Skip to content
Post Views: 139
அத்தியாயம்: 23
எந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்டது என்று திருக்குறளை வைத்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றே அவர் பல செய்யுள்கள் மூலம் எச்சரித்திருந்தார் கூடா நட்பின் விளைவுகளை.
Advertisement
விக்ரம் கெட்டு குட்டிச்சுவராக ஆனதற்கும் அந்த நட்பு தான் காரணம். நல்ல நட்பு, தானும் முன்னேறி தன் நண்பர்களையும் முன்னேற பாதை காட்டும். விக்ரம் விடயத்தில் தலைகீழ்.
பெரியசாமி, சரவணன், திருவடி என்று மூன்றே மூன்று நட்புகள் தான் அவனுக்கு. பெரிய வட்டம் இல்லை. ஆனால் அந்த வட்டம் ஆரம்ப இடத்திலேயே சுற்றிச் சுற்றி எவ்வித முன்னேற்றமும் காணாத, எதற்கும் பயன்படாத ஓட்டை விழுந்த வட்டம்.
Advertisement
Advertisement
பள்ளி செல்லும் காலத்தில் இருந்து
உடன் இருக்கின்றனர். அவர்களைக் கடையில் நிறுத்தி தான், மூன்று பேருக்கு மாசச் சம்பளம் குடுக்கும் அளவிற்கு என் மகனிடம் வருமானம் உள்ளது என்று அண்ணாமலையாரை ஏமாற்றியது.
Advertisement
நாய்க்கு நிற்க நேரமும் இல்லை. ஊருக்குள் ஒரு வேலையும் இல்லை என்ற சொல்லாடல் உண்டு. அதுபோல் இந்தக் கூட்டம் உருப்படும்படியாக எதையும் செய்தது இல்லை. வேலை இல்லாது, ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
திருமணத்திற்கு பின்னும் விக்ரம் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கவில்லை. மாறாக என் நட்பின் மதிப்பைப் பார் என்று அவர்களே கதியென்று கிடத்தான்.
விக்ரம் குணம் புரியத் தொடங்கியதும், ரிதன்யா மனதளவில் அவனை விவாகரத்துச் செய்து விட்டு, உயிரோடிருக்கும் தன் சரீரத்தைக் காத்து, தன் மகளையும் பேணி, தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தாள்.
வீட்டிற்கு என்று அவன் தரும் சொச்ச காசு, அவளுக்கு மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் சரிகாவைப் பள்ளியில் சேர்க்கும் காலம் வந்த போது, “பொட்டப் பிள்ள படிச்சி என்னத்தக் கிழிக்கப் போறா? இங்க எங்கயாவது பால்வாடி இருக்கும். கொண்டுபோய் சேரு. இல்லன்னா வீட்டுலயே கடக்கட்டும்.” என்று விட்டான்.
“ம்மா… அக்காங்க எல்லாம் வேன்ல தான் ஸ்கூலுக்கு போறாங்களாம். நானு எப்பம்மா ஸ்கூல் போக.” என்று மூன்று வயது நிரம்பிய சரிகா, மைதிலியின் பிள்ளைகள் பள்ளி செல்வதைக் கண்டு அதே பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கேட்கும் போது, தாய், மனம் அந்தப் பள்ளியில் படிக்க வைக்கும் அளவிற்கு காசில்லை என்று சொல்ல முடியாது தவித்தது.
அண்ணாமலையாரிடம் உதவி கேட்க முடியாது. தனபாலோ, “அந்த ஸ்கூல்லலாம் நிறைய செலவு ஆகும். உம்புருஷனால அது முடியாது. பேசாம இன்னும் ரெண்டு வர்ஷம் இரு. கவர்மென்ட் ஸ்கூல்ல அட்மிஷன் போட்டிடலாம்.” என்று விட்டான்.
ரிதன்யாவிடம் ஒரு பிடிவாதம் உண்டு. முடியாது என்று யாராவது துச்சமாகப் பேசினாள் அதை முடியும் என்று மாற்றும் அளவிற்கு வைராக்கியம் இருக்கும்.
தன் பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டியே வேலைக்குச் சென்றாள். மாதம் ஆறாயிரம் அவளின் கரங்களில் தவழ்ந்தது. பிள்ளைக்குக் காசில்லை என்றவனிடம் தன் வருமானத்தைச் சேர்ப்பதில் ரிதன்யாவிற்கு உடன்பாடு இல்லை.
முத்துலெட்சுமி கூட, “சம்பளத்த மாப்ள கைல குடுத்து வாங்கு ரிது. அதுதான் அவருக்கு மரியாத. நீ பாட்டுக்கு வச்சிக்கிட்டா சம்பாதிக்கிற திமிருன்னு பேச்சு வரும்.” என்றார்.
ஆனால், “பால் வாங்கணும். காய்க்கு வேணும்.” என்று தினமும் அவனின் முன் பிச்சை எடுப்பது போல் கெஞ்சி நிற்பதும், அவன் கொடுக்கும் நூறு ரூபாய்க்குள் பத்து நாள்களை ஓட்டுவதுமாக இருப்பவளுக்கு, தன் உழைப்பை அவனிடம் கொடுத்து இறைஞ்சி நிற்க பிடிக்கவில்லை. ஆதலால் வேலைக்குச் செல்வதைப் பிரகடனப்படுத்தி விட்டு, மகளைப் பள்ளியில் சேர்த்தாள்.
விக்ரம் அதற்கும் ஒரு பஞ்சாயத்து வைத்தான். ஆனால் முடிவு என்னவே அவளுக்குத் தான் சாதகமாக அமைந்தது.
“எம்பிள்ளைய படிக்க வைக்கணும். அவர்ட்ட காசில்லன்டாரு. நீங்க குடுத்து உதவுறதா இருந்தா நான் வேலைக்கு போகல.” என்று அம்பை அவரின் பக்கம் திரும்ப, எங்கே செலவு செய்ய நேர்ந்தது விடுமோ என்று அண்ணாமலை பின் வாங்கினார்.
தனியார் பதின்ம மேல் நிலைப் பள்ளி தான். ஆனாலும் கட்டணம் கட்டுப்படி ஆகுமா என்பதைக் கணக்கிட்டே சேர்ந்து விட்டாள். பள்ளிக் கட்டணம் எப்படிப் பார்த்தாலும் வருடம் 15000 வந்துவிடும். அதைத் தவணையாக கட்டும் வாய்ப்பையும் பள்ளி வழங்கியிருந்தது. ரிதன்யாவின் வருமானமோ மாதம் 6000 எனும் போது, அவளிடம் அதிகப்படியான காசு புழங்குவது போல் தோன்றியது விக்ரமிற்கு.
முன்பு போல் வேலைக்குச் செல்லும் பொழுது, காசு வேண்டும் என்று கைகளைப் பிசைந்து கொண்டு நிற்பதில்லை என்பதே அவளின் மீது ஒருவித வன்மத்தைக் கிளம்பியிருந்தது. இதில் சேமிக்கும் அளவுக்கு காசு தங்குகிறது என்றால் எப்படி ஏற்பான்.
“நானா வீட்டுல இருக்கேன். அம்மையும் மகளும் தான படுத்திட்டு சொகுசா இருக்கீங்க. நான் தூங்க மட்டும் தான் வீட்டுக்கு வர்றேன். அதுவும் கூடாதுன்னா கடைல படுத்துப்பேன். இல்லன்னா ரோட்டுல கூட கிடப்பேன். எனக்கு வீடே தேவை இல்லை. அதுக்கு எதுக்கு நான் வாடகை குடுக்கணும்.” என்றவன்,
பலசரக்கு, வாடகை, மின் கட்டணம் என்று வீட்டுச் செலவு அத்தனையையும் அவளின் தலையில் கட்டினான்.
கேட்டால், ‘சம்பாதிக்கிறேல்ல… செய்யி…’ என்றான்.
போதாதற்கு பைக், செல்ஃபேன என்று, விலை உயர்ந்த பலவையும் தவணை முறையில் வாங்கிக் குவித்து, “நீ வேலைக்கு போற. வீட்டுல வேலை செய்ய உடம்பு நோகும். உன் சவுகரியத்துக்கு வாசிங் மிசின் வாங்கிப் போட்டிருக்க… இந்தக் காலத்துல செல்போன் இல்லன்னா எவெ வேலை குடுப்பான். சாதாரண ஆட்டோக்காரன் கூட, நோட்ட நீட்டுனா முறைக்கிறான். ஜீபே பண்ணுன்னு சட்டமா சொல்றான். பட்டன் போனத் தட்டிட்டே இருந்தா முடியுமா.” என்றவன் அவளின் வருமானத்தில் வாழத் தொடங்கினான்.
அவனுக்குத் தான் அவன் நண்பர்கள் முக்கியமே… வீட்டு செலவை ரிதன்யா வசம் கொடுத்தவன், மற்ற செலவு, அதான் போதைக்கும் ஊர் சுற்றுவதற்கும் வேண்டுமல்லவா…
கடையைக் காரணம் காட்டி வெளியே கடன் வாங்கத் தொடங்கினான். இனி கடன் பெறவே முடியாது என்ற நிலையில்,
“மாட்டுத் தாவணி பக்கம் இன்னொரு கடை ஒன்னு போடலாம்னு இருக்கேன். காசு வேணும்.” என்றான்.
“எங்கிட்ட ஏது அவ்வளவு. என்னால இருபதாயிரத்துக்கு மேல குடுக்க முடியாது.” என்றுவிட,
“நகைய வச்சி தா” என்றவனை உக்கிரமாக முறைத்து முடியாது என்று தீர்க்கமாக நின்றாள்.
நிச்சயம் கணவனுக்குக் கொடுப்பதில் தவறில்லை. தங்கம் சிறந்த முதலீடு தான். ஆனால் அதைச் சிறு மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் யுக்தியாக பயன்படுத்த வேண்டும். குளத்தில் கல் விட்டெறிந்து விளையாடும் விளையாட்டாக்கி விடக் கூடாது.
நகைகளைத் தந்தால் அவன் புது கடை திறக்கப்போவது இல்லை. அப்படியே திறந்தாலும் அதை எடுத்து நடத்தும் அளவிற்கு திறமையும் இல்லை. நண்பர்களுடன் ஊர் சுற்ற நகையை அடமானம் வைக்க வேண்டுமா? என்பதால் மறுக்க,
“எதுக்கு இவளுகல அந்த பவுனு போட்டு கட்டி கூட்டீட்டு வந்திருக்கோம். செலவுக்கு இல்லன்னா அடமானம் வச்சிக்கத் தான. நீ சும்மா எடுத்து பிழங்கு நண்பா. உம்பொண்டாட்டிட உனக்கு இல்லாததா.” என்று பெரியசாமி ஏற்றிவிட, மனைவியின் நகையின் மீது கை வைத்தான் விக்ரம். அதுவும் அவளுக்குத் தெரியாது.
“ரிது… இது உன்னிதான்னு பாரு.” என்று ஒரு ஜோடி காதணியை அவளின் முன் நீட்டினான் மாரி.
“என்னிது தான் மச்சான். எப்படி உங்க கிட்ட வந்தது.” என்றவளுக்குப் படபடப்பு. தன் நகை எப்படி? என்று.
“இன்னைக்கி ஒரு கேஸ் விசயம் நகைக் கடை பக்கமா போயிருந்தேன். அங்க தான் பாத்தேன். ஒன்னு போல வேணும்னு நீயும் மைதிலியும் செய்யச் சொல்லி வாங்குனதுன்னு ஞாபகம் வந்தது. அதான் கேட்டேன்.” என்றதும் புரிந்து போனது இது விக்ரமின் வேலை என்று.
வீட்டிற்கு வந்ததும் அவனிடம் கேள்வி கேட்க, கிடைத்தது என்னவோ அடியும் மிதியும் தான்.
அண்ணாமலையாரிடம் மீண்டும் பஞ்சாயத்துச் சென்றது.
கணவன் முன்னேற்றத்திற்கு உதவுவது மனைவியின் கடமை என்றார் தீர்ப்பாக.
விசாரித்துப் பார்த்ததில் கம்மல் மட்டுமல்லாது மேலும் சில நகைகள் அடகு வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மகளைக் கவனிக்க வேண்டி, பகுதி நேரம் போல் பணி செய்து வந்தவள், காலையில் பத்து மணி தொடங்கி இரவு பத்து வரை நின்று கொண்டே முழு நேரமும் வேலை செய்யும் நகைக்கடையில் வந்து சேர்ந்தாள்.
வைத்த நகையை மீட்கவே அரும்பாடு பட்டாள் ரிதன்யா.
எப்பொழுதும் ரிதன்யாவிற்கு ஒரு நம்பிக்கை உண்டு. அது என்னவென்றால் படிப்புக்கும், அன்றாட செலவுக்கும் மட்டும் பார்த்தால் போதும், மகளின் திருமணம் என்று காலம் கனிகையில் தன்னிடம் இருக்கும் நகைகளையும் பாத்திர பண்டங்களையும் புதுப்பித்து மகளைக் கறையேற்றி விடலாம் என்று. விக்ரமின் இந்தச் செயல், அவளின் நம்பிக்கையின் மீது விழுந்த இடியாகி விடக் கூடாது என்பதால், வங்கி லாக்கரில் நகைகளைக் கொண்டு சேர்ந்தாள்.
கழுத்தில் தாலியைத் தவிர எதையும் அவள் வசம் வைத்திருக்கவில்லை. எங்கு சென்றாலும் அந்தத் தாலிச் சரடுடன் வந்து நிற்பதால் கிடைத்துக் கொண்டிருந்த கொஞ்ச மரியாதையும் கற்பூரமானது.
வாழ்க்கை பெரும் போராட்டத்திற்குள் சிக்கிக் கொண்டது. விக்ரம் இன்னும் ஒரு படி மேலே போய், அவள் வேலை செய்யும் இடத்திற்கு வந்து தன்னை ரிதன்யாவின் கணவன் என்று அறிமுகப்படுத்தி அவளின் சம்பளப் பணத்தின் பாதியை வாங்கி செலவு செய்தான்.
வேண்டாத தெண்டச் செலவுகள் அனைத்தையும் செய்து பில்லை அவள் தலையில் கட்டினான்.
உடல் கொதித்து, காய்ச்சலிலும் மாதந்தோறும் உண்டாகும் உதரப் போக்கு அளவுக்கு அதிகமாக வந்தாலும், மருத்துவ மனைக்குச் சென்று வைத்தியம் பார்ப்பதைத் தவிர்த்து, மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கி விழுங்கிக் கொண்டு, சுருண்டு அவள் படுக்க, இவன் குண்டூசி குத்தினால் கூட ப்லெட் ரெஸ்ட், யூரின் டெஸ்ட், ஸ்கேன், எக்ஸ்ரே என்று அவளின் சுமையைக் கூட்டிக் கொண்டே சென்றான்.
மிகுந்த மன உளைச்சலுக்கு மத்தியில் வாழ்க்கை நகர்ந்தது.
ஏதோ ஒரு விபத்தில் ரிதன்யா சிக்கிக் கொள்ள, காலில் பலத்த அடி. அரசு மருத்துவமனையில் கட்டுடன் படுத்திருந்தவளைப் புகைப்படம் எடுத்து, “எம்பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை. ஆப்பரேஷன் பண்ண லட்சக்கணக்குல கேக்குறாங்க. எங்கிட்ட காசில்லை.” என்று அழுதபடி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போட்டு காசு வாங்கி நண்பர்களுடன் கொடைக்கானல் என்று குடித்து குதுகளித்துள்ளான்.
உதவி செய்தவர்கள் சும்மாவா இருப்பர்?. வந்து தகராறு செய்ய, அவர்கள் அனைவரின் பார்வையிலும் கூசிப் போய் நின்றாள்.
பல்லைக் கடித்துக் கொண்டு பெயருக்கு அவனைக் கணவன் என்று காட்டி, காலத்தை ஓட்ட நினைக்க, அதற்கும் முற்றுப் புள்ளி வைக்கும் நாள் வந்தது.
“ரிது… பாப்பா ஸ்கூல்ல இருந்து இன்னும் வரல.” என்றார் முத்துலெட்சுமி பயத்துடன்.
“என்னம்மா சொல்ற? இன்னேரம் ஸ்கூல் முடிஞ்சிருக்கும். ஸ்கூல் போய் பாத்தீங்களா?”
“அங்க இருந்து தான் உனக்கு கூப்பிடுறேன். வீட்டுக்கு வரலன்னதும் ஓடியாந்தேன். ஆனா ஸ்கூல்ல யாருமில்ல.” என்க, மாரிச் செல்வத்திற்கு அழைத்தாள்.
அடுத்த சில நிமிடங்களிலேயே சிறுமி காணாமல் போனது ஊரெங்கும் பரவியது. விடாது காவல் துறையும் தேட, நள்ளிரவு ஒரு மணி போல் ஊருக்கு வெளியே ஏதோ ஓரிடத்தில் அழுதது போல் நின்றிருக்கிறாள் சிறுமி.
அது இரவு நேர ரோந்து பணியில் இருந்தவர்களின் கண்ணில் சிக்க, சிறுமி பத்திரமாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
மழையில் நனைந்ந கோழிக் குஞ்சாய்த் தேகம் நடுங்கியபடி, காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த தோற்றம் தாயின் நெஞ்சைக் கீறியது.
பெற்ற மனம், பிள்ளையின் நலத்தை அறிந்து, எவ்வித சீண்டலும் இல்லாது கிடைத்ததில் ஆசுவாசம் அடைந்தது.
அந்தப் பாதிப்பில் இருந்து அவளை மீட்கவே ரிதன்யாவிற்கு பல நாள் பிடித்தது.
இதற்கு யார் காரணமோ அவனைத் தன் கைகளால் கொன்று விடும் ஆவேசம் எழ, காரணகர்த்தா விக்ரம் என்பது தெரியவந்தது.
நண்பர்களுடன் சேர்ந்து பைனான்ஸ் பிஸ்னஸ் ஆரம்பித்து, பலரிடம் பணமோசடி செய்துள்ளான். அவனிடம் பணத்தை இழந்தவர்கள் நெருக்கடி தந்துள்ளனர்.
“உம் மாமனார்ட்ட கேக்கலாம்டா.” என்று நண்பர்கள் சொல்ல,
“அந்தாளு காசுன்னா காத தூரத்துக்கு ஓடுவான். ஆனா அவன்ட்ட நமக்கு வேண்டிய காசு இருக்கும்.” என்றவன், ரிதன்யாவிடம் பணத்தை மிரட்டி வாங்க சரிகாவைக் கடத்திச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
அது படி பள்ளியில் இருந்து மகளை காரில் அழைத்துச் சென்றுள்ளான். சிறுமி அழுது ஆர்ப்பாட்டம் செய்வே மயக்க மருந்தைக் கொடுத்துள்ளனர்.
மாரி பல போலிஸ்ஸுடன் சேர்ந்து தீவிரமாகத் தேடுவது தெரிந்து, ஊருக்கு வெளியே இறக்கி விட்டுச் சென்றுள்ளான்.
மாரியின் மீது சிறு பயம் உண்டு. ரிதுவின் நகையை அடகு வைத்த போதே அவனை ஸ்டேசனுக்கு இழுத்து வந்து மிரட்டியிருந்தான்.
எப்பொழுதும் விக்ரமிற்கு ஆதரவாக பேசும் அண்ணாமலையார் கூட அவனின் பொறுப்பற்ற செயலில் அதிருப்தி அடைந்து அமைதி காக்க, அந்த அமைதியைப் பயன்படுத்தி ரிதன்யா அவனின் மீது வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாது, விவாகரத்தையும் வாங்கி விட்டாள்.
எந்தப் பெண்ணும் கணவனைப் பிரிந்து வாழ்வது என்ற முடிவை அத்தனை எளிதாக எடுப்பதில்லை. அதிலும் பல ஆண்டுகளாக வாழ்ந்து, ஒரு பெண் பிள்ளையை வைத்துக் கொண்டு, அதற்கு தகப்பன் என்று ஸ்தானத்தைப் பிடுங்கும் அளவுக்கு அரக்கிகள் என்று யாரும் இல்லை.
அன்பு என்பது கொடுப்பதிலும் ஆதரவாக இருப்பதிலும் உள்ளது. அவள் கொடுத்தாள் விக்ரமிற்கு. அதை உதாசினப்படுத்தி விட்டு அவளின் மனத்தைக் கொன்று புதைக்கும் குடிகாரக் கணவன்கள், விலைமாது விடம் சென்றுவரும் கணவன்களுடன் கூட இப்பொழுது பெண்கள் சகித்துக் கொண்டு தான் வாழ்கின்றனர்.
ஆனால் அதற்கும் எல்லை உண்டல்லவா!
தன் சகிப்புத் தன்மையின் எல்லையில் நின்று கொண்டு தான் விவாகரத்து என்ற முடிவுக்கே வருகின்றனர். மனம் உடல் என்று அனைத்திலும் இனி போராடும் சக்தி முற்றிலும் வடிந்து விட்டதால் தான், அனைத்தையும் உதறிவிட்டு மகளுடன் ஒடுங்கி, நிம்மதியாக வாழ நினைத்தது.
அந்த நிம்மதி அவளுக்கு கிடைத்ததா என்றால் இல்லை.
ஒவ்வொரு நாளும் அவளை விரட்டும். அடுத்த நாள் என்ன செய்யப் போகிறோம் என்று கவலையும், மகளின் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அவளை அட்டையென உறிஞ்சிக் கொண்டு தான் இருக்கிறது.
விஷ்ணுவிடம் பேசிய அன்று சுருதி வந்து நின்ற இடம் ரிதன்யாவின் இல்லம் தான். ஒன்றிரண்டு நாட்களில் அவளைச் சமாதானம் செய்து விஷ்ணுவின் வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்யும் போதும் சுருதி அவளின் வீட்டில் தான் தங்கினாள்.
எப்பொழுதும் ஒரு இரவுக்கு மேல் தங்காதவள், அந்தச் சமயத்தில் தான் வாரம் முழுவதும் இருந்தாள்.
நள்ளிரவில் பேய் போல் எழுந்து அமர்ந்து கொள்ளும் ரிதன்யாவை அன்று தான் கண்டாள். தூக்க மாத்திரையின் உதவி இல்லாது ரிதன்யா உறங்குவதே ஆபூர்வம். அப்படி உறங்கினாலும்,
அழ்ந்து உறங்குகையில் அவள் மனம் பட்ட வேதனையைத் தெளிவற்ற உலறலாக அவள் புலம்புவதைக் கேட்கையில் இதயம் நின்று விட்டது சுருதிக்கு.
ஒரு திருமணம் இத்தனை மன பாதிப்பைப் பெண்ணுக்கு கொடுக்குமா என்ன? தந்திருந்தால் யாரும் திருமணம் என்ற ஒன்றை யோசித்துக் கூட பார்க்க மாட்டார்களே.
கல்யாணம் என்பது சங்க காலத்து கலாச்சாரம் என்று புறம் தள்ளப் பட்டிருக்கும். அப்படி தள்ளப் படவில்லை என்றால் திருமணத்தில் பிழை இல்லை. அதைச் செய்து கொண்ட மனக்குறை கொண்ட தம்பதியரின் பிழை.
அந்தப் பிழையைச் சரி செய்யவே முடியாதா?
சரி செய்யாது தான் மட்டும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ முடியுமா?
முடியாது… கர்மா என்பது நாம் செய்யும் செயல்களுக்கான விளைவு மட்டுமல்ல, நம் மனத்தில் எழும் தீய எண்ணங்களின் பிரதிபலிப்பாகக் கூட நம்மிடமே வந்து சேரும்.
சென்ற முறை போல் அல்லாது, நல்லதை விதைத்து நல்லதைப் பெற நினைத்தான் சுருதி.
ரிதன்யா வாழ வேண்டும். சந்தோஷமாக, கணவன் குழந்தையோடு வாழ வேண்டும். எக்கவலையும் இல்லாத அவளின் சிரிப்பைப் பார்க்க வேண்டும். அவள் இல்வாழ்க்கைக்குள் நுழையாது. தன்னுடைய இல்லறமும் சுகமானதாய் இருக்காது என்ற முடிவுக்கு வந்தவள் ரிதன்யாவைக் கண்களால் தேடினாள்.
விழா நிறைவு பெற்றதால் வெகு சிலரே ஹாலில் இருந்தனர். கூட்டம் கூட்டமாக சொந்தங்கள் அமர்ந்திருக்க, பேத்தியை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார் முத்துலெட்சுமி.
ரிதன்யாவும் தன் தமக்கையின் அருகில் அமர்ந்து அவளின் மகளுடன் பேசிக் கொண்டிருக்க,
“தன்யா!” என்றழைத்தான் பத்ரி. அவள் தலை தூக்கியதும்,
“செட்டில் மெண்ட் பண்ணிட்டா! ஹால காலி பண்ணிடலாம்.” என்க,
“இதோ வர்றேன்.” என்று எழுந்து சென்றாள். செல்லும் முன் தனியாக அமர்ந்திருந்த சுதாவைப் பார்த்தாள்.
“என்ன ஆன்டி, தனியா உக்காந்திருக்கீங்க? அதிதி எங்க?”
“சுருதிய பாத்திட்டு வர்றேன்னு போனா. அது தான் உன்னப் பெத்தவங்களா?” என்று எட்டிப்பார்த்து கேட்க, ஆமாம் என்றவள், அவரைத் தன் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு பத்ரியிடம் விரைந்தாள்.
அரங்கத்திற்கு உண்டான பணத்தை ரிதன்யா எடுத்து வைக்க, பத்ரி போடப்பட்டிருந்த செட்டில்மெண்ட் பட்டியலைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான். அனைத்தும் சரியாக உள்ளதா என்று அவன் முகம் பார்த்து நின்றவள், அவன் சரி எனத் தலை அசைத்ததும் பணத்தை அவனிடம் நீட்டினாள்.
வரிசையாக அலங்கார வேலைக்கு, சமையலுக்கு என்று அத்தனை சிட்டைகளையும் அருகருகே நின்று இருவரும் கணக்குப் பார்த்து செட்டில் மெண்ட் செய்ய, சுருதியின் மனமும் கணக்கப் போட்டது.
இம்முறையும், ரிதன்யா வாழ்க்கையைத் திசை திருப்பும் மற்றொரு முடிவை அவளே எடுத்தாள்.
இதுவரை அவள் செய்தது நன்மையில் முடிந்ததா தீமையின் முடிந்ததா என்ற பட்டிமன்றத்தை விடுத்து, அவசியம் நல்லதே நடக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, தன்னை நோக்கு வந்த அதிதியுடன் பேசத் தொடங்கினாள்.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!