Skip to content
Post Views: 73

அத்தியாயம்-36
“ஐயோ… ஒரு புல்டோசர் வந்து என் மேல மோதிடுச்சே..! என்னென்ன பார்ட்ஸ் டேமேஜ் ஆச்சோ தெரியலையே..! மதி அக்கா, உனக்கு ராத்திரியில தான் எருமைமாடு தெரியாதுன்னு நினைச்சேன்.. பகல்ல பசுமாடு கூடத் தெரியாமப் போச்சே! மாமா, உடனே இந்த அக்காவை ‘அரவிந்த் ஐ கேர்’க்கு கூட்டிட்டுப் போய் ஒரு சோடா புட்டியை வாங்கி மாட்டுங்க. அதுக்கு முன்னாடி எனக்கு கேசுவாலிட்டியில ஒரு அட்மிஷன் போட்டு ட்ரீட்மெண்ட் பாருங்க..!” என்று வலியால் முனகியபடியே, கஷ்டப்பட்டு எழுந்து நின்று புலம்பினான் அவளது கசின் நந்து என்கிற நந்தகுமார்.
“எப்படியோ நீ மாடுன்னு ஒத்துக்கிட்டல, அதுவே பெரிய விஷயம்! ஓவர் சீன் போடாதடா..” என்றாள் எரிச்சலாக,
Advertisement
குறிப்பாக ஆதித்யாவின் முன்னால் இவன் தன்னை ‘புல்டோசர்’ என்று கூப்பிட்டது அவளுக்கு அத்தனை ஆத்திரத்தை வரவழைத்தது.
ஸ்கூல் பிள்ளைகள் போல் சண்டைப்போட்டுக் கொண்டிருந்த இருவரையும் ஆதி வியப்புடனும் இதழில் சிறு சிரிப்போடும் பார்த்துக்கொண்டிருந்தான். சிறுவயது முழுக்க உடன்பிறப்புகளோ, கசின்களோ இல்லாமல் முற்றிலும் தனிமையாகவே வளர்ந்தவன். சண்டை போடுவதை விடுங்கள், ஒரு நட்பான உறவைப் பகிர்ந்துகொள்ளக் கூட அவனுக்கு யாரும் இருந்ததில்லை… உண்மையில், தங்கள் வயதை மறந்து இவ்வளவு இயல்பாகச் சண்டை போட்டுக் கொள்ளும் அவ்விருவரையும் பார்க்கும்போது அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்தது!
அருகில் ஒரு புதியவன் நிற்பதைக் கண்டதும், நந்து தன் புலம்பல் நாடகத்தை சட்டென்று நிறுத்தினான்.
Advertisement
‘இது யாரு?’ என்பது போல மதியிடம் கண்களாலேயே வினவினான்.
Advertisement
மதிக்கோ அவனை ஆதிக்கு அறிமுகப்படுத்த சற்றும் இஷ்டமில்லை.அவனுக்கு மட்டும் இவன் தான் என்னுடைய ஆதி சார் என்று தெரிந்து விட்டால் அவ்வளவுதான் அவனுடன் சேர்ந்து என்னைக் கலாய்க்க ஆரம்பித்துவிடுவான்.
நந்து, அம்மா ரேணுகாவின் அண்ணன் மகன், மதியைவிட இரண்டு வயது சிறியவன். மாமா பையனாக இருந்தாலும் அவன் அவளுக்கு சொந்த தம்பியைப்போலதான்.
அவனிடம் தன்னுடைய ஆதி சாரைப்பற்றி பலமுறை பெருமையாகப் பீற்றிக் கொண்டிருக்கிறாள்!இப்போது அதையெல்லாம் அவன் உளறிவிட்டால் என்ன செய்வது என்று அவள் அஞ்சினாள்.
Advertisement
அதற்குள் அப்பா நடுவில் வந்து அவர்களை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.
“நந்து, இதுதான் நம்ம மதிகூட ஆஃபீஸ்ல வேலை செய்யுற ஆதி சார்..ஆதி தம்பி, இது நந்து.. என்னோட மச்சான் பையன். இவங்க அக்காவுக்குத்தான் நாளைக்குக் கல்யாணம்…”
“ஹலோ நந்து, ஐ யம் ஆதித்யா…” என்று நட்புடன் கைகுளுக்கியவன்,
“அந்த பயங்கரமான புல்டோசர் மோதல்ல உங்களுக்கு பெருசா சேதாரம் ஒன்னும் இல்லையே…” மதியிடம் நக்கலாக பார்வையை வீசியபடியே, ஆதி கலகலப்பான குரலில் நலம் விசாரித்தான்.
“ஹலோ சார்.. நீங்க தான் மதியோட ஆதி சாரா..? உங்களைப் பத்தி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன்! இந்த மதி இருக்காளே… கேப் கிடைச்சா போதும் உங்களைப் பத்தி டமாரம் அடிக்க ஆரம்பிச்சிடுவா! ஆதி சார் அப்படி.. ஆதி சார் இப்படின்னு.. உங்களாலதான் அவ மேத்ஸ்ல சென்டம் அடிச்சாளாம். அப்பப்பா… என்ன பந்தா தெரியுமா? எனக்கு சில சமயம் காதுல ரத்தம்கூட வந்திருக்கு! ஆனா உங்களைப் பார்த்தாதான் தெரியுது.. அவ பாதிகூடச் சொல்லலைன்னு! நீங்க சூப்பர் கூலா இருக்கீங்க சார்..” நந்து உற்சாகமானான்.
காலேஜ் படிக்கும் இளைஞனுக்கு, நல்ல உயரத்தில், அசரவைக்கும் தோற்றத்தோடு, மிடுக்காக நின்ற ஆதி ஒரு ஹீரோபோல தெரிந்தான்.
மறுபக்கம் மதி,‘இந்த நந்து இருக்கானே… இவனோட டப்பா வாயை மூடவே மாட்டானா? இதையெல்லாம் சொல்லன்னு இப்போ யாரு அழுதா? இந்த லட்சணத்துல இவருக்கு ‘சூப்பர் கூல்’னு டைட்டில் வேற, ஆமாம், ரொம்ப கூல் தான். பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னா அப்படியே ஃப்ரீஸ் ஆகிட வேண்டியதுதான்! ஐஸ் பிரின்ஸ்சைப் போய் கூல்னு சொல்றான் லூசு! இப்படி எல்லா சீக்ரெட்டையும் ஓப்பனா சொல்லிட்டானே… இனி அந்த ஹிட்லர் மூஞ்சியில எப்படி முழிக்கிறது..?’ என்று உள்ளுக்குள் புலம்பியபடி ஆதியின் ரியாக்ஷன் என்னவென்று பார்க்க, அவள் எதிர்பார்த்தபடியே, அவன் முகமும் கண்ணும் குறும்பு சிரிப்பில் பளபளத்தது.அது அவளுக்கு இன்னும் எரிச்சலைத் தந்தது.
மதியை அந்தப் பெரிய அவமானத்தில் இருந்து காப்பாற்றுவது போல,
“மதி..”என்று அழைத்தபடி உள்ளிருந்து ஒரு பெண் ஓடிவந்து அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.
அவளும் அவளைப் புன்னகையோடு அணைத்துக் கொண்டாள். “ஹேய் நிஷாக்கா! நாளைக்கு மேரேஜை வச்சுக்கிட்டு இன்னைக்கு இங்க என்ன பண்ற?”
“ஹேய் போடி.. ரோஷனைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? ரெண்டு நாள் ஆச்சு! அதான் கோயிலுக்குப் போறேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு நந்துவைக் கூட்டிட்டு இங்க வந்துட்டேன். இப்போ ரோஷன் இங்க வந்துடுவான்..” அவளது கண்களில் காதல் ஒளி மின்னியது.
“அக்கா, கட்டிக்கப் போற ஹஸ்பண்டுக்கு கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடு.. இப்படி அவன் இவன்னு ஏகவசனம் வேண்டாம்.” என்றவள்
“டேய் நண்டு..!” என்று நந்துவை அழைத்தாள்.
“ஹலோ, என் பேரு நந்து.. நண்டு இல்லை!”
“ரெண்டும் ஒன்னுதான்… அதை விடு. அத்தைக்குத் தெரிஞ்சா உன்னைப் பிச்சிடுவாங்க தெரியும்தானே? ஏன்டா இப்படிப் பண்ண?”
“என்ன பண்றது.. நானும் ஒரு டெரர் தம்பி ரோல் பண்ணலாம்னுதான் ட்ரை பண்றேன், ஆனா நமக்கு இந்தத் தூது போற ஹனுமான் ரோல் தான் கிடைக்குது..!” அவன் சோகமாகச் சொல்ல, அது அங்கிருந்த சகோதரிகள் இருவரையும் சிரிக்க வைத்தது.
அப்போதுதான் நிஷா ஆதியை கவனித்தாள், அவளது புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.
“ஹேய் ஆதி! வாட் ய சர்ப்ரைஸ்.. நீ எங்க இங்க?” என்று கேட்டபடி அவனருகில் வந்தாள்.
புரியாமல் விழித்தவனின் கண்கள் அனிச்சையாக மதியை நோக்கின.
‘இவளை எனக்குத் தெரியுமா?’என்று கேட்பது போல..
மதியின் அப்பா அதற்குள் இடையில் புகுந்தார்.. “அவரு மதியைப் பார்க்க வந்திருக்காரும்மா. இப்போ மதி சென்னைல தம்பியோட ஒரே ஆபீஸ்ல தான் வொர்க் பண்றா..”
“தம்பி.. நிஷாவைத் தெரியும்தானே? ஒரு தடவை நீங்க இருக்கும் போது பெங்களூரு கூட வந்திருந்தாளே…”
ஆதி தன் புருவங்களைச் சுருக்கி, என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க, அவன் கஷ்டப்படுவது பொறுக்காமல் .
“அப்பா, அது எவ்ளோ நாளைக்கு முன்னாடி நடந்தது.. அவருக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று அவனது உதவிக்கு வந்தாள் மதி.
“ஆமாம், கரெக்ட்தான்..” அப்பாவும் ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு போனார்.
“ஹேய்.. அதெப்படி மறக்கும்? மறக்கக்கூடிய முகமா நான்?” செல்லமாகக் கோபித்துக் கொண்டவளின் கவனம் கேட் திறக்கும் சத்தத்தால் திசைத்திரும்ப..உற்சாகத்துடன் வெளியே ஓடினாள்.
நிஷாவின் வருங்கால கணவன் பார்க்க மிகவும் லட்சணமான, நல்ல குணம் கொண்டவனாகத் தெரிந்தான்.மற்றவர்களிடம் மென்மையாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே, வாயாடியான நிஷாவின் வளவளப்பு அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவர்கள் நடக்கவிருக்கும் தங்கள் கல்யாண கதை பேசி காதல் உலகில் மூழ்கிப் போக,
ஆதி தன் அறைக்கு வந்து நிஷாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
‘பெங்களூர்ல நான் பார்த்தேன்னு சொல்றாங்க.. அப்போ அதைப்பத்திக் கேட்டா என்ன சொல்றது? ஒண்ணுமே தெரியலைன்னு சொன்னா நல்லா இருக்காது.’
அவன் நிஷாவை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கதவு லேசாக தட்டப்பட்டு,
“நான் உள்ளே வரலாமா?” நிஷா கதவோரம் நின்றிருந்தாள்..
“ப்ளீஸ் வாங்க..”
“ஹாய் ஆதி, ரொம்ப நாளுக்கு அப்புறம் உன்னைப் பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம்..” அவனருகே கட்டிலில் வெகு சகஜமாக அமர்ந்தாள்.
அவள் அவ்வளவு சாதாரணமாக அருகே அமர்ந்ததைப் பார்த்ததும், தங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கமான நட்பு இருந்ததா என்று அவன் வியந்தான்.
“எனக்குத் தெரியும், நீ என் மேல ரொம்ப கோபத்துல இருப்பேன்னு.. அப்படி இருந்தாலும் அதுல ஒன்னும் தப்பு இல்லை. நான் நடந்துகிட்ட விதத்தை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு, எதோ அந்த வயசு கோளாறுல நான்தான் அழகுன்ற திமிர்ல அப்படி பண்ணிட்டேன் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு.
இப்போ நான் முன்னாடி இருந்த நிஷா இல்லை… முழுசா மாறிட்டேன். ரோஷன் என்னை மாத்திட்டான்னு தான் சொல்லனும்.” என்று வெட்கச்சிவப்போடு சொன்னவள்,
“உன்கிட்ட பேச முடிஞ்சது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்குதெரியுமா?நீ என்னை மன்னிச்சிடுவ தானே ஆதி?”என்று கவலைத்தோய்ந்த முகத்துடன் கேட்டாள்.
ஆதிக்கு அவளது கதையின் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை; அவள் எதற்காக மன்னிப்பு கேட்கிறாள் என்றும் தெரியவில்லை. இருந்தாலும், மணப்பெண்ணாகப் போகும் ஒருத்தியை மனம் வருந்தச்செய்ய மனமில்லாமல்,
“நான் அதையெல்லாம் எப்பவோ மறந்துட்டேன். ஸாரிலாம் கேட்கத் தேவையே இல்லை. கல்யாணப் பொண்ணு எப்பவும் ஹாப்பியா இருக்கணும். இப்படி கவலையா இருந்தா நாளைக்கு போட்டோ, வீடியோல எல்லாம் முகம் பார்க்க சகிக்காது..!” என்று விளையாட்டாக பேசி அவளைத் தேற்றினான்.
“ஆதி, நீயும் ரொம்ப மாறிட்ட! உன்கிட்ட இருந்து இப்படி ஆறுதலான வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவே இல்லை. தெரியுமா… நீ இப்போ பேசினது அப்படியே மதி பேசுற மாதிரியே இருக்கு! முழுசா அவளோட மேஜிக்ல விழுந்துட்டபோல..!”
ஆதி மதியை நினைத்து முகம் சிவக்க சிரித்தான்.
“ப்பா. என்ன ஒரு அழகான சிரிப்பு! நீ சிரிச்சு இன்னைக்குத்தான் பாக்குறேன். இப்படி சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் கொடுத்தா எனக்கு மயக்கமே வந்துடும் போல இருக்கு!” என்று தலை சுற்றுவது போல நடித்துக் காட்டினாள்.
“ஆதி, உன்னையும் மதியையும் சேர்த்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? எனக்கு அப்பவே தெரியும் நீ மதியை ரொம்ப லவ் பண்றன்னு.. மதியைப் பத்திக் கேட்கவே வேண்டாம், அவதான் உன் மேல பைத்தியமா இருந்தாளே! அப்போ எனக்குப் பொறாமையா இருந்தது.. ஆனா இப்போ மதிக்கு உன்னை மாதிரி ஒரு பையன் கிடைச்சிருக்கான்னு நினைக்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு. எங்க வீட்ல எல்லாருக்குமே மதிதான் செல்லம்… அவளுக்குப் பாசத்தைக் காட்ட மட்டும்தான் தெரியும். அத்தனை அன்பான பொண்ணு… மதி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ குடுத்துவச்சிருக்கனும்!”
“ஐ நோ..” என்றான் உளமாற,
“அவள கண்கலங்காம பார்த்துக்கோ சரியா.?” என்றாள் அதிகாரத் தொனியில் கேலியாக
“ம்ம்ம்…” ஆதி முகம் சிவக்க புன்னகையோடு தலையசைத்தான்.
“என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? மதியை நல்லா பார்த்துப்பேன்னு பிராமிஸ் பண்ணு.. இல்லாட்டி பிச்சுப் போடுவேன் பிச்சு!” தன் கையை நீட்டி சத்தியம் கேட்டாள்,.
‘என் மதியைப் பார்த்துக்க எனக்கே ஆர்டரா…?’
அவனுக்கு அது விசித்திரமாகத் தோன்றினாலும், அந்த சத்தியத்தை உறுதிப்படுத்த அவளது உள்ளங்கையில் தன் கையை வைத்தான். நிஷா நட்போடு அவனது கையைப் பற்றிக்குளுக்கினாள்.
அதே நேரத்தில் கீழே படிக்கட்டுகளின் அருகில் இங்கும் அங்குமாக நடந்தபடி,
“இன்னும் என்ன பேச்சு வேண்டி கிடக்கு? அப்படி ரெண்டு பேரும் என்னதான் பேசிக்கிறாங்க?” தன் நகத்தைக்கடித்துக்கொண்டிருந்தாள் தண்மதி.
“ஹலோ, அங்க என்ன குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டு இருக்க?” இவளை கவனித்துவிட்டு நந்து கேலியாக கேட்க,
“டேய், பேசாம போடா…” என்றவள்,சட்டென்று ஏதோ தோன்ற “ஆஹ் நந்து… நிஷாக்கா வீட்டுக்குப் போக டைம் ஆச்சுல்ல.. மேல போய் கூட்டிட்டு வா…” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் டைம் ஆகலை..” தன் கைபேசி விளையாட்டில் முழுமையாக மூழ்கியிருந்தவன், அலட்சியமாகக் கூறினான்.
மதிஅவனது முதுகில் பலமாக ஒரு அடியைக் கொடுத்தாள். “போடா, போய் கூப்பிடுடா…”
“அவ்ளோ அக்கறையா இருந்தா நீயே போய் கூப்பிட்டுக்கோ… நான் என்ன உன் வேலைக்காரனா?” காரணமின்றி அடி வாங்கிய எரிச்சலில் நந்து கோபமாக சொல்ல,
அதற்கு மேல் பொறுக்கமுடியாமல், பூனைப் போல மெதுவாகப் படிக்கட்டுகளில் ஏறி அவனது அறைக்குள் எட்டிப் பார்த்தாள் தண்மதி,
அங்கே இருவரும் சிரித்துக்கொண்டே கைகோர்த்து நிற்பதைக் கண்டு அவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
தொடரும்..
error: Content is protected !!