Skip to content
Post Views: 6,700
சித்தார்த், தந்தையின் தொழிலுக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. அவனது தந்தை காலத்தில் சிறியதாக ஆரம்பித்த தொழில் அவரது கடும் உழைப்பால் இன்று தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து உள்ளது.
அவனது தந்தை மகேஷ்வரன் ஆரம்பத்தில் நான்கு பணியாளர்களை மட்டும் வைத்து சிறிய அளவில் ஆரம்பித்த ஆயில் மில் தொழிற்சாலையில் இன்று நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்கிறார்கள்.
சமையல் எண்ணெய் மட்டுமே அவர்களது தொழிற்சாலையில் ஆரம்பத்தில் உற்பத்தியானது.
இன்று பாதாம், ஆலிவ், கடுகு, வேப்பம், இலுப்பை, கடலை, எள்ளு, தேங்காய், கருஞ்சீரகம், விளக்கெண்ணய் என பலவகையான எண்ணெய்கள் அங்கிருந்து உற்பத்தியாகி விற்பனைக்கு வெளியாகிறது.
Advertisement
தரமான எண்ணெயை உற்பத்தி செய்து விற்பதினாலேயே அவர்களது பிரான்டுக்கு என தனி மதிப்பிருந்தது மக்களிடையே.
சித்தார்த்தின் எதிரில் வெடவெடத்துப் போய் நின்றிருந்தனர், அந்த பணியாளர்கள் இருவரும்.
ஒவ்வொருவரையும் தனித்தனியாக வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
Advertisement
“எவ்வளவு ஈஸியா சொல்றீங்க? பார்க்காம விட்டுட்டோம்னு. ஸ்டாக் வெரிபை பண்ணும்போது கவனமா பார்திருந்தீங்கன்னா, இப்படி நடந்திருக்காது இல்ல”.
Advertisement
“அப்புறம் எதுக்கு உங்களை ஸ்டோர் இன்சார்ஜ்ன்னு வச்சிருக்கோம். இதை எல்லாம் சரியா செக் பண்ணதான” என்று கத்திக் கொண்டிருந்தான்.
அதற்குள் பூபதியும் வந்திருந்தார் எம்.டி. யின் அறைக்கு. அங்கே சித்தார்த்துடன் அவனது தந்தை மகேஷ்வரனும் அமர்ந்திருந்தார்.
சித்தார்த் விசாரித்து கொண்டிருந்ததால், அவர் அமைதியாகப் பாரத்துக் கொண்டிருந்தார்.
Advertisement
பூபதியைப் பார்த்ததும் தன் எதிரில் இருந்த நிலக்கடலையை நகர்த்தி அவர் எதிரில் வைத்தான் சித்தார்த்.
பூபதிக்கு ஒன்றும் புரியவில்லை, “ஸார்…” என்றார் குழப்பமாக சித்தார்த்தையும், மகேஷ்வரனையும் பார்த்து.
“என்ன பார்க்கறிங்க…? நீங்க தான பர்சேஸ் பார்க்கறீங்க…?” என்றான் சித்தார்த்.
ஆமாம் என்று தலையசைத்தார் பூபதி.
“அப்புறமென்ன கையில எடுத்து பாருங்க கடலையை…” என்றான் கோவமாக.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னாச்சு ஸார்?” என்றார் ஏதும் விளங்காமல் முழித்துக்கொண்டே.
“என்ன என்னாச்சு? எத்தனை நாளா நடக்குது இது? உங்களை நம்பி பொறுப்பா ஒப்படைச்சதுக்கு, நீங்க செய்யற வேலையா இது?” என்றான் ஆத்திரமாக.
“ஸார்… நான் என்ன பண்ணேன்? புரியலை ஸார்” என்றார் பரிதாபமாக பூபதி.
“என்ன புரியலை? ரா புராடெக்ட் பர்ச்சேஸ் எல்லாம் நீங்கதான பார்க்கறீங்க? அப்ப இந்த தரமில்லாத கடலையை எங்கிருந்து வாங்கனீங்க?”
“என்ன பார்க்கறீங்க…? எடுங்க. அதை கையில எடுத்து ஸ்மல் பண்ணி பாருங்க” என்றான் அதட்டலாக.
“நாள் பட்ட கடலைய வாங்கி இருக்கீங்க. சீண்டல் ஸ்மெல் வருது. இதிலிருந்து எண்ணெய் எடுத்தா தரமாயிருக்குமா? கம்பெனி பேரை கெடுத்திராதா?”
“நம்ம கம்பெனி எண்ணெய் தரமாயிருக்கும், குவாலிட்டியா இருக்கும்ற நம்பிக்கையிலதான, மக்கள் இதை நம்பி வாங்கறாங்க. நீங்க கம்பெனி பேரையே கெடுத்துருவீங்க போல”
“நல்ல கடலைய வாங்கறதா கணக்கு குடுத்துட்டு, இப்படி தரமில்லாத கடலைய வாங்கியிருக்கீங்களே? இதுக்கு எவ்வளவு கமிஷன் அடிச்சீங்க?” என்றான் காட்டமாக.
பூபதி மகேஷ்வரனை திரும்பி பார்த்துவிட்டு சித்தார்த்தை பார்த்தவர், “ஸார் நிச்சயமா நான் எந்த கமிஷனும் அடிக்கல. நான் பர்ச்சேஸ் பண்ண ஆர்டர் கொடுத்த கடலை இது இல்ல. இந்த புராடெக்ட நான் பர்ச்சேஸ் பண்ணல ஸார். நான் நேரா போய் சேம்பிள் பார்த்துட்டு தான் ஆர்டரே போட்டேன். எனக்கு நல்லா நினைவிருக்கு. இந்த கடலைய நான் ஆர்டர் பண்ணல” என்றார் ஸ்திரமாக.
“நீங்க ஆர்டர் பண்ணலனா, வேற யார் பண்ணாங்க? இங்க பர்ச்சேஸ் வேலை பார்க்கிறது நீங்க மட்டும் தானே”.
“ஆமாம் ஸார். நான் தான் பர்சேஸ் பண்றேன். எப்படி இந்த கடலை வந்ததுன்னு தெரியலை. எப்பவும் புராடக்லாம் டெலிவரி ஆனதும், நாம ஆர்டர் பண்ணதுதான் சரியா வந்துதான்னு ஒரு முறை வெரிபை பண்ணிடுவேன்”.
“இந்த முறை நான் லீவ்ல இருந்ததால பண்ண முடியல. அப்ப கூட ஸ்டோர் இன்சார்ஜ் மூர்த்தி கிட்ட சொல்லிட்டு தான் போனேன் ஸார். வெரிபை பண்ண சொல்லி” என பக்கத்தில் நின்றிருக்கும் மூர்த்தியை பார்த்தார் பூபதி.
மூர்த்தி எதுவும் பேசாமல், எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நின்றிருந்தான்.
மூர்த்தியின் மேல் இருந்த பார்வையை மாற்றி சித்தார்த்தை திரும்ப பார்த்த பூபதி, “ஒரு ஃபைவ் மினிட்ஸ் ஸார். நான் இதோட டீடைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரேன்” என வேகமாக சென்றார், அவனுடைய பதிலுக்கு கூட காத்திராமல்.
அந்த பொருளை வாங்கியதற்கான பில், அது டெலிவரி ஆனதற்கான டெலிவரி செலான் என அனைத்தையும் கொண்டு வந்து காட்டினார். “ஸார், இங்க பாருங்க புரடக்ஷன்ல சேம்பில் காமிச்சு அவங்ககிட்ட அனுமதி வாங்கனதுக்கு அப்புறம் தான் ஆர்டரே ப்ளேஸ் பண்ணேன்”. என்று அவனிடம் அந்த ரசீதுகள் அடங்கிய பைலைக் கொடுத்தார். சித்தார்த் அதை வாங்கி வெரிபை செய்தவன், தந்தையிடம் கொடுத்தான்.
“இதை ஆர்டர் போட்டது வரைக்கும் தான் நான். இது டெலிவரி ஆகும் போது நான் இல்ல. அந்த சமயம்தான் என் பொண்ணு கல்யாணத்துக்காக ஒன் வீக் லீவ்ல போயிட்டேன். எப்பவும் டெலிவரி ஆனதும் ஒரு முறை புராடெக்ட் கரெக்ட்டா இருக்கான்னு செக் பண்ணிடுவேன். இந்த முறை நான் இல்லாததால ஸ்டோர் இன்சார்ஜ் மூர்த்தி கிட்ட சொல்லிட்டு போயிருந்தேன். அவர் பண்ணியிருப்பாருன்னு நானும் விட்டுட்டேன் ஸார்”.
சித்தார்த் திரும்பி மூர்த்தியை முறைத்தான். “இப்ப என்ன ரீசன் சொல்லப் போறீங்க?” என்றான் மூர்த்தியைப் பார்த்து.
அதற்கும் அவன் அலட்டிக்கொள்ளாமல் “சார் வந்த பொருளைதான் நான் வாங்கி வச்சேன். மத்தபடி எனக்கு ஒன்னும் தெரியாது” என்றான் அவன்.
“வந்த பொருளை சரியா இருக்கான்னு பார்த்து வாங்கி வைக்க மாட்டீங்களா? அதுக்குதான சம்பளம் வாங்கறீங்க. செய்யற வேலையை ஒழுங்கா செய்ய முடியலை. நீங்களாம் எதுக்கு வேலைக்கு வரீங்க?”
மூர்த்தி எதுவும் பதில் பேசாமல் தலையை குனிந்து கொண்டிருந்தான்.
சித்தார்த் பூபதியைப் பார்த்து, “நீங்க லீவ்ல இருந்தீங்கனா, ரெஸ்பான்ஸ் இல்லைன்னு ஆயிடுமா? லீவ் முடிஞ்சு வந்த பின்னாடி செக் பண்ண மாட்டீங்களா? ஆர்டர் பண்ணிட்டா அதோட உங்க வேலை முடிஞ்சுதா?” என அவரையும் விட்டு வைக்க வில்லை.
“இப்ப இந்த நிலக்கடலைய என்ன பண்றது? இந்த நஷ்டத்தை யார் பேர் பண்றது? இரண்டு பேர் சம்பளத்துலயும் பிடிக்கட்டுமா? இது புரடக்ஷன் போறதுக்கு முன்னாடி என் பார்வைக்கு வந்தது நல்லதாப் போச்சு.. இல்லனா என்ன ஆகிருக்கும்” என சத்தம் போட்டான்.
அவன் பேச பேச எதிரில் இருக்கும் யாராலும் பதில் பேச முடியவில்லை.
அதுவரை அமைதியாக பார்த்திருந்த மகேஷ்வரன்தான் மகனை அமைதிபடுத்திவிட்டு, அவரே அவர்களிடம் விசாரித்து, அதற்கு தக்க ஆவண நடவடிக்கைகளையும் செய்து, மகனையும் கூல் செய்தார்.
சித்தார்த்துக்கு இது புது அனுபவம் என்பதால் அவன் இன்னும் கோவத்தில்தான் இருந்தான். அவனைப் பொறுத்தவரை அவரவர் வேலையை சரியாக செய்ய வேண்டும். அதற்குதானே சம்பளம் வாங்குகிறார்கள். அதைகூட சரியாக செய்ய முடியாதா அவர்களுக்கு என ஆத்திரம்.
மகேஷ்வரன், “பிஸ்னஸ்ல இது எல்லாம் நடக்கறுதுதான சித்து. நாம கொஞ்சம் சுதாரிப்பாயிருக்கனும். நாம சரியாயில்லைனா இப்படிதான்”.
“என்னப்பா சொல்றீங்க? நம்பிக்கை வச்சுதான வேலைக்கு ஆளுங்கள வைக்கறோம். அதுதான அவங்க வேலையும். அதுக்கு தான் சம்பளமும் வாங்கறாங்க. இப்படி ஒவ்வொன்னையும் நாம நேரிடையா வெரிபை பண்ணிட்டிருந்தா நமக்கு வேற வேலையில்லையா? பிஸ்னச பார்க்க வேணாமா…?” என கொதித்தான்.
அவன் சொல்வதற்கும் ஆமோதிப்பாக தலையசைத்தவர், “என்னதான் நம்பிக்கையான ஆளுங்க இருந்தாலும், நம்மளோட கண்காணிப்பும் இருக்கனும் சித்து. இல்லனா இப்படிதான் பேர் கெடற மாதிரி எதாவது நடக்கும்”.
“இதுல நாம பார்க்க வேண்டியது இரண்டு விஷயம்தான். ஒன்னு நிஜமாவே புராடெக்ட் மாறி வந்துச்சா…? இல்ல இங்க ஏதாவது கோல்மால் நடந்துதான்னுதான் தெரியனும்”.
“அப்படி உண்மையிலே புராடெக்ட் மாறி வந்துருந்தா பிரச்சினையில்ல. சப்ளையர்கிட்ட பேசி அவங்களையே ரிட்டர்ன் எடுக்க சொல்லிடலாம். அப்படியில்லனாதான் கஷ்டம்”.
“பார்ப்போம். என்ன ஏதுன்னு விசாரிச்சுதான் முடிவு பண்ணனும்”.
“நீங்க அவங்களை அப்படியே விட்டிருக்க கூடாதுப்பா. சிவியர் ஆக்ஷன் எடுத்திருக்கனும். நஷ்டம் நமக்குதான”.
“ம்ம்…” என யோசனையாக தலையசைத்தவர், “நான் பார்த்துக்கறேன் சித்து. இதை என்கிட்ட விட்டுடு. நீ டென்ஷன் ஆகாத” என மகனை கூல் செய்தார்.“
@@@@@@@@@@@@@@@
பூங்குழலிக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. கல்யாண களேபரங்கள் எல்லாம் முடிந்து அவரவர் பழைய வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.
பூங்குழலிக்கான இந்த திருமணம், அவள் யோசிப்பதற்கான அவகாசத்தையோ சூழ்நிலையையோ தரவில்லை. எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்து முடிந்திருந்தது.
முதலில் ஒன்றும் புரியாமல் தவித்தவள், எல்லாவற்றையும் காலத்தின் போக்கில் ஏற்றுக் கொள்ள பழகியிருந்தாள்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் நடந்திருந்தாலும். தீபக்குடனான அவள் மணவாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது.
திருமணத்திற்குப் பின் தீபக்கின் விருப்பத்திற்கு இணங்க வேலையை விட்டிருந்தாள்.
இங்கு அவளுக்கு என செய்வதற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. வேலைக்கு சென்று பிஸியாக இருந்தவளுக்கு ஒன்றும் செய்யாமல் சோம்பி இருப்பது கடினமாக இருந்தது.
கல்யாணமாகி பெரிதாக எங்கும் வெளியேயும் செல்லவில்லை. கல்யாணமான அந்த பத்து நாளில் மறுவீடு, விருந்து, குலதெய்வக் கோவிலுக்கு சென்றது என எல்லாம் முடிந்திருந்தது. அதன்பிறகு அவளது அம்மா வீட்டுக்கு சென்றதைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம்.
பூங்குழலி, “ஏங்க நான் எங்க வீட்டுக்கு போய்ட்டு வரட்டுமா…?”
அலுவலகத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த தீபக் திரும்பி அவளைப் பார்த்தான். “போனவாரம்தான போய்ட்டு வந்தோம். இப்ப நான் பிஸிமா. பிரியானதும் பார்க்கலாம்” என்றான்.
“நீங்க பிஸின்னா பரவாயில்லை. நான் மட்டும் போயிட்டு வரட்டுமா…?”
“ம்ப்ச்… என்ன குழலி நீ? சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா…? காலையில வேலைக்கு கிளம்பும்போது மூட் அவுட் பண்ணாத என்னை…” என்றான் எரிச்சலாக.
அதற்கு மேல் எங்கே பேசுவது? அவளுக்கு அவன் பேசிய த்வனி ஆத்திரத்தைக் கொடுத்தது. எப்ப அம்மா வீட்டுக்கு போகனும்னு கேட்டாலும் ஏதாவது சொல்லி என்னை வாயடைச்சிடறார் என கண்கள் கலங்கியது.
தீபக் திரும்பி மனைவியைப் பார்த்தவன், “உடனே முகத்தை தூக்காத. முடிஞ்சா ஈவ்னிங் சீக்கிரம் வரப் பார்க்கிறேன். எங்கயாவது வெளியில போகலாம்” என அவள் கன்னத்தை தட்டிவிட்டு ஆபிஸ்க்கு கிளம்பி விட்டான்.
பூங்குழலி அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள். திருமணமாகி இந்த இரண்டு மாத காலத்தில் அம்மா வீட்டுக்கு மட்டுமில்லை, வெளியில் சென்ற இடங்களைகூட விரல் விட்டு எண்ணி விடலாம்.
திருமணத்திற்கு முன் வேலைக்கு சென்று வந்த பெண்ணுக்கு வீட்டில் ஒன்றும் வேலையில்லாமல் சோம்பி இருப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது.
எப்பொழுது பம்மல் செல்வது என்றாலும் தீபக்தான் அழைத்துச் செல்வான். இரண்டு மூன்று மணிநேரம் அங்கே இருப்பவர்கள் உடனேயே திரும்பிவிடுவர்.
இல்லை விடுமுறை தினங்களில் காலை சென்று மாலை திரும்பிவிடுவர். அவனும் அங்கு தங்கியதில்லை. அவளையும் தங்க அனுமதித்ததில்லை.
ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டு கொள்ளாதவளுக்கு, நாளாக ஆக அதுவே பெரிய குறையாக மனதில் உறுத்த ஆரம்பித்தது.
திருமணமான புதிதில் அங்கு அவனுக்கு தங்குவதற்கு வசதிப்படவில்லை என பெரிதாக நினைக்காமல் இருந்தவளுக்கு, தன்னையும் அவன் அங்கு தங்க அனுமதிக்காமல் இருப்பதை நினைத்துதான் எரிச்சலாகியது.
சாரதா கூட சில முறை மருமகனிடம் சொல்லிப் பார்த்தார். அவளாவது இங்க இரண்டு நாள் தங்கட்டுமே மாப்பிள்ளை என.
திருமணத்திற்கு பிறகு மகள் வந்து அவர்களுடன் தங்க வில்லையே என்ற வருத்தம் அவருக்கு.
தீபக் ஏதாவது காரணம் சொல்லி அங்கு குழலியை தங்க விடாமல் அழைத்து வந்து விடுவான். சரி புதிதாக திருமணமானதால் மனைவியை பிரிய மனமில்லை என அவரும் அதற்கு மேல் பேசுவதில்லை.
காலையில் சென்றால் இரவுதான் தீபக் வீட்டுக்கு வருவது. தனியாக எவ்வளவு நேரம் அந்த அறையிலேயே இருக்க முடியும். வேலைக்கும் போக வேண்டாம் என மறுத்துவிட்டான். சும்மா உட்கார்ந்திருப்பதற்கு சாரதாவையாவது சென்று பார்த்து வரலாம் என்றால் அதற்கும் வேண்டாம் என சொல்லி சென்றது அவளுக்கு கடுப்பானது.
சுதந்திரமாக இருந்தவளை கல்யாணம் என்ற பெயரில் கட்டி வைத்தது போல் இருந்தது.
சமையலாவது செய்யலாம் என்றால் அதற்கும் அவள் மாமியார் ராதா விடவில்லை. இதை எல்லாம் செய்ய வேலையாட்கள் இருக்கிறார்கள் என தடுத்துவிடுவார். சாப்பிட்டு சாப்பிட்டு எவ்வளவு நேரம்தான் வெறுமனே உட்கார்ந்திருப்பது. பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது அவளுக்கு.
சில சமயம் அழுகையும் வந்தது. அக்கா தங்கைகளுடன் கலகலப்பாக சிரிப்பும் விளையாட்டுமாக சென்ற பொழுதுகள் எல்லாம் ஏக்கத்தைக் கொடுத்திருந்தன அவளுக்கு. இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் பைத்தியம் தான் பிடிக்கும் என தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.
@@@@@@@@@@@@@@@@@
டாக்டர் ஷ்யாமளா வீட்டுக்கு வந்திருந்தனர் அமுதினியும், கனிமொழியும். நேற்றே ஹாஸ்பிட்டலில் வேலையின் போது அவளை வற்புறுத்தி அழைத்திருந்தார் ஷ்யாமளா அவரது வீட்டின் கொலுவிற்கு வரும்படி.
அமுதினிக்கு உள்ளுக்குள் தயக்கம், வேலைக்கு சேர்ந்த இத்தனை வருடங்களில், ஹாஸ்பிட்டலோடு சரி அவருடனான பழக்கங்கள் எல்லாம். அவரது வீட்டிற்கு எல்லாம் சென்றது இல்லை.
அதனால் மனதில் தயக்கம் அங்கே செல்வதற்கு, மாட்டேன் என்றும் சொல்ல இயலவில்லை. அவர் அவளை மதித்து கூப்பிடும்போது அவள் மறுத்தால் பிகு செய்வது போல இருக்கும் என நினைத்தாள். தனியாக எப்படிடா செல்வது என யோசிக்கும் போதே அதற்கும் அவரே வழி சொல்லியிருந்தார்.
அன்னைக்கு கல்யாணத்தில உன் தங்கைய பார்த்தேன், அவளையும் உன்னோட அழைச்சிட்டு வாயேன் என்றிருந்தார். சரி என தலையசைத்து விட்டாள்.
நவராத்திரி கொலுவுக்கு எல்லாம் சின்ன வயதாக இருக்கும் போது அவர்கள் தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று வந்தது.
இதோ அமுதினியும், கனிமொழியும் டாக்டர் ஷ்யாமளா வீட்டின் முன்பு நின்று காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தார்கள்.
சாரதா அமுதினியை புடவைக் கட்டி செல்ல சொல்லியிருந்ததால், மெல்லிய சரிகையிட்ட டிஷ்யூ சில்க் சேரியில் கிளம்பி வந்திருந்தாள். கனிமொழி சல்வார் போட்டு வந்திருந்தாள். சாரதா மகள்களுக்காக அவர்கள் வீட்டு தோட்டத்திலேயே பூத்த சந்தன மல்லியை தொடுத்து இருவர் தலையிலும் வைத்து விட்டிருந்தார்.
ஷ்யாமளாதான் வந்து வரவேற்றார் அவர்களை, “ஹேய் வாங்க வாங்க ஏன் வெளியிலயே நின்னுட்டீங்க. உள்ள வரவேண்டியது தான” என இருவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்றார்.
“ம்க்கும் வெளியிலயே நாய்கள் ஜாக்கிரதைன்னு போர்டு வைச்சிட்டு, தைரியமா உள்ள வேற வரனுமா…?” என முணுமுணுத்தாள் அமுதினியின் காதினில்.
அமுதினிக்கு இவள் சொல்லிய பாவனையில் சிரிப்பு வந்தது. “ஸ்சூ… சும்மா இரு கனி. அவங்க காதுல விழுந்துடப் போகுது”.
“அவங்க காதுல விழறது இருக்கட்டும். முதல்ல அந்த நாய் எங்க இருக்குதுன்னு பாரு. நாய் இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன். எனக்கு தான் நாய்னாலே பயம்னு உனக்கு தெரியுமில்ல…?” என்றாள் பார்வையை சுழற்றிய வண்ணம்.
“அதெல்லாம் எங்கயாவது கட்டி போட்டு தான் வச்சிருப்பாங்க. நீ பயப்படாம வா” என அவள் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள். கனியுடன் சேர்ந்து வெளியே தனியாக வருவது இதுதான் முதல் முறை.
குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து தான் எங்கேயும் போவர். இல்லை அமுதினியும், பூங்குழலியும் சேர்ந்து செல்வர்.
இதுதான் முதல் முறை கனியுடன் தனியாக வருவது. கனிமொழிக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்ததும் அமுதினியும், பூங்குழலியும் சேர்ந்து எங்கேயும் வெளியே சென்றால், கனியும் அவர்களுடன் செல்வதற்கு அடம் செய்து அழுவாள். அப்பொழுதும் அவர்களுடன் இவளை சேர்க்க மாட்டார்கள்.
பூங்குழலி திருமணமாகி கணவன் வீடு சென்றுவிட்டதால், துணைக்கு கனியை அழைத்து வந்தாள். வரமாட்டேன் என்றவளை விடாப்பிடியாக வற்புறுத்தி அழைத்து வந்திருந்தாள்.
ஷ்யாமளா இவர்களை நேராக கொலு வைத்திருந்த இடத்திற்கு அழைத்து சென்றார். ஹாலில் ஒரு பக்கமாக, மிகப் பெரியதாக கொலு வைத்திருந்தனர். லைட்டிங் எல்லாம் போட்டு பார்க்கவே அழகாக இருந்தது.
கனிக்கு அதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் கண்கள் இரண்டும் விரிந்தது. அமுதினியும் இவ்வளவு பெரியதாக இருக்கும் என நினைக்கவில்லை. இருவரும் அதையே ரசித்து பார்த்தவாறு நின்றிருந்தனர்.
கனிமொழி, “ரொம்ப அழகாயிருக்கு ஆன்டி. நீங்களே செட் பண்ணீங்களா…?” என்றாள்.
ஷ்யாமளா, “ஆமாம் மா. என் பையன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணான்”.
கனிமொழி, “ஒஹ்…”
அமுதினியும் “அழகாயிருக்கு மேம்” என சொல்லிக் கொண்டே அவர்கள் வாங்கி வந்த ஶ்ரீ கிருஷ்ணன் ராதை பொம்மையையும், பழங்கள் பூக்கள் இருந்த பையையும் அவரிடம் கொடுத்தாள்.
அந்த ஶ்ரீ கிருஷ்ணர் ராதை பொம்மையை கையில் எடுத்துப் பார்த்த ஷ்யாமளா, “ஹேய்… ரொம்ப அழகாயிருக்கு அனி. வைட் மார்பிளா…? பியூட்டிபுல்…” என்றார் ஷ்யாமளா புன்னகையாக.
கனிக்கு பெருமை தாங்கவில்லை. “ம்ம்… அது நாங்க மதுரா ஹோலி ட்ரிப் போனப்ப வாங்கி வந்தது. இங்க வாங்கினது இல்ல” என்றாள் பெருமையாக கண்கள் ஜொலிக்க.
ஷ்யாமளா “ரியலி. தேங்க்ஸ்” என்றார் அவளைப் பார்த்து புன்னகையுடன்.
கனிக்கும் சந்தோஷமானது.
ஷ்யாமளா கனியைப் பார்த்து “உன் கண்ணு ரொம்ப அழகாயிருக்கு” என்றார்.
கனிக்கு அவரது வார்த்தையைக் கேட்டு லேசாக வெட்கம் வந்தது.
“ஹா… ஹா… அழகா வெட்கப்படற நீ” என ரசித்த ஷ்யாமளா “சார்ம் கேர்ள்” என அவள் கன்னத்தை தட்டியவர், “சரி வாங்க” என சோபா இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை உடகார வைத்தார்.
“காபியா…? ஜூஸா என்ன சாப்பிடறீங்க…? என்றார்.
அமுதினி, “இல்ல மேடம் இருக்கட்டும். நீங்க உட்காருங்க”. அவளுக்கு உள்ளுக்குள் இன்னும் யாராவது இருப்பார்களோ என்ற சங்கோஜம். அதில் கூச்சப்பட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தாள்.
ஷ்யாமளாவும் அவர்கள் எதிரே உட்கார்ந்து கொண்டே, அங்கிருந்தே பணிப் பெண்ணை அழைத்து மூன்று மாதுளை ஜுஸ் கொண்டு வரச் சொன்னார்.
“என் சிஸ்டர் இன் லா வை இன்வைட் பண்ணியிருக்கேன். அவங்களும் வந்துரட்டுமா…? இப்ப வந்திருவாங்க. வந்ததும் பூஜையை ஆரம்பிக்கலாமா…? உங்களுக்கு ஒன்னும் அவசரம் இல்லையே?”
சரி என தலையசைத்தனர் இருவரும். கனிமொழி உட்கார்ந்த இடத்தில் இருந்தே வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வையை உணர்ந்த ஷ்யாமளா “வாங்க வீட்டை சுத்தி பார்த்துட்டு வரலாம்” என அழைத்து சென்றார்.
அது வீடு என சொல்ல முடியாது பங்களா என சொல்ல வேண்டும். வீட்டின் வெளியேயிருந்துப் பார்க்க அந்த காலத்து பாணியில் இருக்கும் அந்த பங்களா.
வீட்டினுள் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி வடிவமைத்து கட்டியிருந்தார்கள்.
கீழே வரவேற்பறைக்கு பிறகு பெரிய ஹால், அதனை ஒட்டி இருபக்கமும் படுக்கை அறைகள், ஹாலுக்கு அடுத்து சமையல் அறை அதனை ஒட்டினாற் போலவே சாப்பட்டு அறை என்றிருந்தது ஹாலின் ஒரு மூலையில் சின்னதாக பூஜை அறையும் இருந்தது.
அங்கே இருந்த மரச் சாமான்களும், அலங்காரப் பொருட்களும் அவர்களது செல்வ செழிப்பை எடுத்துக் காட்டியது. உள்ளிருந்தே படிக்கட்டுகள் வைத்து மேலே செல்வதற்கு வழி செய்திருந்தார்கள்.
அங்கேயும் அழைத்துச் சென்று காண்பித்தார். மேலேயும் ஒரு ஹால், அதனை ஒட்டி அறைகள், ஹாலிலேயே வீட்டின் முகப்பை பார்த்தவாறு பால்கனி என இருந்தது. ஹாலின் நடுவில் பித்தளை சங்கிலிகள் கோர்த்த மர ஊஞ்சல் போடப் பட்டிருந்தது. அங்கேயே ஒரு பக்கம் பெரிய மீன் தொட்டி ஒன்றும் இருந்தது.
அவர்கள் வீட்டைச் சுற்றி பார்த்து வந்து அமர்ந்ததும் பணிப்பெண் மாதுளை ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்தவர்கள் பொதுவான விஷயங்களை கொஞ்ச நேரம் பேசியிருந்தனர்.
சற்று நேரத்தில் ஷ்யாமளா ஒத்த வயதுடைய ஒரு பெண்மணியும், அவருடன் ஒரு பெண்ணும் வந்தனர்.
ஷ்யாமளா, “வா கீதா… வா ரக்ஷீ” என அவர்களைப் பார்த்து சந்தோஷமாக வரவேற்றார். புதியவர்களைப் பார்த்ததும் இவர்களுக்கு இன்னும் தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அதுவரை ஷ்யாமளாவுடன் ஒரளவு சகஜமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அமைதியாகினர்.
கீதா என்பவர் அமுதினியையும், கனிமொழியையும்… தெரியாததால் கேள்வியாக யாரென பார்த்தார்.
“இது அமுதினி நம்ம ஹாஸ்பிட்டல்லதான் வொர்க் பண்றா. இது அவளோட சிஸ்டர். கொலுக்கு கூப்பிட்டிருந்தேன்” என்றார் ஷ்யாமளா கீதாவிடம்.
அமுதினிக்கும் கனிமொழிக்கும் புதியவர்களை பார்த்ததும் மனதில் கூச்சம் வந்தது. ஷ்யாமளாவும் கீதாவும் பேச ஆரம்பிக்கவும், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பாரத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
அவர்களைப் புரிந்தவர் போல ஷ்யாமளாவும் “டைம் ஆச்சு வாங்க” என கொலு வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ரக்ஷி, “அத்த மாமா இரண்டு பேரும் எங்கத்தை. வீட்ல இல்லையா…?
“மேல இருக்காங்க ரக்ஷீ. இருடா. பூஜையை முடிச்சிட்டு போ”
ரக்ஷீ “நான் போய் கூட்டிட்டு வரேன் அத்தை என நில்லாமல் ஓடிவிட்டாள்.
தொடரும்.
error: Content is protected !!