Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

09-1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 9.1

.

தட தட எனத் தன் பெருத்த வயிற்றை ஆட்டிக் கொண்டே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதன் தண்டவாளத்தில் சீரான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.



Advertisement

கௌதமனை ரயிலின் தாலாட்டு அமைதி படுத்தியதோ இல்லையோ… அவனின் குட்டி மகளை அவனின் லப் டப் அதிகமான அமைதி படுத்தியது. ரயில் ஏறியது முதலே, ரயிலும் அதன் சத்தமும் மகளைப் படுக்க விடவில்லை. அனத்தலும் சிணுங்கலுமாக இருந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான் கௌதமன்.

என்ன மாயமோ என்ன மந்திரமோ மகளின் அனத்தல் நின்றதோடு இல்லாமல் பொக்கை வாய் திறந்து தந்தையைப் பார்த்துச் சிரித்தாள் குட்டி அழகி. தந்தையின் சீரான இதயத்துடிப்பிற்கு இந்த இரண்டு நாள்களாக மகள் அடிமையாகி போனாள் என்றால் சரியாக இருக்குமோ?

“கை வலிக்கலியா தம்பி? டிரெயின்ல ஏறினதுல இருந்தே பாக்கிறேன், கீழ வைக்காம தூக்கியே வச்சிருக்கியே ப்பா…”

Advertisement

ஜன்னலுக்கு வெளியே பார்வையை பதித்திருந்தவன், பேச்சு கொடுத்த பெரியவரைத் திரும்பி பார்த்தான். கௌதமனின் முகத்தில் புன்னகை அரும்பியது. அதற்கு… அந்தப் புன்னகைக்கு ‘இல்லை’ எனப் பொருள் கொள்ள வேண்டும்.

Advertisement

அவன் காணாத வலியா? உச்சந்தலையில் ஆரம்பித்துக் குதிகால் வரை போதும் போதும் எனக் கதறும் அளவு வலியை அனுபவித்தவனுக்கு இந்தக் குட்டி பூச்செண்டா வலியைத் தரப் போகிறாள்? இல்லவே இல்லை… அவள் அவன் தேவதை. தகப்பனின் வெறுமையை… காயங்களை ஆற்ற வந்த தேவதை.

புன்னகை, அவன் ஒற்றைக் கைக்குள் அடங்கிப் படுத்துக் கொண்டு திராட்சை கண்ணை உருட்டி தன்னையே பார்த்திருந்த மகளைக் கண்டதும் இன்னும் விரிந்தது.

“முழிச்சுட்டீங்களா பேபி?” விரல் கொண்டு மெல்லக் கன்னம் வருடி, “என் பட்டு பேபி என்ன பாக்கறீங்க?” எனக் கொஞ்சவும், கையையும் காலையும் ஆட்டி பொக்கை வாய் திறந்து ‘அ ஆ ஆ’ என மழலையில் தகப்பனோடு கதைக்க ஆரம்பித்தாள் மூன்றரை மாதங்கள் முன்பு உலகத்தை பார்த்தக் குட்டி மகள்.

Advertisement

அவன் முகம் நோக்கி எழுந்த காலை உதட்டில் பதித்து மீசையின் குறுகுறுப்போடு முத்தமிடவும், குட்டி வாய் திறந்து சோழியைச் சிதறவிட்டது போல் ‘ஹேஹே ஆ ஆ’ என சிரித்தாள் யாழினியாள்.

யாழ் என்பது பண்டைக் கால நரம்பு இசைக்கருவிகளில் ஒன்று. யாழில் இருந்து மீட்டப்படும் இசை மிகவும் இனிமையானதாம். யாழினியாளின் சிரிப்பை விட இனிமையானதா எனக் கேட்டால்… கௌதமன் இல்லை என்பான்.

இரு கைகள் கொண்டும் மகளை தூக்கி தன் முகத்திற்கு நேரே பிடித்து அவன் கொஞ்ச, அவள் அதற்கு மறுமொழியாகச் சோழிகளை சிதறவிட, அருகே இருந்த அனைவர் விழிகளுக்கும் இவர்கள் தான் அன்றைய விருந்து.   

“தல இன்னும் முழுசா நிக்கல இல்ல? எத்தன மாசம் ஆகுது? ரெண்டா?” என பெரியவர் அருகில் இருந்த பாட்டி கேட்டார்.

கேட்ட பெண்மணியைப் பார்த்து, “நாலாக போகுது” என்றான் புன்னகை முகமாக.

“குறை பிரசவமா?” எனக் கேட்டால் என்ன கூறுவான்? மகளை உற்றுப் பார்த்தான். கை கால் முளைத்த குட்டி பால் நிலா அவனைப் பார்த்துக் கை காலை வேகமாக ஆட்டுகிறாள். சோழியாய் சிரிக்கிறாள். அந்தக் குட்டி முகத்தில் நட்சத்திரங்களாக மினுங்கும் கண்களால் தகப்பனை விழுங்குகிறாள். தேன் ஒழுகும் ரோஜா இதழ்களால் அவ்வபோது அப்பாவின் முகத்தை ஈரமாக்குகிறாள். சிவந்த லட்டு கன்னங்களையும், குட்டி விரல்களையும் காட்டி ‘வா என்னை முத்தமிடு’ எனத் தகப்பன் உதட்டுக்கு வேலை வைக்கிறாள். எப்படித் தன் மகளை இவர் குறை பிரசவமா என கேட்கிறார் எனக் கௌதமனுக்கு புரியவில்லை.

“கண்ணாடி போடு கிழவி” என நினைத்தாலும், புன்னகைத்து வைத்தான். இந்தப் புன்னகைக்கு ‘பதில் கூற இஷ்டமில்லை’ எனப் பொருள் கொள்ள வேண்டும்.

புன்னகைத்த முகத்தைப் பார்த்த பாட்டியை உறுத்திக் கொண்டிருந்ததைக் கேட்க முடிவு செய்தவராய், “கீழ ஏதும் விழுந்தியா தம்பி? முகம் வீங்கின மாதிரி இருக்கு?” என்றார் கேள்வியாக.

இவருக்கு என்னதான் பிரச்சனை என நினைத்தவன் பொய் உரைக்க மனமில்லாது,  “ஃபேஷியல் ரிகன்ஸ்ட்ரக்ஷன் பண்ணியிருக்கனால கொஞ்சம் வீக்கம். வீக்கம் குறைஞ்சு ஃபேஸ் நார்மல் ஆக இன்னும் ரெண்டு வாரம் ஆகும்” என்றான்.

“அப்படினா?”

“பிளாஸ்டிக் சர்ஜரி அத்த” என்றார் பாட்டியின் அருகில் இருந்த பெரியவரின் மனைவி.

“ஓஹோ… மைக்கேல் ஜேக்சன் முகத்த மாத்திக்கிட்டானே… அதுதானே” என்றவர் கௌதமின் முகத்தை உற்று பார்த்தார். “தழும்பே தெரியல” என்றார்.

“அது தான் பாட்டி பிளாஸ்டிக் சர்ஜரியோட மகிமை” என்றான் கைப்பேசியில் இருந்து முகத்தை உயர்த்திய பெரியவரின் பதின்ம வயது மகன்.

“அப்பா எனக்கு கூட மூக்கு பெருசாருக்கு…” என பத்து வயது மகள் கூறவும், “அது ஒண்ணு தான் பாக்கிற மாதிரி இருக்கு. அதையும் வெட்டி சப்ப மூக்கி ஆகிடாத” என அண்ணன் கலாய்க்க… “போடா கொட மொளகா…” என அவர்கள் சண்டையை ஆரம்பித்தனர்.

வேடிக்கையாகச் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, தனக்கும் சகோதரி சகோதரன் இருந்து இருக்கலாம் என ஆசை வந்து போனது. அவன் நெருங்கிய உறவென்றால், அது நிஷா மட்டுமே. மாமன் மகளோடு இப்படி எல்லாம் அடித்துப்பிடித்து விளையாடியதில்லை என்றாலும் மனதில் ஓரத்தில் இப்படியான விளையாட்டைத் தானும் விளையாடியது போல் தான் தோன்றுகிறது.

நேரம் கடந்தது. அவரவர் அவரவர் வேலையில் மூழ்கினர். மீண்டுமாகக் கௌதமனின் பார்வை வெளியே சடசடவென விழுந்து கண்ணாடி ஜன்னலை ஈர்மாக்கிக் கொண்டிருந்த மழைத்துளிகளின் மீது படிந்தது. நினைவுகள், மழை, இசை, நிமோனியா, வலி, மருத்துமனை என எங்கெல்லாமோ சென்றது.

யோசனையைக் கலைத்தாள் யாழினியாள். அவன் கையில் இருக்கும் குட்டி மகள் குட்டி வாய் திறந்து கொட்டாவி விட்டாள். கௌதமன் முகத்தில் நீளப் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. விரல்களை முறுக்கி உடலை முறுக்கினாள். கைகள் இரண்டையும் மேல் தூக்கி சோம்பம் முறித்தாள். கண்கொட்டாது யாழினையை பார்த்து அமர்ந்திருந்தான். குட்டி குட்டி கண்களை திறந்தாள். நெற்றி சுருங்க அவனை பார்த்தாள். அழுவாள் எனப் பார்க்க, யாழியோ பொக்கை வாய் மலர்ந்து சிரித்தாள்.

“ட டா ஆ அ ஊ” என மழலையில் மிழற்றினாள். இத்தனை மாதங்களின் பார்ப்பவர்கள் அனைவரும் அவனிடம் காது தீய்ந்து போகும் அளவிற்குப் பேசியிருக்கிறார்கள். சில நேரம் போதும் எனத் தோன்றினாலும் கடனே என கேட்பான். சில நேரங்களில் தூங்கியும் இருக்கிறான். ஆனால், இந்த ‘ஆ ஊ’ கொடுத்த உணர்வை, மகிழ்ச்சியை இன்று வரை ஒருவர் வார்த்தையும் கொடுத்ததில்லை. மனதில் இருந்த பெரும் ஓட்டையை அந்தக் குட்டி உருவம் நிறைத்தது என்றால் மிகையாகாது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பெரும் அழுத்தம் இறகாய் பறந்து போனது உண்மை.

மகளின் பேச்சு நின்றது. கண்கள் சுருங்கின. நேற்றும் இப்படித் தானே செய்தாள்? ஆம், உடலைக் கழுவி வந்த மகள் இப்படித் தான் இவனைப் பார்த்தாள். என்னவாம் என அவன் மகளை ஆழ்ந்து பார்க்க, கையில் சூடாக ஆரம்பித்த தீர்த்தம் அவன் கை வழி சட்டையை நனைத்து பேன்ட்டையும் நனைத்தது. மகள் சிறுநீரை வெளியேற்றும் வரை அமைதியாக நின்றிருந்தது அவனுக்கே ஆச்சரியம் தான்.

அதன் பின் மகளுக்குப் பால் கலக்கிக் கொடுப்பதில் இருந்து குளிக்க வைத்து டையப்பர் மாற்றுவது வரை அனைத்திலும் ஆசையாக ஈடுபட்டான். அனைத்தையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடே பார்த்து நின்றான்.

“அப்பா சிரிக்கவும், பொண்ணு சிரிப்பப் பாருங்களேன் ஃபாதர்” என பரிமளா கூறும் வரையிலுமே தன்னை தகப்பன் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கவில்லை கௌதமன். அதன்பின் வேறு உறவை அவர்களுக்குள் அவன் திணிக்க விரும்பவில்லை.

தான் அப்பா என்றால், யாழி பேபி அவன் மகள். இருவரும் சேர்ந்து இருப்பது தானே சரி என நினைத்தவன், பாதிரியாரிடம் துணிந்து பொய்கள் கூறி உதவி கேட்டான். பொய்கள் ஒன்றும் புதிதல்ல என்பதால் கோர்வையாகக் கூற முடிந்தது அவனால்.

“இங்க சரியா எட்டு மணிக்கு காலையில சாப்பாடு ஆகிடும்.” என்றவர், “நீங்க சாப்பிட உக்காருங்க” என இருக்கையைக் காட்டிய பாதிரியாரிடம் அப்பொழுதே உதவி வேண்டும் எனக் கேட்டுவிட்டான். சிறு மேசையும் இரு நாற்காலிகளும் இருக்க, அதில் ஒன்றில் அமர்ந்தவன், அவன் முன் இருந்த எளிய உணவை அமைதியாக உண்டு முடிக்கும் வரை காத்திருந்த பாதிரி, “என்ன ஹெல்ப்?” என வினவினார்.

“சென்னை வரைக்கும் போகணும். குளச்சல்ல இருந்து கூட வந்தவங்க அவசரம்ன்னு போன் வரவும் தூத்துக்குடியில இறங்கிட்டாங்க. குழந்தை தூங்கிட்டு இருக்கவும் இவ்வளவு தூரம் வந்துட்டுடேன். இனி எப்படி சென்னை வரைக்கும் போறதுன்னு தெரியல…” என வாய்க்கு வந்ததை சரளமாக கூறினான்.

யோசனையில் அமர்ந்தவர், “இங்க பாக்குறீங்களே… ஆள் பற்றாக்குறை. சட்டுன்னு யாரையும் அனுப்பற நிலைல இல்லம் இல்ல. சின்ன சின்ன வெளிவேல செய்யற சரவணனும் உடம்பு முடியலன்னு இன்னைக்கு வரல. அவன் கொஞ்சம் அப்பாவி… வெகுளி டைப்… ரொம்ப பொறுப்பா இருக்க மாட்டான். எப்போ வருவான்னு சொல்ல முடியாது.

இப்போதைக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒன்னு அவன் வர வரைக்கும் அதாவது மேக்சிமம் ரெண்டு நாள், எங்க விருந்தினரா இருந்துட்டு போங்க. நீங்க கார் ஓட்டும் போது அவன் பாப்பாவ பாத்துப்பான். வேற வழியே இல்லன்னா இந்த ஆப்ஷனுக்கு போகலாம்.

இத தவர பெஸ்ட் ஆப்ஷன், நைட் தூத்துக்குடில டிரெயின் ஏத்தி விடறேன். பொண்ணோட சேஃபா போகலாம். சரவணன் வந்ததும், டிரைவர் யாரையாவது போட்டு சரவணன் உதவியோட நீங்க சொல்ற அட்ரெஸ்ல கார விட சொல்றேன்” என தன்னால் முடிந்ததைக் கூறினார்.

தன் பங்கிற்கு யோசித்தவன், “டிரெயின்ல டிக்கெட் கிடைக்கும்ன்னா அதுலயே போறேன். கார் ரென்ட் எடுத்தது தான். அவங்கட்ட எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ணிக்க சொன்னா, வந்து எடுத்துட்டு போயிடுவாங்க” என்றான்.

“நீங்க ரெஸ்ட் எடுங்க. டிக்கெட் ரெடி பண்ண முடியுமான்னு பேசிட்டு சொல்றேன்” என்றவருக்கு நேற்றைய தின பயணச் சீட்டு கிடைக்கவில்லை. இன்று இரவு இரயிலில் பயணச் சீட்டு கிடைத்திருக்க, இதோ அமர்ந்திருக்கிறான்.

உடல் சரியாகிவிட்டது என வந்திருந்த சரணவன் தான் கௌதமனை ரயில் ஏற்றிவிட்டது. பாதிரியார் கூறியது போல் அவள் வெகுளியாக இருந்தான். இரயில் ஏறும் வரையுமே அவன் வாய்க்கு ஓய்வில்லாது எப்படிப் பேசினான் என்பது இப்பொழும் கௌதமனுக்கு ஆச்சரியமே.

“ஆசிக்கா பாப்பா” எனக் கொஞ்சினான் குழந்தையை. “யாழி” என இவன் கூறியதெல்லாம் அவன் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை. “எங்க வீட்டுல ஆசிக்கா பாப்பா எப்போ பார் அழுதுட்டே இருக்கும்.” என அவன் வீட்டு ஆஷிக்கா பாப்பாவைப் பற்றிக் கூறினான்.      

“ரெண்டு நாள் முன்ன அக்கா லீவுக்கு வந்தாளா… அப்போல இருந்தே ஆசிக்கா பாப்பா ஒரே அழுவ. கோவம் கோவமா வந்துச்சு. அம்ம நல்லா அக்காவ திட்டினா. தூங்கவே முடியல… அதுதான் நேத்து ஹோமுக்கு வரல.” என்று அவனே இல்லத்திற்கு வராததிற்குக் காரணம் கூறினான்.

“ஆசிக்கா போச்சு பாத்தியளா… அதோண்டு ஹோம்ல குட்டி அருணாக்கு எடுத்துட்டு வந்தேன். இவளுக்கு வச்சுக்கோ இந்தா” என அவன் ஆஷிக்காவிற்காக வாங்கி வைத்திருந்த குட்டி கிலுகிலுப்பை இவனிடம் கொடுத்திருக்க, நினைவு வந்தவனாக அதை எடுத்தான் மகளுக்கு விளையாட்டு காட்ட.

“உன் முகம் முன்ன வேற மாதிரி இருந்துதா?” ஆவல் பொங்க எதிர் இருக்கை பாட்டி கௌதமனிடம் கேட்டார். ‘மீண்டுமா?’ எனப் பார்த்தான் கௌதமன்.

“கருப்பு கலர்ல இருந்த மைக்கேல் ஜாக்சன் சிகப்பா மாறின மாதிரி நீயும் மாறிட்டியா?” என்ற பாட்டிக்கு இவன் மீது அக்கறையெல்லாம் இல்லை. அவருக்குப் பொழுது போகவில்லை. அவ்வளவே.

பதில் கூற பிடிக்கவில்லை என்றாலும், “ரொம்ப இல்ல” என்றான்.

“கலர் மாறிடுச்சு என்ன? கை உங்க பாப்பா மாதிரி செகப்பா இருக்கு. ஆனா கவனிச்சு பார்த்தா, முகம் மட்டும் நிறம் மங்கியிருக்கு” என அவர் கூற, கடனே எனப் புன்னகைத்தான்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!