Skip to content
Post Views: 3,058
“நீ எனக்கு மாப்பிள்ளையா கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. என் தங்கச்சி கொஞ்சம் பயந்த சுபாவம் டா. அவ என்னை மாதிரி இல்லை. அவ ஏதாவது தெரியாம தவறு செஞ்சா அவளை மன்னிச்சிரு டா. தண்டிச்சிறாத டா. அவ இப்ப என்ன மனநிலைல இருக்கான்னு கூட தெரியலை. இந்த கல்யாணம் அவளை பாதிச்சிருக்கலாம்? நாங்க ஒண்ணு நினைச்சோம் ஆனா நடந்தது வேறு”, என்று அசோக் கவலையாக சொல்ல “இப்ப நடந்த எங்க கல்யாணம் தப்புன்னு சொல்ல வரியா?”, என்று கூர்மையாக கேட்டான் ஆதவன்.
“சே சே, அவனை விட நீ பல மடங்கு உயரத்தில் இருப்பவன் டா. அவன் பேருக்கு தான் டாக்டர். மத்த படி எங்க யாருக்கும் அவனைப் பிடிக்காது. அதான் அவனை வேண்டாம்னு சொன்னோம். ஆனா சிந்து, வேற வீட்டுக்கு போக ரொம்ப பயப்படுவா, இதே அத்தை வீட்டுக்கு போனா சரியாகிருவான்னு நினைச்சோம். அது மட்டுமில்லாம கோகுல் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிச்சான் டா. அதான் சரின்னோம். மத்த படி அவனை எனக்கு பிடிக்கவே செய்யாது”
Advertisement
“உனக்கு பிடிக்கிறது இருக்கட்டும். உன் தங்கச்சிக்கு அவனைப் பிடிச்சிருந்ததா?”, என்று குழப்பமாக கேட்டான் ஆதவன். ஒரு வேளை அவனை சிந்து விரும்பி இருந்தால், சொந்த அத்தை பையன் என்று அவன் மீது ஈர்ப்பு இருந்திருந்தால். ஆதவனுக்கு இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டும் போல இருந்தது.
“அட நீ வேற. உன் கிட்ட உண்மையைச் சொல்றதுக்கு என்ன? சிந்துவுக்கு கல்யாணம்னா என்னன்னு தெரியுமான்னு கூட எனக்கு தெரியாது டா. அவ கல்யாணம்னு பேச ஆரம்பிச்சதுல இருந்து ஒரே அழுகை தான். அதோ நிக்குறாரே என் அப்பா. அவர் தான் அவ கிட்ட பேசி பேசி சம்மதிக்க வச்சார். ஆனா அந்த அயோக்கியன் சிந்துவுக்கு எதுவும் தெரியாதோன்னு நினைச்சு தான் ஓடிட்டான் டா. உனக்கு நான் சொல்ல வரது புரியுதா? நீயும் அப்படி….”
Advertisement
Advertisement
“புரியுது அசோக். கணவன் மனைவி வாழ்க்கைன்னா அது வெறும் செக்ஸ் மட்டும் இல்லை. என்னால என் மனைவியை மேனேஜ் பண்ணிக்க முடியும்”, என்று தெளிவாக சொன்னான் ஆதவன்.
“நீ சொல்றது கரெக்ட் தான் ஆதவா. செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லை. ஆனா அது இல்லாமலும் வாழ்க்கை இல்லை. அதனால…”
Advertisement
“டேய் எப்பா, என் வாழ்க்கையை எப்படி அமைச்சிக்கணும்னு எனக்கு தெரியும் டா. ஒரு மச்சானா நடந்துக்கோ. எனக்கும் சிந்துக்கும் இடைல வராத. அவளை நான் பாத்துக்குவேன்”, என்று சொல்ல “இது போதும் டா எனக்கு”, என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டான் அசோக்.
“டேய் விடு டா, உன் அப்பா பார்வையிலே என்னை பொசுக்கிருவார் போல? பொண்ணைக் கட்டினதுக்கே கொலை வெறியா இருக்கார். இதுல நாம கொஞ்சறதையும் பாத்து அவருக்கு வெறியே வந்துருச்சு”, என்று சிரித்தான் ஆதவன்.
தந்தையைப் பார்த்த அசோக்குக்கும் சிரிப்பு தான் வந்தது. “அவர் நல்லவர் தான் டா மாப்பிள்ளை. சிந்து மேல உயிரையே வச்சிருக்கார். அது மட்டுமில்லாம அவரோட தங்கச்சி பையனை ரொம்ப நம்பினார். சிந்துவுக்கு கிடைச்சிருக்குறகு டாக்டர் மாப்பிள்ளைன்னு ரொம்ப பெருமை பட்டார். ஆனா அவருக்கு தெரியலை. பொண்ணுக்கு தேவை டாக்டர் மாப்பிள்ளையோ பணமோ இல்லைன்னு. அன்பான புருஷன் தான் மகளுக்கு தேவை, அவளுக்கு பொருத்தமானவன் நீ தான்னு அவருக்கு புரிய கொஞ்சம் நாள் ஆகும். அது வரைக்கு அவரைக் கண்டுக்காத. அம்மாவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு”
“உங்க அப்பாவுக்கு கொஞ்சம் பைத்தியம் இல்லை. ரொம்ப தான் அவருக்கு”, என்று சொன்ன ஆதவனும் சிரித்தான். அவனை முறைத்துப் பார்த்த ஏகாம்பரம் மகள் அருகே சென்று அமர்ந்தார். அவளும் தந்தையின் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள்.
“அவனை நினைச்சு பயமா இருக்கா டா?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.
“பயமா இருக்கு தான். ஆனா அவங்க கொஞ்சம் நல்லவங்களா தெரியுறாங்க பா”, என்று சிந்து சொல்ல அவளை வியப்பாக பார்த்தார் ஏகாம்பரம். மகளிடம் இருந்து அவன் நல்ல பேர் வாங்கினால் அவர் என்ன நினைக்கவாம்? “கொஞ்ச நேரத்துல என் மகளையும் மயக்கிட்டானா?”, என்று எண்ணிக் கொண்டார்.
“அப்பா என் போன் எங்கப்பா?”, என்று கேட்டாள் சிந்து. “இதோ டா”, என்று சொல்லி தன்னுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
“குட்டிமா”
“என்னப்பா?”, என்று கேட்டவள் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இப்படி இயல்பாக இருப்பதே அவருக்கு வியப்பாக தான் இருந்தது.
“நீ இப்ப அவன் கூட அவன் வீட்டுக்கு போகணும் மா”, என்று அவர் சொன்னதும் அவள் முகத்தில் சிறிது பயம் உதயமானது.
“பயப்படாத கண்ணு. நான் உன்னை எங்கயும் அனுப்ப மாட்டேன். ஆனா ஒரு வேளை உன் அம்மாவும் அண்ணனும் உன்னை அனுப்பினா நீ தைரியமா அவன் கூட போ. அவன் உன்னை சின்னதா ஏதாவது சொன்னா கூட உடனே அப்பா கூட்டிட்டு வந்துறேன்”, என்று சொல்லி மகளுக்கு தைரியம் சொன்னார்.
அவ்வளவு நேரம் இருந்த இயல்பு மறைய கலக்கத்துடன் “சரி”, என்னும் விதமாய் தலையசைத்தாள்.
“அவனை எதுக்கும் நம்ப கூடாது சரியா? புது ஆள் பாத்தியா அதான். இந்தா இந்த ஏ. டி. எம் கார்டை உன் கையிலே வச்சிக்கோ”, என்று சொல்லி கார்டைக் கொடுத்தவர் “உனக்கு இந்த கார்ட் எல்லாம் யூஸ் பண்ண தெரியாது. இருந்தாலும் வச்சிக்கோ. உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு கால் பண்ணு. அப்பா உனக்கு சொல்லித் தரேன்”, என்று சொன்னார்.
சரி என்று மண்டையை ஆட்டியவள் அந்த கார்டை தன்னுடைய போனுக்கு பின்னே வைத்தாள். ஏ. டி. எம் கார்டுடன் கோகுல் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தையும் மகளிடம் கொடுத்ததை ஏகாம்பரம் கவனிக்க வில்லை. அந்த கடிதமும் சிந்து போனுக்குள் பதுங்கிக் கொண்டது. மகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே இருந்தார். அவர் அறிவுரை கூறினாரா, இல்லை அவளை மேலும் பயமுறுத்தினாரா என்பது சிந்துவுக்கு தான் தெரியும்.
அசோக்கும் ஆதவனும் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே வந்த அமுதவள்ளி தாய்க்கே உரிய தவிப்போடு தயங்கிய படியே ஆதவனின் முகம் பார்த்தாள்.
அவள் தயக்கத்தை உணர்ந்த ஆதவன் “சொல்லுங்க அத்தை”, என்றான்.
“அவர் பேசினதை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க தம்பி”
“பரவால்ல அத்தை, விடுங்க”
“அப்புறம், சிந்து ரொம்ப பயப்படுவா. அவங்க அப்பா அவளை அப்படியே வளத்துட்டார். அவர் சொல்றதை மட்டுமே நம்புற அப்பாவி தான் என் பொண்ணு. அவளுக்கு வேற எந்த விவரமும் தெரியாது. உங்க குடும்பத்துல வந்து….”
“நீங்க கவலைப்படாதீங்க அத்தை. நான் அவளை நல்லா பாத்துக்குறேன். எங்க வீட்ல அவளை நல்லா பாத்துக்குவாங்க. அதுக்கு நான் உத்திரவாதம் கொடுக்குறேன். அவ பயப்படுறதை பத்தி அசோக் சொன்னான். எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். என்னை நம்பி, என்னைப் பத்தி எதுவும் விசாரிக்காம உங்க பொண்ணைக் கட்டிக் கொடுத்துருக்கீங்க. அந்த நம்பிக்கையை இன்னைக்கு மட்டும் இல்லை, என்னைக்கும் நான் காப்பாத்துவேன்”, என்று சொல்லியிருந்தான் ஆதவன். அவனை மீறி வந்த வார்த்தைகள் அவை. ஆனால் அது அவர்கள் மனதில் பெரிய நிம்மதியைக் கொண்டு வந்தது.
அவன் சொன்னதைக் கேட்டு அசோக்கும் அமுதவள்ளியும் நிம்மதியாக புன்னகைத்தார்கள். “சரிங்க அத்தை, நாங்க கிளம்புறோம்”, என்றான் ஆதவன்.
அதைக் கேட்டு அமுதவள்ளி முகம் கூம்பியது. எப்படி எப்படி எல்லாமோ பெற்ற மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசை இருந்தது தான். ஆனால் ஆதவனின் பக்கமும் யோசிக்க வேண்டுமே.
அம்மாவின் மனநிலை உணர்ந்து “அங்க நிலைமை சரியானதும் சொல்லு டா. நாங்க சீர் கொண்டு வரணும்”, என்றான் அசோக்.
“இருக்குற பிரச்சனைல அது இப்ப முக்கியமா டா? அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். சரி நாங்க கிளம்புறோம். டைம் ஆச்சு. ரங்கன் காரைத் திருப்பி வச்சு ரெடியா இருப்பான். நாங்க கிளம்பனும்”, என்று சொல்லி விட்டு தாலி கட்டிய மனைவியை கண்களால் தேடினான்.
சிந்து ஏகாம்பரம் நெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவரும் மகள் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஆதவன் முகத்தில் எரிச்சல் வந்தது.
அவனுக்கு ஏகாம்பரம் பேச்சு சுத்தமாக பிடிக்க வில்லை. அதனால் இப்போது தன்னுடைய மனைவி அவர் நெஞ்சில் சாய்ந்திருப்பதும் அவனுக்கு பிடிக்க வில்லை. அதை அசோக்கும் கண்டு கொண்டான்.
“பெரிய அப்பா மகள்.. ரொம்ப தான் சீன் காட்டுறாங்க”, என்று கடுப்பாக எண்ணிக் கொண்ட ஆதவனுக்கு வந்த உணர்வு பொறாமையா? இல்லை உரிமை உணர்வா என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.
error: Content is protected !!