சின்னஞ் சிறு பூவே
பூவே 10
Advertisement
காலையில் பரப்பரப்பாக அடுப்பங்கரையில் சமையலில் இருந்த காளியம்மா மனது ஒரு நிலையில் இல்லை, மனம் முழுவதும் மகனின் செயல்களே கண் முன்னே மின்னி மின்னி மறைந்துக்கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
மகனின் செயல்கள் ஒதுக்கி வேலையில் கவனத்தை வைத்தாலும்.. மீண்டும் எண்ணங்கள் அனைத்தும் மகனிடமே போய் நின்றது..
“ம்ப்ச்” என்ற சலிப்புடன் வெளியே வந்தவர் பார்வையில் விழுந்தது.. அந்த மண்பானை அதை கண்டதும் ஒரு நொடி ‘திக்கென’ நெஞ்சில் கை வைத்து நின்றது சில நொடிகளே!
Advertisement
“கடவுளே”? என்ற புலம்பலுடன் , அந்த மண்பானையை நெருங்கியவர் பயந்தது போலவே! அது வெதை நெல்லு தான்..
‘நெற்று காலையில் உறவிட்ட வெதை நெல்லை இன்னும் முளைக்கு விடாமல் இருப்பதை கண்டு ஒருபக்கம் வேதனையாக, இருந்தாலும் மறுபக்கம் கேவமாக வந்ததும்.. பார்வை வாசல் பக்கம் திரும்பியது..
அப்போது தான் கிணற்றிலிருந்து தண்ணீரை இடுப்பில் ஒரு கொடமும், தலையில் ஒரு கொடமுமாக நடந்து வந்தவளை பார்த்ததும்.. இன்னும் ஆத்திரம் கூடியது இவருக்கு..
“ஏட்டி” என்ற சத்தத்தில் இடுப்பிலிருந்து கொடம் நழுவப் பார்த்தது.. எங்கே! இன்றும் கொடம் உடைந்து விடுமோ! என்ற பயத்தில் சற்று தாங்கி இடுப்பிலிருந்த கொடத்தை பிடித்து சற்று நகர்ந்து திண்ணையில் இறக்கி வைத்து நிமிர்ந்து பார்த்தாள்..
இடுப்பில் ஏற்றி சொறுகியிருந்த புடவையும்.. கொண்டை போட்டிருந்த கருங்கூந்தல் அங்கொன்றும் இங்கொன்றும் அந்த கொண்டையிலிருந்து விலகியது எதுவுமே! அவருக்கு தெரியவில்லை ‘கண் முழுதும் கோவம் மட்டும் தான் இருந்தது…
அவரை பார்த்தபடியே! தலையிலிருந்த கொடத்தையும் இறக்கி இடுப்புக்கு கொண்டுவந்து பின் கட்டில் வைத்து நிமிர்ந்து நின்றாள்..
நேற்றிலிருந்து இவர் அடக்கி வைத்த கோவம் மொத்தமும் வார்த்தைகளால் இறக்கி வைத்தார்..
“வெலங்காதவளே! எந்த எண்ணத்துலடி வெதை நெல்லை ஊற போட்ட , மொத்தமும் நாசமா போச்சு.. நீயே! ஒரு தத்திரம் புடிச்சவ, உன் கையால வெதை நெல்லை ஊற போட்டதுக்கு இந்த வருஷம் வெள்ளாமையும் போச்சு” என்று மூச்சு வாங்க சொன்னார்..
“நா என்ன பாட்டி செய்வேன்.. மாமாதான் வம்படியா வெதை நெல்லை ஊறபோட சொன்னாங்க” என்றாள் கலங்கிய விழிகளுடன்..
அவள் கலங்கிய முகத்தை கண்டும் கூட அந்த பெரிய மனிஷிக்கு மனம் இறங்கவில்லை வார்த்தையாலே கடிச்சு கொதற காத்திருந்தது போல் இருந்தது அவர் செய்கை மொத்தமும்..
“ஆம்பள ஆயிரம் சொன்ன பொம்ளைக்கு புத்தி வேணாவா, உன் ராசி பத்தி உனக்கு தெரியாதா, ஐஞ்சி வயசுல நீ நட்ட தென்னைமரம் இன்னும் பூ பூக்கள , நீ வச்ச தென்னைமரம் மாறி தான் நீயும் இன்னும் பூக்காம இருக்க… நீயே ஒரு ராசியில்லாதவ, இதுல வெள்ளாமைக்கு வெதை நெல்லை தொட்டு அதுவும் அழுகி போச்சு” என்றார்
“பாட்டி…” என்று அவள் மீண்டும் ஏதோ சொல்ல வர,
“கூடக்கூட பேசாதடி!” என்று காளியம்மா கை நீட்டி அதட்டினார்.
வேலுவின் அறையிலிருந்த மயிலம்மாவின் ‘இரும்பல் சத்தம்’ கேட்க , இவரின் கோவத்தை கொஞ்சம் மட்டுப்படுத்த பார்த்தாலும் மனதின் கொதிப்பு மட்டும் அடங்க மறுத்தது…
வார்த்தைகள் ஒவ்வொன்றும் கல்லாய் வந்து விழ, அவள் தலை குனிந்தபடியே நின்றாள்.
கண்களில் நீர் நிரம்பினாலும், அதை துடைக்க கூட மனம் வரவில்லை.
“என்ன நேரத்துலடி நீ இந்த வூட்டுல பொறந்தியோ! அன்னைக்கே இந்த வூட்டுக்கு கேடுகாலாம் புடிச்சிடிச்சி… அது சரி முறையா கலியாணம் பண்ணி பொறந்திருந்தா , உனக்கும் அதிர்ஷ்டம் நிறைஞ்சிருக்கும்.. உன் ஆத்தா தான் அக்கா புருஷனுக்கு முந்தி விரிச்சவளாச்சே!
ஒரு நல்ல காரியம் நடந்தா கூட அதுல உன் சாபம் கலந்துரும் போல…”
என்று காளியம்மா இன்னும் நிற்காமல் பேசிக்கொண்டே இருந்தார்
அந்த வார்த்தை மட்டும் தான் அவளின் உள்ளத்தை கிழித்தெறிந்தது.
அந்த ஒரு வாக்கியம் காதில் விழுந்த நொடியே, தலை குனிந்து நின்றிருந்தவளின் தோள்கள் மெல்ல நடுங்கியது.
இதுவரை எல்லா வசவுகளையும் அமைதியாக வாங்கிக்கொண்டவள்… இப்போது மட்டும் தாங்க முடியாமல் போனது.
“பாட்டி…” என்று உடைந்த குரலில் அழைத்தாள்.
ஆனால் காளியம்மா நிற்கவில்லை.
“என்னடி? பொய் சொல்லுறேனா? இந்த ஊருக்கே தெரிஞ்ச கதைய தான சொல்லுறேன். உன் ஆத்தா பண்ண பாவம் இப்ப உன்ன வந்து நிக்குது… இந்த வூட்டுல எதுவும் உருப்படாம போறதுக்கு காரணமே நீ தான்…”
அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சுக்குள் ஆழமாக இறங்கியது..
கீழே பார்த்தபடியே நின்றிருந்தவளின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மண்ணில் விழுந்தது.
அதே நேரம் உள்ளிருந்து மயிலம்மாவின் இருமல் சத்தம் மீண்டும் கேட்டது..
அந்த நேரம் வெளிவாசல் வழியாக உள்ளே வந்த வெற்றி
“ம்மா!” என்று அழுத்தமாக அழைத்தான்.
அவன் குரலில் இருந்த அதட்டலில் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
வாசலில் நின்றவன் முகம் இறுகி இருந்தது.
அவன் பார்வை முதலில் கலங்கிய முகத்துடன் நின்றவளை தொட்டு, பிறகு தாயிடம் திரும்பியது.
“காலைலயே என்னத்துக்கு இவ்வளவு சத்தம்?” என்றான் அடக்கி வைத்த கோபத்துடன்.
“ஏன்டா சத்தம் போடாம கொஞ்சுவாங்களா?
வெதை நெல்லு மொத்தமும் பாழாயிடுச்சு!
இதுக்கு காரணம் யாருன்னு உனக்கும் தெரியும்!”
என்று காளியம்மா மீண்டும் அவளை முறைத்தார்.
வெற்றியின் பார்வை அமைதியாக அந்த மண்பானை மேல் சென்றது.
சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றவன், மெதுவாக அவளருகே வந்தான்..
அவள் மட்டும் இன்னும் தலை நிமிரவில்லை.
“நீ உள்ள போ…” என்றான் மெதுவாக.
அவள் தயக்கத்துடன் அவனை பார்த்தாள்.
“போன்னு சொல்றேன்ல…” என்றவன் குரல் இம்முறை மென்மையாக இருந்தது..
அவள் அங்கிருந்து நகர்ந்ததும், காளியம்மா ஆத்திரமாக,
“இப்போ நீ அவளுக்குத்தான் வக்காலத்து வாங்கிட்டு வர்றீயா?” என்றார்.
அதுவரை பொறுமையாக இருந்த வெற்றி, நேராக தாயை பார்த்தான்.
“நெல்லு முளைக்கலன்னா அதுக்கு அவள்தான் காரணமா?
ஒவ்வொரு தடவையும் ராசி, தத்திரம்னு சொல்லி அவளை குத்திக்காட்டிக்கிட்டே இருப்பீங்களா?” என்றான்.
அவன் வார்த்தையில் இருந்த கடுப்பு காளியம்மாவையே ஒரு நொடி அமைதியாக்கியது. காளியம்மா அவனை நம்ப முடியாதது போல பார்த்தார்.
“ஏன்டா… இப்போ அவ கிட்டத்தான் உனக்கு எல்லாம் நியாயமா தெரியுதா?” என்றார் குரல் நடுங்க.
வெற்றி ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டான்.
“நியாயம் யார்கிட்ட இருக்குன்னு தெரியல… ஆனா தப்பில்லாதவ மேல எல்லாத்தையும் போட்டுட்றது மட்டும் சரியில்லைம்மா… நேத்து அப்பாத்தாக்கு உடம்பு முடியாம போனதால, எனக்கே வெதை நெல்லு ஞாபகத்துக்கு வரல.. அவ சின்ன பொண்ணும்மா அவகிட்ட போய் சரிக்கு சமமா மல்லுக்கு நிக்குறீங்க..
அவளை கவ்யா, அபிராமியா பாக்க வேணாம்.. அவங்களை விட சின்ன பொண்ணுன்னு பாக்கலாமேம்மா, அவகிட்ட போய் என்ன வார்த்தை பேசிட்டீங்க.. அன்னைக்கு வேலு அம்மாவுக்கு என்ன நடந்திருக்கும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்… தெரிஞ்சும் நீங்க தேவகி அக்காவை தப்பு சொல்லுறது சரியில்லைம்மா”
என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்…
“என்ன சொன்னாலும் எனக்கு அவ ராசி இல்லாதவ தான்.. அவ பொறந்தன்னைக்கு இந்த வூட்டுல நடந்ததெல்லாம் மறந்துட்டியா?
காளை செத்தது… வயல் கருகினது… இப்போ வெதை நெல்லு கூட முளைக்கல!”
என்று கோபமாக சொல்லிக்கொண்டே போனார்.
வெற்றி கண்களை மூடி ஒரு நொடி நின்றான்.
அந்த நேரம் உள்ளே சென்றிருந்த அவள், வாசல் அருகே நின்றபடியே எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்தாள்.
அவள் விரல்கள் பதட்டமாக கைகளை பிசைந்துக்கொண்டிருந்தது..
“அம்மா…” என்ற வெற்றியின் குரல் இம்முறை சற்று கடினமாயிற்று.
“எது நடந்தாலும் அவ ராசி தான் காரணம்னு சொல்லாதீங்க.
அவளும் மனுஷிதான்…” என்றான் ஆத்திரமாக,
அந்த வார்த்தை கேட்டவுடன், உள்ளே நின்றவள் கண்கள் மெதுவாக உயர்ந்தது.
காளியம்மாவோ இன்னும் அடங்கவில்லை.
“நீ இப்போ அவ கண்ணீரை பார்த்து இளகுற… நாளைக்கு இந்த வூட்டு மானத்தை அவ நடுத்தெருவுக்கு கொண்டு வந்தா அப்போ புரியும்!” என்று இன்னும் ஆத்திரம் தீராமல் சொல்ல..
“அப்படி எதுவும் ஆகாது.”
வெற்றி உடனே சொன்னான்.
“நடக்குறதெல்லாம் அவளால்னு நம்புறத விட, நடந்ததை சரி பண்ண என்ன செய்யலாம்னு யோசிங்க…”
என்றவன் குரலில் அழுத்தம் இருந்தது.
காளியம்மா அவனை சில நொடிகள் பார்த்தார்.
பிறகு ஏமாற்றமாக தலை அசைத்தவர்,
“சரி… இப்போ என் பேச்செல்லாம் உனக்கு விஷமா தான் தெரியும்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
வாசல் பகுதி அமைதியாகி விட்டது.
ஆனால் அந்த அமைதிக்குள்ளே ஒரு கனமான அழுத்தம் இருந்தது.
வெற்றி மெதுவாக திரும்பி வாசல் அருகே நின்றவளை பார்த்தான்.
அவள் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்..
“அவங்க பேசுறத மனசுல வச்சிக்காத…” என்றான் மெதுவாக.
அந்த வார்த்தை கேட்டதும், அவள் உதடு லேசாக துடித்தது.
“ பாட்டி சொன்னதிலும் உண்மையிருக்கு மாமா.. எல்லாரும் அதையே தான் சொல்லுறாங்க…” என்றாள் உடைந்த குரலில்.
அவள் கண்ணில் நின்ற நீரை பார்த்த வெற்றிக்கு, சொல்ல வார்த்தை இல்லாமல் போனது.அவள் கண்களில் நின்ற கண்ணீரை பார்த்தபடியே வெற்றி சில நொடிகள் அமைதியாக நின்றான்.
அவள் மட்டும் அவன் பார்வையைத் தவிர்த்தபடி திரும்பிச் செல்ல முயன்றாள்.
“வேலு…” என்று மெதுவாக அழைத்தவன்,
“நிஜமாவே நீ அப்படின்னு நம்புறியா?” என்றதும்..
அவள் காலடி அப்படியே நின்றது.
சில நொடிகள் கழித்து மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.
“எப்படி நம்பாம இருப்பேன்…” என்றாள் வெறுமையான சிரிப்புடன்.
“சின்ன வயசுல இருந்தே இதேதான் கேட்கிறேன்…
நா தொட்டது விளங்காது…
நா வச்சது பூக்காது…
நா வந்தா நல்லது நடக்காது…”
ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும்போது அவள் குரல் மெதுவாக உடைந்து கொண்டே போனது.
“ஒரு நேரத்துல… நானே பயப்பட ஆரம்பிச்சுட்டேன் மாமா…”
அந்த “மாமா” என்ற அழைப்பில் இருந்த உடைப்பு வெற்றியின் மனதை என்னவோ செய்தது.
அவள் சிரிக்க முயன்றாள் முடியவில்லை கண்ணீர் தான் வழிந்தது.
“இப்போ கூட அந்த நெல்லு முளைக்கலன்னு பார்த்ததும்…
ஒரு நொடி எனக்கே பயமா இருந்துச்சு… ஒருவேளை நிஜமாவே என்னாலதானோன்னு…”
அதற்கு மேல் பேச முடியாமல் அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
வெற்றியின் முகம் இறுகியது.
“போதும்.”
அவன் சொன்ன ஒரு வார்த்தைக்கே அவள் மெதுவாக திரும்பிப் பார்த்தாள்.
“இனிமே அப்படியெல்லாம் நினைக்காத.”
அவன் குரல் உறுதியாக இருந்தது.
“வயல்ல மழை வரலன்னா அதுக்கு மனுஷன் காரணமில்ல…
நெல்லு முளைக்கலன்னா அதுக்கும் காரணம் இருக்கும்…
ஆனா அதெல்லாம் விட்டுட்டு ஒரு பொண்ணு மேல பழி போட்டுட்டே இருந்தா… அவளும் ஒருநாள் அதையே நம்ப ஆரம்பிச்சுடுவா…”
அவன் சொன்ன வார்த்தைகள் அவளை அப்படியே அமைதியாக்கியது.
இதுவரைக்கும் யாருமே அவள் மனசுக்குள்ள இருந்த பயத்தையே வார்த்தையா சொல்லியதில்லை.
வெற்றி மெதுவாக மண்பானையை பார்த்தான்.
பிறகு மீண்டும் அவளை நோக்கி,
“அது முளைக்கும்…” என்றான்.
அவள் புரியாமல் பார்த்தாள்.
“இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு… ஆனா கண்டிப்பா முளைக்கும்.”
அவன் சொன்னது வெதை நெல்லையா…
அல்லது அவள் வாழ்க்கையையா… என்று அவளுக்கே புரியவில்லை.
ஆனால் பல நாள்களுக்கு பிறகு, அவள் மனசுக்குள் மிகச் சிறிய நிம்மதி ஒன்று மெதுவாக முளைக்க ஆரம்பித்தது.அந்த நிம்மதி முகத்தில் தெரியாமல் இருக்க முயன்றாலும், கண்களில் இருந்த கலக்கம் மட்டும் கொஞ்சம் குறைந்திருந்தது.
வெற்றி இன்னும் சில நொடிகள் அவளை பார்த்தபடியே நின்றான்.
பிறகு எதுவும் சொல்லாமல் மண்பானையை எடுத்து அருகே இருந்த திண்ணையில் வைத்தவன், கை நிறைய நெல்லை எடுத்து பார்த்தான்.
“முழுக்க கெட்டுப் போயிருக்க மாதிரி தெரியல…” என்று தன்னிடமே மெதுவாக சொல்லிக்கொண்டான்.
அவள் அமைதியாக அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நேத்து எத்தனை மணிக்கு ஊற போட்ட?” என்று கேட்டான்.
“காலையில…” என்றாள் மெதுவாக.
“தண்ணி மாத்தினியா?”
அவள் உடனே தலை அசைத்தாள்.
“மாத்தினேன்…”
வேலு மீண்டும் நெல்லை பார்த்தான்.
“அப்போ முளைக்கும்… கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளோதான். நீ சாக்கு பைய கொண்டு வா” என்றான்…
அவளும் ஓடிபோய் சாக்கு பையை ஓட்டு வீட்டிலிருந்து கொண்டு வர ,கூடவே ஜல்லாடையும் சேர்த்து கொண்டு வந்து அவனிடம் தந்தாள்..
சிரித்தபடி, “பரவாயில்லையே ஞாபகமாக கொண்டு வந்துட்ட ஜல்லாடையைனு” சொன்னவன்…
பானையின் வாயில் ஜல்லடையை வைத்து.. அருகில் கிடந்த அன்னக்கூடையை நிமிர்த்தி போட்டு வெதைநெல்லை வடி கட்டினான்..
பானையிலிருந்த மொத்த நீரும் வெளியேறியதும்..
“வேலு இந்த சாக்கு பையை புடி” என்று பையின் வாயில் பகுதியை சுருட்டி அவளிடம் கொடுத்தான்…
அவளும் வெதை நெல் கீழே சிந்தாத அளவுக்கு, அந்த சாக்கு பையை பிரித்து பிடித்தாள்..
அவனும் பானையை இருகைகளால் இறுக்கி பிடித்தவன் கொஞ்சம் கொஞ்சமாக , சாக்கு பையில் கொட்டி முடித்ததும்.. சனல் கயிறை கொண்டு சாக்கு பையின் வாய் பகுதியை சற்று இறுக்கம் தளர்ந்தபடி கட்டி அந்த மூட்டையை அப்படியே அந்த பானையை கவுத்து போட்ட பானையின் மீது தூக்கி வைத்தான்..
அவன் செய்கைகளை பார்த்தவள்.. “ஏன் ? மாமா இங்க வைக்குற, எப்பவும் திண்ணையில தானே இருக்கும்”..
“ரொம்ப ஊறிடிச்சு வெயில் படுற இடமா இருந்தா தான்.. வெயிலுக்கு தண்ணீ உறிஞ்சி வெதைமுளைப்பு விடும்” என்றான். அவளுக்கு விளக்கமாக,
அவன் இவ்வளவு சாதாரணமாக சொன்னதுக்கே, அவள் உள்ளுக்குள் இருந்த பெரிய பாரம் கொஞ்சம் இறங்கியது.
அந்த நேரம் உள்ளே இருந்து காளியம்மாவின் பாத்திர சத்தம் பலமாக கேட்டது.
இருவரும் அந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர்.
“நீ போய் வேலையைப் பார்…” என்றான் வெற்றி மெதுவாக.
அவள் தலை அசைத்துவிட்டு நகர முயன்றபோது,
“வேலு…” என்று மீண்டும் அழைத்தான்.
அவள் திரும்பினாள்.
“பாட்டி ஏதாவது பேசினா… அதுக்காக நீ அழாத.”
அந்த வார்த்தை அவளை ஒரு நொடி அசையாமல் நிற்க வைத்தது.
இதுவரைக்கும் அவள் அழுததை கவனி
ச்சவர்களே குறைவு.
ஆனா இவன்…
அவள் எதுவும் பேசாமல் மெதுவாக தலையயசைத்து உள்ளே சென்றாள்.
அவள் போன திசையையே சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்த வெற்றி, கையில் இருந்த சில நெல் மணிகளை நெஞ்சின் மீது வைத்தவன்.
‘முளைச்சிடுங்க’ என்றான் மனதோடு…
