Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 1 1

அத்தியாயம்

எந்தன் நெஞ்சமெல்லாம்

பொங்கிடும் காதல் வெள்ளத்தில்

மூச்சு முட்டிப் போகிறேன் நான்!!!



Advertisement

வெண்ணிலவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தான். ஆதவன் தன்னுடைய ஒளிக் கதிர்களை பரப்பி இப்பூவுலகை மலர வைத்துக் கொண்டிருக்கும் அழகான காலைப் பொழுது.

Advertisement

இலைகளின் மீது மிச்சம் இருந்த வெண்ணிறப் பனித் துளிகளின் மீது சூரியக் கதிர்கள் விழுந்த உடன் வானவில்லில் இருக்கும் வண்ணங்கள் நம்முடைய கண்களில் பிரதிபலித்தது.

Advertisement

காலை வேளையில் கண்களுக்கு குளிர்ச்சி தரும் அழகான இந்த இயற்கையைக் காணும் போது கட்டாயம் பார்ப்பவரின் மனம் பரவசம் கொள்ளும். இவ்வளவு அழகையும் ஒருங்கே கொண்ட அழகான கிராமம் தான் குறிஞ்சிக்காடு.

Advertisement

விவசாயம் தான் அங்கு முக்கியத் தொழில். விளைந்து கிடந்த நெற்ப் பயிர்களும் கரும்புகளும் அறுவடைக்காக காத்திருந்தன. செழித்து விளைந்திருந்த அந்த கதிர்கள் தலை சாய்க்கும் அழகே தனி தான்.

அந்த ஊரில் செல்வ செழிப்போடு இருப்பவர் தான் ரத்தினம். அவருக்கு பல தொழில்கள் உண்டு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை தான் அவரது முதன்மையான தொழில். அது அவரது குடும்ப தொழிலும் கூட. அவர்கள் கம்பெனியில் செய்யும் உடைகள் தான் பல ஊர்களுக்கு ஏற்றுமதி ஆகிறது. அது போக விவசாயம், ரைஸ் மில் போன்ற தோழிகளும் அவருக்கு உண்டு.

ரத்தினம் மங்கை தம்பதியின் மூன்றாவது மகன் தான் ஆதவன்.  விடிந்து வெகு நேரம் ஆகி விட்டது என்று கூட தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தான். ஆதவன் தன்னுடைய தொழில்களை எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று ரத்தினம் எதிர் பார்க்க அவனோ வேறு ஒன்றைச் சொன்னான். அவர் அதற்கு சம்மதிக்க வில்லை. அதனால் அவன் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவரோ மனதுக்குள் பொருமிக் கொண்டிருக்கிறார்.

ரத்தினம் மங்கை தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதலில் பிறந்தவள் சுபா, அவள் தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளுடன் பக்கத்து ஊரில் வசிக்கிறாள். அவளது கணவன் ஆனந்த், எல். ஐ. சி யில் பணி புரிகிறான். அவர்களுக்கு அருண், அவந்திகா என்று இரண்டு பிள்ளைகள்.

சுபாவுக்கு அடுத்து பிறந்தவள் செல்வி, அவளை உள்ளூரில் பக்கத்து தெருவில் வசிக்கும் ரத்தினத்தின் தங்கையின் மகன் சக்திக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முகில் என்ற மகன் இருக்கிறான். சக்தி தாசில்தாராக பணி புரிகிறான்.

செல்விக்கு அடுத்து பிறந்தவன் தான் ஆதவன். காலேஜில் மேற்படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறான். அவனுக்கு தன்னுடைய தங்கையான வேணியின் மகள் பிரியாவை திருமணம் செய்து கொடுக்க ரத்தினத்துக்கு ஆசை இருந்தது. ஆனால் இன்று வரை அவனுடைய திருமணப் பேச்சு எடுக்கப் படாததால் அவனுக்கு தந்தையின் ஆசை தெரிய வில்லை. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அந்த தந்தைக்கும் தெரிய வில்லை.

ஊரிலேயே மதிப்பும் மரியாதையும் மிக்க செல்வாக்கான குடும்பம் தான் அவர்களது. ஆனால் ரத்தினத்துக்கு பெரிய தலை வலி மகன் தான். ஆனால் அவனிடம் கேட்டால் அவரைத் தான் பெரிய தலை வலி என்பான். அப்பா மகன் இருவருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. அவர் ஒன்று சொன்னால் அவன் ஒன்று செய்வான். ஏன் செய்தாய் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவருக்கு தலை வலியை வர வைப்பான்.

அந்த இனிமையான காலை வேளையில் நல்ல உறக்கத்தில் இருந்த ஆதவனுக்கு அழகான கனவு வந்தது. அழகான கனவு என்பதை விட அவனுக்கு விருப்பமான கனவு என்று கூட சொல்லலாம். கனவில் வந்தது ஏதோ ஒரு நாட்டின் இளவரசியோ, ஏதோ ஒரு கனவுக் கன்னியோ இல்லை. கனவில் வந்தது அவனது தந்தையே தான்.

“தம்பி ஆதவா எந்திரிப்பா, நேரம் ஆச்சுப் பாரு”, என்று அன்புடன் அவனை எழுப்பினர் ரத்தினம்.

தந்தையின் பாசக் குரல் கேட்டாலும் அவனால் எழுந்து கொள்ளத் தான் முடிய வில்லை. அந்த அளவுக்கு கனவில் ஒன்றி இருந்தான்.

ஆதவனின் வயது இருபத்தி ஏழு. ஆறடி உயரம், உடற்பயிற்சி செய்தது போல உரமேறிய தேகம், யாருக்கும் அடங்க மாட்டேன் என்னும் விதமாய் அலையலையாய் சிலுப்பிக் கொள்ளும் கேசம், எப்போதும் முகத்தில் உறைந்திருக்கும் வசீகரப் புன்னகை, குறும்பு கொப்பளிக்கும் கண்கள், அளவான மீசை என பார்ப்பவர் அனைவரும் ரசிக்கும் விதத்தில் இருந்தான். காலேஜ் படிக்கும் போது அவனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

அவனது கம்பீரத்தில் மயங்கி சில பெண்கள் அவனை விரும்பினார்கள் தான். ஆனால் யாருக்கும் அவனிடம் சென்று காதலைச் சொல்ல தைரியம் இல்லை.

கனவில் லயித்திருந்த ஆதவன் முகத்தில் ஜில்லென்று தண்ணீர் பட்டதும் தான் எழுந்து அமர்ந்தான். அவன் கடுப்புடன் எழுந்து அமர அவன் முன்பு உக்கிர மூர்த்தியாக நின்று கொண்டிருந்தார் ரத்தினம்.

“அப்ப, இவர் என்னை பாசமா எழுப்பினது கூட கனவு தானா? நான் கூட இவர் திருந்திட்டாரோன்னு நினைச்சேன்”, என்று எண்ணிக் கொண்டு தண்ணீர் எங்கே இருந்து வந்தது என்று பார்த்தான்.

அவனுடைய அக்கா மகன் முகில் தான் கையில் டம்ப்ளருடன் நின்றிருந்தான். அவனை முறைத்துப் பார்த்த ஆதவன் “டேய் பொடியா, எதுக்கு டா என் மேல தண்ணி ஊத்தின?”, என்று கேட்டான்.

“ஏழு கழுதை வயசாச்சு. இத்தன மணி வரைக்கும் தூங்குற? அதான் தாத்தா உன்னை எழுப்பச் சொன்னாங்க மாமா”, என்று முகில் சொன்னதும் தந்தையைப் பார்த்தான். அவரைப் பார்த்து ஏதோ சொல்ல வந்தவன் எப்போதையும் விட இன்று அவர் முகத்தில் கோவம் அதிகமாக இருக்கவும் அமைதியாகி விட்டான்.

“துரைக்கு எழுப்புனதுக்கு விளக்கம் சொன்னா தான் எந்திப்பீங்களோ? நம்ம மதுரைக்கு அனுப்புன சரக்கு சரி இல்லைன்னு கம்ப்லைண்ட் வந்துருக்கு. என்னன்னு போய் பாத்துட்டு வா”, என்றார் ரத்தினம்.

“நான் எல்லாம் அங்க போக மாட்டேன். நாளைக்கு என் பிரண்டோட தங்கச்சிக்கு சென்னைல வச்சு கல்யாணம். நான் அங்க போகணும். என்ன பிரச்சனைன்னு நீங்களே போய்ப் பாருங்க”, என்று சொன்னான் ஆதவன்.

“உன்னை பாக்கப் போறியான்னு அனுமதி கேக்கலை. போன்னு முடிவு சொல்லிட்டு இருக்கேன். இன்னைக்கு நைட் போறதுக்கு பதிலா மதிய சாப்பாடைக் கொட்டிகிட்டு உடனே கிளம்பு. அங்க என்ன பிரச்சனைன்னு பாத்துட்டு அதுக்கப்புறம் நீ சொன்ன சென்னைக்கு ஊர் சுத்தப் போ”

“இப்படி அங்க இங்கன்னு அலைஞ்சு திரிஞ்சு போனா என் பெர்ஸ்னாலிட்டி என்ன ஆகுறது? கல்யாணத்துல நான் அழகா இருக்க வேண்டாமா?”, என்று ஆதவன் கேட்டதும் களுக்கென்று சிரித்தான் முகில்.

ஆதவன் அவனை முறைத்துப் பார்க்க “என் பேரனை ஏன் டா முறைக்கிற? உன் வயசுல அவன் டாப்பா வருவான் தெரியுமா? இப்பவே எவ்வளவு அறிவு அவனுக்கு. உன்னை மாதிரியா?”, என்று பேரனைப் புகழ்ந்த ரத்தினம் “அப்புறம் மதுரை போயிட்டு சென்னை போறதுனால உன் பெர்ஸ்னாலிட்டிக்கு எந்த கேடும் வராது ராசா. அப்புறம் மாப்பிள்ளை நீ இல்லை. வேணும்னா காரை எடுத்துட்டு போயிட்டு வா. கூட ரங்கனையும் கூட்டிட்டு போ”, என்று தீர்வு சொன்னார்.

“கார் கொடுத்தா போறேன்”, என்று ஒத்துக் கொண்டான் ஆதவன். பஸ்ஸோ டிரைனோ பிடித்து போவதற்கு காரில் சொகுசாய்ப் போய் இறங்கி விடலாம் என்பதால் தான் ஒத்துக் கொண்டான்.

அவர் மீண்டும் முறைத்துக் கொண்டே இருக்கவும் “அதான் போறேன்னு சொல்லிட்டேன்ல? அப்புறமும் எதுக்கு டா உன் தாத்தா என்னை முறைச்சு முறைச்சு பாக்குறார். நான் என்ன அவர் முறைப் பொண்ணா? டேய் குட்டிச் சாத்தான் உன் தாத்தா கிட்ட சொல்லி வை. இதெல்லாம் டூ மச். சொல்லிட்டேன்”, என்று சொல்லிய படியே முகிலைத் தூக்கினான்.

“விடு மாமா, விடு மாமான்னு சொல்றேன்ல?”, என்று கத்திய முகில் அவன் விடாததால் ஆதவனின் கன்னத்தைக் கடித்து வைத்து விட்டு ஓடி விட்டான்.

“ஆ”, என்று கன்னத்தை தடவியவன் “சும்மா தான் சொன்னேன், உண்மையிலே குட்டிச் சாத்தான் வேலை பாத்துட்டு போய்ட்டானே”, என்று முணங்கினான்.

“உனக்கு இது தேவை தான்”, என்ற பார்வையைப் பார்த்து விட்டு ரத்தினமும் அங்கிருந்து சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!