Priya Milirvannan’s யாழினியன் – 03
….. இயற்பியலில் நட்பியல் ….
இசையமைத்து கவிதையை பாடும் இசைக்கவி-யாக சிந்தியாவை உருவகப்படுத்தி மிதிவண்டியில் பண் அமைத்துக் கொண்டே தன் பயணத்தை மேற்கொண்டிருந்தாள் யாழினி. கவிதை வெளிவந்த இதழுடன் வந்தவளுக்கு சிந்தியாவின் நிலைமை பேரிடியாக இருந்தது. தான் அணிந்திருந்த முந்தையநாள் சீருடையுடன் அழுவதற்கு கண்ணீர் கூட வர மறுத்த்து போல் அமர்ந்திருந்தாள் சிந்தியா. தன் வேலையை செய்துவிட்டதாக சிந்தியாவின் விழிகள் சுரப்பை நிறுத்திக்கொண்டது.
Advertisement
அருகில் இருந்த நாளிதழில் “இதுவும் கடந்து போகும்” என்று அவள் எழுதிக் கொண்டிருந்த வரிகள் மட்டுமே யாழினியின் கண்களுக்கு புலப்பட்டது. தன் கையில் வைத்திருந்த அவளது கவிதை வெளிவந்திருந்த இதழை துச்சமாக அருகில் வீசியவள் சிந்தியாவை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தாள்.
“அவள் இனி எங்கும் வரமாட்டாள்” என்று குரல் கேட்டு திரும்பியவள் அருகில் சாந்தமான பார்வையில் சாந்தா நின்றிருப்பதை கவனிக்காமல் இல்லை. “அம்மா” என்று அழைத்து முடிப்பதற்குள், “இல்ல யாழினி நீ நல்லா படி அவ இனி கண்டிப்பா ஸ்கூலுக்கு வரமாட்டா, அவளுக்கு படிப்பு முக்கியம் இல்லையாம்” என்று சொல்லி முடித்து யாழினியின் பதிலுக்கு காத்திராமல் யாழினியின் கையில் டீ டம்ளரை வைத்துவிட்டு சென்றார் சிந்தியாவின் அம்மா சாந்தா.
Advertisement
Advertisement
“என்னடி ஆச்சு!!!” என்ற யாழினியின் விழிமொழி கேள்விக்கு “ஒன்றும் இல்லை!!!” என்ற தலை அசைவை மட்டுமே சிந்தியா சிந்தித்து வெளிப்படுத்தினாள். மௌனம் கலையாத தோழிகளின் மௌனத்தை கலைத்தார் கண்ணன்… கண்ணனைக் கண்டதும் “மாமாஆஆ..” என்று தன் மனம் உடல் குறுகி சுவருடன் சுவராய் சிந்தியா நின்றதை யாழினி காணாமல் இல்லை…
கண்ணன் பேச தொடங்கும் முன்னே, யாழினி தன் மௌனங்களை கலைந்து “ஏன் மாமா அவள் இன்று ஸ்கூல் வரவில்லை” என்று கேட்டுக்கொண்டிருக்கும்போது, தன் பதிலைத் தொடர்ந்தவர் காலாண்டுத் தேர்வில் அவளுடைய மதிப்பெண் குறைவு என்பதையே காரணமாக தந்தார். அது பொய் என்று சிந்தியாவுக்கு நன்கு தெரிந்தாலும் யாழினிக்கு உண்மை என்றே தோன்றியது. பொய்யும் மெய்யாகவே தோன்றிய காரணம் “நட்பு” மெய் அல்லவா!
Advertisement
தான் எழுதிய கவிதை இதழில் வந்த மகிழ்ச்சியை ஒருபுறம் உதறித்தள்ளியவள், மனதில் பேரிடியான கவலைகளை சிந்தியாவுக்காக சுமக்கும் அளவுக்கு ஏன் சிந்தியா அவளுக்கு முக்கியம் என்ற எண்ண ஓட்டங்களுடன் தன் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு தன் வீட்டை அடைந்திருந்தாள். கவிதை வந்த இதழும் மிதிவண்டியின் கூடையில் ஒட்டிக்கொண்டிருந்தது. மனிதனின் மனதையே புரியாத புதிராக வாழும் பிரபஞ்சத்தில், 17 வயதுடைய பெண்ணின் மனதை தொடக்க அத்தியாத்திலேயே புரிந்துகொள்வது! வாசகர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகும்.
வீட்டை அடைந்தவளுக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை என்றாலும் தனது வழக்கமான செயல்களை மட்டும் அனிச்சையாக செய்திருந்தாள். கையில் தனது இயற்பியல் புத்தகத்தில் “மின்னோட்டம்” பற்றி படிக்க மனதை தயார்படுத்த, அவள் மனதின் எண்ணோட்டமோ சிந்தியா பற்றியே இருந்தது.
கவிதை, பாராட்டு என்ற பெருமைகள் தனக்கு இல்லை என்றது போல இருப்பவளுக்கு சிந்தியா மட்டுமே நினைவில் இருக்கிறாள். “யாழினி” என்ற குரல் கேட்டு திரும்பியவள் தனது அம்மா என்றதும் அவளது மனது பதைபதைப்பை தவிர்த்திருக்கவில்லை. அவளது கரங்களும் புத்தகத்தினுள் எதையோ புதைத்தது.
பதைபதைப்புடன் அவளது கரங்கள் புத்தகத்தினுள் இருந்து வெளிவந்தது. “அம்மா” என்ற உச்சரிப்பில் தெளிவில்லாமல் இருப்பதை மித்ரா கவனித்திருந்தாளும், அவள் மீது இருந்த அலாதி நம்பிக்கையுடன் “படி” என்பதை மட்டும் கூறிவிட்டு நகர்கிறாள்.
படிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாலும் தன் நினைவுகள் சிந்தியாவை மட்டுமே நினைக்கையில் தன்னை அறியாமல் கண்கள் தன் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தன. இயற்பியல் புத்தகத்தை மூடி அருகில் இருந்த மேசை மீது வைத்தவள் தன்னுடைய நட்பியல் புத்தகத்தை திறக்கத் தயாராகிறாள்.
– இசைக்கும்
