Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 23.2

சூரியா சொன்னபடி அன்று மாலையே அமெரிக்காவுக்கு விமானம் ஏறிவிட ஆரியா மூலமாக இத்தகவல் சந்தியாவைச் சென்றடைந்தது. அவளுக்குமே இப்போதைக்கு இந்தப் பிரச்சனைகளை மறந்தே ஆக வேண்டிய சூழல். சூரியா கிளம்பிய அதே நேரத்தில் சந்தியாவின் குடும்பத்தினரும் இரயிலில் மேலகரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருந்தனர்.

 

அனைவருக்குமே சந்தியாவின் மீது வருத்தம் தான் என்றாலும் கோமதியம்மாள் தான் அவர்களைச் சமாதானம் செய்து ஊருக்கு அழைத்துச் சென்றார். செல்வதற்கு முன்னர் சந்தியாவிடம் போனில் பேசியவர் “எங்க மேல உள்ள கோவத்துல சரியா சாப்பிடாம தூங்காம இருந்துடாதே ராஜாத்தி… நல்லா சாப்பிடு… மனசைப் போட்டுக் குழப்பிக்காதே..  உங்க அம்மையை நான் சமாளிச்சுக்கிறேன்… நீயும் சுமியும் பத்திரமா இருங்க… நாங்க போயிட்டு வர்றோம்” என்று சொல்லிவிட சந்தியாவுக்கும் யாருமற்ற வீட்டுக்கு செல்லவே இஷ்டமில்லை.

 



Advertisement

இத்தனை நாட்கள் கலகலப்பாக இருந்த வீடு இப்போது யாருமின்றி கலையிழந்து போயிருக்கும் என்ற எண்ணமே மனதை வருத்த ஏழு மணியாகியும் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு மனமில்லை.

 

பின்னர் ஆரியா வந்து அழைக்கவும் சட்டென்று எழுந்தவள் குடும்பத்தினர் ஊருக்குச் சென்றுவிட்ட விஷயத்தை அவனிடம் மறைக்காமல் சொல்லிவிட அவனுக்கோ அனைவரும் தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டார்களே என்ற ஆதங்கம்..

Advertisement

 

Advertisement

அவர்கள் எம்மாதிரியான மனநிலையுடன் கிளம்பிச் சென்றார்கள் என்பதை சந்தியா விளக்கியதும் சந்தியாவின் பேச்சை நினைத்து ஆரியாவுக்கும் வருத்தமே. அதே போல அன்னையிடம் முந்தைய தினம் சூரியா நடந்து கொண்டவிதத்தை சந்தியாவிடம் மறைக்காமல் கூறிவிட்டான் அவன்.

 

அதோடு சூரியா இந்தியாவுக்கு திரும்ப ஒரு மாதத்துக்கு மேலாகும் என்பதையும் சந்தியாவிடம் அப்போது தெரிவிக்க அவளுக்கு ஒரு மாதமா என்ற பிரமிப்பு. தன்னிடம் அவன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம் என மனத்தாங்கலுடன் எண்ணிக் கொண்டபடி வீட்டுக்குக் கிளம்பினாள் அவள்.

Advertisement

 

சந்தியா எண்ணியது போலவே வீட்டின் வெறுமை முகத்தில் அறையத் தான் செய்தது. எப்போதும் இந்நேரத்தில் அவளது வருகையை எதிர்பார்த்து வராண்டாவில் அப்பா மற்றும் பெரியப்பாவுடன் காத்திருக்கும் அவளது ஆச்சியின் அன்பான அழைப்பு, அவளுக்குப் பிடித்த சிற்றுண்டியைச் செய்துவிட்டு அவள் வந்ததும் ஒரு தட்டில் வைத்து நீட்டும் பெரியம்மாவின் பாசம், அவளது வேலை குறித்த தகவல்களைக் காது கொடுத்துக் கேட்கும் அம்மாவின் சகிப்புத்தன்மை இவையனைத்துமே அன்று மாயமாகியிருந்தன.

 

இந்த அமைதி மூளையை ஏதோ செய்ய அவளை நிறைய நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தாள் சுமித்ரா. அவளுக்குமே வீட்டின் கலகலப்பு தொலைந்தது போலிருக்க சந்தியா மெதுவாக அவளிடம் “சுமிக்கா சூரியா யூ.எஸ் போயிருக்கானாம்…. திரும்பி வர இன்னும் ஒன் மன்த் ஆகுமாம்” என்று பெருமூச்சுடன் உரைக்க, சுமித்ரா நேற்றைக்கு அதே சூரியாவைத் தானே இவள் திட்டித் தீர்த்தாள், இப்போது என்ன திடீர் கரிசனம் என்ற எண்ணம் எழவும் அதை வெளிப்படையாகக் கேட்டுவிட்டாள்.

 

“நீ தானே நேத்து சூரியாண்ணாவை கரிச்சு கொட்டுன… இப்போ என்னவாம் திடீர்னு பாசம் பொங்கி வழியுது?”

 

 

[the_ad id=”6605″]

 

“சுமிக்கா! நான் ஒன்னும் காரணம் இல்லாம அவனைத் திட்டலை… அவனோட அவசரக்குடுக்கைத்தனம் தான் எல்லாத்துக்கும் காரணம்… நான் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்லியும் அவன் இடும்புக்கு அப்பா கிட்டவும் அம்மா கிட்டவும் நான் அவனை மூனு வருசமா லவ் பண்ணுறேனு சொன்னான்ல… அதுக்கு நான் திட்டுனது கம்மி தான்”

 

“சரி! இப்போ உனக்கு சூரியாண்ணா மேல எந்த லவ்வும் இல்லை… அவரை வேண்டாம்னு சொல்லிட்ட… எல்லாம் சரி தான்…. ஆனா காலம் முழுக்க நீ சந்தியா தேவராஜாவே இருக்க முடியுமா? கண்டிப்பா சித்தி உனக்கு எவனோ ஒரு குப்பனையோ சுப்பனையோ பார்த்துக் கட்டி வைச்சிடுவாங்க… அப்போ நீ என்ன பண்ணுவ?”

 

“அப்பிடி ஒரு விஷயம் நடக்கவே நடக்காது… என்னால சூரியாவைத் தவிர வேற யாரையும் லைஃப் பார்ட்னரா நினைச்சுக்கூடப் பார்க்க முடியாதுக்கா”

 

“அடியே உன்னைக் கழுத்தை நெறிச்சுக் கொல்லப் போறேன்… நீயும் குழம்பி மத்தவங்களையும் குழப்பி வைக்கிற சந்து… ஸ்டெடியா ஒரு டிசிசன் எடு”

 

“உனக்குப் புரியுற மாதிரி தெளிவா சொல்லுறேன்… இப்போதைக்கு என்னால சூரியாவைக் பண்ணிக்க முடியாது… நான் கோர்ஸை கம்ப்ளீட் பண்ணிட்டுத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்… முதல்ல அதை அவன் புரிஞ்சுக்கணும்… அப்புறம் கல்யாணத்துக்குப் பிறகு என்னோட புரஃபசனை எதுக்காகவும் விடச் சொல்லி அவன் என்னைக் கட்டாயப்படுத்தக் கூடாது.. இதுக்கு அவன் எனக்கு கேரண்டி குடுக்கணும்… இந்த ரெண்டும் அவனுக்கு ஓகேவா இல்லையானு இன்னைக்கு வரைக்கும் அவன் என் கிட்டத் தெளிவா சொல்லலை சுமிக்கா… நான் என்ன பண்ணுறது?” என்று சொன்னவளின் மனநிலையையும் சுமித்ராவால் புரிந்துகொள்ள முடிந்தது.

 

வழக்கம் போல தங்கைக்குத் தைரியம் கொடுத்துவிட்டு இரவுணவை அவளுடன் சேர்ந்து தயாரிக்க ஆரம்பித்தவள், மறக்காமல் இரயிலில் சென்று கொண்டிருக்கும் குடும்பத்தினருடன் பேசிவிட்டு உறங்கச் சென்றாள் சுமித்ரா.

 

************

சூரியா அமெரிக்கா சென்று சில நாட்கள் கடந்தது. அவன் கிளம்பிச் சென்ற தினத்திலிருந்து இன்று வரை சந்தியாவிடம் பேச முயலவில்லை. சந்தியாவும் அவனாகப் பேசட்டும் என்ற முடிவிலிருந்ததால் அவனது மொபைலுக்கு அழைக்கும் எண்ணம் கிஞ்சித்தும் அவளுக்கில்லை.

 

அலுவலகத்தில் சூரியா இல்லாத நேரத்தில் ஆரியா பொறுப்பாகக் கவனித்துக் கொண்டான். அவனுக்கு வரும் சந்தேகங்களை அண்ணனுடன் பேசித் தெளிவுப்படுத்திக் கொள்வான். இருந்தும் பணிச்சுமை அவனைப் பொறுத்தவரைக்கும் அதிகம் தான். ஒரு மனிதன் இரண்டு ஆள் வேலையைச் செய்வது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை.

 

வேலைச்சுமை காரணமாக இப்போதெல்லாம் வாரயிறுதி கொண்டாட்டங்கள் தடைபட வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று கடிவாளம் கட்டியக் குதிரையைப் போல ஓடிக்கொண்டிருந்தான் அவன்.

 

சூரியாவின் செகரட்டரியாகச் சந்தியாவும் வேலையில் தன்னாலான உதவியை ஆரியாவுக்குச் செய்து கொண்டிருந்தாள்.  அன்றும் அப்படி அவன் கேட்ட கோப்பை அவனுக்குக் கொடுக்கச் சென்ற போது சூரியா வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கவே, சந்தியா ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கவும் ஆரியா “அண்ணா தான் பேசுறான் தியா… நீயும் பேசுறியா?” என்று போனை சந்தியாவிடம் நீட்டினான்.

 

சந்தியா அதை வாங்க மறுத்தவள் “எனக்கு நிறைய வேலை இருக்கு பாஸ்… நான் போய் அதைக் கம்ப்ளீட் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

 

சூரியாவின் கண்ணுக்கு அவளது உருவம் புலப்படவில்லை என்றாலும் அவள் பேசிய அனைத்தும் அட்சரச்சுத்தமாக அவனது செவியை அடைந்தது. பிறகு பேசுகிறேன் என்று இணைப்பைத் துண்டித்தவன் சந்தியாவின் நினைவில் சோபாவில் சரிந்து அமர்ந்தான்.

 

இப்படியே இருக்கமுடியாது, என்றைக்கு இருந்தாலும் தான் இந்தியா திரும்பவேண்டும் என்று அவன் அறிவான். அப்படி இந்தியா திரும்பினால் சந்தியாவின் முகத்தில் விழித்துத் தான் ஆகவேண்டும் என்பதையும் அறிவான். அப்போது அவள் எப்படி நடந்து கொள்வாள் என்பது அவனைப் பொறுத்தவரைக்கும் புரியாத புதிராகவே இருந்தது.

 

இம்மாதிரியான எண்ணங்களுடன் உழன்றவன் வெளியே சென்று தோட்டத்தில் தான் சந்தியாவிடம் காதலைச் சொன்ன இடத்தில் நின்றபடி எல்லாம் கூடிய விரைவில் பழையபடி மாறவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டான்.

 

இவ்வாறிருக்க நாட்கள் வேகமாகக் கடந்தன.. தைப்பொங்கலுக்கு மேலகரம் வருமாறு அழைத்த கோமதியம்மாளின் வேண்டுகோளுக்கு சந்தியா தலைசாய்க்கவில்லை. அவள் பிடிவாதமாக வர மறுத்துவிடவே சுமித்ரா தானும் வரவில்லை என்று கூறிவிட்டாள்.

 

எப்போதும் பொங்கல் இட அடுப்புக்கட்டி எடுத்து வைப்பதிலிருந்து பால் பொங்கியதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாகக்கூச்சலிடுவது வரைக்கும் உடனே இருக்கும் பெண்கள் இந்தமுறை இல்லாதது குடும்பத்தினருக்கு மிகுந்த வருத்தமே. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பொங்கலிட்டு முடித்தனர்.

 

சந்தியாவுமே ஊரின் நினைவில் மனம் வாடிப்போனவள் அடுத்த மாதம் வரப்போகிற தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். அவள் சென்னை வந்ததன் நோக்கமே அது தானே!

 

அவளை ஏமாற்றாமல் தேர்வுமுடிவுகளும் அவளுக்குச் சாதகமாகவே வந்தது. சந்தியா அன்று ரெக்கையின்றி வானில் பறந்தாள் என்று சொன்னால் மிகையாகாது. தேர்வு முடிவை முதலில் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டவள் “இதே மாதிரி ஃபைனலும் நல்லபடியா எழுதிமுடிச்சுடுவேன்… அதுக்கு அப்புறமா தான் நம்ம ஊருக்கு வருவேன்..” என்று அப்போதும் பிடிவாதத்துடன் கூறிவிடவே

 

ரேணுகா “உன் இஷ்டம்… நீ விளையாட்டுப்பொண்ணுனு நினைச்சு தான் நான் பயந்தேன்.. ஆனா நீ எதுக்காகச் சென்னைக்குப் போனியோ அதுல பாதி வெற்றி உனக்குக் கிடைச்சிருக்கு… இப்போ எனக்கு உன் மேல முழுநம்பிக்கை இருக்கு சந்தியா… உன்னால ஈஸியா இந்த கோர்ஸை கிளியர் பண்ண முடியும்… யாருக்காகவும் எதுக்காகவும் உன்னோட இலட்சியத்தியத்தை விட்டுக்குடுக்க வேண்டாம்.. இதை நான் மனசார சொல்லுறேன்” என்று மனப்பூர்வமாகக் கூறிவிடவும் சந்தியாவுக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

[the_ad id=”6605″]

 

நீண்டநாளுக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியாக உரையாடிவிட்டுப் போனை வைத்தவள் சுமித்ராவை அழைத்து தான் தேர்ச்சி பெற்ற விவரத்தைக் கூறினாள். சுமித்ரா ஒருவாறு தங்கையின் கனவிற்கான முதல்படியில் அவள் ஏறிவிட்டதை எண்ணி மகிழ்ந்தவள் மாலையில் இனிப்புடன் வருவதாகச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள். அடுத்து ஆரியாவிடமும், நாராயணன் மற்றும் ஹேமாவிடமும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.

 

சூரியாவுக்குப் போன் செய்து சொல்லலாமா என்று எண்ணியவள், இந்தத் தேதியில் தனது தேர்வுமுடிவுகள் வருமென்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தும் அவன் தனக்கு அழைக்கவில்லையே என்று எண்ணி  ஆதங்கப்பட ஆரம்பித்தாள். ஆனால் தேர்வுமுடிவு வந்த நாளின் இரவு வரை சூரியாவிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் அந்த ஆதங்கம் கோபமாக வெடித்து விட்டது. அதன் விளைவு சந்தியாவின் ராஜினாமா கடிதம் ஆரியாவின் ஈமெயிலுக்குச் சென்றது.

 

சாரல் வீசும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!