“என்னையா சொல்ற நீ?” என்று போனை காதில் வைத்து சிவம் அதிர்ச்சியுடன் கேட்க,
Advertisement
“அட, ஆமய்யா! நானே பொண்ணு வீட்டுக்குப் போயிட்டு காலையில வண்டிக்குத்தான் வந்தேன். ஊரே ரெண்டு பட்டு கெடக்குதய்யா,” என்று ஊரில் கேட்டறிந்த தகவல்கள் அனைத்தையும் ஒலிபரப்பு செய்தார் சாமிக்கண்ணு.
இங்கு சிவம் இருந்த அறையில், கை, கால் கட்டிப்போட்டு ஒருத்தி படுத்திருந்தாள். அவள் வாயில் கைக்குட்டையைத் திணித்திருக்க, “ம்ம்ம்ம்ம்…” என்று சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள்.
Advertisement
Advertisement
அவளைத் திரும்பிப் பார்த்தவன், அவளை நெருங்கி, கன்னத்தை வலிக்கும் அளவுக்குக் கடித்தான்.
அந்தப் பக்கம் சாமிக்கண்ணு, சத்தம் காதில் விழவும்,
Advertisement
“ஏலே! என்ன சத்தம்” என்றார்
“வழக்கமான சத்தம் தான், நீ உன் வேலைய பாரு. நான் ஊருக்கு வரும்போது சொல்லுறேன். வந்து தேவையானதை வாங்கிக்க,” என்று சிரித்தான்.
“ஏலே! என்ன பண்ணப் போற நீ?” என்று பதறினார் சாமிக்கண்ணு.
“நான் சொன்னா சுவாரஸ்யம் போயிடும். நடக்கறப்ப நீயே பாரு,” என்று போனை அணைத்துவிட்டு,
அடுத்த லைன் போட்டது இன்ஸ்பெக்டருக்குத்தான்.
தன் தேவையை முழுவதும் சொல்லி, போனைக் கட் பண்ணிவிட்டு கட்டிலை நெருங்கினான்.
இவன் பேசியதைக் கண்டு இன்னும் பயந்து போனாள் அந்தப் பாவை.
இங்கு வேல்விழி, காலையிலிருந்து தெரு வேலைகளை மட்டும் முடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“என்னத்தா, ஒக்காந்துட்டு இருக்க?” என்று மயிலம்மா கேட்டுக்கொண்டே வந்தார்.
“என்ன பண்ணுறதுன்னு தெரியல பாட்டி. சின்னபாட்டி எனக்கு வீட்டுல சொல்லுற வேலைகளை முடிச்சிட்டேன்,” என்றாள்.
“என்னத்தா! நீ போய் அடுப்பு பத்த வச்சு, கஞ்சி காய்ச்சி வை. மாமன் வர நேரம் பசியாற வேணாம்மா,” என்று மயிலம்மா சொன்னதும்,
“நான் என்ன பாட்டி சமைக்க? அன்னைக்கே கை, காலைச் சுட்டதுதான் மிச்சம்,” என்று முகத்தைச் சுருக்கினாள்.
“கை, கால்ல நெருப்பு படாம யாரும் சமைக்க முடியாதுத்தா. நீ அடுப்பு பத்த வை. நான் போய் தோட்டத்துல என்ன காய் இருக்குன்னு பாத்து ரெண்டு கொண்டாரேன்னு,” சொல்லிவிட்டு பின் பக்கம் நகர்ந்தார்.
இவளும் ஒரு ஆழாக்கு அரிசி எடுத்துக்கொண்டு வெளியே வந்த நேரத்தில்,
“நான் கூப்பிட்டாத்தான் நீ திட்டுவியேக்கா,” என்றாள் வேல்விழி.
“இனிமே கூப்பிடு. இது என் பாட்டி வீடு மட்டும் இல்லையே!” என்று நொடிப்பாகச் சொல்லிவிட்டு,
வீட்டைச் சுற்றிப் பார்த்து, “மாமா எங்க?” என்றாள்.
“தெரியலக்கா. நான் பாக்கல,” என்று அடுப்பங்கர பக்கம் திரும்பி நடக்க,
“நான் உங்கிட்டத்தான் பேச வந்தேன்,” என்றதும்,
புரியாமல் திரும்பிப் பார்த்தாள் வேல்விழி.
“நேத்து என்ன நடந்துச்சு?” என்று அபிராமி கேட்டதும்,
ஒரு நொடி உடம்பே தூக்கிப்போட, கையிலிருந்த பாத்திரத்தைத் தவற விட்டாள்.
பாத்திரம் “டோம்” என்ற சத்தத்துடன் கீழே விழ, அரிசி நாலாபக்கமும் சிதறியது.
“இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படி எல்லாத்தையும் தூக்கிப் போடுற நீ? இராத்திரியிலிருந்து பாட்டி அழுதுட்டே இருக்காங்க. இன்னும் ஒரு வாய் சோறுகூட சாப்பிடல,” என்று பொரிந்து தள்ளினாள் அபிராமி.
“அதைத் தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ணுவ, அபி?” என்ற குரல் பின்னே கேட்க,
இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
“மாமா, உங்களுக்கு கொஞ்சம்கூட பாட்டியைப் பத்தி கவலை இல்லையா? நீங்க பண்ண வேலையாலே பாட்டி எவ்வளவு வருத்தமா இருக்காங்க,” என்று அபிராமி கேட்க,
“என்கிட்ட பேசுற நேரத்துல, பாட்டிக்கிட்ட சொல்லி எங்களை ஏத்துக்க முயற்சி பண்ணச் சொல்லு,” என்றான்.
“எது? நான் சமாதானம் செய்யணுமா? நீங்க பண்ணதுக்குப் பேர் கல்யாணமே இல்லை. குழந்தை திருமணம். இது மட்டும் போலிஸ்க்கு தெரிஞ்சா, உங்களைப் புடிச்சு உள்ள வைப்பாங்க,” என்றாள் மூக்கு விரைக்க.
தன் அக்கா மகளின் பேச்சைக் கண்டு, அவனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது.
அவனுக்குள்ளும் அதே கவலைதான். அபிராமியை விட சின்னவள்தான்.
அந்தச் சூழ்நிலையில் இதைப் பற்றி எதுவும் யோசனை இல்லையே! அவனிடமிருந்து காப்பாற்ற எண்ணி அவன் செய்த செயல், மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
“போலிஸ்க்கு நீ சொல்லுவியா, அபி?” என்றான் சிரிப்புடன்.
“மாமா…” என்றவளுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.
இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள் வேல்விழி.
வீட்டில் இருந்த அமைதியை உடைத்து, வாசலில் பேச்சுச் சத்தம் கேட்க, மூவரும் வெளியே வந்தனர்.
“ஐய்யா, வெற்றி! உன்னைத் தேடி காவல் அதிகாரி வந்திருக்காரு,” என்றார் பெரியவர்.
“சொல்லுங்க சார்.”
“நீதான் வெற்றிவேந்தனா?” என்று இடைநிலை காவலர் கேட்க,
“ஆமா சார். என்ன விஷயமா? என்னைத் தேடி வந்திருக்கீங்க?” என்றான் வெற்றி.
அதே நேரம், போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டரும் வெளியே வந்தார்.
அனைவரும் அவரை ஒரு நிமிடம் பார்க்க, கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
வெற்றிக்கு ஒண்ணும் புரியாத நிலைதான்.
அவனை நெருங்கி, “மைனர் பொண்ணைக் கல்யாணம் பண்ண குற்றத்துக்காக உன்னைக் விசாரணை பண்ண வந்திருக்கோம்,” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்…
“ஐய்யா, எங்க ஊர் பொண்ணுங்க வயசுக்கு வந்தாளே கட்டிக்கொடுத்துடுவோம்ங்க. அதை போய் பெரிய குத்தம் மாதிரி வந்திருக்கீங்களே!” என்று ஊர் தலைவர் சொன்னதும்,
“இங்க பாருங்கய்யா! இதுவரை நீங்க அப்படிப் பண்ணி இருக்கலாம். இனிமே அப்படி முடியாது. இது என் ஸ்டேஷனுக்குள்ள வர்ற ஊர். அப்ப நான் ஆக்ஷன் எடுத்தாகணும். இல்லைன்னா மேலிடம் என்னைக் கேள்வி கேட்கும்,” என்று பொறுமையாகப் பதில் சொன்னார் இன்ஸ்பெக்டர்.
இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
பின் வாசல் வழியாக தன் வீட்டை நோக்கி ஓடினாள் அபிராமி.
மயிலம்மா ஒப்பாறியைக் கூட்டினார். “எந்த சாமி மண்ணா போச்சு! என் கொலசாமிய புடிக்க வந்திருக்காங்களே!” என்று இவர் ஒரு பக்கம் ஆரம்பிக்க,
வேல்விழி, தன் மாமன் அருகே நின்று, “சார், என் மாமா எந்தத் தப்பும் பண்ணல. அவரை விட்டுடுங்க,” என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டதும்,
“வேலு!” எனக் கத்தி அவள் கைகளை கீழே இறக்கினான் வெற்றி.
“யாரு சொன்னாங்கன்னு நான் உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்றார் இன்ஸ்பெக்டர்.
தெரு முனையிலே கத்திக்கொண்டே ஓடி வந்தனர் அக்கா வீட்டில் இருந்த அனைவரும்..
“அய்யா! சாமி, என் புள்ளையை விட்டுங்கய்யா!” எனக் கத்திக்கொண்டே காளியம்மா, இன்ஸ்பெக்டர் காலில் விழப்போனவரை, சரசு தடுத்து நிறுத்தினாள்.
“இங்க பாருங்கம்மா… இப்படி கத்தி, கூச்சல் போடுறதால எதுவும் மாறாது. என் வேலையைத் தடுக்குற குற்றத்துக்காக நான் உங்களையும் கைது பண்ண முடியும்,” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்,
காளியம்மா அதிர்வுடன் நின்றார்.
“என்னாச்சு சார்?” என்று மணியரசு கேட்க,
“அவருக்கு நீங்க யாரு?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“என்னோட மச்சான் சார்,” என்றதும்,
“இவரு மைனர் பொண்ணைக் கல்யாணம் பண்ணதா தகவல் வந்திருக்கு. அதைப் பத்தி விசாரிக்க வந்திருக்கோம்,” என்றார்.
“சார், ஏதோ தப்பான தகவல் வந்திருக்கும். இவன் எந்தத் தப்பும் பண்ண மாட்டான்,” என்று மணியரசு சொல்ல,
“அதெல்லாம் விசாரணைக்குப் பிறகுதான் தெரியும். முதல்ல ஸ்டேஷனுக்கு வரணும்,” என்றார் இன்ஸ்பெக்டர்.
“அந்த மைனர் பொண்ணு யாரு?” என்றார்.
“சார்…” என்று வேல்விழி முன்னே வர,
“நீ தானா அந்தப் பொண்ணு?” என்றார்.
பயத்துடன் வெற்றியை ஒரு நொடி பார்த்தவள், “ஆமா சார்,” என்றாள்.
“சரி. நீயும் எங்களோட ஸ்டேஷனுக்கு வரணும். உங்க ரெண்டு பேர்கிட்டயும் விசாரிக்கணும்,” என்றார்.
“ஐய்யா! அவ சின்னப்புள்ளைங்கய்யா. எங்க கூட்டிட்டுப் போறீங்க?” என்று மயிலம்மா கதற,
“சார், என் மாமாவை விட்டுடுங்க. நான் வரேன்,” என்று வேல்விழி அழுதபடி சொல்ல,
அவளின் வார்த்தையைக் கேட்டு, அவனுக்கும் கோபம்தான்.
“வேலு… அழாத. நானும் வருவேன். பயப்படாம வா,” என்று அவளைப் பார்த்தான் வெற்றி.
இருவரையும் காவலர்கள் போலீஸ் ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றனர்.
வெற்றி முதலில் ஜீப்பில் ஏறினான்.
வேல்விழி ஒரு நொடி மயிலம்மாவையும், வீட்டையும் திரும்பிப் பார்த்தாள். கண்ணீர் நின்றபாடில்லை.
“வேலு, ஏறும்மா,” என்ற காவலர் சொன்னதும், நடுங்கிய கால்களோடு ஜீப்பில் ஏறி வெற்றியின் அருகே அமர்ந்தாள்.
ஜீப் மெதுவாக நகர ஆரம்பிக்க,
“என் ராசாவையும், என் ராசாத்தியையும் கூட்டிட்டுப் போறாங்களே!” என்று மயிலம்மா மார்பில் அடித்துக்கொண்டு கதற,
வேல்விழி மீது இருந்த மொத்தக் கோபமும் மாமியார் பக்கம் திரும்பியது.
“என்ன சொன்னீங்க… ராசா, ராசாத்தியா? அந்தச் சனியன் என்னைக்குப் பொறந்ததோ! அன்னைக்கே புடிச்சிச்சு என் புள்ளைக்கு தைதிரம். மாமா… மாமான்னு ஒட்டிக்கிட்டே போய்தான்… இப்போ என் புள்ளையை ஜெயிலுக்கு அனுப்பிட்டா,” எனப் பொரிந்துக்கொண்டிருந்தார் காளியம்மா.
“ஏட்டி, அவ என்னடி பண்ணா! எல்லாம் நீ வீணாப் போன ஒருத்தனை மாப்பிள்ளையா கொண்டு வந்ததால் தான்டி,” என்று கோடியம்மா, கொழவி மயிலம்மாவைத் தாங்கிக்கொண்டு கேட்டார்.
“ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவான். பொம்பளைதான் இழுத்துப் போத்திட்டு இருக்கணும்…”
“நிறுத்துடி!” என்று அலறிக்கொண்டு எழுந்தார்.
பேரப்பிள்ளைகளை நினைத்து கவலையில் இருந்தவர், எப்போது மருமகள் பேச்சு தேவகியை நோக்கித் திரும்பியதோ, அப்போதே கொதித்தெழுந்தார்.
தன் கூந்தலை அள்ளி கொண்டையிட்டுக்கொண்டே,
“என்னடி சொன்ன? ஆம்பள ஆயிரம் தப்பு பண்ணுவானா? அது மாறி ஒரு தப்பை எம்புள்ளை பண்ணியிருந்தாலும், அப்பவும் இப்படித்தான் சொல்லுவியாடி?” என்று மருமகளை நெருங்கிக் கேட்டார்.
“ஏண்டி, நான் கேட்டதுக்குப் பதிலில்லை. சொல்ல வேண்டியதுதானே! ‘என் புருஷன் ஊர் மேஞ்சிட்டு வந்தாலும், நான் அவர் பக்கம்தான் நிற்பேன்’ன்னு சொல்ல முடியாதில்ல உன்னால?” எனக் கேட்டுக்கொண்டே தன் கையை கீழே போட்டார்.
மயிலம்மாவிற்கு மனது ஆறவே இல்லை.
“உனக்கு வந்தா மட்டும் இரத்தம். மத்தவங்களுக்கு வந்தா என்னடி? உன்னால சொல்ல முடியாதுடி. அன்னைக்கு என் ஆத்தா கத்திக் கதறினப்ப கூட உனக்கு மனசு இல்லடி. உன் பொண்ணு வாழ்க்கையைக் காப்பாத்த என் ஆத்தாளை வார்த்தையாலே கொண்ணுட்டடி,” என்று சொல்லிக்கொண்டே உடைந்து அழுதார்.