Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்று சொன்னது காதலானது

காற்று சொன்னது… காதலானது… – 6

அத்தியாயம் – 6 : 

அடுத்த நாள் எதுவுமே நடக்காதது போல், நல்ல பிள்ளையாக தாயிடம் சென்று, “நான் அந்தப் பையனுக்கு ஃபோன் பண்ணிப் பேசிட்டேன். எனக்கு ஓகே தான் மா” என்றாள் மித்ரா. 

எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல், மகள் வந்து சரியெனவும், மாப்பிள்ளையின் பெற்றோருக்கு அழைத்து இவர்களின் சம்மதத்தைத் தெரிவித்தார் லக்ஷ்மி. 



Advertisement

தெய்வானை அரவிந்திடம் கேட்க, அவனும் மித்ராவைச் சந்தித்துப் பேசியதை எல்லாம் சொல்லாமல், “அந்தப் பொண்ணு வீட்ல இருந்து பேசுனாங்க. எனக்கு ஓகே தான்” என்றான். 

அடுத்த வாரத்திலேயே, ஒரு நல்ல நாளாகப் பார்த்து, அரவிந்தின் மொத்தக் குடும்பமும் பெண் பார்க்கவென சென்னையிலிருந்த மித்ராவின் வீட்டிற்கு வந்தார்கள். 

பட்டுடுத்தி நேர்த்தியான அலங்காரத்தில் வெகு அழகியாகக் காட்சியளித்தவளை அப்பட்டமாக அனைவருக்கும் தெரியும்படி பார்க்காமல் இருக்க வெகுவாகச் சிரமப்பட்டான் அரவிந்த். 

Advertisement

பெண்ணிடம் தனியே பேசினார் தெய்வானை. அவருக்குப் பிடித்தது என்பதை விட, மகனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்திருக்கிறது என்று அவன் கண்களே சொன்னது. 

Advertisement

தனக்கு வேண்டியதை ஆர்ப்பாட்டமின்றி எப்படியாவது சாதித்துக்கொள்ளும் அரவிந்தின் குணத்தைப் பற்றி அவன் தாய் அறியாததா? 

மகிழ்வுடனே மித்ரா தான் மருமகள் என்று ஏற்றுக்கொண்டார். 

அரவிந்தின் அண்ணிமார்கள், “பீ.ஜி முடிச்சிட்டு என்ன பண்றதா ஐடியா?” என்று கேட்க, “நான் யூ.ஜி பண்ண காலேஜ்ல ஒரு சப்ஜெக்ட் எடுக்க கெஸ்ட் லெக்ச்சரரா கூப்டிருக்காங்க. அது பார்ட் டைமா பண்ற ஐடியா இருக்கு. அப்புறம், நான் முன்னாடியே வேலை செஞ்ச அட்வர்டெய்ஸ்மென்ட் கம்பெனில சீனியர் ஸ்டைலிஸ்ட் வேலைக்கு ஆஃபர் இருக்கு. அது பத்தி யோசிக்கணும்” என்றாள். 

Advertisement

“உன் வேலை எக்ஸாக்ட்டா என்னது?” என்று கேட்டவர்களுக்கு, “அது. அந்த கம்பெனில இருந்து ஒரு விளம்பரப் படம் எடுக்கறாங்கன்னா, அந்த ப்ராடக்ட் பொறுத்து, அப்புறம் ஷூட் லொக்கேஷன் பொருத்து, அதுல நடிக்கறவங்க என்ன காஸ்ட்யூம் போட்டா நல்லா இருக்கும், அந்த காஸ்ட்யூமை எப்டி ஸ்டைல் பண்ணா நல்லா இருக்கும், என்ன ஆக்சஸ்ஸரீஸ் போட்டா சரியா இருக்கும்ன்னு அவங்க லுக்க முடிவுப் பண்ணனும். 

ஃபேஷன் டிஸைனர்ஸ், ஜுவெல்லரி டிஸைனர்ஸ், அக்ஸஸரி டிஸைனர்ஸ், ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்-அப் ஆர்டிஸ்ட் எல்லார் கூடவும் சேர்ந்து ஒரு லுக்-கை கோ-ஆர்டினேட் பண்ண வேண்டியிருக்கும்” என்று தன்னுடைய ஸ்டைலிஸ்ட் வேலையைப் பற்றி விளக்கினாள் மித்ரா. 

“நைட் ஷிஃப்ட் எல்லாம் இருக்குமா?” என்று அரவிந்தின் பெரியம்மா அகிலா கேட்க, “நைட் ஷிஃப்ட்ன்னு இல்ல. ஆனா, சில நேரம் இன்னைக்கே வேலை முடிக்கணும்ன்னு கட்டாயம் இருந்தா, அப்போ ஆஃபிஸ்ல இருந்து முடிக்கற மாதிரி இருக்கும்” என்று சொல்ல, “இதெல்லாம் நம்ப குடும்பத்துக்கு சரி வருமா?” என்றார் சபையில் பொதுவாக. 

திருவரசனின் மருமகள்கள் இருவரும் திருமணப் பேச்சுத் தொடங்கியதும் வேலையை விட்டிருந்தனர். பெரிய மகன் விக்னேஷிற்கு ப்ரீ-ஸ்கூல் செல்லும் வயதில் மகன் ஒருவன் இருக்க,இளையவன்  விஷ்ணுவிற்கு நான்கு மாதங்களுக்கு முன் தான் மகள் பிறந்திருந்தாள். மருமகள்களுக்குக் குழந்தைகளுடனே நேரம் கழிய, இப்போதைக்கு அவர்கள் வேலைப் பற்றி யோசிக்கவும் இல்லை, அதைப் பற்றியப் பேச்சும் வீட்டில் இல்லை. வேலைக்குச் சென்றே ஆகவேண்டுமென்றால், கணவர்களுக்குத் தொழிலில் உதவத்தான் சொல்வார்கள் என்று அவர்களுக்கே தெரியும்.

கலையரசனின் முதல் மகனுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது. வீட்டில் பொழுது போகாத நேரம், கணவன் கண்ணனுடன் ஷோரூம்க்கு போய் வருவது, கணக்கு வழக்குப் பார்ப்பது என்று அவனுக்கு ஏதேனும் உதவி செய்வாள்.

முதல் மூன்று மருமகள்கள் மூவரும் இப்படியிருக்க, இந்தப் பெண் ஏதோ ‘ஸ்டைலிஸ்ட்’, ‘விளம்பரத்துறையில் வேலை’ என்றெல்லாம் சொல்லவும், பெரியவர்கள் அனைவருமே யோசித்தார்கள் தான். ஆனால், தெய்வானைக்கு மகனுக்குப் பிடித்தால், இருவருக்குள்ளும் ஒற்றுப்போனால் போதும் என்று தான் இருந்தது.

தமிழரசனுக்கு ‘இப்படித் தான் வேண்டும்’ என்றெல்லாம் எந்த எண்ணமும் இல்லாததால், மற்றவர்கள் சொல்வதைக் கேட்போம் என்று தான் அமர்ந்திருந்தார்.

அகிலா, “இந்த வேலைச் சரிப்பட்டு வராது” என்று சொல்லவும், அதை மறுத்தும் யாரும் பேசாமலிருக்க, மித்ரா அரவிந்தைப் பார்த்தாள்.

அரவிந்த் இவளைத் திரும்பிப் பார்க்கவில்லை தான். ஆனால், இவள் பார்வையை உணர்ந்தவன், “ஏன் பெரியம்மா சரி வராது?” என்றான் அகிலாவிடம்.

“ஏன்னா… நம்ப வீட்டுக்கு வந்த பொண்ணுங்க எல்லாம், இப்டி தான் வேலைப் பார்த்துட்டு இருக்காங்களா? அதுவும் வேலை முடிச்சி தான் ஆகணும்ன்னா, நைட்ன்னு கூட பார்க்காம இருக்கணும்ன்னு சொல்லுது இந்தப் பொண்ணு…” என்றார் அகிலா.

லக்ஷ்மிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் தங்கள் வீட்டிலேயே அமர்ந்து மகளின் வேலையைப் பற்றி இவர்கள் வாக்குவாதம் செய்துக்கொண்டிருப்பது மனவருத்தத்தை உண்டாக்கியது.

நல்ல வரன் தான். இந்த வரன் முடியவேண்டும் என்று இருவரும் வேண்டிக்கொண்டார்கள் தான். ஆனால், அகிலா பேசுவதைப் பார்த்தால், மகளை வேலைக்குச் செல்லக்கூடாது என்று கூறுவார்கள் போன்று தான் தோன்றியது.

அப்படிச் சொன்னால், மித்ராவே இந்த வரனை மறுத்துவிடுவாள் என்று இவர்களுக்கே தெரியும்.

அகிலா ‘சரிப்பட்டு வராது’ என்று சொன்ன உடனேயே, மித்ராவின் துடுக்குப் பேச்சிற்கு, அப்போதே ஏதேனும் பேசிவிடுவாள் என்று தான் நினைத்தனர் அவளின் பெற்றோர்.

ஆனால், அவள் அமைதியாக அரவிந்தைப் பார்த்ததே அவர்களுக்கு ஆச்சரியம் தான். அரவிந்தை மித்ராவுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது போலும் என்று நினைத்துக்கொண்டனர்.

முடிவை நிச்சயம் அவர்கள் விடப்போவது மித்ராவின் கையில் தான். ஆனால், ஒருவேளை மாப்பிள்ளை வீட்டில் வேலையை விடச் சொல்லி, அதனால் இந்த வரன் வேண்டாம் என்று மித்ரா முடிவு செய்தால், நிச்சயம் அவளைச் சம்மதிக்க வைக்க தான் முயற்சிக்கப் போவதில்லை என்று மனதில் நினைத்துக்கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. மகளுக்கு இந்தப் படிப்பில், வேலையில் எத்தனை விருப்பம், ஈடுபாடு என்று தெரிந்தவராயிற்றே அவர்.

“பெரியம்மா. அண்ணாங்க எல்லாம் நம்ப ஷோரூம்ஸ் எல்லாம் பார்த்துக்கணும். அதனால ஊர்லையே இருக்க வேண்டிய கட்டாயம். அதனால அண்ணிங்க வெளியூருக்கு வேலைப் பார்க்கப் போக முடியாது. உள்ளூர்ல எங்கயும் வேலைப் பார்த்தா, ‘நம்ப வீட்ல இருந்து போய் வேற யார் கிட்டயும் வேலைப் பார்க்குறதா!’ன்னு கேட்பீங்க. ஆனா, நானே வெளியூர்ல தான வேலைப் பார்க்கறேன். அதே மாதிரி அவளும் பார்க்கப் போறா. டைமிங் பிரச்சனை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க பாத்துக்கறோம்” என்று அரவிந்த் சொல்லவும், முதல் சந்திப்பிலேயே அரவிந்த் மீது நல்லெண்ணம் உண்டானது மித்ராவின் பெற்றோருக்கு.

“இது என்ன டா… சபைல வச்சு பெரியம்மா கிட்ட இப்டி பேச்சு. உனக்கு என்ன சொல்லணுமோ வீட்டுக்குப் போய் பேசிக்கோ” என்று திருவரசன் எகிற, “அதுக்கு அக்கா, இந்தப் பேச்சை வீட்டுக்குப் போய் எடுத்திருக்கணும்ல்ல மாமா. அது என்ன இப்டி சபைல வச்சு பொண்ணு வேலை சரி வராதுன்னு சொல்லிக்கிட்டு.” என்று தெய்வானை திருவரசனிடம் சொல்லிவிட்டு, “கட்டிக்கப் போறவனே நான் பாத்துக்கறேன்னு சொல்றான். நம்ப என்ன சொல்றது” என்றார் பொதுவாக.

அதற்கு மேல் யாரும் வாயைத் திறக்க முடியாமல் அமைதியாகினர்.

“பையனுக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்குங்கறான். அப்போ இதுக்கு மேல நடக்க வேண்டியதைப் பத்தி பேசலாமா?” என்று தொடங்கிய தமிழரசன், “பொண்ணுக்கு என்ன போடுவீங்க” என்பதில் வந்து நின்றார்.

மித்ராவின் வீட்டில், இத்தனை சவரன் நகை என்று ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சொல்லவும், அதில் திருப்திப்படாத தமிழரசன், இதற்கு முன் வந்த மருமகள்கள் எவ்வளவு கொண்டு வந்தார்கள் என்றக் கணக்கெல்லாம் சொல்லி, ஏதோ கௌரவம் என்றெல்லாம் பேச, அரைமனதாக என்றாலும் மித்ராவின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். நகையோடு சேர்த்து ஒரு சொகுசு மகிழுந்தும் கொடுப்பது என்று முடிவானது.

அதிகமெனத் தோன்றினாலும், நல்ல வரனை விட வேண்டாம் என்ற எண்ணத்தில், ஊரில் உள்ள நிலபுலன்கள் எதையேனும் விற்றுப் பணம் திரட்டும் எண்ணத்தில் சரியென ஒப்புக்கொண்டார்.

மித்ராவுக்கு இன்னும் ஆறு மாதப் படிப்பு மீதமிருந்தது. மித்ரா வீட்டில் படிப்பு முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, திருவரசனும் தமிழரசனும், அரவிந்தின் ஜாதகத்திற்கு இன்னும் நான்கு மாதங்களில் திருமணம் முடியவில்லையென்றால், அதன் பின் இரண்டாண்டுகள் தாமதமாகும் என்று ஜோசியர் சொன்னதாகவும், அதனால் நான்கு மாதங்களுக்குள் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கேட்டனர்.

“பொண்ணு படிக்குதே” என்று தயங்கிய மித்ராவின் பெற்றோரிடம், “பையன் தான் பெங்களூர்ல வேலைத் தேடிக்கறேன்னு சொல்றான். ரெண்டு பேரும் அங்கேயே ஒரு வீடு பார்த்து இருந்துக்கட்டும். மூணு மாசத்துக்குப் பொண்ணு அங்க இருந்தே காலேஜ் போய்ட்டு வரட்டும்” என்றார் தமிழரசன்.

கிருஷ்ணமூர்த்தி லக்ஷ்மி இருவரும், ‘அவள் முடிவு’ என்பது போல் மகளைப் பார்க்க, “நாலு மாசத்துக்குள்ளேயே கல்யாணத்தை வச்சிக்கலாம். எனக்கு ஓகே தான்” என்றாள் மித்ரா.

“அவ்ளோ அவசரம்” என்று தன்னைப் பார்த்து, சத்தமில்லாமல் வாயசைத்துச் சொன்ன அரவிந்தைப் பார்த்து, யாருக்கும் தெரியாமல், “போடா” என்றாள் மித்ரா.

அதன் பின் இரண்டு மாதங்கள் அவளுக்கு அலைபேசியில் மட்டுமே ‘போடா’ என்று சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அவள், ‘போடா போடா’ என்று சொன்னதற்கே, திருமணத்திற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே பெங்களூரில் வேலையோடு போய் நின்றான்.

அடக்கமாக அழகாக இருந்த 1BHK அபார்ட்மென்ட் ஒன்றை இருவரும் சேர்ந்தே தேடிப் பிடித்தனர். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மித்ரா, விடுமுறை நாட்களில் அரவிந்தைப் பார்க்கவென அவன் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்துப்போக இருந்தாள்.

திருமணத்திற்குப் பிறகு தான் வசிக்கப்போகும் இடம் தானே என்ற உரிமையில் சில விடுமுறை இரவுகளில் அங்கேயே தங்கிவிடவும் செய்தாள். 

அப்படி ஒரு இரவு இருவருமாக, அரவிந்தின் கட்டிலில் அமர்ந்துக்கொண்டு மடிக்கணினியில் நெட்ஃப்லிக்ஸில் புதிதாக வெளியான சீரீஸ் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

முதல் எபிசோட் பார்க்கும் போது இருவரும் தனித்தனியாகத் தான் அமர்ந்திருந்தனர். 

இரண்டாவது எபிசோட் பார்க்கும் போது அரவிந்தின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தாள் மித்ரா. 

மூன்றாவது எபிசோட் தொடங்கிய நேரம், அரவிந்தின் கை மித்ராவின் இடையில் இருந்தது. மித்ரா அரவிந்தோடு ஒட்டி அமர்ந்திருந்தாள். 

நான்காவது எபிசோடின் தொடக்கத்தில், மித்ரா கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து, அவளுக்குப் பக்கத்தில் மடிக்கணினியை வைத்திருந்தாள். அரவிந்த் அவளுக்கு அடுத்துப் படுத்துக்கொண்டு, அவள் தோளின் மீது தாடையை ஊன்றிவைத்துக்கொண்டு மடிக்கணினியைப் பார்த்தான் அரவிந்த். 

படுத்திருந்தவர்களின் நெருக்கம் கொஞ்ச கொஞ்சமாய் அதிகரிக்கவும், சற்று முன்பு வரை சீரீஸில் மூழ்கியிருந்தவர்கள், நேரம் ஆக ஆக, நெருக்கம் கூடக் கூட, ஒருவருக்குள் ஒருவர் மூழ்கத்தொடங்கினர். விடியும் வரை விரும்பியே மூழ்கிக்கிடந்தனர். 

இருவருக்கும் பிடித்து, நிதானமாக நடந்தது தான். ’ஒரு மாதத்தில் திருமணம் செய்துக்கொள்ளப் போகும் ஆண் தானே’ என்று அவளுக்கும், ‘நான் திருமணம் செய்துக்கொள்ளும் பெண் தானே’ என்று அவனுக்கும் எண்ணம். இவர்கள் செய்தது தவறு என்ற எண்ணமே இல்லாமல் தான் இருவருமே அதைக் கடந்தனர். 

அதுவும், கல்லூரியில் பல கேஷுவல் ரிலேஷன்ஷிப்களை, நிரந்தரமில்லா உறவு எனத் தெரிந்தும், ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் தம்பதிகள் எல்லைகள் கடப்பதையும் அன்றாடம் பார்த்து வரும் மித்ராவுக்கு இது தப்பில்லை என்று தான் தோன்றியது.

நடந்ததைப் பற்றி அதிகம் யோசிக்காமல், ‘ஏதோ உணர்ச்சி வேகத்துல பண்ணிட்டோம்’ என்று எளிதாக அந்நிகழ்வைக் கடந்து வந்துவிட்டதாகத் தான் இருவரும் நினைத்துக்கொண்டிருந்தனர். மித்ராவுக்கு நாட்கள் தள்ளிப்போகும் வரை.

நாட்கள் தள்ளிப்போகவும்‌ தான் விளைவுகளைப் பற்றி யோசிக்கத் தோன்றியது. 

கர்ப்பம் என உறுதியாகிவிட்டால், அது அவன் வீட்டில் தெரிந்தால் என்னாகும், அவள் வீட்டில் தெரிந்தால் என்னாகும், ஊருக்குத் தெரிந்தால் என்னாவது என்றெல்லாம் இப்போது தான் இருவரும் மாற்றி மாற்றி யோசித்து தங்கள் அவசரப் புத்தியை எண்ணி நொந்துக்கொண்டனர். 

மித்ரா வாய்விட்டுப் புலம்பினாள் என்றால், அரவிந்தால் அதைக் கூடச் செய்ய முடியவில்லை. 

அவன் கவலையை, வேதனையை எல்லாம் உள்ளேயே மறைத்துக் கொண்டு அவளைச் சமாதானம் செய்தான்.  

கர்ப்பமோ, இல்லையோ. ஒரு வாரத்தில் எப்படியும் திருமணம் நடந்துவிடுமே. அதன் பின் எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் தான் இருவரும் இயங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த தைரியத்தை அசைத்துப்பார்க்கும் நிகழ்வுகளும் பின்னாளில் நடக்கக்கூடும் என்று அவர்கள் நினைக்கவும் இல்லை. 

                              ** ** ** ** ** **

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!