபார் ஈச் அதர் கப்பில் நாங்க.’ என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்த தருணம் அது.

நாம் நடப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?

அப்போது அங்கு வந்த அவளின் பெரியம்மா, “வர்ஷி, எங்க உன் அம்மாவை காணோம்? வந்ததுல இருந்து நான் அவங்களை பார்க்கவே இல்ல.” என்று வினவ, “மம்மியும் டேடியும் அவரைப் பார்க்க போயிருக்காங்க பெரிம்மா.” என்றாள்.

அவள் ‘அவர்’ என்று கூறவும் அவளின் தோழிகள், ‘ஓஹோ’ என்று ஆர்ப்பாட்டமாக கத்த, அதனால் உண்டான வெட்கம் கலந்த பூரிப்பு அவள் முகத்தில் தாண்டவமாடியது.

அதை குலைக்கும் விதமாக அவள் தோழியின் மூலம் வந்து சேர்ந்தது அந்த செய்தி.

அவள் இத்தனை கனவு கண்ட திருமணம் நின்று போன செய்தி!

*****

கேசவமூர்த்தியின் கேள்வி சுதாகரை மட்டுமல்ல, வெளியே வேடிக்கை பார்ப்பது போல உள்ளே நடப்பவற்றை கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கும் அதிர்ச்சியை தந்திருந்தது.

“இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில சம்பந்தம் பேசுறேன்னோ, நம்ம நட்பை யூஸ் பண்ணிக்குறேன்னோ தப்பா நினைக்காத சுதா. எனக்கு… எனக்கு வேற வழி தெரியல. இன்னைக்கு விட்டா, என் பையனுக்கு கல்யாணமே நடக்காது. அவன் நடக்கவும் விட மாட்டான்.” என்று மூர்த்தி பேச, இங்கு நந்தினி மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

‘க்கும், நட்பை யூஸ் தான பண்றீங்க?’

‘அப்போ இன்னைக்குன்னா மட்டும் சந்தோஷமா கல்யாணம் பண்ணிப்பாராமா?’

என்று மனதில் பேசிக் கொண்டே வந்தவள், ‘ப்பா, தயவுசெஞ்சு ஓகே சொல்லி என்கிட்ட திட்டு வங்காதீங்க. நான் சம்மதிக்கவே மாட்டேன்.’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டாள்.

அவள் தன் மனதுடன் பேசிய இடைவேளையில் நண்பர்கள் இருவருக்குள்ளும் என்ன பேச்சுவார்த்தை நிகழ்ந்ததோ, சுதாகர் ஸ்லோ மோஷனில் திரும்பி தன் மகளை பார்த்தாள்.

அதிலேயே தந்தையின் மனதை புரிந்து கொண்டவள், தலையை பலமாக இடவலமாக ஆட்டி தன் மறுப்பை தெரிவித்தாள் நந்தினி.

“நந்தும்மா…” என்று அவர் அழைக்க, அவளின் பேச்சோ கேசவமூர்த்தியை நோக்கி இருந்தது.

“அங்கிள், உங்க கவலை எல்லாம் எனக்கு புரியுது தான். ஆனா, இப்போ திடுதிடுப்புன்னு வேற கல்யாணம் பண்றது எப்படி இதுக்கு தீர்வாகும்? நின்னு போனது அவரு காதலிச்ச பொண்ணோட நடக்க இருந்த கல்யாணம்! அப்போ அவரோட மனநிலையும் யோசிச்சு பாருங்க. ஒருவேளை, நீங்க வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வச்சாலும், அந்த கல்யாணத்தை அவரு ஏத்துப்பாரா?” என்று மூச்சடைக்க அவள் பேசிய பேச்சை,

“அதெல்லாம் நீ அவனை சமாளிச்சுடுவ மா.” என்ற ஒற்றை வரியில் புஸ்வானமாக்கி இருந்தார் கேசவமூர்த்தி.

‘அடக்கடவுளே! இவ்ளோ நாள் பழகியிருக்கேன், இவரு ஒரு பூமர் அங்கிள்னு தெரியாம போச்சே! இதுக்கு நம்ம அப்பாவே பரவால போலயே.’ என்று நினைத்தவள் இப்போது தந்தையிடம் திரும்பி இருந்தாள்.

“மூர்த்தி, நீ போய் தம்பி கிட்ட பேசு.” என்று சுதாகர் கூறிவிட்டு மகளை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த மற்றொரு அறையில் நுழைய, ‘நந்து, இந்த அப்பா கண்டிப்பா பிரெயின்வாஷ் பண்ண தான் டிரை பண்ணுவாரு. சிக்கிடாத டி!’ என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.

“நந்தும்மா…” என்று சுதாகர் அழைக்க, “நேரா விஷயத்துக்கு வாங்க ப்பா..” என்று கடுப்புடன் கூறினாள் நந்தினி.

“உன் கல்யாணம் முழுக்க அப்பா சாய்ஸ்ன்னு சொன்ன தான டா?” என்று தந்தை உஷாராக வினவ,

“இப்பவும் அதே தான் சொல்றேன். மாப்பிள்ளைல இருந்து மண்டபம் வரை உங்க சாய்ஸ் தான். ஆனா, இப்படி திடீர் கல்யாணம் இல்ல. பொண்ணு பார்க்குற ஃபங்க்ஷன்ல இருந்து, பத்திரிக்கை அடிக்குறது, டிரெஸ் நகை வாங்குறது, பந்தகால் நடுறது, மெஹந்தி, நிச்சயதார்த்தம்னு எல்லாமே எனக்கே எனக்கா, எனக்கான கல்யாணத்துல நடக்கணும் ப்பா.” என்று தன் கனவுகளை அடுக்கினாள் காரிகை.

மகளின் எதிர்பார்ப்புகள் புரிந்தாலும், அதை நடத்துவதற்கு தானும் சித்தமாக இருந்தாலும், நண்பனின் சூழல் அவரை நட்பு என்னும் சுழலுக்குள் சிக்க வைத்து விட்டதே. மனிதரும் சிக்கிக் கொண்டார்.

ஒரு பெருமூச்சுடன், “நந்தும்மா, எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த மாதிரி கனவு இருக்கும் டா. ஆனா, எல்லாருக்கும் இது எல்லாமே சாத்தியமாகாதே. சூழ்நிலையை புரிஞ்சுக்கோ டா.” என்று பொறுமையாக கூறினார்.

“சரிப்பா, அப்படியே எனக்கு சம்மதம்னாலும் அவரு சம்மதிப்பாரா? அவரோட நிலையை ஏன் யாரும் யோசிக்க மாட்டிங்குறீங்க?” என்று எதிர்கேள்வி கேட்டாள் பெண்.

“மூர்த்தியோட பாயிண்ட் ஆஃப் வியூலயும் யோசி டா. அவனோட பயமும் நியாயமானது தான? ஒருவேளை, இதுக்கு அப்பறம் தம்பி கல்யாணமே பண்ணலைன்னா?” என்றார் சுதாகர்.

“பண்ணலைன்னா தான் என்ன? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க ப்பா? கல்யாணம் தான் வாழ்க்கையா?” என்று தத்துவம் பேசினாள் மகள்.

“இப்போ சொல்றதுக்கு நல்லா தான் இருக்கும் மா. ஆனா, தள்ளாடுற வயசுல தன்னந்தனியா இருக்கும்போது, ஒரு துணை இல்லையேன்னு மனசு துடிக்கும்.” என்றவருக்கு பதில் கூற வந்த மகளின் கூற்று என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டவராக, “நானும் உன் அம்மாவை மிஸ் பண்றேன் தான். ஆனா, அவளோட நான் ஆத்மார்த்தமா வாழ்ந்த பத்து வருஷ நினைவுகள் இருக்கு. அது எனக்கு துணையா இருக்கும்.” என்றார் மனநிறைவுடன்.

அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை நந்தினிக்கு. தாயைப் பற்றிய பேச்சு அவளின் சிந்திக்கும் திறனை சற்று நேரத்திற்கு மழுங்கடித்திருந்தது.

“நந்தும்மா, அப்பா உன்னை ஃபோர்ஸ் பண்றேன் தான். எனக்கும் புரியுது. ஆனா, மூர்த்தி… அவனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல டா. என்கிட்ட ‘பிச்சை’ அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறான். நான் என்ன பண்ண? உதயா தம்பியை குறை சொல்லவும் எதுவும் இல்ல. நல்ல பையன், அவனுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம் தான்.” என்று வருந்தினார்.

முதலில், மனைவியை நினைத்து வருந்தியவர், இப்போது நண்பன், நண்பனின் மகன் என்று அனைத்தையும் நினைத்து வருந்த, பார்த்துக் கொண்டிருந்த மகளுக்கு தாங்குமா என்ன?

‘எப்படியும் அந்த முசோலினி சம்மதிக்க மாட்டான்.’ என்ற எண்ணத்தில், “சரிப்பா, எனக்கு சம்மதம்.” என்றாள்.

உடனே பரபரப்பானவர், “நந்தும்மா, உனக்கு மனசார சம்மதமா?” என்று முரணான கேள்வியை கேட்க, ‘க்கும், இப்படி ஒரு இக்கட்டுல நிறுத்திட்டு, ‘மனசார சம்மதமா’ன்னா கேட்குறீங்க?’ என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டாலும், தலையை மேலும் கீழுமாக ஆட்டி சம்மதம் தெரிவித்தாள்.

*****

உதயன் தன் நினைவிலேயே நின்று விட, நேரம் அப்படி நின்று விடாதே!

அதே சிந்தனையில் இருந்தவனிற்கு, அந்த நாளின் அடுத்த அதிர்ச்சியாக இருந்தது, தந்தை கூறிய செய்தி.

“உதயா, அப்பா ஒரு முடிவெடுத்துருக்கேன் பா. எக்காரணம் கொண்டும் மணமேடை வரை வந்த என் பையன் கல்யாணம் நின்னு போகக் கூடாது. அதான், நம்ம சுதாகர் பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க முடிவு பண்ணிருக்கோம்.” என்று ஒப்பிப்பதை போல கேசவமூர்த்தி கூறினார்.

அத்தனை நேரம் அந்த பாறை முகம் நிர்மலமாகவே இருக்க, இந்த செய்தியைக் கேட்டு திகைப்புடன் தந்தையை நோக்கினான்.

“திரும்பவும் அவசரமா ப்பா?” என்று கண்டனமாக கேட்டவனின் பார்வை வட்டத்தில் அறைக்குள் நுழைந்தவள் விழுந்தாள்.

அவனைக் கண்டதும், கைகளைக் கட்டிக்கொண்டு, முறைத்துக் கொண்டிருப்பவளிற்கு சளைக்காமல் தானும் பதில் முறைப்பை பரிசளித்தவன், “என்னால சம்மதிக்க முடியாது ப்பா!” என்று தன் மறுப்பை அவளும் கேட்கும் வண்ணம் உரைத்திருந்தான்.
*****

தகவல் தெரிந்ததும் முதலில் திகைத்த ராகவர்ஷினி, இது கண்டிப்பாக நண்பர்கள் செய்யும் ‘பிராங்க்’காக இருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

தான் நினைத்ததை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டி, அப்போது தான் அறைக்குள் நுழைந்த தன் தந்தையிடம் கேட்க, அவரோ மகளின் சிறு முகசுழிப்பையும் தாங்க இயலாதவராக, அவளின் முகம் பார்க்காமல், “கல்யாணம் நின்னு போனது உண்மை தான் டா வர்ஷி.” என்றார்.

தந்தை கூறியதைக் கேட்டதும் கண்மண் தெரியாத ஆத்திரம் தான் முதலில் வந்தது.

“நோ நோ!” என்று கத்தியவள், தன் பாசமிக்க தந்தை என்றும் பாராமல், அவரின் கழுத்துப் பட்டையை பிடித்து, “எப்படி இப்படி சொல்லலாம் நீங்க? உதய் எனக்கு தான். எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.” என்று கோபமாக பேசியவள், “நீங்க எல்லாரும் என்னை ஏமாத்துறீங்க. நான் என் உதய் கிட்டயே கேட்டுக்குறேன்.” என்று வெளியே செல்ல எத்தனித்தாள்.

அப்போது அவளைத் தடுத்த அவளின் அன்னையோ, “உதய் உனக்கு இல்ல ராகவர்ஷினி. அவன் வேற ஒருத்திக்கு சொந்தமாக போறவன். அவனோட நினைவுகளை எல்லாம் இங்கேயே புதைச்சுட்டு, எங்க கூட ஜெர்மனி வர வழியைப் பாரு.” என்று அழுத்தம் திருத்தமாக உரைக்க, மகளோ எப்போதும் இல்லாத அன்னையின் இந்த கண்டிப்பை மலங்க விழித்தபடி பார்த்தாள்.

மகளைக் கண்ட தாய்க்கு மனம் சுட்டது. இத்தனை கண்டிப்பு அவசியமா என்று அவரின் கணவரும் பார்த்தார்.

ஆனால், அது அவசியம் தான் என்று மகளின் அடுத்தடுத்த செயல்கள் எடுத்துரைத்தன.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, என்ன நினைத்தாளோ, “நோ, என் உதய் என்னை ஏமாத்த மாட்டான். என்னை தான் அவன் கல்யாணம் பண்ணிப்பான். உங்க யாரோட சம்மதமும் கூட எங்களுக்கு தேவையில்ல.” என்று கத்தியவள், யாரும் தடுக்கும் முன்னர், அறையிலிருந்து வெளியே ஓடினாள்.

ஆனால், அவளின் உறுதியை கலைக்கும் விதமாக, மணமேடையில் ஜீவநந்தினியின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தன் மனையாளாக்கி இருந்தான் உதயகீதன்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!