Skip to content
Post Views: 710
கடந்த சில வாரங்களாகவே வசீகரனை எங்கேயும் பார்க்க முடியவில்லை. எங்கே சென்றான்? இனி வருவானா? மாட்டானா? என்று எதுவுமே தெரியவில்லை. சரவணனிடம் சென்று விசாரிக்கவும் தயக்கமாக இருந்தது. இப்படியே ஒரு மாதம் கடந்துவிட, சரவணனை கேட்டே விடுவது என்று அவனை தேடினாள். அன்று அவனும் கல்லூரிக்கு வந்திருக்கவில்லை.
வேறு ஆசிரியர் வந்து பாடம் எடுக்க, எதிலேயும் மனம் லயிக்கவில்லை. ஒரு வாரம் கடந்த பிறகே சரவணன் கல்லூரிக்கு வந்திருந்தான். அவன் முகம் சோர்ந்து உடல் சற்றே மெலிந்திருப்பதை கண்டவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வகுப்பு முடிந்ததும் அவன் பின்னால் சென்றாள்.
Advertisement
“சார்”
Advertisement
திரும்பியவன் அவளை கண்டு, “என்னம்மா?”
Advertisement
“உங்கள பாத்தா முகம் சோர்வா இருக்கு, ஒரு வாரமா காலேஜ்க்கு வேற வரல, உடம்பு சரியில்லையா சார்?”
Advertisement
“உடம்பு சரியில்லதான், ஆனா எனக்கில்ல. அம்மாவுக்கு”
“ஐயோ, என்னாச்சு சார்?”
“அவங்க மேல இருந்த கோவத்துல நாங்க எல்லாம் கவனிக்காம விட்டுட்டோம். திடீர்னு நெஞ்சுவலினு சொன்னாங்க. ஆஸ்பிட்டல்ல சேர்த்ததுக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்கு, ஆஞ்சியோ பண்ணனும்னு சொல்லிட்டாங்க”
“ஆஞ்சியோ பண்ணிட்டீங்களா சார்? இப்போ எப்படி இருக்காங்க?”
“அதான் பிரச்சனை, டிரிட்மெண்ட்டே எடுத்துக்க மாட்டேங்கிறாங்க. இப்படியே விட்ருங்க, நான் செத்துபோறேன்னு ஒரு அழுகை, எங்க யாராலயும் கண்ட்ரோல் பண்ண முடியல”
“ஏன் சார் அப்படி பண்றாங்க?” என்றாள் அதிர்ச்சியுடன்
“அமைச்சரோட பொண்ணு நவ்யாவ வசி கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா தான் டிரிட்மெண்ட் பண்ண ஒத்துப்பாங்களாம். இல்லனா விட்ருங்கனு சொல்றாங்க”
“எதுக்கு சார் யோசிக்கறீங்க? அவங்க சொல்ற மாதிரியே செஞ்சிட வேண்டியது தானே”
“என்னம்மா நீ? வசி மனசு தெரிஞ்சுமா இப்படி பேசறே? அவன் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கான், பாவம்”
“அவங்க உசுரோட வேற எதுவும் முக்கியமில்ல சார். எப்படியாவது அவரை கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சு, மேடத்துக்கு ஆப்ரேஷன் பண்ணிடுங்க சார்”
“நிஜமா தான் சொல்றீயா வேண்டா? வசி வேற பொண்ணை கட்டிக்கிட்டா உனக்கு வருத்தமா இருக்காதா?” சரவணன் வியப்புடன் கேட்க
சின்னபொண்ணு தலையை குனிந்து கொண்டாள். கண்களில் ஊற்றெடுத்த கண்ணீரை அப்படியே உள்ளே இழுத்துக் கொண்டு சில விநாடிகளில் தன்னை சமன் செய்துக் கொண்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள்.
“நான் ஏன் வருத்தப்பட போறேன்? வசி சார் நவ்யா மேடமை கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு சந்தோசம் தான். அவர் நிறத்துக்கும் உசரத்துக்கும், படிப்புக்கும் அவங்க தான் பொருத்தமா இருப்பாங்க. நீங்க அவருக்கு நிலைமைய எடுத்து சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வையுங்க”
“சரிம்மா பேசி பாக்கறேன். வசி யாரை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நீ என்னோட ஸ்டுடென்ட்ங்கிறத மறந்துடாத. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம என்கிட்ட வந்து கேக்கணும். அன்னைக்கு அம்மாவுக்கும் வசிக்கும் நடந்த சண்டையில நீ எங்க சொந்தக்கார பொண்ணுங்கிற வரைக்கும் எனக்கு தெரிஞ்சது. அதனால சொந்தம்னு நினைச்சாலும் சரி, புரபசர்னு நினைச்சாலும் சரி, தயங்காம என்கிட்ட வந்து பேசு, புரியுதா?”
“புரியுது சார்” என்றவள் வகுப்பிற்கு செல்லாமல் ஹாஸ்டல் அறைக்கு சென்று தன்னுடைய கட்டிலில் விழுந்து கதறி அழத்தொடங்கினாள். அறையில் தங்கியிருந்த மாணவிகள் எல்லாம் வகுப்பிற்கு சென்றிருக்க, இவள் அழுவதை தேற்றுவதற்கு கூட அங்கே யாரும் இருக்கவில்லை. வசீகரனோடு சேர்ந்து வாழ முடியாது என்பதில் இப்போதும் உறுதியாக தான் இருக்கிறாள். ஆனால் அவனோடு வேறு ஒருத்தியை நினைத்து பார்க்கும் போது கண்களில் கண்ணீர் அல்ல, இரத்தமே வந்தது.
பிறந்த ஒரு வருடத்தில் கர்பிணியான அவள் தாய் தன் சிசுவோடு இறந்து விட்டதால் ராசிக் கெட்டவ, பொறந்து ஒரே வருஷத்துல ரெண்டு உசுர காவு வாங்கிடுச்சு என்று வயதுக்கு வந்திருந்த பெரிய அக்கா எப்போதும் திட்டுவது இப்போதும் காதில் ஒலித்தது. பிறந்த வீட்டில் வேண்டாத மகளாய் பிறந்து புகுந்த வீட்டிற்கும் வேண்டாத மருமகளாக போக வேண்டுமா?
இந்த வேண்டா யாருக்குமே வேண்டாதவளாயிற்றே, அவள் சின்னதாக குறிப்பு கொடுத்து விட்டால் போதும் வசீகரன் சொன்னது போலவே அவளை கடத்திக் கொண்டு சென்று விடுவான், ஆனால் அலமேலுவுக்கு எதாவது ஆகிவிட்டால்? அந்த பழியையும் சேர்த்தே அல்லவா சுமக்க வேண்டும்?
புத்தி நிதர்சனத்தை உரைத்ததால், சரவணனிடம் வசிக்கு திருமண ஏற்பாடு செய்ய சொல்லி விட்டாள். ஆனால் அவனை நினைத்து ஏங்கும் மனதிற்கு கடிவாளம் இட முடியுமா? அவனுக்கு திருமணம் என்றதும் ஏன் இவ்வளவு வலிக்கிறது? என்று தன்னையே நொந்துக் கொண்டு கண்ணீருடன் அன்று முழுவதும் அறையிலேயே படுத்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு பின்பு வந்த நாட்களில் வகுப்பிற்கு உயிர்ப்பே இல்லாமல் சென்று வந்துக் கொண்டிருந்தாள். வழக்கம் போல எதிர் கட்டிடத்தில் இருந்த வசீகரனின் வகுப்பில் அவன் வந்திருக்கிறானா என்று கண்கள் தேடும், அவனை காணாமல் நிராசையுடன் தலையை கவிழ்ந்து கொள்வாள்.
அவளின் இரண்டாம் வருடம் இறுதி தேர்வு நெருங்கிவிட்டதால் முயன்று படிப்பில் கவனம் செலுத்தினாள். ஆனால் தினமும் அவளின் பார்வை வசீகரனை தேடி தோல்வியுற்றதால் பரிட்சை முடிந்தபின் இன்ஜினியரிங் டிபார்ட்மென்ட் வளாகத்தில் நுழைந்து தன்னுடைய ஹாஸ்டலுக்கு சென்றாள். ஒவ்வொரு வகுப்பிலும் அவள் கண்கள் அவனை தேடுவதை ரியான் கவனித்திருந்தான்.
வசீகரனுக்கு போன் செய்து, “என்ன சார் நீங்க? என் தங்கச்சிய கண்கலங்க விட்டுட்டீங்க?”
“ஏன் என்னாச்சு ரியான்?” என்றான் பதட்டமாக
“பாவம் சின்னபுள்ள, தினம் இன்ஜினியரிங் டிபார்ட்மென்டை சுத்தி சுத்தி வருது. உங்களை காணாம தேடறாங்கனு நினைக்கிறேன்”
“என்னோட சப்ஜெக்ட்ட முடிச்சிட்டேன். எக்ஸாம் தானே போயிட்டு இருக்குனு காலேஜ்க்கு கொஞ்ச நாளா வரல. அத்தோட வேலை வீட்ல பிரஷர்னு இருந்துட்டேன், நாளைக்கு வந்துடுவேன்”
“நான் போய் தங்கச்சிக்கிட்ட சொல்லவா?”
“வேணாம், நீ போய் கேட்டா பிளேட்டையே மாத்திடுவா, நான் பாத்துக்கறேன்”
“ஓகே சார், நாளைக்கு தான் கடைசி பரிட்சை, உங்க மிஸ்ஸ மிஸ் பண்ணிடாதீங்க”
“என் மிஸ்ஸ மிஸஸ் ஆக்காம விடமாட்டேன், தேங்க்ஸ் ரியான்” என்று போனை வைத்தான்.
மறுநாள் இரண்டாம் வருடத்தின் கடைசி பரிட்சை முடிந்ததால் ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவிகள் எல்லாம் சொந்த ஊருக்கு கிளம்பினார்கள். உறவினர் வீட்டில் தங்கியிருந்த செல்வியும் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்திருந்தாள்.
“வேண்டா, இங்கேயிருந்தே ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்டி. நீ பத்திரமா ஹாஸ்டல்லயே இரு. லீவு முடிஞ்சதும் வந்துடறேன்”
“இரு செல்வி, நானும் பஸ் ஸ்டாப் வரைக்கும் உன் கூடவே வரேன்” என்று சின்னபொண்ணுவும் தோழியுடன் சென்றாள்
“செல்வி, அக்காங்க எல்லாம் எப்படி இருக்காங்கனு பாத்துட்டு காலேஜ் ஹாஸ்டலுக்கு போன் பண்றியா? அவங்க என்னய தேடிவந்துட கூடாதுனு தான் எங்கே போறேன்னு சொல்லிக்காம ஊர விட்டு வந்துட்டேன். ஆனா அவங்க இதுவரைக்கும் என்னை தேடின மாதிரியே தெரியலேயே செல்வி. அத நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குடி. வீட்டு பக்கத்துல இருந்த தெரு நாய் ரெண்டு நாளா இல்லனா கூட எங்கே போயிடுச்சுனு நாம பாப்போம். அதுமாதிரி கூட நான் எங்கேனு அவங்க யாரும் தேடல பாத்தியா? நான் தான் வேண்டாதவளாச்சே. ஆனா எனக்கு அவங்க எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு செல்வி. நானும் உன் கூடவே ஊருக்கு வரட்டுமா?”
“நான் போன வருஷம் லீவுல ஊருக்கு போயிட்டு வந்ததோடு சரி. அப்பவும் உன் அக்காங்க ஊரு பக்கம் போய் பாக்கல. அங்கே என்ன நிலவரம்னு தெரியாம நீ பாட்டுக்கு போய் மாட்டிக்காத. இந்த முறை நான் அவங்க ஊர்பக்கம் போய் பாக்கறேன். நிலவரம் தெரிஞ்சுட்டு உனக்கு போன் பண்றேன். அப்புறம் நீ ஊருக்கு வர்றத பத்தி யோசிக்கலாம், சரியா?”
“நீ சொன்னா சரியா தான் இருக்கும் செல்வி. நீ மட்டும் இல்லனா என் நிலமை என்னாகியிருக்கும்னு நினைச்சு கூட பாக்க முடியல. நீ சொல்லி தான் காலேஜ்க்கு அப்ளை பண்ணனேன். உன் பேச்சை கேட்டு, நீ என் கூட இருக்கற தைரியத்துல தான் சென்னைக்கு கிளம்பி வந்தேன்.
யாரோட உதவியும் இல்லாம உன்னால மட்டும் தான் நான் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி இவ்ளோ பெரிய காலேஜ்க்கு வந்தேன். ஸ்காலர்ஷிப்பும் கிடைச்சது. நீமட்டும் என்னை வழிநடத்தலனா நான் இந்நேரம் என் அக்காவீட்ல படிக்காம பாத்திரம் கழுவிட்டு இருந்திருப்பேன், ரெண்டு பேரும் சேர்ந்து சொந்தக்காரன்னு சொல்லி குடிகாரனுக்கு கட்டி வச்சிருப்பாங்க. உன் உதவிய என் உசுரு இருக்கற வரைக்கும் மறக்க மாட்டேன் செல்வி”
“அட என்னடி நீ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு கிடக்க, எனக்கு மட்டும் சென்னையில எந்த காலேஜ் எங்கே இருக்கு? யார் ஸ்காலர்ஷிப் கொடுக்கறாங்கனு தெரியுமா என்ன? உங்க மாமா தான் எனக்கே சொன்னாரு, நானே உன் தயவால தான் சென்னை வரைக்கும் வந்து படிக்கறேன். உன் மாமா உன்கிட்ட சொல்ல சொன்னத நான் அப்படியே சொன்னேன், இதுக்கு போய் பாராட்டி தள்ளுறீயே”
“என்னடி சொல்றே? எந்த மாமாவ பத்தி பேசறே? காவேரி அக்கா வீட்டுக்காரரா இல்ல ஜமுனா அக்கா வீட்டுக்காரரா? அவங்க என்கிட்ட இதெல்லாம் சொல்லாம உன்கிட்ட ஏன் சொன்னாங்க? நீயேன் இதப்பத்தி என்கிட்ட இத்தன நாளே ஒரு வார்த்தை கூட சொல்லல?”
“அப்போ உனக்கு விஷயமே தெரியாதா? என்கிட்ட பேசும் போது நீ சொல்ல வேணாம், நானே சொல்லிக்கிறேன்னு சொன்னாரு. சொல்லியிருப்பார்னு தானே நினைச்சேன். இன்னுமா உன்கிட்ட எதுவும் சொல்லல?”
“என்னடி சொல்றே? யாரப்பத்தி பேசறேனு எனக்கெதுவும் புரியல?” என்று சின்னபொண்ணு குழப்பத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த நிறுத்தத்தில் பேருந்து வந்து நின்றது. கல்லூரி மாணவர்களுக்காக சில விநாடிகளே அங்கே பேருந்து நிற்கும் என்பதால் செல்வி பேருந்தின் அருகில் ஓடினாள்.
அதே நேரம் வசீகரன் தன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குள் நுழையப்போனவன் அங்கே பேருந்தில் ஏறும் செல்வியையும் கீழே நின்றிருக்கும் சின்னபொண்ணுவையும் பார்த்துவிட்டு வண்டியை திருப்பி அவர்களை நோக்கி வந்தான்.
“உன் மாமாவே வர்றாரு பாரு, ஏன் சொல்லலனு அவர்கிட்டயே கேளு, நான் ஊருக்கு போனதும் போன் பண்றேன்” என்று படியேறி உள்ளே சென்றாள். பேருந்தும் கிளம்பிவிட செல்வி யாரை சொல்கிறாள் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் சின்னபொண்ணு.
பேருந்து கிளம்பியதும் எதிரே இருந்த சாலையை கடக்கலாம் என்று காத்திருந்தவனை அப்போது தான் கவனித்தாள். காவேரியின் மச்சினன் ரமேஷ் நின்றுக் கொண்டிருந்தான்.
செல்வி இவனை தான் மாமா என்று சொன்னாளா? இவனா நான் படிக்கறதுக்கு உதவி பண்ணியிருப்பான்? என்று யோசித்தவள், செல்வி வேறு யாரையும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பதால் அவன் தான் அவள் குறிப்பிட்ட மாமா என்ற முடிவுக்கும் வந்து “மாமா” என்று சத்தமாக அழைத்தாள்.
திரும்பி பார்த்தவன் அவளை கண்டதும் அவளருகே ஓடி வந்தான். பகலிலேயே குடித்திருப்பான் போலும், வயிற்றை பிரட்டும் துர்நாற்றம், கண்கள் நன்கு சிவந்திருந்தது.
“வேண்டா? நீ இங்கே என்ன பண்றே? ஊருவிட்டு எவன் கூடவோ ஓடிப்போயிட்டதா சொன்னாங்களே, இப்போ எப்படியிருக்கே? கழுத்துல தாலிய காணோம், கால்ல மெட்டிய காணோம், என்னாச்சு? எல்லாம் அனுபவிச்சுட்டு தொறத்தி விட்டுட்டுட்டானா? கவலப்படாத வேண்டா. நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கறேன். இங்கேயே ரூம் போட்டு மூணு நாள் தங்கிட்டு பொறவு ஊருக்கு போவோம், என்ன சொல்றே?” என்று அவன் பல்லை இளிக்க, அவளுக்க குமட்டிக் கொண்டு வந்தது. அதை கண்டவன் “வவுத்துல புள்ளய வேற கொடுத்துட்டானா?” என்றபடி அவள் வயிற்றில் கைவைக்க முயன்றான். அதற்குள் மின்னல் வேகத்துடன் வந்த வசீகரனின் இருசக்கர வாகனம் அவன் இருகால்களுக்கிடையே நின்றிருந்தது.
அவன் பதறி விலகி நிற்க, “சின்னு யார் இவன்?” என்றான் வசீகரன் ஆத்திரத்தோடு
“இவர் என் மாமா”
“இவன்லாம் உனக்கு மாமா, அப்ப நான் யாருடி?” என்று சீறினான்.
பதில் சொல்லாமல் அவள் தலையை குனிந்துக் கொள்ள,
“சொல்லு சின்னு நான் யாரு?” பற்களை நறநறத்தான்.
“யோவ் நீயாருனு தெரியலனா டாக்டராண்ட போ. எதுக்கு அவளாண்ட கேட்டுட்டு கிடக்க? அவ என்ன டாக்டரா? போய்யா அங்கிட்டு” என்று ரமேஷ் தள்ளாடிக் கொண்டே பேசினான்.
“இந்த குடிகாரன்கிட்ட நின்னு பேசிட்டு இருக்க போறீயா? இல்ல என்கூட வர்றீயா?” என்று வண்டியை முறுக்கினான்
“வேண்டா யார் இவன்? உன்னைய இந்த மிரட்டு மிரட்றான்? இவன் தான் உன்னை கழட்டி விட்டவனா? நீ பயப்படாத, என்கூட வா” என்று ரமேஷ் அவன் கையை பிடிக்க வர, வசீகரன் உக்கிரத்துடன் வண்டியை முறுக்கி பின்சீட்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.
‘வண்டியில ஏறப்போறீயா? இல்லையா?’ என்ற கேள்வி அவன் பார்வையில் அனலாய் தெறிக்க, ரமேஷ் ஒருபுறம் அவளை நெருங்க முயற்சிக்க வேறு வழியின்றி வசீகரனின் வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
அடுத்த கணம் ரமேஷ் அவளின் கரத்தை பற்றி இழுக்க முயற்சிக்க வசீகரன் அவனை ஒற்றைக் காலால் உதைத்துவிட்டு அதே வேகத்தில் வண்டியை உதைத்து புழுதி கிளம்ப வண்டியை திருப்பியிருந்தான்.
இருசக்கர வாகனத்தில் இதுவரை யார் பின்னாலும் அவள் அமர்ந்ததே இல்லை. இதில் அவன் வந்த வாகனத்தின் பின்சீட்டு மிகவும் உயரமாக வேறு இருக்க, விழுந்து விடப்போகிறோம் என்ற பதட்டத்தில் அவனின் இடுப்பைச்சுற்றி கட்டிக் கொண்டு முதுகில் ஒட்டிக் கொண்டாள்.
“சின்னு விழுந்துட போறே, இன்னும் டைட்டா புடிச்சுக்கோ” என்று அந்த நேரத்திலும் அவன் தன் சீண்டலை மறக்காமல் செய்ய, அது புரியாதவளோ, அவன் சொன்னதை மறுக்காமல் செய்திருந்தாள்.
வண்டி கல்லூரிக்குள் நுழையாமல் வெகுநேரம் வாசலிலியே நிற்கவும் தலையை சாய்த்து அவனை கேள்வியாக பார்த்தாள்.
“இப்படியே கடத்திட்டு போகணும்னு ஆசை தான். காலேஜ்க்குள்ள இந்த மாதிரி போக முடியாதே” என்றான் பெருமூச்சுடன்
அவனை சுற்றி கோர்த்திருந்த கரத்தை விலக்கி கொண்டு, கீழே இறங்கினாள்.
“பஸ் ஸ்டாப்புல இருந்தானே யார் அவன்?” என்றான் புருவம் உயர்த்தி
“என் அக்கா காவேரியோட மச்சினன், பேரு ரமேஷ்”
“அவன்லாம் உனக்கு மாமா. நான் யாருனு கேட்டா வாயே தொறக்க மாட்டே, அப்படித்தானே?” என்றான் குற்றம் சாட்டும் குரலில்
மெளனமாக தலை கவிழ்ந்துக் கொண்டாள்.
“அது சரி, காலேஜ் பூரா என்னை தேடிட்டு இருந்தியாமே எதுக்கு?”
“இல்லையே? யார் சொன்னது?” என்றாள் திணறலாக
அவளின் விழிகளை கூர்ந்து பார்த்தவன், “ம் சரவணன்கிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னியாமே? அவ்ளோ பெரிய பொண்ணாயிட்டியா?”
“ஆமா, உங்கம்மா உசுரு உங்களுக்கு முக்கியமில்லையா? அவங்க சொல்றத கேளுங்க”
“உனக்கு நான் வேணாமா சின்னு?”
“வேணாம்”
“உன் மனசாட்சி தொட்டு சொல்லு? நான் வேற ஒருத்திய கட்டிக்கிட்டா உனக்கு சம்மதமா?”
உள்ளுக்குள் இதயம் நொறுங்கி கொண்டிருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் “எனக்கு முழு சம்மதம். நான் தான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேனே, நமக்குள்ள எதுவும் எப்பவும் சரிவராது. உங்க அம்மா சொல்ற பொண்ணை கட்டிக்கோங்க. நீங்களும் நல்லா இருப்பீங்க, அவங்களும் நிம்மதியா இருப்பாங்க”
“இத முழுமனசோட தான் சொல்றீயா?”
“ஆமா”
“அப்போ நிருபிச்சு காட்டு”
“எப்படி நிருபிக்கறது?”
“என் கல்யாணத்துக்கு வந்து முன்னாடி நின்னு எல்லா வேலையும் பாத்துக்கோ. அப்ப நீ முழுமனசோட தான் சொல்றேனு ஒத்துக்கறேன்”
‘கொடுரா’ என்று மனதில் நினைத்தாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, “அதுக்கென்ன? கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து எல்லா வேலையும் செய்யறேன்”
“சரி இந்தா புடவை” என்று டேங்க் கவரில் இருந்த புடவை கவரை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“எனக்கெதுக்கு புடவை தர்றீங்க? எனக்கு வேணாம்”
“கல்யாணத்துக்கு எப்படி வருவ? பழைய துணிய போட்டுக்கிட்டா வருவ? எப்படியும் நீ எங்க சொந்தக்கார பொண்ணு வேற, வெறுங்கையோட கல்யாணத்துக்கு அழைக்க முடியுமா? அதான் புடவை கொடுத்து அழைக்கறேன். இத கட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு மொத நாளே வந்துடு. கல்யாண பொண்ணை நீதான் அழைச்சிட்டு வரணும்”
“வீட்ல அம்மாகிட்ட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்களா? தயாரா புடவையோட வந்திருக்கீங்க?”
“வேற வழி? நீயும் சரிவராதுனு சொல்லி ஒதுங்கி போறே, எங்கம்மாவும் உடம்பு சரியில்லாதத காரணம் காட்டி என்னை பிளாக் மெயில் பண்றாங்க. என் அப்பாவும் ரஞ்சனியும் ஒருபக்கம் அம்மாவோட உயிரே உன் கையில தான் இருக்கு, எப்படியாவது அவங்கள காப்பாத்திடுனு சென்டிமென்ட்டா பேசறாங்க. எனக்கும் வேற வழி தெரியல, கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். முதல்ல உன்கிட்ட விஷயத்தை சொல்லிடணும்னு தேடி வந்தேன். சொல்லிட்டேன். மறக்காம கல்யாணத்துக்கு வந்துடு. நான் கல்யாண வேலைல கொஞ்சம் பிசியாயிடுவேன், சரவணன்கிட்ட பத்திரிக்கை கொடுத்தனுப்பறேன்”
சின்னபொண்ணுவின் முகம் வாடிபோய் விட்டதை கவனித்தவன், “உனக்கு இதுல வருத்தம் இருந்தா இப்போ கூட என்கிட்ட சொல்லலாம்” என்றான்
“எனக்கு எந்த வருத்தமும் இல்ல. கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து எல்லா வேலையும் செய்யறேன்” என்றவள் அவன் கையிலிருந்த புடவையை வாங்கிக் கொண்டு கல்லூரி வளாகத்தில் இருந்த ஹாஸ்டலை நோக்கி சென்றாள். வசீகரன் அவள் கண்களை விட்டு மறையும் வரை அதே இடத்தில் நின்றிருந்தான்.
(தொடரும்)
error: Content is protected !!
Vasi yedho plan pannitaan pola