Skip to content
Post Views: 127
அத்தியாயம்: 17
காலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பள்ளியின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தாள் ரிதன்யா.
Advertisement
அப்பொழுது, அவளைப் பார்க்க யாரோ வந்திருப்பதாகச் சொல்ல, அலுவலக கட்டடத்தை விட்டு வெளியே வந்தவளுக்கு, அங்கு நின்று கொண்டிருந்த பத்ரி நாராயணனைப் பார்த்ததும் அதிர்ச்சி.
கிட்டத்தட்ட மூன்று மாத காலங்கள் ஓடி விட்டன அவனுக்கு கால் செய்து அதிதி பற்றிப் பேசி. ஆனால் அவன் கண்டு கொள்ளவே இல்லை. பள்ளியில் இருந்து சென்ற புகாருக்கும் அவனிடம் முறையான பதில் வரவில்லை.
Advertisement
Advertisement
“யாரோ என்னவோ சொல்றாங்கங்கிறதுக்காக எங்க பொண்ணு மேல பழி போடாதிங்க. இத்தன வர்ஷம் அதிதி அங்க தான் படிச்சா. எந்த கம்ளைண்டும் வந்தது இல்லேல. பிறகு இப்ப மட்டும் எப்படி வரும்?” என்று அலட்சியமாகவே சொன்னான்.
ஆனாலும் அதிதியின் நடவடிக்கைகள் ரிதன்யாவிற்கு தவறாகவே பட்டது. வகுப்பறையில் தூங்கி வழிவது. விளையாட்டு நேரத்தில் ஓரமாக அமர்ந்து எதையாவது வெறித்தபடி இருப்பது. நண்பர்களுடன் கலகலக்காது தனித்தே இருப்பது. மாலையில், ஃபோனைப் பார்த்துக் கொண்டே, இறுக்கம் தளர்ந்து இதழ்களில் புன்முறுவல் பூப்பது எல்லாம் ரிதன்யாவிற்கு எதுவோ சரியில்லை என்றது.
Advertisement
ஆனாலும் அவளாலும் என்ன செய்ய முடியும்? தூரத்தே இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிர்பந்தம்.
சுதாவிடம் சொல்ல, “நான் சொன்னா கேக்க மாட்டாம்மா. கோபம் தான் வருது அவளுக்கு. தாயில்லாப் பிள்ளையா!! அழுத்திச் சொல்ல எனக்கும் மனசு வரமாட்டேங்கிது. ஃபோனும் கேமுமாத்தான் திரியுறா.” என்று வருத்தப்பட்டார்.
ஏற்கனவே அதிதி பற்றிய கவலையில் இருந்தவளை மற்றொரு அதிர்ச்சி அலை வந்து தாக்கியது.
எப்படிப்பட்ட அலை என்றால்… இறந்து போன விக்ரம், தன் சாவிற்கு காரணம் என்று ரிதன்யா, அண்ணாமலை, முத்து லெட்சுமி, தனபாலன், சரிகா, மைதிலி, மாரிச் செல்வம் என்று ரிதன்யாவின் குடும்ப ஆள்கள் மொத்தத்தையும் பேப்பரில் எழுதி வைத்து விட்டு இறந்திருக்கிறான். ஆதலால் விசாரணை என்று அண்ணாமலையாரின் குடும்பம் தூக்கிச் செல்லப்பட்டது காவல் நிலையத்திற்கு. மாரியின் பெயரையும் அதில் சேர்ந்திருந்ததால் காவலதிகாரியான அவனும் விசாரணை வளையத்திற்குள் இழுக்கப்பட்டான்.
“உன்னைத் தேடி வருவாங்க ரிது. நீ தைரியமா பதில் சொல்லு. என்ன ஆனாலும் நான் பாத்துக்கிறேன்.” என்று மாரிச் செல்வம் தைரியம் சொன்ன போதும், உள்ளுக்குள் பயப்பந்து உருளாமல் இல்லை.
பத்ரி தான் அவளை வீட்டை விட்டு விரட்ட, எப்போ எப்போ என்று காத்துக் கொண்டிருக்கிறானே!
சுதாவிடம் மெல்ல விசயத்தைச் சொல்லி அவரைத் தன் பக்கத்து நியாயத்தைப் புரிந்து கொள்ளச் சொல்லி பக்குவப்படுத்தலாம் என்று நினைத்திருக்க, இரு தினங்களுக்கு முன், அவளிடம் சுதா பணத்தை யாரிடமோ பறிகொடுத்து விட்டதாக புலம்பினார்.
“பத்து லட்சம் ம்மா… எப்படி எடுத்தானுங்கன்னு தெரியல. ஆனா காச திருடிட்டானுங்க.” என்று.
ரிதன்யாவின் அழுத்தம் கூட்டியது.
இப்பொழுது என்ன செய்வது? வரும் காவலர்கள் சுதா இருக்கும் சமயம் வந்தால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால்… அவர்கள் வீட்டிலும் பிரச்சனை எனும் போது பத்ரி வராமல் இருக்க மாட்டானே!
அவள் நினைத்தது போலவே பத்ரி வந்திறங்கினான். வங்கிக்கு, காவல் நிலையத்திற்கு என்று அழைத்து திரிந்து பணத்தை வாங்கியிருக்க வேண்டும். கூடவே புகாரும் தந்திருக்க வேண்டும். அவனின் முகத்தில் கவலை, எரிச்சல், கோபம் என்று அடுத்தவரை வதைக்கும் எல்லா உணர்வுகளும் இருந்தன. இந்நிலையில் விசாரனை என்ற பெயரில் எனைத் தேடி காக்கி உடை வருவதை எப்படி எடுத்துக் கொள்வான்?
அவள் பயந்தது போல், நேற்று மாலையில் காவலதிகாரிகள் சிலர் வந்திருந்தனர், ரிதன்யாவை விசாரிக்க.
வந்தவர்களிடம் தணிந்த குரலில் எதுவோ சொல்லிக் கொண்டிருந்தவளின் படபடப்பை வீட்டிற்குள் இருந்தபடி பார்த்தவன், என்னவென்று விசாரிக்க வெளியே வந்தான். அதற்குள் அவள் காவலாளிகளிடம், “ஸ்டேசனுக்கு நேர்ல வர்றேன் சார். குடியிருக்குற வீட்டுக்கு வர வேண்டாம். ப்ளீஸ்.” என்று இறைஞ்சிக் கொண்டிருந்தது கேட்டது.
அவளையே குறுகுறுவென பார்த்தவனின் பார்வை அவளின் முதுகைத் துழைத்தாலும்… எதையும் கண்டு கொள்ளாது மாடி ஏறி விட்டாள். காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் அவனின் பார்வை அவளைத் தொடர்ந்தது.
எதுவோ பேச வருவது போல் இருக்க, அவனைத் தவிர்த்து விட்டு ஸ்கூட்டியை விரட்டினாள்.
இப்பொழுது நேராக வந்திருக்கிறான் என்றால், “போலிஸ்லாம் தேடி வர்ற அளவுக்கு நீ இருக்க. உடனே வீட்டைக் காலி பண்ணு.” என்று சொல்ல வந்திருக்கிறானோ என்ற பீதி உள்ளுக்குள் இல்லாமல் இல்லை.
காண்ராக்ட்டில் போட்டிருக்கும் ஒரு வருடம் என்று அவன் அனுமதி தந்த போது கூட, “ஒழுங்கா இருக்கணும். வேற மாதிரி ரசாபாசம் ஆச்சின்னா வீட்டுல இருக்க விட மாட்டேன்.” என்று எச்சரித்திருந்தான்.
‘இப்பொழுது போலிஸ் தேடி வந்திருக்கிறதே… அதுவும் அவன் இருக்கும் சமயம். என்ன சொல்ல வந்திருக்கிறான்?’ என்று பல்வேறு சிந்தனைகள் ஓட, கால்கள் தன் பாட்டிற்கு அவனை நெருங்கியிருந்தன.
“என்னைப் பாக்கவா வந்திருக்கீங்க?” என்று சந்தேகமாக கேட்டாள். ஒரு வேளை அதிதியைக் காண வந்து, தவறாக நாமே சென்று பேசி, இல்லாத பிரச்சனையை ஏன் உருவாக்குவானேன்!
“ம்… உன்னைத் தான்… பேசணும்… இங்க கேன்டின் எங்க இருக்கு?” என்றவனிடம் உடன் வரும் படி சமிக்ஞை செய்து விட்டு முன்னால் நடந்தாள்.
குழம்பி இயந்திரத்தில் ஆளுக்கு ஒரு கோப்பையில் குழம்பியை நிரப்பிக் கொண்டு, மேஜையில் எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்தனர்.
அவன் பேசட்டும் என்று அவள் அமைதியாக இருக்க, அவனோ எப்படி ஆரம்பிப்பது என்பதில் யோசனையோடு இருந்தான். சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய,
“அன்னைக்கி அதிதிய பத்தி என்ன சொல்ல வந்த?” என்றான்.
ஒரு நொடி புருவங்களை சுழித்தவளின் மனம் வேகவேகமாகக் கணக்குப் போட்டு,
“பணம் காணமப் போனதுக்கு அதிதியா ரீசன்?” என்றது அவனுக்கு வியப்பாகவே இருந்தது.
அதிதி தான் திருடினாளா? என்று கேட்காது அவள் தான் காரணமா? என்று கேட்டாளே! அது வியக்க வைக்காமல் இருக்குமா என்ன!
அது அதிதியை இவள் நம்புகிறாள் என்றது.
“எஸ்…” என்றவன் அதிதியின் ஃபோனை அவளின் முன் நீட்டி,
“அம்மா க்ரெடிட் கார்ட் டீட்டெய்ல்ஸ்ஸ, ஃபோட்டோ எடுத்து பாய் ஃப்ரெண்ட்டுக்கு அனுப்பிருக்கா!” என்றான் வலி மிகுந்த குரலில்.
“பாய் ஃப்ரெண்டா?” என்றவள், வேகவேகமாக இருவருக்குள்ளும் நிகழ்ந்த உரையாடல்களை வாசிக்கத் தொடங்கினாள்.
அதில் இருந்தது காதல் வசனங்களோ, உணர்ச்சியைத் தூண்டும் வரிகளோ கிடையாது. மாறாக நான்கே நான்கு கேள்வி தான் நேரம் தவறாது கேட்கப்பட்டிருந்தன.
“சாப்டியா?”
“ஸ்கூல் முடிஞ்சிச்சா?”
“வீட்டுக்கு வந்ததும் மெசேஜ் அனுப்பு.”
“இன்னைக்கு நாள் எப்படிப் போச்சி?”
இது தான் அது. அதற்கு அதிதி பதில் சொல்லியிருக்கிறாள். மூன்று மாதங்கள் கூட அந்த உரையாடல்கள் இல்லை. ஆனால் அவன் கேட்ட கேள்வியைத் தொட்டு பதில்கள் நீண்டு கொண்டே போனது. அதுவும் தினமும்.
“நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகி 60 டேஸ் ஆகப்போது. எனக்குக் கிடைச்ச ஃப்ஸ்ட் அண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்டு நீ தான். ஐ ஆம் சோ ஹப்பி.” என்று அந்தப் பக்கம் இருந்து வந்திருக்க, அதிதியும் தன் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தியிருந்தாள்.
பரிசாக அவன் அவளின் புகைப்படத்தைக் கேட்க, அதிதி சற்று மிரண்டிருக்க வேண்டும்.
“அதெல்லாம் வேண்டாம். எனக்குப் பயமா இருக்கு.”
“நான் என்ன ட்ரெஸ் இல்லாம பிக் எடுத்து அனுப்புன்னா கேட்டேன். உன் முகத்தப் பாக்கணும்னு ஆசைல தான கேக்குறேன்.”
“இல்லை… வேண்டாம்…” என்றதும்.
“இட்ஸ் ஓகே.” என்று அன்றைய நாளின் பதிவு முடிந்திருந்தது. அதன் பின் அவனிடம் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.
இவள் தான். “என்னாச்சி?”
“ஏன் மெசேஜ் பண்ண மாட்டேங்கிற?” என்று கேட்டு கேட்டு அனுப்பியிருந்தாள். ஏகப்பட்ட வாய்ஸ் நோட், கால் செய்தும் பார்த்திருக்கிறாள்.
அவன் அனுப்பும் குறுஞ்செய்திக்காக அவள் எவ்வளவு தவித்திருக்கிறாள் என்று விளங்கியது ரிதன்யாவிற்கு.
அவளை ஒரு வாரம் ஏங்க விட்டு, குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.
“வேலை இருந்தது. அதான் உன்னோட செசேஜ்க்கு ரிப்ளே பண்ண முடியல. வெரி சாரி அதி.” என்று வருத்தத்துடன் அனுப்பியிருக்க,
“ஓ… பரவாயில்லை. என்ன வேலை பாக்குற?”
“பைன லியர் விஷ்வல் கம்யூனிகேஷன் படிக்கிறேன்.”
“வேலை பாக்குறதா சொன்ன?”
“ம்… படிச்சிட்டே பார்ட் டயமா ஒரு மியூசிக் பேண்டுல இருக்கேன். கே பாப், பிடிஎஸ் லெவலுக்கு இருக்கும் எங்க பேண்டு.” என்று பெருமையாகச் சொன்னான்.
“என்ன வாசிப்ப?”
“கிட்டார்… கேக்குறியா” என்றவன், வாசித்து வீடியோவாக அனுப்பியிருந்தான்.
“சூப்பரா இருக்கு.”
“நீ சொல்ற… ஆனா மத்தவங்க சொல்ல மாட்டேங்கிறாங்க.” என்றவன்,
“ஒரு ஆடிசன்… அதுல செலக்ட் ஆனா பெரிய அளவுல பேண்ட கொண்டுட்டு போயிருப்போம். ஆனா முடியல. நான் தான் சொதப்பிட்டேன்.”
“ஏன்? என்னாச்சி?”
“என்னோட கிட்டார் பழைசு. கடைசி நேரத்துல கொஞ்சம் மக்கரும் பண்ணிடுங்சி. சவுண்ட் பெட்டரா இல்லன்னு ரிஜக்ட் பண்ணிட்டாங்க.”
“புதுசு வாங்கு.”
“காசு வேணுமே. படிக்கவே எனக்கு ஸ்பான்சர்ஸ் தான் உதவி பண்றாங்க. இதுல கிட்டாருக்குன்னு யாருக்கிட்ட கேக்க. அப்பா அம்மாவா இருக்காங்க எனக்கு?” என்று அவளின் அனுதாபத்தைத் தூண்ட,
“அப்படிச் சொல்லாத.” என்றவள்,
“நா…ன்… வேணும்னா… தரவா.”
“எவ்ளோ தருவ?”
“5000. என்னோட சேவிங்.”
“அதெல்லாம் பத்தாது. மிடயம் ரேஜ்ஜுக்கே 50000 வேணும்.” என்றவன் தினமும் தன் லட்சியத்தை அடைய முடியாத தன் வேதனையைப் புலம்பி,
“கிட்டர் ஆர்டர் போட்டிட்டேன். காசும் ஏற்பாடு பண்ணிட்டேன். ஆனா வர ஒரு வாரம் ஆகும். கொஞ்சம் பணம் குறையுது. ஹெல்ப் பண்றியா?”
“எவ்ளோ…”
“பத்தாயிரம் தான். ரெண்டே நாள்ல திரும்பி குடுத்திடுவேன்.”
“எங்கிட்ட அவ்ளவு கிடையாதே.”
“உன்னோட அம்மம்மா கிட்ட இருக்குமா? திருப்பித் தந்திடுவேன். முகம் தான் காட்ட மாட்டேன்னு சொல்லிட்ட. இது என்னோட கரியர். உதவி பண்ணு ப்ளீஸ்.” என்றவன் தந்த யோசனையின் பேரில், சுதாவின் கடன் அட்டையைப் புகைப்படமாக்கி அனுப்பி உள்ளாள்.
ஆனால் அவன் பத்து லட்சம் ரூபாய் எடுப்பான் என்று அவள் நினைக்கவில்லை போலும்.
“10000 தான் குறைவா இருக்குன்னு சொன்ன. ஆனா டென் லாக்ஸ் எடுத்திருக்க.” என்று கேட்டு சண்டையிட்டுள்ளாள்.
“கிட்டார் மட்டும் போதாதே. மத்த எக்யூப்மெண்ட் வாங்க வேண்டாமா?”
“ஆனா நீ சொன்னத விட அதிகமாவே எடுத்திருக்க. அம்மம்மாக்கு வந்த மெசேஜ்ஜ நான் டெலிட் பண்ணிட்டேன். மாமா கண்டுபிடிக்கிறதுக்குள்ள பணத்த வைக்கணும். 10000 னா பார்ட்டி ட்ரெஸ்னு எதாவது சொல்லி சமாளிச்சிடுவேன். பத்து லட்சத்துக்கு எப்படி கணக்கு காட்டுவேன்.” என்று தன் பயத்தை அவனிடமே சொல்லி அழ,
“என்னை நம்பலயா? நான் கட்டாயம் ஒரு வாரத்துக்குள்ள தந்திடுவேன்.” என்று சமாதானம் செய்துள்ளான்.
ஆனால் இங்கே பதிலை, அவள் கேட்கும் பல நாள்களாக அவன் சொல்லிக் கொண்டே இருந்துள்ளான்.
அதுவே அவள் இன்னும் அவனை நம்பிக் கொண்டிருப்பது தான் இருக்கிறாள் என்றது. பெருங்கவலையைத் தந்தது. அந்த நம்பிக்கை அவளை என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டுமே.
ரிதன்யா, “கார்ட் ப்ளாக் பண்ணியாச்சா?”
“பண்ணிட்டேன். சைபர் க்ரைம்லயும் கேஸ் பைல் பண்ணிருக்கேன். எப்படியும் கண்டு பிடிச்சிடலாம். வாட்ஆப், இன்ஸ்டா மாதிரியான ஆஃப்ல பேசல அவங்க. ஏதோ கேம்ஸ் ஆஃப்ல பேசிருக்காங்க. அதான் என்னால கண்டு பிடிக்க முடியாம போச்சி.” என்றவன் அதிதிக்கு வரும் அத்தனை குறுஞ்செய்திகளையும் கண்காணித்துக் கொண்டு தான் இருந்திருக்கிறான்.
“ஐபி அட்ரஸ்ஸ வச்சித் தான் ட்ரேஸ் பண்ண முடியும். கொஞ்சம் டயம் எடுக்கும்னு சொன்னாங்க. இப்ப என்னோட கவலை இது இல்ல. அதிதி… சின்ன பொண்ணு அவ… இந்த வயசுல லவ்…” என்றவன்,
‘தேவையா’ என்பது போல் பார்க்க,
“இந்த மெசேஜ்லாம் பாத்தா லவ் மாதிரியா இருக்கு?”
“வேற என்ன மாதிரி நினைக்க?” என்றதும் சிறிய பெருமூச்சை இழுத்து விட்டவள்,
“உங்களுக்குப் புரியாது அது.” எனும் போது இதழோரம் வளைந்தது ரிதன்யாவிற்கு.
குட் மார்னிங், சாப்டியா? நல்லா இருக்கியா? என்பது போன்ற சாதாரண கேள்வி, முன் பின் தெரியாத யாரோ ஒருவரிடமிருந்து வரும் பால், மனம் மடை திறந்து அனைத்தையும் கொட்டுகிறது என்றால் அந்த மனம், எத்தனை பெரிய ஏமாற்றத்தை நிராசைகளைச் சந்தித்திருக்க வேண்டும்.
அந்தக் கேள்விகள் எல்லாம் அன்பின் காரணமாகவும், அக்கறையின் வெளிப்பாடாகவும் துளிர்ப்பவை.
பஞ்சமாய்ப் போன வாழ்வில் அக்கறை என்ற பெயரில் இரைக்கப் படும் நீர் நன்மைக்கா? தீமைக்கா? என்று பிரித்து பார்க்கும் பருவமா அதிதிக்கு?
இல்லை…
அவளின் வெற்றிடம் எவனோ ஒருவனால் நிரப்பப் பட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தமாய் அவளை மூழ்கடிக்கும் முன் காப்பாற்றியே ஆக வேண்டும்.
“என்ன பண்ணப் போறீங்க?”
“எனக்குத் தெரியல. எப்ப அம்மாவோட டெபிட் கார்டுட ஃபோட்டோ எடுத்தது அதிதி தான்னு சீசிடிவி பாத்து கண்பார்ம் பண்ணேனோ அப்பத்துல இருந்து ஒன்னுமே புரியல. என்ன பண்ணணும் பண்ணக் கூடாதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கு. தூக்கமே இல்ல. அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க பயமா இருக்கு.” என்று தன் பயத்தைப் புலம்பிக் கொண்டிருக்க,
“பயமா?”
“ம்… போலிஸ், அந்த கல்ப்ரேட் அதிய ப்ளாக் மெயில் பண்ண வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்க.”
“அதிதி தான் எந்த ஃபோட்டோவும் அனுப்பலயே! அப்றம் எப்படி ப்ளாக் மெயில்?”
“இப்பெல்லாம் ஃபோட்டோ நாம குடுக்கணுங்கிற அவசியம் கிடையாது. கேமராவ ஹெக் பண்ணி அவங்கனுங்களே எடுத்துப்பானுங்க. அதுவும் இன்டர்நெட்ல விளையாடுற மாதிரியான கேம்ஸ் ஆப் அது… எந்த மாதிரியான பாதுகாப்பு இருக்கும்னு சொல்லவே முடியாது.” என்றவனுக்குள் பெண் பிள்ளையைப் பெற்ற தகப்பனுக்கு நிகரான வேதனை குடி கொண்டது.
அதிதியின் தந்தை அவன் அல்லவே! ஆனாலும் அவன் பட்டுக் கொண்டிருக்கும் வேதனை அவன் அந்த இடத்தில் தான் இருக்கிறான் என்றது ரிதன்யாவிற்கு. அது சிறு வியப்பையும் தந்தது அவளுக்கு.
அதிதியிடமிருந்து பணம் பறிக்கலாம் என்பது அந்தக் கள்ளக் கூட்டத்திற்கு தெரிந்து விட்டது. அவளை மிரட்டினால், அவள் நூல் பொம்மையாகி, கடைசியில் அறுந்து போவாளோ! மான அவமானங்களுக்குப் பயந்து தவறான முடிவை எடுத்து விடுவாளோ! என்ற பயம் அவனை வியாபிக்க, இறுக்கமாய் அமர்ந்திருந்தவனின் உடல் வெளிப்படையாகவே குளுங்கியது.
ஆனால் அது தேவையற்றது என்று தோன்றியது ரிதன்யாவிற்கு
எழுந்து சென்று சூடாக காபி வாங்கி அவனின் முன் வைத்தவள், அவளிடம் சொல்லாமா வேண்டாமா என்ற யோசனை இருக்க, சிறு தயக்கத்துடன்,
“உங்க பயம் நியாயம் தான். ஆனா அது தேவையில்லாதது. நீங்க மனசு வச்சா உங்க பயத்த மட்டுமில்ல அவளோட பயத்தையும் உங்களால போக்க முடியும்.” என்றுவிட்டு அவனை ஏறிட்டாள்.
‘அதிக்குப் பயமா?’ என்று நினைத்தவன், புரியவில்லை என்பது போன்ற பாவனையில் இருக்க,
“பயம் தான். பயமும் பாதுகாப்பின்மையும் தான் தன்னைச் சுத்தி இருக்குற நலன் விரும்பிகள விட்டுட்டு, முகம் தெரியாத இன்னொருத்தரத் தேடிப் போக வைக்கும். அதி உங்க மேல பயத்தையும், ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையையும் ஃபில் பண்றா.” என்று அவனின் முகம் பார்த்து கூற,
“பயம்! இன்செக்யூரிட்டி!! உனக்கு ஒன்னும் தெரியுமா! அதியும் நானும் எவ்ளோ க்ளோஸ்னு. அதி பிறந்ததுல இருந்து அவளோட அம்மா கூட இருந்த நாள்கள விட எங்கூட இருந்தது தான் அதிகம். அவ பெரிய மனுசியா ஆனதக் கூட முதல் எங்கிட்ட தான் சொன்னா. எல்லாத்தையும் சேர் பண்ணுற அளவுக்கு நான் அவளுக்கு உரிம குடுத்திட்டுக்கேன். அவளும் எங்கிட்ட எதுக்கும் தயங்குனதே இல்ல.” என்றவனுக்கு கோபம் தான் வந்தது.
தன் பட்டன் பன்னுக்கு தன்னிடம் பயமா? எங்கே அவள் தன்னை அநாதையாக உணர்ந்து விடுவாளோ என்ற பயத்தாலும், மனைவி காதலி என்று ஒருத்தி வந்தால் அதிதி மேல் காட்டும் பாசத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்ற காரணத்தாலும் தானே கல்யாணம் காதல் எதையும் செய்யாது, அவளுக்காக அவளுடன் இருக்கிறான். இப்படிப்பட்ட நிலையில் என்ன பாதுப்பின்மை எப்படி வரும்?
“பயம் தான். இல்லன்னா அந்த பையன் கூட பேச ஆரம்பிக்கும் போதே உங்க கிட்ட ஓபெண்ணா சொல்லிருப்பா. அப்படி இல்லங்கிரப்ப அவளுக்குள்ள நிச்சயம் எதுவோ இருக்கு.” என்று ரிதன்யா அடித்துக் கூறினாள்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!