Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 18

சாரல் – 18

மேம்ம்ம்ம் என்ற அலறல் சத்தத்தை தொடர்ந்து, இருவரும் சத்தம் வந்த திசையில், மாடியை நோக்கி ஓட, அதற்குள் மேம், மேம் உள்ள அனி.. அனி..னி.. என்று சொல்ல முடியாமல் தடுமாற, விறுவிறு வென்று அறையின் உள்ளே சென்று பார்க்க, அங்கு அனிதாவோ இருகைகளையும் அறுத்து, ரத்தம் தரையில் சொட்டி இருக்க, மயங்கி கீழே கிடந்தாள்.

ஐயோ என்று வாயில் கைவைத்துக் கொண்டு, முழுதாக ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் சிலையாய் நிற்க, பின்பு தன்னை சுதாரித்துக் கொண்டு, “தர்ஷி.. எல்லாரையும் வெளில அவங்கவங்க ரூமுக்கு போக சொல்லு..யாரது ஒருத்தவங்க பேண்ட்ரி போயிட்டு அங்க இருக்குற பிரிட்ஜ்ல இருந்து ஐஸ் கட்டியை ஒரு துணில போட்டு எடுத்து வாங்க… சீக்கரம், சீக்கரம்..  கூட்டம் கூட வேண்டாம்.. யாராவது நாலு பேரு மட்டும் நில்லுங்க.. சீக்கரம் எல்லாரும் வெளில கிளம்புங்க.. ப்ளீஸ் கேர்ள்ஸ் தயவு செஞ்சு கொஞ்சம் எல்லாரும் கோ- ஆப்பிரேட் பண்ணுங்க.. சிட்டுவேஷன் புரிஞ்சி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..”

இவளை யாராவது தூக்கி சாச்சு நிறுத்துங்க.. இந்த ரூம்ல துணி இல்ல ஷால் இருந்தா குடுங்க சீக்கரம்.. என்று எல்லாரையும் துரிதமாக செயல் படுத்தி, அவளிற்கு இரு கைகளிலும் இறுக்கமாக கட்டை கட்டிவிட்டு, அப்படியே இவளை தூக்கிட்டு வாங்க.. என்று வெளியில் ஓட,



Advertisement

தர்ஷி.. நீ இவளோட போன் எங்க இருக்குனு பாரு.. அதை எடுத்து வச்சிக்கோ, அப்பறம் ரூம்மேட் எல்லாரோடதையும் வாங்கிக்கோ.

அதற்குள் விஷயமறிந்து அங்கு வந்த வேற ஆசிரியர்கள், மேம் என்ன பண்ணுறீங்க? எங்க கூட்டிட்டு போறீங்க..?.. ஹெட் க்கு இன்போர்ம் பண்ணிட்டிங்களா?.. என்று கேள்வி அம்புகளை தொடுக்க,

அவர்கள் சொல்வதை எல்லாம் காதில் வாங்காமல், அங்கிருந்த தனது வண்டியை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டே, நீங்க யாருக்கு சொல்லணுமோ, சொல்லிடுங்க.. எனக்கு சொல்லிட்டு போக இப்போ நேரமில்லை. கேர்ள்ஸ் அவளை எனக்கு பின்னாடி உக்கார வைங்க.. தர்ஷி நீ வந்து உக்காந்து அவளை பிடி.. சீக்கரம்.. அப்பறம் அந்த ஐஸ் கட்டியை அந்த கட்டு மேல வச்சிட்டே வா… கேர்ள்ஸ்.. ப்ளீஸ், டேக் கேர் அதேர்ஸ்… என்று கூறிவிட்டு வண்டியை அரசு மருத்துவமனை நோக்கி செலுத்தினாள். “தர்ஷி.. அப்படியே நந்துக்கு கால் பண்ணி, நாங்க வரோம்… எமெர்ஜெண்சினு  மட்டும் சொல்லிட்டு வை..”

Advertisement

பாரேன்! எவ்வளோ திமிரு இவளுக்குனு.. இவ இஷ்டத்துக்கு கூட்டிட்டு போறா.. என்று பேசிக்கொண்டே, வைஸ் ப்ரின்சிபாலிற்கு அழைத்து தங்கள் சொல்ல வேண்டியதை எல்லாம் கண கச்சிதமாக பேசிவிட்டு வைத்தனர்.

Advertisement

இதை கேட்ட வைஸ் ப்ரின்ஸிபலோ, “மாட்டுனடி அவந்தி நீ.. என்னையா ஸ்டுடென்ட்ஸ்க்கு முன்னாடி அசிங்கப்படுத்துன.. இப்போ நீ மாட்டுனடி மவளே.. இப்போ தான் அப்படியே ஒரு கோழியை முழுசா பிரியாணி போட்டு சாப்பிட மாறி இருக்கு..” இப்போ உன்கிட்ட எதுவும் கூப்பிட்டு நான் கேக்க மாட்டேனே.. நாளைக்கு சாவகாசமா வந்து உன்கிட்ட துக்கம் விசாரிக்குறேன்.. என்று தனக்கு தானே பேசி சிரித்துக் கொண்டே ப்ரீத்திக்கு அழைத்தார்.

அந்த பக்கம் அழைப்பை எடுத்ததும், ஆனாலும் ப்ரீத்தி உன்னைய நான் ரொம்ப குறைச்சி எடைபோட்டுடேன் போல..

“என்னனு சொல்லிட்டு பாராட்டுங்க மேம்..”

Advertisement

“உனக்கு இன்னும் சேதி வந்து சேரல?.. என்னமா பிளான் போட்டுருக்க நீ..”

“ஓஹ்.. அப்போ அவந்திகா மேடம்க்கு நான் போட்ட பிளான் ஒர்கவுட் ஆகிடுச்சா..” என்றாள் நக்கலாக,

“என்ன இப்படி கேக்குற.. ஹாஸ்டல் முழுக்க இப்போ இதான் ஹயிலைட்..”

“அப்பாடி.. இப்போதான் சந்தோசமா இருக்கு.. அப்போ, அவளை வேலையை விட்டு தூக்கிடுவாங்களா?.. எதுக்கெடுத்தாலும் இந்த பசங்கயெல்லாம் அவந்தி மேம்னு சொல்லிச் சொல்லி, அப்படியே இவ பின்னாடி ‘ஷி இஸ் எ பாண்டன்சினு’ பாட்டு பாடிட்டு பின்னாடி போகாதது ஒன்னு தான் குறை. அவ டிபார்ட்மெண்ட் பசங்க அவளை பேசுனாக் கூட ஒத்துப்பேன். என் டிபார்ட்மெண்ட் ஸ்டுடென்ட்ஸ்லாம் அவளை பத்தி என்கிட்டயே பேசுதுங்க. எனக்கு அப்போ எப்படி இருக்கும் தெரியுமா?..”

“ஹ்ம்ம்.. அதுக்கு தான இப்படி பிளான் போட்டு அவளை அடிச்சிருக்க.. ஆனாலும் உன்னை சும்மா சொல்லக் கூடாது.. அந்த பொண்ண ஹாஸ்பிடல் கூட்டிட்டு ஓடிருக்கா..”

“எதுக்கு ஹாஸ்பிடல்?”

“என்ன ப்ரீத்தி மேடம், என்கிட்டயே உங்க நடிப்பை காட்டுறிங்களா?”

“அதுலாம் இருக்கட்டும் மேம்.. நீங்க என்ன அங்க நடந்துச்சின்னு சொல்லுங்க..”

அவர் தனக்கு தெரிந்தவற்றை சொல்லி முடிக்க, ஓஹோ.. நாம கொஞ்சமா தான் செய்ய சொன்னோம்.. ஆனா பையன் செமையா அசத்திட்டான்.. ம்ம்.. இதுவும் நல்லாதான் இருக்கு..”

“எந்த பையன சொல்லுற?”

“அதுலாம் உங்களுக்கு சொல்லமாட்டேன்.. அது என்னோட சீக்ரெட்..”

“எப்படியும் எனக்கு தெரியாமையாப் போகப் போது..”

“அப்போ தெரிஞ்சிக்கோங்க.. சரி, மேடம் தானே ஹாஸ்டல் ஹெட்.. என்ன இங்க  என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க.. ஹாஸ்டல் கிளம்பலையா?.. “

“போலாம் போலாம்.. பொறுமையா போலாம்..”

“என்ன மேம் இப்படி பொறுப்பே இல்லாம பேசலாமா நீங்க?.. அதும் ஹாஸ்டல் ஹெட் ஆஹ் இருந்துட்டு..” என்று இவள் சிரித்தபடி கேட்க,

“இதோ பாரு, அரக்க பறக்க கிளம்பிட்டே இருக்கேன்..” என்று அவரும் சிரித்தார்.

“ரைட் ரைட்.. கிளம்புங்க..” என்று போனை வைத்தாள்.

– – –

நந்தா, “அதி.. இதை தண்ணியை கொஞ்சம் குடிச்சிட்டு நீ அமைதியாகு..வந்து அட்மிட் பண்ணுனதிலிருந்து அழுதுட்டு தான் இருக்க..”

தர்ஷி, “அவந்தி.. அதான் அண்ணா சொல்லுறாங்கள்ல, எவ்வளோ நேரம் இப்படி அழுதுட்டே இருப்ப.. அனிதாக்கு அங்க டிரீட்மெண்ட் போயிட்டு இருக்கு.. நீ ஸ்ட்ரோங் ஆஹ் இரு முதல்ல.. ஒன்னுமாகாது.. அதான் சரியான நேரத்துக்கு வந்துட்டோம்ல..”

“எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா பாத்ததும்.. ஒரு உயிர்.. நானா இப்படி ஓட்டிட்டு வந்துட்டு சேத்தேன்னு கூட என்னால நம்ப முடியல..”

நந்தா, “அதான் சொல்லுறேன்.. இவ்வளோ விவேகமா பண்ணிட்டு, இப்போ எதுக்கு உக்காந்து இந்த அழுகை..”

“ஹ்ம்.. மண்டைக்கு புரியுது, பட் மனசு அதை ஏத்துக்க மாட்டுது.. உங்கள எனக்கு தெரிஞ்சதுனால இப்போ இங்க கூட்டிட்டு வந்தேன்.. இல்லனா நான் என்ன பண்ணிருப்பேன்..”

“அதுதான் அப்படி ஏதும் ஆகலல.. இல்லனா வேற ஹாஸ்பிடல்ல உள்ள டாக்டர்ஸ் ஹெல்ப் பண்ணிருப்பாங்க.. விடு அதை.. இதையே தான் நீ அரைமணி நேரமா சொல்லிட்டு இருக்க..”

“இருந்தாலும்.. என்ன பண்ணிருப்பேன் நான்..” என்று திரும்ப அதையே சொல்ல,

‘இது சரிப்பட்டு வராது’ என்று கூறிவிட்டு, “உங்க ப்ரின்சிபாலுக்கு அப்பறம் ஹாஸ்டல் ஹெட்க்கு  சொல்லிட்டீங்களா தர்ஷி..”

“பிரின்சிபால் சீக்கரம் வரேன்னு சொன்னாங்க அண்ணா.. ஆனா வைஸ் பிரின்சிபால் என் போனை எடுக்கல.. அதுனால ஒரு மெசேஜ் மட்டும் பண்ணிட்டேன் அண்ணா..”

“குட் தர்ஷி.. நெஸ்ட் என்கோயரி இருக்கும் உங்களுக்கு..”

“ஆமாம் ண்ணா.. அது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு..”

“அது  பாத்துக்கலாம்.. உள்ள என்னனு பாத்துட்டு வந்து பேசுறேன்.. இவளை பாரு..”

சிறிது நேரம் கழித்து அவர்களிடம் வந்து, “நத்திங் சீரியஸ்.. பிளேடு வச்சி தான் பண்ணிருக்கா பேஷண்ட். திரும்பத் திரும்ப வச்சி ரெண்டு கையிலயும் கட் பண்ணிருக்காங்க.. பிளட் லாஸ் கொஞ்சம் நிறைய ஆகியிருக்கு.. ஷி வில் பி பைன்.. இன்னும் ஒரு மணி கொஞ்ச நேரத்துல வார்டக்கு மாத்திடுவாங்க..”

“தேங்க்ஸ் தேங்க்ஸ் ண்ணா.”

அவந்தியோ ஒன்றும் கூறாமல் அவன் சொன்னதை தன்னுள் உள்வாங்கி மூச்சினை நன்றாக இழுத்துவிட்டாள்.

“அதுலாம் ஒன்னும் இல்லமா… நீ இங்க வெயிட் பண்ணு… நான் இவளை கூட்டிட்டு போயிட்டு வரேன்.”

“ஒகே ண்ணா.”

“அதி வா..” என்று அவளை அழைத்துக் கொண்டு அவனின் ரூமிற்க்கு சென்றான்.

“போயிட்டு பேஸ் வாஷ் பண்ணிட்டு வா…”

அவளும் சற்று தெளிந்து வாஷ்ரூம் சென்று வர, அவள் கையில் தண்ணீரை குடிக்க கொடுத்தான்.

அவள் குடித்துவிட்டு, அவனை பார்க்க.. அவனாகவே வந்து அவளை ஒரு பக்கமாக அணைத்துப் பிடித்துக்கொண்டே, அவளின் முகத்தை தன்னை பார்க்குமாறு செய்து, “இங்க பாரு அதி.. இப்படி எல்லாத்துக்கும் அழக் கூடாது இனிமே.. அழுது ஒன்னும் ஆகப்போறது இல்ல.. புரிஞ்சிதா?”

“ம்ம்..” என்று மட்டும் கூறிவிட்டு, சிறிது நேரம் அவன் அணைப்பில் அடங்கினாள். பின்பு தெளிந்து விட்டு, “டாக்டர்.. இப்படி தான் பேஷண்டை கூட்டிட்டு வரவங்க கிட்ட நடந்துப்பாங்களா?”

“ஹ்ம் ஹ்ம்.. டாக்டரோட பொண்டாட்டியே பேஷண்டை கூட்டிட்டு வந்தா, இப்படி தான் அவங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்… புரிஞ்சிதா டாக்டர் பொண்டாட்டி…”

“ரொம்பதான்.. வாங்க போலாம்..”

“வர வர, அதி நிறைய பேச ஆரம்பிச்சிட்டாங்க போலயே… அது தப்பாச்சே…” என்று கண்ணடிக்க,

“போங்க நீங்க… நான் தர்ஷிக்கிட்ட போறேன்…” என்று வெளியேறினாள்.

– – – – –

“ம்மா.. ஒரு வாரம் எனக்கு லீவு வருது.. எனக்கும் படிச்சி படிச்சி, மண்டை ரொம்ப சூடா இருக்கு.. நான் கோவைக்கு அண்ணண் வீட்டுக்கு ஒரு வாரம் போயிட்டு வரலாம்னு இருக்கேன்.. அதனால நீ என்ன பன்றேனா, நல்ல பிள்ளையா.. விருமாண்டிகிட்ட சொல்லி எனக்கு பெர்மிஸ்ஸின் வாங்கி தா.. அதுக்கு முன்ன ஒரு நல்ல காபி வேணும்..” என்று கேட்டுக்கொண்டே சுரேஷ் டைன்னிங் ஹாலில் அமர்ந்தான்.

“நீ கிளாஸ் முடிச்சு வர்றதை பார்த்து, புள்ள படிச்சி களைச்சு வருது, அதனால காப்பி போட்டு தரலாம்னு பார்த்தேன். எப்படி எப்படி, உனக்கு நல்ல காப்பி வேணுமோ.. அந்த நல்ல காப்பியை நீயே நல்ல பிள்ளையா போட்டுக்கோ..”

“நீயா பேசியது.. மம்மி.. நீயா பேசியது..”

“நானே தான்.. உன் அம்மியே தான்.. நான் தான் உனக்கு சொல்லிக் குடுத்துருக்கேன்ல.. போய் போடுடா..”

உள்ளிருந்து காபியுடன் வெளியே வந்த காவியாவை பார்த்த சுரேஷோ, சும்மாவா சொன்னாங்க அண்ணினா அம்மாவிற்கு நிகர்ன்னு.. “அண்ணி ஒரு  ஆலயம்” என்று புகழ்ந்துவிட்டு, தாய் உங்களை இன்னையிலிருந்து நான் டைவோர்ஸ் பண்ணுறேன்.

e”காவியா.. காப்பிய நமக்கு மட்டும் தானே போட்டுட்டு வந்த..?”

“ஆமா த்தை.. நீங்க நமக்கு மட்டும் தானே போட சொன்னிங்க.. தம்பி நீங்க எப்போ வந்திங்க..”

“அண்ணி.. யு டு புரூட்டஸ்.. அப்போ காபி தரமாட்டீங்க..”

“யாருங்க தம்பி அது புரூட்டஸ்ஸு.. நீங்க வந்ததே எனக்கு தெரியலையே.. அப்போ காபி எப்படி கிடைக்கும் உங்களுக்கு..”

“ரைட்டு விடுங்க.. நான் மேலிடத்து கிட்டயே டீல் பண்ணிக்குறேன்.. உங்களை நம்புனது என்னோட தப்பு தான்..”

“என்னை நம்பி, நீங்க இப்படி தப்பு பண்ணிடீங்களே தம்பி.. சரி சரி.. ஆரம்பியிங்க.. மேலிடம் வைட்டிங்..”

“ம்மா.. தாயே கருமாரி.. இந்த கையை காலா நினைச்சு கேக்குறேன்.. மன்னிச்சி இந்த பச்ச புள்ளைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.. இந்த ஒரு காபி மேட்டரை வச்சிட்டு, நான் பேசுன மெயின் மேட்டரை விட்டுட்டிங்க யுவர் ஹானர்..”

கோமதி, “முதல்ல இந்த கேசை வெற்றிகரமா முடிங்க, அடுத்து அந்த வழக்கை பார்க்கலாம்.”

காவியா, “பத்தலை பத்தலை.. இன்னும் எதிர்பாக்குறேன் உங்களிடமிருந்து..”

“அண்ணி ஒரு ஆலயம்.. வாபஸ் வாங்கிட்டேன்..”

“லேட் ஆகுது.. அப்பறம் அத்தை இன்னும் கோவமாகிடுவாங்க.. வேகமா டீல் பண்ணுங்க..”

“என்கிட்ட மட்டும் இப்படி பண்றீங்க.. இதுவே நந்தா அண்ணா வந்தப்போ  மட்டும் கொழுந்தனாரேனு எவ்ளோ நல்லா பேசுனீங்க..”

“மூஞ்சி சார் மூஞ்சி.. சில மூஞ்சிய பார்த்தா தான் கோர்த்து விடணும் போல தோணும்..”

“அண்ணி…ணி, நீங்க அம்மா கூட சேராதிங்க.. அது தான் ராஜா அண்ணாக்கு ரொம்ப நல்லது..”

“அது அப்பறம் பாக்கலாம்.. அங்க பாரு எங்கத்தை சிரிக்குறாங்க.. அப்படியே கப்புனு காலுல விழுந்துடுங்க..”

“அண்ணி சொல்லி பண்ணாம இருந்தா, அது அடுக்குமா எனக்கு..” என்று சொல்லிக்கொண்டே இரண்டு பேருக்கும் நடுவில் சாஷ்டாங்கமாக விழுந்து  தெய்வங்களா.. எதோ தெரியாம, அறியாம பேசுனா இந்தச் சின்ன பிள்ளையை மன்னிச்சிடுங்க சாமிங்களா..”

இதை பார்த்துக் கொண்டே வந்த, வீரபாண்டியனும் ராஜாவும்.. “என்னடா பெரியவனே பண்ணுறான் இவன்?..”

“அதான் ப்பா எனக்கும் தெரியல.. கேக்குறேன் ப்பா இருங்க.. டேய்.. சுரேஷ் என்னடா பண்ற?”

“அய்யயோ.. இவங்க எப்போ வந்தாங்க?.. சொல்லமாட்டீங்களா ம்மா? என்று நிமிர, அங்கு ஒருவரும் அவர்கள் இடத்தில் இல்லை.. அடப்பாவிங்களா.. வான்டெடா நானே மாட்டிட்டேனோ?.. அதுவா ண்ணா.. முதுகு பிடிச்சிருந்திச்சா, அதுதான் என்று உளற,

“அதுக்கு ஏன்டா குப்புற படுத்திருக்க..”

“எனக்குன்னே வராங்கயா எல்லாரும்..” என்று முணுமுணுத்தக் கொண்டே எழுந்து, “அது.. இரு தண்ணி குடிச்சிட்டு வந்து சொல்றேன்” என்று ஓடினான்.

அங்கே சமயலறையில் பெண்கள் இருவரும் சத்தமில்லாமல் இவன் வருவதை பார்த்து சிரிக்க, “உங்களை ரெண்டு பேரையும் அப்பறம் பாத்துக்குறேன்.. இப்போ முதல்ல என்னைய நான் பாத்துக்குறேன்..” என்று அவர்களை பார்த்து முறைத்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்றான்.

கோமதியோ, ஹாலில் இருந்த இருவருக்கும் காபி எடுத்து வந்து கொடுக்க, “உம்மவன் பேசுனான, அடுத்த வாரம் புறப்பட்டு வரச் சொல்லு.. வெள்ளிக்கிழமை பொண்ணுவீடு பார்த்துட்டு வருவோம். துரை, அப்பறம் முன்னவே சொல்லலைனு சண்டைக்கு வருவான் என்கிட்ட.. நல்லா அவன் காதுல விழுற மாறி நாலு தடவைச் சொல்லிடு.. “

“சரிங்க.. சரிங்க..” என்று மகிழ்வுடன் சொல்லிவிட்டு, “பொண்ணு வீட்டுல?” என்று ஆரம்பிக்க,

“பொருத்தம் பார்த்து முடிச்சிட்டு, அவங்ககிட்ட எல்லாம் பேசியாச்சு.. இன்னும் கலையரசிக்கு மட்டும் சொல்லணும்..” என்றார் தகவலாக,

“ம்க்கும்.. சொல்ல வேணாம்னு சொன்னாலும் கேக்கவா போறார்..” என்று முனகிவிட்டு, “நாம எப்போ போயிட்டுங்க சொல்லிட்டு வரணும்” என்று அவரிடம் கேட்க,

“ம்ம்.. நான் சொல்லுறேன் எப்போன்னு..”

“சரிங்க.. ராஜா நீ என்ன உக்காந்துட்ட அப்படியே.. கை, கால் அலம்பல?”

“பெரியவனே, உங்க அம்மாக்கு உங்கிட்ட என்னனு விசாரிக்கணும்.. அதுக்கு தான் சொல்லுறா.. நீ எழுந்து போ..”

“அப்படி இல்லைங்க.. உங்க முன்னாடி கேக்க முடியாதுல அதுக்கு தான்..”

அவர் பதில் பேச வர, அங்கே கலையரசி அவருக்கு அழைத்தார்.

ராஜா போனில் தெரிந்த பெயரை பார்த்து விட்டு, அம்மாவிற்கு சைகை செய்து உள்ளே போகச் சொன்னான்.

“இவளுக்கு எப்படி தான் மூக்கு வேர்க்குமோ தெரியல.. ஆண்டவா இப்போ என்னத்த பேசப்போறாளோ.. பாரேன் இவனை, நாம ஏதாவது  இடையில பேசுவோம்னு உஷாரா உள்ள போக சொல்லுறான்.. என்று ஏசிக் கொண்டே உள்ளே சென்றார்.

இங்கு வீரபாண்டியன், ராஜாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனை எடுத்து, “சொல்லுமா.. நல்லா இருக்கியா..”

“ம்க்கும்.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. உன்னை நலம் விசாரிக்க எல்லாம் நான் உன்னை கூப்பிடல..”

“கலை.. என்னம்மா..”

“இங்க பாரு அண்ணே.. நான் உன்கிட்ட இப்ப சாவகாசமா பேசலாம் போன் பண்ணல.. என்கிட்ட வந்து அன்னைக்கு சொன்னதுக்கு என்ன பதில்னு தெரிஞ்சிக்க தான் இப்போ உனக்கு கூப்பிட்டேன்.. “

“அது தான் மா..” என்று கூற வர,

“சும்மா இந்த சப்பைக்கட்டுலாம் கட்டி என்கிட்ட இனிமே பேசாத சொல்லிட்டேன்.. எனக்கு இப்போ என்ன பதிலை சொல்லுற.. அதை சொல்லு.. இந்த போன் வேற சரியா வேலை செய்யல போல.. உனக்கு கூப்பிட்டு வேற யாருக்கோ.. போய் தொலைஞ்சிட்டு.. இப்ப மட்டும் நீ போனை எடுக்கலான நான் நாளைக்கு உன் கடைக்கு கிளம்பி வரலாம்னு இருந்தேன்..”

“ஏன்மா கடைக்குலாம்.. வீட்டுக்கு வா கலை..”

“உன் வீட்டுல நான் என் பொண்ணைக் குடுத்துட்டு தான், இனிமே நான் அந்த வீடு படியை மிதிப்பேன்.. நீ எனக்கு பதிலை சொல்லு..”

“கலையரசி பேசுவதை காதில் வாங்கிய ராஜாவோ, அன்னைய விட இன்னைக்கு சத்தம், பேச்சு எல்லாம் கொஞ்சம் கம்மியா வருதோ.. நல்லவேளை இந்த அத்தை நாம சொன்னதை உண்மைன்னு நம்பிடுச்சி..” என்று நினைக்க,

“நான் மறுபடியும் பொருத்தம் பாத்தேன் மா..” என்று பேச வர,

“அந்த பொருத்தம் தான் இருக்குல்ல அப்பறமென்ன… என்னைய கூட்டிட்டு போயிட்டு தானே உன்னைய மறுபடி பாக்க சொன்னேன்..நீ எதுக்கு தனியா போய் பாத்த.. என்ன உன் பொண்டாட்டி உனக்கு ஓதுனால.. உன் தங்கச்சி பொண்ணை மருமகளாக்க கூடாதுனு உனக்கு மகுடி வாசிச்சிருக்கா, நீயும் அவ பேச்சை கேட்டு நீயும் ஆடுறல்ல..”

“கலை.. இரும்மா, நான் சொல்லுறதை கேளேன்..”

“நீ என்னத்த புதுசா சொல்லப் போற இப்ப..”

“நான் நம்ம நந்தா கிட்ட மறுபடியும் பேசுனேன் மா.. அவனே உனக்கு பேசுறேன்னு சொல்லிட்டான்.. அவன் பேசுவான்.. நீ என்னனு கேட்டுக்கோ.. சரியா கலை.. நான் இன்னொரு நாள் வந்து உன்னை பாக்குறேன்.. வச்சிடுறேன்மா..” என்று அவரை பேசவிடாமல் வைத்துவிட்டார்.

“அடப்பாவி அப்பா.. எப்போ பேசுனாரு அவன்ட.. இப்படி தான் அத்தையை சமாளிப்பாரு போல.. ” என்று ராஜாஅதிர்வுடன் வாய்க்குள் முனங்கிக் கொண்டே, தந்தையை பார்க்க,

அவரோ.. “நீ தான ராஜா சொன்ன.. ஒரு அப்பாவா சரியா பண்ணிருக்கேன் தானே.. நந்தா மேல உள்ள பிரியத்துல அவனுக்கு அவளோட ஒரு பொண்ணை கட்டி கொடுக்கணும்னு நினைக்குறா.. நந்தா மேல உள்ள பிரியத்தால் தானே மூத்தவ அப்படி பண்ணுனா.. அப்பறம் அவன் பேசி எடுத்து சொன்னான்ல.. அது மாறி அவனே பேசினா கலைக்கு புரியும்.. அடுத்து வேணும்னா சுரேஷுக்கு பாக்கும் போது, ஆர்த்தி ஜாதகம் சரி வருதான்னு பாப்போம். நீ நல்லவன்  கிட்ட சொல்லி ஒரு வார்த்தை பேச சொல்லிடு ராஜா..” என்று கூறிவிட்டு அவரின் அறைக்கு சென்றார்.

“பாரேன் இந்த அப்பாவை,என்ன நேக்கா சொல்லிட்டு போறதை..” என்று நினைத்து அங்கே அவர் போனதை பார்த்துக் கொண்டே நிற்க,

உள்ளிருந்து இவர்களை கவனித்துக் கொண்டிருந்த கோமதி, விறுவிறுவென வந்து, “அடேய் பெரியவனே.. இப்போ நீ வர என்னோட” என்று அவனை இழுக்காத குறையாக தள்ளிக் கொண்டு சென்றார்.

“ம்மா.. என்னம்மா..”

“என்னடா.. அம்மா.. இப்போ ஒழுங்கா உங்க அப்பா என்ன போன்ல பேசுனாருனு சொல்லு.. அப்பறம் அடுத்த கதைக்கு போவோம்..”

“அவன், அப்பா சொன்னதை சொல்லிவிட்டு, ஆனாலும் ம்மா.. உங்களை அப்பாக்கு ரொம்ப பிடிக்கும் போல.. உங்கள் மாறியே லாஸ்ட்ல அத்தையை அவன்கிட்ட கோர்த்து விட்டுட்டு போய்ட்டாங்க..”

“கல்யாணமாகி இத்தனை வருசத்துல இப்போவாச்சும் உங்க அப்பாக்கு என்னைய  பிடிச்சிருக்குனு நீ சொல்லி தான் எனக்கு தெரிஞ்சிருக்கு டா மகனே.. உங்க அப்பா ரொம்ப நல்லவரா ஆகிட்டாரு..”

“ம்மா..ஆ”

“ஆமாடா.. இனிமே என்னனாலும் சமாளிச்சிக்கலாம்.. நான் போயிட்டு நல்லவரான என் புருஷனுக்கு பிடிச்ச, ரவா லட்டு பண்ண போறேன்.. அடுத்த கதையை அப்பறம் கேட்டுக்குறேன்..”

இங்கு கலையரசியோ, அவன் பேசுறேன்னு சொன்னானா?.. இந்த அண்ணண் சொல்றதை நம்ப முடியலையே.. அவன்கிட்ட நம்ம ஜம்பம் பலிக்காதே.. என்ன பண்ணலாம் அடுத்து?

சாரல் வருடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!