Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

கானம் 15

அத்தியாயம்: 15

வார இறுதி…



Advertisement

பொன் மஞ்சள் பூசிய வானம் இன்னும் சில மணித் துளிகளுக்குள் கருத்து விட்டுவேன் என்பது போல் இருந்தது.

கேட்டைப் பார்த்தபடி வராண்டாவில், கலக்க முகத்துடன் வெகுநேரமாக அமர்ந்திருந்தார் சுதா. ஆட்டோ வந்து நின்றதும் அவரின் முகம் பிரகாசமாக, க்ரீச் என்ற சத்ததுடன் அதைத் திறந்து கொண்டு வந்த பேத்தியிடம், “ஏன் அம்மாயி இவ்ளோ நேரம்?”

Advertisement

Advertisement

“ட்ராபிக் அம்மம்மா.” என்ற அதிதி, காலணியைக் கலட்டி வைத்து விட்டு வீட்டிற்குள் செல்ல, அவளின் பின்னூடே வந்தவர்,

“எப்படி இருந்தது க்ளாஸ்? நல்லபடியா போச்சா…” என்று ஆர்வத்தோடு கேட்டார்.

Advertisement

அவளோ, எவ்வித ஆர்வமும் இல்லாது, “ம்… போச்சி போச்சி…” என்றபடி ஃப்ரிட்ஜில் இருந்த ஐஸ் வாட்டரை மண்டினாள்.

“நல்ல வேளை உனக்குப் பிடிச்சிருக்கு. எங்க உன் மாமன் மேல இருக்குற கோபத்துல, நீ போக மாட்டேன்னு முரண்டு பிடிப்பியோன்னு பயந்திட்டேன்.”

“பிடிச்சிருக்குன்னு யார் சொன்னா! சேத்து விட்டிருக்கீங்க. போறேன். அவ்ளோ தான்.” என்றாள் அவருக்குக் கேட்காதச் சிறு குரலில்.

இன்னுமா இவள் பத்ரியின் மீது கோபமாக உள்ளாள்?

இல்லை… அன்றையக் கோபத்தை சட்டென சமாதானம் செய்துவிட்டான் பத்ரி.

“என் பட்டர் பன்னுக்கு எம்மேல இருக்குற கோபம் குறைய ஒரு டீல் போட்டுக்கலாமா?.” என்றவன் ஆசை வார்த்தைகள் பேச, பாவையின் கண்ணாடி மனம் அவனுக்கு உடன் பட்டது.

அவளுக்கு என்று தனியாக ஆன்ராய்டு ஃபோன் கிடையாது. சுதாவுடையதைத்தான் அவள் உபயோகித்து வந்தாள். அவளுக்கு லட்சம் விலையுள்ள ஐ போனைப் பரிசளித்துக் கோபத்தைக் காணாது போக்கினான்.

கூடவே, “நீ அந்த மாடி வீட்டுக்குப் போகக் கூடாது. அந்த ஆன்டி கூட பேசக் கூடாது.” என்று அறிவுரைகள் வழங்க,

“ஏன் மாமா?”

“அந்த ஆன்டி கேரக்டர் கொஞ்சம் சரியில்ல அம்மாயி.”

“இல்லயே! நான் பாத்த வரை அவங்க நல்லாத்தான் பழகுனாங்க. என்னைப் பாசமா பாத்துக்கிட்டாங்க.” என்றபோது அவனுக்கு சுர்ரென ஏறியது. தன் மருமகளின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறாள் என்று.

“என்னை விட உனக்கு அனுபவம் அதிகமா?” என்று சற்று கோபமாகக் கேட்க, இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

“சுனைனா ஞாபகம் இருக்கா?”

“ம்…” என்றாள்.

“இவளும் அவளப் போலத்தான். ஆனா சுனைனாவ விட மோசமானவ.” என்றான்.

சுனைனா இவன் சொல்வது போல் கெட்ட பெண் அல்ல. நல்ல பெண். அவளுக்குப் பத்ரியின் மீது காதல். அவனிடம் சொன்னால் பயனிருக்காது என்பதால் அதிதியுடன் பழகி, பின் சுதாவின் மனத்தில் இடம் பிடித்து கல்யாணம் என்ற பேச்சு வரை கொண்டு வந்திருந்தாள். பத்ரியை நெருங்கும் ஆயுதமாக அதிதியை உபயோகப்படுத்தப் பார்த்தாள்‌.

சுதாவின் மனத்தில் எளிதாக இடம் பிடித்த அவளால் அதிதியிடம் முடியவில்லை.

அவளும் அதிதியைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அதிதியின் மனத்தில் இடம் பிடிக்க நிறைய குட்டிக் கர்ணங்கள் அடித்தாள். அவள் மனத்தில் இடம்பிடித்து விட்டால் அவளைக் காட்டி அந்த வீட்டு மருமகளாக மாறிவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் பத்ரி கத்தரித்து விட்டான். அவளைப் போன்று பலர் பத்ரிக்காக வேண்டியே அதிதியுடன் நட்பு வைத்தனர். அதை நினைவுப் படுத்தி,

“நீ இன்னும் சின்னப் பொண்ணு அதி. உன்னை ஏமாத்துறது ரொம்ப சுலபம். என்னென்னமோ பண்ணி உன்னோட மனச அவ கலச்சி விட்டு, அதுல ஆதாயம் தேடப் பாக்குற. நீ தான் என்னோட வீக் பாயிண்ட். உன்னையும் என்னையும் பாதிக்கிற எந்த விசயத்தையும் நான் அனுமதிக்க மாட்டேன். நீ அவக்கிட்ட இருந்து தள்ளி இருந்தாலே போதும். மாமா பாத்துப்பேன்.” என்றான். அனைத்தையும் கேட்டவள்,

“ஆனா எனக்கு அவங்களப் பிடிச்சிருக்கே!‍” என்று அதிர வைத்தாள் அதிதி.

ஏனெனின் மற்ற பெண்களை அவள் பிடித்திருக்கிறது என்று சொன்னதே இல்லை. மாமனுக்கு இருக்கும் புத்தி கூர்மை மருமகளுக்கும் இருக்காதா என்ன?

ரிது விசயத்தில் மட்டும் கொஞ்சம் முரண்பாடு இருக்கிறது.

ரிதன்யாவின் நினைப்பே வராதபடி அவளை பிசியாக வைத்திருக்க நினைத்தான்.

அவள் வெகு நாட்களாக கேட்டு, வாங்கித்தர மறுத்த PlayStation VR 2 வை, ஒன்னரை லட்சத்திற்கு வாங்கிக் கொடுத்தான்.

படிக்கும் பாடத்தைக் காரணம் காட்டி‍, பள்ளியில் மட்டுமல்ல வெளியேயும் இரவு 9 மணி வரை டியூசனில் சேர்த்துவிட்டான்.

வீடு வந்த பின் கண்களில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு மெய்நிகர் உலகத்தில் சஞ்சரிக்க வைத்தான்.

பள்ளி நாள்களில் மட்டுமல்லாது வார இறுதியிலும் வீட்டில் இருக்க விடாது, காலையில் நீச்சல், மத்தியம் பியானோ என்று ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்து அவளை அனுப்பி வைக்க, எதிர்க்க முடியவில்லை யுவதியால்.

இப்பொழுது தற்காப்பு என்று கராத்தேக்கும் செல்லச் சொல்ல,

“நான் என்ன ரோபோவா! எப்ப பாத்தாலும் எங்கயாவது எதையாவது செய்யச் சொல்லிட்டே இருக்கீங்க. என்னால உங்க இஷ்டத்துக்கு போக முடியாது. நான் மாட்டேன்.” என்று பிடிவாதமாகச்‌ சொல்ல, அவளைவிடப் பிடிவாதமாக பத்ரி அவளை அனுப்பி வைத்தான்.

“மாமா எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும். உனக்குன்னு செய்ய இந்த உலகத்துலயே அவன் மட்டும் தான இருக்கான்! வீணா பிடிவாதம் பிடிச்சி அவங்கூட மல்லுக்கு நிக்காத அம்மாயி. பாவம் அவன். உனக்காக தினமும் யோசிச்சி யோசிச்சி நிறைய செய்றான்.” என்றார்.

அதிதி, பத்ரியிடம் சண்டை போடக்கூடாது என்ற அர்த்தத்தில் அவர் சொல்ல, அவளுக்கோ, ‘உனக்கு அப்பா, அம்மா, சொந்தம் என்று யாரும் இல்லை. இருக்கும் ஒரே உறவு அவன் தான். ஆதலால் அவனின் பேச்சைக் கேட்டுப் பதமாய் நட.’ என்று கட்டளை இடுவது போல் தோன்றியது.

அது முசுமுசுவென கோபத்தை ஏற்ற, “அவரென்ன சர்வாதிகாரியா! நான் என்ன செய்யணும் ஏதும் செய்யணும்ன்னு கட்டளை போட்டுட்டே இருப்பாரு. அதுக்கு கீழ் பணிஞ்சி நடக்கணுமா?” என்று கத்த,

“ஏன் அம்மாயி கத்துற? உன் நல்லதுக்குத் தான தம்பி சொல்றான். சரின்னு கேக்குறதுல என்ன தப்பு இருக்கு.” என்க,

“அவர் பேச்சக் கேட்டாத்தான் இந்த வீட்டுல இருக்க முடியும்னு சொல்றீங்களா! எனக்கு உங்களயும் இந்த வீட்டையும் விட்டா வேற யாரும் கிடையாதுன்னு தான இப்படிலாம் பண்றீங்க. எனக்கு எதுவுமே பிடிக்கல. உங்கள… மாமாவ… ஸ்கூல… யாரையும் பிடிக்கல.” என்று கத்தி விட்டு, அறைக் கதவை இழுத்து மூடினாள்.

கண்களைக் கட்டிக் கொண்டு கேம் விளையாடுகிறாள் என்பதை சத்தமில்லாத அறை சொன்னது.

யாரின் பக்கம் நிற்பது என்று விளங்கவே இல்லை ஜெயசுதாவிற்கு.

சமீப காலமாக, எதற்கொடுத்தாலும் வெடுக் வெடுகெனப் பேசும் அவளின் கோபத்தையும், கை, கால்களை உதறியபடி செல்லும் அவளின் நடவடிக்கைகளையும் கண்ட சுதாவிற்கு வருத்தம் தான் வந்தது. எதைச் சொன்னாலும் அவளாக ஒன்றை புரிந்து கொண்டு வீச் வீச் எனக் கத்துகிறாளே! இவளை எப்படிக் கைமாள்வது என்று இனம் புரியாத வேதனை இரு பிள்ளைகளைப் பெற்று வளர்த்த அவருள் வந்தது.

மகனுக்கு அழைத்து அதிதி வீடு வந்து விட்டதை மட்டும் கூறினார். அவள் கத்திப் பேசி, சண்டையிட்டதைச் சொல்லவில்லை.

தன் அன்னையின் முன் குரலுயர்த்த விடமாட்டான் அவன். அவரைக் கெஞ்ச விட மாட்டான். வேலை ஏவ அனுமதிக்க மாட்டான். அவரின் பேச்சிற்கு மறு பேச்சு பேசவும் விடமாட்டான். அவனிடம் போய் அதிதி எடுத்தெறிந்து பேசியதைச் சொன்னால் பேத்தியைத் திட்டுவான் என்பதால் பேத்தியைக் காப்பாற்றினார்.

அப்பொழுது, படிக்கட்டில் துள்ளலுடன் ஏறினாள் சரிகா.

“பாத்து போடிம்மா…. ஏன் இந்த அவசரம்?” என்று கனிவுடன் கேட்ட சுதாவிற்கு,

“நாங்க ஊருக்குள்ள போறோம் பாட்டி. என்னோட ஃப்ரெண்டுக்கு பிறந்த நாள். அதான் பஸ் வந்திடுச்சான்னு பாத்திட்டு வர்றேன்.”

“வந்திடுச்சா?”

“ம்…” என்று வேகமாக தலையசைக்க,

“அப்ப ஏன் நிக்கிற. ஓடு. அவன் சீக்கிரம் எடுத்திடப் போறான். இத விட்டுட்டா நைட் லேட்டாகும் வீடு திரும்ப.”

“ஓகே பாட்டி. பை… உங்களுக்கு கேக் எடுத்திட்டு வர்றேன். சக்கரை இல்லாததான்னு கேட்டுட்டு தான் எடுப்பேன்.” என்று கத்திக் கொண்டே வீடு செல்ல, ரிதன்யா அனைத்தையும் எடுத்து‌வைத்துக் கொண்டிருந்தாள்.

அவர்களின் கேட்டில் இருந்து பார்த்தால் காம்பவுண்ட் வாசல் தெரியும். அங்கு ஒருமணி நேரத்திற்கு ஒன்று என்று சீரான இடைவெளியில் பேருந்து வந்து நிற்கும். வந்ததும் புறப்படாது. ஓட்டுனரும் நடத்துனரும் டீக் குடித்து விட்டு, நிதானமாக பதினைந்து நிமிடங்கள் கழிந்துத் தான் பேருந்தை இயக்குவர். அது ஊருக்குள் செல்ல வசதியாக இருக்கும்.

“டிரைவர் பஸ்ல ஏறி உக்காந்திட்டாரா?” என்றபடி பரிசுப் பொருளைப் பையில் திணித்தாள் ரிது.

ஏனெனில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து விட்டால் அடுத்த சில நிமிடங்களில் பேருந்து நகர்ந்து விடும்.

“இன்னும் இல்லம்மா. டீக் கடைல தான் இருக்காரு. நான் நல்…லா பாத்தேன். ரிலாக்ஸாக கிளம்பலாம். நேரம் இருக்கு.” என்றபடி சோஃபாவில் காலாட்டிக் கொண்டு அமர்ந்தவளை உடனடியாக வெளியேற்றினாள்.

பாதி படிக்கட்டு இறங்கி வந்திருப்பர், “ம்மா… கம்மல் போடல.” என்று காதைக் காட்ட, அது வெறுமையாக இருந்தது.

“பரவாயில்ல. இந்த டிரெஸ்க்கு நீ கம்மல் போடாதது தெரியல. நல்லாத்தான் இருக்கு.”

“ம்மா… அசிங்கமா இருக்கு.” என்றவள் சாவியைப் பிடுங்கிக் கொண்டு ஓடினாள்.

‘இவள…’ என்று பல்லைக் கடித்தவள், பின்னாலேயே சென்று காதணியை மாட்டிவிட்டு விட்டு கேட்டைத் திறந்து வெளியேறுவதற்கும், பேருந்து நகர்வதற்கும்‌ சரியாக இருந்தது.

“ஐ…ய்யோ…. பஸ்ஸு போய்டுச்சி.” என்று சந்தோஷமாகச் சொன்னவள், தாயின் முறைப்பைக் கண்டு,

“ரோட்டுல ஓடிப் போக முடியாதும்மா. அத்தோட மூவ் ஆகுற பஸ்ல இருந்து இறங்குறதும், ஏறுறதும் தப்பும்மா. மிஸ் சொல்லிக் குடுத்தாங்க. நாம ஆட்டோல போகலாம்.” என்றது தான் தாமதம், நங்கென்று கொட்டு விழுந்தது சிறுமிக்கு.

அவளுக்குப் பேருந்து பிடிக்காது. ஆனால் ரயிலில் செல்லாது அதில் தான் செல்ல வேண்டும் என்று தாய் சொன்னதால் சரி என்றால். இப்போது பேருந்து செல்லும் வரை தாயைத் தாமதப்படுத்தி நினைத்ததைச் சாதிக்கப் பார்க்கிறாள்.‌

“நீ நல்லா பாத்தேன்னு இழுக்கும் போதே எனக்குச் சந்தேகம் வந்தது. அதான் உடனே வெளியேறுனேன். ஆனாலும் கம்மல் போடலன்னு சொல்லி பஸ்ஸ போக விட்டுட்டேல… நான் ஆட்டோ பிடிக்க மாட்டேன். நடந்து போ… இல்லன்னா பங்சனுக்கு போகவே வேண்டாம்.” என்று முறுக்கிக் கொள்ள, கெஞ்சிக் கொண்டிருந்தாள் சரிகா.

“என்னாச்சி? பஸ் போயிடுச்சா!” என்ற சுதாவைத் திரும்பிப் பார்த்து ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

எதற்கு அவரிடம் விளக்கம் சொல்வானேன்! பின் குடும்பத்திற்குள் புகுந்து ஃபோர்ஜரி வேலை பார்க்க திட்டம் போடுகிறாயா? என்று அவரின் மகனிடம் பேச்சு வாங்குவானேன் என்று நினைத்தவள், சுதாவிடம் மட்டுமல்லாது அதிதியிடமும் பேசுவது இல்லை.

“ஆமாம் பாட்டி. ஆட்டோல போலாம்னு சொன்னா அம்மா கேக்க மாட்டேங்கிறாங்க. உங்களுக்கு கேக் கொண்டுட்டு வர முடியாது.” என்று சோகமாகச் சொல்ல, அவளின் கன்னத்தை வாஞ்சையுடன் தடவியவர்,

“அதெல்லாம் அம்மா கூட்டீட்டு போவா. ஆமா! ஏன் வெறுந்தலையா இருக்க? ரோஸ் கலர்ல ரோஜாப்பூ பூத்திருக்குப் பாரு. எடுத்து வச்சுக்க. உன்னோட ட்ரெஸ்க்கு மேட்சா இருக்கும்.” என்றார்.

அந்தப் பூச்செடிகள், அவரின் மகள் பவானி, இறப்பதற்கு முன் நட்டு வைத்தது. அதில் அவள் வாசம் செய்வது போல் ஓர் உணர்வு அவருக்கு. ஆதலாலேயே அதை உயிரெனப் பராமரிக்கிறார். வெளியாட்கள் யாரையும் பூப் பறக்க அனுமதித்தது இல்லை.

எத்தனையோ முறை பேத்தியிடம் அதைச் சொல்லி, “அதுல பூக்குற பூவ எடுத்து தலைல வச்சுக்க அம்மாயி. உங்கம்மா ஆசிர்வாதம் கிடைச்ச மாதிரி இருக்கும்.” என்பார்.

ஆனால் அவளோ அதைப் பறித்ததும் இல்லை. தண்ணீர் விட்டதும் இல்லை. அவர் தான் அனைத்தையும் செய்வார். அளவான கவனிப்பில் செழிக்காது, வளர்ந்திருந்த செடிகள், ரிதன்யா வந்த பின் நித்தமும் பல பூக்களை வாரி வழங்கியது.

இரண்டு குடுமிக்கும் இரண்டு ரோஜாவைக் குத்தி விட்ட ரிதன்யாவிடம், அவளுக்கென்றும் பறித்துக் கொள்ளச் சொன்னார் சுதா.

“ரிதும்மா… காதோரம் ஸ்பீக்கர் பூ… செம்ம…” என்று கேலி செய்ய, அவளை இழுத்துக் கொண்டு வெளியேறினாள். ஆட்டோவில் ஏறும் வரையிலும், சண்டையிட்டுக் கொண்டே சென்ற அந்தத் தாயையும் மகளையும் கண்டு, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது சுதாவிற்கு.

இன்னேரம் தன் மகள் உயிரோடிருந்திருந்தால் சரிகாவின் முகத்தில் அரும்பும் சிரிப்பைத் தன் பேத்தியின் முகத்திலும் பார்த்திருப்பார். ‘ஏன் அந்தக் கடவுள் தன் மகளை எடுத்துக் கொண்டான். அவளாக வருகிறேன் என்று வந்திருந்தாலும், அதிதிக்காகவாவது திரும்பி அனுப்பிருக்க வேண்டாமா!’ என்று நைந்தபடி நின்றார்.

விழிக் கலக்கத்துடன் நின்றது அவர்மட்டுமல்ல, நடந்த அனைத்தையும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த அதிதியும் தான்.

பத்ரியின் நிழலில் இருக்கும் அவளைச் சொந்தங்கள் யாரும் நெருங்கியது கிடையாது. முதல் முதலில் வந்து வந்து பேசியது சுனைனா தான். அவளும் பத்ரிக்கு மனைவியாக வேண்டும் என்ற எண்ணத்தில் பழகினாளே தவிர, அதிதியின் மீது உளமார்ந்த நேசத்துடன் பழகவில்லை.

ஆகா அது பத்ரியை ஈர்க்கவென வந்து உறவு. அதனால் தான் உடைந்து விட்டது.

ஆனால் ரிதன்யாவிடம் அவள் கொண்ட அன்பைப் பசி என்று சொல்லலாம். தீராத, ஆழமான பசி. அதிதியின் முகம் பார்த்து அவளுக்காக அவளிடம் பாசம் வைத்தாள். அதிதியும் வைத்தாள். எவ்வித நிபந்தனைகளோ! எதிர் பார்ப்புகளோ கிடையாது அதில்.

பத்ரியின் மிரட்டலுக்குப் பணியாது ரிது முதலில் அதிதியைப் பார்த்து புன்னகைத்து வழமை போல் பேச முயன்றாள். ஆனால் மாமனின் போதனையில் முகம் திரும்பிக் கொண்டு சென்று விட்டாள்.

இப்பொழுது வருந்துகிறாள் ஏன் அவ்வாறு செய்தோம் என்று‌. ரிதன்யாவின் பாரமுகம் மங்கையை வெகுவாக பாதித்தது. எதிலும் நாட்டமில்லாது. எதையோ தொலைத்த ஓர் உணர்வைத் தந்தது. கட்டிலில் கால்களைக் கட்டிக் கொண்டு வெகு நேரம் அழுது தீர்த்தாள்.

மாமானின் பேச்சைக் கேட்பதா வேண்டாமா என்ற அதீத குழப்பத்தில் இருந்தவளுக்குக் கண்ணீர் மட்டும் தான் இப்போதைய விடை. திருத்துவார் யாருமின்றி எழுதிக் கொண்டே போனது கன்னத்தில்.

அன்பிற்காக ஏங்கும், பாசவேட்கை என்பது மோசமான ஒரு நோய். அது வயது வித்தியாசம் பார்க்காது அனைவருக்கும் வரும். அது உண்டாக்கும் வெற்றிடத்தை மனமுதிர்ச்சி பெற்ற மனிதர்களே நிரப்புவது கடினம். இதில் தாயையும் தந்தையையும் இழந்த, பருவ மங்கைக்கு எப்படி அதைக் கையாளத் தெரியும்?

அதிதி போன்ற ஏக்கங்களும் ஆசைகளும் கொண்ட பெண்களை அந்த நோய் தவறான பாதைக்குத் துணிந்து எளிதாக செல்ல வைக்கும்.

மறுநாள் காலை செடிகளுக்கு நீர் விட்டுக் கொண்டிருந்த ரிதன்யாவிடம், சுதா, அதிதியின் கோபத்தைப் பற்றிச் சொல்ல, ரிதன்யா அவளிடம் பேசச் சென்றாள்.

ஆனால் உரிமையற்ற நேசம், கிடைக்காததால் உண்டான சினத்தைக் காட்டி பேச மறுத்தாள் சிறுமி.

‘இத்தன நாளும் பேசாமத்தான இருந்தீங்க. இப்ப எதுக்கு வர்றீங்க. அட்வைஸ் பண்ணவா?’ என்று எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

மாதங்கள் அதன் பாட்டிற்கு ஓட்டம் எடுக்க, சுதாவிற்கு மட்டுமல்ல ரிதன்யாவிற்குள்ளும் அதிதி பற்றிய கவலை குடி புகுந்தது.

அலுவலகத்தை அடைந்தவள், முதல் வேளையாக சுருதிக்குத் தான் அழைத்தாள்.

“உங்கிட்ட அந்த பத்ரி நம்பர் இருக்குல. அதை உடனே வாட்ஸ்சாப் பண்ணு.” என்க,

“உனக்கு எதுக்கு அவர் நம்பரு?” என்று அதிர்ந்து போனாள் சுருதி.

ஏனெனில் உடனே காலி செய்ய வேண்டும் என்றவனிடம் கெஞ்சி கூத்தாடி அக்ரிமெண்ட் காலம் வரை குடியிருக்க சம்மதம் வாங்கினாள் சுருதி. எந்தப் பிரச்சினையும் இனி வரக் கூடாது என்ற நிபந்தனையுடன் சரி என்றான். அவனிடம் சென்று இவள் ஏதாவது வம்பு வளர்த்தால்???

வேறு வினையே வேண்டாம்…

“ம்ச்… எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டே இருக்கணுமா. நம்பர அனுப்பு.”

“அனுப்புறேன். ஆனா ஒரு சத்தியம் பண்ணணும்.”

“என்ன?”

“அவர்ட்ட கொஞ்சம் தன்மையா பேசணும்.” என்றபோது,

‘நான் என்ன சண்டக்காரியா?’ என்று நினைத்து ரிதன்யா விட்ட மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை, தூர இருந்து உணர்ந்தாள் சுருதி.

“அவர்ட்ட கெஞ்சி கேட்டு இந்த ஒரு வர்ஷத்துக்கு மட்டும் குடியிருக்கோம். அப்றம் காலி பண்ணிக்கிறோம்னு பேசி பர்மிஷன் வாங்கிருக்கேன். நீ கண்டபடி பேசி அவர காண்டாக்கி விட்டுடாத. அப்றம் நட்டம் நமக்கு தான். வேற வீடு தேடுற சூழ்நிலைல நாம இல்லை. அதைத் தான் சொல்ல வந்தேன்.”

“நான் பாத்துக்கிறேன். நம்பர் அனுப்பு.” என்றதும் அடுத்த சில நிமிடங்களில் பத்தியின் அலைபேசி இலக்கம் அவளுக்கு குறுஞ்செய்தியாக வந்து சேர்ந்தது.

கானம் இசைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!