Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தினையோடு தேனாய் – 14

அத்தியாயம் 14

 



Advertisement

இல்லம், மௌனத்தின் பிடியில் சிக்கி இருந்தது. தமிழின் வினாக்களிற்குச் சேரல் எந்தப் பதிலும் உரைக்கவில்லை.

Advertisement

Advertisement

அவனின் செயல் பாவையின் பொறுமையையும் உணர்வுகளையும் பெருமளவில் சோதித்து இருக்க, “ஜக்கையன்னு ஒருத்தரை இண்டிடியூஸ் பண்ணியே? அவருக்கு நீயி கொடுக்கிற மரியாதைக்கும், ஆச்சிக்கிட்ட பேசுறதுக்கும் எவ்வளவு வித்தியாசம் தெரியுமா.? கிளம்புறப்ப அவங்க பேசினதுக்கு, அவ்வளவு கேலியா பதில் சொல்லுற.‌ அதுனால எவ்வளவு ஹர்ட் ஆவாங்கனு புரியிதா இல்லையா உனக்கு.?” எனச் சொற்கள் சற்று கடுமையாகவே வந்து விழுந்தன.

மெலிதாய்ச் சிரித்தவன், “அவங்களை விட, நீயி ரொம்ப ஹர்ட் ஆகியிருக்கப் போலயே தமிழ்மா.?”

Advertisement

அவள் முறைக்க, “நானு நடந்துக்கிட்ட முறைக்கு, ஆச்சிக்கான மரியாதையைக் கொடுக்கலனு அர்த்தம் இல்ல. அவங்களுக்காகப் பேசுற நீயி, ஆச்சியோட ஒவ்வொரு வார்த்தையும், என்னையும் அக்காவையும் எந்தளவுக்குக் காயப் படுத்தி இருக்கும்னு யோசிக்கலேல.? பெத்தவங்க இருந்திருந்தா, சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாங்கனா.. என்ன அர்த்தம்.? நானு, தப்பா வளர்ந்து நிக்கிறேனா தமிழ்மா?

எனைய வளர்த்தது, மாமா தான? பத்துல இருந்து பதினேழு வயசுங்கிறது வளர்ற பசங்களுக்கு எவ்வளவு முக்கியமான பருவம்னு, நான் சொல்லித்தான் உனக்குத் தெரிணும்னு இல்ல. சின்னப் பொண்ணா இருக்கிற நீயி, அந்த டைம்ல தான் உடலாலயும் மனசாலயும் வளருற. அப்ப உனக்குக் கொடுக்கப்படுற சாப்பாடும் வாழ்க்கைமுறையும் புரிதலும் தான், அஸ்திவாரம். அதுதான், காலம் முழுக்க உனைய வழிநடத்தித் தாங்கிப் பிடிக்கிது.

இதே தான்,‌ எனக்கும். ஒருத்தர்கிட்ட இப்படித்தான் பழகணும், பேசணும், உன்னோட தேவைகளை இப்படித்தான் வெளிப்படுத்தணும்னு கத்துக் கொடுத்தாரு மாமா. அவர் சொல்லித் தந்த, எதையும் நானு மறக்கல. ஆனா ஒவ்வொருத்தருக்கும், ஒரு குணம் இருக்குல? அது, எனைய வேற மாதிரி காட்டி இருக்கலாம்!

‘படி, எதிர்காலம் நல்லா இருக்கும்’னு சொன்னாரு. நானு படிக்கல தானே தவிர, என்னோட எதிர்காலத்தை அப்படி‌ ஒண்ணும் கெடுத்துக்கலயே? படிக்கிறதுக்குப் பதிலா, உழைச்சேன்‌‌. இன்னைக்குச் சுத்தி இருக்கிற கிராமத்துல, எனைய தெரியாத ஆளே கிடையாது. என்னோட‌ முகம் தெரியலனாலும், பேரு தெரியும். கறிக்கடைக்காரன்னு தெரியும்.

அவ்வளவு கஷ்டத்துலயும் எனைய நல்லபடியா வளர்க்க போராடுன மாமாவைப் பார்த்துதான், எவ்வளவு உறுதியா ஒரு விசயத்தைச் செய்யணும்னு கத்துக்கிட்டேன். நான் சரியா வளரலனு சொல்லுறது, அவங்க மகனோட மரியாதையை, அவங்களே குறைச்சுக்கிறதுக்குச் சமம்.”

அவள் திகைப்புடன் நோக்க, “ஜக்கையன் மாமாவும், ஆச்சியும் ஒண்ணா தமிழ்மா? அவர் எனக்காகச் செஞ்சதை எல்லாம், மண்டபத்துல வச்சு சொன்னேன்ல? ஆச்சி என்ன செஞ்சாங்கனு, உனக்கே நல்லா தெரியும். அதுக்காக, அவங்களை நானு மதிக்காம நடந்துக்கிறேனு அர்த்தம் இல்ல. தேவையில்லாத பேச்சு வேணாம்னு தான், அமைதியா போயிட்டேன்.

உன்கிட்ட சொன்ன இதே பதிலை, அப்பவே ஆச்சிக்கிட்ட சொல்லி இருந்தா.. தாத்தாவும் அத்தையும் வருத்தப்பட மாட்டாங்களா.? நமக்கான மரியாதை கிடைக்காத இடத்துல, ஒரு செகண்ட் கூட நிக்கக்கூடாதுனு நினைக்கிறவன் நானு.

ஆச்சி இதுவரைக்கும், என்கிட்ட இயல்பா பேசினதா ஞாபகம் இல்ல. அப்புறம் எப்படி, நடந்துப்பேனு எதிர்பார்க்கிற நீயி‌‍? கிளம்புறப்ப, ‘இல்ல என்னால வரமுடியாது’னு மூஞ்சியில அடிச்ச மாதிரி என்னால சொல்லி இருக்க முடியும்.‌ அது, இன்னுமே அவங்களைக் காயப்படுத்தும்.

என்னோட உணர்வுகளையும் சூழலையும், அத்தையும் தாத்தாவும் புரிஞ்சிக்கிறாங்க.‌ அதுனால தான், என்னோட கேலிக்கு அவங்களால சிரிக்க முடியிது. நீயும் ஆச்சியும், புரிஞ்சிக்க நினைக்கல. அதான், உங்களுக்குக் கோபம் வருது.

ஆச்சியைப் பத்தி, எனக்குக் கவலை இல்ல. ஏன்னா அவங்களுக்கும் எனக்குமான உறவு, ரொம்பவே தூரமானது. ஆனா.. நீயி அப்படி இல்ல தமிழ்மா.‌ இனி, ஒவ்வொரு நாளும் உன்கூடத்தான் வாழப் போறேன். நம்மள்ல யாரோ ஒருத்தர் சாகுற வரைக்கும், ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கப் போறோம்.‌

அதுவரைக்கும் நிம்மதியா இருக்கணும்னா.‌. நீயி, எனைய புரிஞ்சிக்கணும்ல.? அதுனால தான், உனைய, ஆடுகளை அடைக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போனேன். புரிஞ்சுக்கலனாலும் பரவாயில்ல. நானு யாரு‌, செய்யிற வேலை என்னனு தெரிஞ்சிப்பனு நினைச்சேன்.

இப்ப சொல்லு.. அலட்சியமா, மரியாதை கொடுக்காம, மெச்சூர்டா இல்லாம, பத்து வயசு பையனா நடந்துக்கிறேனா.?”

நாராயணி பேசிய சொற்களின் ஆழம் எத்தகையது எனத் தற்போது புரிய, “ஸாரி.. நான் ஆச்சியைப் பத்தி மட்டும் தான் நினைச்சேனே தவிர, மத்ததை யோசிக்கல!”

“இனி யோசி தமிழ்மா.‌ அத்தை, ஆச்சி, தாத்தா, உன்னைப் பத்தி மட்டும் இல்ல..‌ எனக்கு, அக்கா, பெரியப்பா, மாமானு.. எல்லாருக்காகவும் சேர்த்து யோசி!”

‘சரி..’ என்பதாய்த் தலையசைத்து, “எனக்கு, உன்னைப் பத்தி தெரியல,‌ புரியலங்கிறது உண்மைதான். அதேபோல உனக்கும், என்னைப் பத்தி..”  என்றவளை இடை மறித்தவன், “நல்லா தெரியும், ஓரளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கேன். அதுனால தான், உன்னைக் கல்யாணம் பண்ணுற முடிவுக்கே வந்தேன். இல்லேனா, அத்தைக்கிட்ட இதைப்பத்தி பேசி இருக்கவே மாட்டேன்!”

அவள் முறைத்து, “உன்னோட விருப்பத்தையும் தேவையையும் தான் யோசிச்சிருக்க. என்னைப் பத்தி நினைச்சு பார்க்கல. நானு, அவ்வளவு ஈசியா போயிட்டேன் என்ன.?”

சட்டென்று சிரித்தவன், “உனக்கும்‌ என்னைப் பிடிக்கும்.‌ இது வீம்புக்குனு பேசுறது. ரொம்பக் கஷ்டம் தமிழ்மா, உன்னை எல்லாம் சமாளிக்கிறது. சரி ரொம்ப லேட்டாச்சு, நானு தூங்குறேன்! டீவி சௌண்டை மட்டும் கொஞ்சம் குறைச்சு வச்சுப் பாரு!” என்றுவிட்டு அறைக்குள் செல்ல, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, அவளும் சென்றாள்.

கண்களை மூடி ஒரு பக்கமாய்ப் படுத்திருந்தவனைப் பார்த்தவள், “தூங்கிட்டியா.?”

“தூங்கிடுவேன். நல்லா தூங்குனா தான், காலையில கடையில உட்கார முடியும்.‌ இல்லேனா தலை பாரமாகி, உடம்பு ரொம்ப வலிக்க ஆரம்பிச்சிடும்!” என்றவன் அடுத்த நான்காவது நிமிடம், உண்மையிலேயே உறங்கி இருந்தான்.

தமிழிற்குத் தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.‌

‘என்னமோ ஃபர்ஸ்ட் நைட்டுனு சொன்னான். அவ்வளவு ஆசையா கட்டிப் பிடிச்சிட்டு, எப்படி இவனால தூங்க முடியிது?’ என‌ ஒருமனம் சிந்திக்க, ‘இது அவனைப் பத்தி யோசிக்கிற மாதிரி தெரியலயே‌? உனக்கும் ஆசை இருக்கோ.?’ என்று மறுமனம் கேலி செய்தது.

‘ஆமா பெரிய மன்மதன், ஆசை அப்படியே கொப்பளிக்குது.’

‘இவ்வளவு தூரம் யோசிக்கிறவ, எதுக்குப் பேசி அவனோட ஈகோவ தூண்டி விட்ட.?’

‘அதுக்காகப் பேசாம இருக்க முடியுமா.?‌ காலையில இருந்து ஆளுங்களா இருந்தாங்க, பேச முடியல. இப்பதான் டைம் கிடைச்சிச்சு.’

‘பேசி, என்ன கிடைச்சிச்சு. கடைசியில, நீயிதான் ஸாரி சொல்ல வேண்டியதா போச்சு.’

‘ஒரு ஸாரி தான? அவன் சொன்னதும் உண்மைதான, கீதா அண்ணி பாவம்ல.?’

‘ஆச்சி, சொன்னது உண்மை ஆகிடுச்சுல.? அவனோட இழுப்புக்குத்தான் நீயி போற!‌ உன்னை நல்லா பிரைன் வாஸ் பண்ணுறான்.’

‘அய்யய்யோ! அந்த அளவுக்கா என்னோட பிரைன் வீக்கா இருக்கு!’

‘பின்ன? அவன் தூங்கிட்டான்னு, நீயி கவலைப் படுறியே.?’ என அவனிற்குச் எதிராய் ஒரு மனமும், சாதகமாய் இன்னொரு மனமும் வாதாடிட,

‘சரியாப் போச்சு! எதுக்கு இப்படி, லூசு மாதிரி புலம்பிக்கிட்டு இருக்க? பேசாம படு!’ என்று மூளை கொடுத்த எச்சரிக்கையில், “எல்லாம் இவனால தான். சரியான, திமிரு பிடிச்சவன்! என்னோட தூக்கத்தைக் கெடுத்திட்டு, இவன் மட்டும் நிம்மதியா குறட்டை விட்டுத் தூங்குறான்!” எனக் கணவனை மனதிற்குள் வறுத்துவிட்டுப் படுத்தாள் தமிழ்.

துயில் இமைசேர மறுத்தது. சேரலின் புறம் பார்வையைத் திருப்பினாள். காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் யாவும், காட்சிகளாய் மனக்கண்ணில் ஓடியது. நள்ளிரவில் இரண்டு மணிக்கு விழித்தவன், மதிய நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே கண் அயர்ந்து இருந்தான். சில நிமிடங்கள் கூட, நில்லாத ஓட்டம். குறையாத புன்னகை, நிதானமான பேச்சு, தெளிவான சிந்தனை, தளராத பார்வை.. அவள் அறிந்த பதினேழு வயது சிறுவனை விட, இந்த இருபத்தேழு வயது இளஞ்சேரல் ஐம்பது மடங்கிற்கு மெருகேறி இருந்தான்.

ஒரு சொல் உதிர்ப்பதற்கே சிந்திப்பவன், தற்போது மூச்சு வாங்கும் அளவிற்கு நீளமாய்ப் பேசினான்.

முன்பு, ‘சிரிக்கவா, வேண்டாமா.?’‌ எனக் குழப்பத்திலேயே இருக்கும் அதரங்கள், மந்திரப் புன்னகையை அளவில்லாமல் சிந்தின.

தந்தையின் நினைவு தானாய் வந்து மனதோடு ஒட்டிக் கொண்டது.

“உங்களை மாதிரியே இருக்கான்பா. ஆனா ரொம்பப் பிடிவாதம். நான்தான் சரி, அப்படிங்கிறதுல உறுதியா நிக்கிறான். ‘புருஷனுக்காக விட்டுக் கொடுக்கலாமே’னு விளையாட்டா சொன்னாலும், உண்மையாவே ‘நான் மாறவே மாட்டேன்’னு மறைமுகமா சொல்லுறான். இவனைப் போயி. எப்படிப் பிடிச்சிச்சு எனக்கு.?” அவள் தனக்குத்தானே பேசிக் கொள்ள..

மூளையோ, ‘உனக்கு, எங்க இவனைப் பிடிச்சிச்சு.? அந்தப் பதினேழு வயசு அப்பாவியைத்தான் பிடிச்சு இருந்திச்சு. இப்ப அவனைக் கொண்டு வர முடியாதுன்றதால, இவனைக் கட்டிக்கிட்டு வந்திட்ட!’ என்று விடை சொன்னது.

தமிழிற்குத் தன்னை நினைத்தே சிரிப்பு வந்தது. அதேநேரம், பழைய சேரலின் நினைவுகளும் மனதை இம்சித்தது.

“சவிதா.. இதைப் பிரோல்ல வை!” என்று ஜெயராம் கொடுத்த பையைப் பிரித்துப் பார்த்தவர், “என்னங்க‍, இவ்வளவு பணம்.?”

“சேரலுக்குக் காலேஜ் பீஸ் கட்டணும்ல.?”

“சரிங்க, ஆனா எப்படி ஏற்பாடு செஞ்சீங்க.?”

“தெரிஞ்சவங்கக்கிட்ட வாங்கிட்டு வந்தேன்மா.”

“நம்மளால இதைத் திருப்பிக் கொடுத்திட முடியுமா.?”

“இனி.. ரெண்டு சிப்ட் வேலை பார்க்கலாம்னு இருக்கேன்.”

“ஒன்றரை சிப்ட் வேலை பார்த்ததுக்கே, உங்க உடம்பு ஒத்துழைக்கல.‌ இப்ப ரெண்டுனா..”

“பார்த்துக்கலாம் சவிதாமா.‌ ஒரு அஞ்சு வருசம் கஷ்டப்பட்டோம்னா, அவன் ஆளாகிடுவான்.”

“அடுத்து, நம்ம தமிழ் வேற இருக்காளே.?”

ஒரு பெருமூச்சை வெளிவிட்டவர், “அது அதுக்குத் தானா வழி பிறக்கும்!” என்றுவிட்டு அறைக்குள் சென்று படுக்க, “அத்தை, மசாலா பொடி அரைச்சிட்டு வந்திட்டோம்!” என உரைத்தவாறே தமிழுடன் இல்லத்திற்குள் நுழைந்தான் இளஞ்சேரல்.

“அதைத் தாம்பாளத்துல கொட்டி ஆற வச்சிடுங்க!” எனச் சவிதா உரைத்த பணியை இருவரும் இணைந்து செய்ய, அறைக்குள் இருந்து மெலிதான சத்தம் கேட்டது.

“நீயி, இதை எடுத்து வை தமிழ். நானு உள்ளப் போயி பார்க்கிறேன்!” என்றவன் சென்று கண்டது, மார்பை அழுத்திப் பிடித்திருந்த ஜெயராமையும், கீழே விழுந்து உடைந்து கிடந்த அவரின் மூக்குக் கண்ணாடியையும் தான்.

“மாமா என்னாச்சு.?” என அருகே சென்றான்.

“நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு சேரா!” என்றிட, சவிதாவிடம் உரைத்துவிட்டு, அவசரமாய் ஆட்டோவைப் பிடித்து வந்தான்.

லேசான இருதய வலி என்றனர் மருத்துவர்கள். அவர்கள் சொன்ன மருந்துகள் எதையும் வாங்காது, சிகிச்சைக்கான பணத்தை மட்டும் கட்டிவிட்டு, இரண்டு நாட்களில் இல்லத்திற்கு வந்து விட்டார் ஜெயராம்.

“ஏன் மாமா.. இப்படிச் செஞ்சீங்க?”

“அதான் நல்லா ஆகிட்டேன்லடா?”

“மாத்திரை மருந்து எல்லாம் சாப்பிட்டா தான், முழுசா குணமாகும் மாமா.”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, போயி வேலையைப் பாரு!” என்று சேரலை அனுப்பிய கணவரை வலியுடன் பார்த்த சவிதா, “பாதி மருந்தாவது வாங்கிட்டு வந்திருக்கலாம்.”

“நீ வேற. அவனுக்குப் பீஸ் கட்ட வாங்கின காசுல, ஆஸ்பத்திரிக்குப் பாதிச் செலவாகிடுச்சே? மிச்சத்துக்கு என்ன செய்யிறதுனு நானு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். இதுல மருந்து வாங்கவாம்!”

“உங்களுக்கு ஏதாவது ஆச்சுனா.?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது சவிதா, தைரியமா இரு!” என மனைவிக்குச் சமாதானம் உரைத்த ஜெயராம், மறுநாளே வட்டிக்குக் கடன் வாங்கிக் கல்லூரியில் இணைவதற்கான பணத்தைக் கட்டிவிட்டு வந்தார்.

விசயம் தெரிய வர, “எதுக்கு மாமா இதெல்லாம்? என்னால உங்களுக்கு எவ்வளவு சிரமம்? நானு ஊருக்கே போறேன்!” என்றான் சேரல்.

“என்ன பெரிய சிரமம்? இதுவே எனக்கு ஒரு பையன் இருந்தா, செய்ய மாட்டேனா.? நீயி, ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. மத்த எதையும் யோசிக்காத!” எனக் கண்டித்து வைத்தார் ஜெயராம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் பேசிப் பார்த்தான் இளையவன். மூத்தவரோ தனது சொல்லிலேயே பிடிவாதமாய் நின்றார்.

‘எவரிடமாவது மாமாவிற்காக உதவி கேட்கலாமா.?’ என்ற எண்ணம். ஆனால் பதினேழு வயது சிறுவனிற்கு எதை, எவரிடம், எப்படிக் கேட்பது என்றுதான் தெரியவில்லை.

கடந்த சில தினங்களாய் இல்லத்தில் நடப்பதைக் கவனித்த தமிழ்.. சேரலிடம், “ஏன் எப்பவும் ஊருக்குப் போறேன்னே சொல்லுற.?”

“இது இல்ல,‌ என்னோட வீடு. என்னோட ஊரு ஆதிக்குடில். வீடும் அங்கதான் இருக்கு‌‌. நான் போறேன்!”

அவனை முறைத்தவள், “அப்ப, இது உன்னோட வீடு இல்லையா? நாங்க எல்லாம் யாரு? எங்களுக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லையா.?”

அவளை இயலாமையுடன் பார்த்தவன், “தமிழ்மா, ஏன் இப்படிப் பேசுற?”

“நீயிதான் எனைய பேச வைக்கிற.”

அவன் கண்கலங்கி அமைதியாய் நிற்க.. அதில் மனம் நெகிழ்ந்தவள் கெஞ்சலாய், “அப்பா சொல்லுறதைக் கேட்டா தான் என்ன.?”

“உனக்குப் புரியாது தமிழ். நானு இங்க இருந்தா,‌ மாமா ரொம்பக் கஷ்டப்படுவாரு.”

“ஏன்.?”

“அவருக்கு நெஞ்சு வலி வந்துச்சுல?”

“அதான் டாக்டர் சரியாகிடுச்சுனு சொல்லிட்டாங்களே?”

“முழுசா சரியாகல.‌ நல்லா சாப்பிடணும்‍, ரெஸ்ட் எடுக்கணும். மாத்திரை எல்லாம் எடுத்துக்கணும். நானு இங்க இருந்தா, மாமா‌ இதெல்லாம் செய்ய மாட்டாரு. அந்தக் காசை எனக்குப் பீஸ் கட்டத்தான் பார்ப்பாரு!”

“ஆனா.. இப்ப‌ ஏற்கனவே கட்டிட்டாரே.? அதுக்காகவாது நீயி காலேஜ் போயி படிக்கலாம்ல.? ஊருல ஸ்கூல் கூட இல்லனு சொன்னாங்க, அங்க‌ காலேஜ் போறது எல்லாம் நடக்குமா? உனைய பார்த்துக்க யாரு இருக்கா.? எங்கேயும் போகாத, இங்கேயே இரு. அப்பா சொல்லுறதைக் கேளு!” என எதிர்பார்ப்புடன் கேட்டிட, தலையை அசைத்தான்.

‘நாம சொன்னதுக்குச் சரினு ஒத்துக்கிட்டான். இனி போக மாட்டான்.’ எனச் சிறுமியவள் எப்போதும் போல் இருக்க, அவனோ மனதிற்குள்ளேயே வேறு திட்டம் போட்டிருந்தான்‌.

நாட்கள் நத்தையாய் நகர்ந்தது சேரலிற்கு.‌ மறுநாள் கல்லூரியின் முதல் தினம். புத்தாடை வாங்கித் தந்தார் ஜெயராம்.

“இதெல்லாம் எதுக்கு மாமா.?‌” என்றிட, “முதல் நாள் காலேஜ் போற, போட்டுக்கடா!” எனச் சிரித்தார்.

மனம் கனக்க, அதை வாங்கிக் கொண்டான்.‌‌ இரவு உறக்கம் தொலைதூரம் சென்றது.‌ மற்ற அனைவரும் உறங்கி விட்டனர்.

கூடத்தில், சவிதாவின் அருகே உறங்கிக் கொண்டிருந்தாள் செந்தமிழ்‌. இல்லத்தில் மற்றவர்களை விட, அவள்தான் சேரலிற்கு நெருக்கம்.

அடுத்துச் செய்ய வேண்டியதைத் தீர்மானித்துக் கொண்டவன், ‘இறுதியாய், அவளிடம் மட்டும் சொல்லிச் செல்லலாம்!’ என எண்ணி அருகே சென்று எழுப்பினான்.

அரைத் தூக்கத்தில் எழுந்து, “என்ன‌ அத்தான்?” என்றாள்.

எப்பொழுதாவது தான், ‘அத்தான்’ என அழைப்பாள்.‌ ஆரம்ப நாட்களில் ஜெயராமும் சவிதாவும் சொல்லியும் கூட, “அப்படி எல்லாம் கூப்பிட முடியாது!” என மறுத்தவள், ஒன்றிரண்டு முறை சொல்லி இருக்கிறாள். பெரும்பாலும் பயம் உண்டாகும் தருணங்களில் மட்டும். அன்று தூக்க கலக்கத்தில், தன்னை மறந்து உரைத்து இருந்தாள்.

“நானு ஊருக்குப் போறேன் தமிழ்மா.”

“அதான் போகக்கூடாதுனு சொன்னேன்ல? ஒழுங்கா படு, காலையில காலேஜ் போகணும்.‌ இல்லேனா அடிதான் விழும்!” என எச்சரித்துவிட்டுப் படுக்க, புன்னகையும் வலியுமாய் எழுந்து சென்றான்.

காலை தாமதமாய் விழித்தவள்.. அவன் கல்லூரி செல்ல தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “ராத்திரி என்கிட்ட எதுவும் பேசுனியா.?” என வினவ, சேரல் இல்லை என்பதாய்த் தலையசைத்தான்.

“சரி.. சரி. சீக்கிரம் கிளம்பு. எனக்கும் ஸ்கூலுக்கு நேரமாச்சு!” என்றுவிட்டு ஓடினாள்.

கல்லூரி செல்வதாய் உரைத்து கிளம்பியவன், அன்று மாலை இல்லம் திரும்பவில்லை. பேருந்து வருவதற்குத் தாமதமாகலாம் என இல்லத்தவர்கள் காத்திருக்க.. பள்ளி முடிந்து வந்த தமிழ் உடை மாற்றுவதற்காகத் துணியை எடுக்கும் போது, வந்து விழுந்தது அந்தக் காகிதம்.

“நானு ஆதிக்குடிலுக்குப் போறேன் தமிழ்மா. அத்தை மாமாக்கிட்ட, ஸாரி சொன்னேனு சொல்லீடு.” என்று மட்டும் எழுதி இருந்தான்.

இரவில் நடந்தது கனவென்று எண்ணியிருக்க.. பின்புதான் புரிந்தது, சேரல் உண்மையாகவே அவளிடம் உரைத்துச் சென்றிருக்கிறான் என்று.

அன்றைய நினைவில் கலங்கிய கண்களைத் தமிழின் கரங்கள் துடைத்துக் கொள்ள, சிறிது நேரத்தில் இமைகள் தானாய் துயிலின் வசம் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!