Skip to content
Post Views: 1,866
“நீங்கள் மலையில் நுழைவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மலையையும் மலையில் வாழும் உயிரினங்களுக்கும் எவ்வித ஆபத்தும் நேருவதை நான் அனுமதிக்க மாட்டேன்.” என்ற கொல்லி, பின்னால் என்ன நடக்க போகிறது என்று அறியாமல் அனுமதியை வழங்கிவிட்டு சென்றாள்.
“கொல்லி விதிக்கப்பட்டதை நீயோ நானோ மாற்ற முடியாது! நடக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டவை நடந்தே தீரும்!” என கொல்லி சென்ற பின்பு அவள் சென்ற பாதையை நோக்கி முணுமுணுப்பாய் சொன்னாள் வனபத்திரகாளி.
Advertisement
வனபத்திரகாளி மார்த்தாண்டம் இருந்த இடத்திற்கு வந்தாலும், அவன் உடலோடு சென்று இணையாமல், மார்த்தாண்டத்தால் உணர முடியாத தூரத்திலே இருந்து கொண்டாள்.
Advertisement
மார்த்தாண்டத்தின் உடலில் இருந்து கொண்டு, ஒரு அப்பாவியை அவளால் கொல்ல முடியாது. அதர்மத்திற்கு எதிராக மட்டும் அவளது கைகள் ஓங்கும்!
Advertisement
செந்நீரின் கறைகள் வேடிக்கை பார்த்தால் மட்டும் படியாது இருக்குமா என்ன?
Advertisement
“கொல்லி பல ஆண்டுகளுக்கு பிறகு வரும் விஷேச சூரிய கிரகணம் இன்று நிகழ போகிறது! தீமைகளின் ஆதிக்கம் இன்று ஓங்கி தான் காணப்படும்! அதை என்றும் போல அடக்கி ஒடுக்கி, கொல்லி மலையை மீண்டும் நீ காக்க வேண்டும்!” போகர் சித்தர் சொல்ல, அவருக்கு அதை ஆமோதிப்பது போல வணக்கத்தை வைத்தாள் கொல்லி பாவை.
“அப்படியே ஆகட்டும் சித்தரே!” என்றாள் கொல்லி பாவை.
வானில் பிரகாசமாக இருந்த சூரியனை, சந்திரன் மெது மெதுவாக மறைக்க ஆரம்பித்தது. கரு மேக கூட்டங்கள் திரள் திரளாக ஒன்றிணைந்து, இருள் உலககை சூழ ஆரம்பித்ததை சுட்டி காட்டின.
முழு சூரிய கிரகணமும் நிகழும் தருணத்தில் பிரத்தியங்கராவை பலி கொடுத்துவிட்டால், கொல்லி மலை முழுவதும், மார்த்தாண்டத்தின் வசம் வந்துவிடும். அவரது பரம்பரையின் கனவு சுலபமாக நிறைவேறிவிடும்!
மார்த்தாண்டம் சொல்லும் எதிர்மறை மந்திரங்களின் ஒலியானது இருளோடு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லி மலை முழுவதுமாக எதிரொலிக்க ஆரம்பித்தது. அதுவரையிலுமே அசட்டையாகவே இருந்தாள் கொல்லி. தன்னை மீறி வேறு யாரால் இந்த மலைக்குள் நுழைந்துவிட முடியும் என்ற இருமாப்பு இருந்தது அவளுக்கு! அது அத்தனையும் தகர்தெறியும் நாள் அது என்று அப்பொழுது தெரியவில்லை கொல்லிக்கு!
எதுவோ தவறாக பட, மந்திர உச்சாடனம் நடக்கும் இடத்தை நோக்கி சென்றாள் கொல்லி.
சூரிய கிரகணம் ஆரம்பித்த முதலாக, அத்தனை தெய்வங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது தெய்வாம்சங்களை இழக்க ஆரம்பித்தன. கொல்லிக்கு விபரீதத்தின் வீரியம் நன்கு புரிந்தது!
வெகு வேகமாக ஆகாய கங்கை இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள் கொல்லி.
ஆகாய கங்கைக்கு அருகில் செல்ல செல்ல, கொல்லியின் மனம் இனம் புரியாமல் அலைபுற ஆரம்பித்தது.
“அங்கேயே நில் கொல்லி…” என்று ஒரு குரல் காற்றில் தனித்து ஒலித்து கேட்டது.
கொல்லி திரும்பி பார்த்தாள்; அங்கே வனபத்திரகாளி தன் சுய உருவில் நின்று கொண்டிருந்தாள்.
“நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?” புருவ முடிச்சிட கேட்டாள் கொல்லி.
“நீ தானே என்னை உள்ளே அனுமதித்தாய்!” என்று கொஞ்சம் அலட்சியமாக பதில் சொன்னாள் வனபத்திரகாளி.
இன்னும் கொஞ்சம் நேரம் தான்! கிரகணம் உச்சியை எட்டி விட்டால், மார்தாண்டன் ஜெயித்துவிடுவான், வனபத்திரகாளியின் சக்திகளும் எல்லை இல்லாது விரிந்துவிடும்!
கொல்லிக்கு இப்பொழுது எல்லாம் தெளிவாக புரிந்தது; வந்திருக்கும் மாந்திரீகனின் காக்கும் கடவுள் வனபத்திர காளி தான் என்று!
“உங்கள் பக்தனை காப்பது தான் உங்களின் வேலை என்றால், மன்னிக்கவும்! இன்று உங்களது கடமையை உங்களால் நிறைவேற்ற இயாலாது!” என பேச்சு பணிவு போல இருந்தாலும் முழு உக்கிரமாக சொன்னாள் கொல்லி.
“கொல்லி நீயும் என்னை போல ஒரு காவல் தெய்வம் மட்டும் தான். உண்மையில் உன்னால் என்னை எதிர்த்து போராட முடியாது! தேவையில்லாது தோல்வியை தழுவுவதை காட்டிலும் என்னிடம் சரணடைந்து விடு! உன்னை விட்டுவிடுகிறேன்.” என்றாள் வனபத்திரகாளி.
கொல்லியின் கோவம் கொதி நிலையை அடைந்தது.
“ஆம் நான் காவல் தெய்வம் தான்! இந்த மலையை காவல் காப்பது மட்டும் தான் என் பிராதன வேலை!” என்ற கொல்லி, ஒரு நொடி நிறுத்தி வன பத்திரகாளின் கண்களை பார்த்தாள்.
பிறகு, “இது என் எல்லை!” என்று அவள் ஆக்ரோஷமாக சொல்ல, அது கொல்லி மலை முழுவதும் எதிரொலித்தது!
முருகன் அந்த சத்தத்தை கேட்டு பயந்து போய்விட்டான். மார்த்தாண்டம் பயந்தாலும் எல்லாம் சில நிமிடங்கள் தான் என மனதை தேற்றிக் கொண்டார். தொடர்ந்து மந்திர உச்சாடனைகளை செய்தார்.
“உன் எல்லை ஆயினும் சூரிய கிரகணத்தின் பொழுது உன்னால் ஏதும் செய்ய இயலாது கொல்லி!” என்ற வனபத்திர காளி, சூரிய கிரகணம் முழுமையாகும் முன்னால் தனக்குள் இருந்த சக்தியினை எல்லாம் ஒன்றாக திரட்டி அதன் மூலம் கொல்லியை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்.
கொல்லியை சுற்றி மஞ்சள் நிறத்தில் ஒரு கட்டு உருவானது! சினம் தலைக்கேறியது கொல்லிக்கு!
கொல்லி தலைவிரி கோலமாக, எட்டு கைகளுடன், மந்திர கட்டை உடைத்து ஆங்கார ரூபமாய் நின்றாள்!
“என் எல்லைக்குள் வந்து, என்னையே உன் சித்து வேலைகளால் கட்டிவிட முடியும் என்று மூடதனமாய் எண்ணி விட்டாயோ?! வனபத்திர காளி நன்றாக கேட்டு கொள்! கொல்லி மலையை காவல் செய்வது மட்டும் தான் என் வேலை என்பதால், என் சக்திகளை உன் அளவிற்கு நீ குறைத்து எண்ணிவிட்டாய்! நானே இந்த மலையாவேன்! இந்த மலையின் உறைந்திருக்கும் ஒவ்வொரு உயிரும் எனதாகும்! உனக்கு மனிதர்களின் நம்பிக்கையினால் மட்டுமே சக்தி உள்ளது! நான் அப்படி அல்ல! இந்த மலையில் உள்ள ஒவ்வொரு உயிரும் என்னை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்பி கொண்டு இருக்கிறன! அந்த சக்தியின் முன்னால் சூரிய கிரகணம் மட்டும் அல்ல யாராலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது!” என்று வனபத்திரகாளியிடம் சொல்லிய கொல்லி, அடி வயிற்றில் இருந்து சப்தமிட்டாள்.
காற்றை கிழித்துக் கொண்டு வந்த சக்தியானது, வனபத்திரகாளியை கொல்லி மலையில் இருந்து தூக்கி கொண்டு போய் வெளியே போட்டது. இனி எக்காலத்திலும் வனபத்திரகாளியால் கொல்லி மலையின் மீது கால் வைக்க முடியாது!
உக்கிரம் தணியாமல், மந்திரம் வரும் திசை நோக்கி சென்றாள் கொல்லி.
பிரத்தியங்கரா அழுது அழுது ஓய்ந்து போய் இருந்தாள். அவளால் சுத்தமாக முடியவில்லை.
‘அவ்வளவு தானா? அற்பமான வாழ்வு என்று சொல்லுவார்களே… அதன் பொருள் இது தானா? அம்மா, அப்பாவை இனி பார்க்க முடியாதா? அமுதா… அமுதா… கொல்லி… அவள் தானே இந்த மலையை காக்கும் தெய்வம்! அவள் நினைத்தால் தன்னை காக்க முடியும் அல்லவா?’
பிரத்தியங்கராவின் மனம் பயத்தில் எங்கெங்கோ சுற்றி இறுதியில் கொல்லியிடம் வந்து நின்றது.
முழு கிரகணம் நிகழ இன்னும் சில விநாடிகள் தான் இருந்தது. மார்த்தாண்டம் ஆயுதத்தை கையில் ஓங்கிக் கொண்டு, பலியிட தயாராக இருந்தார்.
‘அமுதா காப்பாத்து…!’ என்று மனதிற்குள்ளே சப்தமிட்டு வேண்டிக் கொண்டாள் பிரத்தியங்கரா.
இதுவரையிலும் ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று மட்டும் தான் நினைத்திருந்தாள் கொல்லி. ஆனால் இப்பொழுது அவளின் பிரியத்திற்குரிய பிரத்தியங்கர்விற்கு ஆபத்து!
விநாடிக்குள் பலி இடத்திற்கு வந்துவிட்டாள் கொல்லி.
முழு சூரிய கிரகணம் பீடித்துவிட்டது!
மார்த்தாண்டம் கத்தியை ஓங்க, “நிறுத்து மூடனே…!” என்றாள் கொல்லி.
கொல்லியை கண்டதும், மார்த்தாண்டத்தின் கைகள் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. பார்த்த ஒரு பார்வையிலே வந்திருப்பது யார் என புரிந்து கொண்டான்.
‘இல்லை… இல்லை… இவ்வளவு தூரம் வந்துவிட்டு, இப்படியே விட்டுவிட்டு போவதா?’ என்று எண்ணிய மார்த்தாண்டம், மேலும் ஆயுதத்தை ஓங்கி, பிரத்தியங்கராவின் கழுத்திற்கு அருகில் கொண்டு செல்லும் தருணம், காலம் அப்படியே உறைந்து நின்றது!
தனது பக்தையை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாரான கொல்லி, அவள் எல்லைக்கு உட்பட்ட கொல்லி மலையில் ஒரு நிமிடம் காலத்தையே உறைய வைத்தாள்!
பிரத்தியங்கராவை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் அமர வைத்த கொல்லி, மீண்டும் காலத்தை உயிர்பித்தாள்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், என் பக்தையையே, என் எல்லையில் வைத்து பலி கொடுக்க முயல்வாய்?” என்று கோபமாக கேட்ட கொல்லி, இடியென சிரிக்க ஆரம்பித்தாள்.
ஏற்கனவே சூரிய கிரகணத்தால், குழம்பி போய் இருந்த காட்டு உயிரினங்கள், கொல்லியின் சத்தத்தில் மிரண்டு போயின.
மக்களும் எதுவோ ஒன்று அமானுஷ்மாக நடக்கிறது என்று புரிந்து கொண்டனர்.
தனது எட்டு கைகளையும் விரித்த கொல்லி, நிலம் அதிர அதிர, மார்த்தாண்த்தை நோக்கி எட்டு வைத்தாள்.
“என்னை மன்னிச்சிடும்மா தாயே… பேராசையில தப்பு பண்ணிட்டேன்.” என்று காலில் விழுந்தான் மார்த்தாண்டம்.
“பேராசை எனும் தீயில் விழுந்த பாவிக்கு மரணம் மட்டுமே தண்டையாகும்!” என்ற கொல்லி, பெருத்த சத்ததுடன் மார்த்தாண்டத்தை ஒரு கையிலும், முருகனை ஒரு கையிலும் தூக்கியவள், இருவரின் தலைகளையும் ஒரே நேரத்தில் துண்டித்தாள்.
மார்த்தாண்டத்தின் உடலில் இருந்து உயிர் வெளியேறியதை உணர்ந்தாள் வனபத்திரகாளி. ஒரு நிமிடம் கண்களை மூடி, நடந்தவற்றை கிரகித்து கொண்டாள்.
இது நாள் வரையிலும் மார்த்தாண்டம் குடும்பத்திற்கு அவள் செய்து கொடுத்திருந்த சத்தியம் அன்று உடைந்தது!
வனபத்திரகாளி செய்து கொடுத்த சத்தியம் தான், மார்த்தாண்டத்தை காப்பாற்றி விட வேண்டும் என்று, கடைசி நிமிடம் வரை அவளை கொல்லியுடன் போராட வைத்தது. ஆனால், கொல்லியின் சக்திகளுக்கு முன்பு, வனபத்திரகாளியின் சக்தி நிற்க முடியவில்லை.
சத்தியத்தின் பெயரால், மார்த்தாண்டம் குடும்பத்தின் பேராசைக்கு துணை நின்றது போதும்; இனிமேலும் அவர்கள் குடும்பத்திற்கு கட்டுபடுவதை விரும்பவில்லை வனபத்திரகாளி.
சூரிய கிரகணம் கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வர, தன் ஆவேசத்தை குறைத்துக் கொண்டாள் கொல்லி.
அத்தனையையும் பிரத்தியங்கரா பார்த்துக் கொண்டே இருந்தாள். தான் அன்பு வைத்து சிறு பெண்ணா இது? என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.
பிரத்தியங்கராவிடம் வந்த கொல்லி, “பயப்படாதே… சொன்னபடி என் வாக்கை நான் காப்பாற்றிவிட்டேன்! இனிமேலும் காப்பாற்றுவேன்! தேவையில்லாத அச்சங்களையும் கவலைகளையும் விட்டுவிடு!” என்றாள்.
பிரத்தியங்கராவிற்கு கண்ணீர் வழிந்தது.
பிரத்தியங்கராவின் தலையில் கையை வைத்தாள் கொல்லி. மூலிகையினால் செயலற்று கிடந்த பிரத்தியங்கராவின் உடல் சிறுது சிறிதாக சரியானது. கைகளில் இருந்த காயங்களும் குணமானது! அதை அதியசத்துடன் பார்த்தாள் பிரத்தியங்கரா.
“அமுதா…” என்று சொல்லி அழுதவள்,
“உங்களை நான் சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்.” என்று விக்கி விக்கி சொன்னாள்.
“நான் பல ஆயிரம் ஆண்டுகளாக சிறிய பெண் தான் பிரத்தியங்கரா!” என்றாள் கொல்லி புன்னகையுடன்.
புரியாது பார்த்தாள் பிரத்தியங்கரா.
“ஆய் நாட்டிலிருந்து என்னை சிறு பெண்ணாக அழைத்து வந்து தான் கொல்லியாக மாற்றினார்கள்! ஆகையால் தான் எனக்கு வயதே ஏறுவதில்லை!” என்றாள் கொல்லி.
“சின்ன... சின்ன பொண்ணா கூட்டிட்டு வந்து… எப்படி?”
எதுவோ புரிந்தது போல இருந்தது பிரத்தியங்கராவிற்கு! ஆனால், அதை ஏற்று கொள்ள முடியவில்லை பிரத்தியங்கராவால்.
கொல்லி பதில் சொல்லவில்லை.
“ஒரு சின்ன பொண்ணை போய்… எப்படி மனசு வந்துச்சு அவங்களுக்கு?” அழுகையோடே கேட்டாள் பிரத்தியங்கரா.
கொல்லியின் வாழ்வு எப்படியோ அப்படியோ பிரத்தியங்கராவின் வாழ்வும் முடிய இருந்தது. ஆனால், பிரத்தியங்கராவை காப்பாற்ற கொல்லி இருந்தாள்!
இத்தனைக்கு பின்னும் தன்னை பற்றி யோசிக்கும் பிரத்தியங்கராவின் அன்பில் நனையாமல் இருக்க முடியவில்லை கொல்லியால்.
“நடந்தவைகளை விடு! இனி நடக்க இருப்பவை பற்றி யோசி! உனக்காக நான் இருக்கிறேன்! அதை மட்டும் மனதில் வைத்து கொள்!” என்ற கொல்லி, மேலும் தாமதிக்காமல், பிரத்தியங்கராவை தன் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
error: Content is protected !!