Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 11 1

அத்தியாயம் 11 

ஆபத்தில் கூட ஒரு

நொடி நினைவில் வந்து

செல்கிறது உந்தன் பூமுகம்!!!



Advertisement

ஜோசியர் ஆதவனைக் குழப்பமாக பார்க்க ஒரு நொடி தயங்கிய ஆதவன் “சாந்தி முகூர்த்ததுக்கு இப்ப நாள் குறிக்க போறீங்கல்ல? அதை ஒரு… ஒரு மாசத்துக்கு தள்ளிப் போடணும்”, என்றான்.

Advertisement

“தம்பி, என்ன சொல்றீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நானும் பங்ஷன்க்கு வந்துருந்தேனே? ரெண்டு பேரையும் பாக்க அவ்வளவு அம்ஸமா இருந்தது. ஆனா இப்ப இப்படிச் சொல்றீங்க? அந்த பொண்ணை உங்களுக்கு பிடிக்கலையா? நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டீங்கன்னு தானே எல்லாரும் பேசினோம்?”, என்று அதிர்வாக கேட்டார் அவர்.

Advertisement

“அப்படி எல்லாம் இல்லை ஜோசியரே. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்”

Advertisement

“அப்புறம் ஏன்?”

“சிந்து எல்லா பொண்ணுங்க மாதிரி கிடையாது. ரொம்ப பயந்த சுபாவம். இப்பவே எல்லாம்னா மிரண்டுருவா. அம்மா அப்பா எல்லாம் சரியான நேரத்துல நடக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா இதுக்கெல்லாம் அவசரப் பட முடியாது. அதான்”

“இருந்தாலும் ஒரு மாசம்… ரொம்ப அதிகமா இருக்கே?”

“அவளுக்கு இந்த ஒரு மாசமே குறைவு தான்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “அதுக்குள்ள அவ இயல்பா எங்க வீட்ல பொருந்தணும். அதான் சொல்றேன்”, என்றான்.

“எப்ப டா சந்தர்ப்பம் கிடைக்கும்னு இருக்குறவங்க மத்தியிலே நீங்க வித்தியாசமானவரா இருக்கீங்க தம்பி. கண்டிப்பா நீங்க சொன்ன படியே செய்றேன்”

“ரொம்ப நன்றி ஜோசியரே. நான் முன்னாடி போறேன். நீங்க கொஞ்சம் தாமதமா வாங்க”, என்று சொல்லி விட்டு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் எண்ணியது போல ஜோசியர் ஒரு மாதம் கழித்து நேரம் குறித்துக் கொடுக்க வீடே சோகத்தில் மூழ்கியது போல இருந்தது.

“இப்படி ஒரு மாசம் நல்ல நாள் இல்லைன்னு சொல்லிட்டாங்களே கண்ணு?”, என்று ரங்கநாயகி புலம்ப சிந்துவோ என்ன நல்ல நாள் என்று குழம்பினாலும் அதை பெரிதாக எண்ண வில்லை.

ரங்கநாயகி பேசியதைக் கேட்டு அவள் திருதிருவென்று விழிக்க அதைக் கண்ட ஆதவனுக்கு சிரிப்பாக வந்தது. அப்போது “மங்கை”, என்று அழைத்தார் ரங்கநாயகி.

“என்ன மா?”

“சிந்து ரொம்ப களைப்பா தெரியுறா. அவளை தூங்க அழைச்சிட்டு போ”, என்றதும் மங்கை அவளை ஆதவனின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“நல்லா படுத்து தூங்கு டா. காலைலே சீக்கிரம் எந்திக்கணும்னு  அவசியம் இல்லை. சரியா?”, என்று அவள் கன்னம் தட்டி மங்கை விடை பெற அறையைக் கூட அடைக்காமல், உடையையும் மாற்றாமல் நகையை மட்டும் கழட்டி வைத்து விட்டு கட்டிலில் படுத்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.

சிறிது நேரம் கழித்து அறைக்குள் வந்தான் ஆதவன். சிறு பிள்ளை போல தூங்கும் அவளை ரசித்த படி நின்றான். அப்போது பேன் காற்றில் அவளது உடை சற்று விலக அவளது பளிங்கு இடை அப்பட்டமாக அவன் கண்களுக்கு தெரிந்தது. தன்னை மீறி அதை ஒரு நொடி ரசித்தான். பின் ஒரு போர்வையை எடுத்து அவளுக்கு மூடி விட்டான். இதை எல்லாம் சிந்து அறியவே இல்லை.

ரங்கன் இன்னும் மண்டபத்தை ஒதுங்க வைத்து விட்டு வீட்டுக்கு வர வில்லை என்று அப்போது தான் நினைவு வந்தது. உடனே உடை மாற்றி கொண்டு கீழே சென்றான்.

அவனைக் கண்டு கேள்வியாக பார்த்தார் ரங்கநாயகி. அவர் பார்வை உணர்ந்து “ரங்கனை கூப்பிட போறேன் ஆச்சி”, என்றான்.

“அவன் இப்ப வந்துருவான் டா. உன் அப்பா இப்ப தான் போன் பண்ணிக் கேட்டார். வந்துடு இருக்கேன்னு சொன்னான் போல? புது மாப்பிள்ளை நீ. எங்கயும் போக கூடாது. மோஹினி பேய் அடிச்சிரும் டா”

“போகாதேன்னு சொன்னா போகாம இருக்க போறேன். அதுக்கு எதுக்கு பேய்ன்னு பயமுறுத்துற?”

“ஆமா ஆமா நீ ரொம்ப பயந்தவன் தான்”

“அது சரி, நீ என்ன இன்னும் உன் மகன் வீட்டுக்கு கிளம்பாம இருக்க?”

“என்ன டா என்னைப் போகச் சொல்ற போல? இரு இரு என்னை இங்க இருந்து விரட்டி விடுறேனு என் மாப்பிள்ளைக் கிட்ட சொல்றேன்”

“ஆத்தாடி வேண்டாம் ஆச்சி. நான் உன்னை போகச் சொன்னேன்னு அப்பாவுக்கு தெரிஞ்சது என்னை உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவார். இது உன் வீடு. நீ இங்கயே கூட இரு, நான் ஒண்ணுமே சொல்லலை. நீ இங்க இருந்தா எனக்கும் சந்தோஷம் தான்”, என்று சொல்லிக் கொண்டே ஆச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.

அவன் தலையை வருடியவாறு “என் பேத்தி என்ன டா செய்றா? தூங்கிட்டாளா?”, என்று கேட்டார் ரங்கநாயகி.

“நல்ல தூக்கம், அப்படியே உன்னை மாதிரியே”

“அது என்ன என்னை மாதிரி?”

“உலகம் மறந்து ஆன்னு தூங்குவியே? அது மாதிரி தூங்குறா. ஒரு காலத்துல தாத்தா நீ தூங்குறதை ரசிக்கிற மாதிரி நான் என் பொண்டாட்டியை ரசிச்சிட்டு வரேன்”

“ஆமா நீ மட்டும் எப்படியாம்? நீ தூங்கும் போது ஒரு கால் தூத்துக்குடி, ஒரு கால் தென்காசின்னு போகும். உங்க தாத்தா மாதிரி தான் நீயும். இதை எல்லாம் நாங்க சொல்லிக்கிட்டா இருக்கோம்?”

“சரி சரி விடு, ரகசியத்தை வெளிய சொல்லாத ஆச்சி. ஆமா நீ என்ன ஏற்பாடு எல்லாம் செய்யாம அமைதியா உக்காந்துருக்க?”, என்று கேட்டு அவரைச் சீண்டினான்.

“என்னது டா? என்ன ஏற்பாடு செய்யணும்?”

“அதான் இந்த பூ அலங்காரம் எல்லாம் செய்யணும்ல?”

“அதான் வீட்டைச் சுத்தி அலங்காரம் இருக்கே? போதாதா உனக்கு?”

“அது இல்லை ஆச்சி, என் ரூம்ல ஒரு அலங்காரத்தையும் காணோமே?”

“உன் ரூம்ல எதுக்கு டா அலங்காரம் பண்ணணும்?”

“அது வந்து…”, என்று அவன் நாணிக் கோண “சி வெக்கப் படாதே. என்னன்னு சொல்லு”, என்றார் ரங்கநாயகி.

“கட்டில் அலங்காரம் எல்லாம் பண்ண வேண்டாமா?”

“இரு உன் அப்பாவைக் கூப்பிடுறேன், பஞ்சாயத்தை முடிச்சிறலாம் “

“அவர் எதுக்கு ஆச்சி? நாமளே பேசிக்கலாம்”

“அடேய் உனக்கு இன்னைக்கே இந்த ஆசை எல்லாம் வந்துருச்சா?”

“என்ன ஆச்சி இப்படிச் சொல்ற? கல்யாணத்துக்கு அப்புறம் இது தானே? இதுக்கு தான் தாத்தா இருந்துருக்கணும். அவருக்கு தான் என் மனசு புரிஞ்சிருக்கும்”

“உன் பொண்டாட்டி பல்லிக்கே பயப்படுவா போல? ஒரே நாள்ல முதலிரவு கொண்டாடி அவளை இங்க இருந்து விரட்டப் பாக்குறியா? அதெல்லாம் கொஞ்சம் அந்த பிள்ளை நம்ம எல்லாரோடயும் பேசி பழகட்டும். அது வரைக்கும் அடங்கி இரு”, என்று சொல்ல அவனும் தனக்குள் சிரித்துக் கொண்டான். வேண்டும் என்று தானே அவனும் பாட்டியிடம் வம்பிழுத்தான். அவனுக்கு தெரியாதா சிந்துவின் சுபாவம்.

அப்போது தான் வைதேகியின் நினைவு வந்தது ஆதவனுக்கு. “ஆச்சி?”, என்று அழைத்தான்.

“என்ன டா?”

“நம்ம வைதேகிக்கு மாமா ஏதாவது வரன் பாத்துருக்காரா?”

“பரமு ஒண்ணும் சொல்லலையே டா? ஏன் நீ ஏதாவது வரன் பாத்துருக்கியா?”

“ஏன் என்னோட முறைப்பொண்ணுக்கு நான் வரன் பாக்க கூடாதாக்கும்”

“யாரு சொன்னா பாக்க கூடாதுன்னு. தாராளமா பாரு ராசா. அவளுக்கும் ஒருத்தன் வந்துட்டான்னா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்”

“அதுக்குள்ள நீ போயிருவியா என்ன? ரெண்டு அக்கா பிள்ளைகளைப் பாத்துட்ட. என் பிள்ளைகளையும் பாத்துட்டு பொறுமையா போ”

“சரி டா, சீக்கிரம் உன் பொண்டாட்டிக் கிட்ட சொல்லி கொள்ளுப் பேரனை பெத்துக் கொடு. சரி வைதேகி விஷயம் சொல்லு டா”

“ஒரு வரன் பாத்துருக்கேன் பாட்டி. ரொம்ப நல்ல இடம். நல்ல பையன். என் பிரண்ட் தான். வெளிநாட்டுல இருக்கான்”

“உன் மாமன் கிட்ட சொல்லட்டுமா?”

“அவன் கொஞ்ச நாள் கழிச்சு இங்க வருவான். அப்ப நானே மாமா கிட்ட பேசுறேன். அது வரைக்கும் மாமா யார் கிட்டயும் உறுதி கொடுத்துறாம பாத்துக்கோ”

“நான் பாத்துக்குறேன் டா. எப்படியும் ஒரு வருஷம் கழிச்சு தான் அவளுக்கு முடிப்பான். பாப்போம். சரி நீ வேற ரூம்ல தங்கிக்கோ கொஞ்ச நாளைக்கு”

“பாத்தியா, கடைசில எனக்கே ஆப்பு அடிக்கிற?”

“அது இல்லை டா ஜோசியர்….”

“அதெல்லாம் எனக்கு தெரியும். நான் பாத்துக்குறேன். முதல்ல நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும் ஆச்சி. அவ என் கூட இருந்தா தானே என்னைப் புரிஞ்சிக்குவா”

“சரி சரி கவனமா இருந்துக்கோ”, என்று பாட்டி சொல்லும் போதே ரங்கன் அங்கு வந்தான்.

அவன் முகத்தில் இருந்த களைப்பே அவன் நிலைமையை விளக்க “ரொம்ப களைப்பா தெரியுற ரங்கா. எல்லாம் காலைல பேசிக்கலாம். போய் குளிச்சிட்டு தூங்கு டா”, என்று அனுப்பி வைத்து விட்டு அவனும் அறைக்குச் சென்றான். அங்கே அவன் மனைவி நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவளைப் பார்த்த படியே கட்டிலில் படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.

அதே நேரம் வேணி வீட்டில் பிரச்சனை வெடித்தது. முகிலைத் தூக்கிக் கொண்டு சக்தி வீட்டுக்குள் செல்ல அவன் பின்னே செல்வி சென்றாள்.

ஹாலில் வேணியும் பிரியாவும் கோபமாக அமர்ந்திருக்க விஸ்வமோ தன்னுடைய போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரையும் முகத்தையும் சக்தியும் செல்வியும் குழப்பமாக பார்த்தார்கள்.

“எதுக்கு அத்தை சீக்கிரம் வந்துட்டீங்க? அங்க கொஞ்ச நேரம் இருந்துருக்கலாம்ல?”, என்று கேட்டாள் செல்வி.

“நான் எதுக்கு மா? நான் எல்லாம் வேண்டாத ஆள். நான் அங்க இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?”, என்று கேட்டாள் வேணி.

இதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் செல்வி அமைதியாக நிற்க முகிலை படுக்க வைத்து விட்டு வந்த சக்தி “உனக்கு என்ன தான் மா ஆச்சி? அங்க வச்சி என்னன்னா ரங்கனை வேற ஆள் மாதிரி பேசுற? இப்பவும் அப்படியே பேசுற?”, என்று கேட்டான்.

வேணி எந்த பதிலும் சொல்லாததால் “அப்பா, அம்மாவுக்கு என்ன ஆச்சு?”, என்று விஸ்வத்திடம் கேட்டான்.

“உன் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கு. தேவையில்லாம வாய்க் கொடுக்காத சக்தி. போய் தூங்கு போ. செல்வி நீயும் உள்ள போ டா”, என்றார் விஸ்வம்.

“எனக்கு ஒண்ணும் புரியலை. சரி பிரியா நீயும் ஏன் இப்படி இருக்க? என்ன ஆச்சி உனக்கு?”, என்று தங்கையிடம் கேட்டான் சக்தி.

“என்ன ஆகணும்? இனி என்ன ஆகணும்? என் வாழ்க்கையே போச்சு”, என்று உளறினாள் பிரியா.

“பிரியா அமைதியா இரு”, என்று வேணி சொல்ல “இங்க என்ன தான் நடக்குது?”, என்று கேட்டான் சக்தி.

அனைவரும் அமைதியாக இருக்க “ஏய் பிரியா என்ன நடந்துச்சுன்னு சொல்லு. மண்டபத்துல யாரும் எதுவும் சொன்னாங்களா?”, என்று உண்மையான அக்கறையில் கேட்டான். என்ன இருந்தாலும் தங்கையாயிற்றே? செல்விக்கும் தன் வீட்டினர் எதுவோ சொல்லி இருப்பார்களோ என்று பயம் வந்தது.

“ஆதவன் நம்ம பிரியாவைத் தான் கட்டுவான்னு ஆசைப் பட்டேன் டா சக்தி. உன் தங்கச்சியும் அவனை விரும்பித் தொலைஞ்சிருக்கா. ஆனா எல்லாம் போச்சு”, என்று வேணி உண்மையைச் சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“அப்பா என்னப்பா இது?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் சக்தி.

“வாயைக் கொடுக்காதே தேவையில்லாத பிரச்சனை வரும்னு சொன்னேன் தானே?”, என்றார் விஸ்வம்.

“உங்களுக்கு இது தெரியுமாப்பா?”

“காலைலே இருந்தே இவங்க ரெண்டு பேர் முகமும் சரியே இல்லை. சிந்துவை முறைச்சிட்டே இருந்தாங்க. அப்ப தான் சந்தேகம் வந்துச்சு. ஆனா இப்ப தான் எனக்கே உண்மை தெரியும்”, என்றார் விஸ்வம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!