Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Contest Stories 2026

கானம் 21

அத்தியாயம்: 21

 

அது ஞாயிற்றுக்கிழமைப் பொழுது…

 



Advertisement

சோம்பலுடன் ஆரம்பித்தது அம்மாவிற்கும் மகளுக்கும்.

 

காலை உணவையே மத்திய பொழுதில் உண்டு விட்டு, வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருக்க,

Advertisement

 

Advertisement

“ரிதும்மா… நான் கார்டன சுத்தம் செய்றேன்.” என்று சரிகா கீழே ஓடினாள். அங்கேயே இருந்தால் ரிதன்யா வேலை வாங்குவாள் என்பதால்.

 

அங்கு பத்ரியும் அவனின் காரைத் துடைத்துக் கொண்டிருந்தான். வேகமாக இறங்கி வந்தவள் அவனைக் கண்டதும், அவன் முதுகுக்குப் பின்னால் நின்று,‌ இதழ் கோணி மட்டுமல்ல உடலை வளைத்தும் நெளித்தும் அழகு காட்டி விட்டு, ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள்.

Advertisement

 

அவளின் செய்கையைக் கண்ணாடி அழகாக காட்டிக் கொடுத்தது.

 

பொதுவாகவே அவனுக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆதலால் அவளின் செயல் புன்னகையைத் தர, திரும்பிப் பார்த்தான். தாயின் வண்டியில் கால்கள் எட்டாத போதும் இங்கும் அங்கும் அசைந்து அவளே ஓட்டுவது போல் ரியாக்ஷனை முகத்தில் வைத்துக் கொண்டு அசைந்தாடியது சுவாரசியமாக இருந்தது. கரங்களைக் காட்டிக் கொண்டு குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சற்று பருத்த தேகம் தான்… குண்டு கன்னங்கள், வட்ட முகம், கோதுமை நிறம், சுருட்டை முடி, சொலவுக் காது… அழகாய் விரிந்து இருந்தது. அதில் தொங்கியது வட்டமாய் ஒரு வளையம். அடர்ந்த புருவம், அவள் பாவனைகளைக் காட்டி நெளிந்தது. துறுதுறு கண்களும் கால்களும் பரபரத்தன எதையாவது செய்ய.

 

ரிதன்யாவின் மகள் என்று தெரியும். அவ்வப்போது பார்த்திருக்கிறான். தாயுடன் வாயாடும் அழகையும் கேட்டிருக்கிறான். ஆனால் அவளுடன் ஒரு வார்த்தை கூட அவன் பேசியதே இல்லை. பேசும் சூழல் அமையவே இல்லை.

 

அன்று வந்தவன் ரிதன்யாவை மிரட்ட மட்டும் தானே வந்திருந்தான். குட்டியைப் பார்க்கவில்லை. அதன் பின்னும் இருவருக்குமான சந்திப்பும், அப்படி ஒன்றும் நல்லமுறையில் இல்லை.

 

இந்த மூன்று நாள்களாகத்தான் முழு நேரமும் வீட்டில் இருக்கிறான். அதிலும் அவனின் காலைப் பொழுது, திடும் திடும் என்று மாடியில் இருந்து வரும் சத்தத்தில் தானே ஆரம்பிக்கும்.

 

ஏன் அந்தச் சத்தம்? என்ன செய்கிறார்கள் என்று சந்தேகம் இருக்கும்.

 

“சின்ன பிள்ளை இருக்குற வீட்டுல சத்தம் வராம எப்படி இருக்கும்?” என்று மகனை அடக்குவார் சுதா.

 

இதோ அவன் சந்தேகத்தை விளக்க ஆள் வந்திருக்கிறதே! என்று சிறுமியுடன் பேச்சை முன்னெடுத்தான்.

 

“உன்னோட பேர் என்ன?” என்றவனுக்கு,

 

“சொல்ல மாட்டேன்” என்ற பதில் பட்டென வந்து விழுந்தது.

 

“ஏன்? நான் புது ஆளுங்கிறதுனாலயா?”

 

“இல்ல… நீங்க அதி அக்கா மாமான்னு எனக்குத் தெரியும்.”

 

“அப்ப நம்பி பேர் சொல்லலாம்ல.”

 

“மாட்டேன்.”

 

“ஏன்?”

 

“எனக்கு உங்கள பிடிக்கல. நீங்க பேட் பாய்.” என்றவள் அவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

 

அவள் சொன்ன தோரணையில் மெல்லிய முறுவல் அரும்ப, ‌”காலைல மாடில இருந்து சத்தம் அதிகமாக வருது. என்ன பண்ற? குதிக்கிறியா? குதிக்கெல்லாம் கூடாது.” என்ற ஸ்கூட்டியின் ஹன்ட்பாரில் கரம் வைத்து, விளையாட்டாகத்தான் சொன்னான்.

 

“குதிச்சா! என்ன செய்வீங்க? வேற வீடு பாக்கச் சொல்லி துரத்தி விட்டுடுவீங்களா…” என்று இடையில் கை வைத்து கடோத்கஜன் போன்ற தோரணையில் முரட்டியவள்,

 

“அப்படித்தான் குதிப்பேன். காலை மத்தியம்ன்னு ரெண்டு வேளையும் குதிப்பேன். நைட்டும் குதிப்பேன். வேற வீட்டுக்குப் போக மாட்டோம்.” என்று விட்டு முகம் திரும்ப, அவள் அப்படியே அவளின் தாயின் பிரதிபலிப்பு என்று புரிந்தது அவனுக்கு.

 

அவளின் பேச்சு காரமாக இருக்கவும், “ஓ… அன்னைக்கு உங்கம்மா கூட நான் பேசுனத கேட்டிருக்க. அதனால தான் எனக்கு பேட் பாய்னு பேர் வச்சிக்க.”

 

“ஆமாம்… வச்சிருக்கேன்.” என்க,

 

“அப்படியே உங்கம்மா உனக்கு வச்ச பேரையும் சொன்னா! நானும் உன்னைக் கூப்பிட வசதியா இருக்கும்.”

 

“நீங்க என்னைக் கூப்பிடவே வேண்டாம்.” என்று பட்டென்று சொல்லிவிட,

 

“சரிகா… சரிகா… என்ன பண்ற நீ கீழ?” என்று மாடியில் இருந்து வந்த ரிதன்யாவின் குரலில், பத்ரி பட்டென சிரித்து விட்டான்.

 

அவனுக்குத் தன் பெயர் தெரிந்து விட்டது என்ற கோபத்தில், “அம்மா… கீழ தான இருக்கேன். ஏன் எம்பேர ஏலம் போடுறீங்க.” என்று மூக்கு விடைக்க கத்தினாள்.

 

“ஏலம் போடல எரும… வந்த உன் ஸ்கூல் பேக்க எடுத்து வை.”

 

“அப்றமா வைக்கிறேன்.”

 

“உன்னோட அப்றம் எப்ப வரும்னு என்னால காத்திருக்க முடியாது.”

 

“அம்மா…” என்று கத்த,

 

“இப்ப வந்து எடுத்து வச்சா வை… இல்லன்னா தான் கூட்டி கூடைல அள்ளிடுவேன்.” என்று மிரட்ட,

 

நடக்கும் கூத்தை நான் பார்க்கவில்லை. கேட்கிறேன் என்பது போல் பத்ரி, தன் முறுவல் அரும்பிய முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் வேலையைப் பார்த்தான்.

 

அவளும் வீம்பாக ஸ்கூட்டியில் அமர்ந்து விர் விர் என்று சத்தமிட்டுத் தன் விளையாட்டைத் தொடர்ந்தாள்.

 

வேலையை முடித்து விட்டான் போலும், உள்ளே செல்லும் முன், ” ஏய்!! பேரிக்கா… சாவி போட்டு திருகு… இன்னும் வேகமாக போகும்.” என்று கேலியாகச் சொல்லி விட்டு சென்றான். சில நிமிடங்கள் டம் என்று சத்தம். வெளியே வந்து பார்த்தால், நான்கைந்து பூந்தொட்டிகள் உடைந்திருந்தன. கூடவே,

 

“அம்மா… அம்மா… சீக்கிரம் வாம்மா… எனக்கு பயமா இருக்கு… ம்மா…” என்ற அலறலும் கேட்டது.

 

சரிகா, ஸ்கூட்டியின் ஆக்சிலேட்டரைத் திருகியபடி, ஒரு மழைநீர் வடிகால் குழாயின் இடுக்கில் ஸ்கூட்டியின் சக்கரத்தை திணித்துவிட்டு கதறிக் கொண்டிருந்தாள். அவள் ஆக்சிலேட்டரை முறுக்கிய வேகத்தில் முன் சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது.

 

இந்த பத்ரி விளையாட்டாகச் சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, தாயின் வண்டிச் சாவியை உரிய இடத்தில் வைத்து திருகியிருக்கிறாள்.

 

பக்கவாட்டு கம்பியின் உதவியுடன் நிறுத்தப்பட்டிருந்த அது, அவள் திருகிய வேகத்தில் சக்கரங்களைச் சுழல விட்டு வேகமெடுக்க, இவளும் கையை எடுக்காது அதன் கூடவே சென்று விட்டாள்.

 

தான் சொன்னதைத் தான் சிறுமி செய்திருக்கிறாள் என்றறிந்து பத்ரியும், வேகமாக வந்து ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தினான்.

 

உடைந்த பூந்தொட்டியைப் பரிதாபமாகப் பார்த்தபடி நின்றிருந்தவளின் கன்னத்தில் பளார் என்று அறை.

 

“அறிவில்லயா ‌டி உனக்கு. உன்னை யாரு ஸ்கூட்டியச் சாவி போட்டு ஓட்டச் சொன்னது? கை கால் உடஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்ப… முட்டி புத்தி… எரும மாதிரி ஆள் தான் வளந்திருக்கு. புத்தி கடுகளவு கூட வளரல.”

 

“நல்ல புத்தி இருக்க கண்டு தான், ஸ்டெடியா நிக்கிறேன்.”

 

“பேசாதடி…” என்று அதட்டியவள், ஸ்கூட்டிக்கு என்னானது என்று பார்த்து விட்டு, மகளை ஆராய்ந்தாள்.

 

“கெட்ட அம்மாம்மா நீ… எனக்கு என்னாச்சின்னு முதல்ல பாக்காம வண்டியப் போய்ப் பாக்குற.” என்று விட்டு அதற்கும் முதுகில் அடி வாங்கினாள்.

 

“எப்பயும் ஏறி உக்காந்து தான விளையாடுவ! புதுசா சாவி போட்டு திருகிருக்க… யார் சொல்லிக் குடுத்தா இத?” என்று காட்டமாக கேட்டபடி பூந்தொட்டியின் உடைந்த பாகங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருத்தாள்.

 

சரிகா பத்தியை நோக்கி கை‌ காட்டினாள்.

 

அத்தனை நேரம் இவர்களின் கூத்தை வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவன், “பேரிக்கா போட்டுக் குடுத்திடுச்சி…” என்று முணுமுணுத்துக் கொண்டே அசடு வழிய, நெற்றியைத் தேய்த்தபடி உள்ளே சென்றான்.

 

“யார் சொன்னாலும் அப்படியே செஞ்சிடுவியா? உனக்குன்னு கடவுள் வைச்சிருக்குற புத்திய யூஸ் பண்ண மாட்டியா?” என்று கேட்டு முதுகில் போட்டது அவன் காதில் விழுந்தது.

 

அவன் திட்டியதில் கோபமாக இருந்தவள், அதை மகளிடம் காட்டி விட்டாள்.

 

அவனை மொத்துவதாக நினைத்து மகளை மொத்தியிருப்பாளோ!

 

இருக்கும் இருக்கும்…

 

சரிகாவின் அழுகைச் சத்தம் நிற்கவே பல நிமிடங்கள் பிடித்தன.

 

“என்னம்மா இது! இப்படிப் போட்டு அடிக்கிறா பெத்த பிள்ளைய…” என்று குற்றம் சாட்டினான் சிறுவன் போல்.

 

“பெத்த பிள்ளைய அடிக்காம! வேற யார அடிக்க… அம்மான்னா கொஞ்சிட்டும் கெஞ்சிட்டும் மட்டும் தான் இருப்பாங்களா… சேட்ட செஞ்ச அடிக்கத்தான் செய்வாங்க.” என்று சுதா சொல்ல, அதிதியின் முகம் மின்னி மறைந்தது.

 

“நீங்க ஏன் அவளுக்கு எப்ப பாத்தாலும் சப்போட்டாவே பேசுறீங்க? வசியம் எதுவும் வச்சிட்டாளா?” என்ற மகனின் புஜத்தில் ஒரு அடி போட்டவர்,

 

“உன்னையும் இப்படி அடிச்சி வளத்திருந்தா இப்படி கண்டபடி பேச மாட்ட… அம்மா சொல்றத சரின்னு கேட்டிருப்ப.”

 

“இப்ப என்ன கேக்கலன்னு சொல்றீங்க?”

 

“கல்யாணம்…” என்று அவர் ஆரம்பிக்கும் போதே,

 

“ரென்டல் கான்ட்ராக்ட் பேப்பர்ஸ் எங்க இருக்கு?” என்று தேடி எடுத்தான்.

 

“அஞ்சி மாசம் முடியவும் அதை ரினியூ பண்ணக் கூடாது. வேற வீடு பாருன்னு சொல்லிடணும்.” என்று உரக்கச் சொன்னவன்,

 

“அவளால வீட்டுல இருக்குற எல்லாரோட குணமும் மாறிடுச்சி.” என்று முணுமுணுத்துவிட்டுச் சென்றான்.

 

அவனின் குணமும் அவளால் மாற்றப்படும் என்பதை அறியாது.

 

காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்வோம் என்ற பெண்களை எப்படி நடுச் சாலையில் இறங்கி விட்டானோ… அதே போன்றதொரு சாலையில் அவளிடம் திருமணத்திற்காக இன்னும் சில நாள்களில் கேட்பாய் என்று சொன்னால் நம்புவானா என்ன?

 

என்ன தான் கடைகளில் பல பல பெயர்களில் விற்பனை செய்யப்பட்டாலும் பழத்தைப் பக்குவமாய் கடையில் வாங்கி, கைகளால் அதன் சாறை எடுத்து, தண்ணீர், சர்க்கரை சேர்க்காது ராவாக குடிப்பதில் உள்ள சுவை… என்றும் தனித்துவமானது.

 

அதிலும் சுதா போட்டுத் தரும் சாத்துக்குடி சாறின் சுவைக்கு, எத்தனை டம்ளர் வேண்டுமானாலும் வாங்கிக் குடிக்கலாம். இதோ சுருதியும் இரண்டாவது டம்ளருக்காக காத்திருக்கிறாள்.

 

ஏற்கனவே குடித்து முடித்த டம்ளரில் இருந்த, கடைசி சொட்டைச் சுவைத்து விடும் முயற்சியில் அவள் இருக்க,

 

“டம்ளரையும் சேத்து குடிக்கப் போறியா?” என்று கேட்டபடி வந்த பத்ரி, அதைக் கைவிட வைத்தான்.

 

அவனுக்கு அசட்டுப் புன்னகை ஒன்றைத் தந்தவள், “டேஸ்ட்டா இருந்தா டம்ளரையும் சேத்து குடிக்கிறதுல தப்பில்லயே சார்.” என்றவள்,

 

சுதாவின் மாதாந்திர ரிப்போர்ட்டை நீட்ட, அவள் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினான்.

 

“இந்த மாசம் என்னென்னு வந்திருக்கு?” என்றபடி வந்தவர்,‌ சாத்துக்குடி சாறுடன் சேர்ந்து சில பலகாரங்களையும் தட்டி அடுக்கி மேஜையில் வைத்தார்.

 

“ஒவ்வொரு மாசமும் அதுல இருக்குற நம்ருங்க மாறுது. இவெ! அதப் பாத்திட்டு எண்ணெய் கூட சேக்குறீங்க? உப்பு ஏன் போடுறீங்கன்னு கத்துறான். சின்ன வயசுல அவனுக்குச் சோறுட்ட மிரட்டுன மாதிரி என்னைச் சாப்பிடுறதுக்கு மிரட்டுறான்ம்மா. என்னைக்குத் தான் இது முடியுமோ!” என்று பெருமூச்சு ஒன்றை விட, அவளின் கவனம் எங்கே அவரின் பேச்சில் இருந்தது. பலகாரத் தட்டில் அல்லவா இருந்தது.

 

அதைக் கண்டவன், தட்டை அவள்புறம் தள்ளி எடுத்துக் கொள் என்பது போல் சமிக்ஞை செய்தான். கூச்சம் பார்க்காது வாய்க்கு வேலை வைத்தாள்.

 

பத்ரி, “எப்பவும் ஜூஸ் மட்டும் தான் வரும். இன்னைக்கு கூட ரெண்டு பலகாரமும் வந்திருக்கே ஏன்னு தெரியுமா சுருதி?”

 

“ஏன் சார்?”

 

“அது அவங்க பையனுக்கு பொண்ணு பாத்திட்டு இருக்காங்க. நீ வேற நானும் பொண்ணு தாங்கிற மாதிரி வந்திருக்கியா…‌ அதுனால…” என்றவன் அவள் வழக்கமாக அணிந்து வரும் சுடிதாரில் இல்லாது, புது புடவை கட்டி, தலை நிறைய பூவுடன், முகம் கொள்ளாப் பொலிவுடன் வந்திருப்பதைச் சுட்டிக் காட்ட,

 

“ஐயோ சார்!!!” என்று அவனின் பேச்சை இடை வெட்டியவள், தன் கைப்பைக்குள் இருந்த கவரை நீட்டினாள்.

 

“என்னோட மேரேஜ் இன்விடேஷன் சார். அதோட ப்ளூ ப்ரிண்ட். சரியா இருக்கான்னு ரிதுக்கிட்ட காட்ட எடுத்திட்டிட்டு வந்தேன்.” என்றாள் அவசர அவசரமாக.

 

“கல்யாணமா!” என்று புருவம் சுருக்கியவன்,

 

“என்ன சுருதி என்னை இப்படி ஏமாத்திட்ட? நீயும் நானும் ஜோடின்னு நினைச்சேன்…”

 

“சா…ர்…”

 

“ஐ மீன் உனக்கு கல்யாணம் ஆகல.. எனக்கும் கல்யாணத்துல ஆர்வம் இல்லை. நாம ரெண்டு பேரும் தனித் தனி ஜோடியா இருக்கலாம்னு நினைச்சேன்.” என்றவனை முறைத்தவள்,

 

“பல வர்ஷ லவ் சார். பல பிரச்சனைக்கு மத்தில கல்யாண கார்டு அடிக்கிற அளவுக்கு வந்திருக்கு. இப்படி கண்டதையும் கிளப்பி விடாதீங்க.” என்க, பட்டென சிரித்தான் பத்ரி.

 

“போன வாரம் வீட்டுக்கு வந்திருந்தானே ஒரு பையன்! அந்தத் தம்பி தானா?” என்று கேட்டார் சுதா.

 

ஆமாம் என்பது போல் வெட்கத்துடன் தலையசைத்தாள் சுருதி.

 

“ஆனா சண்ட போட்ட மாதிரில்ல இருந்தது.” என்றவனின் குரலில் இருந்த கேலியை இனம் கண்டு கொண்டாள். ஆக இவன் தெரிந்து வைத்துக் கொண்டே வம்பிழுத்திருக்கிறான்.

 

“சண்டைலாம் சரியாகிடுச்சி சார்.”

 

“உன் கசின் பஞ்சாயத்து தலைவியா சேர் போட்டு உக்காந்து தீர்ப்பு சொல்லி சேத்து வச்சாளாக்கும்.” என்று நக்கலாக கேட்க, சுதா அவனின் கையில் தட்டி,

 

“எங்க எப்படிச் சுத்தினாலும் ரிதுவ குறை சொல்றதுலயே வந்து நில்லு.” என்றார்.

 

“உங்களுக்கு ஏன் சார் அவள பிடிக்கல?” என்றவளிடம் எதுவும் சொல்லாது பத்திரிக்கையைப் புரட்டினான்.

 

அதில் சுருதிகா விஷ்ணுபிரியன் என்று எழுதியிருக்க, சத்தமாக வாசித்து சுருதியின் முகத்தை செஞ்சாந்தாய் மாற்றினான்.

 

“கோயில்ல வச்சா கல்யாணம் பண்ணிக்கப் போறிங்க?”

 

“ஆமாம் சார்…” என்றாள் வாடிய முகத்துடன்.

 

மனோகரி சம்மதிக்கவே இல்லை. அதுவும் கல்யாணத்திற்கு பின் வேலைக்குச் செல்லப் போவது இல்லை என்று தான் எடுத்த முடிவைச் சுருதி சொன்ன பின்னரும் எப்படிச் சம்மதிப்பார்.

 

“வேலைக்குப் போகாம வீட்டுல உக்காந்து பத்துப் பாத்திரம் விளக்கப் போறியா? வேலைக்காரி மாதிரி! காலத்துக்கும் கிடக்கப் போற, புருஷன்ட்ட காசுக்குக் கை ஏந்த அசிங்கமா இல்லை. அந்த வீட்டுல உனக்கு மரியாத இருக்குமாடி.

 

ஒரு பொண்ணுக்குக் காசு தர்ற தைரியம் வேற யாரும் தரமுடியாது. அதுவும் இந்தக் காலத்துல பொண்ணுக்கு சம்பாத்தியம் தான் எல்லாம். சொந்த காலில் நிக்கிற துணிச்சல் அதுல இருந்து தான் கிடைக்கும்.” என்று அவரும் பெண்கள் வேலைக்குப் போவதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்தடுக்க, அவளோ,

 

“அவன் காசும் எங்காசும் வேற வேற இல்லை. என்னை வச்சி காப்பாத்துற அளவுக்கு அவன் சம்பாதிக்கிறான். அப்படியே எங்களுக்கு வருமானம் பத்தலன்னா… அவனோட சம்பாத்தியத்துக்கு நான் துணையா இருப்பேன்.” என்றுவிட, மனோகரி திருமணத்திற்கு வரமாட்டேன் என்று விட்டார். தம்பியும் தங்கையும் அவரை மீறி வர மாட்டார்கள் என்பதால், தனி மரமாய் இருப்பது போன்றதொர் உணர்வு.

 

அத்தோடு விஷ்ணுவின் வீட்டிலும், அவனின் தந்தை சம்மதிக்கவே இல்லை. ரிதன்யா அவனின் தாயிடம் பேசினாள்.

 

விஷ்ணு சுருதியைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக இருப்பதை அறிந்தவர் சற்று மனமிறங்கி வந்தார்.

 

அவர் மகனுக்காக பரிந்து பேச, சுருதியை மருமகளாக ஏற்க அரை மனதுடன் சம்மதித்தார் நடேசன். அதுவும் ஒரே இனம் என்பதால். ஆனாலும் தங்களை விட வசதி வாய்ப்பில் கீழ் உள்ள குடும்பத்தில் இருந்து பெண் எடுப்பதைக் கேவலமாக நினைத்தவர், அதைத் தன் தலைமையில் நடத்தி வைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

 

“அப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டீட்டு வந்தா ஓகேவா?” என்று ரிதன்யா தான் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனையைத் தந்தாள்.

 

அதுவும் அவருக்குச்‌ சரியென்று பட்டது. ‘மகன் காதலித்தான். கூட்டி வந்து விட்டான்’ என்பது ஊரார் முன்னிருக்கும் அவரின் போலி கௌரவத்தைச் சற்று சமாதானம் செய்யும்.

 

எது எப்படியோ திருமணம் என்பது உறுதியாகி விட்டது.

 

கோயிலில் வைத்து தாலி கட்டி, பதிவுத் திருமணம் செய்து கொண்டு, அன்று மாலையில் வரவேற்பு ஒன்றை நடத்தி ஊருக்கே திருமணத்தைத் தெரியப்படுத்த விரும்பினர்.

 

விரைவில் தனியாகக் குடித்தனம் கூட செய்ய உள்ளதாக கூறினாள்.

 

“அந்த ஹவுஸ் ஓனர் கிட்டயாவது உண்மைய சொல்வியா இல்ல…” என்று பத்ரி இழுத்தான், அவளின் வாடிய முகத்தைப் பார்த்து.

 

அவன் நினைத்தது போலவே, “உண்மையச் சொல்லித்தான் சார். பொய்யெல்லாம் பேசுறது இல்லை. அத்தோட அந்த ஓனருக்கு தங்கமான மனசு. உங்கள மாதிரி கிடையாது. கண்டிஷனே போடல தெரியுமா!” என்று கேலியாகச் சொல்லிச் சிரித்தாள்.

 

“அப்ப பத்திரமா பாத்து இருந்துக்கச் சொல்லு. கூட்டீட்டு போய் உரசி எடுத்திடப் போறானுங்க. தங்க விலை தெரியும் தான!” என்று பேச்சை மாற்றி சூழலைச் சமநிலைக்கு கொண்டு வந்தான்.

 

ஒரு நன்னாளில் தட்டில் பூ பழம் உள்ளிட்டவற்றை வைத்து, கல்யாணத்திற்கு அழைத்தனர் ரிதன்யாவும் சுருதியும்.

 

“இப்போதைக்கு என்னோட சார்பா நிக்க, ரிதுவ தவிர வேற யாரும் இல்லை. அதுனால உங்க மூணு பேரையும் பொண்ணு வீட்டு சார்பா கல்யாணத்துல நிக்கணும் கேட்டுக்கிறேன் ம்மா.” என்று உடைந்த குரலில் சொல்ல,

 

“இத நீ சொல்லணுமா என்ன? அது எங்க வீட்டுக் கல்யாணம் மாதிரி. சிறப்பா செஞ்சிடாவோம்.” என்றவரின் காலில் விழுந்து ஆசியை வேண்டினாள்.

 

தன்னைத் தூக்கியவரை, அணைத்தாள் நன்றியுடன்.

 

எளிமையாக திருமணம் முடிக்க நினைத்தாலும் ஏற்பாடுகளைச் செய்ய இரு பெண்கள் மட்டும் அலைக்கழிவதைக் கண்ட பத்ரி, அவர்களுடன் இணைந்து கொண்டான்.

 

திருமண வேலைகளில் ரிதன்யாவுடன் இணைந்து இறங்கிச் செய்தான் பத்ரி.

கானம் இசைக்கும்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!