Skip to content
Post Views: 3,468
அதைப் பார்த்தவளுக்கு வியப்பாக இருந்தது. அதில் இருந்தது அனைத்தும் அவளது புகைபடங்கள் தான். “இது எல்லாம் ஆதவன் என் கிட்ட கொடுக்கலை. நான் கேட்டதுக்கு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டான். ஆனா அவனுக்கு தெரியாம அவன் போன்ல இருந்து சுட்டுட்டேன். அப்புறம் இந்த போட்டோ எல்லாம் ஆதவன் சிந்து ரிசப்ஷன்ல எடுத்தது தானே? இதை எனக்கு அசோக் அனுப்பினான். அதுல உன்னை மட்டும் கட் பண்ணி பிரேம் பண்ணிட்டேன்”, என்றான்.
அவன் காதலில் மெய்யும் உயிரும் உருகி அமர்ந்திருந்தாள் வைதேகி. அவள் நெகிழ்ந்திருப்பதைப் பார்த்தவன் “பிளீஸ் டி, இதுக்கு மேல எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது. அந்த அளவுக்கு என்னோட காதல் எனக்கு மூச்சு முட்டுது டி. ஆனா உனக்கு டைம் வேணும்னா சொல்லு”, என்று சொன்னவனின் விரல்கள் அவளுடைய உள்ளங்கையில் கோலமிட அவன் ஏற்படுத்திய தாபத்தில் அவன் மீதே சாய்ந்து கொண்டாள். அதற்கு மேல் அவனுக்கு வேறு என்ன வேண்டுமாம்? அவர்கள் வாழ்க்கை அன்றே சந்தோஷமாக ஆரம்பமானது.
Advertisement
நாட்கள் அழகாக நகர சிந்துவின் வயிறும் வளர ஆரம்பித்தது. ஏழாம் மாதம் இருக்கையிலே அவளுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்தார்கள். வளைகாப்பு முடிந்து சிந்து சென்னை செல்ல ஆதவனும் அடுத்த நாளே அவள் பின்னே சென்று விட்டான். மகளையும் மருமகனையும் பார்த்து பார்த்து கவனித்தார்கள் அமுதவள்ளியும் ஏகாம்பரமும்.
“என்ன டா பம்பரம் இப்படி மாறிட்டார்? மாப்பிள்ளை மாப்பிள்ளைனு என் கிட்ட உருகுறார்”, என்று அசோக்கிடம் கிண்டல் அடித்தான் ஆதவன்.
Advertisement
Advertisement
அப்போது ஒரு நாள் ஏகாம்பரம் ஆதவனை அழைத்தார். “என்ன மாமா?”, என்று கேட்ட படி அவர் அருகில் வந்து அமர்ந்தான்.
“அசோக்குக்கு கல்யாணம் பண்ணனும் மாப்பிள்ளை. ஆனா அவன் பிடி கொடுக்கவே மாட்டிக்கான். நீங்க கொஞ்சம் என்னன்னு கேட்டுச் சொல்றீங்களா?”
Advertisement
இவ்வளவு பெரிய பொறுப்பை அவர் தன்னிடம் ஒப்படைக்க தன் மீது அவர் வைத்த நம்பிக்கை புரிந்தது. “நான் அவன் கிட்ட பேசுறேன் மாமா”, என்று சொன்னவன் நண்பனிடமும் பேசினான்.
அசோக் என்ன சொல்ல என்று தெரியாமல் திணற “யாரையும் விரும்புறியா டா, வேலை பாக்குற இடத்துல?”, என்று கேட்டான் ஆதவன்.
“விரும்புறேன் தான். ஆனா வேலை பாக்குற இடத்துல இல்லை. உங்க ஊர்ல தான்”
“எங்க ஊர்லயா? நீ ஜானுவையா சொல்ற? அன்னைக்கு கூட அவளை ஆர்வமா பாத்தியே? வைதேகி கல்யாணம் அப்பவும் ஜானு பின்னாடியே தெரிஞ்ச. நான் சும்மா நூல் விடுறேன்னு நினைச்சேன்”
“அப்படி எல்லாம் இல்லை டா, எனக்கு அவளைத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு. சீரியஸா தான் விரும்புறேன். ஆனா இது செட் ஆகுமான்னு தெரியலை”
“ஏன் அப்படிச் சொல்ற?”
“அவ பேச்சு அப்படி தான் இருந்தது”
“அவ கிட்ட பேசுனியா?”, என்று ஆதவன் கேட்டதும் அன்று ஜானகி பேசிய அனைத்தையும் சொன்னான்.
“அன்னைக்கு அவ இப்படி தான் டா பேசினா. ஆனா அவ பேசினது கூட எனக்கு அவளை இன்னும் பிடிக்க தான் வச்சது. யார் இந்த வயசுல குடும்பத்தை நினைச்சு பொறுப்பா இருக்கா சொல்லு? ஆனா அப்படிப் பேசின பொண்ணை டிஸ்டர்ப் பண்ணவும் மனசில்லை டா”, என்றான் அசோக்.
“நீ ஏன் அப்படி நினைக்கிற? அவ கஷ்டத்தை எல்லாம் நீ ஒண்ணும் இல்லாம செய். அவளோட பொறுப்பை மட்டும் இல்லாம அவ குடும்பத்தோட பொறுப்பையும் நீ ஏத்துக்கோ. அவளுக்கு வேலைக்கு போக ஆசைன்னா உன் ஆஃபிஸ்லே அவளுக்கு வேலை வாங்கிக் கொடு. இல்லைன்னா நீயும் அவளும் சேந்து ஒரு ஆபீஸ் ஆரம்பிங்க. பம்பரம் உடனே வச்சுக் கொடுத்துருவார் டா. அவளுக்கும் ஆசை ஏக்கம் எல்லாம் இருக்கலாம். அதை நீ போக்கு. அவ வீட்டைப் பத்தி அவ கவலையைப் பத்தி உன் கிட்ட சொல்லிருக்கான்னா அவளுக்கும் உன்னை பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்? அவ கவலையை இறக்கி வைக்க நீ உன் தோளை நீட்டினா அவ சந்தோஷமா சாஞ்சுக்குவா. அவளுக்கு படிப்பு முடிய இன்னும் மூணு மாசம் இருக்கு. முடிஞ்சதும் கல்யாணம் வச்சிக்கலாம். இப்ப பேசி முடிச்சிறலாமா?”
“சரி டா, நானே குழப்பத்துல தான் இருந்தேன். ஆனா இப்ப சந்தோஸமா இருக்கு. ஆனா எங்க அப்பா என்ன சொல்லுவாரோ தெரியலையே?”
“கனகாம்பரத்தை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு”
“நீ இப்படி எதையாவது சொல்லி எங்க அப்பா பேரே எனக்கு மறந்திரும் போல டா”, என்று சிரித்தான் அசோக்.
உடனடியாக ஏகாம்பரத்திடம் பேசவும் செய்தான். வேறு ஜாதி, ஏழைக் குடும்பம் என்று அவர் யோசித்தார் தான். ஆனால் ஆதவன் பேசும் விதத்தில் பேசி அவரைப் பாதிக் கரைத்தான் என்றால் மேடிற்ற வயிரை வைத்துக் கொண்டு “ஜானு ரொம்ப நல்லவ பா. அவ வீட்டுக்கு வந்தா உங்களை எல்லாம் பொறுப்பா பாத்துக்குவா. அண்ணாவுக்கும் அவ சரியா இருப்பா. பிளீஸ் பா சரின்னு சொல்லுங்க”, என்று சொன்னாள் சிந்து. அதற்கு மேல் அவர் ஏன் மறுக்கப் போகிறார்.
ஆனால் ஆதவன் ஜோசியரிடம் பேசும் போது அவன் தயங்கத் தான் செய்தான். ஏனென்றால் அவனுக்கு அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. ஆனால் அவன் சொன்னதைக் கேட்ட அவரோ “நான் கஷ்டப் படுறப்ப என் சாதி சனமா வந்து எனக்கு உதவுச்சு? நீங்க தானே தம்பி உதவினீங்க? நீங்க கண்டிப்பா எங்களுக்கு நல்லது தான் செய்வீங்க. எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான்”, என்று சொல்லி விட்டார்.
உடனே பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்க பட ஜானகியை அமுதவள்ளி மற்றும் ஏகாம்பரத்துக்கு மிகவும் பிடித்து விட்டது. அன்றே நிச்சயத் தேதியைக் குறித்தார்கள்.
இன்று அசோக்கை நிமிர்ந்து பார்த்த ஜானகி முகத்தில் மருந்துக்கு கூட கோபம் இல்லை. இனி தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் அவன் துடைத்து விடுவான் என்ற நம்பிக்கை அவள் மனதில் குவிய ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தாள். அதைக் கண்டு புன்னகையுடன் கண் சிமிட்டினான் அந்த காதலன். ஜானகியின் படிப்பு முடிந்து ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு திருமணம் என்று முடிவு செய்யப் பட்டது. அது கூட சிந்துவின் பிரசவ நேரத்தில் திருமணம் வைத்தால் சரியாக இருக்காது என்பதால் தான்.
நாட்கள் மாதங்களாகக் கடக்க ஒரு வழியாக பிரசவ நாளும் வந்தது. சிந்து பிரசவ வலியில் துடிக்க மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை ஆர்ம்பமானது.
வெளியே ஆதவன் உட்பட அனைவரும் கைகளைப் பிசைந்தவாறு பயத்துடன் இருந்தார்கள். ரத்தினம் மட்டும் ஊரில் இருந்து வந்திருந்தார். அஞ்சலியை தனியே விட முடியாது என்பதால் மங்கையும் ரங்கனும் வீட்டில் இருந்தார்கள். ரங்கநாயகியும் வந்திருந்தார். கொள்ளுப் பேரப் பிள்ளையை பார்க்க வேண்டும் அல்லவா? பரமசிவம் குடும்பத்துடன் வந்திருந்தார்.
வைதேகி மற்றும் வைகுந்தும் வந்திருந்தார்கள். அசோக் அனைவருக்கும் தேவையான டீ டிபன் என வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் தாய் மாமன் ஆகப் போகும் பூரிப்பு அவனுக்குள் இருந்தது. ஏகாம்பரம் மகளின் அழுகுரல் உள்ளே இருந்து கேட்க கேட்க அழுத படி மனைவியின் கையைப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். அமுதவள்ளி அவரைத் தேற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
எப்போதும் போல இப்போதும் ஏகாம்பரத்துக்கு சிந்துவின் மீது இருக்கும் பாசம் ஆதவனுக்கு வியப்பையே தந்தது. ஏனோ அவரைக் கண்டு தனக்கும் ஒரு மகள் பிறந்து அவளை அவரைப் போலவே பாசமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது.
சிறிது நேரம் கழித்து சிந்துவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையைக் குளிப்பாட்டி நர்ஸ் வந்து கொடுக்க ரங்கநாயகியை தான் குழந்தையை முதலில் வாங்க வைத்தார்கள். பல தலைமுறைகளைப் பார்த்தவராயிற்றே.
குழந்தையை வாங்கிக் கொஞ்சிய ரங்கநாயகி “அப்படியே உங்களை மாதிரியே இருக்கான் மாப்பிள்ளை. இந்தாங்க உங்க வீட்டு வாரிசு, உங்க பேரனைப் பிடிங்க”, என்று சொல்லி ரத்தினத்திடம் கொடுத்தார்.
அவர் பேரனைக் கொஞ்சி விட்டு ஆதவனிடம் கொடுக்கும் போது கைகள் நடுங்க குழந்தையை வாங்கிக் கொண்டான். அவன் உடல் எல்லாம் அந்த சின்ன குழந்தையின் தொடுகையில் சிலிர்த்தது. அதற்கு பின்னர் “இந்தாங்க மாமா உங்க பேரன்”, என்று சொல்லி ஏகாம்பரத்திடம் கொடுத்தான். அவர் கைகள் எல்லாம் ஜில்லிட்டுப் போனது.
ஏனோ அவருக்கு சிந்துவை கையில் வாங்கும் போது இருந்த சந்தோசத் தருணம் நினைவில் வந்தது. ஏகாம்பரம் பேரனை யாரிடமும் கொடுக்க வில்லை. அவரே கையில் வைத்திருந்தார். அவர் கையில் இருக்கும் குழந்தையை தான் அனைவரும் அனைவரும் கொஞ்சினார்கள்.
பின் குழந்தையைக் தூக்கிக் கொண்டு நர்ஸ் உள்ளே சென்று விட மனைவியைக் காண காத்திருந்தான் ஆதவன். மயக்கத்தில் இருந்து சிந்து கண் விழித்ததும் நர்ஸ் அவளிடம் குழந்தையை கொடுத்து பசியாற்றச் சொல்லிக் கொடுத்தாள். பின் அவளைக் காண வந்த ஆதவனிடம் “இந்த ஒரு குழந்தை போதுங்க. எனக்கு பயமா இருந்துச்சு தெரியுமா?”, என்று சொல்ல மகள் வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்ட ஆதவன் “சரி டா”, என்றான். அன்றே மற்ற அனைவரும் ஊருக்கு கிளம்பிச் செல்ல இங்கே ஆதவனும் சிந்துவின் வீட்டினரும் மட்டும் இருந்தார்கள்.
அடுத்த இரண்டு நாளில் இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டார்கள். ரங்கன் மங்கை மற்றும் அஞ்சலியை அழைத்துக் கொண்டு குழந்தையைப் பார்க்க வந்திருந்தான்.
குழந்தையைப் பார்த்து முடித்ததும் “ரங்கா இங்க வரைக்கும் வந்துட்டோம். அஞ்சலிக்கும் அவ அம்மா அப்பாவைப் பாக்கணும் போல இருக்கும்ல? நான் பேரன் கூட இருக்கேன். நீ ஒரெட்டு அவளை அவ வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வா பா”, என்றாள் மங்கை.
அஞ்சலியை அழைத்துக் கொண்டு அவளுடைய வீட்டுக்குச் சென்றான் ரங்கன். அவள் தான் வழி சொன்னாள். அவளது வீடு சின்ன வீடு தான். அவளது தந்தை மற்றும் தாய் அவனை அன்புடன் வரவேற்றார்கள். அவளது தங்கைகள் அவனைக் கண்டு வரவேற்பாக சிரித்தவர்கள் அக்காவுடன் கதை பேச ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்கள் ஏழ்மை நிலை புரிய அனைவரையும் கவனித்த படியே அமர்ந்திருந்தான் ரங்கன். பின் அனைவரிடமும் சொல்லி விட்டு அஞ்சலியை அழைத்துக் கொண்டு சிந்துவின் வீட்டுக்கு வந்தவன் அன்றே மங்கையையும் அஞ்சலியையும் ஊருக்கு அழைத்து வந்து விட்டான்.
காதல் தொடரும்….
error: Content is protected !!