Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 7

ஆகாயமே என் ஆதாரமே 7

வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்ததும் ஜானகியின் மனதுக்குள் ஆசைகள் குமிழிடத் தொடங்கியது. கல்யாணக் கனவுகள் அவளது இரவுகளை எடுத்துக்கொண்டது.அவளுக்கு கணவன் பார்ப்பதற்கு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசனைகள் இல்லை. தன்னை மனதார காதலிப்பவனாக இருக்கவேண்டும் என்று மட்டும் மனதில் ஆசை உண்டு .மற்றபடிக்கு கருப்பாக, பார்ப்பதற்கு சுமாராக என்பதெல்லாம் அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத விஷயங்கள்.

தவிரவும் சின்ன வயதில் இருந்தே அவள் அம்மா ராதா இவளிடம் அங்கலாய்த்த விஷயங்கள் ,”நீ பார்க்க இன்னமும் கொஞ்சம் கலராவது இருந்திருக்கலாம். சீதா அளவுக்கு இல்லேன்னாலும் இன்னமும் கொஞ்சம் அழகு இருந்தா,கல்யாண மார்க்கெட்டுல சீக்கிரம் மாப்பிளை கிடைக்கும். என்னமோ..உன்னோட உயரம் வேறே.அதுக்கு தகுந்தா மாதிரி உன்னை விட உயரமா பாக்கணும். ப்ச்..ஒரு டாக்டரோ,இன்ஜினியரோ பாக்கணும்னா நீயும் அவ்ளோ படிச்சிருக்கணும்னு அந்த பசங்க மனசுல இருக்கும் தானே. உனக்கு படிப்பே வரல. இது போதாதுனு படிப்பும் வரல.”என்பதான மொழிகள் அவளுக்கு மாப்பிள்ளை மீதான எதிர்பார்ப்புகளை குறைத்து விட்டிருந்தது.

ஆனால் திருமண சந்தையில் மாப்பிள்ளை தேடும் பொழுது ராதா எந்த இடத்திலும் தன்னை கம்பிரமைஸ் செய்து கொள்வதாக இல்லை.பெண்ணுக்கு நல்ல மணமகனாகதான் பார்க்க வேண்டும் என்று அவ்வளவு அலசினாள் . தங்களது பெண் பார்க்க சுமார் தான் என்றாலும் ,ஜோசியர் சொன்னபடிக்கு ஜாதகம் நன்றாகவே இருக்கிறது. இவளை திருமணம் செய்து கொள்பவன் வாழ்க்கை முன்னேறும் .பெண்ணின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்கும் மாப்பிளை வீட்டாருக்கும் இது புரியும்.அப்படி இருக்கும் பொழுது நிதானமாக தகுந்த இடம் பார்ப்பது என்று நிதானமாகவே இருந்தாள் .



Advertisement

நிறைய வரன்கள் வந்தது. எல்லாவற்றையும் எல்லாம் ராதா பொருத்தம் பார்க்க எடுக்கவில்லை. குடும்பம்,வேலை ,உடன்பிறந்தவர்கள், சொத்து ,படிப்பு என்று ஆராய்ந்துவிட்டு தான் பொருத்தம் பார்க்க எடுத்து செல்கிறாள். பத்து ஜாதகங்கள் வந்தால் அதில் ராதாவின் தெரிவில் மூன்று தான் தேறும்.

இதுவரை உண்மையில் ஜானகி ஒரு மாப்பிள்ளை புகைப்படத்தையும் பார்த்தது இல்லை. அதை அவள் கண்டுகொள்வதாகவும் இல்லை. காலையில்  கொஞ்சம் வீட்டு வேலைகள் செய்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பிவிடுவாள். மாலையில்  வீட்டுக்கு வந்தால் தனது அறைக்குள்ளேயே இருந்துவிடுவாள். இரவுக்கு ஏதாவது உதவி செய்யட்டுமா என்று வந்து நிற்கும் மகளிடம் ‘நானே பார்த்துக்கறேன்’ என்று சொல்லி அனுப்பிவிடுவாள் ராதா.

சீதாவுக்கு அலுவலகத்தில் வேலைகள் அதிகம். சம்பளம் அதுவும் அதிகமே! கிருஷ்ணனின் சம்பளம் போல மூன்று மடங்கு அதிகமாக வாங்கினாள் . வேலை அது நடு ஜாமம் கழிந்தும் முடியாது.மாலை ஆறு மணிக்கு வீடு வந்து மீண்டும் வேலையை தமது மடக்கிக்கணினியில் தொடருவாள் .நடுவில் உள்ளே வந்து அம்மாவுக்கு ஏதாவது உதவிகள் செய்வதும் அவளது வழக்கம். மூத்தவளை அடுக்களைக்குள் அனுமதிக்ககாத ராதா இளையமகளை ஒன்றும் சொல்வது இல்லை.

Advertisement

ஜானகி எதையும் கண்டுகொள்வது இல்லை.அவளுக்கு அம்மாவின் மனது தெளிவாகவே புரிகிறது.இந்த வீடு,குடும்பம் எல்லாம் அம்மாவுடையது. அவள் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க போவது இல்லை. சீதா ஆரம்பம் முதலே மனதுக்கு பிடித்த மகள் என்பதால் வித்யாசம் பாராட்டுவது இல்லை. எனக்கென திருமணம் முடிந்து கிடைக்கும் குடும்பம்தான் என்னுடையது என்று புரிந்துகொண்டவளாக அமைதியாகவே கடந்தாள் .

Advertisement

இதில் அதிக அளவில் மனம் கஷ்டப்படுவது கிருஷ்ணன் தான்.மீண்டும் மூத்த மகளுடனான நேரம் அவரிடமிருந்து பறிக்கப் பட்டதாக உணர்வு.மகள் திரும்பவும் அதிகம் சிரிப்பதை,அரட்டை அடிப்பதை, சமைப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டாள் .அவருக்குள் மனைவியை ஒன்றும் சொல்ல முடியாத ஆயாசமும் சலிப்பும்.

தினமும் விடிகாலையில் எழுந்து காய்கறிகள் நறுக்கி வைத்துவிடுகிறார் கிருஷ்ணன். ஜானகியும் இவருமாக இருந்த நேரத்தில் பழகியது.இப்போது மனைவிக்காக செய்ய தொடங்கிவிட்டார். இதையெல்லாம் பெரியதாக ராதா கண்டுகொள்வது இல்லை.

Advertisement

மனைவியின் வார்த்தைகளுக்காக கிருஷ்ணனும் எதுவும் சொல்வது இல்லை.ஜானகி அலுவலகத்திலிருந்து வரும் பொழுது ஏற்கனவே ஒருமுறை வெஜிடபிள் கட்டர் வாங்கி வந்திருந்தாள் . அதில்தான் கிருஷ்ணன் காய் நறுக்கி கொடுப்பார்.ஜானகி வேகமாக சமைப்பாள் .ராதா வந்தவுடன் செய்த முதல் வேலை அதை எடுத்து ஓரமாக வைத்தது தான் .”இதென்ன கன்றாவி , காயெல்லாம் ஒண்ணு அருவாள்மனைல நறுக்கணும் ,இல்ல…கத்தி உபயோகிக்கணும். புதுசுபுதுசா எதெதையோ  வாங்கி என்னோட கிச்சனே குப்பைத்தொட்டி ஆக்கி விட்டீங்க அப்பாவும் மகளுமா என்று ஒரு புலம்பல். அதிலிருந்து கிருஷ்ணன் கத்தியில் நறுக்கி கொடுக்கிறார். ஜானகி ஒரு தோள்குலுக்கலுடன் கடந்துவிட்டாள் .

நடுவில் சுதா அத்தையும் மாமாவும் வந்துவிட்டு சென்றார்கள். மாமா ரிடையர் ஆகிவிட்டார். அவர் தனியாக வீட்டில் இருப்பார் என்று அத்தையும் விஆர்எஸ் வாங்கிவிட்டு இருவருமாக கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள். அவர்களது இரண்டு  பிள்ளைகளும் தம்தம் குடும்பத்துடன் நன்றாகவே இருக்கிறார்கள். ஒரே கேம்பஸ். தனித்தனி குடும்பம்.ஆனாலும்,பிரியாமல் ஒன்றாக. பெற்றவர்களுக்கும் தனிமை இல்லை.பிள்ளைகளுக்கும் பெற்றவர்கள் கண் முன்னே இருப்பதால் கவலை இல்லை. சுதா அத்தை அதை சொல்லி சந்தோசப் பட்டார்கள். ராதா பதில் எதுவும் சொல்லவில்லை.அவள் மனதில் என்ன இருக்கிறதோ!

வந்தவர்கள் ஜானகியின் திருமணம் பற்றி கேட்க,”எங்கே சுதா, ஒண்ணும் சரியாய் வர மாட்டேங்குது. இந்த பொண்ணோ பாக்கவும் சுமார்.படிப்பும் சுமார். ப்ரொபெஷனல் பையனை பார்த்தா அவனோட எதிர்பார்ப்பு அவனுக்கு சமமா படிச்சிருக்கணும்னு சொல்றாங்க.இல்ல நிறைய நகை போடணும்னு எதிர்பாக்கறாங்க. எல்லாம் சரியாய் இருந்தா ஜாதகம் ஒத்துப் போகல”என்று நொந்து கொண்டாள் .கிருஷ்னன் ராதையை பார்த்துக் கொண்டிருந்தார்.பதில் எதுவும் சொல்லவில்லை. மூத்த மகளை பற்றி இப்படி பேசுவது அவருக்கு பிடிக்கவில்லை.ஆனாலும் ராதையிடம் வாய் திறந்தால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டி இருக்கும் என்று பேரமைதியாய் இருந்து கொண்டார்.

அவர்கள் வீட்டுக்கு வரும்பொழுது பெண்கள் இருவரும் வீட்டில் இல்லை.இன்னொருநாள் வருவதாக சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்பி சென்றுவிட்டார்கள். எதையோ முணுமுணுத்து விட்டு ராதா ஒயர்கூடை பின்ன சென்றுவிட்டாள். இப்போதெல்லாம் இது போன்று கூடை முடைவது , உல்லன் நூலை வைத்துக் கொண்டு ஏதாவது பின்னுவது என்று ராதாவின் நேரம் நகர்கிறது.

கிருஷ்ணன் கிளம்பி வேலைக்கு சென்றுர்விட்டார். வீடு அமைதியாக இருந்தது. அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஒலித்தது  தொலைபேசியின் சப்தம்.  பெண்கேட்டு மணமகன் வீட்டிலிருந்து அழைத்து இருந்தார்கள்.பேசியது ஒரு பெண்தான். பையனின் அம்மா என்றார் அவர்.

ராதா சுறுசுறுப்பானாள் . “சொல்லுங்கம்மா… ‘என்று தொடங்கி பேசத் தொடங்கினாள். அவர்கள் கூறிய விபரகங்களுக்கு தொடர்பான கேள்விகள். பையனின் அம்மாவோ மகனுக்கு எப்படியாவது சீக்கிரம் திருமணம் முடிந்துவிட வேண்டும் என்று தான் பேசினார்கள்.

“என்னோட பையன் பேரு ராகவன்.வயஸு முப்பதொன்னு ஆகுது.முப்பது வயஸுக்கு மேலே தான் கல்யாணம் செய்யணும்னு ஜோசியர் சொன்னதுனாலே இவ்ளோ லேட்டாகிடுச்சு. சி ஏ முடிச்சிட்டு இப்போ ஒரு பிரபல நிறுவனத்துல வேலையா இருக்கான். சிஏ முடிக்கணும்னு வெயிட் பண்ணதும் கல்யாணத்துக்கு பாக்க லேட்  ஆனதுக்கு ஒரு காரணம் தான். சம்பளம் நல்லாவே வருது.

ராதா யோசித்தாள் . “அதெல்லாம் சரிங்க. பையனோட ஜாதகம் அனுப்புங்க. பொருத்தம் பாக்கறோம். அதுலேயே விபரங்களும் அனுப்புங்க. பொருத்தம் இருந்தா சீக்கிரமா நடக்கட்டுமே! என்றாள் . எதிரில் பேசிக்கொண்டிருந்த பெண் ‘சரி’ என்றுவிட்டு வைத்துவிட்டார்.அவருக்கு அலுத்துப் போயிருந்தது.

அடுத்தநாளே ஜாதகமும் விபரங்களும் ராதாவின் கைகளுக்கு கூரியரில் வந்து சேர்ந்திருந்தது. இப்போதுதான் இரண்டு ஜாதகங்கள் வந்திருக்கிறது. ஐந்து அல்லது ஆறு ஜாதகங்கள் வந்த பிறகுதான் ராதா ஜோசியரிடம் செல்வது.அதனால் வந்த ஜாதகத்தை சாமி அறையில் வைத்துவிட்டு வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள். அடுத்து வந்த நாட்களில் பெரிய திருப்பங்கள். அதில் பெரியது சீதாவுக்கு ஒருவருஷத்திற்கு பிரான்ஸ் ப்ராஜெக்ட் ஒன்று கிடைத்திருக்கிறது. விசா எல்லாம் வந்தாகி விட்டது. அடுத்த பத்து நாட்களில் அவள் அங்கே ரிப்போர்ட் செய்யவேண்டிய நிலை. அதனால் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு அம்மாவுடன் ஷாப்பிங் கிளம்பிவிட்டாள்.

அவளுக்கு தேவையவற்றை வாங்கி அடுக்குவதும்,பொடி வகைகள் செய்து பேக் செய்து வைப்பதுமாக நேரம் பறந்தது.பத்து நாட்கள் என்பது மூன்று நாட்களாக சுருங்கி விட ஒரு காரை ட்ராவெல்ஸில் எடுத்துக்கொண்டு ஒரு நாள் திருப்பதியும், இனொரு நாள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கலிட்டும் வந்தார்கள். சீதாவுக்கு இதெல்லாம் பெரிய அலைச்சல்கள் தாம். அம்மா சொன்னால் கேட்கமாட்டாள் என்று ராதா சொல்வதற்க்கு எல்லாம் அசைந்து கொடுத்தாள் . எப்போது விமானத்தில் ஏறி அமர்ந்து கொள்வோம், ஓய்வு கிடைக்கும் என்று இருந்தது பெண்ணுக்கு.

ஜானகி, பிரான்ஸ் கிளம்பும் தங்கையை ஒருமுறை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் . “நல்லபடியா போயிட்டு வா. நல்லா வேல பண்ணிக்கொடு.ப்ரோமோஷன் வாங்கணும். ஆல் தி பெஸ்ட் “என்றதுடன் நிறுத்திக் கொண்டாள் . சீதாவுக்கு பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைத்தது.வெறுமனே ‘சரிக்கா’ என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.கிருஷ்னனும் ராதையும் சீதாவை ஏர்போர்ட்டில் கொண்டுபோய் விட்டு வந்தார்கள். ராதாவுக்கு மனதின் பலம் குறைவது போல உணர்வு.சீதாவை விட்டு எப்படி இருப்பது என்று அழுகை வந்தது.அதற்காக பெண்ணை முன்னேற விடாமல் பிடித்து வைத்துக் கொள்ளவா முடியும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாள் . கிருஷ்னன் வீட்டுக்கு வந்தவர் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு தூங்கி எழுந்தவர் மதியம் வேலைக்கு கிளம்பிவிட்டார். மதிய ஷிப்ட் வாங்கிக்கொண்டிருந்த ஜானகியும் வேலைக்கு கிளம்பி சென்றாள் .

மாலை ஆறு மணி ஆகும் சமயத்தில் ராதாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. சீதா வேலை விட்டு வரும் நேரம் இது. இப்போது அவளது விமானம் துபாய் சென்று சேர்ந்திருக்கும்.அங்கிருந்து பிரான்ஸ் என்று சொல்லிக்கொண்டு விளக்கேற்றினாள் ராதா. பிரான்ஸ் சென்று சேர்ந்தவுடன் வீட்டுக்கு அழைத்து சொல்லிவிட்டாள்  சீதா. அடுத்த ஒருவாரம் ராதா சமாளிக்க முடியாமல் தவித்தாள். கையில் வைத்து வளர்த்த பெண். இப்போது கண் காணாத தேசத்தில் என்று மருகியது அவளது மனம்.

வீடு வழக்கம் போலத்தான் சென்று கொண்டிருந்தது. இன்னமும் இரண்டு ஜாதகங்கள் வந்திருந்தது. அவற்றை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் செல்லவேண்டும் என்று ராதா நினைத்துக் கொண்டே இருக்கும் பொழுது ஏற்கனவே ஜாதகம் அனுப்பியிருந்த சிஏ வரனின் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்து விட்டது.

“சாரி, இன்னும் ஜோசியரை பார்க்கவே போகலை.நல்ல நாள் பார்த்து தான் போகணும். இன்னிக்கு நாளைக்கு அஷ்டமி -நவமி. அப்புறம் சனிக் கிழமை. ஜோசியர் ஞாயிற்று கிழமை இருக்காரான்னு கேட்டுட்டு போகணும்” என்றாள் ராதா.எதிரில் பேசிக்கொண்டிருக்கும் பெண்ணின் பொறுமை பறந்தது.காட்டிக்கொள்ளாமல் பேசினார்.

“ஓ..அப்படியா …சரி.பார்த்துட்டு சொல்லுங்க. நீங்க பார்த்துட்டு கூப்பிடுவீங்கன்னு வெயிட் பண்ணினோம். பதினஞ்சு நாள் ஆகிருச்சுங்களே! அதான் நானே விசாரிப்போமேன்னு கூப்பிட்டேன்”என்றுவிட்டு வைத்துவிட்டார்.அவரது குரலில் ஒரு சலிப்பும் சோர்வும் இருப்பதை ராதா புரிந்துகொண்டாள் .

“இதுக்கெல்லாம் நாம என்ன செய்யமுடியும்?அவங்களுக்கு வேணும்னா வேறே வரன் பார்த்துக்க வேண்டியது தான்.பொண்ணை என்ன எதுன்னு பாக்காமையா கல்யாணம் செஞ்சு அனுப்ப முடியும்?”என்று  அங்கலாய்த்து கொண்டாள் கணவனிடம்.

அவரும் சும்மா இராமல்,”சீதா கிளம்பி பத்து நாள் ஆயாச்சு.நீ ஜோசியரை பார்த்துட்டு வர வேண்டியது தானே. இவளுக்கு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கவேணாமா..சீதா பற்றியே கவலை பட்டு யோசிச்சா,இந்த பிள்ளையை யாரு பார்ப்பா.இவளும் நம்ம மக தானே?நாளைக்கு எந்த காரணமும் சொல்லாம காலைல ராவு காலம் முடிஞ்ச உடனே கிளம்பிரு.ஆபிஸ் போகுற வழில உன்னைய ஜோசியர் வீட்டுல விட்டுடறேன்”என்று விட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டார்.

ஜானகி தனது அறைக்குள் இருந்துகொண்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் . யார் என்றே  தெரியாத அந்த முகமறியா சிஏ வரனுக்காக யோசித்தது அவள் மனம்.அவளையும் அறியாமல் அவனிடம் மையம் கொண்டது இதயம். இதுவரை அவள் எந்த ஆணையும் பற்றி யோசித்தது இல்லை.இது … முதன்முறை.மனமோ, “தெய்வமே,அவரோட ஜாதகமும் என்னோட ஜாதகமும் பொருத்தணும்.அவரோடே எனக்கு கல்யாணம் ஆகிரணும்” என்று பிரார்த்தனை செய்தது.

அடுத்தநாள் காலையிலேயே கணவன் சொன்னபடிக்கு கையில் இருக்கும் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு பொருத்தம் பார்க்க கிளம்பிவிட்டாள் ராதா. இன்று காலை ஆறுமணிக்கே வேலைக்கு கிளம்பிவிட்டாள் ஜானகி.எட்டு மணிக்கு அவளது வேலை ஆரம்பம் ஆகிறது. மனமோ ஜோசியர் என்ன சொல்வார் என்று அடித்துக் கொண்டது.

ஜோசியர் வீட்டில்  மூன்று  ஜாதகங்கள் நன்றாக பொருந்தி இருப்பதாகவும் ,லௌகீக விஷயங்களை வைத்து திருமணம் முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்.கூடவே,”ஆயிரம் பொருத்தம் இருந்தாலும் பையனுக்கும் பொண்ணுக்கும் மன பொருத்தம் வேணும்.அப்போதான் கல்யாணம் நிலைக்கும். பொண்ணுகிட்ட பிடிச்சிருக்கான்னு கேட்டு முடிவு பண்ணுங்கோ”என்று இலவச ஆலோசனை கொடுத்து தட்சிணை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தார் ஜோசியர்.

வீட்டுக்கு வந்த ராதா ,கணவருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல அவரோ,”அப்போ நேரத்தை இனிமே கடத்த வேணா. ஜானகிக்கு லீவு எப்போன்னு கேட்டுக்கோ. மூனுபேருல யாருக்கு முடியுமோ வந்து இந்த வாரம் பார்க்கட்டும். முக்கியமான விஷயம்,பையனை கண்டிப்பா கூட்டிட்டு வரணும். நம்ம பொண்ணும் அந்த பையனும் பேசி பார்க்கணும். பிடிச்சிருந்தா யோசிக்கலாம் என்று சொல்லி வைத்துவிட்டார்.

அந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ஜானகிக்கு விடுமுறை. நாளும் நன்றாக இருந்தது. அதனால் ஒரு ஜாதகரின் வீட்டிலிருந்து வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். அந்த பையன் நல்ல அழகாக இருந்தான். நல்ல வேலை,சம்பளம் . இருவரும் பேசியதில் பையனுக்கு இவளுடன் பொருந்தவில்லை. அவன் நேராக இவளிடமே சொல்லிவிட்டான்,”சாரிங்க..நீங்க ரொம்ப அமைதியான சுபாவம்னு நினைக்கிறேன். நா இன்னும் கொஞ்சம் கலகலப்பா இருக்கணும்னு நினைக்கிறேன்.ஏற்கனவே வேலை பிரஷர் அதிகம்.வீட்டுல மனைவி நல்ல ஜாலி டைப்பா இருந்தா நல்லது. சரிதானே?”

அவனது கூற்றில் உண்மை இருப்பதாக ஜானகிக்கு தோன்றியது. ஆனால்,திருமணம் ஆனால் தானே மனிதனின் உண்மை முகம் தெரியும்? நான் கலகலப்பா இல்லையா என்று இந்த பத்து நிமிஷத்தில் எப்படி கணித்தார்? என்று அவளுக்குள் கேள்வி.

அப்பாவிடம் வந்தவள் ,”சண்டே நல்ல நாளா பாருங்க. நா லீவு போடறேன்.”என்றுவிட்டாள் .அவள் மனம் என்னவோ அவன் வந்தால் பரவாயில்லை என்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!