“சார்… என் மாமாவை விட்டுடுங்க சார்,” என்று மீண்டும் கெஞ்ச,
“முதல்ல உள்ள வாம்மா. விசாரிச்சுட்டு பேசிக்கலாம்,” என்றார் இன்ஸ்பெக்டர்.
இருவரையும் உள்ளே அழைத்துச் சென்ற காவலர், இரண்டு பெஞ்சைக் காட்டி,
“உக்காருங்க,” என்றார்.
வேல்விழி வெற்றியைப் பார்த்தாள்.
“உக்காரு வேலு,” என்று அவன் சொன்னதும், அவனையும் இழுத்துக்கொண்டு அமர்ந்தாள்.
கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
சிறிது நேரத்தில் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோ, பைக் என தொடர்ந்து நாலைந்து வண்டிகள் வந்து நின்றது.
அதில் இருந்து அவசரமாக இறங்கினார் மணியரசு, சரசு, காளியம்மா. தன் கணவரை திட்டிக்கொண்டே இறங்கினார்…
அடுத்து பைக்கில் இருந்து பாண்டி, மாறன் வர, இவர்களை அடுத்து ஊர் தலைவரும், மயிலம்மாவைத் தவிர மொத்தக் குடும்பமும் உள்ளே வந்தது.
அடுத்து ஒரு பைக்கில் தேவகி, தன் கணவருடன் வந்தார்.
“வந்துட்டா, என் குடியை கெடுத்தவ… இவளை வளர்த்த பாவத்துக்கு என் பொண்ணு வாழ்க்கை போச்சு… இவ பெத்ததாளே இப்ப என் பையன் வாழ்க்கையும் போகப் போது! நல்லாவே இருக்க மாட்டிங்கடி… நீயும் உன் பொண்ணும் என் வயிறு எரிய எரிய நாசமா தான் போவிங்கடி,” என்று மண்ணை வாரி தூற்றினார்.
மண் தலைமீது விழ, கண்களை மூடியவளின் விழியில் நீர் வழிந்தது..
“என்ன பண்ணுறீங்க, இங்க பேச தான் வந்திருக்கோம்! அதை விட்டு.. நீங்க செய்யுறது எதுவும் சரியில்லை” என்று சொல்லிக்கொண்டே பார்த்திபன் முன்னே வந்தான்..
“என்னடா, சரியில்லை?” என்று இவர் அவர்களை நெருங்க,
“அத்தை, நீங்க அமைதியா இல்லை.. உங்களையும் உள்ள புடிச்சு போட்டுடுவாங்க” என்று மிரட்டினான் மணியரசு.
அதில் சற்று அடங்கினாலும், வாய்க்கு அடங்காமல் முணுமுணுத்தார்..
இருவரும் எதிரும் புதிருமாக நின்றிருந்தனர்..
“ஏட்டையா, என்ன சத்தம்? காது வலிக்குது. அவங்களை துரத்தி விடு,” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்…
“ஐய்யா, நீங்க கூட்டிட்டு வந்த பசங்களோட, சொந்தக்காரங்க தான்யா? சத்தம் போடுறாங்க,” என்று ஏட்டைய்யா சொன்னதும்,
“என்னையா சொல்லுற? நம்மலே இப்பதான் வந்தோம்… அதுக்குள்ள எப்படி இவங்க பின்னாடியே வருவாங்க?” என்று இன்ஸ்பெக்டர் தலையில் கை வைத்தார்.
“ஐய்யா, டீ வாங்கிட்டு வரட்டுங்களா?” என்று பவ்யமாக ஏட்டையா கேட்க,
“முதல்ல போய் வாங்கிட்டு வா! நான் உள்ள கூப்பிடுற வரை அவங்கள வெளியவே நிக்க சொல்லு,” என்றார் இன்ஸ்பெக்டர்.
“சரிங்க ஐயா,” என்று அவரும் வெளியே வர,
“அய்யா, என் புள்ளையை விட்டுடுங்கையா,” என்று காளியம்மா அவர் காலிலே விழப்போனார்.
“இந்தாம்மா, என் கால்ல விழாதிங்க… நீங்க அமைதியா இருந்தா தான் இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை உள்ள கூப்பிடுவாரு,” என்று கூறிவிட்டு வெளியேறினார்.
அதே நேரம் இரு பெண் காவலர்கள் உள்ளே வந்தனர்.
“சார், வரச்சொன்னீங்களா?” என்று முதல் பெண் காவலர் கேட்க,
“ஆமா, சுதா,” என்று வேல்விழியை கை காட்டி நடந்ததை சொல்லி முடித்தார்.
ஏட்டையா டீ கொண்டு வந்து கொடுக்க,
“உங்களுக்கு…” என்று இருவரிடமும் கேட்க,
“நோ தேங்ஸ் சார்,” என்று இருவருமே மறுத்தனர்.
இன்ஸ்பெக்டர் டீ குடித்துக்கொண்டே, இருவர் மீதும் பார்வையை வைத்தார்.
“சார், இப்ப நாங்க என்ன சார் பண்ணும்?” என்று மற்றொரு பெண் காவலர் கேட்க,
“அந்த பொண்ணை தனியா கூட்டிட்டு போய் விசாரணை பண்ணனும்… கூடவே ரெக்கார்ட் பண்ண மறந்துடாதீங்க,” என்றார் இன்ஸ்பெக்டர்.
இவர்களும் வேல்விழியை தனியாக கூட்டிப் போக வர,
இருவரையும் கண்டு தன் மாமன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“பயப்படாதம்மா, உன்கூட சும்மா பேச தான் வந்தோம்,” என்று இருவரும் சமாதானப்படுத்தினர்.
வெற்றியின் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு “மாமா பயமா இருக்கு எப்ப நம்ம வீட்டுக்கு போறது.. எனக்கு இங்க இருக்கவே புடிக்கல” என்றாள் வேல்விழி.
“போகலாம் வேலு.. அதுக்கு முன்ன இவங்ககிட்ட பேசிட்டு தான் போக முடியும்” என்றான்..
“பயமா இருக்கு மாமா,” என்றாள் கண்கள் கலங்க,
அவள் கண்ணீரை கண்டு அவனுக்கு கவலையாக தான் இருந்தது.. வேற வழி இல்லையே! என்று எண்ணிக்கொண்டு..
“வேலு… அவங்க கூட போயிட்டு வா. பயப்படாத. நடந்ததை மட்டும் சொல்லு,” என்றான் வெற்றி.
அவன் வார்த்தைகள் தைரியம் கொடுத்தாலும், அவள் கால்கள் நடுங்கிக் கொண்டுதான் இருந்தது.
“மாமா…” என்று அவனைப் பார்த்தவளின் கண்களில் ஆயிரம் கேள்விகள்.
கண்களாலே தைரியம் சொல்லி அனுப்பினான்..
அவளின் பதில் இவனுக்கு சாதகமா, பாதகமா என்ற விடை அறியாத கேள்வியுடன் மொத்த குடும்பமும் காத்திருந்தது..
இங்கு இன்ஸ்பெக்டர் வெற்றியை நெருங்கினார்..
“என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லு… உங்க ரெண்டு பேர் வாக்குமூலம் கொஞ்சம் மாறினாலும் நீ ஏழு வருஷம் கலி தின்ன வேண்டி இருக்கும்” என்றார் அவனை சுற்றி வந்து..
“எனக்கு பொய் சொல்லி பழக்கம் இல்லை சார்” என்றான்.
அவன் பதில் எதிரே இருந்தவனுக்கு திமிராக பட, கையை முறுக்கி அவன் முகத்திலே குத்தப் போனான்..
“மாமா” என்று அழுகையோடு வந்து அவனை கட்டிக்கொண்டாள் வேல்விழி..
வந்த கோவத்தில் பெண் காவலர்களை பிடிச்சு கத்தினான் இன்ஸ்பெக்டர்.
“ஒரு சின்ன பொண்ணை உங்களால சமாளிக்க முடியல” என்று பார்வையாலே எரித்தான்..
இங்கு வேல்விழியோ! வெற்றியை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் அவன் இடுப்பை கட்டிக்கொண்டாள்..
“வேலு என்னாச்சு?” என்று அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான்..
“ம்ஹூம்… இங்க வேணாம் மாமா, நம்ம வீட்டுக்கு போயிடலாம். இவங்க எல்லாம் தப்பு தப்பா கேக்குறாங்க” என்று வாயை ஒரு மாறி கோணிக்கொண்டாள் அவள்..
“இங்க பாரும்மா.. எங்களுக்கு பதில் சொல்லாமல் இங்கிருந்து போக முடியாது.. அவனை வெளியே விடவே மாட்டோம்” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும்…
“ஏன் மாமாவை விட மாட்டிங்க? இங்க எனக்கு இருக்கவே பிடிக்கல. நா என் மாமாகூட வீட்டுக்கு போறேன்.. நீங்க அங்க வந்து பேசிக்குங்க” என்று அவரிடம் சொன்னவள், தன் மாமன் கை பிடித்து நகர பார்த்தாள்…
‘இளம்கன்று பயமறியாது’ என்ற வார்த்தை தான் அங்கே நின்றவர்களுக்கு நினைவில் வந்தது..
வெற்றி காலையிலிருந்து இறுகி நின்ற நிலை மாறி, அவன் உதடு புன்னகையை சிந்தியது…
மாமன் நகராமல் இருப்பதை கண்டு, “என்ன மாமா நின்னுட்டு? வா வீட்டுக்கு போகலாம்” என்றாள்..
அவளை நிமிர்ந்து பார்த்தான். இன்னும் குழந்தை முகத்துடன், பூப்போட்ட பாவாடை சட்டையும், நேற்று வாரிய ரெட்டை ஜடையிலிருந்து சில முடி அவள் நெற்றி மட்டும் காதோரம் சுருண்டு நின்றது கண்டு, இதுவரை சிரித்த உதடு இப்போது பூட்டு போட்டுக்கொண்டது…
“நம்ம நடந்ததை சொன்னா தான் இங்கிருந்து போக முடியும் வேலு” என்றான் அவளை பார்த்து…
“ஆனா அவங்க தப்பு தப்பா கேக்குறாங்க.. என் சட்டையை கழட்ட சொல்லுறாங்க” என்றாள். நின்ற கண்ணீர் மீண்டும் அவள் விழிகளில் வழிந்தது..
அவள் சொன்னதை கேட்டு, ‘நெஞ்சில் முள் குத்திய வலி அவனுக்கு.. தான் அவசரப்பட்டு செய்த ஒரு காரியம் அவளுக்கு எந்த நிலையை ஏற்படுத்திருக்கு’ என்று தன்னைதானே கேட்டுக்கொண்டான்..
“நீ போய் அவங்க கேக்குறதுக்கு பதில் சொல்லு. உன் சட்டையில் கை வைக்க மாட்டாங்க” என்றான் வெற்றி…
மூக்கு உறிஞ்சிக்கொ
ண்டு, “அப்ப நீயும் வா மாமா… நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பதில் சொல்லலாம்” என்று அப்பவும் அவன் கையை விடுவேனா என்று அங்கேயிருந்தவர்களை எண்ண வைத்தாள்…