Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சினமே சினாமிகா

சினமே சினாமிகா 1

இரவுப்பறவை

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த நேரம், ஆள் அரவமற்ற சாலை.. இருளின் வெளியில் யாரும் அறியா வண்ணம், சப்தமின்றி சாலையை மெதுவாகக் கடந்து கொண்டிருந்தபோது, திடீரென வந்த ஒளி அந்தக் கண்களில் பட்டு எதிரொளித்தது. சன்னமாக வந்த ஒளி அதிகமாகிக் கொண்டே சென்றது… அதனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தது அந்தக் கண்கள்… திடீரென ஒரு சப்தம்… 

‘க்ரீச்…’ 

ஆர்.எக்ஸ்.100 வண்டியின் பிரேக் பிடிக்கும் சப்தம் அது. அந்த ஒளியும் அதனின்று வருவதே.



Advertisement

அக்கருநிற கண்கள் அதனை நோக்கியது. சற்றே தன் உடலை குறுக்கியது பயத்தில்.

அதனைக் கண்டும், கைகள் பிடியை சற்றும் விடவில்லை. இரு கால்களும் தரைத்தொட்டு வண்டியை நிறுத்தியிருந்தது. 

காட்டில் ஒரு விதி உண்டு. எல்லை மீறாதவரை எந்தப்போரும் எழாது… 

Advertisement

ஒரு நிமிடம் அந்தக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது.

Advertisement

‘ஓ மை குட்நெஸ்…’ மெல்லிய குரலில் அவள் கூற, எதிரே நின்றிருந்த அந்தக் கருநிற கண்கள் கொண்ட அந்த கறுஞ்சிறுத்தை அவளை தலையை நிமிர்த்தி பார்த்துவிட்டு, சட்டை செய்யாமல் மீண்டும் சாலையை கடக்கத் துவங்கியது.

அது சாலையைக் கடந்ததும் மெதுவாகப் பெருமூச்சு விட்டாள் அவள். சற்றே பயந்திருந்தாலும், அது புதுவித அனுபவமாகவேத் தோன்றியது அவளுக்கு. உதட்டோரம் புன்னகையும், கண்களில் மானின் மிரட்சியும், கைகள், கால்கள் விறைத்துப்போன தன்மையில் சற்றே நிகழ்ந்ததை எண்ணிக் கொண்டிருந்தாள். 

‘நறுமுகையே, நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்…’ அவளது செல்லிடைப்பேசி ஒலிக்க, நிகழ்காலத்திற்கு வந்தாள் அவள்.

Advertisement

அது அவளது தங்கை பிரதக்ஷனா. பிரதக்ஷனாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும். எப்போதும், யாரிடமும் அவளை விட்டுக் கொடுத்ததே இல்லை. அவளும் தங்கையை நேசத்திற்குரிய சேயைப்போன்றே பார்த்தாள்.

‘சொல்லு பிரதி’ 

‘என்ன பண்ற? போய்ட்டியா? ஏதாவது தங்க இடம் கிடைச்சதா?…’ என்றாள் பிரதக்ஷனா.

‘இல்ல பிரதி. இது ஒரு குக் கிராமம் போல இருக்கு. வர வழிமுழுக்க பாத்துட்டேன் ஒரு ஹோட்டல் கூட இல்லை. ஏதாவது வீட்டுல தங்க இடம் கிடைக்குமான்னு பாக்கனும். தேடிக்கிட்டிருக்கேன். இங்க பயங்கரமா குளிருது’ என்று கூறிக்கொண்டே தனது ஒரு கையால் மற்றொரு கையை அணைத்தவாறு இருந்தாள்.

‘மணி இப்பவே 2.00. இதுக்குத்தான் நான் சொன்னேன். நைட்ல போகாத. பகலில போனா யார்கிட்டயாவது விசாரிக்க முடியும்னு சொன்னேன். கேட்டியா? தெரியாத ஊரு, தெரியாத பாஷை, தெரியாத மக்கள்னு ஏகப்பட்ட பிரச்சனை. இப்ப இது ரொம்ப அவசியமா?’ என்றாள் பிரதக்ஷனா.

‘ஏய் பிரதி ரிலாக்ஸ். அமைதியா கேளு. நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு நைட்ல பயணம் பண்றது ரொம்பப் புடிக்கும்னு உனக்கு தெரியாதா? நான் பத்திரமாத்தான் இருக்கேன். நீ பயப்படாம இரு. சரியா? நான் இப்போ முத்தங்கா கிராமத்துக்கு பக்கத்துலதான் இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்தில போய்டுவேன். அப்புறம் இப்பத்தான் ஒரு ப்ரண்ட பாத்தேன். யாருன்னு தெரிஞ்சா நீ கண்டிப்பா ஷாக் ஆகிடுவ.’

‘அங்க ப்ரண்டா? அப்படி யாரைப் பாத்த..?’ என்றாள் பிரதக்ஷனா.

‘இப்போத்தான் ஒரு கறுஞ்சிறுத்தை எனக்கு ஹாய் சொல்லிட்டுப்போச்சி..’ என்றாள் அவள்.

‘என்னடி சொல்ற..? உனக்கு ஒண்ணும் ஆகலலை?..’ என்ற பிரதக்ஷனாவின் பயத்தை உணர்ந்தாள் அவள்.

‘ஒண்ணும் இல்ல. ஒண்ணும் இல்ல… பயப்படாத. நாம எதும் பண்ணாத வரை மிருகங்கள் நம்மல எதுவும் பண்ணாது. பசி, கோபம் இதெல்லாம் தூண்டாதவரை ஒரு பிரச்சனையும் இல்ல. உண்மையை சொல்லட்டுமா? எனக்கு அதைப் பாத்தப்போ அள்ளு இல்ல. கை, கால் எல்லாம் உதறிடுச்சி. அப்படியே சமாளிச்சிக்கிட்டேன். மூச்சே விடல தெரியுமா?. ஆனா, ரொம்ப த்ரில்லிங்கா, ஜாலியா இருந்துச்சி..’ என்றாள்.

‘ஜாலியா? ! !.. ஏய் பைத்தியமா? உளறாத.. முடியலடா சாமி.. உன்னை எப்படிடி நம்ம அம்மா பெத்தாங்க? புலி வருது ஜாலிங்கிற, நைட்ல தனியா ஊர் சுத்துற..

ஆனா ஒண் ணு மட்டும் உண்மைடி. நான் கேள்விப்பட்டிருக்கேன். மிருகங்கள் அதை விட மோசமான மிருகத்தைப் பாத்தா பயத்துல ஒண்ணும் பண்ணாம விட்டுருமா? அது உண்மைதான்போல…’

‘ம்ம்.. ஆமா.. ஆமா சொன்னாங்க… அப்புறம் பிரதி.. அது புலி இல்லம்மா.. அதுக்கு பேரு கறுஞ்சிறுத்தை.. பிளாக் பாந்தர்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டதில்ல.. இதுக்குத்தான் ஸ்கூல் ஒழுங்கா படிச்சிருக்கனும்..’ என்றாள் அவள்.

‘நீ மட்டும் என் கையில கிடைச்ச? அவ்வளோதான்.. சொல்லிட்டேன். முதல்ல தங்க பாதுகாப்பான ஒரு இடத்தைப் பாரு.. என்னை கோபப்படுத்தாத.’ என்றாள் பிரதக்ஷனா.

‘சரிங்க அம்மா. அப்படியே செய்றேன்..’

சிரித்துக் கொண்டே அவள் ‘இது ரிசர்வ்டு ஏரியா. இங்க ஹோட்டல் ஏதுவும் இருக்காது. சரி, சரி நீ போனை வை. நான் போய்ட்டு போன் பண்றேன்.’ 

போனைத் துண்டித்தவள், தனது கையுறைகளைக் கழற்றிவிட்டு, சற்று வேகமாகக் கைகளைத் தேய்த்து, கன்னத்தைச் சூடேற்றிக் கொண்டே சுற்றிலும் கவனித்தாள். அவளது வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் அவ்விடத்தின் குளிர் விளங்கிற்று. 

அவள் ஊதா நிற பென்சில் ஜீன்ஸ், கருநிற சட்டையும், அதன் மேல் மேனியை போர்த்தினார்போல், ஒரு ஜெர்க்கினும் அணிந்திருந்தாள். மலர் போன்ற அவளது கால்களோ காலணிகளுக்குள் பதுங்கியிருந்தன.

நீண்ட நெடிய… அடர்ந்த, கரிய காட்டிடை மல்லிகையை தேடவே எத்தனிக்கும் நம் மனம்.. வீசும் மணம் தேடி… தொட்டுப் பார்க்க பட்டெனவே வியக்கும் மென்மையே… வான்பொழியும், கரிய மேகத்தை ஒத்த அவளது அக்கூந்தல். மெல்லியக் காற்றிடை அது அசைந்து அசைந்து அந்த இரவுப்பறவையின் சிறகாகிப் போனதோ?

அவளது வலது கரத்தை கருஉலோகத்தால் ஆன வார் மற்றும் கோகோ நிறம் கொண்ட வட்ட வடிவ முகப்பு கொண்ட கைக்கடிகாரம் அலங்கரித்தது. 

இடக்கரமோ ஆபரணமோ, அணிகலன்களோ இன்றி தன்னசலிலே அழகாக இருந்தது. பத்து விரல்களும் நகப்பூச்சிட்டிருந்தன. ஆனால், அவைப் பூச்சிடப்பட்டவையா? இல்லையா? என தெரியாதவண்ணம் இருந்தது அவ்வண்ணம்..

அவளது கண்களில் மிளிரும் ஒளி இப்பிரபஞ்சத்தின் பிறப்பிடமோ?… ஆம், பேரொளி… 

மையிட்ட கண்கள் நீள வடிவில், நீண்ட இமைகளுடன் மூடியும், திறந்தும் இசையமைத்துக் கொண்டிருந்தது. அதனில் கிறக்கம் கொள்ளாதோரும் உண்டோ?… அதற்கேற்றாற் போன்ற நாண் பூட்டா வில்லாய் இரு புருவங்கள்.. ஒரு வேளை ராமன் தன் பாணத்தை ஏற்றவேக் காத்திருக்கும் தனுசோ…

நீளமான மூக்கு. நுனியில் கிளி போன்ற வளைவும் இருக்க, முழுமையான உதடுகள், அவளை முழுமை செய்ய, வலது கன்னப் பகுதியில் உதட்டின் இறுதியாய்… அனைவரும் வீழவே கன்னக்குழியும் கொண்டவள்… அக்குழியில் வீழ்ந்தவர்கள் பலர் எழாமலே தவிக்க, அறியாப் பதுமை இவள்.

குளிரின் அச்சம் தவிர்த்தவள், தனது கைபேசியை எடுத்து ஸ்பாட்டிஃபையை திறவினாள். 

“ஒன்ஸ் அப் ஆன் எ டைம்… தேர் லிவ்ட் எ கோஸ்ட்… ”

தனக்கு பிடித்தமான பாடல்களின் தொகுப்பினை ஒலிக்கச் செய்து, பயணிக்க ஆயத்தமானாள்…

மீண்டும் கையுறையை அணிந்து கொண்டு, தனது நெடிய கார்கூந்தலை அள்ளி வலக்கையிலிருந்து இடக்கைக்கும், இடக்கையிலிருந்து வலக்கைக்கும் மாறி மாறி கைகளாலேயே கோதிவிட்டு, குதிரை வால் போட்டுக் கொண்டாள். 

‘டுடுடுடு… டுடுடுடு..’

வழியில் இருள் மிருகங்களுக்கு எச்சரித்து… தன் கர்ஜனையை முழக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

மலையின் அடிவாரத்தை அடைந்த அந்நேரம், மெல்ல சூரியனும் விழிப்புற்றுக் கொண்டிருந்தான். முழுக்கதிர் வருகைக்காக புள்ளினங்காள் காத்திருக்கா… பறவைகளின் கீச்சொலி அவளை வரவேற்க..

அதனை ரசித்தே நின்றிருந்தாள். தன் உடலை சற்றே முறுக்கிவிட்டாள். மலையேற ஆயத்தமானாள்..

வழிநெடுகிலும் பச்சையின் கவர்ச்சி… கண்களுக்கு மட்டும் விருந்தல்ல. நுகர்தலுக்கும், செவிகளுக்கும் விருந்தானது. இயற்கையின் வாசனை அது. உண்மையில் அதுவன்றோ திரவியம்?… 

புகையின் நுகர்தலுக்கும், வாகனங்களின் ஓயா ஒலிகளுக்கும், கட்டிட கடமைகளுக்கும் பழக்கப்பட்ட இந்த மனம் அனைத்தையும் பிரம்மிப்பாய் பார்த்து, ரசித்து, உணர்ந்து கடந்து கொண்டிருந்தது. 

செக் போஸ்ட் வந்ததும் அவள் வாகனத்தை நிறுத்தினாள். அங்கிருந்த வன அதிகாரியிடம் வினவ ஆரம்பித்தாள்…

‘மேடம் இன்னும் விடியல. இந்த நேரத்தில் உங்கள உள்ள போக அனுமதிக்க முடியாது..’

‘சார் நான் அனுமதி வாங்கிட்டு தானே வந்திருக்கே. அப்புறம் ஏன் விடமாட்டேங்கிறீங்க?’

‘மேடம் நீங்க சொல்றது சரிதான். இந்த டைம்ல வேணாம். காட்டு யானைகள், மிருகங்கள் நடமாட்டம் இன்னும் இருக்கும். இன்னும் கொஞ்ச விடிஞ்ச பிறகு போகலாம். வெயிட் பண்ணுங்க. சொல்றத கேட்காம நீங்க போயி என் வேலைக்கு உலை வச்சிடாதீங்க’ என்றார்.

‘சரி அது வரைக்கும் இங்க இருக்குற நதியில ஃப்ரெஷ் ஆக அனுமதி உண்டா? அதுக்கும் அனுமதி இல்லையா?’

‘போங்க.. ஆனா பாத்து ஜாக்கிரதை மேடம் தண்ணி இருக்கிற இடம் தான் உயிரினங்களுக்கு ஆதாரம். நிறைய மிருகங்கள் இருக்கு காட்டுக்குள்ள. தண்ணி குடிக்க வரும். பாத்து. நான் சொல்லலன்னு சொல்லிடாதீங்க’

‘அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ என்று கண்ணடிக்க அந்த வயதான வன அதிகாரியோ திகைப்புற்று புன்னகைத்தார்.

அருகில் ஓடிக் கொண்டிருந்த நதிக்கு சென்றாள். தனது புகைப்படக் கருவியில் அங்கிருந்த பறவைகள், மரங்கள், சப்தமின்றி பாய்ந்தோடும் நதி என அனைத்தையும் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

நதியின் கரை அருகில் தெளிந்த நீரில் சுண்டு விரலின் பாதி அளவே இருக்கும் சிறு சிறு மீன் குஞ்சுகள் தெரிந்தன. அதனைக் கண்டு மிகவும் பூரிக்கலானாள். 

புகைப்படக்கருவி, கைக்கடிகாரம் ஆகியவற்றை கழற்றி அருகிருந்த பாறை மீது வைத்துவிட்டு, மெல்ல தனது ஜெர்க்கினையும் கழற்றி வைத்தாள். 

ஜீன்ஸ் பேன்ட்டின் கால்களை மடித்துவிட்டு, தனது ஷுவை கழற்றி, நதியின் விளிம்பிற்கு சென்றாள். மெல்ல தனது பாதங்களை நதியில் நனைத்தாள். நனைந்தது கால்கள் மட்டும் அல்ல. இயற்கையின் தொடுதலில் மெல்ல மனமும் கரையத் துவங்கியது அவளுக்கு.

கைகளில் நீரை அள்ளி முகத்தை கழுவினாள். அந்தக் குளிரும் இதமளிக்கவே.. உதட்டோரப் புன்னகை எட்டிப் பார்த்தது. கை, கால்களை அலம்பினாள். 

குனிந்து நீரை அவள் மலர்க்கைகளால் அள்ளிக் கொண்டிருக்க, முகம் கடந்து சென்றது ஒரு வண்ணத்துப்பூச்சி. சிரித்துக் கொண்டே, உடலை வளைத்து, முகத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தாள். 

வண்ணங்கள் நிறைந்த பட்டாம்பூச்சியின் கூட்டத்தைக் கண்டாள். மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, சிகப்பு, கருப்பு என பல வண்ணப் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க அவற்றைக் கண்டே மெய் மறந்தாள்.

மீன் குஞ்சுகள் கால்களில் கிச்சு, கிச்சு மூட்ட, அதனால் கூச்சம் கொண்டவள், சிரித்துக் கொண்டே கரைக்கு வந்தாள். அனைத்தையும் ரசித்துப் பார்த்தாள். அங்கிருந்த பாறையின் மேல் படுத்து வானை நோக்கி புன்னகைத்தாள்..

மனதிற்குள் கவியொன்றை பிரசவித்தாள்,

“நான் என் செய்கேனோ?…

புள்ளினமே..

காலிலாதோடும் நதியே…

காற்றேறி வரும் மணமே..

வண்ணங்கள் வீசும் மலர்களே..

வர்ணம் நிறைக்கும் தும்பிகளே…

நீவிர் எம் உளம் நிறைந்திட்டீரே?

யான் உம்முள் நிலைத்திருக்க..

ஒன்றாகிக் கலக்க வரம் வேண்டுமே”

நினைவுகள் போதுமாய் நினைத்து, நிகழ்விற்கு வந்தாள். மீண்டும் செக் போஸ்ட்டிற்கே கிளம்பினாள்.

‘இந்தாங்க மேடம் டீ குடிங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில போகலாம்.. குடிச்சிட்டு இந்த ரிஜிஸ்டெர்ல கையெழுத்து போட்டுருங்க’

‘தேங்க்ஸ்..’

‘நீங்க யாரு மேடம்? ஏதாவது பத்திரிக்கையில இருந்து வறீங்களா? இல்ல, எதாவது யூடியூப் சேனலில் இருந்து வறீங்களா?’

அவள் தலை நிமிர்த்தி புன்னகைத்துக் கொண்டே, புரியாதது போல் புருவத்தை சுருக்குவதை பார்த்த அவர்,

‘இல்ல… அடிக்கடி அந்த மாதிரி ஆளுங்க தான் இங்க வருவாங்க. ஏதோ இங்க இருக்க மனுசங்கல்லாம் வாழவே லாயக்கில்லாத காட்டு மிருகங்கள் போலவும், அவங்க மேல கவர்மண்ட் பரிதாபப்படனும்னோ, அவங்களுக்கு நாகரிகமே இல்லங்கிறத போலத்தான் நினைப்பாங்க அதான் கேட்டேன்.’

‘இல்ல. அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்குறேன். முக்கியமான ஒருத்தரை பாக்க வந்தேன்.’

‘இங்க அப்படி யாரு முக்கியமானவங்க?.. மேடம் யாரைப் பாக்க வந்தீங்க?’

குழப்பத்திலிருந்த அவருக்கு ரிஜிஸ்டெரில் தனது கையெழுத்தை முத்திரையிட்டு தலையை நிமிர்த்தி புன்னகையை உதிர்த்துவிட்டு,

‘இப்போ நான் போகலாமா?’ என்றாள்.

அவர் தலையை ஆட்ட, அவள் தனது வண்டியை எடுத்துச் செல்லலானாள்.

யார் இந்த இரவுப்பறவை? எதை நோக்கிச் செல்கிறாள்? என்னதான் இவளது தேவையோ? என்னதான் இவளது ஆசைகளோ? நினைத்ததை அடைவாளா? அவளது நினைப்புகள் எதைப்பற்றியதோ? அல்லது எவர் பற்றியதோ??? எது அவளை… பற்றியதோ(!)?? 

காண்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!