Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 13 ( PART 02 )

 

வெற்றிச்செல்வன் தன் அம்மா மஞ்சுளாவிடமும் அந்தியூர் செல்லப்போவதை சாக்கிட்டு விவரம் சொல்வதற்காக பேசியிருக்க, அவருக்கும் செந்தாமரை எப்பொழுது இங்கு வந்தாள்? பெற்றோருடன் ஏன் இல்லை என்பது போன்ற விவரங்கள் தேவையாய் இருக்க, மேற்கொண்டு மகனிடம் பேச்சை வளர்த்தார், அன்புத் தம்பி முத்துக்குமாரும் பேச்சில் ஐக்கியமாகி இருந்தான்.

 



Advertisement

நேற்றைய பேச்சு வார்த்தைக்கும், இன்றைய பேச்சு வார்த்தைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. அன்னையும், தம்பியும் தன்னை மிகவும் தேடுவதையும், தன் பிரிவால் மிகவும் வாடுவதையும் அவனால் உணர முடிந்தது. சண்டை இந்த வரைக்குமாவது முடிவுக்கு வந்ததே என்று நிம்மதி அடைந்தான். அதற்குக் காரணமானவள் நினைவும் அழையா விருந்தாளியாய் வந்து முகம் புன்னகையைப் பூசியது.

 

‘குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி வந்திருந்த தனக்கு, மீண்டும் குடும்பத்துடன் இணைய வாய்ப்பை உருவாக்கி தந்த பாலமே அவள் தானே!’ அந்த நினைவில் அவன் முகம் அத்தனை மென்மையாய் இருந்தது. காதல் செய்யும் கனவான்களின் தோற்றம் இப்படித்தான் இருக்குமோ? தனிமை தரும் சுகமான நினைவுகளில், கொஞ்சம் மென்மையாக, களையாக! இதுவரை பார்த்திராத தோற்றத்தில்!

Advertisement

 

Advertisement

இலகுவான மனநிலையோடு அந்தியூர் சென்றவன், செந்தாமரையின் பெற்றோரைச் சந்தித்து… அவள் தங்கள் ஊரில் இருப்பதைக் கூறினான். ஆச்சரியமும், நன்றியாக அவனைப் பார்த்தவர்களை பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது.

 

மூத்த மகளின் உண்மை நிலையைக் கூட அறிந்து கொள்ள முடியாமல், அவளைக் காவு தந்து விட்டார்களே என்ற கோபம் கூட இப்பொழுது அவனது செயல்களில் வெளிப்பட மறுத்தது. அவர்களின் தோற்றமும், செய்கையும் அவர்கள் மீது பரிதாபத்தை மட்டுமே ஏற்படுத்தியது.

Advertisement

 

மூத்த மகளை இழந்து, இளைய மகளைத் தொலைத்து… மிகவும் நிலைகுலைந்து போயிருந்தனர். அவர்களிடம் ஆறுதலாகத்தான் அவனால் பேச முடிந்தது.

 

செந்தாமரையின் நலன் மட்டும் தான் அவர்களுக்குப் பிரதானமாக இருந்தது. “நிஜமாவே நல்லா இருக்கா தானே தம்பி…” ஏக்கத்துடன் அம்பிகா கேட்க,

 

“அவளுக்கு எந்த குறையும் இல்லை…” என்று புன்னகைத்தவன், “நீங்க கூட இல்லைங்கிறதை தவிர…” என்று கூறி நிறுத்தினான்.

 

“எங்க மேல கோபம் தம்பி… இல்லைன்னா யாரு கிட்டயும் சொல்லாம போயிருப்பாளா? அவ தோழிகளுக்குக் கூட யாருக்கும் தெரியலையே!” என அம்பிகா அழாத குறையாக கூறினார். மூன்றாம் மனிதர் முன்பு அழுதால், ஆறுமுகத்திற்கு அறவே பிடிக்காது.

 

அழுகையைக் கட்டுப்படுத்தும் அவரது செய்கைக்குக் காரணம் அவனுக்குப் புரிந்தது. என்ன ஒரு புரிதல்? என வியப்பாகக் கூட இருந்தது. அவனின் பெற்றோர்களின் நினைவும் உடனேயே வந்திருந்தது. அப்பாவை இழந்து அம்மா எத்தனை வேதனை படுகிறாரோ? இந்த நேரத்தில் நாமும் உடன் இல்லையே என வருந்தினான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

அவனது முக வாட்டத்தைப் பார்த்து, “ஏன் தம்பி ஒரு மாதிரி இருக்கீங்க? எங்க பொண்ணு நிஜமாவே நல்லா தானே இருக்கா?” என இம்முறை ஆறுமுகமும் அதையே கேட்க,

 

“எந்த குறையும் இல்லைன்னு சொன்னேனே! நீங்க தான் நம்ப மாட்டீங்கறீங்க” எனப் புன்னகைத்தான்.

 

கூடவே, தனது தந்தையைப் பற்றியும் அவரது ஆசையைப் பற்றியும் கூறியவன், தனக்கும் அதில் விருப்பம் என்பதையும் சேர்த்தே கூறினான். தனியாக வந்திருப்பதால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், பாட்டி வயதானவர்கள் அவர்களை இப்பொழுது அலைய வைக்க எனக்கு விருப்பம் இல்லை; அவரும் கொஞ்சம் பழமையில் ஊறியவர்கள், நல்ல காரியத்திற்கு முன் நிற்க ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள் என்றும் விளக்கம் தந்தான்.

 

அம்மாவும், தம்பியும் பஞ்சாபில் வசிக்கிறார்கள் அதனால் அவர்களாலும் இப்பொழுது வரமுடியாமல் போய்விட்டது என்ற தகவலையும் சேர்த்து தந்தான்.

 

தம்பி படித்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் கூறி…கூடவே, இப்பொழுது தான் வகிக்கும் பதவி, இந்த பதவியை விரைவிலேயே விட்டுவிட்டுத் தான் விரும்பும் வேலைக்கு சென்று விடுவேன் என்றும் கூறி, தனது விருப்பமான வேலையைப் பற்றியும் கூறினான்.

 

அவன் கூறிய விஷயங்களிலேயே ஆறுமுகமும், அம்பிகாவும் மிகவும் பிரமித்து போயிருந்தனர். ‘இத்தனை பெரிய இடம்’ எனச் சற்று நெருடலாகவும், தயக்கமாகவும் கூட இருந்தது.

 

அவனோ, அவனுடைய பாட்டி மற்றும் அன்னையிடம் அவர்களை அப்பொழுதே பேசவும் வைத்திருந்தான். அவர்களுக்கு எந்தவித தயக்கமும் தேவை இல்லை என்பது போலப் பேசியே புரிய வைக்க முயன்றான்.

 

இப்படி யாரேனும் ஒருவரைச் சமரசம் செய்தோ, சமாதானம் செய்தோ அவனுக்குப் பல மாதங்கள் ஆகியிருந்தது. முன்பு பரமேஸ்வரன் இருந்தபோது தந்தையைச் சமரசம் செய்வதையே பிரதான வேலையாய் வைத்திருப்பான். ஏன் செந்தாமரை விசயத்திற்குக் கூட அவரை அத்தனை சமாதானம் செய்தது இப்பொழுது அசர்பந்தமாய் நினைவில் வந்தது.

 

அன்று என் சொந்த தந்தையிடம் இந்த பெண்ணை வேண்டாம் என்று சமரசம் செய்தேன். இன்று அதே பெண்ணை எனக்குக் கட்டி வையுங்கள் என்று அவளின் பெற்றோரைச் சமாதானம் செய்கிறேன்!

 

வாழ்க்கை நிச்சயம் விசித்திரம் தான்; இல்லையென்றால் ஒரு பெண்ணால் என் முடிவு தலைகீழாக மாறுமா என்று நினைத்தவனுக்குப் புன்னகை வந்திருந்தது.

 

அவனின் திடீர் புன்னகையைப் பார்த்து, “என்ன தம்பி?” என ஆறுமுகம் கேட்க,

 

“இல்லை. எதுவும் இல்லை… இனி நீங்க தான் சொல்லணும்” எனப் புன்னகையோடே கூறி நிறுத்தினான்.

 

ஆறுமுகமும், அம்பிகாவும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டனர். என்ன வசியம் வைத்தானோ, அவர்களால் யோசித்துச் சொல்கிறோம் என்று கூடச் சொல்ல முடியவில்லை. முழு மனதோடு ஒப்புக் கொண்டனர். ஒற்றை நிபந்தனையுடன்!

 

“எங்க பொண்ணு விருப்பம் கேட்டுட்டு…” என்று ஆறுமுகம் கூற, அதற்கும் சிரித்துக் கொண்டே தான் தலையசைத்தான்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

அவன் புன்னகை வேறு அவர்களை வெகுவாக வசீகரித்தது. ஒருவேளை மகளுக்கும் பிடித்திருக்குமோ என்று கூட, அவனது மலர்ச்சி புதிய செய்தியை அவர்களுக்கு அறிவித்தது.

 

எல்லாம் பேசி முடித்து… கையோடு அவர்களை அழைத்துக் கொண்டு சேலத்திற்கும் வந்துவிட்டான். வந்தவர்கள் இதோ… செந்தாமரையின் அழைப்பை ஏற்று இப்பொழுது வீட்டினுள்ளும் அமர்ந்திருக்கிறார்கள்.

 

வந்தவள் பெற்றவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தாலும், பார்வை அவளையும் மீறி அவனிடம் சென்று சென்று மீண்டது.

 

‘என்ன?’ என்று அவன் ஜாடையாகக் கேட்க, ஒன்றும் இல்லை எனத் தலையசைத்தாள். ஆனாலும் அதையே தான் மீண்டும் மீண்டும் செய்தாள்.

 

“சரி நீங்க இருங்க… நான் கிளம்பறேன். ஒரு நாள் பாட்டியை கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி வெற்றிச்செல்வன் கிளம்ப நினைக்க, அவனை ஏறிட்டுப் பார்த்து பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

 

‘இவளுக்கு என்ன தான் வேணுமாம்?’ சத்தியமாக அவனுக்குப் புரியவில்லை. இப்பொழுது அவளுடைய பெற்றோர்களும் இருக்கும் சமயம், எப்படி அவளுடன் பேச என்றும் அவனுக்கு புரியவில்லை.

 

அவள் நிலைமை புரிந்ததோ என்னவோ, “சரி போயிட்டு வாங்க தம்பி. ரொம்ப நன்றி” என வெற்றிச்செல்வனிடம் கூறிய ஆறுமுகம், “கொஞ்சம் நாங்க படுத்து ஓய்வெடுக்கிறோம் மா…” எனச் செந்தாமரையிடம் கூறி, அம்பிகாவையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டனர்.

 

அவர்கள் உள்ளே சொன்னதை உறுதிப் படுத்தியவன், “என்ன மாஹி?” என அவள் இத்தனை நேரம் செய்த அலப்பறையில் புன்னகையோடே கேட்க,

 

சற்றே நெருங்கி வந்தவள், “எனக்காகவா…?” என விழி விரித்து ஆசையாகக் கேட்டாள். விழியசைவில் விருப்பத்தை நிறைவேற்றுபவன் மீது கொள்ளை கொள்ளையாய் பிரியம் வந்தது. முன்பே அவனைப் பிடிக்கும் தான். ஆனால், அந்த விருப்பம் பலமடங்கு பல்கிப் பெருகியதை போல அவளுக்குள் ஒரு எண்ணம்.

 

அவள் விழிகளின் ஆசையில் புன்னகை மேலும் விரியப் பதில் சொல்லாமல் நின்றிருந்தான்.

 

“சிரிச்சா…?” என அவள் பதில் வேண்டும் என்பது போல மெல்லிய அடத்துடன் கேட்க,

 

“சிரிச்சா….” எனத் தாடையைத் தட்டி யோசித்தவன், “சிரிப்பு வருதுன்னு அர்த்தம்” என்றான் இன்னும் விரிந்த புன்னகையாய்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

“யோவ்… போ போ…” என அலட்சியம் காட்டியவளிடம்,

 

“அதென்ன ஊரே என்னை மதிக்குது, நீ ரொம்ப சர்வ சாதாரணமா… யோவ் சொல்லற? எப்படி?” என இம்முறை அவன் சற்று ஆச்சரியமாக, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டான்.

 

“நீங்க மட்டும் நான் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்க… நான் மட்டும் சொல்லணுமாக்கும்” என அதற்கும் நொடித்தாள்.

 

“பதில் தெரிஞ்சே கேட்கிறவங்களுக்கு… பதில் அவசியமே இல்லை” என்றான் அவளது விழிகளுக்குள் ஊடுருவியபடி.

 

அவனது பார்வையில் முகத்தைத் திருப்பியபடி, ‘இதுக்கெல்லாம் குறைச்சலே இல்லை’ என்று முணுமுணுத்தவளைத் துளியும் கண்டு கொள்ளாமல் பதிலை சொல்லு என்று அழுத்தமாக நின்றிருந்தான்.

 

“அது என்னவோ… ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் வருது… ” என்று இப்பொழுதும் முணுமுணுத்தாள்.

 

இந்த பதிலும் பொருந்தவில்லையே என்பது போல அவன் பார்க்க… “இன்னொருமுறை சொல்லறேனே!” என்றாள் கெஞ்சுதலாக!

 

“பெரிய ஹிஸ்டரி இருக்கும் போல…” என அவன் கூறிய விதத்தில் அவளுக்கு முகம் சிவந்து விட்டது.

 

“கண்டிப்பா பெருசு தான் போலயே!” என மீண்டும் அவன் கூற, அவள் கொஞ்சம் முறைத்து நின்றாள்.

 

“ஹ்ம்ம் ஆரம்பத்துல இருந்தே அப்படின்னா…” எனத் தாடையைத் தட்டி வெகு தீவிரமாக யோசித்தவன், “நேருல ஒரு முறை பார்த்ததோட சரி… மத்த நாளெல்லாம் திருட்டுத் தனமா நீ பார்க்க, அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி நான் பார்க்க… சோ அப்பவும் வாய்ப்பில்லை… தூக்கத்தைக் கெடுத்திருக்கவும் வாய்ப்பில்லை போல தான் தெரியுது. அப்ப கனவுல தான்…” என அவளின் எண்ணவோட்டத்தை வெகு துல்லியமாகக் கணித்தவன்,

 

“கனவுல கொஞ்சம் கெட்ட பையன் போலயே!” எனக் கண்ணடித்து அவளைக் கலங்கி விழிக்க வைத்து வெளியேறி இருந்தான்.

 

‘போய்யா…’ என மனதிற்குள் செல்லமாய் சலித்துக் கொண்ட செந்தாமரையின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது. மாலை இருவருக்குள்ளும் நடக்கவிருக்கும் வாக்குவாதம் தெரியாமல் இருவரின் மனமும் வெகு இலகுவாக இருந்தது.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!