Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 8 3

அவர் தேடலை உணர்ந்த அமுதவள்ளி “சிந்துக்கு அலங்காரம் நடந்துட்டு இருக்காம். இப்ப போனா நம்மளைப் பாத்து அழுவா. சிந்துவுக்கு அலங்காரம் முடிஞ்ச பிறகு பாத்துக்கலாம். அப்புறம் அஞ்சலி சம்பந்திக்கு உதவியா இருக்க போயிருக்கா.”, என்றாள் அமுதவள்ளி.

அப்போது “சாரி டா அப்பா பேசினதுக்கு”, என்று ஆதவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அசோக்.



Advertisement

“விடு டா, கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிரும்”, என்று அசோக்குக்கு சொன்னவன் தனக்கும் அதையே சொல்லிக் கொண்டான். ஏனென்றால் ஏகாம்பரத்தின் பேச்சு அவனுக்கு எரிச்சலைத் தந்தது. பின் அசோக்கைப் பார்த்து “ஆமா உன் சொந்தக்காரங்க எங்க டா?”, என்று கேட்டான்.

Advertisement

“வேன் திடீர்னு பஞ்சர் டா. அவங்க எல்லாரும் நீங்க முதல்ல போங்க, நாங்க மெதுவா வரோம்னு சொல்லிட்டாங்க. எல்லாரும் லேட்டா வந்தா தப்பா போயிரும்ல? அதான் நாங்க வந்துட்டோம். இன்னும் பத்து நிமிசத்துல வந்துருவாங்க டா”

Advertisement

“சரி சரி, நீ பொருளை இறக்கு. நான் அப்பா கிட்ட பொருளை எல்லாம் கீழே வைக்கணுமா மேல வைக்கணுமான்னு கேட்டுட்டு வரேன். அப்படியே பொருள் இறக்க நாலு பேரை அனுப்புறேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.

Advertisement

ஆதவன் ரத்தினத்திடம் கேட்டதும் அவனை முறைத்துப் பார்த்தவர் பின் மனைவி புறம் திரும்பி “மங்கை, சீர்வரிசை எல்லாம் இந்த ரூம்ல இருக்கட்டும். விஸேஷம் முடிஞ்சதும் அதை என்ன செய்யலாம்னு பாப்போம்”, என்று சொன்னார்.

தன்னிடம் பேசாத தந்தையை அவன் முறைத்துப் பார்க்க “இவங்களுக்கு வேற வேலையே இல்லை”, என்று எண்ணிக் கொண்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்றாள் மங்கை.

ஆதவன் பொருளை இறக்க போக அசோக் ஆகட்டும், சக்தி ஆகட்டும், ஆனந்த் ஆகட்டும் அவனை எந்த வேலையும் செய்ய விட வில்லை. அதனால் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டு சிந்துவுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்த அறைக்குள் வந்தான் ஆதவன்.

“ஆது, உனக்கு இங்க என்ன வேலை?”, என்று கேட்டாள் அவனது அக்கா சுபா. மற்ற பெண்களும் சிரித்தார்கள். செல்வி பிள்ளைகள் மூவருக்கும் ஸ்னாக்ஸ் கொடுக்கச் சென்றிருந்தாள்.

“என் பொண்டாட்டியைப் பாக்க வந்தேன் போதுமா?”, என்று ஆதவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த சிந்து மீண்டும் தலை குனிந்து கொண்டாள்

“இன்னைக்கு நைட் முழுக்க தூங்காம பேச தானே போறீங்க? அப்புறம் என்ன அவசரமாம் பேராண்டி உனக்கு?”, என்று அங்கிருந்த ஒரு பாட்டி கேட்க சிந்துவுக்கோ யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

“பாட்டி சும்மா இருங்க, எல்லாரும் ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய இருக்கலாம். அவன் ஏதாவது முக்கியமான விஷயம் பேச வந்திருப்பான்”, என்று சொல்லி அனைவரையும் வெளியே அழைத்துச் சென்றாள் சுபா.

அவளை நன்றியோடு பார்த்தவன் சிந்து எதிரில் கிடந்த சேரில் அமர்ந்தான். அவளோ அங்கிருந்து எழுந்து சென்று வேறு பக்கம் பார்த்து நின்று கொண்டாள். எழுந்து சென்று அவள் முகம் பார்த்தான் ஆதவன். அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஆச்சு சிந்து?”, என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்ல வில்லை.

“உன் முகம் ஒரு மாதிரி இருக்குன்னு அக்கா அம்மா கிட்ட சொல்லிருக்கா. அதான் என்னன்னு கேக்கலாம்னு வந்தேன். யாரும் ஏதாவது சொன்னாங்களா?”, என்று அவன் கேட்டதும் அவள் கண்கள் கலங்கியது.

“ஏய் அழுறியா? என்ன ஆச்சு மா? இங்க இருக்க பிடிக்கலையா?”, என்று கேட்டான்.

“இல்லை அப்பாவை….”

“அப்பாவை…?”

“அப்பா, அம்மா, அண்ணனைப் பாக்கணும் போல இருக்கு?”

“இவ்வளவு தானா? அவங்க தான் வந்துருக்காங்களே?”

“அப்படியா? எங்க?”, என்று ஆர்வமாக கேட்டாள்.

“இரு இரு, அவங்க வெளிய இருக்காங்க. அவங்களை இங்க வரச் சொன்னேன். ஆனா உங்க அம்மா தான் அலங்காரம் முடியட்டும். இடைல வந்து தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதோ அங்க உக்காந்துருக்காங்க பாரு”, என்று சொல்லி ஜன்னல் வழியே காட்டினான். “உன் பிரண்ட் அஞ்சலியும் வந்துருக்கா. உன் சொந்தக்காரங்க எல்லாரும் பின்னாடி வந்துட்டு இருக்காங்களாம்”, என்று சொன்னான்.

அவர்களை பார்த்து சந்தோஷப் பட்ட சிந்து அவன் கையைப் பற்றிய படி “தேங்க்ஸ், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நீங்க தான் அவங்களை கூப்பிட்டீங்களா? எங்க கூப்பிடாம விட்டுருவீங்களோன்னு நினைச்சேன்”, என்றாள்.

அவள் கை தன்னுடய கையைப் பற்றியிருப்பது மயிலிறகு வருடுவது போல இருந்தது அவனுக்கு. அவளோ அந்த நினைப்பே இல்லாமல் இருந்தாள்.

“சரி அப்புறமா அம்மா அப்பா கிட்ட பேசலாம். இப்ப முகத்தை சரியா வச்சிக்கோ. ஏற்கனவே நம்ம கல்யாணம் பத்தி தெரிஞ்ச எங்க சைட் சொந்தக்காரங்க எல்லாம் ஏதேதோ பேசுறாங்களாம். இதுல நீ முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தா நான் தான் உன்னைக் கடத்திட்டு வந்தேன்னு சொல்லுவாங்க. ஏற்கனவே என்னை ரவுடிம்பாங்க”, என்றான்.

“பாக்க அப்படி எல்லாம் இல்லை”, என்று முணுமுணுத்தாள் சிந்து.

“என்ன?”

“இல்லை உங்களை பாக்க ரவுடி மாதிரி எல்லாம் இல்லை”, என்றதும் அவன் முகத்தில் புன்னகையின் சாயல்.

“அப்படியா? நான் நல்லா இருக்கேனா?”

“ம்ம்”

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”, என்று அவன் கேட்டதும் “ம்ம்”, என்றாள்.

அவளும் அந்த கேள்வியைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவனிடம் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்க திணறினாள். கூடவே பிரியாவையும் வைதேகியையும் பிடிக்குமா என்று அவனிடம் எப்படி கேட்க என்று திகைத்தாள்.

அவள் மனது புரியாதவனோ அவள் சொன்ன பதிலில் புன்னகையுடன் அவளைப் பார்த்தான். அலங்காரம் இன்னும் முழுமையடைய வில்லை தான். ஆனாலும் அவள் அழகு அவனை அசைக்க அவளை நெருங்கி நின்றான்.

அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் மோத பயந்து போய் பின்னால் சாயப் போனவளை அவன் கரங்கள் வளைத்து அணைத்துக் கொண்டது.

அவள் அவனைக் கண்டு அதிர்ந்து விழிக்க “பிளீஸ், இப்படியே போனா நான் நானாவே இருக்க மாட்டேன். ஒரே ஒரு தடவை மட்டும்”, என்று சொன்னவன் அவள் என்ன என்று உணரும் முன்பே அவள் இதழ்களை சிறை செய்திருந்தான்.

ஏனோ இப்போது சிந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கண்களை மூடி அவன் கைகளுக்குள் இருந்தாள். “நல்ல முன்னேற்றம் தான்”, என்று எண்ணிக் கொண்ட ஆதவன் விலக முடியாமல் விலகத் தோன்றாமல் தான் அவள் இதழ்களில் இருந்து விலகினான்.

அவன் விலகிய பின்னும் அவள் கண்களை மூடிய படியே இருக்க அவளை அங்கிருந்த சேரில் அமர வைத்தவன் “ரிலாக்சா இரு”, என்று சொல்லி விட்டு வெளியே வந்தான். அவன் கையைப் பற்றி இழுத்து கொண்டு தோட்டத்துக்கு வந்த சுபா சுற்றிலும் தன்னுடைய பார்வையை ஓட்டிய படி “இந்தா கர்சீப், வாயைத் துடைச்சிட்டு போடா”, என்று சொல்ல அவள் கையில் இருந்து கர்ச்சிஃப்பை பிடிங்கி விட்டு அங்கிருந்து ஓடியே விட்டான். சிறு சிரிப்புடன் சுபா உள்ள வரும் போது மற்ற அனைவரும் சிந்துவைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அடப் பாருங்க டி ஆது பொண்டாட்டியை. அவன் வரதுக்கு முன்னாடி வரைக்கு ஏதோ பறிகொடுத்தவ மாதிரி இருந்தா. வந்து என்ன மருந்து கொடுத்தான்னு தெரியலையே? முகம் பளிச்சிட்டுன்னு ஆயிடுச்சு”, என்று சொல்ல அவன் கொடுத்த மருந்தை எண்ணி அவள் முகம் மேலும் சிவந்தது .

அது அவளுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. “சும்மா இருங்க, வேலையைப் பாருங்க”, என்று சொல்லி அவளைக் காப்பாற்றிய சுபா யாருக்கும் தெரியாமல் கலைந்திருந்த அவளது லிப்ஸ்டிக்கையும் சரி செய்து விட்டாள். மேலும் பல டச்சப் செய்து அவளுக்கு மேக்கப் முடிந்தது. அதில் இன்னும் தேவதை போலவே இருந்தாள் சிந்து. சிந்துவின் நகைகளையே அவளுக்கு போட்டிருக்க “எவ்வளவு நகை? எல்லாம் கவரிங்கா?”, என்ற பேச்சு அடி பட்டது.

“கவரிங் இல்லை அத்தாச்சி. சுத்த தங்கம் தான். பொண்ணோட அப்பா பெரிய நகைக் கடை வச்சிருக்காராம். அதான் ஒட்டியாணம் முதல் கொண்டு எல்லாத்தையும் தங்கத்துல செஞ்சு மகளுக்கு போட்டு விட்டுருக்கார்”, என்று மற்றொரு பெண் தகவல் சொன்னாள்.

“எல்லாம் முடிஞ்சிருச்சா?”, என்று கேட்ட படி உள்ளே வந்த மங்கை சிந்துவைக் கண்டு “ரொம்ப அழகா இருக்க டா”, என்று சொல்லி அவளுக்கு திஷ்டி கழித்தாள். செல்வியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

“அம்மா எல்லாம் முடிஞ்சிடுச்சு. மண்டபத்துக்கு கிளம்பலாமா?”, என்று கேட்டாள் சுபா.

“இல்லை டி, பொண்ணும் மாப்பிள்ளையும் கடைசில வரட்டும். நாம எல்லாம் முதல்ல போகனும். சுபா நீ என் கூட வா. சிந்து கூட செல்வி இருக்கட்டும். ஏன்னா சக்தி மாப்பிள்ளை தான் இங்க இருக்கார். ஆனந்த் மாப்பிளை மண்டபத்துக்கு போய்ட்டார். ரிசப்சன்ல நிக்க உன்னை வரச் சொன்னார் சுபா. இதோ வைதேகியும் கிளம்பி வந்துட்டா. வைதேகியும் செல்வியும் சிந்து கூட இருக்கட்டும்”, என்று சொன்ன மங்கை “சேலைல அழகா இருக்க டா அம்மு, அடுத்து உன் கல்யாணம் தான்”, என்று அண்ணன் மகள் வைதேகிஐயும் கொஞ்சி விட்டே அங்கிருந்து சென்றார்.

போகும் போது “அம்மா வேணி அத்தை என்ன இந்த பக்கம் ரொம்ப ஆளயே காணும்?”, என்று கேட்டாள் சுபா.

“எனக்கும் தெரியலை டி. காலைல இருந்து அவ முகமே சரி இல்லை. பாப்போம். சரி வா, எல்லாரையும் கூட்டிட்டு மண்டபத்துக்கு போகலாம்”, என்று சொல்லி அனைவரையும் கிளப்பினாள்.

சிந்துவின் உறவினர்களும் வீட்டுக்கு வந்திருக்க அவர்களையும் அவளுடைய பெற்றோரையும் மண்டபத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றாள் மங்கை.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!