Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

84. சரோ - கோட்டையின் கொடிநிலா

கோட்டையின் கொடி நிலா – 5 (1)

அத்தியாயம் – 5

குடியரசுத் தலைவர் மாளிகை, புதுதில்லி.



Advertisement

உதயன் மணிவாசகம். கல்வித்துறையின் மத்திய அமைச்சர். தமிழகத்தின் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற தலைவர். தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு!

தமிழக முதல்வர் மணிவாசகம், மாநிலத்தை நிர்வகிக்க திறமையான அமைச்சர் குழுவை நியமித்து இருப்பதால், முந்தைய மதவாத மத்திய அரசை எதிர்க்க, உதயனின் கவனத்தை முழுவதுமாக நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் குவித்து அதில் வெற்றியும் கண்டிருந்தார். 

Advertisement

Advertisement

உதயனின் தலைமையில், தமிழகத்தின் நாற்பது இடங்களையும் ம.ம.க கூட்டணி கட்சிகளே வென்றிருக்க, இந்த வெற்றி உதயனுக்கும் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் மைல் கல்லே. வருங்கால தமிழக முதல்வருக்கான பயிற்சிக்களம்!

வசுந்தராவை விட சில வருடங்களே மூத்தவர் என்பதால், உதயன் மணிவாசகத்துக்கும் தமிழகத்தில் இளைஞர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. அதனால் உதயனது கட்சியின் ஆதரவின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் வசுந்தரா முழுவதுமாக உணர்ந்தே இருந்தார். எழுந்த இடத்திலேயே நின்று விட்ட வசுந்தரா,

Advertisement

“சொல்லுங்க உதயன். என்ன ஆட்சேபனை?” என்றார், கைகளை இறுக்கமாகக் கட்டியபடியே.

“விக்ரம்ஜி சொன்னது எல்லாத்தையும் நாங்க ஏத்துக்கலைன்னாலும், அவர் சொன்னதுல சில விசயங்கள எல்லாரும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும். தன்னிச்சையா, கட்சி முடிவுகள… அரசு முடிவுகளா அறிவிச்சா கூட்டணி ஆட்சி சீக்கிரமே உடைஞ்சிடும். 

கூடிய சீக்கிரமே தமிழ்நாட்டுல அசெம்பிளி எலெக்ஷன் வருது. நீங்க சொன்ன மிஷன்ஸ்ல மாநிலங்களுக்கான சுய அதிகாரம் பத்தி எதுவும் இல்லை. போன கவர்ன்மெண்ட்டோட பாலிசில, தமிழ்நாட்டோட டேக்ஸ் கலெக்சனுக்கும், சென்ட்ரல் ஃபண்ட் அலக்கேஷனுக்கும் சம்பந்தமே இல்ல!

இதெல்லாம் சரி செய்யாம அடுத்த எலெக்ஷன ஃபேஸ் பண்றது ரொம்ப கஷ்டம். இங்க இருக்குற பவர நாங்க கண்டிப்பா யூஸ் பண்ணிதான் ஆகணும். குறைந்த பட்சம் எலெக்‌ஷன் வின் பண்ணுறதுக்கு தமிழ்நாட்டுக்கு நாலு பெரிய திட்டமாச்சும் அறிவிக்கணும் பிரதமரே. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, ஒரு காலத்தில எங்களோட கனவுகள்ல உங்களுக்கும் பங்கு இருந்துச்சு!” என உதயன் மிக உறுதியாக, திடமாக வசுந்தராவின் கண்களைப் பார்த்து உரைக்க, சில நிமிடங்கள் அறையில் பெரும் அமைதி நிலவியது.

அதுவும் அந்த ‘பிரதமரே’ தேவைக்கு அதிகமான அழுத்தத்துடனேயே வந்தது. ‘கடந்த கால கனவுகள்’ என்று வேறு குத்தியிருக்க, வசுந்தரா இதை எல்லாம் கவனித்தாலும், கண்டுகொள்ளவில்லை. அவருக்கு காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்றால் காரியம் தானே.

“நான் இப்போ சொல்லப் போற விஷயத்தை, இன்னொருவாட்டி சொல்ல வேண்டிய அவசியத்த, உதயனோ இல்ல நம்ம அமைச்சரவையில் இருக்கிற மற்ற அமைச்சர்களோ எனக்குக் குடுக்க மாட்டாங்கன்னு நம்புறேன்” என்ற பீடிகையுடனே தனது பதிலை ஆரம்பித்த வசுந்தரா,

“என்னோட அரசு கூட்டணி ஆட்சி தானே ஒழிய மாநில நலம் மட்டுமே சார்ந்த பிரிவினை ஆட்சி கிடையாது. தேசிய ஒற்றுமையையும், வளர்ச்சியும் தான் இந்த அரசோட அடிப்படை கொள்கை. எல்லா நேரமும் சமத்துவம் தீர்வாகிடாது உதயன். சமபங்கும், விடுதலையும் கூட தேவைப்படும் தான். 

நீங்க எல்லாரும் இதை மனசில வைச்சிட்டு உங்க துறைரீதியா, இந்த நாட்டுக்கு என்ன செய்யணும்னு தான் பார்க்கணும். ஒரு மத்திய அமைச்சரா உங்களோட முதல் கடமை இது தான். 

இந்தக் கடமைய சரியா செய்ய முடியாதபடி, யாருக்கெல்லாம் அவங்களோட கட்சிப் பொறுப்புகள் குறுக்கே நிக்குதோ நீங்க எல்லாரும் தயவு செஞ்சு ஒரு முடிவு எடுத்துக்கோங்க – கட்சிப் பொறுப்பா இல்ல அமைச்சர் பதவியா – எது உங்களுக்கு வேணும்னு.

கண்டிப்பா மாநில நலன்கள் பாதுகாக்கப்படும். ஆனா என்னோட அமைச்சர்கள், மாநில தேர்தல் வெற்றிய மட்டும் மையமா வைச்சு, அவங்க பதவிய துஷ்ப்ரோயோகம் செய்வது கண்டிக்கத்தக்கது. ஒரு போதும் நான் அதை அனுமதிக்க மாட்டேன். 

எந்த துறைக்கு நான் புதுசா அமைச்சர்கள பணியமர்த்தணும்னு முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும். ஏற்கனவே என்கிட்ட ஒரு வெயிட்டிங் லிஸ்ட் இருக்கு. அந்த ப்ரயாரிட்டில தான் நான் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணனும்” என்று ஒரே போடாகப் போட, அதற்குப் பின் யாரும் கேள்வி கேட்கவில்லை!

உதயன் புருவங்களை நெரித்து, நெற்றி சுருங்க வசுந்தராவை ஆழ்ந்து பார்த்தாரே தவிர, மீண்டும் மறுப்பாக கேள்வி எழுப்பவில்லை. என்ன தான் தமிழக அரசியலில், இரு கட்சிகளுக்கிடையே கொள்கை, கூட்டணி என பெரிதான வேறுபாடுகள் இருந்தாலும், மணிவாசகத்திடமிருந்து உதயனுக்கு மிகத் தெளிவான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. 

எப்பாடுபட்டாவது மத்திய கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே அதில் முதன்மையானது. இந்தக் கேள்வி எழுப்பியதற்கே இன்று கண்டிப்பாக தந்தையிடம் இருந்து மண்டகப்படி நடக்கும் என்று உதயனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இளரத்தம் அல்லவா. எப்போதும் வசுந்தராவிடம் எதையாவது முட்டுக்கட்டை போட்டே பழகிவிட்ட பழக்கதோஷத்தில் இன்றைய சம்பவமும் கணக்கில் ஏறிவிட்டது. 

வசுந்தராவிடம் நேரடியாக எதைக் கேட்டாலும் அவர் நிர்தாட்சண்யமாக மறுக்கவே செய்வார் என்பதலாயே மணிவாசகம், இதுவரை கூட்டணி அரசுக்கான எல்லாக் கோரிக்கைகளையும் தாரா தேவியை அணுகியே செயல்படுத்தியிருந்தார். உதயனுக்கும் அதையே அறிவுறுத்தியிருக்க, ஏனோ அந்த வழிமுறையை கடைப்பிடிக்க அவருக்கு மனமில்லை.

உதயனை ஒரு எச்சரிக்கை பார்வை பார்த்து விட்டே வசுந்தரா அறையை விட்டு வெளியேற, உதயனின் கட்சியைச் சார்ந்த மற்றொரு மூத்த அமைச்சர்,

“பார்த்தீங்களா தம்பி, நம்ம கட்சிக்கு கிடைச்சிருக்கிற மரியாதைய? இதுக்கு தான் இந்த மாதிரி பொம்பளைங்கள எல்லாம் வைக்க வேண்டிய எடத்துல வைக்கணும். ரெண்டு பொம்பளைங்க கைல சிக்கி நாடே நாசமா போயிடும் போல” என்று பொங்க,

அதை கண்டிக்கும் விதமாக உதயன், அவரை வாட்டி எடுத்து விட்டார்.

“எந்த மாதிரி பொம்பளைங்க? அவங்கள எல்லாம் எங்கண்ணா வைக்கணும்?” என்று தீவிரமாகக் கேட்பது போல் கேட்க,

“என்ன தம்பி, தெரியாத மாதிரி கேட்குறீங்க? பொம்பளைங்க ராஜ்ஜியம் வீட்டோட நின்னுடனும். நம்ம வயித்த நிரப்பறத தவிர வேற என்ன பெரிய இடம் தேவை அவங்களுக்கு? வீட்டையும், புள்ள குட்டிங்களையும் பார்த்துட்டு ஜம்முன்னு இருக்க வேண்டியது தானே. வீட்ல தான் அவங்க சொல்றதுக்கு தலையாட்டுற நிலைமைனா, இங்கயும் அப்படியேன்னா எப்படி பொறுத்துக்க முடியும் சொல்லுங்க?” என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.

“ரொம்ப கஷ்டம் தான்! அவ்ளோ கஷ்டப்பட்டு ஒன்னும் நீங்க இங்க இருக்க வேண்டாம். அதான் அவங்களே சொல்லிட்டாங்களே, வெயிட்டிங் லிஸ்ட் இருக்குன்னு. நம்ம தலைவர் கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டா உடனே உங்களை ரீலிவ் பண்ணிடுவாங்க. எப்படி வசதி?” என்று நக்கலாக கேட்க, மனிதருக்கு ஒரே குழப்பம்.

“நீங்க தானே தம்பி கோவமா பேசுனீங்க! நான் உங்க பக்கம் தான். உங்களுக்கு ஆதரவா தான் பேசுறேன். இதை வைச்சு நாம கண்டிப்பா காரியம் சாதிச்சு தான் ஆகனும்” என்று எப்படியாவது தன்னை புரிய வைக்கும் நோக்கில், உதயனின் தோளை மெதுவாகத் தட்டி, அவரது காதில் கிசுகிசுத்தார் அந்த அமைச்சர்.

“நான் அவங்களை மரியாதையா தான் கேள்வி கேட்டேண்ணா! அவங்க எடத்துல யார் இருந்தாலும் கேட்டிருப்பேன். ஆனா முதுகுக்குப் பின்னாடி நாட்டோட தலைமைப் பதவிக்கான மரியாதைய குலைக்கும் விதமா ஒரு நாளும் பேச மாட்டேன்.

நம்ம தலைவர் கூட இவ்வளவு வருசம் கூட இருந்து, நீங்க இது கூட கத்துக்கலை போல. இந்தம்மாவுக்கு இந்தப் பதவி கிடைச்சதுல, எனக்கு ஏகத்துக்கு கடுப்பு இருக்கு தான். தாரா தேவியோ, ஏன் தேவராஜனோ கூட பிரதமர் பொறுப்பு எடுத்திருந்தா எனக்கு இவ்ளோ கடுப்பு வந்திருக்காது.

இவங்களுக்கு என்ன தெரியும்னு தூக்கிக் குடுத்துருக்காங்கன்னு தெரியல. எல்லாம் அந்த வருண் பய பண்ற வேலை” என்று பல்லைக் கடித்த உதயன்,

“ஆனா அது என்னோட தனிப்பட்ட கருத்துண்ணா. என்னோட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்தது. எங்களுக்குள்ள தீர்க்க வேண்டிய பழைய கணக்கு வேற இருக்கு. அதையெல்லாம் வைச்சுப் பார்த்தா, இந்தக் காழ்ப்புணர்ச்சி கூட இல்லாட்டி நான் மனுஷன் இல்லை, தெய்வம்! 

நீங்க அதுக்கு தூபம் போடுறேன் பேர்வழின்னு, சம்மன் இல்லாம ஆஜராகி உங்க பேரை டாப் ஹிட் லிஸ்ட்க்கு கொண்டு போயிறாதீங்க. இங்க யாரும் தும்முனா கூட தலைவருக்கு நியூஸ் போய்டும். தெரியும்ல?” என்க, அமைச்சருக்கு கதி கலங்கியது.  

ஆனாலும் அதை வெளிக்காட்டாமல், 

“என்னத்த சொல்ல, நல்லதுக்கு காலம் இல்ல தம்பி! நான் நம்ம கட்சி விசுவாசி, தலைவரோட தீவிர ஆதரவாளர். அவர் மகனுக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க முடியுமா சொல்லுங்க. அந்த ஆதங்கத்துல ஏதோ ரெண்டு வார்த்தை அதிகமா சொல்லிருப்பேன். 

அதெல்லாம் நீங்க ஒன்னும் பெருசா எடுக்காதீங்க. அந்த அம்மாக்காக இல்லை. உங்களுக்காகவும், தலைவருக்காகவும் மட்டும் தான் நான் இப்போ அமைதியா போறேன்” என்று மீசையில் மண் ஒட்டவில்லை பிம்பத்தை காட்ட வெகுவாக முயன்று, அதில் தோற்றவராய் குழப்பத்துடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவரிடம் இருந்தும், மற்ற அமைச்சர்களிடமும் இருந்து சற்று தனிமை கிடைத்ததும், உதயன் முதலில் அழைப்பு விடுத்தது வருணன் தேவராஜனுக்கு தான். 

வருணன் யார் அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தாரோ தெரியாது. ஆனால் அலைபேசி ஒலியெழுப்பிய உடனே ஒரு நொடி கூட தாமதிக்காமல் அந்த அழைப்பை ஏற்றிருந்தார். உதயன் கூட உண்மையிலேயே அழைப்பு ஏற்கப்பட்டு விட்டதா என்ற வியப்புடன், ஒரு முறை அலைபேசியை திருப்பிப் பார்த்து, மீண்டும் காதில் வைத்தார். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!