Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 14.2

பூவே 14.2

 

 

 



Advertisement

 

காலையில் எப்பொழுதும் கேட்கும் அன்னையின் சத்தம் கேட்காமல், யோசனையோடு கீழே இறங்கி வந்தவன் வேலுவின் செய்கையை கண்டு சிரிப்புடன் கடைசி படியில் நின்றான் வெற்றி.

 

Advertisement

“இங்க பாரு உனக்கும், எனக்கும் பேச்சு இல்லை! சொல்லிட்டேன்.. கொஞ்சம் ஒதுங்கி தான் போயேன்! தெனமும் வழி விடமா என்னை முறைச்சு பாக்குறதே! உனக்கு வேலையா போச்சு” என்று காளைகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தாள் வேலு.

Advertisement

 

‘அந்த ஜீவனோ! நீ என்னவோ பேசிக்க’ என்ற ரீதியில் அவளை அலட்சியமா பார்த்து வைத்தது.

 

Advertisement

“பாட்டி வந்தா என்னை தான் திட்டுவாங்க, தள்ளி தான் போயேன் டா!” என்று சற்று குரலை உயர்த்தி சொன்னாள்.

 

அவள் முகபாவனையில் என்ன கண்டதோ, காளை தன் தலையை சின்னதாக ஆட்டி வைத்தது.

 

அது தன்னை முட்டிடுமே என்ற பயத்தில் பின்னுக்கு வந்தவள் கீழேயிருந்த சாணி மீது காலை வைக்க, வழுக்கி கீழே விழப்போனாள்.

 

“மாமா!” என்ற சத்தத்துடன், கையிலிருந்த சாணிக் கூடையை கீழே போட்டாள்.

 

அவள் மீதே பார்வையை வைத்திருந்தவன், அவள் மிரள்வதை கண்டு அருகே வரவும், அவள் வழுக்கி விழ பார்க்கவும்,

 

சட்டென அவள் இடையில் கை கொடுத்து தாங்கிப் பிடித்தவன்.

“ஏய்… பாத்து!” என்று பதறினான் வெற்றி.

 

கண்களை இறுக மூடியிருந்த வேலு, சில நொடிகள் கழித்தே தான் கீழே விழவில்லை என்பதை உணர்ந்தாள்.

 

மெல்ல கண்களைத் திறந்தவள், தன்னைத் தாங்கியிருந்த வெற்றியை பார்த்தாள்.

 

சில நொடிகள் ஒன்றுமே புரியவில்லை , இவ்வளவு கிட்டத்தில் வெற்றியின் முகத்தை பார்த்தது பார்த்தபடி இருக்க..

 

“மருதாணி வெயிட் தாங்கலடி கொஞ்சம் நேரா, நிக்குறீயா” எனக் சிரித்தபடி அவளை பார்த்து சொல்ல,

 

அவன் குரலில் , நிகழ்வுக்கு வந்தவள்.. அவன் கைவளைவில் இருந்து விலகி நின்று! அவனை பார்த்து முறைத்தாள்.

 

“ஏய்! எதுக்கு என்னை முறைக்குற? நீ கீழே விழாம புடிச்சதுக்கு ஒரு நன்றி கூட சொல்லல” என்றான், கைலியை ஏற்றி கட்டிக்கிட்டு.

 

மீண்டும் அவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவள்.. “யாரு, நா குண்டா இருக்கேனா? நானே முருங்கக்காவுக்கு கை ,கால் முளைச்ச மாறி இருக்கேன்னு.. பாட்டி திட்டுது”  என்று தள்ளி நிற்க,

 

“ஏய்! பாத்து மறுபடியும் வழுக்க போகுது.. இந்த தடவை நா புடிக்க மாட்டேன்” என்றான் சிரிப்புடன்..

 

“பரவாயில்லை , என்னை புடிக்க வேணாம். நா உங்களையும் சேர்த்து கீழே தள்ளி வைக்குறேன்” என்றாள் அவன் அருகே நெருங்கி,

 

அவளின் நெருக்கம் அவனுக்கு  தான் அவஸ்தையாக இருந்தது.. சற்று முன்பு சேர்த்து பிடித்த கொடியிடையின் குறுகுறுப்பு வேறு! அவனை ஒருவழியாக்கி இருக்க. அவள் விலகி நின்றதில் தான் சற்று தெளிந்து வந்தான்..

 

இப்போது மீண்டும் அவனை நெருங்கி வந்தவள். அவன் நெஞ்சை தோட்டது அவளது தலை,

 

நம்பியார் போல் தன் இரு கைகளையும் சேர்த்து தேய்த்து  அவன் வயிற்றில் லேசாக குத்தினாள்..

 

“ஹா” என்ற சிரிப்புடன், “ஏய்! மருதாணி, குத்துறது தான் குத்துற வேகமா குத்து அப்பதான் வலிக்கும்” என்றான்..

 

“மாமா” என்றாள் சத்தத்துடன்.

 

“அவள் வாயில் கை வைத்தவன். ஏன்? கத்துற”,

 

“நீ! என்னை ‘மருதாணி’னு  கூப்பிட்ட”என்றாள் சந்தோஷத்தில்..

 

“அப்படியா” என்று அவன் அதிசயமா கேட்டு நிற்க..

 

“ஆமா! மாமா கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கழிச்சு கூப்பிடுற நீ” என்று துள்ளி குதித்தாள்..

 

“ஏய்! விழ போற” என்றான் சற்று கடினமாக,

 

“போ ,மாமா நா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு.. உனக்கு சொன்னா புரியாது” என்றவள் கீழே குனிந்து கூடையை எடுத்தவள் திரும்பி பார்க்க,

 

‘அந்த காளையோ! இவர்களின் கூத்தை தான் பாத்திருந்தது.. உனக்கு தான் ஆள் இருக்கா, எனக்கும் இருக்குன்னு சற்று தள்ளி இருந்த பசுவை நாக்கால் தடவி கொடுத்தது..

 

அந்த பசு எந்த கடுப்பில் இருந்ததோ! அருகிலிருந்த காளையை வாலாலே அடித்துக்கொண்டிருந்ததை ‘ பார்த்த வேல்விழி வாய்விட்டு சிரித்தாள்..

 

‘மாட்டு தொழுவம் பனையோலை கொண்டு தடுப்பு கட்டியிருக்க, அதிலிருந்த பனையோலை கறுக்கு வெளியே நீட்டிருந்ததை சரி செய்தவன் காதில் இவளின் திடீர் சிரிப்பு சத்தம் கேட்டு திரும்பினான்..

 

“எதுக்கு வேலு காலையிலே பேய் மாறி சிரிக்குற” என்றான் அவளை பார்த்து..

 

அவள் ‘காளை பண்ணதை சொல்லி’ மீண்டும் சிரிக்க ,

 

“போதும், யாராவது சத்தம் கேட்டு எட்டி பாக்க போறாங்க!  வந்த வேலையை பாரு” என்றவன் வீட்டை சுற்றி பார்த்தான்..

 

‘இருவரும் இணைந்து நிற்பது மற்றவர் பார்வைக்கு விருந்தானால், ஊர் வாய்க்கு அவுலாக மாறி நிற்குமே’ என்ற கவலை அவனுக்கு..

 

“மாமா நா வந்த வேலையை முடிக்கணும்னா! காளைகளை கொண்டுபோய் தோட்டத்துல கட்டு” என்றவள்  வெளக்குமாத்தை கொண்டு அங்கே சிதறிக்கிடந்த வைக்கோலை ஓரமாக பெருக்கி  தள்ள தொடங்கினாள்..

 

வெற்றியும் ‘காளைகளின் மூக்குணாங்கயிறை பிடித்து சற்று தள்ளியிருந்த தோட்டத்தில் கட்டி திரும்பி வந்தவன்..

 

கை, கால் முகங்களை கழுவி துண்டால் துடைத்துக்கொண்டு ‘நேற்று முடிச்சி போட்டிருந்த விதை நெல்லை பிரிந்தவன் விழிகளில் மெலிதாய் சிறு நீர் படலம்கொண்டது..

 

எல்லா விதைகளுமே துளிர்விட்டிருந்ததை பார்த்து சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தையே வரவில்லை,

 

“வேலு” என்றான் சத்தமாக,

 

அவளும் சாணியை குழியில் கொட்டி, அவனை நோக்கி வந்தவள் “என்னாச்சு மாமா” ,

 

“இங்க பாரு” என்று அந்த சாக்கு பையிலிருந்த விதை நெல்லை நன்றாக பிரித்து காட்ட ,

 

அவளுக்கும் , வெற்றியின் உணர்வை தான் கொடுத்தது.. சந்தோஷத்தில் இருவருக்கும் பேச்சு மறந்து போன நிலை தான்..

 

இருவரும் நிகழ்வுக்கு வர முழுதாக இருநிமிடம் எடுத்துக்கொண்டது..

 

“மாமா, எல்லாமே மொளை விட்டிருக்கு” என்றாள் விதைகளை கைகளில் அள்ளி,

 

“ஆமாம் வேலு! மனசு  சந்தோஷமா இருக்கு” என்றான் புன்னகையுடன்..

 

‘அவன் சிரிப்பை கண்டவளுக்கு பேச்சே இல்லை,  எப்பவும் விதைக்குற விதை நெல் தான் அதுக்காக இவ்வளவு சந்தோஷம் வருமா..?’ என்ற யோசனைகளுடன் அவன் முகம்  பார்த்தாள்..

 

பெண்ணவளுக்கு எப்படி தெரியும் அவன் சந்தோஷத்தின் அளவை, எப்பவும் மொளை விடுற விதை நெல் தான்.. ஒரு நாள் முழுவதும் ஊறிய விதை நெல் பெரும்பாலும் அழுகி தான் போகும்..

 

அந்த பயத்துடன் விதை நெல்லை முடிபோடும் போது! எத்தனை வேண்டுதல் வைத்தான் என்பது அவன் மட்டுமே அறிந்த இரகசியமாயிற்றே..?

 

இப்படி இருவரும் இருவேறு யோசனையில் இருக்கும் போது தெருவில் கொழா தண்ணீ வந்ததை , சத்தமாக சொல்லி சென்றாள் வைதேகி…

 

அந்த சத்தத்திலே இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க வார்த்தைக்கு பஞ்சமாகி  போனது..

 

இருவரும் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தனர்…

 

“அப்ப‌ இன்னைக்கு வெதைச்சிடுவிங்க தானே மாமா” என்று அவன் முகம் பார்த்தாள்..

 

“விதைச்சிடுவிங்க இல்லை , விதைக்கபோற நீ” என்றான்..

 

“நானா” என்று தன் நெஞ்சில் கை வைத்தாள்..

 

‘ஆமாம் என்று அவன் தலையாட்ட’,

 

“வேணாம் மாமா… எனக்கு பயமா இருக்கு. வெதை நெல்லுக்கே ஒருவழி ஆயிடுச்சு. எப்பவும் நீங்கதானே விதைப்பீங்க… அதே மாதிரி நீங்களே பண்ணிடுங்க.”

 

“இல்லை, நீ தான் விதைக்கபோற, சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கெளம்பனும்” என்றான் உறுதியாக,

 

அவனை பாவமாக பார்த்தவளோ! “உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி மாமா.. பாட்டியும் , பெரியம்மாவும் என்னை வாயிலே மென்னு திண்ணுடுவாங்க” என்று திண்ணையில் போய் அமர்ந்துக் கொண்டாள்..

 

அவள் அருகே வந்து சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன்.. அவள் கைகயை தன் கைக்குள் வைத்தபடி அவள் முகம் பார்த்து, “இன்னும் எத்தனை நாளைக்கு அவங்ககிட்ட பேச்சு வாங்கணும்னு இருக்க மருதாணி” என்றான்.

 

“நா பேச நெனைச்சாலும். அவங்ககிட்ட என்னால் பேச முடியல மாமா.. ஒருவேளை நீ எனக்கு நெருக்கமா  இருக்குற மாறி தோணுது போல, அவங்ககிட்ட என்னால பேச முடியாது மாமா” என்றாள்..

 

அவள் சொன்னதில் அவனுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மௌனமாக சிரித்துக்கொண்டான்..

 

அவளை பார்த்து “சரி, அதை அப்பறம் பாத்துக்கலாம்.. எனக்கு முட்டை எடுத்துட்டு வா” என்று எழுந்து நிற்க,

 

“ஊவாக், பச்சை முட்டையா..?” என்று முகத்தை சுழித்தாள்..

 

“என்னவோ! நீ குடிக்கப்போற மாறி முகத்தை சுழிக்குற! என்று அவள் மூக்கை பிடித்து கிள்ளி வைத்தான்..

 

“ஹா” என்று மூக்கை தேய்த்தவள், நாலாம் பச்சை முட்டை சாப்பிட மாட்டேன்”‌ என்று அடுப்பங்கரைக்குள் சென்றவள் பானைக்குள் இருந்த , மூன்று பச்சை முட்டையை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்..

 

“என்ன கையில் கொடுக்குற  ஒடைச்சி கொடு” என்றான் அவளை பார்த்து..

 

“நீ முட்டையை குடிச்சா குடி குடிக்காட்டி போ மாமா.. என்னால் ஒடைக்க முடியாது” என்று உள்ளே போக பார்த்தவளை, கை பிடித்து நிறுத்தினான்..

 

என்ன என்று அவனை திரும்பி பார்த்தாள்..

 

“நீ ஒடைச்சி தரவேணாம். நானே ஒடைச்சி குடிக்கிறேன்.. அதை நீ பாத்து வச்சிக்கோ! உனக்கு பின்னாடி உதவியா இருக்கும்” என்று விசமமாக சிரித்து சொன்னான்..

 

“நா, எப்பவுமே முட்டை குடிக்க மாட்டேன்..‌” என்று திண்ணையில் மீண்டும் அமர்ந்துக்கொண்டாள்..

 

வெற்றி முதலில் ஒரு முட்டையை  எடுத்தவன் ஒரு விரலால் தட்ட மேல் ஏடு கீழே விழுந்ததை, அதிசயம் போல் பார்த்து வைத்தாள்..

 

அவன் தலையை சாய்த்து அந்த முட்டையை ஒரு மூச்சில் குடித்தான்.. அதே மாறி மீதமிருந்த இரண்டு முட்டையும் குடித்து, அவளை பார்த்து எப்படி என்று கண்களாலே கேட்க..

 

அவளுக்கு பேச்சு இல்லாமல் போனது அவனின் செய்கையில், காலையிலிருந்து அவனின் செயல்கள் அவளுக்குள் என்னவோ! செய்தது…

 

இவள் அசையாமல் இருப்பதை பார்த்தவன்.

 

வலிக்காமல் தலையில் லேசாக தட்டினான்..

 

“ஹாங்” என்ற சத்தத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

 

“என்ன மாமா” என்றாள் பேந்த பேந்த முழித்துக்கொண்டு,

 

“காலையிலே! என்ன யோசனை தண்ணீ பிடிக்க வைதேகி அண்ணி கொரல் கொடுக்குறாங்க பாரு?” என்றான்..

 

“இதோ! மாமா” என்று எழுந்தவள் அங்கிருந்து வேகமாக ஓடினாள்..

 

அவளின் ஓட்டம் கண்டு இவனுக்கு தான் சிரிப்பு வந்தது…

 

சட்டையை மாட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தான்..

 

அப்போது தான் எழுந்து அமர்ந்திருந்த அப்பத்தாவை கண்டு,

 

அவர் அருகில் அமர்ந்தவன் “அப்பத்தா, அம்மா எங்க ! ஆளை காணல” என்றான்…

 

“அவ பொண்ணுட்டூக்கு போயிருக்கா ப்பா” என்று பேரனை பார்த்தார் காலை நீவி கொண்டு,

 

“என்ன காலையிலே சரசக்கா வீட்டுல பஞ்சாயத்தா, மாமாகூட இராத்திரி வீட்டுக்கு வரலியே” என்று கேட்டுக்கொண்டு, மருந்து கொண்டு காலில் தேய்த்தான்..

 

பேரன் தன் காலை பிடிப்பதை கண்டு ” நீ வூடுய்யா, நானே தேய்ச்சிக்கிறேன்” என்ற அப்பத்தாவை தடுத்து ,

 

அவரின் காலுக்கு முழுவதும் மருந்தை தேய்த்து விட்டு தான் எழுந்து நின்றான்..

 

“சரி அப்பத்தா நா போய் அம்மாவை கூட்டிட்டு வரேன் . வெதை நெல் மொளைவிட்டுடிச்சு”என்று வாசலை கடக்க போனவன் அவர் சொன்னதை கேட்டு அவன் கால் அந்தரத்திலே நின்றது..

 

தன் காதில் சரியாக தான் விழுந்ததா? என்று அப்பத்தாவை திரும்பி பார்க்க,

 

“அவ மூத்த பொண்ணை பாக்க போயிருக்கா புருஷனோட” என்றார்..

 

அவர் சொன்னதை முழுதாக காதில் வாங்கியவன்.

 

அவரை நிமிர்ந்து பார்த்தான்…

 

“என்ன திடீர்னு! பெரியக்கா வீட்டுக்கு போயிருக்காங்க” என்றவன். குரலில் என்ன உணர்வு இருந்தது என்று அவன் மட்டுமே அறிந்த இரகசியம்..

 

“தெரியலய்யா, இரா முழுக்க தூங்கவே இல்லை! எம்புள்ளைகிட்ட ஒரு பொலம்பி தள்ளிட்டா? பொண்டாட்டி கண்ணை கசக்கிட்டா தான்.. உங்கப்பனுக்கு தாங்காதே! அதான் மொத வண்டிக்கு கெளம்பிட்டாங்க, வெதையயை உன்னையே! வெதைக்க சொல்லிட்டா” என்று நடந்ததை முழு மூச்சாக சொல்லி முடித்தார்..

 

அவனுக்கு தான் அப்பத்தா சொன்னது எதுவும் காதில் விழுந்ததா இல்லையா! என்று புரியாமல் நின்றவனுக்கு பொங்கலுக்கு சீர் கொண்டு போயிருந்த நாள் சட்டென நினைவில் வந்து நின்றது.

 

“ஒரு வா சாப்பிட்டு போடா…” என்று சிரிக்க முயன்ற அக்காவின் முகமும், அந்த சிரிப்பை மீறி கலங்கியிருந்த அவள் விழிகளும் அவன் மனக்கண்ணில் தெளிவாக தெரிந்தது.

 

“இந்த வீட்டு பெண்களுக்கு இதுதான் விதியா..?” என்ற எண்ணம் மனதை அழுத்த, மேலும் அங்கே நிற்க முடியாமல் வேலு தண்ணீர் குடத்துடன் வருவதை கண்டவன் யாரிடமும் பேசாமல் வெளியேறினான்.

 

வேலு , மாமனை குழப்பத்துடன் பார்க்க..

 

 

அப்பத்தா, பேரனின் மனம் புரிந்து அமைதிகொண்டவர்..

குழப்பத்துடன் நின்ற பேத்தியை கண்டு..

 

“ஏம்த்தா, சுமையை தூக்கிட்டு நிக்குறவ! உள்ள கொண்டு போய் வைத்தா” என்றார்..

 

அவளும் குடத்துடன் உள்ளே  நகர்ந்தாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!