Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதல் ரட்சகா

காதல் ரட்சகா 9

மாயா நம்பாமல்தான் பார்த்தாள். விக்னேஷின் விழிகளில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை.

“உன் அப்பா இறந்த பிறகு நான் உன் வீட்டுல தங்க காரணம் நீதான். உன் பக்கத்துல இருக்க ஆசை. உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மாயா. என் அண்ணனும் அண்ணியும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கும்போது அவங்களுக்கு பின்னாடி நின்னு கிட்டார் வாசிக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கும். ஆனா உன் கண்ணை பார்க்கும்போது என் நெஞ்சுக்குள்ள கிட்டார் மியூசிக் ஆட்டோமேட்டிக்கா ப்ளே ஆகுது. உன்னை நான் பார்க்கும்போது பஞ்ச பூதங்களும் என்னை ரொம்ப லவ் பண்ற மாதிரி தோணுது..” என்றான்.



Advertisement

இவள் பார்வையை திருப்பினாள்‌. “ஓகே. லவ் பண்ற. அதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா அதுக்காக இவ்வளவு உருட்டாத..” என்றாள்.

அவளின் தாடையை பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான். “எனக்கு நிறைய சொல்லணும். ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியல. என் காதல் உன்னாலதான் வானவில் மேல ஏறி சவாரி போகுது. நீ செத்துட்டன்னு நினைச்சி வாழ்க்கையை வெறுத்தேன். உனக்கு உயிர் இருக்குன்னு டாக்டர் சொன்னது கேட்டு மறுபடி எனக்கும் உயிர் வந்தது. நீ எப்ப கண் விழிப்பன்னு ஒவ்வொரு செகண்டும் காத்திருந்தேன் மாயா. எல்லாத்தையும் மறந்துட்டு இந்த ரூம்ல ஒரு ஓரமாக தினமும் உட்கார்ந்திருந்தேன். உன் முகத்தை தவிர எங்கேயும் பார்க்காம உன் பாதம் தவிர எங்கேயும் தீண்டாம உட்கார்ந்திருந்தேன்..” என்றான்.

Advertisement

Advertisement

அவள் விழிகளில் கண்ணீர் மின்னியது.

“ச்சீ போ. எனக்கு இப்படியெல்லாம் பிடிக்காது. நீ என்னை ஏதோ பண்ற‌. என்னை சாப்டா மாத்த பார்க்குற..” என்றாள்.

Advertisement

இவன் சின்னதாக சிரித்தான். “உன் வயித்துலயும் பட்டாம்பூச்சி பறக்குது போல..” என்றான்.

“இப்படி பேசாத..” என்றவளின் கன்னங்களில் லேசாக சிவப்பு படர்ந்தது.

குனிந்து அவளின் இதழில் தன் உதடுகளை பதித்தான். இவள் அதிர்ச்சியாக பார்த்தாள்.

உணர்வுகளை காட்டாத மெல்லிய முத்தம்.

இதழோடு இதழ்களை உரசி விட்டு நிமிர்ந்தவன் “நீ வெட்கப்படும்போது வெண்ணிலவை விட அழகா இருக்க..” என்றான்.

இவள் உதடு சுழித்தாள்.

அந்த உதட்டை இரு விரல்களால் கிள்ளினான். “யார் உன்னை கொல்ல பார்த்ததுன்னு சொல்லு. என் அம்மாவா இருந்தாலும் பரவால்ல சொல்லு.. அவங்களை ஜெயிலுக்கு அனுப்பணும்..” என்றான்.

“என் மேல இருக்கும் ஆசையில் உன் அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்ப பார்க்கிற. உன் பாசம் புல்லரிக்க வைக்குது..” என்றாள் நக்கலாக.

அவளின் கன்னத்தை பிடித்தவன் “தப்பு செஞ்சது தாயா இருந்தாலும் பிள்ளையா இருந்தாலும் சரியான தண்டனை தரணும். அவ்வளவு நல்லவன் நான்..” என்றான்.

“நீ தொடாம பேசு..” என்றாள்.

அவன் தயக்கத்தோடு கையை பின்னால் இழுத்தான்.

“என் அம்மாதானே அது?” என்று கேட்டான்

அவள் தனக்குள் தடுமாறினாள். அவளின் விழிகளையே பார்த்துக்

கொண்டிருந்தவன் “அவங்களேதான். கன்பார்ம். நான் இப்பவே போய் போலிஸ்கிட்ட சொல்றேன்‌..” என்று எழுந்தான்.

அவன் செல்லும் முன்னால் அவனின் கையை பிடித்தாள். “உனக்கு தேவையில்லாத எதையும் செய்யாத. எனக்கு தாகமா இருக்கு..” என்றாள்.

இவன் விழிகளை விரித்தபடி பக்கத்தில் வந்து அவளை நோக்கி குனிய, அவசரமாக அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள் “முத்த தாகம் இல்ல. தண்ணி தாகம்..” என்றாள் அவசரமாக.

கண்களை மூடியபடி எழுந்து நேராக நின்றவன் “சாரி..” என்றான்.

“மார்க்கமான மாய பிசாசு நீ. தண்ணி கொண்டு வா..” என்றாள்.

“உடனே கொண்டு‌ வரேன்..” என்று வேகமாக நடந்தான். அவன் இவளை பார்த்தபடியே கதவை திறக்க, அவனின் மற்றொரு கை பட்டு மேஜையின் மீதிருந்த பூஜாடி கீழே விழுந்து உடைந்தது.

இவள் பதறி விட்டாள். ஜாடியை வெறித்து பார்த்தாள். சற்று முன் பார்த்தது போல அப்படியே இருந்தது.

“விக்கி..” அவசரமாக அழைத்தாள்.

பூஜாடியை கூட கவனிக்காமல் கதவை தாண்டி விட்டான் அவன். ஆனால் இவளின் அழைப்பில் மீண்டும் உள்ளே வந்தான்.

நொடியில் வியர்த்து விட்டாள். நடுங்கும் கைகளோடு இவனை அருகில் வர சொல்லி அழைத்தாள்.

பாய்ந்து வந்தான். இவளின் கன்னங்களை அள்ளியவன் “என்னாச்சி மாயா?” எனக் கேட்டான்.

கதவை சுட்டி காட்டினாள். “ஒருத்தன் கத்தியோடு வந்தான். என்னை குத்தினான்..” என்று திக்கி திணறி சொன்னாள்.

அவன் கதவை திரும்பி பார்த்தான். “இல்ல மாயா. யாரும்‌ வரல..”

அவள் தன் நெஞ்சை தொட்டாள். “இங்கே குத்தினான்..” என்றவளின் முகம் வெளுத்துக் கொண்டிருந்தது.

அவளின் கையை பிடித்து தூர வைத்தான். “இல்ல. ஏதாவது கனவு கண்டியா?” என்று கேட்டான்.

இல்லை என்று தலையாட்டினாள்.

“அந்த ஜாடி உடைஞ்சி இருந்தது. இந்த இடம் முழுக்க பச்சையா மாறி போயிருந்தது. ஒருத்தன் வந்தான்” என்றாள்.

விக்னேஷ் சுற்றிலும் பார்த்தான். “அப்படி எதுவும் இல்ல மாயா. இங்கே யாரும் வரல. நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம்..” என்றான்.

அவள் முகத்தில் பயம் பச்சையாய் தெரிந்தது.

“நீ ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு. நான் தண்ணி கொண்டு வரேன். தண்ணி குடிச்சா எல்லாம் சரியா போயிடும்..” என்றவன் அவளை விட்டு விட்டு கிளம்பினான்.

இவள் பயத்துடனே அந்த அறையை நோட்டம் விட்டாள்.

“இந்த ரூம் மறுபடியும் பச்சை நிறமா மாறுமா?” என்று இவள் குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்க‍, அந்த அறையின் கதவு படார் என்று திறக்கப்பட்டது.

திரும்பிப் பார்த்தாள். அந்த ரூம் பச்சையாக மாறியிருக்கவில்லை. ஆனால் பச்சை நிறத்தில் மாறி இருந்தபோது வந்த அதே மனிதன் இப்போது வந்தான்.

“இன்னும் சாகாம இருக்கியா? எங்க மேடத்தை போட்டு தரப் போறியா?” என்று கேட்டவன் அவன் மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்தான்.

“நீ அன்னைக்கே செத்திருக்க வேண்டியது. ஆனா செத்தும் திரும்ப பிழைச்சிட்ட. உன்னை ஒரேடியா முடிச்சி கட்டுறேன்..” என்று சொல்லி கத்தியோடு இவளை நெருங்கினான்.

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வெளியே சென்ற விக்னேஷ் மாயா சொன்னதையே யோசித்து கொண்டு இருந்தான். அங்கே அமலா வைத்திருந்த பேக்கில் இருந்து வாட்டர் பாட்டிலை கையில் எடுத்தான். வாட்டர் பாட்டில் காலியாக இருந்தது. அதை எடுத்துக்கொண்டு தண்ணீர் இருக்கும் இடத்திற்கு நடந்தான்.

அவள் காரணம் இல்லாமல் ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள். அதுதான் இவனுக்கு உறுத்தியது.

அமலாவும் ரதியும் மருத்துவரை பார்க்க சென்றிருந்தார்கள். தருண் அப்போதுதான் ‌ மெடிக்கலுக்கு சென்று விட்டு மெடிசன் இருந்த கவரோடு திரும்பி வந்தான். அதை விக்னேஷ் பார்த்து விட்டான்.

வேகமாய் ஓடி சென்று அவனிடம் இருந்த கவரை பிடுங்கிய விக்னேஷ் “மாயாவுக்கு தாகமா இருக்காம். நீ போய் ஹாட் வாட்டர் பிடிச்சி வா..” என்று வாட்டர் பாட்டிலை நீட்டினான்.

தருண் பாட்டிலோடு அங்கிருந்து கிளம்பினான்.

விக்னேஷ் ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்றபடி ஐசியூவை பார்த்தான். போலீஸ் ஒருவர் அந்த அறையின் வாசலில் காவலுக்கு இருந்தார். ஆனால் அடுத்த சில நொடிகளில் அங்கே வந்தான் ரவுடி போல் இருந்த ஒருவன்.

அவனை கண்டதும் காவலுக்கு இருந்த போலீஸ் பாத்ரூம் பக்கம் நடந்தார்.

ஏதோ தவறு நடக்கப் போகிறது என்பது விக்னேஷ்க்கு புரிந்து விட்டது.

உள்ளே சென்ற ரவுடியின் பின் இடுப்பில் ஒரு கத்தி இருப்பதையும் இவன் கவனித்து விட்டான்.

உடனே அந்த அறையை நோக்கி ஓடினான்.

மாயாவை நெருங்கிய அந்த ரவுடி “நெஞ்சில புல்லட் பட்டும் எப்படி உயிரோடு இருக்க?”‌ என்று கேட்டு தன் வலது கையில் இருந்த கத்தியால் அவளின் நெஞ்சில் குத்த இருந்த சமயத்தில், பாய்ந்து வந்து அவனின் கையை பிடித்து விட்டான் விக்னேஷ்.

ரவுடி கட்டிலின் அந்த பக்கம் இருந்தான். விக்னேஷ் இந்த பக்கம் இருந்தான்.

இவன் கத்தியை பிடித்து விடவும் அந்த ரவுடி உடனே யோசித்து இடது கையால் அந்த கத்தியை பிடித்தான். அடுத்த நொடி அந்த கத்தியை மாயாவின் நெஞ்சில் குத்த முயன்றான்.

விக்னேஷ் இந்த முறையும் தடுக்க முயன்றான்‌. ஆனால் கொஞ்சம் ஏமாந்து விட்டான். ரவுடியின் கையைப் பிடிப்பதற்கு பதிலாக கத்தியை பிடித்து விட்டான். விக்னேஷின் உள்ளங்கையை பதம் பார்த்தது கத்தி. உடனே அந்த கையை பின்னுக்கு இழுத்த விக்னேஷ் மறு கையால் மீண்டும் ரவுடியின் கத்தி இருந்த கையைப் பிடித்தான்.

ரத்தம் வந்து கொண்டு இருந்த கையை மடக்கி ரவுடியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

ரவுடி அந்த ஒரு குத்துக்கே பின்னால் விழுந்து விட்டான்.

அவன் கையில் இருந்த கத்தி தூரமாய் சென்று விழுந்தது.

விக்னேஷ் மாயாவை தாண்டி அந்த பக்கமாக குதித்தான். ரவுடியை நெருங்கி அவனின் முகத்திலேயே ஓங்கி ஓங்கி உதைகளை கொடுத்தான்.

பயத்துடன் அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

ரவுடியின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

“என்னை விடுங்க சார்..” என்று கத்தினான்.

அவனை முகத்தை பஞ்சர் செய்துவிட்டு குனிந்து அவனின் சட்டை காலரை பிடித்தான் விக்னேஷ். “உன்னை யார் இங்கே அனுப்பினாங்க?” என்று கேட்டான்.

“கைலாஷ் சார்தான் அனுப்பினார்..” என்று அவன் பொய் சொன்ன நேரத்தில் அந்த அறைக்குள் தண்ணீர் பாட்டிலோடு வந்தான் தருண்.

“என்ன ஆச்சி?” என்று கேட்டான்.

விக்னேஷ் ரவுடியின் முகத்தில் மீண்டும் ஒரு குத்தை கொடுத்துவிட்டு எழுந்து நின்றான்.

“மாயாவை கொல்ல ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கு இந்த நாய். இவனுக்கு இந்த ரூம் மாசல்ல காவலுக்கு இருந்த போலீசும் உதவி செஞ்சிருக்காரு. நான் என் கண்ணால பார்த்தேன்..” என்றான்.

தருண் மாயாவையும் அந்த மனிதனையும் மாறி மாறி பார்த்தான்.

மாயா தண்ணீருக்காக கை நீட்டினாள்.

தருண் முதல் வேலையாக அவளுக்கு தண்ணீரை கொடுத்தான்.

ஈரம் தொண்டையைத் தாண்டி இறங்கிய பிறகே இவளுக்கு கொஞ்சம் உயிர் வந்தது.

வெளியே காவலுக்கு இருந்த போலீஸ் உள்ளே வந்தார். “என்ன ஆச்சு?” ஒன்றும் தெரியாதவர் போல கேட்டார்.

“இவன் இவளை கொல்ல வந்தான். நல்ல நேரத்துல நான் வந்து காப்பாத்தினேன். இவனுக்கு நீங்களும் உதவி செய்றிங்கன்னு எனக்கு தெரியும். போலீஸா இருந்துட்டு இப்படி செய்ய உங்களுக்கு வெக்கமா இல்லையா?” என்று கோபத்தோடு கேட்டான் விக்னேஷ்.

போலீசுக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “எதுவும் தெரியாம என் மேல பழி போடாதிங்க தம்பி. நான் யாருக்கும் உதவி செய்யல. இவ்வளவு நேரமா இந்த ரூம் வாசல்ல ரோபோட் போல காத்துட்டு இருந்தேன்.‌ இப்பதான் ஒரு நிமிஷம் முன்னாடி பாத்ரூம் போனேன். அதுக்கு இப்படி ஒரு பழியை போடுறிங்களே..” என்றார்.

இந்த போலீஸ் உண்மையை ஒத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்பதை விக்னேஷ் புரிந்து கொண்டான்.

“இவளை கொல்ல வந்திருக்கான். அரெஸ்ட் பண்ணுங்க..” வேண்டா வெறுப்பாக சொன்னான்.

கான்ஸ்டபிள் அந்த ரவுடியை முறைத்தபடியே வந்து கையில் விலங்கிட்டார்.

கொலகொலவென்று போயிருந்த அவனின் முகத்தில் அறையைக் கொடுத்தார். “நான் காவலுக்கு இருக்கும்போது இப்படி ஒரு வேலையை பண்றியா? உன்னை உள்ளே வச்சி தோலை உரிக்கிறேன் வா..” என்று இழுத்துப் போனார்.

விக்னேஷ் திரும்பி பார்த்தான். மாயா பயத்தில் கலங்கிய விழிகளோடு படுத்திருந்தாள்.

அவளின் அருகே நெருங்கிய விக்னேஷ் “உனக்கு ஏதாவது ஆச்சா?” என்று கேட்டான்.

இல்லை என்று தலையாட்டினாள்.

“கொஞ்சம் மிஸ். இல்லன்னா என்னாகி இருக்கும்ன்னு நினைக்கும்போதே பயமா இருக்கு..” என்றான்.

அவனின் கை காயத்தை பார்த்தாள். இப்படி ஒரு சூழ்நிலையிலும் நம்மைப் பற்றி கவலைப்படுகிறானே என்று அவளின் உள்ளம் கரைந்தது.

கனகவதி மீது இவளுக்கு கொலைவெறி. ஆனால் கனகவதி மகன் மீது காதல் பிறந்து விட்டது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!