Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Saaralaai Theendinaai Anbae

சாரலாய் தீண்டினாய் அன்பே – 24.1

காலையிலேயே தனது அலுவலக அறையில் நிலை கொள்ளாமல் தவித்தபடி அமர்ந்திருந்தான் ஆரியா. சந்தியாவின் ராஜினாமா கடிதம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் விளைவே இது. நன்றாக வேலை செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தாலும் அவன் அறிவுக்கு எட்டியவரை எந்தக் காரணமும் புலப்படவில்லை.

 

சந்தியாவுக்குப் போன் செய்தால் அவளோ போனை எடுக்கவே இல்லை. சரி சூரியாவிடம் விஷயத்தைத் தெரிவிக்கலாம் என்றால் அவனது நிலையும் அதுவே. என்ன செய்யவென்று புரியாதவனாய் விழித்துக் கொண்டிருந்தவன் அன்று மாலையே சந்தியாவின் வீட்டுக்குச் சென்றான்.

 



Advertisement

சுமித்ரா இன்னும் வீடு திரும்பாத நிலையில் சந்தியா மட்டும் வராண்டாவில் கன்னத்தில் கைவைத்தபடி சோம்பலுடன் அமர்ந்திருந்தாள். அவளது கோலத்தைக் கண்டதும் ஏதோ சரியில்லை என்று ஊகித்தவன் “ஹாய் தியா” என்று வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

 

இவ்வளவு நேரம் சோம்பியிருந்தவள் ஆரியாவைக் கண்டதும் “வாங்க பாஸ்” என்று உற்சாகத்துடன் வரவேற்க அவன் வழக்கம் போல அவளுக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு அவள் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.

Advertisement

 

Advertisement

“என்னாச்சு தியா? நேத்து நீ எக்சாம் கிளியர் பண்ணிட்டேனு சொன்னப்போ நான் எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? ஆனா ரொம்ப நேரம் நான் சந்தோசமா இருந்தா உனக்குப் பிடிக்காது போல… ஏன் ரிசைன் பண்ணனும்னு நினைக்கிற?”

“நான் அடுத்து ஆர்டிக்கிள்ஷிப் பண்ணனும் பாஸ்… அதுக்கு நான் ஆடிட்டர் கிட்ட ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன்… சோ ரிசைன் பண்ணிட்டேன்”

 

Advertisement

“இது உண்மைனு நான் நம்பணுமாக்கும்? நீ என்னை அண்ணா மாதிரி நினைச்சுட்டியா தியா? நான் உன்னை என்னோட ஃப்ரெண்டா நினைக்கிறேன்.. ஒரு ஃப்ரெண்ட் இன்னொரு ஃப்ரெண்ட் கிட்ட பொய் சொல்ல மாட்டாங்க”

 

ஆரியா விடாப்பிடியாகப் பேசப் பேச சந்தியாவின் ராஜினாமாவுக்கான காரணம் வெளிப்பட்டுவிட்டது.

 

“எல்லாத்துக்கும் உங்க நொண்ணா தான் காரணம் பாஸ்… நான் ஒருத்தி இருக்கேங்கிறதையே மறந்துட்டான்ல அவன்… எனக்கு நேத்து ரிசல்ட்டுனு அவனுக்கு நல்லாவே தெரியும்… ஆனா ஒரு கால் கூடப் பண்ணிக் கேக்கலை..”

 

“இதுக்கா நீ ரிசைன் பண்ணுன? உனக்கே தெரியும் தானே! டைம் ஜோன் டிஃபரன்ஸ்.. சோ அவன் அப்புறமா பேசலாம்னு நினைச்சுருப்பான்”

 

“அண்ணனுக்குச் சப்போர்ட்டா பாஸ்? அமெரிக்கா என்ன செவ்வாய் கிரகத்துலயா இருக்கு? பல்லாயிரம் லைட் இயர்ஸ் தாண்டி அவனோட மெசேஜ் வந்து சேருறதுக்கு? இதுல்லாம் சும்மா சாக்குபோக்கு பாஸ்… உங்க அண்ணாவுக்கு லவ்வும் இல்லை, ஒன்னும் இல்லை… இவ்வளவு ஏன், என்னை ஒரு ஃப்ரெண்டா கூட அவன் மதிக்கலை… அவனோட கம்பெனியில இனி நான் ஒர்க் பண்ணுறதா இல்லை பாஸ்” என்று சந்தியா பிடிவாதமாய் அவன் பேச்சைக் கேட்க முடியாது என்று மறுத்துவிட, ஆரியாவும் அவளுடன் போராடித் தோற்றவன் வீடு திரும்ப எழுந்த நேரம் சுமித்ரா வேலை நேரம் முடிந்து திரும்பிவிட்டாள்.

 

கேட்டைத் திறந்தவளின் பார்வையில், வராண்டாவில் அமர்ந்திருந்த சந்தியாவிடம் பேசிவிட்டு எழுந்த ஆரியா படவும் அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. இவன் கட்டாயமாக ராஜினாமா பற்றித் தான் பேச வந்திருப்பான் என்று. சந்தியாவின் முகத்திலிருந்த பிடிவாதமே அவள் அவன் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டாள் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட பெருமூச்சுடன் படியேறியவள், தங்கையிடம் புன்னகையை வீசிவிட்டு ஆரியாவை உள்ளே வருமாறு கண் காட்டிவிட்டுச் சென்றாள்.

 

[the_ad id=”6605″]

 

 

ஆரியா “என்னடா ஜெகன் மோகினி இப்பிடி கண்ணால பேசிட்டுப்போகுது?” என்ற யோசனையுடன் அவளைப் பின் தொடர சுமித்ரா சட்டென்று நின்றவள் அவனை நோக்கி எதிர்புறம் திரும்ப இருவரும் முட்டிக்கொண்டனர்.

 

“அம்மா!” என்ற சத்தம் ஒரே நேரத்தில் கேட்க வராண்டாவில் இருந்த சந்தியா என்னவாயிற்றோ என்ற பதற்றத்த்துடன் ஓடிவந்துப் பார்த்தாள்.

 

இருவரும் தலையைத் தடவிக்கொண்டபடி நிற்க அவளுக்கு விஷயம் விளங்கிவிட்டது.

 

“பார்த்து நடக்க மாட்டிங்களா ரெண்டு பேரும்? குழந்தைங்க தோத்துருவாங்க உங்க கிட்ட” என்று கேலியாய் சொல்லிவிட்டு மீண்டும் வராண்டாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

சுமித்ரா அவள் செல்வதைப் பார்த்தபடி தலையைத் தடவிக்கொண்டவள் “உன்னால தான் எல்லாம்… எப்பிடி வலிக்குது தெரியுமா? அப்பிடியே பொறி கலங்குன மாதிரி இருக்கு” என்று குறைபட

 

ஆரியா “ஏன் சொல்ல மாட்ட தாயே! நேரா போயிட்டிருந்தவ எதுக்கு சடன் பிரேக் போட்டு யூடர்ன் அடிச்ச? நீ தான் எல்லாத்துக்கும் காரணம்… இருந்தாலும் உனக்கு வலிக்குதுங்கிற ஒரே காரணத்துக்காக நான் உன்னைப் பெரியமனசு பண்ணி மன்னிச்சிட்டேன்… பிழைச்சுப் போ” என்று சொல்லிவிட்டு ஹாலில் கிடந்த மேஜையில் சாய்ந்து கொண்டான்.

 

சுமித்ரா அவனிடம் வாதிட்டு ஜெயிக்க தன்னால் இயலாது என்பதை அறிந்தவள் நேராக விஷயத்துக்கு வந்தாள். சந்தியா ஏதோ கோபத்தில் தான் சூரியாவிடம் திருமணம் வேண்டாமென்று சொல்லிவிட்டாள் என்றும், அவள் மனதில் அவன் மீதுண்டான காதல் இன்னும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறது என்றும் ஆரியாவிடம் தெரிவித்தாள்.

 

அதோடு சந்தியா கூறிய இரு நிபந்தனைகளையும் ஆரியாவிடம் கூறியவள் அதற்கு சூரியா சம்மதம் தெரிவிக்காத வரைக்கும் சந்தியா தன் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள மாட்டாள் என்பதையும் தெரிவித்துவிட்டாள்.

 

ஆரியா அனைத்தையும் கவனமாகக் கேட்டுவிட்டு “நீ சொல்லுறது எல்லாம் சரி தான்… பட் அவங்க ரெண்டு பேரும் பேசுனா மட்டும் தான் இதுக்கு ஒரு முடிவு வரும்… காதல்னு வந்துட்டா சம்பந்தப்பட்ட ரெண்டு பேரு பேசுனா தான் அதுக்கு சொல்யூசன் கிடைக்கும்… சோ என்னால முடிஞ்சது அண்ணாவை சீக்கிரமா இந்தியா வரவைக்க டிரை பண்ணுறேன்… நீ தியாவோட ஆதங்கம் கோபமா மாறி, அது வெறுப்பா பரிணாம வளர்ச்சி அடையாம பார்த்துக்கோ… நான் கிளம்புறேன்.. பை” என்று அழுத்தமான குரலில் உரைத்துவிட்டுக் கிளம்பினான்.

 

சுமித்ரா அனைத்தையும் உம் கொட்டிக் கேட்டவள் வாசல் வரை சென்றவன் திரும்பவும் ஹாலுக்கு வரவும், என்னவென்று ஏறிட்டுப் பார்க்க ஆரியா அவள் அருகில் வந்தவன் அவளது நெற்றியைச் சுட்டிக்காட்டி “பெயின் ரிலீஃப் ஸ்பிரே எதாச்சும் போட்டுக்கோ… இல்லைனா கண்டிப்பா நெத்தி வீங்கிடும்… அப்புறம் அழகான மோகினியா இருக்கிறவ நிஜமாவே ஜெகன் மோகினி மாதிரி ஆயிடுவ” என்று சொல்லிவிட்டுச் செல்ல சுமித்ரா நெற்றியைத் தடவியபடி நின்றவள் பக்கென்று நகைத்துவிட்டாள்.

 

ஆரியா சந்தியாவிடம் போய் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியவனின் செவியில் சுமித்ராவின் சிரிப்பு விழவே அவனது இதழிலும் அதைக் கேட்டுப் புன்னகை அரும்பியது. அந்த இனிய மனநிலையோடு வீட்டுக்குச் சென்றான் ஆரியா.

 

வீட்டுக்குச் சென்று குளித்து உடை மாற்றிவிட்டு வரும் போதும், இரவுணவின் போதும் அச்சிரிப்பு மாறாமல் அவன் இதழில் பட்டா போட்டு குடியிருக்கவே நாராயணன் தனது மனைவியைப் பார்க்க அவரோ இளையமகனது புன்முறுவலைப் பார்த்தும் பாராதவராய் சாப்பாட்டில் கண் பதித்திருந்தார்.

 

நாராயணன் இது சரிவராது என்று தானே மகனிடம் கேட்க முனைய அவரது வார்த்தைகள் எதுவுமே அவனது செவியைத் தீண்டவில்லையே!

 

ஒரு வழியாக இரவுணவை முடித்துவிட்டுத் தனது அறைக்குத் திரும்பியவனின் மனம் அன்றொரு நாள் தன் எதிரே மஞ்சள் வண்ண காட்டன் டாப்பும், கருப்பு நிற லெகிங்க்ஸும் அணிந்து தனது நீண்ட கூந்தலை போனிடெயிலாகப் பக்கவாட்டில் போட்டிருந்தபடி அவனை நோக்கி வாள் போன்று பார்வையைச் சுழற்றியவளின் பின்னே செல்லவே ஆரியா தன் தலையில் ஓங்கி அடித்துக்கொண்டான்.

 

“அறிவில்லையாடா உனக்கு? அந்த ஜெகன்மோகினி கெக்கெ பிக்கேனு சிரிச்சு வச்சா நீயும் மயங்கிடுவியா? ஆனா ஒரு விஷயம் கரெக்ட்… அவளுக்கு நீ ஜெகன்மோகினினு நேம் வச்சது ஹன்ட்ரெட் பர்சண்டேஜ் கரெக்ட்… ஏதோ பிளாக் மேஜிக் பண்ணி உன் மூளையை வசியம் பண்ணிட்டா…. இனிமே அவளைப் பார்த்தா கேர்ஃபுல்லா இரு ஆரியா” என்று அவனது மனசாட்சி அவனைச் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்தது.

 

ஆரியா அந்தத் திட்டையும் சந்தோசமாக வாங்கிக்கொண்டவன் ஒரு பெண்ணின் சிரிப்பும், கார்க்கூந்தலும் கூடவா ஒரு ஆடவனை மதிமயங்கச் செய்யும் என்ற ஆச்சரியத்துடனே உறங்கிப் போனான்.

 

****************

 

சந்தியா ஆடிட்டர் அலுவலகத்தில் ஆர்ட்டிக்கிள் கிளார்க்காகச் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிவடைந்திருந்தது. அவளுக்கு காலையிலிருந்து மாலை வரை ஓய்வின்றி பார்க்கும் அவ்வேலை மிகவும் பிடித்துப் போய்விட்டது. இந்த உலகத்தில் எத்தனை பேருக்குப் பிடித்த வேலையைச் செய்யும் பாக்கியம் கிடைக்கிறது! அது தனக்கு வாய்த்தது மிகப்பெரிய விஷயம் என்று புரிந்து கொண்ட சந்தியா வேலையில் கண்ணாக இருந்தாள்.

 

அவள் புதிதாகச் சேர்ந்திருந்ததால் அங்கே உள்ள அனுபவம் வாய்ந்த பணியாளரான புவனாவிடம் சந்தியாவை பயிற்சி எடுக்கச் சொல்லிவிட அவளும் ஆர்வத்துடன் தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சந்தியாவுக்குக் கற்றுக்கொடுத்தாள்.

 

தனது பின்னிருபதுகளில் இருந்தவளுக்குச் சந்தியாவின் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அவளது சுறுசுறுப்பும் பிடித்துப் போய்விட வேலையையும் தாண்டி அவளிடம் அக்கறையுடன் நடந்து கொண்டாள் புவனா. புவனாவின் ஆர்டிக்கிள்ஷிப் காலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விலாவரியாகச் சந்தியாவிடம் விளக்குவாள் அவள்.

 

சந்தியாவுக்குப் புவனாவின் வேலைத்திறமையைக் கண்டு ஆச்சரியமாக இருக்கும். பின்னே என்னவாம், இருபத்து ஒன்பது வயது குடும்பத்தலைவி, கிண்டர்கார்டன் படிக்கும் ஒரு சிறுவனின் தாய் இவற்றுக்கிடையே படிப்பையும் கவனித்து ஒரே முயற்சியில் அனைத்துத் தேர்வுகளையும் முடித்தவளை நினைத்து ஆச்சரியம் வராமலா இருக்கும்!

 

இது குறித்து புவனாவிடம் அவள் வினவும் போதெல்லாம் அவளுக்குக் கிடைத்தப் பதில் இது தான்.

 

“ஆதி இருக்கிறவரைக்கும் எனக்கு எந்த டென்சனும் இல்லை சந்து”

 

தனது கணவன் ஆதியை நினைத்து அவளுக்கு அவ்வளவு பெருமிதம். வெறும் பட்டதாரியாக இருந்த மனைவியின் கனவான பட்டயக்கணக்காளர் படிப்பை நனவாக்கியதில் ஆதியின் பங்கு அதிகம். திருமணத்துக்குப் பின் குடும்பப்பொறுப்பிலும் சரி, வீட்டுவேலையிலும் சரி சளைக்காமல் மனைவிக்குத் தோள் கொடுப்பவன் மனைவியின் படிப்புக்குப் பங்கம் வராமல் பார்த்துக்கொண்டான்.

 

இதற்கிடையே இவர்களின் இனிய இல்லறத்தின் அடையாளமாக பிரணவ் பிறக்க மனைவியுடன் சேர்ந்து மகனையும் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டான் ஆதி.

 

[the_ad id=”6605″]

 

அவன் இவ்வளவு உறுதுணையாக இல்லையென்றால் புவனாவால் இந்தப் படிப்பை பற்றி கனவில் மட்டும் தான் நினைக்க முடிந்திருக்கும். இதைச் சந்தியாவிடம் கூறியபோது அவளும் திகைத்துத் தான் போனாள். திருமணம் தனது கனவுகளுக்கு முடிவு கட்டிவிடுமோ என்ற அவளது பயம் தினந்தோறும் புவனாவை அலுவலகத்தில் விட்டுவிட்டு “டைமுக்குச் சாப்பிடு புவிம்மா… நான் ஆபிஸ் போயிட்டுக் கால் பண்ணுவேன்” என்று அக்கறையுடன் கூறிவிட்டுச் செல்லும் ஆதியைக் கண்டதும் சற்று மட்டுப்படும்.

 

புவனாவும் தனது படிப்பை நேசிக்கும் அதே அளவுக்கு கணவனையும், மகனையும் நேசிப்பதை அடிக்கடி சந்தியாவிடம் பகிர்ந்துகொள்ள சந்தியாவுக்கே திருமண விஷயத்தில் தனது நிலைப்பாடு சரியில்லையோ என்ற சந்தேகம் சில நாட்களாக வர ஆரம்பித்திருந்தது.

 

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் புவனாவின் கையில் அகப்பட்டது சந்தியாவின் கைப்பையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும் டைரி. வேலை இல்லாது ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவள் டைரியில் கிறுக்குவதைப் புவனா கவனித்திருக்கிறாள். சரி அப்படி என்ன தான் எழுதியிருப்பாள் என்ற ஆர்வம் உந்தித் தள்ள டைரியைத் திறந்து பார்த்தாள் புவனா.

 

அதன் ஒவ்வொரு பக்கமும் சந்தியாவின் மனதில் மறைந்திருந்த உணர்வைப் பிரதிபலிக்க, விளையாட்டுப்பெண்ணாய் இருக்கும் அவளது மனதில் இவ்வளவு ஆழமான உணர்வுகளுக்கும் இடமுள்ளதா என்ற ஆச்சரியம் புவனாவுக்கு.

 

கடைசியாக அவள் எழுதி வைத்திருந்த வரிகளின் கீழே கண்ணீர்த்துளிகள் விழுந்த அடையாளம் இருக்க, அந்த வரிகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் புவனா.

 

காதல் பிரிவைத் தாளாது

கண்டம் தாண்டிச் சென்ற பறவையே!

நீ தாயகம் திரும்பும் நாளுக்காய்

காத்திருக்கிறது என் மனம்!

இந்த வார்த்தைகள் அவள் யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பதை உணர்த்த சந்தியா வரும் அரவம் கேட்கவும் டைரியை மூடிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் புவனா.

 

சந்தியா கையில் ஒரு கோப்பைப் புரட்டியபடி “புவனாக்கா ஜி.எஸ்.டி நம்பர் அப்ளை பண்ணுறதுக்கு ரெண்டல் அக்ரிமெண்ட் வேணும் தானே? இந்த கிளையண்ட் குடுக்காம போயிட்ட்டாருக்கா… நான் கால் பண்ணி மெயில்ல அனுப்பச் சொல்லவா?” என்ற கேள்வியுடன் வந்தவள் புவனாவின் கையிலிருக்கும் தனது டைரியைக் கண்டதும் அமைதியாகி விட்டாள்.

புவனா அந்த டைரியைச் சுட்டிக்காட்டி “இதுல கடைசியா நீ எழுதியிருக்கிறதைப் பார்த்தா ஏதோ பெருசா உன் மூளையைக் குழப்புதுனு நினைக்கிறேன்… நீ விரும்புனா இதைப் பத்தி நம்ம ஈவினிங் பேசுவோம்” என்று கூற

சந்தியாவுக்கும் புவனாவிடத்தில் பகிர்ந்து கொண்டால் தனது மனதிலுள்ள குழப்பங்கள் அகலும் என்று தோண “சரிக்கா! நீங்க என்னோட இன்னைக்கு ஈவினிங் எங்க வீட்டுக்கு வாங்க… அங்கே வச்சு உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லுறேன்” என்று சொல்லிவிட்டாள்.

புவனா ஆதிக்குப் போனில் அழைத்தவள் “இன்னைக்கு ஈவினிங் நான் சந்துவோட வீட்டுக்குப் போறேங்க… நீங்க என்னை பிக்கப் பண்ணிக்க அங்கேயே வந்துடுங்க” என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டாள்.

சொன்னபடியே இருவரும் மாலையில் சந்தியாவின் வீட்டுக்கு வந்துவிட்டனர். சந்தியா இருவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தவள் புவனாவுக்கு ஒரு கோப்பையை நீட்டிவிட்டுத் தானும் காபியை அருந்தியபடி அமர்ந்தாள்.

புவனா கூரியவிழிகளால் அவளை ஏறிட்டபடி காபியை அருந்த ஆரம்பிக்க, சந்தியா மேலகரத்திலிருந்து சென்னை வரை தனது வாழ்வில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் அவளிடம் கூற ஆரம்பித்தாள். இப்போது தான் இருக்கும் குழப்பமான மனநிலையில் தன்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லையென்றும், தான் சூரியாவிடம் இருந்து எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை அவன் வாயால் கேட்டால் தான் எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு வரும் என்றும் கூறிவிட்டாள்.

புவனா அவளது நிலையைப் புரிந்து கொண்டவள் அவளிடம் இந்த விஷயத்தில் தன்னுடைய கருத்தை தெரிவிக்க ஆரம்பித்தாள்.

“நீ நிஜமாவே சூரியாவைக் காதலிச்சா தயங்காம அவர் கிட்ட என்னோட நிலமை இது தான், உங்களால எனக்காக காத்திருக்க முடியுமானு கேட்டுட வேண்டியது தானே! இதுல உனக்கு குற்றவுணர்ச்சி வரவேண்டிய அவசியமே இல்லை சந்து…

அவருக்கு உன்னோட நிலமை புரிஞ்சுதுனா கண்டிப்பா உனக்காகச் சந்தோசமா வெயிட் பண்ணுவாரு… காதலோட அருமை அதுக்காகக் காத்திருக்கிறப்போ தான் புரியும்…

அதே மாதிரி நீயும் சில விஷயங்களைப் புரிஞ்சுக்க டிரை பண்ணு… கல்யாணம், குடும்பம், குழந்தைங்க இது எதுவுமே உன்னோட கனவுக்குத் தடையா இருக்காது… நீ காதலிக்கிறவரு உன் கூட உறுதுணையா இருக்கிற வரைக்கும்” என்று ஆணித்தரமாகக் கூறிவிட சந்தியாவின் மனதைச் சூழ்ந்திருந்த குழப்பமேகங்கள் அகல, தெளிவு என்னும் சூரியன் உதயமாக ஆரம்பித்தது.

புவனா அதோடு நிற்காமல் இன்னும் சில விஷயங்களை எடுத்துக் கூறி அவளுக்குப் புரியவைத்தாள். சிறிதுநேரத்தில் ஆதியும் வந்துவிட புவனா அவனுடன் கிளம்பினாள். சந்தியா அவள் கிளம்பிச் சென்றதும் தெளிந்த மனதோடு சுமித்ரா வீடு திரும்பும் முன்னர் இரவுணவுக்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் வீட்டு வாயிலில் கேப் நிற்கும் சத்தம் கேட்கவும் சுமித்ரா வந்துவிட்டாள் என்று ஊகித்தவள் உற்சாகத்துடன் “சுமிக்கா! இன்னைக்கு உனக்குப் பிடிச்ச டிபன் தான் செய்யப் போறேன்” என்று ராகத்துடன் காய்கறிகளை வெட்ட

களைத்துப் போன முகத்துடன் சமையலறைக்குள் நுழைந்த சுமித்ரா தங்கையின் உற்சாகம் நீண்டநாள் கழித்துத் திரும்பியதில் முகத்தின் களைப்பு சிறிது மாயமாக “ரொம்ப ஹேப்பியா இருக்கியா சந்து? இன்னைக்கு உன்னோட ஃபேஸ்ல ஒரு க்ளோ தெரியுதே” என்று இலகுவாக பேசியபடி அவள் வெட்டிவைத்திருந்த கேரட்டில் ஒரு துண்டை வாயில் போட்டுக்கொண்டுக் கேட்டாள்.

சந்தியா சுமித்ராவின் கையில் பட்டென்று ஒரு அடி வைத்தபடி வெட்டியக் காய்கறிகளைத் தனியே எடுத்துவைத்தாள்.

சுமித்ரா அவள் எடுத்து வைத்திருந்த பொருட்களைக் கண்டதும் “ஐய்! வெஜிடபிள் உப்புமாவா? நீ ரெடி பண்ணு சந்து… நான் குளிச்சுட்டு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன்” என்றபடி வெளியேற சந்தியா உப்புமா கிளற ஆரம்பித்தாள்.

சுமித்ரா குளித்துவிட்டு வரவும் உப்புமா தயாராகியிருக்க இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பிடும் போது சந்தியா புவனாவின் அறிவுரைகளைத் தமக்கையிடம் பகிர்ந்து கொண்டாள்.

சுமித்ரா உம் கொட்டியபடி சாப்பிட்டவள் “நானும் அதைத் தான் சொல்லுறேன் சந்து! நீ சூரியாண்ணா கிட்ட ஓப்பனா பேசிடு… உனக்காக காத்திருக்கணுமா வேண்டாமானு அவர் தான் முடிவு பண்ணனும்… அதை விட்டுட்டு நீ மதில் மேல பூனை மாதிரி இருந்தா எல்லாருக்கும் இதால குழப்பம் மட்டும் தான் மிஞ்சும்” என்று புவனாவின் சொற்களையே திருப்பிப் படிக்க சந்தியா அதற்கு சரி சரியென்று தலையாட்டி வைத்தாள்.

இருவரின் வார்த்தைகளை மனதில் பதியவைத்துக்கொண்டவள் அதற்குப் பின்னர் சூரியா இந்தியா திரும்பும் நாளுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் அவன் எப்போது இந்தியா திரும்புவான் என்று நேரடியாக அவனிடம் கேட்க சங்கடப்பட்டவள் ஆரியாவிடம் அது குறித்து வினவவும் ஆரியாவுக்குமே அண்ணன் இந்தியா திரும்பும் நாள் பற்றி தெளிவாகத் தெரியவில்லை.

அவளைப் பார்க்க வீட்டுக்கு அடிக்கடி வருபவனிடம் சூரியாவைக் குறித்து அடிக்கடி சந்தியா விசாரணை நடத்த ஆரியாவோ “அவன் பாட்டுக்கு இந்தியாவுல உன் கூட டூயட் பாடலாம்னு நினைச்சிட்டிருந்தான்… நீ தான் பிரேக்கப் பண்ணி அவனை அமெரிக்கால இருக்கிற உன் சக்களத்தி கூட டூயட் பாட அனுப்பி வைச்சிட்ட தியா… இப்போ பதறி என்ன புண்ணியம்?” என்று கேலி செய்ய

சந்தியா “சக்களத்தியா? ஐயையோ! நான் அந்த நிப்பான் பெயிண்டை மறந்தே போயிட்டேனே பாஸ்” என்று சொல்லி வருந்தியே மாய்ந்து போனாள்.

ஆரியா அவளது அதிர்ந்து போன தோற்றத்தைக் கண்டு அடக்கமாட்டாமல் நகைக்கவும், சுமித்ரா தான் “அவன் உன்னைக் கிண்டல் பண்ணுறான்டி… அது கூடப் புரியாம நீயும் பதறி வைக்கிற… உன்னை என்ன தான் பண்ணுறது?” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

அதன் பின்னரும் சந்தியாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்போது சூரியா இந்தியாவுக்குத் திரும்புவான் என்ற காத்திருப்போடு சேர்ந்து சாயாவைக் குறித்த கலக்கமும் அவளைப் பாடாய்ப்படுத்தியது. ஆனால் அவளது கலக்கத்தைத் தீர்க்கக் கூடியவனான சூரியா எவ்வித அறிவிப்பும் செய்தியுமின்றி இந்தியா திரும்பினான்.

*****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!