மீண்டும் ஒருமுறை -4
மீண்டும் ஒருமுறை -4
புற்றுநோய் அது ஒன்றும் சாதாரணல்லவே. அதன் தாக்கத்தினால் உடல் மெலிந்து படுத்த படுக்கையாகவே இருந்த தாய் திடீரென்று நலமுடன் தன் முன் நடமாடிக் கொண்டிருக்கும் காட்சியை அவளால் நம்பவே முடியவில்லை.
தான் இப்போது எங்கிருக்கிறோம் என்பதை எல்லாம் அவள் உணரவே இல்லை. தன் முன் நலமுடன் நடமாடிக் கொண்டிருக்கும் தாய் மட்டுமே அவள் கண்களுக்கு தெரிந்தார்.
Advertisement
அவரையே கண் கொட்டாது அவள் பார்த்திருக்க, “பாப்பா உனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படி உக்காந்து இருக்க?”, என்று அவளை ஒரு உலுக்கு உலுக்க, சிலையென இருந்தவள் உணர்வு பெற்றவளாக, அவள் தாயை இறுக்கி கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.
தாய்க்கு முதலில் பதற்றம் தான். பின்னர் தன் மகள் ஒருவேளை கெட்ட கனவு எதுவும் கண்டிருக்கலாம் என்று அவளை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்திலேயே அழுது முடித்து விசும்ப தொடங்கினாள். அவள் தாய் அவளிடம், “என்ன பாப்பா ஏதும் கெட்ட கனவு கண்டியா? என்று கேட்டார். கெட்ட கனவு தானோ என்று அவளுக்கே உள்ளே சந்தேகம் தோன்றியது.
Advertisement
மீண்டும் சிந்தனைக்கு சென்ற தன் மகளை அதட்டல் போட்டு நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தார் அவள் தாய்.
Advertisement
“என்ன நடந்துச்சுன்னு சொல்லு”, என்று கேட்க
“ஒன்னும் இல்லம்மா. கெட்ட கனவு அவ்வளவு தான். அதை பத்தி பேச வேண்டாம்”, என்றாள்.
“இல்ல பாப்பா எதுவா இருந்தாலும் சொல்லு”, என்று கேட்க “இல்லமா இல்ல நான் நல்லா தான் இருக்கேன். விடு”,என்று கூறிவிட்டாள்.
Advertisement
சரி என்று அவள் தாயும், “சரி எந்திரிச்சு கிளம்பு. நீ காலேஜ் போகணும் இல்ல” என்று கேட்க,
“காலேஜ்க்கா…? என்னம்மா சொல்ற” என்று அவள் ஒரே குழப்பமாக தாயைப் பார்த்த படி அமர்ந்து இருந்தாள்.
முன்பே அவர் காலேஜ் பற்றி பேசியது இப்போது அவள் நினைவுக்கு வர, “நான் எதுக்கு காலேஜ் போகணும்”, என்று அவள் கேட்க,
“என்ன லீவு விட்டா, எல்லா நாளும் அப்படியேவா இருக்கும். இன்னைக்கு இரண்டாவது வருஷம் காலேஜ்க்கு முதல் நாள் ஞாபகம் இருக்கா? இல்லையா ?நேத்து வரைக்கும் தான் லீவு, இன்னைக்கு காலேஜ் போகணும் எந்திரி பாப்பா. எனக்கு வேலை இருக்கு”, என்றவாறு அவர் வேகமாக சமையல் அறை நோக்கி சென்று விட்டார்.
இவளுக்கு அனைத்தும் ஒரே குழப்பமாக இருந்தது “காலேஜுக்கு போணுமா?” என்றவாறு அவள் குழப்பத்தின் பிடியில் நின்றிருக்க, அவளுக்கு ஒவ்வொன்றாக நடந்த நிகழ்வுகள் எல்லாம் வந்து போகின.
“அம்மா என்ன சொன்னாங்க ரெண்டாவது வருஷம் காலேஜ் முதல் நாளா!!!!!!????”என்று அதிர்ச்சியுடன் எழுந்தவள். அங்கிருந்த கண்ணாடியில் அவள் முகம் பார்த்து விட்டு அப்படியே நின்று விட்டாள்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது அந்த நாள். ஏனெனில் ஆறு வருடங்களுக்கு முன்பு அவள் பார்த்த அந்த பொலிவான சிறுபிள்ளை முகத்தை அல்லவா அந்த கண்ணாடி பிரதிபலித்து கொண்டு இருந்தது.
18 வயது இளம் பெண்ணாக அவள் தோற்றம் இருக்க, அதை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தே போய்விட்டாள். “என்னடா இது இப்படி இருக்கோ நாம? எது கனவு எது நிஜம்-னே புரிய மாட்டேங்குது.
நான் என்ன காலேஜ் போற வயசுல இருக்கேன். காலேஜ் போற வயசுன்னா அப்ப…அப்ப…. எனக்கு நடந்தது எல்லாமே கனவா? ஒரு நிமிஷம் ரெண்டாவது வருஷம் காலேஜ் ஓட முதல் நாளா?….. அப்போ இன்னைக்கு……. “என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் அப்படியே நின்றுவிட்டது.
சோர்வுடன் கட்டிலில் மீண்டும் அமர்ந்து கொண்டாள். தலையை பிடித்தவாறு அவள் அங்கு அமர்ந்து இருக்க, நிமிடங்கள் கடந்து கொண்டே இருந்ததே தவிர, அவள் அமர்ந்து நிலை மாறவே இல்லை.
மனதில் ஒவ்வொன்றாக அவள் கனவாக நினைத்த அனைத்து நிகழ்வுகளும் வந்து போகின. அதில் அவள் பாட்டி மரணம் நிகழ்வும் வந்து போக சட்டென்று கண்களை திறந்து எழுந்தவளாக அதிர்ச்சியுடன்,
“அப்போ சிவகாமி..” என்றவாறு வேகமாக வரவேற்பு அறையில் எப்போதும் அவள் பாட்டி சிவகாமி அமர்ந்திருக்கும் இடம் நோக்கி ஓடினாள்.
அப்போதுதான் சமையலுக்கு கடைசியாக தேவைப்படும் கீரையை கிள்ளிக்கொண்டிருந்த சிவகாமி இவளை பார்த்துவிட்டு, “என்னாச்சு பாப்பா” என்க, அவள் எதுவும் பேசாது அவரை வேகமாக இறுக்க கட்டிக் கொண்டாள்.
இம்முறை அழக் கூட முடியாமல் ஏதோ ஒரு உணர்வு தொண்டைக் குழியை அடைத்தது. இனி பார்க்கவே முடியாது என்று நினைத்த ஒரு உறவு, தான் மிகவும் நேசித்த உறவு, தன்னால் தான் உயிர் நீர்த்து விட்டதோ என்று நினைத்த ஒரு உறவு, தன் முன்னே உயிருடன் இருக்கிறது என்னும்போது அவளுக்கு அந்த உணர்வை எப்படி கடத்திட என்று கூட தெரியவில்லை.
அவள் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அவள் மேல் கொண்ட பற்று என்பது சொல்லிற்குள் அடங்காது தானே. அதனால் சிவகாமிக்கும் பதட்டம் தான் பேத்திக்கு என்ன நேர்ந்தது ஏன் இப்படி ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்றவாறு குழப்பத்தில் அவரும் அவளை இறுக்கி கட்டிக் கொண்டிருக்க, சிறிது நேரத்திற்கு பிறகு தெளிந்தவள்
அவரிடம், “உனக்கு ஒன்னும் ஆகல சிவகாமி.. நீ நல்லா இருக்க”, என்றாள். அவரும் அதைக் கேட்டு,
“எனக்கு என்னடி? நல்லா தானே இருக்கேன்? எப்பவும் என்னை வம்பு தான வளப்ப. நேத்து கோயில்ல கூட என்னை எவ்வளவு வம்பு இழுத்த.
இன்னைக்கு என்ன கட்டிப்புடிச்சுட்டு எனக்கு ஒன்னும் இல்ல அது இதுன்ற? உங்க அம்மா நீ எதோ கெட்ட கனவு கண்டேன்னு சொன்னாளே, அப்படி ஏதும் அந்த கனவுல எனக்கு ஏதாவது ஆயிடுச்சா? என்ன?”, என்று கேட்க வேகமாக அவள்,
“வாய மூடு சிவகாமி இன்னொரு தடவை நீ இப்படி சொன்ன, அவ்வளவுதான். உன்னை நான் எப்பவும் எந்த காரணத்துக்காகவும் விடவே மாட்டேன். இந்த தடவை நான் உன்ன கண்டிப்பா விடவே மாட்டேன்”, என்று அவள் மீண்டும் கூறிக் கொண்டே இறுக்கி கட்டிக் கொண்டாள்.
பேத்திக்கு ஏதோ உண்மையில் கெட்ட கனவின் பாதிப்பு தான் என்பதை அவராகவே ஊகித்துக் கொண்ட சிவகாமி, அவள் தலையை வருடி கொடுத்தார்.
சில நிமிடங்களிலேயே அவரிடம் இருந்து எழுந்து அவர் முகத்தையே பார்த்து நின்றிருந்தாள். அப்போதுதான் வெளியே வந்த அவள் தாய் வேகமாக,
“ஏய் வேலினி இன்னும் கிளம்பாம உக்காந்துட்டு இருக்க…காலேஜ் பஸ் ஏழரை மணிக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கோபமாக பேசுவும் தான் சுயநினைவு வந்தவளாக வேகமாக தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டவள் மீண்டும் கட்டிலில் அமர்ந்து வெகு நேரம் சிந்தனையிலேயே இருந்தாள்.
அவள் மனதிற்குள் இது வெறும் கனவா? என்ற கேள்வி மட்டும் குடைந்த வண்ணம் இருந்தது. ஆனால் ஒரு மனம் மட்டும் அவளிடம், அது நிச்சயமாக கனவு அல்ல என்ற உறுதியாக கூறியது.
கனவுகள் எப்போதும் வெறும் காட்சிகளாக மட்டும் தானே தோன்றும். ஆனால் இது காட்சிகள் அல்லவே. எழுந்ததிலிருந்து உறங்கும் வரை அனைத்து நிகழ்வுகளும் அவள் நினைவில் நின்றிருக்கிறது.
6 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கை வெறும் கனவு என்று சொல்லிவிட்டால் அதை நிச்சயம் ஏற்க முடியாது தானே.
அவள் சிந்தனையில் உழன்று கொண்டிருக்க வெளியே, “அம்மா இங்கே வாயேன்”, என்று குழலினி தன் தாயை அழைக்கும் குரல் கேட்டது.
சிந்தனையில் இருந்து மீண்டவளாக மேலே இருந்த கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள் வேலினி. அது ஏழை நெருங்கிக் கொண்டிருப்பதாக காட்டியது.
அதை பார்த்துவிட்டு நேரம் நெருங்கி விட்டது கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுந்தவள், வேகமாக உடைகள் இருக்கும் கபோடை திறந்து ஒரு உடையை கையில் எடுத்தாள்.
அதை கையால் எடுத்ததும் கை அப்படியே நின்று போனது. அந்த காட்சி அவள் கண்முன் விரிந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது அவள் வாழ்ந்த அந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நெருப்பிற்கு பயந்து ஒரு குழந்தையை தவறவிட்டு, அந்த மரணத்திற்கு காரணமான அந்த நாள் நினைவு வந்தது. ஆடை பட்டென அவள் கையை விட்டு நழுவி விழுக, அவள் மனமுழுக்க பதட்டம் கூடியது.
இன்னைக்கு தான் அந்த நாள். அந்த குழந்தை இன்னைக்கு தான் இறந்து போக போறா. இல்ல நான் போனா தான் அவ என் கையால இறந்துடுவா.
நான் போகக்கூடாது நான் போனதாலதான் அவ இறந்துட்டா….. நான் போக கூடாது நான் போகக்கூடாது…..”என்று சொல்லிக்கொண்டே தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டாள். நேரம் நகர்ந்தது அவள் நிலை தான் மாறாமல் அப்படியே இருந்தது.
அவள் ‘போக கூடாது’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அமர்ந்திருக்க, மீண்டும் வெளியே இருந்து ஒரு குரல் வந்தது. அவள் தாயின் குரல் தான் அது. அவள் தந்தையோடு தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
“ஆமா இப்ப நீங்க போகலான்னா மட்டும் அங்க ஏதும் நடக்காம இருக்க போகுதா? நீங்க போகலைனாலும் நடக்கிறது நடந்துதான் ஆகும்”, என்று அவர் ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒன்றை கூறிக் கொண்டிருந்தார்.
அது இவளுக்கே சொல்வது போல் இருந்தது. அந்த வார்த்தைகளை கேட்டு நிமிர்ந்தவள், “நான் போனாலும் போகலைனாலும் நடக்கிறது நடந்த ஆகும்”, என்று எண்ணினாள்.
“ஒருவேளை இப்படி கூட இருக்கலாம் இல்ல. எனக்கு இந்த விஷயம் எல்லாம் முன்னாடியே தெரியும். அப்பனா அந்த குழந்தைய இப்ப நான் காப்பாத்த முடியும் இல்ல.
நெருப்பு கிட்ட போகாம அந்த குழந்தையை காப்பாத்த என்னால் முடியும். நான் போனால் தான் அந்த குழந்தையை காப்பாத்த முடியும். நான் போகணும்..நான் போகணும்.. “என்று எண்ணிக்கொண்டாள்.
மீண்டும் நேரத்தை பார்க்க அது ஏழு பத்து என்றது வேகமாக அந்த உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள், அடுத்து ஐந்தாவது நிமிடம் வெளியே வந்தாள். வேகமாக தாயாரானாள், தலையை பின்னிக்கொண்டு வெளியேறி, வேகமாக பையை எடுத்து மாட்டிக் கொண்டு ஓட பார்த்தாள்.
அதற்குள்ளாக அவள் தாய் வழி மறித்து இழுத்து, “கைல காதுல எதுவுமே போடாம, சாப்பிட கூட செய்யாம, எங்கடி ஓடுற. ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிட்டு போ”.
என்க, இவளுக்கு ஒரே பதட்டம். நேரம் தவறி போய் அந்த குழந்தையை மீண்டும் மரணத்தில் தள்ளி விடுவோமோ என்று எண்ணி வேகமாக புறப்படும் நோக்கில் அவள் இருக்க, அவள் தாய் அவளை விடுவதாக இல்லை.
“லேட்டா எழுந்தது உன் தப்பு. கிளம்பி வரதுக்கும் உனக்கு இவ்ளோ நேரம். இதுல வேற பாட்டிக்கிட்ட உக்காந்து கதை பேசிகிட்டு இருக்க, அப்புறம் உனக்கு நேரம் ஆகாம என்ன பண்ணும்.
இப்ப நீ ஒழுங்கா உக்காந்து சாப்பிடல அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஏழரை மணி பஸ் போனா போது, ஏழே முக்கால் பஸ்ஸில் போய்க்கலாம்” என்று அவளை நிறுத்திவிட்டார்.
தாய் முதலில் பேசிய அனைத்தையும் கேட்டு பதட்டமாகவே இருந்தவள் கடைசியாக அவர் கூறிய ‘ஏழே மூக்கால் பஸ்’ என்ற வார்த்தையில் பதட்டம் நீங்கி அப்படியே நின்று விட்டாள்.
போன முறையும் தாமதமாக தானே கிளம்பினாள். அப்போதும் இரண்டாவதாக வந்த அந்த பேருந்தில் தான் ஏறினாள்.
அது இப்போது நினைவில் வந்தது. “அப்ப அந்த ரெண்டாவது பஸ்ல தான் போகணும். அப்பதான் சரியா குழந்தையை பார்க்க முடியும். இப்ப அம்மா கிட்ட வம்பு பண்ணாம போனா தான் சரியா அந்த பஸ்ஸை பிடிக்க முடியும்”, என்று எண்ணி வேகமாக அமர்ந்து சாப்பிட்டாள்.
அம்மா இன்னும் வம்படியாக அவள் காதில் கழுத்தில் என்று மாட்ட சொன்ன நகைகளையும் மாட்டி கொண்டு வேகமாக புறப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்று இருந்தாள்.
பேருந்து நிலையத்திற்கு இவளுக்கு முன்பாகவே தருணிகா வந்திருந்தாள். முந்தைய வாழ்க்கையில் தன் தோழியாக இருந்து தான் தன்னை அறியாமல் செய்த ஒரு குற்றத்திற்காக தன்னை அத்தனை தூரம் வெறுத்த அவளுடன் தற்போது நெருக்கம் எதுவும் ஏற்படாமல் சற்று விலகலே இருந்தது.
இருந்தும் அவளிடம் எதுவும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே அவள் அருகில் நிற்க, ஆனால் தருணிகா அமைதியாக இருக்கவில்லை.
“ஏன் டி வேலு, இன்னைக்கி முதல் நாள் அத்தனை தடவை வேகமா வான்னு என்னை சொல்லிட்டு நீ லேட்டா வந்திருக்க. நம்ம பஸ் போயிடுச்சு. இப்ப என்ன பண்ண?” என்று கேட்க,
“நீ ஏறி இருக்கலாம் தானே தருணிகா?” என்று வேலினி அவளின் முழு பெயரையும் சொல்லிக் கூப்பிட, அதை கேட்டதும் இவளுக்கு ஒரு மாதிரி வினோதமாக இருந்தது.
இருந்தும் அவளிடம் இயல்பாகவே “என்னைக்காவது நான் உன்னை விட்டு போயிருக்கேனா?” என்றாள் அவள்.
“நீ போயிடுவ தருணிகா. ஒரு வேலை பெருசா ஏதாவது உனக்கு பிடிக்காததை நான் செஞ்சா என்னை விட்டு போயிடுவ”, என்று தனக்குள்ளேயே கூறிக் கொண்டாள் வேலினி.
அமைதியாக இருந்த தன் தோழியிடம், “ஏய் என்ன ஆச்சுடி வேலு? சொல்லு நான் உன்னை விட்டு என்னைக்கு போயிருக்கேன்?”,
“அதை விடு. அடுத்த பஸ் வரும் அதுல போகலாம்”,
“அந்த பஸ் சில நாள் வரவே வராது. இன்னைக்கி வரலைன்னா என்ன பண்றது”
“இன்னைக்கி வரும், தருணிகா”
அவள் சொல்லி முடிப்பதற்குள் சரியாக ஏழே முக்காலுக்கு அந்த பேருந்து அங்கு வந்து நின்றது. இருவரும் அதில் ஏறிக்கொள்ள அடுத்தடுத்த நிறுத்தங்களில் அவர்களின் தோழிகளும் ஏறிக்கொண்டனர்.
அனைவருக்கும் அத்தனை நாட்களுக்கு பிறகு சந்திக்கும் தோழிகளை நலம் விசாரிக்கவும் விடுமுறைகளின் போது விடுபட்ட கதைகளை பேசவும் நேரம் சரியாக இருக்க, வேலினியின் முகத்தில் இருந்த பதட்டத்தை அவர்கள் பெரிதாக கவனிக்கவில்லை.
முடிந்த அளவு வேலினியும் இயல்பாகவே தன்னை காட்டிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
போன முறை போல் பேருந்தில் இருந்தவர்களின் கவனமும் இப்போது இவர்கள் மேல் இருக்கவில்லை. ஆனால் இயல்பான அந்த சூழ்நிலையில் கூட வேலினியின் பதட்டமான முகத்தை இரு கண்கள் ஆராய்ந்து கொண்டே வந்தது. இதை அங்கிருந்த யாரும் அறியாமல் போயினர்.
அவர்கள் இறங்கும் நிறுத்தம் வந்ததும் வேகமாக வேலினி அனைவரையும் இடித்துக் கொள்ளாத குறையாக, இறங்கி வெளியே நிற்க அவள் எதிர்பார்த்தது போல் அந்த குழந்தை அங்கு நின்று கொண்டிருந்தாள்.
குழந்தையை பார்த்ததும் தானாக அவள் உதடுகள் ‘ச..த்..யா..’ என்று அவள் பெயரை முணுமுணுத்தது. போன முறை குழந்தையிடம் அவள் பெயர் என்ன என்று விசாரித்திருந்தாள்.
குழந்தையும் தன் பெயரை அழகான தமிழில் ‘சத்யா’ என்று உச்சரித்திருக்க ஒரே ஒருமுறை மட்டும் தன் வாழ்நாளில் கேட்டிருந்த அந்த பெயரையும், அவள் முகத்தையும் அவள் எப்போதும் மறந்திருக்கவில்லை.
ரத்த வெள்ளத்தில் மரணம் தன்னை நெருங்கும் அந்த கடைசி நொடியில் கூட, குடும்பத்தினரின் முகங்களோடு சேர்த்து அந்த பிஞ்சு முகமும் வந்து போனதை அவள் மறக்கவே இல்லை.
இந்த முறை நிச்சயமாக பிள்ளையை மரணத்தின் பிடிக்கு விட்டுவடவே கூடாது என்று வேகமாக அங்கிருந்து நகர முயன்றாள்.
அப்போது அங்கிருந்த வண்டி அவள் துப்பட்டாவை பிடித்து இழுத்தது. அவள் வேகமாக அதனை இழுக்க, பட்டென்று துப்பட்டா கிழிந்தது. அதை கூட கருத்தில் கொள்ளாமல் பிள்ளையிடம் நெருங்கி சென்றாள்.
குழந்தை சத்யா அவள் தந்தை இருந்த திசையை கண்டு, அப்பா அப்பா என்று தூரத்தில் கைகாட்டி கொண்டிருக்க, காக்கி உடையுடன் தூர நின்றிருந்த சத்யாவின் தந்தை குழந்தையின் அருகே நின்றிருந்தவளை குழப்பமான பாவனையுடன் கண்டார்.
ஆனால் வேலினிக்கு எந்த குழப்பமும் இல்லை. தூரத்தில் இருந்தவரிடம் தான் பார்த்துக் கொள்வதாக செய்கை செய்துவிட்டு பிள்ளையின் கைகள் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அவளிடம், “சத்யா குட்டி, அக்கா கையை இறுக்கமா பிடிச்சுக்கோ எந்த காரணத்துக்காக இதை விடவே கூடாது”, என்று அழுத்திக் கூற, குழந்தைக்கு புதிதாக ஒரு நபர் தன்னிடம் இப்படி பேசுவது வினோதமாக தான் இருந்தது.
கையை விடவே அந்த குழந்தை முயற்சி கொண்டிருந்தாள், “சத்யா குட்டி ட்ராபிக்கா இருக்குல்ல. அப்பா கூட ரோட் க்ராஸ் பண்ண கஷ்டபடுறாரு இல்லை. நீ இப்ப வண்டியை தாண்டி போனேன்னா, அப்பாவும் டென்ஷன் தான் ஆவாரு.
கொஞ்ச நேரம் அமைதியா என் கைய இறுக்கமாக பிடிச்சுக்கோ. அப்பா கிட்ட போயிடலாம். சரியா? நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்”
என்று கூறியதும் குழந்தைக்கு ஏதோ நம்பிக்கை தோன்றியது போல, அவள் கையில் இருந்த தன் கையை உருவிக் கொள்ளாமல் இன்னொரு கையை எடுத்து அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
அப்போது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. இப்போதே குழந்தையை இங்கிருந்து வேறு பக்கம் கூட்டி சென்று விட்டால், இந்த கலவரத்திற்குள் சிக்க வேண்டியது இருக்காது என்று எண்ணி நகரப் பார்த்தாள் வேலினி.
ஆனால் அவள் அப்படி செய்யும் முன்பாகவே அங்கு சண்டை மூண்டது.
அந்த கலவரத்தில் இருந்த சில ஆட்கள் அவளை வேறெங்கும் நகர விடாமல் பிடித்து வைத்திருந்தனர். அவர்கள் வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்றாலும், அவர்களை தாண்டி அவளால் அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்தாள்.
குழந்தையும் கலவரத்தை கண்டு அஞ்சி கிட்டத்தட்ட அவளை கட்டிப்பிடித்த வண்ணம் நின்றிருந்தாள்.
ஒரு கட்டத்தில் அங்கிருந்த கலவரத்தில் அனைவராலும் வலுக்கட்டாயமாக டீக்கடைக்குள்ளேயே தள்ளப்பட்டாள்.
எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது அவளுக்கு நல்லதாக படாமல் போக என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் தத்தளித்தாள்.
அவள் அடுத்து யோசிக்க கூட நேரம் இல்லாமல் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது. நெருப்பைக் கண்டு எப்போதும் அஞ்சும் மனம் இப்போதும் அரண்டது தான்.
ஆனால் குழந்தையை மட்டும் விடக்கூடாது என்று அவள் மனம் ஜபம் போல் சொல்லிக்கொள்ள, கைகள் குழந்தையை இறுக்கமாக பிடித்து வைத்திருந்தது.
நெருப்பைக் கண்டு அஞ்சும் குழந்தையாக இவள் மனம் தவித்துக் கொண்டிருக்க, மறுபுறம் குழந்தையை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குழந்தையை தூக்கி அவள் அவளை மார்போடு அனைத்து பிடித்துக் கொண்டாள்.
குழந்தையின் பார்வை நெருப்பின் மேல் படாமல் தன் பக்கமாக பிடித்து கொண்டாலும் நெருப்பை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வரவே இல்லை.
‘சிறிது நேரத்தில் வெளியே இருப்பவர்களே உள்ளே வந்து தங்களை அழைத்துச் செல்வார்கள். அதுவரை குழந்தையை பிடித்துக் கொண்டால் போதும்’ என்று அவள் நின்றிருக்க, இம்முறையும் அவள் எண்ணத்திற்கு மாறாக நெருப்பு கடை எங்கும் பரவத் தொடங்கியது.
உள்ளே பேப்பர்களின் சிதறல்கள், வேகமாக நெருப்பு பற்றக்கூடிய பொருட்கள் என்று நிறைய அடங்கி கிடக்க, அது அனைத்தும் நெருப்பால் பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரம் கூட அங்கு நிற்க முடியாத சூழ்நிலை.
வெளியே இருந்து சில முயற்சிகளும் நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனாலும் யாராலும் உள்ளே அத்தனை எளிதாக வந்துவிட முடியவில்லை.
உடல் நெருப்பின் சூட்டை உணர குழந்தை மேல் பட்டுவிடக் கூடாது என்று துப்பட்டாவால் குழந்தையை பொத்திக் கொண்டாள்.
இன்னும் சூடு ஏறிக்கொண்டே இருப்பதை உணர்ந்தவள், அதுவரை இறுக்கமாக மூடி இருந்த கண்களை பட்டென்று திறந்து பார்க்க, நெருப்பு அதிகமாக இருக்கிறது என்று மனம் அவளை எச்சரித்தது.
நெருப்பில் தெரிந்த சிறிய இடைவெளியில் வெளியே பார்க்க குழந்தையின் தந்தையை சிலர் பிடித்து நிறுத்தி இருப்பது தெரிந்தது. மற்றவர்கள் உள்ளே நெருப்பை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் யாரும் இப்போது உள்ளே வரப்போவதாக அவளுக்கு தெரியவில்லை. அடுத்த நொடி அவள் வேறு எதுவும் சிந்திக்காமல் குழந்தையின் சுற்றி இருந்த துப்பட்டாவை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டவள்,
குழந்தையின் தலையை நன்றாக தன் மார்போடு அழுத்தி பிடித்துக்கொண்டு ஒரு நொடி கூட தாமதிக்காமல் வேகமாக ஓடி வெளியே வந்தாள்.
அவள் ஓட்டம் வேகமாக இருந்த போதும் அவள் ஆடைகளில் நெருப்பு பற்றி எரிவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவள் வெளியே வந்து நொடி அவள் கைகளில் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டது ஒரு கை.
மற்றொரு கையோ அவள் உடலில் இருந்த நெருப்பை பட்டு பட்டு என்று அடித்து அமர்த்த முயற்சி செய்தது. அதற்குள் அந்த கைகளிடமிருந்து அந்த காவலர் குழந்தையை பெற்றுக் கொள்ள, இப்போது இரு கைகளையும் பயன்படுத்தி வேகமாக அடித்து அடித்து அந்த நெருப்பை அணைத்திருந்தான் அந்த கைகளுக்கு உரியவன்.
நெருப்பை அணைத்த அடுத்த நொடி, தான் அணிந்திருந்த சட்டையின் மேல் இருந்த அந்தக் கோட்டை கழட்டி அவள் மீது பொத்தி விட்டான். தன் மேல் இருந்த நெருப்பை கண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டு, தன்னை சுற்றி நடப்பதை உணராது இருந்தவள், அந்த ஆடையின் சூடு ஏற்படுத்திய புழுக்கத்தில் தான் நிமிர்ந்து தன் முன் நின்ற அந்த நபரை கண்டாள்.
தன்னைப் பதட்டமாக பார்த்த நின்றிருக்கும் அந்த கண்களை அவளுக்கு எங்கோ பார்த்தது போல் நினைவு தோன்ற, அதை பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் வேலினி.
பதட்டம் அவளை சூழ்ந்து இருந்த போதும் அவளுக்கு அந்த கண்களைப் பார்த்ததும் எங்கோ பார்த்த நினைவு வராமல் இருக்கவில்லை.
குழந்தையை அவள் கையில் இருந்து வாங்கியதில் இருந்து நெருப்பை அணைத்து தன் மேலாடையை அவளுக்கு போர்த்தி விட்ட வரை அனைத்தையும் செய்து முடிக்கும் வரை அவள் அருகில் மற்ற யாரையும் அவன் நெருங்க விடவே இல்லை.
அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று அறியாமல் அதுவரை சற்று தள்ளி நின்றிருந்த தோழிகள் கூட வேகமாக அப்போதுதான் அவள் அருகே வந்து நின்றனர்.
“வேலு உனக்கு ஒன்னும் இல்லைல?” என்று ஒருவர் விடாமல் அனைவரும் கேட்க அவள் அனைவரிடமும் நிதானமான குரலில்
“ஒன்னும் இல்ல டி. நான் நல்லா தான் இருக்கேன். ஒன்னும் இல்ல” என்று சமாதானமாக கூறினாள் வேலினி. அதைக் கேட்டதும் தான் அருகே நின்றவனும் பதட்டம் நீங்கி சற்று விலகி சென்றான்.
அவன் தூரம் சென்றதும் இவன் தோழிகளிடம் சிறிது நேரம் பேசி மீண்டும் அவர்களை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். அவள் பேசி முடித்ததும், “வாடி போலாம்”, என்று அவர்கள் கூற, “ஒரு நிமிஷம்”, என்றவாறு அங்கு வந்து நின்றான் அவன்.
அவனை அனைவரும் கேள்வியாக பார்க்க, அவனோ வேலினியை மட்டும் தான் கண்டான். அவள் முன்பு தன் வலது கையை அவன் நீட்ட, அவளும் யோசனையாக தன் வலது கையை நீட்டினாள்.
“குட் ஜாப் வேலினி. இந்த சூழலில் வேற யாராவது இருந்திருந்தால் என்ன பண்ணி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா நீ பிரேவா குழந்தையையும் உன்னையும் சூப்பரா காப்பாத்திட்ட, அதுக்காக என்னோட வாழ்த்துக்கள்”, என்று அவன் கைக்குழுக்க, இவள் அவனை யோசனையாகவே பார்த்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக பார்த்த படி கைகளை விடாமல் பிடித்தவாறு நின்றுருக்க, அச்சமயம் வேகமாக அவர்கள் அருகே ஓடி வந்த ஒருவன் இவன் தோளில் தட்டி, “டேய் இந்தாடா நீ கேட்டது” என்று ஒரு பையை நீட்டினான்.
அதில் நினைவு திரும்பியவனாக, அவள் கைகளை பிடித்து இருந்த தன் கைகளை பார்த்து, புன்னகையுடன் அந்த கைகளை விடுவித்துக்கொண்டு நண்பன் கொடுத்த பையில் எதையோ தேடி பார்த்துவிட்டு அவளிடம் நீட்டினான்.
அவள் என்னவென்று அவனை குழப்பமாக பார்க்க, “இதில ஒரு டிரஸ் இருக்கு. அந்த கடை என் ஃபரண்டோடதது தான் அங்க போய் சேஞ்ச் பண்ணிக்கோ”, என்று கூறினான்.
“இல்ல பரவால்ல” என்று அவள் உறைக்க, “மிஸ். வேலினி உங்க டிரஸ் எல்லாம் நெருப்புப்பட்டு, அங்கங்க ஓட்ட ஓட்டையா இருக்கு. இதோடவா ரோட்டில நடந்து போக போறீங்க. தயவு செஞ்சு இதை போய் மாத்திக்கோங்க” என்றான்.
இன்னும் அவளுக்கு சங்கடமாகவே இருக்க, “இங்க பாருங்க, இது அவனோட கடை தான் அவங்க அப்பாவும் அவங்க அம்மாவும் உள்ள தான் இருக்காங்க. நீங்க தைரியமா போங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று கூறி தன் அருகே அந்த நண்பனையும் தூரமாக தெரிந்த அவன் கடையையும் காட்டினான்.
இதற்கிடையில் குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை என்று இப்போதுதான் தெளிவாக இருந்த சத்யாவின் தந்தை, வேகமாக வேலினி அருகே வந்து அவளுக்கு காலில் விலாத குறையாக நன்றி கூறிக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு உயர் பதவியில் இருக்கும் தன்னைவிட வயதில் மூத்த ஒரு நபர் இப்படி தன்னிடம் பேசுவது ஒரு மாதிரி சங்கடமான சூழ்நிலை தான் அவளுக்கு.
அப்போது அருகில் இருந்த அவனோ, “சார் அவங்க உங்க குழந்தைய காப்பாத்திட்டாங்க. ஆனா இப்ப நீங்க அவங்கள சங்கடப் படுத்துறீங்க. அவங்க போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கட்டும்”,என்று கூற
“சாரி ம்மா சாரி”,, என்று அவரும் சங்கடமாக நகன்று சென்றார். இவளும் உடனே வேகமாக கடைக்குள் புகுந்து கொள்ள, தோழிகளும் அவள் பின்னே சென்றனர்.
சிறிது நேரத்தில் உடைமாற்றி விட்டு வெளியே வந்தவள் அவள் கைகளில் அவன் மேலாடையை வைத்திருந்தாள். அதனை அவன் கைகளில் கொடுக்க அவனும் அதனை வாங்கி போட சென்றான்.
அதற்குள் வேலினி அவனை தடுத்து நிறுத்தி, “இல்ல இதுலயும் நெருப்பு பட்டு இருக்கு. பொதுவா நெருப்பு பட்ட டிரஸ் போட வேண்டாம்னு சொல்லுவாங்க”, என்று அவள் கூற, சரி என்று கைகளில் வைத்துக் கொண்டான்.
“வேலினி ஹாஸ்பிடல் எதுவும் போகணுமா? வரிங்களா?” எங்கேயாவது காயம் இருந்தா சொல்லுங்க?”, என்று கேட்க அவளும்,
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல. காயம்லா இல்ல. டிரஸ்லதான தீ புடிச்சது. இப்ப எந்த பிரச்சினையும் இல்ல. அப்படியே இருந்தாலும் இப்ப காலேஜ் தான போறேன். காலேஜ்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வச்சிருப்பாங்க. அதுல லைட்டா மருந்து போட்டுக்கிறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று கூறிவிட்டு நகர பார்க்க,
“ஒரு நிமிஷம் எதுக்கும் ஒரு தடவ டாக்டர் கிட்ட போய் செக் பண்ணலாமே”, என்று கூற, “இல்ல பரவால்ல இருக்கட்டும் நான் பாத்துக்குறேன். ஆன்….எனிவேஸ் உங்க பெயர் என்ன?” என்று அவள் கேட்க,
“என் பேரு குரு” என்று அவன் கை நீட்டி அறிமுகப்படுத்திக் கொண்டான். இவளும் மீண்டும் ஒருமுறை தன் கைகளை கொடுத்து புன்னகையுடன் அங்கிருந்து நகர, அவள் எதிர் சாலைக்குச் சென்று அங்கு வந்த பேருந்தில் ஏறி கொள்ள, அந்த பேருந்ததையே புள்ளியாக மறையும் வரை அப்படியே பார்த்து நின்றிருந்தான் குரு.
வருவாள்……….
மகா ஆனந்த் ✨
