Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 18 2

விஸ்வம் ஊரை விட்டுச் சென்றதை அறிந்த ரத்தினம் மனைவியிடம் “என் மாப்பிள்ளை மானஸ்தன். அவன் வாழ்க்கையை நான் தான் கெடுத்துட்டேன் இப்படி ஒரு ஜென்மத்தை அவனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து”, என்று வருந்தினார்.

மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது. ஆதவன் எப்போது வந்து தன்னை அழைத்துச் செல்வான் என்ற எதிர் பார்ப்பில் சிந்து நாட்களைக் கடத்தினாள்.



Advertisement

ஏகாம்பரமோ எப்படி அனைத்தையும் சரி செய்வது என்ற யோசனையில் இருந்தார். இப்போது மகளுக்காக ஆதவனை மருமகனாக ஏற்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார். ஆனால் அதை எப்படி மற்றவருக்கு பறை சாற்றுவது என்று தான் அவருக்கு தெரிய வில்லை.

அமுதவள்ளியிடம் பேசலாம் என்றால் “உங்களுக்கு தேவையான சாப்பாடு டேபிள் மேல இருக்கு. வேற எதுவும் என் கிட்ட பேசாதீங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விடுகிறாள்.

Advertisement

Advertisement

அசோக் எப்போதுமே அவரிடம் அதிகம் பேச மாட்டான். சிந்துவோ இப்போதெல்லாம் அந்த அறைக்குள் தான் வாசம் செய்கிறாள். ஒரு வழியாக ஆதவனிடம் பேசி விடலாம் என்று தீர்மானித்து விட்டார். ஆனால் அவரிடம் அவனது நம்பர் இல்லை.

மனைவியிடம் கேட்கலாம் என்றால் அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். அதனால் அன்று மாலை அசோக் வீட்டுக்கு வந்ததும் நேரம் பார்த்து காத்திருந்தார். சரியாக அவன் பாத்ரூமுக்குள் குளிக்க நுழைந்ததும் அவசரமாக அவனது அறைக்குள் நுழைந்தார்.

Advertisement

அவசர அவசரமாக அவனது போனை எடுத்து ஆதவன் நம்பரைத் தேடினார். அதில் மாப்பிள்ளை என்று இருக்க அந்த நம்பரை அவசரமாக தன்னுடைய போனில் குறித்துக் கொண்டார். பின் போனை கீழே வைக்க எண்ணும் போது துண்டை எடுக்க அசோக் வெளியே வந்து விட்டான்.

அவனைக் கண்டு அவர் அதிர்ந்து விழிக்க அவனுக்கும் திகைப்பு தான். “என் ரூமுக்குள்ள நீங்க என்ன பண்ணுறீங்க? அதுவும் என் போனை எடுத்துருக்கீங்க?”, என்று கேட்டான் அசோக்.

“அது…. அது வந்து…. நீ ஏதாவது பொண்ணு கூட பேசுறியான்னு பாக்க வந்தேன்”, என்று உளறி விட்டு அவர் வெளியே செல்ல “இவருக்கு இருக்க ஏத்தத்தைப் பாரேன்?”, என்ற தோள் குலுக்களோடு துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.

தன்னுடைய அறைக்குள் வந்த ஏகாம்பரம் அடுத்த நொடி அசோக் போனில் இருந்து எடுத்த நம்பருக்கு அழைத்து விட்டார். ஆனால் அவருக்கு உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது. ஏதோ காதலனிடம் பேசத் தயங்கும் காதலி போலவே பயந்தார். மகளின் வாழ்க்கை, அவளது ஆசை ஆதவன் தான் என்று உணர்ந்த பிறகு அவரது வீம்பு எல்லாம் காற்றோடு கரைந்து தான் போனது. ஆனாலும் அவன் என்ன சொல்வானோ என்ற தயக்கம் இருக்க தான் செய்தது.

தன்னுடைய போனை எடுப்பானா? எடுத்தாலும் சரியாக பேசுவானா என்று குழம்பிப் போனார். அதே நேரம் ஆதவன் மனைவியைப் பற்றிய கனவில் தான் இருந்தான்.

“சில பேருக்கு நிஜத்தை தேடிப் போகணும்னு தோணாம கனவு கண்டுட்டு இருக்குறதே வேலையாப் போச்சு”, என்று ரங்கன் அவனைக் குத்திக் காட்ட “போடா, ரொம்பத் தான் அக்கறை. அவ்வளவு அக்கறை இருக்குறவன் தினமும் பேசுற உன் தங்கச்சிக் கிட்ட சொல்லி இங்க வரச் சொல்ல வேண்டியது தானே?”, என்றான்.

அவன் குரலில் இருந்த ஏக்கம் ரங்கன் மனதை ஏதோ செய்தது. அப்போது ஆதவன் போன் அடிக்கவும் “யாரோ கால் பண்ணுறாங்கண்ணே”, என்று சொல்லி அவனது போனை எடுத்துக் கொடுத்தான்.

ஏதோ ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் குழப்பத்துடன் போனை எடுத்தான்.

“ஹலோ யாருங்க?”, என்று ஆதவன் கேட்ட பின்பும் அந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.

“ஹலோ, லைன்ல இருக்கீங்களா? யார் பேசுறது?”, என்று மீண்டும் கேட்டான்.

“நான் ஏகாம்பரம் பேசுறேன்”, என்று தயக்கத்துடன் சொன்னார். அழைத்தது அவர் என்றதும் அவன் நெஞ்சு ஒரு நொடி நின்று துடித்தது. அவர் அழைத்ததும் அவன் மகிழ்ந்து விட வில்லை. மனைவியைப் பற்றிய கவலை தான் வந்தது. இருவரையும் ஒரெடியாக பிரிக்க வழி செய்து விட்டாரோ? சிந்துவும் அந்த முடிவை எடுத்து விட்டாளோ? அதனால் தான் தனக்கு அழைத்திருக்கிறாரோ என்று அவனுக்கு பயமாக இருந்தது.

அவன் அதிர்ந்து போய் அமைதியாக இருக்கவும் “ஹலோ லைன்ல இருக்கீங்களா?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.

“ஆன், இருக்கேன். சொல்லுங்க”

“நீங்க கொஞ்சம் இங்க வறீங்களா?”, என்று அவர் சொன்னதும் அவரது அழைப்பும் அவரது மரியாதையான பேச்சும் அவனுக்கு குழப்பத்தைக் கொடுத்தது.

“நானா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான்.

“ஆமா, அன்னைக்கு நான் பேசினதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க மாப்பிள்ளை”

“என்னது?”

“ஆமா மாப்பிள்ளை. என்னை மன்னிச்சிருங்க. எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். நீங்க இங்க வாங்க. வந்து உங்க பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போங்க”, என்று அவர் சொன்னதும் தன்னுடைய காதில் விழுந்த வார்த்தைகளை அவன் கனவில் கூட எண்ண வில்லை.

“நீங்க பேசுறது எல்லாம் உண்மையா?”, என்று அவரிடமே கேட்டு விட்டான்.

“உண்மையை தான் சொல்றேன் மாப்பிள்ளை. என் பொண்ணு… இல்லை இல்லை உங்க மனைவி…. உங்க மேல தான் உயிரா இருக்கா. நான் தான் எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிக்கிட்டு சொதப்பி வச்சிருக்கேன். என்னை மன்னிச்சிருங்க. நீங்க வந்து அவளைக் கூட்டிட்டு போறீங்களா? இல்லை நானே கொண்டு வந்து விடவா?”

“நானே வரேன் நாளைக்கு”, என்று சொன்னான். அவளை அழைக்கப் போகக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தவன் மகளுக்காக அவர் இந்த அளவுக்கு இறங்கி வந்ததும் தானும் மனைவிக்காக இறங்கிப் போக வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

“ரொம்ப சந்தோஷம், அப்படியே வீட்ல ரெண்டு மூணு நாள் தங்கினா நல்லா இருக்கும். உங்களை விருந்துக்கு நான் அழைக்கவே இல்லை. எல்லாம் என் தப்பு தான். ஏதோ ஒரு தப்பான பிடிவாதம்”

“கண்டிப்பா வரேன். ரெண்டு நாள் தங்குற மாதிரியே வரேன். பழசை எல்லாம் மறந்துறலாம்”, என்று அவன் சொன்னதும் சரி என்று சொல்லி போனை வைத்தார்.

ரங்கன் ஆதவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் பார்வையில் புன்னகைத்தவன் “என்ன டா?”, என்று கேட்டான்.

“உன் மாமனார் தானே பேசினார்? உடனே வறேன்னு சொல்லிட்ட. நான் இப்பவே போய் அம்மா கிட்டயும் ஐயா கிட்டயும் சொல்றேன். நாம எல்லாம் சொல்லி கேக்காத அண்ணன் அவங்க மாமனார் சொன்னதும் கிளம்புறாங்கன்னு சொல்றேன்”, என்று சொல்லி விட்டு ஓடினான். அவன் பின்னேயே ஓடி வந்த ஆதவன் அவனைப் பிடிக்க எண்ண அதற்குள் அங்கே வந்தார்கள் ரத்தினமும் மங்கையும்.

அதனால் ஆதவனும் ரங்கனும் அமைதியாக நின்றார்கள். “என்ன டா இது, சின்னப் பசங்க மாதிரி ஓடி விளையாடிக்கிட்டு?”, என்று கேட்டாள் மங்கை.

ரங்கன் நடந்ததை அப்படியே போட்டுக் கொடுக்க ரத்தினம் மற்றும் மங்கை இருவரும் சிரித்தார்கள்.

“நல்லதை யார் சொன்னா என்ன ரங்கா?”, என்று கேட்டார் ரத்தினம்.

“அதானே, எங்களுக்கு எங்க மருமக இங்க வரணும், அவ்வளவு தான். கிளம்பு கிளம்பு”, என்றாள் மங்கை.

“ரெண்டு நாள் தங்குற மாதிரி வரச் சொன்னார் மா”, என்று தயக்கத்துடன் சொன்னான் ஆதவன்.

“ரெண்டு நாள் என்ன? ஒரு மாசம் கூட இருந்துட்டு வா. வரும் போது சிந்துவோட வந்தா மட்டும் போதும். அப்புறம் நல்ல நாள்…”, என்று மங்கை ஆரம்பிக்க “பேசாம இரு மங்கை. எல்லா நாளும் நல்ல நாள் தான். அவன் வாழ்க்கையை அவன் பாத்துக்கட்டும். நீ ஜோசியர் கிட்ட போனதுனால தான் இவ்வளவு பிரச்சனை. விடு அவனை”, என்று மனைவியை அடக்கிய ரத்தினம் “நீ கிளம்புப்பா. காரை எடுத்துட்டு போ”, என்றார்.

ஆதவன் வரும் விஷயத்தை மனைவியிடம் சொல்லலாம் என்று நினைத்த ஏகாம்பரம் “வள்ளி உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”, என்று ஆரம்பித்தார்.

“உங்க கிட்ட பேசுற மனநிலைல நான் இல்லை. எனக்கு தூக்கம் வருது”, என்று படுத்து விட்டாள். அதன் பின் அவர் எதுவும் சொல்ல  வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!