Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 4

அதிகாலை நேரம் அந்த கல்யாண மண்டபமே சுறுசுறுப்பாக இருந்தது.  காலை முகூர்த்த நேரத்திற்கு இன்னும் நேரமிருந்ததால் பட்டு வேஷ்டி சட்டையில் முகம் முழுக்க புன்னகையுடன் வருபவர்களை வரவேற்பில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார் பூபதி.

வாசலில் பெரியதாக வெட்டிங் பேனரில் பூங்குழலி வெட்ஸ் தீபக் என்று இருந்தது.  ஆம், பூங்குழலிக்கும் தீப்க்கும்தான் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.

தீபக்கின் உறுதியைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டினர் தங்கள் கௌவரத்தை பார்க்காமல் இறங்கி வந்து பூங்குழலி வீட்டினரிடம் பேசி சம்மதிக்க வைத்திருந்தனர்.

ஆரம்பத்தில் அமுதினிக்கு முடிக்காமல் பூங்குழலிக்கு திருமணம் செய்வதில்லை என்ற உறுதியுடன் இருந்தவர்களை, மாப்பிள்ளை வீட்டினரின் பிடிவாதத்தை பார்த்து, அமுதினியே ஒரு கட்டத்தில் பெற்றோரை சம்மதிக்க வைத்து ஒத்துக் கொள்ள வைத்திருந்தாள்.



Advertisement

தன்னால் தங்கைக்கு அமையவிருக்கும் நல்ல வாழ்க்கை தடைபட வேண்டாம் என பெற்றவர்களிடம் பேசி, இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் முகூர்த்தமே நெருங்க இருக்கிறது.

இதில் என்ன ஏது என யோசிக்கவே யாருக்கும் நேரம் கொடுக்கவில்லை.  எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்து முடிந்து திருமணமே வந்து விட்டது.

பூங்குழலி வீட்டினரிடம் இருந்து திருமணத்திற்கு சம்மதம் கிடைத்ததும், எங்கே மறுபடியும் பெண் வீட்டினரின் மனசு மாறிவிடப் போகிறது என திருமண ஏற்பாட்டை வேக வேகமாக செய்து முடித்திருந்தனர் தீபக் வீட்டினர்.  அவர்களது செல்வ செழிப்பு இந்த திருமணத்திலேயே தெரிந்தது.

Advertisement

பார்க்கிங் ஏரியா முழுவதும் கார்கள் நிறைந்திருந்தன.  சித்தார்த் ஜாகுவாரைப் இலகுவாக மண்டபத்தினுள் ஓட்டி வந்தான்.  அங்கே அவனது காரை பார்க் செய்வதற்கான இடத்தை கண்டு பிடித்து, பார்க் செய்துவிட்டு இறங்கி, மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Advertisement

ஆளைப் பார்க்கும் போதே பணத்தின் வளமை தெரிந்தது.  கண்களில் இருந்த கூலரை கழட்டியவன், தலைமுடியை வாகாக கோதிக்கொண்டே மண்டபத்தை சுற்றி பார்வையை சுழற்றினான்.

உடல் மொழியில் கொஞ்சம் திமிர்.  கண்களில் ஒரு அலட்சியம். எப்போதும் போல் முகத்தில் ஒட்ட வைத்த புன்னகை.  இருபத்தி ஐந்து வயது நிரம்பிய கட்டிளங்காளை.

பூபதி வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளரின் மகன்.  தந்தையின் தொழிலுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.

Advertisement

பூபதி தம்பதியினர் நேரிடையாக வீட்டிற்கே சென்று பத்திரிக்கை வைத்து அழைத்த மரியாதைக்காக வந்திருந்தான்.  இன்னும் சொல்ல போனால் அவனது தந்தையின் கட்டாயத்தின் பேரில் வந்திருந்தான்.

பூபதி ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவர்களது நிறுவனத்தில் வேலை செய்வதால், அவர் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு, அவன் தந்தைக்கு.  அந்த பழக்கத்தில் நேரிடையாக சென்று பத்திரிக்கை வைத்திருந்தார் பூபதி.

ஆனால் அவனது தந்தைக்கு இன்று இங்கு வர முடியாத சூழ்நிலை.  அவர்களது உறவிலேயே ஒரு முக்கிய விசேஷம் இருந்ததால், மகனை திருமணத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.  அவனுக்கு இதற்கு விருப்பமில்லை என்றாலும் கூட, தந்தையின் பேச்சை தட்ட விரும்பாமல் வந்திருந்தான்.

வரவேற்பில் நின்றிருந்த பூபதி இவனைப் பார்த்ததும் இரு கைகூப்பி முகமலர்ச்சியுடன் வரவேற்றார்.  அவர் பக்கத்தில் பட்டு பாவாடை தாவணியில் அழகு சித்திரம் போல் நின்றிருந்த கனிமொழி அவனைப் பார்த்து வெண்ணிற பற்கள் தெரிய அழகான புன்னகையுடன் பன்னீர் தெளித்து வரவேற்றாள்.

சற்றும் எதிர்பாராத நேரத்தில், சித்தார்த் மேல் அதிகமாக கொட்டிவிட்ட பன்னீரைப் பார்த்து, சில நொடி திகைத்து நின்று விட்டான்.

கனிமொழி கொஞ்சம் வேகமாக தெளித்ததால், அவன் மேல் சற்று அதிகமாக பன்னீர் துளிகள் பட்டு சட்டையை நனைத்து, அவனது மேனியை சிலிர வைத்திருந்தது.

தன் சட்டையை குனிந்து பார்த்துவிட்டு, அவளையும் ஒரு பார்வை பார்த்தான்.  அவனது பாவனையில் அச்சோ என இருந்தது கனிமொழிக்கு.   அவளும் எதிர்பார்க்கவில்லை இதனை.

பூபதிக்கும் தர்ம சங்கடமான நிலைமை. சித்தார்த்தைக் பற்றி அவருக்கு நன்கு தெரியும்.  அவனுக்கு இதில் எல்லாம் பிடித்தம் இருக்காது என  தெரிந்தும் கனியை எச்சரிக்காத தன் மடத்தனத்தை நினைத்து வருந்தினார்.

சில நொடிகளில் நடந்து முடிந்த இந்த நிகழ்வை எண்ணி என்ன சொல்லப் போகிறானோ எனதான் பார்த்திருந்தார் பூபதி.

சித்தார்த்தோ கனியை உறுத்து விழித்து கொண்டிருந்தான். அவனது முகத்தில் தெரிந்த பிடிக்காத பாவனையை பார்த்தே, அவளது உதடுகள் சாரி என உச்சரித்தது சத்தமில்லாமல்.

அவளது உதடுகளின் பாஷையில் கொஞ்சம் தணிந்தவன்,  பார்வையை மேலேற்றி அந்த மருண்ட விழிகளைப் பார்த்ததும் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

ப்பா… என்ன கண்ணுடா இவளுக்கு என பார்த்திருந்தான்.

மான் விழிகள் என சொல்வார்களே அது போல. காண்போரைக் கட்டி இழுக்கும் காந்த விழிகளைக் கொண்டவள் கனிமொழி.

“ரொம்ப அழகான கண்ணுடி உனக்கு” என அவளது தோழிகள் கூட புகழ கேட்டிருக்கிறாள்.  அவளுக்கு அது எல்லாம் கருத்திலே பதியாது.  எப்போதும் சிறு பிள்ளை போல் துறு துறு என இருப்பாள்.

இதோ இப்போதும் அக்கா கல்யாணத்துக்காக எடுத்திருந்த பட்டுப் பாவாடை தாவணியில் தேவதையாக சுற்றி வந்தவள், தந்தை வரவேற்பில் தனியாக நின்றிருப்பதைப் பார்த்து அவருடன் வந்து நின்று கொண்டாள்.

சித்தார்த் தூரத்தில் வரும் போதே பூபதி அவளிடம் “எங்க முதலாளியோட பையன்டா.  கல்யாணத்துக்கு வந்திருக்காரு” என சொல்லியிருந்தார்.  அவரின் மகிழ்ச்சி அவளையும் தொற்றியது.  எல்லோரையும் பன்னீர் தெளித்து வரவேற்பது போலதான் அவனையும் வரவேற்றாள்.

அவனுக்கு அது பிடிக்காது என அவளுக்கு எப்படி தெரியும்?  சிறு தூசியோ அழுக்கோகூட தன் உடையில் படிந்தாலே விரும்பமாட்டான் சித்தார்த்.

பன்னிர் தெளிக்கிறேன் பேர்வழி என, இவள் தெளித்த பன்னீர் கொஞ்சம் அதிகமாகவே அவன் மேல் விழுந்து சட்டையை நனைத்திருந்ததால் அவனை முறைக்க வைத்திருந்தது.

அவளது சாரியை பார்த்து சாந்தமானவனுக்கு, பெண்ணின்  விழிகளிலிருந்து பார்வையை எடுக்க முடியவில்லை.  தன்னை முயன்று கட்டுப்படுத்தி அவளிடமிருந்து பூபதியிடம் பார்வையை மாற்றியிருந்தான்.

இது எல்லாம் சில நொடிகளில் நடந்திருந்தன.  பூபதி கனிமொழியைப் பார்த்து “சின்னக்குட்டி என்னடா…?” என்றார் கண்டனமாக.

சித்தார்த்துக்கு, சின்னக்குட்டி என பூபதி அவளை அழைப்பதை கேட்டதும்  முகம் மாறி கேலியில் மின்னியது.  அவனது உதட்டில் நெளியும் குறும்பையும் சிரிப்பையும் பார்த்து பெண்ணுக்கு சங்கோஜமானது.

இதில் சித்தார்த்தின் கண்கள் கிண்டலாக அவளைப் பார்த்து நீ சின்னக்குட்டியா என சிரிப்பது போலிருந்தது.

கனிமொழி நல்ல வளர்த்தி என்பதால் வயதை மீறிய உருவம்தான்.  அவன் எதிரில் அவளது அப்பாவை ஒன்றும் சொல்ல முடியாமல், “ப்பா..” என சிணுங்கினாள் அவருக்கு மட்டும் கேட்கும்படி.  அதுவும் தப்பாமல் அவன் காதில் விழுந்து வைத்தது.

பூபதி அவனுடன் பேசியவாறே உள்ளே அழைத்துச் சென்று முதல் வரிசையில் அவனை உட்கார வைத்தார்.  சாரதாவையும் அழைத்து வந்து அவனுக்கு அறிமுகப்படுத்தி சில நிமிடங்கள் பேசியிருந்து, மறுபடியும் ரிசப்னுக்கு வந்து கனிமொழியுடன் நின்றார்.

சித்தார்த்துக்கு இன்னும் கனிமொழியின் மருண்ட கண்கள்தான் பார்வையில் நின்றது.  “சின்னக்குட்டி” என மெல்ல வாய்விட்டு முணுமுணுத்தவன் தானாகவே முறுவலித்துக் கொண்டான்.

வரவேற்புக்கு வந்த பூபதி மகளிடம், “என்னடா சின்னக்குட்டி, பார்த்து தெளிக்கவேணாமா…?” என்றார்.

“ப்பா… சின்னக்குட்டின்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றேன்.  பாருங்க அவர் கேலியா சிரிச்சிட்டு போறார்” என கண்களை சுருக்கி அவள் சிணுங்கிய பாவனையில் அவருக்கும் சிரிப்பு வந்தது.

“சரி சரி இனிமே சொல்லல. இனிமே யாருக்கும் பன்னீர் தெளிக்க வேணாம்”.

“ம்ம்… நான் என்னப்பா பண்ணட்டும்? .அது சில சமயம் பன்னீர் வெளிய வர ஹோல் ப்ளாக் ஆயிடுதுன்னு, கொஞ்சம் ஃபோர்ஸா தெளிச்சேன், அதிகமா அவர் மேல விழுந்துடுச்சு”.

அமுதினி இவர்களிடம் வந்து நின்றாள் கையில் போனுடன்.  பூபதி “என்னமா…?” என்றார்.

“எங்க ஹாஸ்பிட்டலிருந்து டாக்டர் ஷ்யாமளா வராங்கப்பா.  கிட்ட வந்துட்டாங்கன்னு, வழி கேட்டாங்க.  அதான் அவங்களை கூப்பிட வந்து நிக்கறேன்”.

“அக்கா சூப்பரா இருக்க.  இந்த சேரி உனக்கு செமையா இருக்கு” என்றாள் கனிமொழி தனது  ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து காட்டி அமுதினியிடம்.

அமுதினி, கனிமொழி அப்படி சொன்னதும் தன்னை குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டவள், தங்கையைப் பார்த்து சிரித்தாள்.

“எங்க வீட்டு சின்னக்குட்டி கூட இன்னிக்கு தேவதை மாதிரி இருக்கா…” என்றாள் கனிமொழியைப் பார்த்து.

அமுதினி கனியை சின்னக்குட்டி என கூறியதும் பரிதாபமாக முகத்தை வைத்துகொண்டு பூபதியை திரும்பி பார்த்தாள் கனிமொழி.  இவளது பாவனையில் பூபதி சத்தமாக சிரித்து விட்டார்.

அமுதினி ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்து “என்னப்பா.., ஏன் சிரிக்கரீங்க…?” என்றாள்.

பூபதி கொஞ்ச நேரத்துக்கு முன் நடந்ததை எல்லாம் அமுதினியிடம் கூறினார்.  அவர் சொன்னதைக் கேட்டு அவளுக்கும் சிரிப்பு வந்தது.

அமுதினி தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்து கனிமொழி கோவமாக பன்னீரை எடுத்து அவள் மேல் வேகமாக தெளித்தாள்.  அமுதினி இரு கைகளால் அவள் மேல் படாதவாறு மறைத்து தடுத்து கொண்டிருந்தாள் சிரிப்புடன்.

அமுதினி, “ஹேய்… ஹேய்… எனக்கு எப்படி…டி தெரியும்?  நான் எப்பவும் கூப்படறமாதிரி தான கூப்பட்டேன்” என்றாள் மலர்ந்த சிரிப்புடன்.

இவர்களின் சேட்டையைக் கண்டு அங்கே வந்த சாரதா “என்ன இது வீளையாட்டு?  சின்னக்குட்டி எல்லாரும் பார்க்கிறாங்க பாரு..” என்றார்.  இப்போது எல்ருமே கொல்லென சிரித்து விட்டனர்.  சாரதாதான் முழித்துக் கொண்டு நின்றிருந்தார்.

சரியாக அந்த நேரம் டாக்டர் ஷ்யாமளா மகன் கௌதமுடன் மண்டபத்தின் உள்ளே நுழைந்தார்.  நடந்து வரும் போதே அவர்களின் பார்வை முழுக்க இவர்களின் மேல்தான்.

இவர்கள் விளையாட்டையும் அதற்கு அமுதினி மலர்ந்து சிரித்ததையும் பார்த்துக் கொண்டேதான் நடந்து வந்து கொண்டிருந்தான் கௌதமன்.  அருகில் வந்தும் அவள் மேலிருந்து பார்வையை திருப்பவில்லை.

முழுமதி போல தகதக என ஜொலித்தவளின் முகம் அவனைக் கட்டி இழுத்ததுபோல.

அதற்குள் அவர்களை கண்டு கொண்ட அமுதினி இன்முகத்துடன் வரவேற்று, தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவள், அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.

கனிமொழி, “அக்கா அழகாயிருக்கா இல்லமா…?”

சாரதாவும் அமுதினியைத் தான் பார்த்திருந்தார்.  ஆமாம் என தலையசைத்தவர் மனதில் வருத்தமே.  இன்று அவள் மணமேடையில் மணப்பெண்ணாக அமர்ந்திருக்க வேண்டியவள் என மகளை நினைத்து கலங்கியது மனம்.  அதே எண்ணம் தான் பூபதிக்கும்.

மணமேடையில் மணமகன் தீபக் அமர்ந்து புரோகிதர் சொன்னபடி சாங்கியங்களை செய்து கொண்டிருந்தான்.  அவனது முகம் பூரிப்பில், சந்தோஷத்தில் ஜொலித்தது.

தான் ஆசைப்பட்டது போலவே பூங்குழலியை மனைவியாக அடைவதில் அளவற்ற மகிழ்ச்சி அவனுக்கு.  மணமக்களின் பெற்றோர்களும் மணமேடையில் வந்து நின்றனர்.

புரோகிதர் மணமகளை அழைத்து வரச்சொல்ல எல்லோரது பார்வையும் அங்கேதான்.  அமுதினியும் கனிமொழியும் இருபக்கமும் பூங்குழலிக்கு அணைவாக நடந்து வந்தனர்.

தேவலோக மங்கை தரையிறங்கி வந்தாளோ என்பதுபோல  இருந்தது மணமகளைப் பார்ப்பதற்கு.  அழகானவளுக்கு மேலும் அழகு சேர்ப்பதுபோல் இருந்தது, இந்த திருமண அலங்காரங்கள் எல்லாம்.

பிரம்மனின் ஓவியச் சித்திரம் உயிர் பெற்று அசைந்து வருவதுபோல மெல்ல மணமேடையை நெருங்கிக் கொண்டிருந்தாள் பூங்குழலி.   மண்டபத்தில் இருந்த அத்தனை பேரின் பார்வையும் அவளின் மீதுதான்.

தீபக்குக்கு அவள் மீதிருந்த பார்வையை திருப்ப இயலவில்லை.   சாரதாவுக்கும் பூபதிக்கும் பெண்கள் மூவரும் சேர்ந்து நடந்து வரும் காட்சியைப் பார்த்து சொல்லொணா ஆனந்தத்தில் கண்கள் நிறைந்தது.

டாக்டர் ஷ்யாமளா “கார்ஜியஸ்” என்றார் மணப்பெண்ணைப் பார்த்து.  “ரொம்ப அழகாயிருக்கா இல்ல” என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த கௌதமைப் பார்த்து.

ஆம் என தலையசைத்தான்.

“ம்ஹ்… இன்னைக்கு கல்யாணப் பொண்ணா அனி இருந்திருக்க வேண்டியது…”

கௌதம் அவரைக் கேள்வியாக திரும்பிப் பார்த்தான்.

“யெஸ்…” என தலையசைத்தார் அவனைப் பார்த்து.  “இவளை இந்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு, என் கிட்ட ஹாப் டே லீவ் கேட்டிருந்தா.  நானும் சரின்னு சொல்லிட்டேன்”.

“ஆனால், அப்பன்னு பார்த்து ஒரு அர்ஜென்ட் எமர்ஜென்ஸி கேஸ் வந்திடுச்சு.  அந்த நேரம் பார்த்து அன்னைக்கு ட்யூட்டில இருந்த நர்ஸ், அவள் குழந்தைக்கு ரொம்ப முடியலன்னு லீவ் போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிட்டா..”

“எனக்கும் வேற வழியில்லாம இவளை இருக்க வச்சிட்டேன்.  அப்பக்கூட இவளை பெண் பார்க்க வராங்கன்னு இவள் சொல்லல.  தங்கச்சிக்கு கல்யாணம்னு பத்திரிக்கை வைக்கற அன்னிக்கு தான் எனக்கு தெரிய வந்தது”.

“ஏன்..? உனக்கு முன்னாடி தங்கச்சிக்கு பண்றாங்கன்னு கேட்டப்பதான், விவரம் சொன்னாள்.  பாவம்.  என்னால அவள் கல்யாணம் தட்டிப் போற மாதிரி ஆயிடுச்சு” என வருத்தப்பட்டார்.

கௌதமுக்கு இது புதிய செய்தி.  ஓஹ்… இவளோட தங்கச்சியா?  நான் சிஸ்டருக்கு கல்யாணம்ன உடனே அக்கான்னு நினைச்சேன் என நினைத்துக் கொண்டான்.

தாய் கூறியதிலிருந்து, பூங்குழலியின் அருகில் நின்றிருந்த அமுதினியைதான் பார்த்திருந்தான்.  ஹாஸ்பிட்டல் யூனிபார்மிலே பார்த்து இருந்த கண்களுக்கு இந்த அவளது தோற்றம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்ததுபோல.

இவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சித்தார்த்தும் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டுதான் அமர்ந்திருந்தான்.  அவனுக்கும் இது புதிய செய்தி.

அடுத்த சில நிமிடங்களில், கனிமொழி கைகளில் அட்சதைத் தட்டை எடுத்து கொண்டு வந்து நீட்டினாள் ஷ்யாமளாவிடம்.

ஏற்கனவே ரிஷப்சனில் இருக்கும்போது அமுதினி அவர்களை அறிமுகப் படுத்தி இருந்ததால், டாக்டர் ஷ்யாமளாவை பார்த்து சிநேக பாவத்துடன் புன்னகைத்தாள்.   ஷ்யாமளாவும் கௌதமும் புன்னகைத்து கொண்டே, தட்டிலிருந்து அட்சதையை எடுத்துக் கொண்டனர்.

அடுத்து சித்தார்த்திடம் வந்து அட்சதை தட்டை நீட்டினாள்.  அவன் எங்கே தட்டை பார்த்தான்.  அவள் கண்களைத்தான் விடாது பார்த்திருந்தான் ஆர்வமாக.

அய்யோ, இவன் என்ன இப்படி பார்க்கிறான்?  ஒருவேளை இன்னும் பன்னீர் தெளிச்சத மறக்காம முறைக்கிறானோ என பதட்டமாகியது அவளுக்கு.

சில நொடிகள் அவன் அட்சதையை எடுப்பானா என காத்திருந்து பார்த்தவள், அவன் எடுக்காததால்,  கண்களால் அட்சதையை எடுக்கும் படி சுட்டிக் காட்டினாள்.

கனிமொழியின் சைகையில், அந்த மான் விழியின் மாயையிலிருந்து அறுபட்டவன், அட்சதையை  கைகளில் எடுத்தான்.

அவனுக்கு தன்னை நாரும் கவனித்துவிட்டார்களா என சங்கடமாக இருந்தது.  சட்டென பார்வையை தன்னை சுற்றி ஒரு முறை நோட்டமிட்டவனுக்கு, யாரின் கவனமும் இங்கில்லை என்றதும்தான் ஆசுவாசமானது.

காட்.. என்ன கண்ணுடா… அது?  ஆளை அப்படியே ஸ்வாகா பண்ணுது.

எல்லோருக்கும் அட்சதையை கொடுத்தவள் தட்டை எடுத்துக் கொண்டு மேடைக்கு ஏறி சென்றாள்.  அங்கிருந்த எல்லோரும் அட்சதையை கைகளில் எடுத்துக் கொண்டனர்.

புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்திய இசை முழங்க, சுற்றியிருந்த எல்லோருடைய ஆசியுடன் திருமாங்கல்யத்தை எடுத்த தீபக் பூங்குழலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தனது மனதிற்கினியவளை மனைவியாக்கிக் கொண்டான்.

அடுத்தடுத்து மணமக்களுக்கான சாங்கியங்கள் தொடங்கின.  ஒரு பக்கம் வந்திருந்த உறவுக்காரர்கள், நண்பர்கள் என ஒருவரையும் விட்டுவிடக் கூடாது என பார்த்து பார்த்து விருந்துக்கு அழைத்துச் சென்றனர் திருமண வீட்டார்.

இப்படியாக கல்யாண மண்டபமே கூட்டத்தால் நிரம்பியிருந்தது.

சித்தார்த் திருமணம் முடிந்ததும் மணமக்களைப் பார்த்து பரிசை கொடுத்து வாழ்த்திவிட்டு கிளம்ப முயன்றான்.  பூபதி  அவனை விடாமல் கைப்பிடித்து சாப்பிட அழைத்துச் சென்றுவிட்டார்.

அமுதினி “வாங்க மேம்” என வந்து ஷ்யாமளாவை அழைத்தாள் மணமேடைக்கு.

அவர் திரும்பி கௌதமைப் பார்த்தார் மேடைக்கு வருவானா என.  அவன் நீங்க போங்க என மறுத்துவிட்டான் சைகையால்.  அவனைத் தெரிந்தவராதலால் அவர் மட்டும் அவளுடன் சென்றார்.

போகும்போதே அமுதினி திரும்பி கௌதமைப் பார்த்தாள்.  ஏன் இவன் மேடைக்கு வரவில்லை என.  அவள் பார்வை புரிந்தாலும் அவன் அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான் அமைதியாக.

ஷ்யாமளாவுக்கு மகன் திருமணத்திற்கு வந்ததே அதிசயம்.  அவர் சாதாரணமாகதான் அவனை அழைத்திருந்தார்.  திருமணத்திற்கு வருகிறாயா என.  எங்கே இவன் வரப் போகிறான் என அசிரத்தையாகதான் மகனைக் கூப்பிட்டார்.

ஏதோ இன்று நல்ல மூடில் இருந்தான்போல மகன்.  அவர் நினைத்ததற்கு எதிர்பதமாக அவன் ஒன்றும் மறுப்பு சொல்லாமல் அவருடன் கிளம்பியிருந்தான்.

அவருக்கும் மகனுக்கு இதுபோல் திருமணம் செய்து பார்த்திட ஆசைதான்.  எங்கே அவன் அதைப்பற்றின பேச்செடுத்தாலே ஏதாவது பேசி வாயடைத்து விடுகிறான்.  காலம்தான் அவனை மாற்ற வேண்டும் என காத்திருக்கிறார்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!