Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 2 1

அத்தியாயம் 2  

உந்தன் காதல் மொழி

கேட்ட உவகையில் களித்தே

போனது என் நெஞ்சம்!!!



Advertisement

சாப்பிட்டு மூன்று மணி வரை ஓய்வு எடுத்த ஆதவனும் ரங்கனும் மதுரைக்கு கிளம்பினார்கள். சிறிது தூரம் சென்றதும் ரங்கன் ஓரக் கண்ணால் ஆதவனைப் பார்த்துக் கொண்டே வந்தான். அதைப் பார்த்து சிரிப்பு வந்தது ஆதவனுக்கு.

Advertisement

“என்ன டா ஏதோ ஹீரோயினைப் பாக்குற மாதிரி என்னை சைட் அடிச்சிட்டு வர? என்ன விஷயம்?”

Advertisement

“அண்ணே இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க”, என்று ரசித்து சொன்னான் ரங்கன்.

Advertisement

“உனக்கு தெரியுது. என் அப்பனுக்கு தெரியுதா? அந்த ஆள் தான் டா என் முதல் எதிரியே. எப்ப பாத்தாலும் மூஞ்சியப் பாருன்னு திட்டிட்டே இருக்கார். அப்ப எல்லாம் நான் அழகா இல்லையோன்னு எனக்கே தோணுது டா ரங்கா. இப்படி அடிக்கடி என்னைப் புகழ்ந்துட்டே இரு. மனசுக்கு ஆறுதலா இருக்கும்”, என்று சொல்லி பெருமூச்சு விட்டான்.

“ஐயா எப்பவும் உன் நல்லதுக்கு தான் செய்வாங்க. அவர் குழந்தை மாதிரி. அவர் கோபத்துல பேசுறது கூட பாசத்துல தாண்ணே?”

“அவரை விட்டுக் கொடுக்க மாட்டியே? மனுஷன் கனவுல கூட என்னை நிம்மதியா இருக்க விடலை. தெரியுமா டா?”

“கனவுலயா? என்ன செஞ்சார்? ஆமா என்ன கனவு?”, என்று ரங்கன் கேட்டதும் தன்னுடைய கனவை அவனுக்கு விவரித்தான் ஆதவன்.

ஆயத்த ஆடை உற்பத்தியில் பல தலைமுறைகளாக கொடி கட்டிப் பறக்கிறார்கள் ஆதவன் குடும்பத்தார். ஆதவனும் அது சம்பந்தமான துறையில் தான் உயர் படிப்பை முடித்திருந்தான். சொந்த தொழிலிலே இறங்கி வெற்றியும் கண்டு விட்டான். முந்திய தலைமுறை, துணிகள் தயாரிப்பு மட்டும் செய்திருக்க ஆதவனோ ஆடைகள் விற்கும் பெரிய ஜவுளிக் கடைகளையும் துவங்கியிருந்தான். அம்மாவின் மீது கொண்ட அன்பினால் ‘மங்கை டெக்ஸ்டைல்ஸ்’ என்று பெயர் சூட்டி இருந்தான். கோவையில் இவர்களது கடை இப்போது பிரபலமாகி விட்டாலும் பல ஊர்களிலும் திறக்க வேண்டும் என்பது தான் அவனது ஆசை.

அவனுடைய அறிவையும் வளர்ச்சியையும் கண்டு அனைவரும் பிரம்மித்துப் போனார்கள். தனக்கு பிறகு தன்னுடைய தொழில் என்னவாகும்? ஜவுளி சம்பந்தமான வேலைகளை ஆதவன் எடுத்து செய்வானா? இந்த தலைமுறையோடு இந்த தொழில் முடிந்து விடுமா என்று பயந்த ரத்தினம் மனைவியிடம் மட்டும் தான் புலம்புவார். மகனிடம் அவருடைய விருப்பத்தை திணிக்க மாட்டார்.

ஆனால் அவன் தங்களுக்கு சம்பந்தமாக துறையை எடுத்து படிக்கவுமே பாதி நிம்மதி கொண்டார் என்றால் அவன் பைனல் இயர் படிக்கும் போது அவனுக்கான புராஜெக்ட்டையே அவர்களுடைய கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் தான் செய்தான். புராஜெக்ட் செய்யும் போதே அவன் சில பல வியாபார யுக்திகளை சொல்ல அப்போதே முழு நிம்மதி அடைந்தார் ரத்தினம். மங்கையிடம் சொல்லி சொல்லி பூரித்துப் போனார். ஆனாலும் இந்த துறையை நீ ஏற்றுக் கொள்வாயா என்று அவனிடம் கேட்க வில்லை.

அவர் அப்படி கேட்டால் அவருக்காக அவன் சரி என்று சொல்லலாம். ஒரு வேளை அவன் மறுத்தால் அதை தாங்கும் சக்தியும் அவருக்கு இல்லை என்பதால் அவனிடம் படித்து முடிக்கும் வரைக்கும் எதுவுமே கேட்க வில்லை.

காலேஜ் முடிந்த பிறகும் அவர் கேட்காமலே இருக்க ரிசல்ட் வரும் வரை ஊர் சுற்றிய ஆதவன் ஒரு நாள் வந்து “நானும் பேக்ட்டரிக்கு வரேன் பா”, என்று சொல்ல அன்று அவர் அடைந்த உவகைக்கு அளவே இல்லை.

“சந்தோஷமா வா தம்பி”, என்று சொன்னவர் அப்போதும் “இதை எல்லாம் நீயே இனி பாத்துக்கோ”, என்று சொல்ல வில்லை.

தந்தைக்கு துணையாக சில வருஷம் அவருடன் இறங்கி வேலை செய்தவன் உடை தயாரிப்பில் பல யுக்திகளை அவர் ஆதரவோடு செய்து முடித்து வெற்றியும் கண்டான். அவன் சொன்ன வழி முறைகள் மார்க்கெட்டில் விரும்பி வாங்கவும் பட்டது.

“நம்ம தயாரித்து கொடுக்குற உடைகளை நாமலே வித்தா என்ன?”, என்று கேட்டான் ஆதவன்.

“திடீர்னு எப்படி தம்பி அவ்வளவு பொறுப்பை எடுக்க முடியும்? நம்ம துணிகள் மும்பை டெல்லின்னு அனுப்பிட்டு இருக்கோம். அவங்களுக்கு எல்லாம் என்ன பதில் சொல்ல முடியும்? அதெல்லாம் பெரிய பெரிய கடைகள். அது மட்டுமில்லாம நாம புதுசா ஆரம்பிச்சா இந்த அளவுக்கு சேல் இருக்காதே தம்பி”, என்று சொன்னார் ரத்தினம். அவர் மகனின் முடிவை ஆதரிக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை. அதில் உள்ள உண்மை நிலவரத்தை மட்டும் சொன்னார்.

“எல்லாத்தையும் நிறுத்திட்டு புதுசா ஜவுளிக்கடை ஆரம்பிக்கணும்னு சொல்லலைப் பா. அதெல்லாம் பழைய படியே இருக்கட்டும். இப்ப ஒரு மாடல்ல ஐநூறு துணிகள் செய்றோம்னா அதை விட அதிகமா ஒரு பத்து செஞ்சா போதும். ஒவ்வொரு மாடல்லயும் பத்து துணி செய்றதுனால நமக்கு செலவு கொஞ்சம் தான் அதிகமா இருக்கும். ஒவ்வொரு மாடல்ல பத்து துணி செஞ்சா நாம தயாரிக்கிற ஆயிரம் மாடல்ல நமக்கு ஒரு கடை வைக்கிற அளவுக்கு துணி கிடைச்சிரும். முதல்ல சின்ன அளவுல ஆரம்பிப்போம். என்ன தான் நடக்குதுன்னு பாப்போமே? மத்த வியாபாரம் எல்லாம் அப்படியே நடக்கும் பா. ஒரு வேளை நம்ம கடைல உள்ளது சேல் ஆகலைன்னா அதை ஒரு ரெண்டு மாசம் கழிச்சு மத்த கஷ்டமர் கிட்டயே வித்துக்கலாம்”

“நல்ல ஐடியா தான் பா. தாராளமா செய். ஆனா செய்றதை உருப்படியா செய்யனும்? எதுக்கு சின்ன அளவுல செஞ்சிக்கிட்டு? பெரிய அளவுளே செய். என்ன ஆனாலும் பாத்துக்கலாம்”, என்று அனுமதி கொடுத்தார்.

அவனும் அந்த வேலையை சரியாக செய்து முடித்தான். கீழே துணிக்கடை ஆரம்பித்தவன் மாடியில் தையலகம், பியூட்டி பார்லர், ஐஸ்கிரீம் பார்லர், புரவுசிங்க் சென்டர் என நான்கு கடைகளை கட்டி வாடகைக்கு விற்றான்.

தேவையானது எல்லாம் ஒரே இடத்தில் இருக்க அந்த கடையே பிரம்மாண்டமாக இருந்தது. சொன்ன படி வேலையை சரியாக முடித்த மகனை வியந்து பார்த்தார் ரத்தினம்.

மங்கை தான் கடையை திறந்து வைத்தாள். “அப்பா பணம் கொடுத்துருக்கார், நீ செஞ்சு முடிச்சிருக்க., ஆனா திறந்து வைக்க நானா? வேண்டாம் டா கண்ணா”, என்று மறுத்த மங்கையிடம் “நானும் அப்பாவும் சாதிக்க காரணமே நீங்க தான் மா. நீங்க தான் திறந்து வைக்கணும். நான் சொல்றது சரி தானேப்பா?”, என்று சொன்னான்.

“ஆமா நீ என்னைக்கு தப்பா சொல்லிருக்க தம்பி?”, என்று முழு ஆதரவு கொடுத்தார் ரத்தினம்.

சொன்னது போல ஆரம்பித்த நாளை தவிர்த்து விட்டு அடுத்த நாள் எல்லா கடைகளுக்கும் கூட்டம் அள்ளத் தான் செய்தது. உடை எடுக்க பெண்கள் சென்றால் ஆண்கள் குழந்தைகளை ஐஸ்கிரீம் பார்லர்க்கு அழைத்துச் சென்றனர்.

“இந்தாங்கப்பா இந்த மாசம் வருமானம்”, என்று சொல்லி ரத்தினத்திடம் அவன் நீட்ட அவரோ அவனை பிரம்மிப்பாக பார்த்து அதை “நீயே வச்சிக்கோப்பா. வா சாப்பிட போகலாம்”, என்று அழைத்துச் சென்றவர் அவனுடன் பேசிய படியே சாப்பிட்டார். பின் “நல்லா தூங்கு போ தம்பி”, என்று அவனை அனுப்பி வைத்தார். அடுத்த நாள் காலையில் அவர் பாசமாக அவனை எழுப்பினார்.

கனவைச் சொல்லி முடித்து விட்டு “இது தான் டா என் கனவு. அவர் பாசமா எழுப்புறார்னு பாத்தா நேர்ல டெரரா எழுப்பிட்டு இருக்கார். மனுசனுக்கு காண்டாகுமா ஆகாதா?”, என்று கேட்டான் ஆதவன்.

“சூர்யவம்சம் படத்துல ஒரு பாட்டுல முன்னுக்கு வர மாதிரி நீ ஒரு கனவுல முன்னுக்கு வந்துட்டண்ணே. கலக்கிட்ட போ. உன் கனவுல நான் கலெக்டர் ஆனேனா?”, என்று சிரிப்புடன் ரங்கன் கேட்க அவனை முறைத்துப் பார்த்தான் ஆதவன்.

அவன் முறைப்பைப் பார்த்த ரங்கனோ “கனவுன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாண்ணே?”, என்று கேட்டு அடக்க முடியாமல் சிரித்தான்.

“என்ன டா சிரிக்கிற?”

“டேய் தடி மாடுன்னு தான் ஐயா உன்னைக் கூப்பிடுறார்? அவராவது உன்னை தம்பி தம்பின்னு கூப்பிடுறதாவது”, என்று சொன்னதும் அவன் தலையில் ஒரு கொட்டை வைத்தவன் “வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு டா. எல்லாரும் எனக்கு ஆப்பு வைக்கிறதுலே ரெடியா இருங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய நண்பனை போனில் அழைத்தான்.

“டேய் மாப்பிள்ளை எங்க டா இருக்க? முந்தின நாளே வரச் சொன்னேன்ல? ஏன் இன்னும் வரலை?”, என்று கேட்டான் அசோக்.

“வீட்ல கொஞ்சம் வேலை டா. அதான். மார்னிங் முகூர்த்ததுக்கு வந்துருவேன்”

“பார்ட்டியே இன்னைக்கு நைட் தானே டா? நம்ம பிரண்ட்ஸ் எல்லாரும் இன்னைக்கு நைட் வந்துருவாங்க. நீ இல்லைன்னா எப்படி?”

“என்னைக்கு வந்தாலும் நான் சும்மா தான் இருக்கணும். நீங்க பேசி பேசியே என்னை வெறுப்பேத்துவீங்க”

“அது என்னவோ சரி தான். நீ தான் குடிக்க மாட்டியே. சரி காலைல கட்டாயம் வந்துரு”, என்று சொல்லி போனை வைத்தான் அசோக்.

அதன் பின் கார் நின்றது அவர்கள் சரக்கு அனுப்பும் இடத்துக்கு தான். அங்கே சென்றதும் அங்கே என்ன பிரச்சனை என்று கேட்டு விட்டு தந்தைக்கு அழைத்து நடந்ததைச் சொன்னான். பின் “இப்ப என்ன செய்ய பா?”, என்று அவரிடமே கேட்டான்.

“இதைக் கூட உன்னால சரி பண்ண முடியாதா டா? என் கிட்ட கேக்குறதுக்கு தான் உன்னை அங்க அனுப்புனேனா? இதைக் கூட உன்னால பண்ண முடியாதா? எதுக்கு தான் நீ இருக்கியோ?”, என்று அவனை நாலு திட்டு திட்டி அங்கிருந்த முதலாளியிடம் பேசி நிலைமையை சரி செய்து வைத்து விட்டார் ரத்தினம்.

“அப்பாடி”, என்ற படி காரில் ஏறி அமர்ந்தான் ஆதவன். “மனுசனை கொஞ்சமாவது நிம்மதியா இருக்க விடுறாரா டா உங்க ஐயா? எனக்கு எந்த ஐடியாவும் வரலைன்னு திட்டுறார். ஒரு வேளை அவர் கிட்ட கேக்காம நானே இந்த பிரச்சனையை சரி செஞ்சிருந்தேன்னு வை, அப்பவும் என் கிட்ட கேக்காம எதுக்கு அப்படி செஞ்சேன்னு திட்டிருப்பார்”, என்று சலிப்பாக சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!