Skip to content
Post Views: 3,491
“ஐயாவுக்கு உன் மேல அதிக லவ் இருக்குண்ணே”
“அடப் போடா இருந்துறகிறந்துற போகுது. லவ்வாம் லவ்வு”
Advertisement
“நீ சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர மாதிரி ஒரு நாள் வெடிச்சு சிதறு. அப்ப பாரு நம்ம ஐயாவோட பாசத்த”
“நான் உன் ஐயா பாசத்துல சிதறுறது இருக்கட்டும்? நீ படத்தைப் பாத்து பாத்து வெடிச்சு சிதறிறாத ரங்கா. எதுக்கு எடுத்தாலும் உனக்கு படம் தான் கிடைக்குதா?”
Advertisement
Advertisement
“உனக்கு ஏன் அண்ணே படமே பிடிக்க மாட்டிக்குது?”
“எனக்கு படம் பிடிக்கலைன்னு நான் எப்படா சொன்னேன்?”
Advertisement
“அப்ப ஏன் என்னைத் திட்டிட்டே இருக்க?”
“நீ படம் பாக்குறதுல பைத்தியமா இருக்கல்ல. அதை தான் சொல்லிட்டு இருக்கேன். அன்னைக்கு டிவி பாக்குற, வாய்க்குள்ள கொசு போய்ட்டு வெளிய வருது. நார்மலா இரு டா”
“நான் நார்மலா தான் இருக்கேன். நீ தான் நார்மலா இல்லை”
“ஏன் டா அப்படிச் சொல்ற?”
“பின்னே நான் இது வரைக்கும் எத்தனை பொண்ணுங்களை சைட் அடிச்சிருக்கேன்? நீ இது வரைக்கும் யாரையாவது சைட் அடிச்சிருக்கியா?”
“சார் ஒரு திருத்தம். நீங்க சைட் அடிக்கிறது பொண்ணுங்களை இல்லை. நடிகைகளை. இல்லைன்னா நடிக்க வர ஆண்ட்டிசை”, என்று சொல்லி சிரித்தான் ஆதவன்.
“ஏதோ ஒண்ணு. நான் அதையாவது பண்ணுறேன்ல? உனக்கு ஏன் எந்த பொண்ணுங்களையும் பிடிக்க மாட்டிக்குது? எல்லா பொண்ணுங்களையும் கல்லையும் மண்ணையும் பாக்குற மாதிரி பாக்குற?”
“தெரியலை டா. என் மனசை கவர்ந்த மாதிரி பொண்ணை நான் இன்னும் பாக்கலைன்னு நினைக்கிறேன். அதான் யாரையும் பாக்கத் தோணலை. ஒரு வேளை ஹார்மோன் பிரச்சனையோ என்னவோ? யாருக்கு தெரியும்?”
“ஒரு வேளை உன் மனசுக்கு புடிச்ச பொண்ணைப் பாத்துட்டா பாத்த உடனே உங்களை பிடிச்சிருக்குனு சொல்லிருவியாண்ணே?”, என்று கேட்டான் ரங்கன்.
“கண்டிப்பா டா”, என்றான் ஆதவன். இப்படி இவர்கள் பேசிய படியே சென்னை வரும் போது அதிகாலை மூன்று மணி ஆகி இருந்தது. ஏற்கனவே ஹோட்டல் ரூம் புக் செய்திருந்ததால் அங்கே சென்றார்கள்.
ரங்கனும் ஆதவனும் ஹோட்டலுக்கு சென்ற போது அவர்களுக்கு அறை தயாராக இருந்தது. இருவரும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தார்கள். எங்கு சென்றாலும் இது தான் வழக்கம். இருவருக்கும் இடையே ஒளிவு மறைவு என்பதே கிடையாது. திருமணத்துக்கு செல்ல இன்னும் நேரம் இருப்பதால் இருவரும் உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.
அதே நேரம் அசோக் வீட்டில் நல்ல உறக்கத்தில் இருந்தாள் அவனது தங்கை சிந்து. ஒன்பது மணி முதல் பத்து மணி வரை முகூர்த்த நேரம் என்பதால் அவளை ஆறு மணி வரை யாரும் தொந்தரவு செய்ய வில்லை. அவளது தந்தை அவளை தொந்தரவு செய்யக் கூடாது என்று ஆர்டர் போட்டதால் கூட இருக்கலாம்.
ஆறு மணிக்கு பின்னர் தான் “பாப்பா, எந்திரிச்சு குளி. ஆட்கள் எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க”, என்று சொல்லி அவளை எழுப்பினாள் அவளது அன்னை அமுதவள்ளி. சிந்துவோ அசையவே இல்லை.
“கடவுளே, இவளுக்கு எப்ப தான் பொறுப்பு வரப் போகுதோ?”, என்று முனங்கிக் கொண்டே வெளியே வந்த அமுதவள்ளி அவளது கணவர் ஏகாம்பரம் அருகில் சென்றாள்.
“என்ன ஆச்சு வள்ளி?”, என்று கேட்ட ஏகாம்பரம் வெள்ளை வேஷ்டி சட்டையில் ஒரு அரசியல்வாதி போன்ற தோற்றத்தில் இருந்தார். அரசியல்வாதி இல்லை என்றாலும் ஏகாம்பரம் மிகப் பெரிய கோடீஸ்வரர். தமிழ்நாட்டில் பல இடங்களில் அவருக்கு நகைக் கடை உள்ளது. அதனால் தனது செல்ல மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.
“என்ன ஆச்சுன்னு என்னைக் கேக்குறீங்க? உங்க மக எழுப்பினா அசைய மாட்டிக்கா. நாம இப்ப மண்டபத்துக்கு போகணும். இவ எந்திச்சு குளிச்சா தானே கிளம்ப முடியும்?”, என்று எரிச்சலுடன் சொன்னாள் அமுதவள்ளி.
“இப்ப என்ன? குட்டிமாவை எழுப்பனும், அவ்வளவு தானே? நீ உன் வேலையைப் பாரு. நான் அவளைப் பாத்துக்குறேன்”, என்றவர் மகளின் அறைக்குச் சென்றார். அங்கே மூன்று ஆட்கள் படுக்கும் கட்டிலில் மகள் ஒரு ஓரத்தில் அழகாக தூங்கிக் கொண்டிருக்க அவள் அருகே சென்று அமர்ந்தார்.
“குட்டிமா, சிந்து குட்டி, எந்திரி டா. டைம் ஆச்சு பாரு”, என்று கொஞ்சலுடன் மகளை எழுப்பினார்.
அன்னை குரல் கேட்டு சத்தம் கொடுக்காமல் இருந்த மகள் தந்தை குரல் கேட்கவும் “அஞ்சு நிமிஷம் பா, பிளீஸ்”, என்று சிணுங்கினாள். அவளுக்கு அப்பா என்றால் உயிர்.
“கல்யாணம் முடிஞ்சதும் தூங்குவியாம், இப்ப எந்திரி டா கண்ணா”, என்று ஏகாம்பரம் சொல்ல ‘கல்யாணம்’ என்ற ஒற்றை வார்த்தையில் அவள் தூக்கம் பறந்தோட பயத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
அவள் முகத்தில் இருந்த பயத்தைப் பார்த்த ஏகாம்பரம் “என்ன டா?”, என்று கனிவுடன் கேட்க “நான் உங்க கூடவே இருக்கேன் பா. எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாமே. எனக்கு பயமா இருக்கு”, என்று அவளுடைய உண்மையான மனநிலையைச் சொன்னாள்.
“கல்யாணம் முடிஞ்சாலும் நீ இங்க நம்ம வீட்ல தான் டா இருப்ப. உன் வாழ்க்கைல எதுவுமே மாறப் போறது இல்லை. இதே ரூம்ல தானே இருக்கப் போற? மாப்பிள்ளை நம்ம கோகுல் தானே? வேற யாருமா? அவனும் இங்க தான் இருப்பான். அப்புறம் என்ன பயம்?”, என்று சொல்ல அவள் முகம் கொஞ்சம் தெளிந்தது.
அவள் தெளிந்த முகத்தைப் பார்த்ததும் “சரி குளிச்சிட்டு வா”, என்று அவர் சொல்ல “சரிப்பா”, என்று சொல்லி விட்டு குளிக்கச் சென்றாள்.
மகளின் அறையில் இருந்து வெளியே வந்தவர் தன்னுடைய அக்கா பார்வதியை போனில் அழைத்தார்.
“சொல்லு தம்பி”, என்று கேட்டாள் பார்வதி.
“கிளம்பிட்டீங்களாக்கா? கோகுல் எந்திச்சிட்டானா?”
“எந்திச்சிட்டான் தம்பி. இன்னும் அரை மணி நேரத்துல நாங்க எல்லாரும் மண்டபத்துக்கு வந்துருவோம்”
“சரிக்கா, சின்னவன் வந்துட்டானா?”
“கேசவனுக்கு வர முடியலையாம் டா தம்பி. லீவ் கிடைக்கலையாம்”
“போலீஸ் வேலை ஆச்சே? எப்படி கிடைக்கும்? சரி நீங்க கிளம்பி வாங்க”, என்று சொல்லி போனை வைத்தவர் மனைவியை தேடி வந்தார்.
மகளுக்கான நகை, உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அமுதவள்ளி கணவர் தன்னை தேடி வந்ததும் “என்னங்க?”, என்று கேட்டாள்.
“அக்கா இப்ப கிளம்பிருவாளாம். நாமளும் மண்டபத்துக்கு போகணும். சிந்து குளிச்சதும் கிளம்பிறலாம்”
“சரிங்க”
“ஆமா, அசோக் எங்க?”
“அவன் மண்டபத்துலே தங்கிட்டான்”
“அவன் டிரஸ் எல்லாம்…”
“நேத்தே கொண்டு போயிட்டாங்க”
“அவன் செயின் மோதிரம் எல்லாம் எடுத்துட்டு போயிருக்க மாட்டான். அதையும் சேத்து எடுத்து வை. பாப்பா குளிச்சிட்டு வந்துட்டா பாரு. அவளுக்கு டிரஸ் பண்ணி விடு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
எந்த வித அலங்காரமும் இல்லாமலே தேவதையாக இருந்தாள் சிந்து. அழகு கொஞ்சும் மகளுக்கு சேலையை கட்டி விட ஆரம்பித்தாள் அமுதவள்ளி. ஆனால் அவளது குணம் தான் அமுதவள்ளிக்கு பயத்தைக் கொடுத்தது.
சிந்து எதற்கெடுத்தாலும் பயப்படுவாள். அவளை அப்படி ஆக்கி வைத்திருந்தார் ஏகாம்பரம். சிறு வயதில் “அப்பா எறும்பு”, அவள் பயப்பட எறும்பு தானே ஒன்றும் செய்யாது என்று அவள் பயத்தை தெளிய வைப்பதை விட்டுவிட்டு அவளை தனக்குள்ளே பாதுகாப்பது போல அடைக்கலப் படுத்தினார்.
அப்போதிருந்து இப்போது வரை சிந்துவுக்கு அப்பா தான் வேண்டும். பள்ளி, கல்லூரி சென்றால் அவள் மாறுவாள் என்று எதிர் பார்த்த அமுதவள்ளிக்கு தோல்வி தான். அப்போதும் பயந்தாங்கொள்ளி என்ற பெயர் வாங்கிக் கொண்டு தான் வந்தாள். அவள் குணம் புரிந்த மற்றொரு ஆள் அவளது சினேகிதி அஞ்சலி.
அஞ்சலி மற்றும் சிந்து இருவரும் பள்ளித் தோழிகள். சிந்துவின் குணம் அறிந்து அஞ்சலி அவளை எவ்வளவோ மாற்ற முயன்றிருக்கிறாள். இப்போது வரைக்குமே முயற்சி செய்கிறாள். எதற்கெடுத்தாலும் பயம் என்று இருந்த சிந்துவின் பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றால் அது அஞ்சலியால் தான்.
இப்போது வரை சிந்துவின் பயம் முழுவதுமாக அவளை விட்டு அகல வில்லை. பார்வதியின் மகனை சிந்துவுக்கு பார்த்தது கூட அமுதவள்ளிக்கு பிடிக்க வில்லை. அதே போல அசோக்குக்கும் பிடிக்க வில்லை.
ஆனால் சிந்துவின் பயந்த சுபாவத்துக்கு சொந்தத்துக்குள் திருமணம் செய்வது தான் சரி, பின்னால் எந்த பிரச்சனையும் வராது என்று எண்ணி தான் சம்மதம் சொன்னார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டது.
அமுதவள்ளி சேலை கட்டி விட்டதும் மிதமான நகைகள் மட்டும் அணிந்து கிளம்பினாள் சிந்து. அதன் பின் அனைவரும் மண்டபம் சென்றார்கள். அங்கே அழகு நிலைய பெண்கள் தயாராக இருக்க சிந்துவுக்கு அலங்காரம் ஆரம்பமானது.
வெளியே வந்து கொண்டிருந்த உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருந்த ஏகாம்பரம் மகனைத் தேடினார். அவன் பொறுப்பாக ஐயர் சொன்னவற்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கவும் அவருக்கு திருப்தியாக இருந்தது. நேற்று இரவு சரக்கு கொஞ்சம் அதிகமானதால் அவன் கண்கள் சிவந்து போய் இருந்தது. அப்படியே ஏகாம்பரம் முன்னால் சென்று நின்றால் தன்னை காலையிலே துவைத்து தொங்க விட்டுவிடுவார் என்பதால் தான் ஐயர் அருகிலேயே நின்று கொண்டான்.
அப்போது பார்வதி மற்றும் கோகுல் அவர்கள் பக்க உறவினர்களுடன் அங்கே வந்தார்கள். அவர்களை வரவேற்றார் ஏகாம்பரம். அதன் பின் மாப்பிள்ளை கோகுலுக்கும் அலங்காரம் ஆரம்பமானது. அவனது நண்பர்களுடன் மணமகன் அறைக்குள் இருந்தான்.
கிட்டத் தட்ட ஒன்பது மணிக்கு மண்டபத்துக்கு வந்தார்கள் ஆதவனும் ரங்கனும். அவர்களைக் கண்ட அசோக் ஓடி வந்து நண்பனை அணைத்துக் கொண்டான். “டேய் மாப்பிள்ளை எப்படி இருக்க? ரங்கா எப்படி இருக்க?”, என்று கேட்டான் அசோக்.
“நல்லா இருக்கோம் டா”, என்று ஆதவனும் “நல்லா இருக்கோம்ணே”, என்று ரங்கனும் சொன்னார்கள்.
“சரி வாங்க”, என்று சொன்ன அசோக் ஏகாம்பரம் அருகில் சென்று “இவன் என்னோட ஃபிரண்ட் பா”, என்று சொல்லி ஆதவனை அறிமுகப் படுத்த ஏகாம்பரம் அசோக் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்து விட்டார். மகனை முறைத்து பார்த்தவர் ஆதவனை வா என்று சொல்ல மறந்து விட்டார்.
அதில் ஆதவன் முகம் ஒரு மாதிரி மாறியது. அப்பா மனநிலை புரிந்த அசோக் அவனை அழைத்துக் கொண்டு நண்பர்கள் அருகே வந்து விட்டான். ஏகாம்பரம் ஆதவனை கூர்ந்து எல்லாம் பார்க்க வில்லை. அசோக்கின் நண்பன் அவ்வளவு தான் என்று நினைத்துக் கொண்டார். அவனை வரவேற்காதது அவருக்கு பெரிய விஷயமாக தெரிய வில்லை. ஆதவனும் அதன் பின் அவரைக் கண்டு கொள்ள வில்லை.
error: Content is protected !!