Post Views: 2,106

கானகமயில் -04
ஏற்கனவே அண்ணன் மீது சங்கரிக்கு அதிக அளவு பாசம் இருந்தது. மற்ற அண்ணன்களை காட்டிலும் கூட அழகனின் மீது அவளுக்கு அதிக அளவு பாசம். ஏனென்று கேட்டால் காரணம் தெரியாது, ஆனால் அவனை அவ்வளவு பிடிக்கும்.
அவன் சோர்ந்து விழும் போதெல்லாம், காரணமறிந்திராதவள் வார்த்தைகளின் மூலமாக அவனை தேற்றிடுவாள். அப்படி இருக்க தற்போது அவன் செய்த செயல் அவளது தாய், தந்தையை விட ஒரு படி மேலே கொண்டு சென்று இருந்தது. குளித்து விட்டு வந்து அமர்ந்தவளிடம், “என்னமா இப்ப பெயின் இருக்கா, சாப்பாடு போட்டு தரட்டுமா?”என்று கேட்க,
Advertisement
“இல்லன்னா வலி எதுவும் இல்லை”
“ம்..தம்பி என்ன சமைச்சான்னு தெரியல, இரு பார்த்துட்டு வர்றேன்”
“இல்லன்னா நான் இட்லி சாப்பிட்டேன், பரிதி அண்ணா தான் போட்டு தந்துச்சு”
Advertisement
“ம்.. இந்த மாதிரி டைம்ல இலகுவான சாப்பாட்டை எடுத்துக்கணும்னு யூட்டியூப்ல பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். அது மட்டும் இல்ல நிறைய சாப்பிடணும், நல்லா ரெஸ்ட் எடுக்கணும், இன்னும் நெறைய விஷயங்கள் அதுல சொல்லி இருக்காங்க” என்று சொல்லி நேற்று செய்யாததை எல்லாம் தற்போது செய்து கொடுத்தான். நல்லெண்ணையில் முட்டை உடைத்து ஊற்றி கொடுப்பதாகட்டும், இனிப்புகள் அதிகமாக கொடுப்பதாகட்டும், இன்னும் பிற உடலுக்கு வலு தரும் உணவுகளாகட்டும் அனைத்தையும் கொடுத்து சாப்பிட சொன்னவன், “எனக்கு உளுந்தங்களி செய்ய தெரியாது விமலா அக்காக்கிட்ட சொல்லி இருக்கேன் அவங்க செஞ்சு கொண்டு வந்து கொடுத்ததும் மறுக்காம வாங்கி சாப்பிடும்மா. அப்ப தான் உடம்புல ஸ்ட்ரென்த் இருக்கும் சரியா” என்றதும் சரி என்று தலையை உருட்டினாள் சங்கரி.
Advertisement
அப்போது தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது, அழைப்பை ஏற்று “சொல்லுங்கப்பா” என்றான்.
“நான் மாமா குடும்பத்தோட கிளம்பிட்டேன்டா தம்பி. எல்லாரும் வர்றாங்க, அதுக்குண்டான ஏற்பாடுகளைப் பண்ணிடு, முடிஞ்ச வரைக்கும் தம்பிங்க எல்லாரையும் வீட்டுலையே இருக்க சொல்லு. ஏன்னா ரொம்ப நாள் கழிச்சு சேருற குடும்பம் என்ன பிரச்சனை வரும்னு தெரியாது, ஆனா என்ன வந்தாலும் நம்ம பாப்பாவுக்கு செய்ய வேண்டிய சடங்கை நல்லபடியா செஞ்சுடணும். அக்கம் பக்கத்துக்குல இருக்கவங்க எல்லாருக்கும் போய் சொல்லிட்டு வந்துரு. நாங்க மதியத்துக்குள்ள வந்துருவோம், அதுக்கப்புறம் விசேஷத்தைப் பார்த்துக்கலாம சரியா” என்று அவர் அலைபேசியில் சொன்னதும், இவனும் சரியென்று சொன்னவன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம், தங்கையை குடிசைக்குள் அமர வைக்கும் சடங்கிற்கு வரும்படி சொல்லி விட்டு வந்திருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி வாக்கில் அழகனின் தாய் ஆகாய செல்வின் மூத்த அண்ணன் மணிகண்டனும், அவரது மனைவி கௌசலையும், மகன் சிவப்பிரகாசமும், மகள் கண்மணியும் வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்றவன், “வாங்க மாமா வாங்க அத்தை, வாங்கங்க” என்று சொன்னவன் தன் பின்னே நின்றிருந்த தம்பிகளைக் கை காட்டி
Advertisement
“இவன் பெரிய தம்பி அகிலன், இவன் நடுவுலான் இளம்பரிதி, இவனுக்கு அடுத்தவன் கார்முகில், இது எங்க பாப்பா சங்கரி” என்றான்.
புன்னகைக்க முயன்று, இயல்பாக புன்னகைக்காமல் ஏதோ வேண்டா வெறுப்பாக புன்னகைத்தவாறு நின்று இருந்தாள் கௌசலை.
மணிகண்டனோ, “ரொம்ப சந்தோசம் தம்பி. இவ்வளவு நாள் கழிச்சு எங்களைத் தேடி வருவீங்கன்னு எதிர்பார்க்கல, ரொம்ப சந்தோசமா இருக்குது. ரெண்டு குடும்பமும் ஏதோ சில பல காரணங்களால பிரிஞ்சி இருந்திருக்கலாம், ஆனா இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்ததால மறுபடியும் ஒண்ணு சேருவோம்னு எதிர்பார்க்கல” என்றிட,
“நாங்க ஏழையா இருந்ததுனால உங்களுக்கெல்லாம் நாங்க கண்ணுக்கு தெரிஞ்சுருக்க மாட்டோம் இல்லையா மாமா” என்று வெடுக்கென்று கேட்டிருந்தான் கார்முகிலன்.
“ச்சூ.. என்ன பேசுற முகில் சும்மா இரு” அவசரமாக அதட்டினான் அழகன்.
“உன் வார்த்தையிலையே எங்க மேல உனக்கு கோவம் இருக்குன்னு தெரியுது கண்ணா. ஆனா நாங்க மட்டும் என்ன செய்வோம் சூழ்நிலை எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்கிறது கிடையாது இல்லையா. சிலருக்கு நாம ஒண்ணா இருக்குறதுல விருப்பம் இருக்கும் ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையா இருக்கலாம், சிலருக்கு சுத்தமா விருப்பம் இருக்காது அதனால கூட மறுபடியும் பார்க்க முடியாம போயிருக்கலாம்” என்று குறிப்பால் தன் நிலையை உணர்த்தினார் அவர்.
“பரவாயில்ல மாமா இதுக்கு மேல அதை பத்தி பேசி என்னாக போகுது, வாங்க உள்ள போலாம், உள்ளே வாங்கத்தை” என்று வரவேற்று உள்ளே அமர வைத்த அழகன், “எல்லாருக்கும் சொல்லிட்டோம் நாலு மணிக்கு எல்லாரும் வந்துருவாங்க மாமா, தென்னம்பட்டைக்கு கூட ஏற்பாடு பண்ணிட்டேன்”
“அப்ப அந்த டைம்லையே சடங்கை ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்டார் குமரேசன்.
“சாப்பிட்டுட்டு அதுக்கப்புறம் சடங்கை ஆரம்பிச்சுக்கலாம்பா” என்றவன் அவர்களுக்கு வெளியில் உணவு சொல்லியிருந்தான், எங்கே ‘தீட்டு வீடு’ என்று தங்கள் வீட்டில் சாப்பிட மாட்டார்களோ என்று நினைத்து.
அவன் நினைத்தது போல் இவன் வீட்டில் அவர்கள் தண்ணீர் கூட குடிக்கவில்லை. வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவையும் வெளியவே வைத்து சாப்பிட்டார்கள். அதில் வருத்தம் இருந்தாலும் தீட்டு வீட்டில் யாரும் தண்ணீர் கூட புழங்க மாட்டார்கள் என்று அக்கம்பக்கத்தினர் சொல்லி கேட்டிருந்ததால் அவர்களுக்கு உணவு கூட வெளியில் ஏற்பாடு செய்திருந்தான் அழகன். அதன் பிறகு அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாலும் கூட அழகன் மட்டும் ஒதுங்கியே இருந்தான்.
அவன் ஒதுக்கம் யாருக்கு பிடித்ததோ இல்லையோ கண்மணிக்கு பிடித்திருந்தது. வந்ததிலிருந்து அவனைத் தான் கவனித்து பார்த்திருந்தாள். பொறுப்பாக அனைத்தையும் செய்தான், மரியாதையாகவும் பேசினான், மொத்த குடும்பத்திற்கும் இவன் தான் ஆணிவேர் என்பதைக் கண்டு கொண்டவளுக்கு நொடியில் அவளுக்கு அவனை பிடித்து விட்டது.
“ஏன்பா இப்படி ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லவே இல்ல” தன் தந்தையின் காதைக் கடித்து துப்பாத குறையாக கேட்க,
“உங்க அம்மா சொல்ல முடியாத அளவுக்கு நம்ம வீட்டோட சூழ்நிலையை மாத்திட்டாம்மா. சொல்லி இருந்தா இப்ப என் மச்சான் வந்து கூப்பிட்டதும் கிளம்பி வந்து இருப்பாளா? கட்டாயம் வந்துருக்க மாட்டா, அது மட்டும் இல்ல இன்னும் பழைய மாதிரியே இவங்க இருந்திருந்தா சத்தியமா வந்து இருக்க மாட்டா. ஏதோ இவங்க கொஞ்சம் முன்னேறி இருக்கிறதுனால வந்து இருக்கா, இதுலையும் ஏதாவது ஆதாயம் தேடாம அவள் வந்திருக்க மாட்டா, அவளைப் பத்தி உனக்கு தெரியாதா?”
“தெரியுதுப்பா. அம்மாவுக்கு பணம் தான் முக்கியம், நல்ல வசதியா இருக்கிறவங்களைத் தான் பிடிக்கும்னு எனக்கும் தெரியும். நீங்க சொல்றதை வச்சு பார்க்கும் போது இவங்க கஷ்டப்பட்ட முன்னேறி இருக்காங்கன்னு தோணுது. அது மட்டும் இல்ல பார்த்தீங்களா அத்தையோட பெரிய பையன் எவ்வளவு பொறுப்பா நடந்துக்கிறாருன்னு, என் அண்ணனும் இருக்கானே ஊதாரித்தனமா செலவு பண்ணுவான், இதுவரைக்கும் பெருசா எதையும் சேர்த்து வச்சது கிடையாது, எனக்காக எதுவுமே செஞ்சதும் இல்லப்பா. ஆனா அவரைப் பார்த்தீர்களா எவ்வளவு அழகாக தங்கச்சிக்காக ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செய்யறாருன்னு, ரொம்ப நல்லவரா இருக்காரு இல்லப்பா” என்றாள் அழகனைப் பார்த்தவாறே.
மகளை திரும்பிப் பார்த்த மணிகண்டன், “என்னம்மா அத்தை பையன் மேலே புதுசா பாசம் எல்லாம் வைக்கிற போல” என்று கேட்டார்.
“இப்படியொரு அத்தை பையன் இருக்கிறதா சொல்லி இருந்தா முன்னமே பாசம் வச்சுருப்பேன்பா, நீங்க தான் சொல்லாம விட்டுட்டீங்க.” என்று சின்ன இது சிரிப்போடு சொன்னாள்.
நேரம் நான்கைத் தொட்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடி விட்டார்கள்.
தாய்மாமன் முறைக்கு சீர் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னால் முடிந்ததை கொண்டு வந்திருந்தார் மணிகண்டன். பச்சை ஓலையில் பின்னலிட்டு நொடியில் சங்கரிக்கான குடிசை கட்டப்பட்டது. நலங்கு வைத்து தண்ணீர் வார்த்து சங்கரியை அழைத்து வந்தார்கள் பெண்களுள் சிலர். அந்த கழிவறைக்கு இடைப்பட்ட பகுதியில் நிற்க வைத்து மாமன் சீராக கொண்டுவரப்பட்ட புடவை அவளுக்கு கட்டிவிடப்பட்டது.
பின்பு தாய்மாமன் என்ற முறையில் மணிகண்டன் அவள் கழுத்தில் மாலையிட்டார். இதுவரை பிள்ளைகள் பிறந்ததிலிருந்து ஒரு சீரும் செய்யவில்லை என்பதால் நான்கு பவுனில் நெக்லஸ் ஒன்றை அவள் கழுத்தில் அனவிதித்து விட்டவர், அதேபோல் கைகளில் இரண்டு வளையலும் அணிவித்து விட்டார்..
மனையில் அவளை அமர வைத்து சந்தனம் பூசி குங்குமம் வைத்து அச்சதை தூவி ஆசிர்வதித்தவர், “ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்மா. உங்க அம்மா மாதிரி முக ஜாடை உனக்கு” என்று சொல்லிவிட்டு விலகி நிற்க,
வேண்டா வெறுப்பாக கௌசலையும் அதேபோல் செய்து விட்டு நகர்ந்து நின்றார். பின்பு கண்மணியும் சென்று அதேபோல் சந்தனம் வைத்து செய்முறை செய்து விட்டு வர, அக்கம்பக்கத்தில் இருந்த பெண்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வந்து, இதே போல் சந்தனமும் குங்குமம் வைத்துவிட்டு நகர, உதறலோடு தங்கையை நெருங்கிய அழகன் முதலில் நெஞ்சுவரை நீண்டிருக்கும் ஆரத்தை தங்கைக்கு அனுவித்து விட்டவன், அடுத்ததாக சிறிதும் பெரிதுமாக இருந்த நெக்லஸ்கள் மூன்றை அணிவித்து விட்டான். பின்பு கையில் நான்கு ஜோடி வளையல்களை அணிவித்து விட்டவன், இரு கை விரல்களிலும் நான்கு மோதிரத்தை போட்டு விட்டான்.
இதையே அனைவரும் வியந்து போய் பார்த்திருக்க, நிதானமாக தங்கையின் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன் தங்கையின் காலையைத் தூக்கி தன் தொடை மீது வைத்து அவள் ஏற்கனவே அணிந்திருந்த கொடி போன்ற கொலுசை கழட்டி விட்டு, நன்றாக நிறைய முத்து வைத்திருந்த புதிய கொலுசை அணிவித்து விட்டான்.
“அண்ணா எதுக்கு அண்ணா இதெல்லாம்” என்று சங்கரி சங்கோஜப் பட,
“என் தங்கச்சிக்கு நான் செய்யாம வேற யார் செய்யப் போறாங்க. இதெல்லாம் உனக்காகவே எடுத்து வச்சது பாப்பா. கொலுசு காலையில நாயக்கர் அண்ணாக்கிட்ட சொல்லி விட்டேன் அவர் கொண்டு வந்து கொடுத்துட்டு போனாரு. போன்ல டிசைன் பார்த்து செலக்ட் பண்ணுனேன். உனக்கு பிடிக்குமான்னு தெரியல, பிடிக்கலைன்னா சொல்லு அப்புறம் மாத்திக்கலாம்”
“இல்லன்னா பிடிச்சிருக்குது, ரொம்ப நல்லா இருக்குது, உங்க அன்பு மாதிரியே, எந்த அழுக்கும் இல்லாம அழகா இருக்கு அண்ணா” என்றாள் நெகிழ்வுடன்.
பின்பு தங்கையின் காதில் இருந்த தோட்டை கழட்டி விட்டு பெரிய குடை ஜிமிக்கியை போட்டு விட்டவன், அதற்கு மேட்ச் ஆக இருந்த மாட்டலையும் அழகாக மாட்டி விட்டவன், “இப்பதான் அழகா இருக்கிற பாப்பா. அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாங்க” என்றவனுக்கு தாயின் நினைவில் விழி நீர் இமையை நனைத்தது.
“இப்பவும் அம்மா இருக்காங்கண்ணா. உன் ஸ்தானத்துல நான் அவங்களை தினமும் பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். தேவை இல்லாம நீங்க பீல் பண்ணாதீங்கண்ணா” என்றதும் இமை தாண்டி கன்னத்தை தொட முயன்ற கண்ணீரை சுட்டு விரலால் சுண்டி எறிந்து விட்டு விலகி நிற்க போக,
“சந்தனம், குங்குமம் வச்சு அட்சதை தூவி ஆசிர்வாதம் பண்ணு தம்பி” என்றார் பக்கத்து விட்டு விமலா அக்கா.
“நான் எப்படிக்கா”
“அவள் தான் அம்மான்னு சொல்லிட்டாளே கண்ணு” என்றதும் சந்தனத்தை எடுத்து தங்கையின் கன்னங்கள் இரண்டிலும் லேசாக பூசி விட்டு, கை கால்களிலும் பூசியவன் நெற்றியில் சந்தனம் வைத்து, குங்குமம் வைத்து பூ கலந்த அட்சதையை தூவியவன், “ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும்டா பாப்பா, நீ காலத்துக்கும் நீடூடி வாழணும். போற இடத்துல சீரும் சிறப்போட வாழணும்” என்று சொல்ல சட்டென்று குனிந்து அவன் பாதம் தொட்டு ஆசி கேட்டாள் சங்கரி
இதற்கு முன் தன் கணவன் ஆசீர்வாதம் செய்த போது கால் தொட்டு ஆசி வாங்கவில்லை, தான் செய்த போது ஆசி வாங்கவில்லை என்ற கடுகடுப்பு கௌசலையின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது..
விமலா அக்காவும், “என்ன தம்பி, பாப்பா பூப்பெய்திய நேரத்தை குறிச்சுட்டு போய் ஜோசியரை பார்த்துட்டு வந்தீங்களா, நல்ல நேரம் குறிச்சு கொடுத்துருக்காங்களா?” என்று கேட்க,
“காலையிலையே இளம்பரிதியை போயிட்டு வர சொல்லிட்டேன் அக்கா. அவனும் நல்லநேரம் குறிச்சு வாங்கிட்டு வந்துட்டான் ” என்றதும் அதை வாங்கி பார்த்த விமலா,
“பரவால்ல பரவால்ல அஞ்சு மணிக்கு தான் நல்ல நேரம். அந்த நேரத்துலையே குடிசைக்குள்ள விட்டுடலாம்” என்று சொன்னார். பின்பு சுமங்கலி பெண்கள் ஐவர் சங்கரிக்கு ஆரத்தி எடுத்து அவளை குடிசைக்குள் அமர வைத்தார்கள்.
அவ்வளவு நேரம் கட்டுக்குள் வைத்திருந்த கண்ணீரை கடகடவென்று கண்களில் வலிய விட்ட சங்கரி யாருக்கும் தெரியாமல் அதை துடைத்தும் கொண்டாள். இவ்வளவு நாட்கள் அவள் பெரிய மனுசியாகவில்லை என்று எத்தனை ஏச்சுப் பேச்சுகளை கடந்து வந்திருப்பாள் என்று அவளுக்கு தான் தெரியும். இப்போது நல்லவர்கள் போல் நிற்கும் இந்த பெண்களில் சிலர் இவளை முன்னே விட்டு பின்னே புரணி பேசி இருப்பதை அவள் தன் காதாலையே கேட்டிருக்கிறாள்.
“இவள் பொண்ணா பையனான்னு தெரியலடி. பொண்ணுன்னா 15 வயசுலையே வயசுக்கு வந்திருப்பா, இவள் என்னடி 19 வயசாகியும் இன்னும் வயசுக்கு வராம இருக்கா. ஒரு வேலை ஆம்பளையா இருக்குமோ?” என்று ஒருவளும்,
“ஒருவேளை அப்படி இல்லாம ரெண்டும் சேர்ந்ததா இருக்குமோ?” என்று ஒருவளும்,
“அட.. விடுங்க ஒரு நாள் அவள் குளிக்கிறதை பார்த்தா உண்மை தெரிஞ்சுடப் போகுது. எனக்கென்னமோ இது ‘அதுங்க’ மாதிரின்னு தான் தோணுது” என்றும் எத்தனையோ வசவுகளை அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறாள். இவள் காதுபட இதை விட மோசமாக கூட பேசியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அழுது அழுது நொந்து போயிருக்கிறாள்.
ஒவ்வொரு முறையும் இவ்வாறான ஏச்சு பேச்சுகளை எல்லாம் காதால் கேட்டு மனதோடு புதைத்துக் கொண்டு இரவு நேரத்தில் அழுகையில் வெடித்து இருக்கிறாள். அண்ணனுக்கு தெரிந்தால் சண்டை ஆகிவிடுமா, சங்கடப்படுவார்களோ என்று சொன்னது கிடையாது. தந்தையிடம் இதைப் பற்றி பேசக்கூட முடியாது என்பதால் இது காலம் வரையும் அதை அவள் வெளியில் சொல்லிக் கொண்டது கூட கிடையாது. நட்பு வட்டமும் அவளுக்கு குறைவு, காரணம் இது மட்டுமே.
எங்கே தெரிந்தால் தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ, அத்தனை பேரின் முன்பும் கேலி செய்து தன்னை அவமானப்படுத்தி விடுவார்களோ? என்று நினைத்து பயந்தே தன் நட்பு வட்டத்தை குறைத்துக் கொண்டாள். இப்போது அனைவரின் முன்பும் தைரியமாக போக முடியும் என்று நினைத்ததால் வந்த கண்ணீரே இது. இனிமேல் தன்னை கேலி பேசியவர்களுக்கு முன்பு தைரியத்தோடு நடந்து செல்வேன் என்று தனக்குள் தைரியத்தோடு சொல்லிக் கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே, “அப்ப நாங்க ஊருக்கு கிளம்புறோம் மச்சான்” என்று சொன்னார் மணிகண்டன்.
“என்ன மச்சான் இப்ப தான் வந்தீங்க, உடனே கிளம்புறேன்னு சொல்றீங்க. இரண்டு நாள் தங்கியிருந்துட்டு போலாமே” உண்மையான அக்கறையோடு கேட்டார் குமரேசன்.
“இல்ல மச்சான் போட்டது போட்டபடி கெடக்குது. பொண்ணு காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கா, பையன் வேற வேலைக்கு போகணும், வீட்டுல எல்லாம் அப்படியே கெடக்குது. ஆடு மாடெல்லாம் வேற இருக்குது, அதையெல்லாம் அப்படியே விட்டுட்டு தான் வந்திருக்கோம். இங்கன தங்குனா அதெல்லாம் யார் பாத்துக்குவா..”
“நீங்க சொல்றது சரிதான், ஆனா வந்ததும் கிளம்புறீங்களே அதான் கவலையா இருக்குது” என்று வருத்தம் கொண்டார் குமரேசன்.
“பரவால்ல மச்சான் பிள்ளைக்கு காலேஜ் லீவா இருக்கும் போது, பையனையும், பொண்ணையும் அனுப்பி வைக்கிறேன். அவங்க இங்கன வந்து ரெண்டு நாள் இருந்து வரட்டும்” என்று அவர் சொல்ல,
கௌசலையும், “ஆமா அண்ணா அவர் சொல்றது தான் சரி. இன்னும் ரெண்டு மாசத்துல கண்மணிக்கு லீவு வருதுன்னு சொன்னா, லீவ் விட்டதும் அவுக ரெண்டு பேரையும் அனுப்பி வைக்கிறேன்” என்று உள் அர்த்தத்தோடு சொல்ல, அதை அங்கிருந்த யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ அழகன் புரிந்து கொண்டான்.
வந்ததில் இருந்து தங்களது வீட்டையும், இங்கிருக்கும் வசதிகளையும் வாயைப் பிளந்து கொண்டு அவர் பார்ப்பதை கண்டவனுக்கு, அவரது மனப்போக்கை தெளிவாகவே உணர முடிந்தது..
தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று அழகனையை பார்த்திருந்த கண்மணி கிளம்பும் வேளையில், “போயிட்டு வர்றேன் மாமா” என்றிட,
அவனோ யாருக்கு வந்த விருந்து என்பது போல் பார்த்திருந்தவன் மணிகண்டன், “போயிட்டு வர்றேன் தம்பி” என்று சொன்னதும்,
“போயிட்டு வாங்க மாமா, நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசம்” என்ற சொல்லோடு வழி அனுப்பி வைத்தானே தவிர இப்போதும் கண்மணியிடம் பேசவில்லை.
அவளோ, ‘என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்களோ, இன்னும் ரெண்டு மாசத்துல வர தான் போறேன், அப்ப இருக்குது உங்களுக்கு’ என்று மனதில் நினைத்தவள் சட்டென்று அவனைப் பார்த்து ஒற்றை கண்சிமிட்டி விட்டு செல்ல, அவள் செயலில் விதிர்விதிர்த்தவனோ, ‘இது எங்க போய் முடிய போகுதோ தெரியல’ என்ற எண்ணத்தோடு அங்கிருந்து நகர, அக்காட்சியை குமரேசனும் கண்டு விட்டார். அதன் பொருட்டு நொடியில் அவர் மனதில் வேறு ஒரு எண்ணமும் தோன்றி மறைந்தது..
– கானகமயில் கவிபாடும்…