Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 29

பூவே 29



Advertisement

“அட, என்னண்ணே நீங்க? எம் பசங்களுக்கு பொண்ணு பாக்க சொன்னா, கையை வீசிட்டு வந்து நிக்குறீங்க?” என்ற மயிலம்மா, கேட்டுக்கொண்டே, கையிலிருந்த தண்ணீரை அந்தப் பெரியவருக்கு கொடுத்தார்.

Advertisement

அவரும் தன் தாகம் அடங்கும் அளவுக்கு தண்ணீர் மொத்தமும் வயிற்றுக்குள் நிரப்பி, சொம்பை கீழே வைக்க,

Advertisement

“இம்புட்டு தாகமா இருந்தா, கடைக்கண்ணில சோடா குடிச்சிட்டு வரக்கூடாதாண்ணே?” என்று தூண் அருகே நின்றார்.

Advertisement

“எங்கம்மா தங்கச்சி, எவ்ளோ சோடா குடிச்சாலும் தாகம் அடங்கலையே!” என்றார் அவரும்.

“சரிண்ணா, போன காரியம் பழமா, காயா?” என்று மயிலம்மா கேட்க,

“பழம்னு சொல்ல முடியாது… காய்னு சொல்ல முடியாது, தங்கச்சிம்மா,” என்று இழுத்தார்.

“என்ன அண்ணே, இப்படி சொல்லீறீங்க?” என்றார்..

“ஆமா தங்கச்சிம்மா. நா கேட்டு பார்த்த எல்லா இடத்திலும், அக்கா தங்கச்சி ஓரே வூட்டுல வாக்கப்பட விரும்பல. ஆனா, ஓரே வூட்டுல வளர்ந்த அண்ணன், தம்பி புள்ளைங்க இருக்காங்க. நீ சரின்னு சொன்னா, பேசி பாக்கலாம்,” என்றார் அவரும்.

மயிலம்மாவிற்கு தயக்கமாக இருக்க, அமைதியாக நின்றார்.

அதே நேரம், மயிலம்மா மகன்கள் இருவரும் உள்ளே வந்தனர்.

“வாங்க மாமா. வரவர உங்க பிரவேசம் அதிகமா இருக்கு. என்ன சங்கதி?” என்று முத்தையா கேட்க,

“அட என்ன மருமகனே! எல்லாம் உங்க கலியாண விசயமாத்தான் வரேன்,” என்றார்.

“என்னம்மா… மாமா என்ன சொல்லுறாங்க?” என்று இளைய மகன் கேட்க,

“இல்லை முத்து. உனக்கும் அண்ணனுக்கும் ஓரே வூட்டுல பொண்ணு எடுக்கணும்னு சொல்லி வச்சேன்,” என்று மகன்களை பார்த்தார்.

“அதுக்கு இப்ப என்னம்மா அவசரம்?” என்று அன்னையை பார்த்தான்.

“என்ன அவசியமா? உனக்கு அவசியமில்லாம இருக்கலாம். ஆனா, எனக்கு அவசியம்,” என்றவர்,

“அண்ணே, இந்த இடம் எப்படின்னு விசாரிச்சீங்களா?”

“நல்லா விசாரிச்சிட்டேன் தங்கச்சிம்மா. பெரிய மகனைப் பத்தியும் பொண்ணு வூட்டுல சொல்லிட்டேன்,” என்றார் பவ்வியமாக.

“பெரியவனே கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா?” என்றார்.

ராமைய்யாவோ, “உங்க விருப்பம்,” என்று சைகையில் சொல்லவும்,

“அப்ப சரிண்ணே. பொண்ணு போட்டோ இருந்தா காட்டுங்க,” என மயிலம்மா கேட்க,

“ம்மா, அண்ணங்கிட்டதான் கேட்ட. என்கிட்ட கேக்கல நீ,” என்று குறுக்கே வந்து நின்றான் முத்தைய்யா.

“உனக்குத்தான் அவசரம் இல்லைன்னு சொன்னியேப்பா. நா பெரியவனுக்கு மட்டும் கலியாணம் முடிக்குறேன்,” என்று சிரிப்புடன் சொல்ல,

“ம்மா, ஒரு வயசு புள்ளை அப்படித்தான் சொல்லுவான். நீங்கதான் சமாதானம் பண்ணி கலியாணம் பண்ணி வைக்கணும்,” என்று பாவமாக முத்தையா சொன்னதும்,

மூவரும் வாய் விட்டு சிரித்தனர்.

“அப்படி வாயா வழிக்கு,” என்றவர், “அண்ணே, நா பொண்ணை பாக்கணும். அதுக்கு அப்புறம் நா முடிவு பண்ணுறேன்,” என்றார் மயிலம்மா.

“சரி தங்கச்சிம்மா. நா பொண்ணு பாக்குறதுக்கு தயார் பண்ணுறேன்,” என்று அவரும் கிளம்பினார்.

தன் இரு மகன்களின் கன்னம் வழித்து திருஷ்டி சுத்தினார்.

அடுத்து இரண்டு மாதத்திலே, பெண் பார்த்து அண்ணன், தம்பி இருவருக்கும் திருமணமும் நல்லவிதமாக முடிந்தது.

காளியம்மாவிற்கு, தன் கணவர் வாய் பேசாதவர் என்றது அன்றிரவு தான் தெரிய வந்தது.

வாய் விட்டு கதற முடியாத நிலை. பெரியப்பாவை அண்டி இருந்ததுக்கு, தன் வாழ்க்கையில் இப்படி பாராங்கல்லை தூக்கிப் போட்டுட்டு, அவர் பொண்ணுக்கு மட்டும் எந்தக் குறையும் இல்லாத மாப்பிள்ளை பார்த்து கட்டி இருக்காரே! என்ற கழிவிரக்கத்தில் சமைந்து போனாள்.

சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், அக்கா, தங்கைக்குள் உள் பூசல்களும் நடந்துக்கொண்டிருந்தது.

தங்கை ஏதோ புரியாமல் செய்கிறாள் என்று பெரியவள் அமைதி காக்க,

இந்த இடைப்பட்ட வருடங்களில், காளியம்மாவிற்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது.

தங்கைக்கு குழந்தை பிறந்ததில் சந்தோஷம் இருந்தாலும், இருவருக்கும் ஒரே நாளில் தானே கலியாணம் ஆச்சு என்ற வேதனையும் மூத்தவளை சூழ்ந்துக்கொண்டது.

தங்கையும் அக்காவிடம் குழந்தையை கொடுத்தாலும், சில நொடிகளில் தூக்கிச் சென்றிடுவாள். அந்த ஏக்கமே பொன்னம்மாவை கொள்ளாமல் கொன்றது.

அன்று கண்ணீருடன் கொள்ளைப் பக்கம் அமர்ந்திருந்த மனைவியை தேடி வந்த முத்தையாவுக்கும் சற்று வருத்தம் தான்.

“பொன்னம்மா, இப்படி அழுதுட்டே இருந்தா குழந்தை வரும்னு யாராவது சொன்னாங்களா?” என்று சொல்லிக்கொண்டே, மனைவியின் கண்ணீரை தன் துண்டால் துடைத்தார்.

தன் கணவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, இன்னும் கண்ணீர் வழிந்தபடி, “நீங்க வேற கல்யாணம் பண்ணிக்குங்க,” என்று தலையை குனிந்துக்கொண்டாள்.

மனைவி சொன்னதில் முத்தையாவுக்கும் வேதனை தான்.

இருந்தாலும், இந்த ஆறு வருஷத்தில் அவர் பார்த்ததை விட, மனைவியின் வலி அதிகம் தானே! என எண்ணிக்கொண்டு,

அவள் தலையை வருடிக் கொடுக்க, கணவனின் அன்பில் நெஞ்சு முட்ட வலி தான்.

‘கடவுளே! ஒரு புள்ளையையக்கூட  எங்களுக்கு தர உனக்கு மனசில்லாம போச்சா? எம்புருஷன் அன்புக்கு சாட்சியா ஒரே ஒரு குழந்தையை கொடு கடவுளே! என் உயிரே போனாலும் பெத்து தரேன்,’ என்று கடவுளிடம் முறையிட்டாள்.

மனதின் எண்ணத்துக்கு கூட உயிர் இருக்கும்னு பாவைக்கு தெரியாமல் போனதால், அவள் வேண்டுதல் படியே, அவள் உயிரை கொடுத்துத்தான் தன் மகளை பெற்றெடுத்தாள், மூன்று வருடம் கழித்து.

மகளின் பிறந்த நாளும், மனைவியின் நினைவு நாளும் ஒரே நாளானது முத்தைய்யாவுக்கு.

பச்சிளம் குழந்தையாய் தேவகி, மயிலம்மா மடியில் விழுந்தாள்.

வருடங்கள் கடந்தாலும், அந்த வலியிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்தவருக்கு..

பத்து வருடம் கழித்து பிறந்த அண்ணன் மகனின் சிரிப்பில் தான், அவருக்கு வாழவே ஆசை வந்தது.

பத்து வயதில் அடியெடுத்து வைத்திருந்த மகளை பார்க்க பார்க்க, மனைவி முகம் தான் கண் முன்னே நின்றது.

மயிலம்மா, மகனுக்கு மறு கலியாணம் பண்ண எவ்ளோ முயற்சி செய்தும்,

முத்தையா, ஒரே வார்த்தையில் முடித்தார்.

“ஏன்யா, இப்படி பேசுற நீ?” என்று கண்ணீரோடு கேட்டு நின்ற அன்னையை பார்த்து,

“வேற என்னம்மா பண்ண சொல்லுற? ஒரு குழந்தை இல்லன்னு யாரும் என்னை பொ****னு சொல்லிடக்கூடாதுன்னு, நர்ஸம்மா சொன்னதை மறைச்சு எனக்கு ஒரு புள்ளையை கொடுத்துட்டு போனவளை எப்படிம்மா மறக்க முடியும்?

குழந்தையே வேணாம், நீ மட்டும் எனக்கு போதும்டின்னு எத்தனை தடவை சொன்னேன், தெரியுமாம்மா. அப்படிப்பட்டவளை மறந்துட்டு இன்னொருத்தி கழுத்துல என்னால் தாலி கட்ட முடியுமாம்மா,” என்று கண்ணீரோடு சொன்னவன், அன்னையின் பக்கம் திரும்பி,

“என்னை இன்னொரு கலியாணம் பண்ண சொல்லுறீயே! அப்பா இறந்தப்ப உனக்கு வயசு இருபது தானே. நீ ஏன் ம்மா இன்னொரு கலியாணம் பண்ணிக்கல?” என்றான்.

மகன் சொன்ன வார்த்தையைக் கேட்டு,

“முனிய்யா…” என்று காதில் கை வைத்தார்.

“எங்க காலத்துல பொம்பளை புள்ளைக்கு ஒரு கலியாணம் தான்யா. ஆம்பளை பத்து கலியாணம் கூட பண்ணுவாங்க,” என்றார்.

“அது என்ன சட்டமா ம்மா”என்ற,மகனிடம் அடுத்து வார்த்தை பேச நா வரவில்லை.

“தனிமை எவ்ளோ கொடுமைன்னு, ஆம்பளையா நா தெரிஞ்சிக்கிட்டது போதும். பொம்பளையா நீ தெரிஞ்சிக்கிட்டதும் போதும் ம்மா. இனி நம்ம குடும்பத்துல யாருக்கும் இந்த தனிமை வேணாம்மா. நரகமா இருக்கு… மூச்சு கூட விட முடியலம்மா,” என்று உடைந்து அன்னையின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான்.

“எய்யா…” என மயிலம்மாவின் கண்களும் நீரில் கரைந்தது.

அதே நேரம், பின்பக்கம் குழைந்தையின் அழுகை சத்தமும், காளியம்மா கதறலும் கேட்க,

இருவரும் பின்பக்கம் ஓடினர்.

குழந்தை அருகே பாம்பு சுற்றிக்கொண்டிருந்தது.

“அத்தை… மாமா… எம்புள்ளையை காப்பாத்துங்க!” என்று கதறினாள்.

“எய்யா நாகராஜா, எம்பேரனை விட்டு போயிடுய்யா,” என்று மயிலம்மா கையெடுத்து கும்பிட்டு கேட்க,

அவர் பக்கம் திரும்பி தலையை சீறியது.

“அம்மா, தள்ளி வாங்க… அழாதிங்க அண்ணி,” என்று குழந்தை அருகே நெருங்க,

“உஸ்…” என்று நாக்கை நீட்டி சத்தம் போட்டது பாம்பு.

முத்தையா, கொஞ்சம் கொஞ்சமா பின்னே நகர்ந்து, பாம்பின் கழுத்தை பிடித்து தூக்கிக்கொண்டவர்,

“அண்ணி, குழந்தையை தூக்குங்க,” என்று இடது கையை நீட்டி சொல்ல,

தன்னை பிடித்தவன் கையில் கொத்தியது.

“ஆ…” என்று முத்தைய்யா அலற,

“எய்யா, பாத்து!” என பதறினார் மயிலம்மா.

காளியம்மாவும் குழந்தையை தூக்கிக்கொண்டார்.

அதற்குள் சத்தம் கேட்டு தெரு ஜனம் வந்தனர்.

தன்னை கொத்திய பாம்பை, கழுத்தை இறுக்கிப் பிடித்தே கொன்றார் முத்தையா.

அனைவரும் அவரை நெருங்க, பாம்பின் விஷம் முழுக்க முத்தையா உடம்பில் கலந்து, அவரின் இறுதிக்கட்டத்தில் நின்றது.

அதே நேரம், ராமைய்யா ஓடி வந்தவர். தம்பியின் நிலை கண்டு அதிர்ந்தார்..

இத்தனை ஆண்டுகள் தனக்கு அரணாக இருந்தவன். இன்று உடம்பில் நீலம் நிறமாக மாறி இருந்தவனை , கண்டு தம்பி அருகே அமர்ந்தவருக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது..‌

“அண்ணா, எம்பொண்ணை பத்திரமா பாத்துக்க…” என்று, அண்ணனின் கைகளை பற்றினான்.

“ஹஹஹஹஹ” எனக் கதறினார்‌ , ராமையா இறந்த நிலையை விட கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போகும் நிலை காணும் கொடுமை யாராலும் தாங்கவே முடியாதது.

“அண்ணா.. என் கண் முன்னாடி அழுகாத” என்று தலையை தூக்கி அன்னையை பார்த்து,

“ம்மா, நா என் பொண்டாட்டிகிட்ட போறேன். உம்பேத்தியை நீதான் பாக்கனும். உனக்கு ஒன்னும் அவசரமில்லை. நீ இருந்து எல்லாரையும் கரை சேர்த்து, பொறுமையா வாம்மா,” என்று சொல்லும்போதே,

வாயிலிருந்து இரத்தம் வழிந்தது.

“எய்யா… இந்த பாவி  தலையில பாரம் வைக்காதைய்யா… மூச்சு முட்டுதுய்யா,” என்று மகன் அருகே நெருங்கினார்.

“எனக்கு மூச்சு முட்டிச்சும்மா… என்னால் இதுக்கு மேல முடியாது ம்மா,” என்று அன்னையின் கைகளை பிடித்துக்கொண்டார்.

அடுத்து அவர் பார்வை காளியம்மா, பக்கம் வந்தது.. “அண்ணி, என் பொண்ணுக்கு நல்லது கெட்டது சொல்லித்தாங்க அண்ணி. என் மனைவிகிட்ட காட்டின ஒதுக்கத்தை, எம்புள்ளைகிட்ட காட்டிடாதிங்கண்ணி,” என்று சொன்னவர்,

கடைசியாக குழந்தையின் கை பிடித்து,

“இவனுக்கு நா பேர் வைக்கட்டுமாண்ணா?”

ராமைய்யாவுக்கு குரல் வராததுக்கு, தன் வாழ்நாளில் இன்று தான் கவலைப்பட்டார்.

அவசரத்துக்கு அவர் சைகை கூட மறந்து போனது. தம்பியின் கைகளை பற்றிக்கொண்டு, சம்மதமாக தலையாட்டினார்.

“வெற்றி வேந்தன்…” என்று மூன்று முறை சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“அப்பா!” என கத்திக்கொண்டு, தேவகி பள்ளி பையுடன் ஓடி வந்தாள்.

மகளின் கைகளை பிடித்து,

“மன்னிச்சிடுமா… அப்பா உன்னை விட்டு போறேன்னு…” என்று மகளின் தலையில் கை வைக்க,

அடுத்த நொடி கை கீழே விழுந்தது.

“அய்யோ! என் கொலசாமி போச்சு!” என்று மயிலம்மாவின் சத்தம் அந்த ஊர் முழுக்க எதிரொலித்தது.

“சின்னம்மா, ரெண்டு இடத்துல பாம்பு கடிச்சிருக்கு,” என அவன் தோழன் சொல்ல,

மயிலம்மாவின் கதறல் அப்படியே நின்று போனது.

பார்வை முழுக்க மகனிடம் தான் இருந்தது.

“இன்னும் என்னென்ன கொடுமையை பாக்க, இந்த

சிறுக்கியை வச்சிருக்கையா?” என்று மகன் மீதே விழுந்து அழுதார்.

மறக்க முடியாத வலிக்கு கூட காலம் ஆகச்சிறந்த மருந்து.

அப்படியொரு வழி இருக்கிறதால்தானே, எல்லாத்தையும் கடந்து வந்தது மயிலம்மா குடும்பம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!