Skip to content
Post Views: 3,321
அத்தியாயம் 9
ஆகாயத்தில் இருக்கும்
நிலவை விட என்னவள்
தான் பிரகாசமானவள்!!!
Advertisement
தங்களுடன் வரும் அஞ்சலியைப் பார்த்த மங்கை “நீ சிந்து கூட இரேன் டா”, என்றாள்.
Advertisement
“பரவால்ல மா, நான் அவளை அப்புறம் பாக்குறேன்”, என்று மறுத்து விட்டாள் அஞ்சலி. சிந்துவின் பெற்றோரே மகளைப் பார்க்க பொறுமையாக இருக்க, தான் போய் அவளுடன் இருப்பது சரியில்லை என்று தோன்றியதால் தான் மறுத்தாள். ஆனால் அவள் கண்களும் தோழியைப் பார்க்க ஆவலாக இருந்தது.
Advertisement
அனைவரும் மண்டபத்துக்கு கிளம்ப ஆதவன் அவனுடைய அறையில் இருந்தான். அக்கா கர்சீப் கொடுத்ததால் அதை வைத்து வாயைத் துடைத்தவனுக்கு அந்த வெள்ளைக் கர்ச்சிப்பில் பதிந்திருந்த சிவப்பு லிப்ஸ்டிக் கரை வெட்கத்தைக் கொடுத்தது.
Advertisement
அப்போது அங்கே வந்த சக்தி அவன் கனவைக் கலைத்து அவனை கிளம்ப வைத்தான்.
அந்த கல்யாண மண்டபம் ரங்கனின் வேலையால் மிக அழகாக ஒளிர்ந்தது. சீரியல் விளக்குகள் ஜொலித்தது. சுபாவும் அவளது கணவனும் ரிசப்ஷனில் நின்றிருந்தார்கள். மண்டபத்தின் உள்ளே மாப்பிள்ளை வீட்டினர், பெண் வீட்டினர் என கலந்து அமர்ந்திருந்தார்கள்.
விஸ்வம் ரத்தினம் அருகில் நின்றிருக்க வேணி மகளுடன் அமர்ந்திருந்தாள். பரமசிவமும் சுப்புவும் ரங்கநாயகி அருகில் அமர்ந்திருந்தார்கள். மணமக்களைக் காண அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
ரங்கன் அனைவருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அவன் கண்ணில் அஞ்சலி விழுந்தாள். “அட இந்த பொண்ணா?”, என்று அவன் ஒரு நொடி ஜெர்க் ஆக அவளோ அவனையே தன் பார்வையால் அளவிட்டாள்.
முகத்தில் வியர்வை பூத்திருந்தாலும் அவன் முகத்தில் பூரிப்பே இருந்தது. அனைவரும் நல்ல அலங்காரத்தில் இருக்க ரங்கன் மட்டும் வியர்வையில் நனைந்த சட்டையுடன் நின்றிருந்தான். ஏனோ அஞ்சலிக்கு அவன் வெளி அழகைக் காட்டிலும் அவனுடைய உள்ளத்தின் அழகே கண்ணில் பட்டது.
கூல்ட்ரிங்க்ஸை எடுக்காமல் அவள் தன்னையே பார்க்கவும் அவனுக்கு என்னவோ போல இருந்தது. “ஏங்க கூல்ட்ரிங்க்ஸ் எடுங்க”, என்று அவன் சொன்னதும் தான் நடப்புக்கு வந்தாள் அஞ்சலி.
அவனைப் பார்த்துக் கொண்டே “யாராவது சாப்பிடுற நேரத்துல கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாங்களா?”, என்று கேட்டாள்.
“என்னது சாப்பிடுற நேரமா? மணி ஆறு தானே ஆகுது?”
“எங்க வீட்ல ஏழு மணிக்கு சாப்பிட்டுருவோம்”
“அப்படியா? சரி வாங்க. சாப்பாடு ரெடியா தான் இருக்கு”
“நீங்க பரிமாறுவீங்களா?”, என்று அவள் ஏக்கமாக கேட்க அவள் குரல் அவனை பாதித்தது.
“இந்த பிள்ளைக்கு என்ன ஆச்சி? பேச்சும் சரி இல்லை. பார்வையும் சரி இல்லை”, என்று எண்ணிக் கொண்டு “நான் எல்லாருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் கொடுக்கணும். பந்தி பரிமாற ஆள் தயாரா இருக்கு. வேணும்னா போய் சாப்பிடுங்க”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்லி விட்டு சென்று விட்டான். போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் சிறு புன்னகை உதயமானது. அதன் பின் ரங்கன் அங்கே இங்கே என்று நடமாடினாலும் அஞ்சலியைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை.
ஆனால் அவள் பார்வை அவனையே வட்டமிடுகிறது என்று உணர்ந்தே இருந்தான். “இது என்ன புதுக் குழப்பம்?”, என்று அவன் மனம் சலனம் கொண்டது.
“செல்வி, மச்சான் கிளம்பிட்டான். நீங்க சிந்துவைக் கூட்டிட்டு வாங்க. மண்டபத்துக்கு போகணும். நேரம் ஆச்சு”, என்று சக்தி குரல் கொடுத்ததும் “இதோ வந்துட்டோம். வா சிந்து, வைதேகி வா கிளம்பலாம்”, என்று சொல்லி சிந்துவின் கையைப் பிடித்தாள் செல்வி.
ஆனால் சிந்துவோ ஒரு அடி கூட எடுத்து வைக்க வில்லை. “வா சிந்து”, என்றாள் செல்வி.
“எனக்கு பயமா இருக்கு அண்ணி”, என்று சிந்து முனங்க “எல்லாம் நம்ம ஆளுங்க தான் சிந்து. இதுக்கு என்ன பயம்?”, என்றாள் செல்வி.
“ஆமா அக்காவைச் சொல்றீங்க. உங்க கல்யாணத்துக்கு நீங்க எப்படி பயந்தீங்க? அது மாதிரி தானே அக்காவும்?”, என்று செல்வியை வாரிய வைதேகி சிந்துவிடம் “நாங்க உங்க கூடவே தான் இருப்போம் கா, வாங்க”, என்று சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றாள்.
வெளியே கார் தயாராக இருக்க ஆதவனும் சக்தியும் அவர்களுக்காக காத்திருந்தார்கள். ஆதவன் தன்னவளையே விழுங்குவதைப் போல பார்க்க அவளோ அச்சத்துடன் வந்தாள். அவனை நிமிர்ந்தும் பார்க்க வில்லை. அலங்கரிக்கப் பட்ட காரில் ஆதவன் ஏறி அமர்ந்ததும் அவன் அருகே அமர வைக்கப் பட்டாள் சிந்து. சக்தி காரைக் கிளப்ப மணமக்களுக்கு பின்னே இருந்த சீட்டில் செல்வியும் வைதேகியும் அமர்ந்திருந்தார்கள்.
சுற்றி அனைவரும் இருக்க சிந்துவிடம் எதுவும் ஆதவனால் பேச முடிய வில்லை. ஆனால் அவளுடைய பயம் அவனுக்கு புரிந்தது. அதனால் அவளுடைய கையைப் பற்றினான். தன்னுடைய நினைவுகளில் இருந்தவள் அவன் தொடவும் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு குனிந்து கொண்டாள். அவனுடைய கைகளை விலக்கவெல்லாம் செய்ய வில்லை.
அவள் கைகள் ஜில்லென்று இருப்பதை வைத்தே அவளுடைய பயத்தின் அளவை உணர்ந்தவன் அவள் கையை இறுக்கிப் பிடித்தான். உனக்கு நான் இருக்கிறேன் என்பதை அவளுக்கு உணர்த்தினான்.
அது புரிந்ததோ இல்லையோ? ஆனால் அவன் தொடுகையில் கொஞ்சம் பயம் அவளை விட்டுக் குறைந்திருந்தது. மண்டபத்துக்கு கொஞ்சம் அருகே வரும் போது அவளுடைய உடலில் ஒரு நடுக்கம் ஓட அவள் கையை பிடித்துக் கொண்டே இருந்தான்.
மண்டபம் வந்ததும் அவள் அவனுடைய கையை விலக்கப் பார்க்க அவனோ அவளின் கையைப் பற்றிய படியே இறங்கினான். சிந்துவுக்கு தான் என்னவோ போல இருந்தது. வைதேகி அவசரமாக உள்ளே சென்று விட மணமக்களுக்கு இரு புறமும் செல்வியும் சக்தியும் நடந்து வந்தார்கள்.
மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அவர்களைத் திரும்பி பார்க்க அவர்கள் ஜோடிப் பொருத்தத்தில் அனைவரும் வியந்தார்கள். பிரியா மட்டும் எரிச்சலுடன் பார்த்தாள்.
அவர்களை கண்ட ஏகாம்பரத்துக்கும் அவர்களை ரசிக்க வேண்டும் போல தான் இருந்தது. “ரொம்ப அழகா இருக்காங்கல்ல?”, என்று அமுதவள்ளி சொல்ல அதை ஒத்துக் கொள்ள மனதில்லாமல் “அடப் போடி, யாராவது ரிசப்சனுக்கு இப்படி சேலை கட்டி விடுவாங்களா? என் பொண்ணு ரிசப்சனுக்கு எப்படிப் பட்ட டிரஸ்ஸை நான் வர வச்சிருந்தேன்? இது எப்படித் தான் இருக்கு?”, என்று பெருமை பீற்றினார்.
“ஆமா ஆமா டிரஸ் பெருமை இருக்கட்டும். நீங்க பாத்த மாப்பிள்ளை பெருமை என்ன ஆச்சு?”, என்று அமுதவள்ளி கேட்டதும் வாயை மூடிக் கொண்டார்.
அதே நேரம் ரத்தினமும் “என்ன டி இவன் வேஷ்டி சட்டைல வந்து நிக்குறான்? கோர்ட் சூட் எல்லாம் வாங்கலையா?”, என்று மனைவியின் காதைக் கடித்தார்.
“நம்ம சுபா வீட்டுக்காரர் வாங்க சொன்னாராம். ஆனா நம்ம தம்பி தான், அவ்வளவு நேரம் நிக்கணும். எனக்கு வேஷ்டியே இருக்கட்டும். இது தான் சவுகரியமா இருக்கும். கோர்ட் சூட்டைப் போட்டா உள்ள வெந்துரும். அப்புறம் என் முகத்துல இருக்குற சந்தோசமே போய்ரும்னு சொல்லிட்டானாம். இது கூட என் மகனுக்கு அழகா இருக்குங்க”, என்றாள் மங்கை.
“ஆமா நல்லா தான் இருக்கு. சரி ஓடிப் போய் அவன் நெத்தில சந்தனம் வச்சிட்டு வா. மருமகப் பொண்ணுக்கும் வச்சி விடு. இன்னும் அழகா இருக்கும். சின்னதா பூசு. பட்டை அடிச்சிறாத”
“இவ்வளவு பாசம் இருக்குறவர் அவன் கிட்ட பேசினா தான் என்னவாம்?”
“அதெல்லாம் அப்படி தான். நீ போறியா இல்லையா?”
“அதென்ன நான் மட்டும் போறது? நீங்களும் வாங்க. அப்புறம் நாம பந்தியைப் பாக்க போகணும். பிள்ளைகளை கவனிக்க முடியாது. வாங்க முதல் ஆளா ஒரு போட்டோ பிடிச்சிட்டு வந்துருவோம். இந்த தாலிச் செயினையும் சிந்து கழுத்துல போட்டுறலாம்”, என்று மங்கை சொல்ல ரத்தினமும் கிளம்பினார்.
மணமக்கள் இருவரும் மேடை ஏறாமல் கீழேயே நிற்க ஆதவன் சுற்றம் மறந்து சிந்துவைத் தான் பார்த்தான். அவன் கைகள் அவளைப் பிடித்த படியே இருந்தது.
அவன் அவளையே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க “பேராண்டி, வாய்க்குள்ள கொசு போக போகுது”, என்று ரங்கநாயகி சொன்னதும் தான் நடப்புக்கு வந்தான்.
“ஆச்சி”, என்று முறைத்த படி திரும்பிப் பார்த்தான். “என்னை முறைக்கிறதை விட்டுட்டு என் பேத்தியை மேடைக்கு கூட்டிட்டு போடா”, என்று சொல்லி அவனை விரட்டி விட்டாள்.
சிந்து பயந்த படி மேடையேற அமுதவள்ளி கண்களில் நிறைவுடன் மகளைப் பார்த்தாள். மேடைக்குச் சென்றதும் “குனிஞ்சிட்டே இருக்காதீங்க மேடம். கொஞ்சம் நிமிந்து பாருங்க. உங்க அம்மா அப்பாவை பாக்க வேண்டாமா?”, என்று ஆதவன் கேட்டதும் தான் நிமிர்ந்து பார்த்தாள்.
அசோக், அஞ்சலி, மற்ற உறவினர்கள், அமுதவள்ளி என தொடர்ந்த அவளுடைய பார்வை கடைசியில் ஏகாம்பரத்திடம் வந்து நிலைத்தது. தந்தையைப் பார்த்து அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்க “என்ன சிந்து இது? இங்க தானே இருக்காங்க? இப்ப நீ அழுதா எல்லாரும் பாப்பாங்க”, என்று ஆதவன் சொன்னதும் தன்னை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
மகளைக் கண்டு “நான் என் மகளுக்கு போட்ட நகையை அப்படியே போட்டுருக்காங்க பாரு. என்னமோ பெரிய பணக்காரன்னு சொன்னீங்க? அவங்க பக்கம் இருந்து ஒரு பவுனாவது போட்டுருக்காங்களா?”, என்று கேட்டார் ஏகாம்பரம்.
“நீங்க பாத்த மாப்பிள்ளை கூட கல்யாணம் முடிஞ்சிருந்தா உங்க அக்கா என் மகளுக்கு எத்தனை பவுன் போடுறேன்னு சொன்னாங்க?”, என்று அமுதவள்ளி கேட்டதும் வாயை மூடிக் கொண்டார்.
மணமக்கள் இருவரையும் கண்டு சரியான ஜோடி என்று அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்க பிரியா மட்டும் தான் பொறாமையுடன் இருந்தாள்.
முதலில் மேடைக்கு போனார்கள் ரத்தினம் மற்றும் மங்கை இருவரும். மங்கை இருவருக்கும் சின்னதாக சந்தனக் கீற்றை வைத்து விட்டாள். பின் மகனின் கையில் அந்த தாலிச் செயினைக் கொடுத்தவள் மருமகளுக்கு அவனையே போட வைத்தாள்.
அதைக் கண்ட அமுதவள்ளி கணவரை ஏகத்தாளமாக பார்த்தாள். அதைக் கண்டு கொள்ளாத ஏகாம்பரம் “அவன் அப்பா அம்மா தான் மேடைக்கு போவாங்களா? வா நாமளும் போவோம்”, என்று எழுந்து கொண்டார். தலையில் அடித்த படி அமுதவள்ளியும் எழுந்து கொள்ள மற்றவர்களும் அவர்களுடன் சென்றார்கள்.
ரத்தினம் மங்கை இருவரும் சென்றதும் “ஏற்கனவே நீ ரொம்ப அழகு தான் சிந்து. இருந்தாலும் இன்னைக்கு முழுக்க சிரிச்சா தான் போட்டோ நல்லா விழும். ஷோ பிளீஸ் சிரிச்சிட்டே இரு”, என்றான் ஆதவன்.
error: Content is protected !!