Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் பேசிடு கண்மணி

காதல் பேசிடு கண்மணி – 1 (2)

“அப்போ நீங்க பொறுப்பான தம்பியா உங்க அண்ணனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டுதான் பொறுமையா எனக்கு கால் பண்ணி இருக்கீங்க இல்ல? உங்க அண்ணி மேல அவ்வளவு அக்கறை? ம்ம்? அவளை வீட்ல அம்போன்னு தனியா விட்டுட்டு போய் இருக்கீங்க?”

“நட்சத்திரா..”



Advertisement

“என்ன? மிரட்டுறீங்களா? என்னை மிரட்டுற அளவுக்கு தைரியம் இருக்கவர், அவசரம்னு எதுக்கு எனக்கு கால் பண்ணீங்க? நேரா தைரியமா உங்க அண்ணியோட அம்மா வீட்டுக்கு கால் பண்ண வேண்டியது தானே?” அவன் கண்கள் சுருங்குவதை கண்டு, “ஓ, அதுக்கு பயமா?” என்றாள். 

Advertisement

கைகளை காற்சட்டை பைக்குள் திணித்து கால்களை அகட்டி நின்று, அவளை அழுத்தமாகப் பார்த்தான். 

Advertisement

“இல்லன்னா உங்க அம்மா, அப்பாக்கு கால் பண்ணி கூப்பிட வேண்டியது தானே? நீங்க ஊருக்கு போன நேரத்துல உங்க அருமை மூத்த மகன், அவரோட பொண்டாட்டியை என்ன பண்ணியிருக்கார்ன்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே?” 

Advertisement

“…”

“இவ்வளவு நடந்தும் உங்கண்ணா வெளில வராம இருக்கார்ன்னா, அவருக்கு எவ்வளவு…”

“நட்சத்திரா, இனஃப்” என்றான். சட்டென அவளின் பேச்சு நிற்க, “அதெப்படி வெளில வருவாரு? அதான் ஃபுல் போதையில மட்டையாகி கிடக்காரே.” கோபத்துடன் பின்னிருந்து வந்தது கார்த்திகாவின் குரல். 

அதைக் கேட்டதும் நட்சத்திராவிற்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஐயோ என்றுதான் இருந்தது. 

அவனும் பார்வையை எங்கெங்கோ அலைய விட்டான். 

“நீ வா. நாம போகலாம்” என்று நட்சத்திராவின் கையை இறுகப் பிடித்த கார்த்திகாவின் மற்றொரு கரத்தில் பயண பையொன்று இருந்தது. நட்சத்திரா கை நீட்டி அதை வாங்கிக் கொண்டாள். 

அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு தோழியுடன் முன்னே நடந்தாள். கார்த்திகாவின் கால்கள் நடக்க இயலாமல் நடுங்குவதை கண்டதும் அவளைத் தோளோடு அணைத்துப் பிடித்து நடக்க உதவினாள். 

“இனிமே இந்த வீட்டுப் பக்கமே வர மாட்டேன் நான். அறிவேயில்லாம இவனை கல்யாணம் பண்ணிட்டு நான் அனுபவிச்ச கொடுமை எல்லாத்துக்கும் இன்னையோட ஒரு முடிவு கட்டுவோம். அவன் நாளைக்கு வந்து என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் நான் அவனை மன்னிக்க மாட்டேன். என்னை எப்படி பார்த்துப்பேன்னு ப்ராமிஸ் பண்ணான். இப்போ..” என்று விசும்பி, “நீ அன்னைக்கே சொன்ன. நான்தான் கேட்கல, என் புத்தியை..” என்று கார்த்திகா புலம்பியது சத்தியமாய் அவனுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவனை திரும்பி பார்த்தாள். 

அவனது உடல் மொழியே இறுகியிருந்தது. வீட்டு வாசலுக்கு வந்ததும், கார் சாவிக்காக கைப் பையை இழுத்தாள். 

“நான் ட்ராப் பண்றேன். என் கார்ல ஏறுங்க, பிளீஸ்” என்றான். தோழிகள் இருவருமே அசையவில்லை. 

“இந்நேரம் நீங்க தனியா போறது சேஃப் இல்ல.” என்றவனை போலி ஆச்சரியம் பரவிய விழிகளுடன் ஏறிட்டாள். சற்று முன்னர் தன்னை தனியாக வரச் சொன்ன போது இதை யோசிக்கவில்லையா இவன்? அவளின் விழி மொழி புரிந்தது போல கண்ணை மூடித் திறந்தான். 

“அண்ணிக்கு உன்னோட சப்போர்ட் இப்போ தேவைப்படும். அதுனாலதான், நீ டிரைவ் பண்ண வேணாம்னு சொல்றேன். பிளீஸ்” என்றான். கைகளில் இருந்த கார் சாவியை அப்படியே கைப் பையினுள் திணித்தாள். 

“ஒன்னும் வேணாம். இவங்க குடும்பத்து சங்காத்தமே நமக்கு வேணாம். நீ காரை எடு. நாம போகலாம்” என்று கார்த்திகா அடிக்குரலில் சீறினாள். 

அவனோ, அவர்களின் வழியை மறித்து நின்றிருந்தான். 

“நட்சத்திரா..” இருவருக்கும் இடையே மாட்டிக் கொண்டு இனி வாழ்நாள் முழுக்க அல்லாட போகிறோம் என்று அந்நொடி அவளுக்கு தெளிவாகத் தெரிந்து போனது. 

வாழ்நாள் முழுக்கவா? கார்த்திகாவின் நிலையை பார்த்தால், அதற்கு வாய்ப்பில்லாமலே போய் விடுமோ என்ற பயமும் சூழ்ந்தது. அவளுக்கு எதிரே நின்றவனின் கண்களிலும் அதே பரிதவிப்பு தெரிய, சட்டென அவனது காரை நோக்கி தோழியை இழுத்துக் கொண்டு போனாள். 

அவளை ஏற செய்து தானும் அமர்ந்தாள். அம்மாவிற்கு அழைத்து, “கார்த்திகாவுடன் வீடு வருகிறேன்” என்று சொன்னாள். 

“அவளுக்கு என்னாச்சு?” உறக்கம் கலந்திருந்த அம்மாவின் குரலில் இருந்த கலவரத்தை உணர்ந்து, “அவளோட மச்சினர் கார்ல வர்றோம்மா” என்றாள். 

“ஓ? சரி, பத்திரமா வாங்க” என்று அழைப்பை துண்டித்தார் ஜானகி. 

“லாஸ்ட் ஒன் வீக் மட்டும் ஒன் லாக் மேல பெட் பண்ணி தோத்துட்டு வந்திருக்கார். சரி ஏதோ கிரிக்கெட் பைத்தியம் போனா போகுதுன்னு விட்டா, இப்படி காசை கொட்டி அழிச்சுட்டு வர்றார். அப்படியென்ன ப்ரெண்ட்ஸ் அவங்க? அதைக் கேட்டதுக்கு என்னை அடிச்சுட்டார் நட்சத்திரா. இவர் வீட்டுக்கே வராம ப்ரெண்ட்ஸ் கூட குடிச்சுட்டு ஊர் சுத்திட்டு பார்ட்டி பண்ணிட்டு விடியும் போது வீட்டுக்கு வரும் போதெல்லாம் நான் சண்டை போடாம விட்டதுதான் தப்பா பேச்சு” கார்த்திகா கோபத்துடன் சொல்ல, “கிரிக்கெட் பெட்டிங்கா? எப்படி?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள். 

“என்னை கேட்டா? அவரை கேளு சொல்லுவார்” என்றாள் இறுக்கத்துடன். 

“அவங்க கேங்குள்ளையே பெட் பண்ணி.. எனக்குத் தெரியல” என்று அயர்ச்சியுடன் இருக்கையில் சாய்ந்து கண் மூடினாள். 

புகைப்பழக்கம், குடிப் பழக்கம், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது இதை பற்றியெல்லாம் அவர்களின் திருமணத்திற்கு முன்பே அவர்களுக்குத் தெரியும்தான். ஆனால், சூதாட்டம்? 

இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது? எவ்வளவு மறைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்வியுடன் நிமிர்ந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்தவனை ஏறிட்டாள். சரியாக அவளின் பார்வையை சந்தித்து விலகி சாலையில் கண்களை பதித்தான் அவன். 

“அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்” என்றாள் கார்த்திகா, உடலில் ஓடிய நடுக்கத்துடன். 

“ஷ்ஷ்ஷ், ரிலாக்ஸ் கார்த்தி” தோழியின் தலையை தோளில் சாய்த்து கொண்டாள். 

அவ்விரவு அனைவரின் வாழ்வும் சிக்கலாகி போன நிதர்சனம் புரிய அவளின் தொண்டைக் குழிக்குள் துடித்தது இதயம். 

அவளின் வீட்டை அடையும் வரை அந்தக் காரில் மௌனமே பேசிக் கொண்டிருந்தது. 

வாசலில் விளக்கை போட்டுவிட்டு காத்திருந்தார் அவளின் அம்மா. 

“கார்த்தி..” என்று ஓடி வந்து கதவை திறந்து விட்டவரின் முகம் மாறியதை கண்டவனின் முகமும் கடினமாக மாறியது. 

“வா, வா. இறங்கு, பாத்து, மெதுவா, உள்ள வா” என்றவர், மெதுவாக திரும்பி அவனைக் கடினமாக ஒரு பார்வை பார்த்தார். 

அந்த நொடி அவனின் காதல் கைக் கூடாதென உறுதியாய் அவனுக்கு தெரிந்து போனது. 

அம்மா உள்ளே செல்வதை பார்த்தபடியே, கார்த்திகாவின் உடைமைகளை காரில் இருந்து எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். 

“நட்சத்திரா..” அழுத்தமாய் அவளின் கரம் பற்றினான். 

“என் கைய விடுங்க கதிர்” அவள் குரலே அவனை உதறி, தள்ளி நிறுத்த முயன்றது. 

“அம்மா, அப்பா ஊர்ல இருந்து வந்ததும், நம்ம கல்யாணம் பேச உங்க வீட்டுக்கு வருவாங்க. ரெடியா இரு. ம்ம்?” அவன் சொன்னது அந்நேரம் அசரீரியாக இருவருக்கும் கேட்டது. ஒரே மாதத்தில் அனைத்தும் தலை கீழாக மாறிப் போனதில், அவர்களின் காதல் கேள்விக் குறியாகியிருந்தது. 

“நட்சத்திரா..” அம்மா வீட்டினுள் இருந்து அழைக்க, வலுக்க அவன் கையை உதறினாள். கதிரவன் அப்படியே காரில் சாய்ந்து மார்பின் குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு நின்றிருக்க, அவன் முகத்தில் மழை சொட்டு சொட்டாக விழ, அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!