Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சிந்துநதிச் செம்மீனே

சிந்துநதிச் செம்மீனே 9 2

“ஈஈ இவ்வளவு சிரிச்சா போதுமா?”, என்று சிந்து கேட்க அவனோ குறுகுறுவென்று அவள் இதழ்களைப் பார்த்தான். அவன் பார்வையில் அவள் இருக்கும் இடம் மறந்து தன்னுடைய வாயை மூடிக் கொள்ள “கவலைப்படாதே, இப்ப எதுவும் பண்ண மாட்டேன். எல்லாம் நைட் தான்”, என்று சொல்ல அவள் மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

அப்போது ஏகாம்பரம் குடும்பத்துடன் மேடைக்கு வர அவர்களைக் கண்ட ஆதவன் “அதானே, உன் அப்பாவுக்கு மூக்கு வேர்த்துருமே? பொண்டாட்டிக் கிட்ட கொஞ்ச நேரம் கொஞ்சி பேச விடுறாரா? எப்படி வந்து நிக்குறார் பார் நந்தி மாதிரி?”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தான்.



Advertisement

அவளுக்கு அவன் பேச்சில் சிரிப்பு வந்தது. திரும்பி அப்பாவைக் கண்டு புன்னகைத்தாள். மகளின் புன்னகையில் மனம் நிறைந்தவர் அருகில் நின்ற மருமகனை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. அவனும் அதை எதிர் பார்க்க வில்லை. நண்பனும் மச்சினனுமான அசோக்கிடமும் அமுதவள்ளியிடமும் பேச ஆரம்பித்தான்.

Advertisement

சிறிது நேரம் பேசி விட்டு “இந்தா குட்டிமா, இதை செலவுக்கு வச்சிக்கோ”, என்று சொல்லி ஒரு மஞ்சைப் பையை அவளிடம் கொடுத்தார் ஏகாம்பரம். அனைவர் கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது.

Advertisement

“எனக்கு வேண்டாம் பா”, என்று மறுத்தாள் சிந்து.

Advertisement

“நீ யாரையும் சார்ந்து இருக்க கூடாது டா, வாங்கிக்கோ”, என்று சொல்லி அவர் அதை அவளுடைய கையில் கொடுக்க ஆதவன் முகம் இறுகி நின்றான் என்றால் “எவ்வளவு சொன்னாலும் இந்த மனுஷன் திருந்த மாட்டுக்காரே”, என்று எண்ணி தர்மசங்கடமாக மருமகனைப் பார்த்தனர் அசோக்கும் அமுதவள்ளியும்.

அவர்களைக் கண்டு புன்னகைத்த ஆதவன் “ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொல்லி விட்டு அங்கு சென்ற ரங்கனை அழைத்தான். ரங்கன் வந்ததும் அவன் காதில் ஏதோ முணுமுணுத்தான். ரங்கன் அங்கே இருந்து ஓடி விட சிந்துவை திரும்பிப் பார்த்தான்.

சிந்துவோ ஏகாம்பரம் மற்றும் அஞ்சலியுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தாள்.

சிந்துவின் சொந்தங்கள் அனைவரும் புகைப்படம் எடுத்து விட்டு இறங்கி விட்டார்கள். சிந்து குடும்பம் மட்டும் தான் மேடையில் இருந்தது. சுற்றுப் புறம் மறந்து மகளுடன் பேசிக் கொண்டிருந்த ஏகாம்பரம் திடீரென்று நடப்புக்கு வந்து “என்ன போகாம இங்கயே நிக்குறோம்? போகலாமா?”, என்பது போல மனைவியைப் பார்த்தார். அமுதவள்ளியோ வேறு எங்கோ பார்த்தாள். “இவ எங்க பாக்குறா?”, என்று எண்ணிக் கொண்டு திரும்பிப் பார்த்தார்.

அங்கே ஆதவனின் மொத்தக் குடும்பமும் வந்து கொண்டிருந்தார்கள். “இப்பவே ஃபேமிலி போட்டோ எடுத்துறலாம். அப்புறம் எல்லாரும் பிசி ஆகிருவீங்க?”, என்று சொன்ன ஆதவன் அங்கிருந்து செல்லப் பார்த்த ரங்கனைப் பிடித்து தன் அருகே நிறுத்திக் கொண்டான். குடும்பப் புகைப்படம் என்றதும் அஞ்சலியும் அங்கிருந்து செல்லப் பார்க்க சிந்து அவள் கையை விட வில்லை.

நடுவே ரங்கநாயகி அமர்ந்திருக்க பாட்டிக்கு இந்த பக்கம் ரத்தினம் மற்றும் மங்கையும், மற்றொரு பக்கம் ஏகாம்பரம் மற்றும் அமுதவள்ளி அமர்ந்திருந்தார்கள். பின் வரிசையில் நடுவே மணமக்கள் இருக்க சிந்து அருகில் அஞ்சலியும், ஆதவன் அருகே ரங்கனும் நின்றிருந்தார்கள். அஞ்சலி அருகில் செல்வி மற்றும் சக்தியும், ரங்கன் அருகில் சுபா மற்றும் ஆனந்தும் நின்றிருந்தார்கள்.

பாட்டி காலருகே அசோக் அமர்ந்திருந்தான். அவன் மடியில் அவந்திகா, அவனுக்கு ஒரு பக்கம் அருண், மற்றொரு பக்கம் முகில் என அமர்ந்திருந்தார்கள். அப்போது அந்த பக்கமாக வைதேகி நின்றிப்பதைக் கண்ட சிந்து ஆதவனை பார்த்தாள்.

“என்ன ஏதாவது வேணுமா?”

“வைதேகியையும் கூப்பிடுங்களேன்”, என்று சொல்ல அவளை வியப்பாக பார்த்த ஆதவன் “வைதேகி இங்க வா”, என்று அழைத்தான்.

ஏதோ தேவைக்காக அழைக்கிறான் என்று எண்ணி மேடைக்கு சென்ற வைதேகி “என்ன வேணும் அத்தான்?”, என்று கேட்டாள்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம், உங்க அக்கா தான் நீயும் போட்டோல இருக்கணும்னு சொன்னா”, என்று சொல்ல வைதேகி முகம் மலர்ந்தது. ஆனாலும் தயக்கத்துடன் “நானா?”, என்று கேட்டாள்.

“நீயும் எங்க வீட்டுப் பொண்ணு தான். வா வந்து நில்லு”, என்று சொல்ல புன்னகையுடன் சரி என்றவள் ரத்தினம் காலடியில் அருண் அருகே அமர்ந்து கொண்டாள்.

தன் காலடியில் வந்து அமர்ந்த மருமகளின் தலையை வாஞ்சையுடன் வருடி விட்டார் ரத்தினம். அதைக் கண்டு மங்கை முகம் புதுப் பெண் போல மலர்ந்தது. தன்னுடைய அண்ணன் மகளை வாஞ்சையுடன் பார்க்கும் கணவனைக் காதலாக பார்த்தாள். அதைக் கண்டு திகைத்துப் போன ரத்தினம் “என்ன டி, மகன் வரவேற்பில் நின்னுக்கிட்டு இந்த பார்வை பாக்குற?”, என்று அமைதியாக கேட்டார்.

“என் புருஷன் நான் பாப்பேன். யார் கேப்பாங்களாம்?”, என்று அவள் சரசத்துடன் கேட்க ரத்தினம் முகம் மலர்ந்தது. வெகு நாட்கள் கழித்து கணவனின் புன்னகை முகத்தைக் கண்ட மங்கைக்கு வைதேகியை வர வைத்த சிந்துவின் மீது பாசம் பொங்கியது.

“எல்லாரும் வந்தாச்சு, நீங்க எடுங்க”, என்று ஆதவன் சொல்ல போட்டோகிராபர் லென்ஸை சரி செய்தார். அப்போது “ஏங்க கையை எடுங்க”, என்று சக்தியின் காதில் முணுமுணுத்தாள் செல்வி.

“ஏண்டி? நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்ட சக்தியின் விரல்கள் யாருக்கும் தெரியாமல் அவள் இடையில் பதிந்திருந்தது.

“நீங்க ஒண்ணுமே செய்யலையோ?”, என்று போலி முறைப்புடன் அவள் கேட்க “இல்லையே, ஏன் ஏதாவது செய்யணுமா?”, என்று விஷமமாக கேட்டவன் கைகளை நகர்ந்த்தினான்.

அவன் தொடுகையில் சிலிர்த்துப் போனவள் “என்ன ஆச்சு இன்னைக்கு உங்களுக்கு?”, என்று கேட்டாள்.

“ரொம்ப அழகா இருக்க டி இன்னைக்கு. என்னால உன்னை விட்டு பார்வையை அங்கே இங்க திருப்ப முடியலை”, என்று அவன் உண்மையை ஒத்துக் கொள்ள அவளுக்கு வியப்பாக இருந்தது. இத்தனை நாள் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருப்பவனின் சரச பேச்சு அவளுக்கு பழைய சக்தியை நினைவு படுத்தியது.

“இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு மட்டும் ஏனாம்?”, என்று அவள் ஆதங்கத்துடன் கேட்க “தெரியலை, உன் முகம் அப்படியே மலர்ந்து போய் இருக்கா. அதனால கூட இருக்கலாம். முகில்க்கு தங்கச்சி பாப்பாவுக்கு ஏற்பாடு பண்ணலாமா?”, என்று கேட்ட படி அவன் கண்ணடிக்க “ஐயோ எங்க வச்சு என்ன பேசுறீங்க? வாயை மூடுங்க”, என்றாள்.

“ஏண்டி வேண்டாமா?”, என்று அவன் பாவமாக கேட்க “நான் எப்ப அப்படிச் சொன்னேன்?”, என்று கேட்டாள்.

“அப்ப ஓகே வா?”, என்று அவன் குதூகலிக்க “கடவுளே அங்க பாருங்க”, என்று சொல்லி அவன் தலையை திருப்பினாள். “எல்லாரும் என்னை மாதிரி அழகா சிரிங்க பாப்போம்?”, என்று சொன்னார் ரங்கநாயகி.

“என்னது உன்னை மாதிரி அழகா?”, என்று ஆதவன் பாட்டியை வார அனைவரும் சிரித்தார்கள். அந்த தருணம் புகைப்படமாக மாறியது.

அதன் பிறகு பெரியவர்கள் மட்டும் மணமக்களுடன் இருக்குமாறு எடுத்தார்கள். அதன் பிறகு ரத்தினம் மற்றும் மங்கையுடன் ஒரு புகைப்படமும், அமுதவள்ளி, ஏகாம்பரம், அசோக் அவர்களுடன் ஒரு புகைப்படமும் எடுக்கப் பட்டது.

அதன் பிறகு சக்தி குடும்பம் மட்டும், சுபா குடும்பம் மட்டும் என்று எடுக்கப் பட்டது.

கடைசியாக அஞ்சலி, வைதேகி, ரங்கன், அசோக், சிறுவர்கள் என ஒரு புகைப்படம் எடுக்கப் பட்டதும் அனைவரும் கீழே இறங்கி விட்டார்கள்.

இதை எல்லாம் பார்த்த படி அமர்ந்திருந்தார்கள் வேணியும் பிரியாவும். “என்னமோ அண்ணே அண்ணேன்னு சொல்லுவ. இன்னைக்கு மாமா கூட நம்மளை குடும்ப போட்டோ எடுக்க கூப்பிடலை பாத்தியா?”, என்று கேட்டாள் பிரியா.

அந்த வருத்தத்தில் தான் வேணியும் இருந்தாள். தன்னை ரத்தினம் அழைப்பார் என்று எதிர் பார்த்தாள். அதுவும் வைதேகி வந்து அமர்ந்ததும் பிரியாவையாவது யாராவது அழைப்பார்கள் என்று எண்ணினாள் வேணி. அதனால் வேணிக்கே அவர்கள் புன்னகை கடுப்பைத் தந்தது.

“வாங்க நாம போயிட்டு வருவோம்”, என்று விஸ்வம் அவர்களை அழைக்க வேணி வேண்டா வெறுப்பாக எழுந்து கொண்டாள். ஆனால் பிரியா மறுப்பாக அமர்ந்திருக்கவும் அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள் வேணி.

மேடைக்கு வந்த பிரியாவைக் கண்டு சிந்து முகம் கூம்பிப் போனது. அவளை ஆதவன் பார்க்கிறானா என்ற குழப்பத்தில் சிந்து ஆதவனைப் பார்த்தாள். அவனோ ரங்கனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை”, என்று அழைத்த விஸ்வம் ஆதவன் அருகில் சென்று நின்றார். “வாங்க மாமா”, என்று ஆதவன் சொல்ல அவனுக்கு செயின் ஒன்றை போட்டு விட்டார்.

“எதுக்கு மாமா இதெல்லாம்?”, என்று ஆதவன் கேட்க “பரவால்ல மாப்பிள்ளை, சரி நாங்க வரோம்”, என்றார் விஸ்வம்.

“இருங்க, போட்டோ எடுப்போம்”, என்று சொல்லி அவரை நிறுத்திய ஆதவன் மேடையில் இருந்தே செல்விக்கு கண்ணைக் காட்ட அவள் அவசரமாக சக்தி மற்றும் முகிலை அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தாள்.

அவர்கள் குடும்பமாக புகைப்படம் எடுக்கும் வேளையில் எரிச்சலில் இருந்த வேணி “ரங்கன் நீ எதுக்கு இங்க நிக்குற? சமையல் கட்டுல வேலை இருந்தா பாரு”, என்று சொல்ல “அத்தை”, என்று அதிர்வாக அழைத்தான் ஆதவன். ரங்கன் முகம் கூம்பிப் போனது. அதை வேதனையாக பார்த்தாள் சிந்து.

விஸ்வம் கூட மனைவி பேச்சில் அதிர்ந்து போய் நின்றார். அவருக்கு தான் தெரியுமே, அந்த வீட்டில் ரங்கனின் இடம். அப்படி இருக்க இவள் ஏன் இப்படிச் சொன்னாள் என்று குழம்பிப் போய் நின்றார். சக்தியும் செல்வியும் கூட அதிர்ந்து தான் நின்றார்கள்.

“என்ன ஆதவா?”, என்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் வேணி சாதாரணமாக கேட்க “என்ன நினைச்சு அப்படிச் சொன்னீங்க? ரங்கன் என் தம்பி. அவன் இருந்தா நீங்க போட்டோ எடுக்க மாட்டீங்கன்னா நீங்க போட்டோவே எடுக்க வேண்டாம். கிளம்புங்க”, என்று முகத்தில் அடிப்பது போல சொன்னான்.

“அண்ணே, சும்மா இருண்ணே. நான் போறேன்”, என்று ரங்கன் சொல்ல “நீ இப்ப இங்க இருக்கணும், அவ்வளவு தான்”, என்று ஆதவன் சொன்னதும் வாயை மூடிக் கொண்டு நின்றான்.

பிரியாவுக்கு நடப்பது அனைத்தும் எரிச்சலாக இருந்தது. “என்ன ஆதவா? மட்டு மரியாதை இல்லாம பேசுற? நான் உன் அத்தை. என் கிட்ட இப்படி பேசுறது என் அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா?”, என்று கேட்டாள் வேணி.

“நீங்க என் அத்தை தான். யார் இல்லைன்னு சொன்னா. அதே மாதிரி ரங்கன் என் தம்பி. அவனை நீங்க இப்படி பேசினது அப்பாவுக்கு தெரிஞ்சா உங்களுக்கு தான் பிரச்சனை. என் தம்பிக்கு ஒரு அவமானம்னா உங்க அண்ணனே அதை பாத்துட்டு சும்மா இருக்க மாட்டார். அது உங்களுக்கு தெரியும் தானே? நீங்க எப்படி அவனை அப்படிச் சொல்லலாம்?”, என்று ஆதவன் கேட்க வேணி முகம் கருத்துப் போனது.

அவள் கோபத்தில் பதிலுக்கு எதுவோ சொல்லப் போகவும் “வேணி, கொஞ்சம் வாயை மூடு. எப்ப என்ன பேசணும்னு தெரியலை. யார் கிட்ட என்ன பேசணும்னு உனக்கு தெரியலை. வர வர உன் பேச்சு எதுவும் சரியா இல்லை. அமைதியா போட்டோக்கு நில்லு. இல்லைன்னா நடக்குறதே வேற”, என்று வேணியிடம் கத்திய விஸ்வம் “எதையும் மனசுல வச்சிக்காத மாப்பிள்ளை”, என்று ஆதவனிடம் சொன்னார்.

“பரவால்ல விடுங்க மாமான்னு என்னால சொல்ல முடியலை மாமா. அந்த அளவுக்கு அவங்க பேச்சு எனக்கு வருத்தமா இருக்கு. திடீர்னு அத்தைக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டான்.

“எனக்காக இதை விடுப்பா”, என்று அவர் சொன்னதும் “சரி மாமா, ஆனா இனி இப்படி நடக்க கூடாது”, என்றான் ஆதவன்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!