Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 18 1

அத்தியாயம் 18 

நினைவுகளை உன்னுடன் பகிர்ந்து

கொள்ளும் வேளையில் எந்தன்

உள்ளம் பரவசம் கொள்கிறது!!!



Advertisement

“அதானே? அது அவன் தனிப் பட்ட விஷயம். அதைப் போய் இப்படி பகிரங்கப் படுத்தி பேச யாரு உனக்கு உரிமை கொடுத்தது? இதுல பெத்தவங்க நாங்களே தலையிட முடியாது. நீ எப்படி பேசலாம். உன் கிட்ட இருந்து இவ்வளவு கேவலமான செய்கையை நான் எதிர் பாக்கலை பிரியா. முதல்ல போ இங்க இருந்து. இனி இந்த வீட்டுப் பக்கம் நீ வரக் கூடாது”, என்று சொன்ன ரத்தினம் வேணி புறம் திரும்பி “உனக்கும் சேத்து தான் சொல்றேன்”, என்றார்.

Advertisement

வேணி அதிர்ந்து போய் நின்றாள். “இவளுக்கு இது தேவை தான்”, என்று எண்ணிக் கொண்டார் விஸ்வம். “உன் கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பாக்கலை மா”, என்று அன்னையை திட்டினான் சக்தி.

Advertisement

“இன்னையோட உங்க தங்கச்சி உறவு முடிஞ்சது. என் குடும்பக்தை வேரறுக்க நினைச்ச இவங்க ரெண்டு பேரையும் என்னால மன்னிக்க முடியாது. இப்ப உண்மை தெரிஞ்சதுனால சரியாப் போச்சு. இல்லைன்னா காலம் முழுக்க என் மகனும் மருமகளும் பிரிஞ்சு தான் இருக்கணுமா? இங்க பாருங்க, இனி எக்காரணத்துக்காகவும் இவ மேல நீங்க தங்கச்சின்னு பாசம் காட்டக் கூடாது. இவளுக்கு செஞ்சது எல்லாம் போதும். இல்லை உங்க தொங்கச்சி தான் உங்களுக்கு வேணும்னா நான் என் மகன் கூட தனியா போறேன்”, என்றாள் மங்கை.

Advertisement

“உண்மையான பாசத்தோட தான் இத்தனை நாள் இருந்தேன் மங்கை. ஆனா இவங்க என் மகன் குடும்பத்தையே அழிக்கப் பாத்தவங்க. இன்னும் என்ன பாசம் வேண்டி இருக்கு. கூட பிறந்தவனாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு காட்டிட்டா என் தங்கச்சி”, என்று மனைவியிடம் சொன்ன ரத்தினம் வேணி மற்றும் பிரியா புறம் திரும்பி “என்ன கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளினா தான் போவீங்களா? வெளிய போங்க. இனி இந்த வீட்டுப் பக்கம் வரக் கூடாது. தாய்மாமன் சீர் கூட நான் செய்ய வர மாட்டேன்”, என்று சொல்ல வேணி எவ்வளவு கெஞ்சியும் அவர் மலை இறங்க வில்லை.

தளர்ந்து போய் இருவரும் வெளியே சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்தது ஒன்று. ஆனால் நடந்தது ஒன்று. ரத்தினம் இப்படி உறவையே அறுத்து விடுவார் என்று அவர்கள் எதிர் பார்க்கவே இல்லை. அவர்கள் சென்றதும் ரத்தினம் தயக்கத்துடன் விஸ்வத்தைப் பார்த்தார்.

“இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டா கூட என் மனசு ஆறுமான்னு எனக்கு தெரியலை மச்சான். நான் வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றார் விஸ்வம்.

“நடந்த தப்பு முழுக்க அம்மா தங்கச்சி மேல தான் மாமா. ஆனா அவங்க மேல கோபப் பட்டு என்னால அவங்க உறவை முறிக்க முடியாது. எனக்கும் சில கடமைகள் இருக்கு. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்”, என்றான் சக்தி.

“எனக்கு புரியுது மருமகனே. எல்லாத்தையும் கொஞ்சம் ஆறப் போடுவோம். நீங்க செல்வியை அழைச்சிட்டு வீட்டுக்கு போங்க”, என்று ரத்தினம் சொன்னதும் இருவரும் கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும் “மருமக கிட்ட உண்மையைச் சொல்லி கூட்டிட்டு வா பா”, என்றார் ரத்தினம்.

“ஆமா தம்பி, உண்மையைச் சொன்னா சிந்து புரிஞ்சிக்குவா”, என்றாள் மங்கை.

“‘நான் போக மாட்டேன்”, என்றான் ஆதவன். அவன் அப்படிச் சொன்னது மூவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

“என்னப்பா சொல்ற?”, என்று கேட்டாள் மங்கை.

“என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம போனால்ல? அவளைக் கூப்பிட நான் போக மாட்டேன்”

“தப்பு உன் பேர்ல தான் ஆதவா. அந்த பிள்ளை முன்னாடியே உன் கையை உடைச்சிருக்க. பின்ன அவ என்ன நினைப்பா?”

“அவ கோபம் நியாயம் தான் மா. அவ போனதையும் நான் தப்பு சொல்லலை. ஆனா நான் என்ன தப்பு பண்ணினேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்ல?”

“சரி விடு. நானும் அப்பாவும் போறோம். நாங்க போய் கூட்டிட்டு வரோம்”

“நான் வேணும்னா போறேன். தங்கச்சியைக் கூட்டிட்டு வரேன்”, என்றான் ரங்கன்.

“யாரும் போக வேண்டாம். அவளே உண்மை புரிஞ்சு வரட்டும். நாம எத்தனை நாள் அவளுக்கு காவல் இருக்க முடியும்? பிரியா சொன்னதுக்கு இன்னைக்கு போனவ நாளைக்கு வேற யாரும் சொன்னாலும் இப்படி தான் பண்ணுவா. நான் தான் முக்கியம்னு நினைச்சு அவ இங்க வரட்டும். அது வரை அங்கயே இருக்கட்டும்”, என்று சொல்லி விட்டான். ஆனால் அவன் மனதில் இருந்த பெரிய துக்கம் அவனை விட்டுச் சென்றிருந்தது. ஏற்கனவே சிந்து மனது புரிந்தாலும் இப்போதைய அவளது கோபம் தனக்கானது என்று எண்ணி அவன் மனது உவகை கொண்டது.

சிந்துவை அழைக்க யாரும் செல்ல வேண்டாம் என்று புன்னகையுடன் சொல்லிச் சென்றவனைப் பார்த்து மூவரும் திகைத்துப் போனார்கள்.

சிறிது நேரம் கழித்து ரங்கன் சிந்துவை அழைத்து நடந்ததை அனைத்தையும் சொல்லி விட்டான். அதைக் கேட்டு சிந்துவுக்கு சந்தோசமாக இருந்தது.

“நிஜமாவாண்ணா?”, என்று ஆவலுடன் கேட்டாள்.

“ஆமா மா, அண்ணன் மனசுல நீ தான் இருக்க. நான் சொன்னதை நீ தான் நம்பலை”

“இப்ப நம்புறேன் அண்ணா”

“ஆனா உன்னைக் கூப்பிட வர மாட்டேன்னு சொல்லிருச்சு மா”

“அது எப்படி அவங்க சொல்லலாம்? அவங்க என்னைக் கூப்பிட வந்து தான் ஆகணும். வேணுக்குன்னு கையை உடைச்சதுக்கு அவங்களுக்கு தண்டனை வேண்டாம்?”

“ஒரு வேளை அண்ணன் கூப்பிட வரலைன்னா?”, என்று ரங்கன் கேட்க “கண்டிப்பா வருவாங்கண்ணா. எனக்கு நம்பிக்கை இருக்கு”, என்று சொல்லி போனை வைத்தாள். ஆனால் அவள் மனதுக்குள் சிறிது பயமாக தான் இருந்தது. ஏகாம்பரம் பேசியதை வைத்து கோபத்தில் வர மாட்டானோ என்று நினைத்தாள். ஆனாலும் அவள் காதல் கொண்ட மனம் அவன் தன்னை அழைக்க வர வேண்டும் என்று எதிர் பார்த்தது.

அன்று ஏகாம்பரம் அவனைப் பேசியதில் இருந்து சிந்து அவரிடம் பேச வில்லை. அவர் மட்டும் இல்லை யாருமே ஏகாம்பரத்திடம் பேச வில்லை. அவர் பேசினாலும் முகம் கொடுத்து கேட்க வில்லை. என்ன செய்து அனைத்தையும் சரி செய்ய என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.

இங்கே சக்தியும் செல்வியும் வீட்டுக்கு சென்ற போது விஸ்வம் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார்.

அவரைக் கண்டு அவன் மட்டும் இல்லை. வீட்டில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். “அப்பா எங்க கிளம்பிட்டீங்க?”, என்று கேட்டான் சக்தி.

“எனக்கு சில பேர் முகத்தைப் பாக்க கூட பிடிக்கலை சக்தி. அதனால நான் கிளம்புறேன்”

“எங்கப்பா?”

“காசி ராமேஸ்வரம்னு போறேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு”, என்று அவர் தளர்ந்து போய் சொல்ல “என்னங்க என்னை மன்னிச்சிருங்க. உங்களை இந்த அளவுக்கு காயப் படுத்துவேன்னு எனக்கு தெரியாதுங்க”, என்றாள் வேணி.

“சி வாயை மூடு, உன்னைப் பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு”, என்றவர் சக்தி புறம் திரும்பி “நான் கிளம்புறேன் சக்தி. நீ எல்லாத்தையும் பாத்துக்குவே=ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்ப அப்ப எங்க அம்மாவை மட்டும் போய்ப் பாத்துக்கோ. ஏதாவதுன்னா எனக்கு நீ மட்டும் போன் பண்ணு”, என்று சொன்னவர் அங்கிருந்து கிளம்பியே விட்டார்.

வேணி ஒடுங்கிப் போனாள் என்றால் பிரியாவோ குற்ற உணர்வில் மனம் தளர்ந்து போனாள். கூடவே தன்னால் தான் அன்னையும் தந்தையும் பிரிந்தார்கள் என்று அவளுக்கு கவலையாக இருந்தது.

அதே நேரம் அவள் மனம் திருந்திவிட்டாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. இதற்கெல்லாம் காரணமான ஆதவன் மேல் இன்னும் அவளுக்கு கோபம் இருக்க தான் செய்தது. அவன் மீது இருந்த ஆசை இப்போது வெறுப்பாகவும் கோபமாகவும் உருமாறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!