Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 13 ( PART 01 )

 

செந்தாமரைக்குத் தமக்கை அன்பழகியின் நினைவு வாட்டி வதைக்க, மீண்டும் தியானம், யோகாசனத்தின் துணை கொண்டு மெல்ல மீண்டாள். சுந்தரேசன் குடும்பத்தினர் மீது சந்தேகம் வந்ததிலிருந்து, தன்னை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி வந்திருந்தது அவளுக்கு. முன்பே சற்று தைரியமான பெண் தான் என்றாலும், தன் தைரியத்தையும், துணிவையும், தன்னம்பிக்கையையும் முடிந்த வரை நற்சிந்தனைகள், நல்ல போதனைகள், யோகாசனம், தியானம் கொண்டு வளர்த்தாள்.

 



Advertisement

அதன்பிறகு சிறிது தேறியவள் வேலைக்குச் சென்றுவர தன் முயற்சிகளின் மூலம் நல்ல தெளிவு பெற்றிருந்தாள். எது நடந்தாலும் துணிந்து எதிர்கொள்ளும் மனதைரியம் வந்திருந்தது அவளுக்கு. வாழ்க்கை வலிக்க வலிக்க கற்றுக் கொடுத்த பாடங்கள் ஆயிற்றே!

 

எதற்காகவோ காத்திருப்பது போலவே, எப்பொழுதும் சுதாரிப்புடனேயே இருந்தாள். அவள் பயந்தபடியே அந்த பேரிடியும் விரைவிலேயே வந்தது.

Advertisement

 

Advertisement

சுந்தரேசன் வீட்டினர் பெற்றோரைக் குற்றவுணர்விலேயே வைத்திருந்து… பணத்திற்கு அடி போடுவார்கள் என்று அவள் எண்ணியிருக்க, அவர்களோ செந்தாமரைக்கே அடிபோட்டிருந்தனர்.

 

ஆம், ‘சுந்தரேசனுக்குச் செந்தாமரையை மணந்து கொடுங்கள். என் பையன் வாழ்க்கை உங்க பெண்ணால தான இப்படி அந்தரத்துல தொங்குது’ என்று ஏதேதோ பேசி பெற்றவர்களுக்கு மறுப்பு சொல்லும் உத்தேசத்தை வரவிடாமல், அவர்களது மூளையை வெகுவாக சலவை செய்துவிட்டுப் போயினர்.

Advertisement

 

உள் அறையில் அமர்ந்தபடி, கேட்டுக்கொண்டிருந்த செந்தாமரைக்குப் பலத்த அதிர்ச்சி. இனி பெற்றோரின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்று அவளுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது.

 

கெட்டதிலும் நல்லதாக, சுந்தரேசனின் பெற்றோர்கள் வருகிறார்கள் என்றதுமே, “நீ உள்ளேயே இரு தாமரை. அவங்க முன்னாடி எதுவும் பேசி வெச்சுடாத!” என்று அன்னை அம்பிகா அவளை அறையினுள் இருக்கச் சொல்லியிருந்தாள். போனமுறை அவர்களைக் குறை கூறியதால் இப்படி சொல்கிறார்கள் என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால், இப்பொழுது அப்படி உள்ளே இருந்ததால் தானே, இவர்களின் வண்டவாளம் தெரியவந்தது என்று நினைத்து கொஞ்சம் ஆசுவாசமும் வந்திருந்தது.

 

இனி இந்த பெற்றோரை வைத்துக் கொண்டு என்ன அழகாக எதிர்த்து நிற்க முடியும் என்று அவளுக்கு ஆயாசமாக இருந்தது. வீணாகப் பேசி போராடி, தோற்பதற்கு இங்கிருந்து தப்பித்து விடுவதே நல்லது. அதுவும் காலம் தாழ்த்தாமல்! என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

 

திருமண பேச்சு தொடங்குகிறது என்னும் சத்தத்திற்கு முன்பே கிளம்பி விட வேண்டும், இல்லையேல் சுந்தரேசன் வீட்டில், ‘என் மகனைக் கூப்பிட்டு வெச்சு அசிங்கப்படுத்திட்டீங்க’ எனப் பிரச்சனையைக் கிளப்பவும் வாய்ப்புகள் அதிகம் என துரிதமாகச் செயல்பட்டாள்.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

விவரங்கள் புரியாத பெற்றவர்களை நினைக்க மனம் கனக்கத்தான் செய்தது. ஆனால், அவர்களுக்குப் புரிய வைக்கவும் முடியாதே! அவர்களது அறியாமையில் தன் உயிரையும் பணயம் வைத்து, அவர்களை நட்டாற்றில் விடுவதைக் காட்டிலும் சிறிது காலம் பிரிந்திருப்பது எவ்வளவோ மேலானது என்று எண்ணினாள்.

 

இந்த சூழலைக் கையாண்டால், பெற்றவர்களுக்குச் சுந்தரேசன் குடும்பத்தானைப்பற்றிப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கும் என்று கூட அவளுக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் யோசித்து, யார் உதவியையும் நாடாமல், யாரிடமும் சொல்லாமல் தன் சொந்த ஊரிலிருந்து கிளம்ப முடிவெடுத்தாள்.

 

“அக்காவின் நினைவிலிருந்து மீளவே முடியவில்லை. தனிமை தேவைப்படுகிறது. எங்கிருந்தாலும் பத்திரமாக இருப்பேன்” என்னும் கடிதத்தையும், தனது கைப்பேசியையும் அவளது அறையில் வைத்துவிட்டு பயணப்பட்டிருந்தாள்.

 

சுந்தரேசனோடு தொடங்கிய திருமண பேச்சு பிடிக்காமல் தான், நாம் செல்கிறோம் என்பதைப் பெற்றோர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியும் . இருந்தாலும், சொல்ல ஒரு காரணம் வேண்டுமல்லவா?

 

தைரியமாகக் கிளம்பியவளுக்கு எங்கு செல்வதென்று புரியவில்லை. பெண்களுக்கான பாதுகாப்பு குறித்துத் தான் அவளுக்கு நன்றாகத் தெரியுமே. தீர யோசித்தவளுக்குத் தீர்வாகத் தோன்றியது தான் பரமேஸ்வரன் ஐயா. இந்த இக்கட்டிலிருந்து அவரால் நிச்சயம் அவளைப் பாதுகாப்பாகக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தாள்.

 

ஆனால், நேரடியாக அங்குச் சென்று விட்டால், பெற்றவர்களோ, சுந்தரேசனோ தேடும்பொழுது மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், நம்பியூரிலிருந்து நேரடியாகச் சேலத்திற்கு செல்லாமல், மதுரைக்குக் கிளம்பிவிட்டாள். மதுரைக்கும் நேரடி பேருந்தை தேர்ந்தெடுக்காமல் எங்கெங்கோ சுற்றிச் சுற்றி சென்றிருந்தாள். மாட்டிக்கொள்ளக்கூடாதே என்பதில் அத்தனை கவனம்.

 

மதுரையிலிருக்கும் ஆசிரமத்தில் வேலை இருப்பதாகக் கிடைத்த தகவலின் படி அங்குச் சென்றவள், அங்கு அனைத்தும் திருப்தியாக இருக்கவே, அங்கேயே தங்கி இரண்டு மாதங்கள் வேலை செய்தாள். புது வேலை, புது சூழல் அனைத்தும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது, ஆனால் அங்கிருக்கும் ஆதரவற்றோர்களின் முன்னிலையில் தன் சிரமம் எல்லாம் பெரிதே இல்லை எனப் புரியக் கூடிய சீக்கிரமே அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

 

ஒருவழியாக தன் வீட்டினரால் தன்னை பின்தொடர முடியவில்லை என்ற உறுதி வந்த பின்னே தான், சேலத்திற்குக் கிளம்பினாள். அந்தியூரிலிருந்து சேலம் வெறும் இரண்டு மணி நேரப் பயணத் தொலைவு தான், அதனால் எளிதில் கண்டுபிடித்து விடுவார்களோ என்னும் அச்சம் அவளுக்கு. அதனாலேயே முதலில் மதுரை வந்தது.

 

பரமேஸ்வரன் ஐயா பாதுகாப்பு தருவார் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், சொந்த பெற்றோர்கள் பின்னாடியே வரும்பொழுது… பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைக்கத் தானே பார்ப்பார். இப்பொழுதானால், பெற்றவர்களால் நம்மைக் கண்டுபிடிக்க முடியவில்லை, உடனடியாக நம்மைத் தேடி வரவும் மாட்டார்கள் என்னும் ஆசுவாசமும், நிம்மதியும் வந்திருக்க… இனி சேலம் சென்று அங்கே தங்கி விடலாம் என்று எண்ணினாள்.

 

அங்கு சென்று மெல்ல தன் பிரச்சனைகளை விளக்கி, நம்பியூரில் சுந்தரேசனுக்கு வேறொரு திருமணம் முடியும் வரை அடைக்கலம் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். சுந்தரேசனுக்குத் திருமணம் முடிந்ததை விசாரிக்கவும் பரமேஸ்வரன் ஐயாவிற்குத் தெரிந்தவர்கள் நம்பியூரில் இருப்பார்கள் அவர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று தெளிவாக யோசித்தே சேலத்திற்குக் கிளம்பி வந்தாள்.

 

நினைவுகளெல்லாம் அலை போல மேலெழுந்து கொண்டே இருக்க… சொந்த ஊரையும், பெற்றவர்களையும், சகோதரியையும் பற்றி யோசித்தபடியே உறங்கியிருந்தாள் செந்தாமரை.

 

அடிக்கடி இந்த நினைவுகளெல்லாம் வருவது தான். அதுவும் இந்த தனிமை… சற்று அதிகமாகவே அவர்களது நினைவுகளைத் தூண்டி விடும். அதோடு இந்த இரவின் தனிமையில் அழையா விருந்தாளியாய் வரும் இன்னொருவனின் ஞாபகம் வெற்றிச்செல்வனுடையது. இன்று தான் வெகுநாளைக்குப் பிறகு அவனை நினைக்க மறந்து உறங்கியிருக்கிறாள். ஒருவேளை, அவன் அவளது உறக்கத்தில் நுழையும் வல்லமை கொண்டவனோ என்னவோ?

 

மறுநாள் காலையில் புத்துணர்வும் இல்லாமல், சோர்வும் இல்லாமல் ஒருவித மத்திய நிலையில் அவளுக்குப் பொழுது புலர்ந்திருந்தது.

 

வழக்கமான சோர்வுகள் ஒருபுறமிருந்தாலும், இப்பொழுது பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்ல மனம் வராமல் வேறொரு சோர்வு மனதை வதைத்தது. வினோதினிக்கென்று இன்னும் எந்த தீர்வையும் யோசிக்காததால் எழுந்த சோர்வு.

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

 

எந்த தீர்வை யோசித்து, செயல்படுத்த நினைத்தாலும் அதில் ஏதாவது ஒரு இடைச்செருகல் வருவது போலிருக்கச் செந்தாமரை மிகவும் சோர்ந்து போனாள். இன்று சற்று ஓய்வெடுத்து, மற்ற விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து, தீர யோசிப்போம்… ஏதாவது வழி கிடைக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

 

தன் எண்ணத்தை செயல்படுத்த விடுமுறை கேட்டு விட்டு, வீட்டிலிருந்தாள். நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று மனதை ஒருநிலைப்படுத்தி சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தாள். மனம் ஆசுவாசப்பட்டது.

 

தனக்குத் தோன்றும் தீர்வுகளை எல்லாம் மனதிற்குள் அலசி ஆராய்ந்து நேரத்தைக் கடத்தினாள். நேரம் கடந்திருக்க, மாலை ஐந்து மணி ஆகியிருந்தது.

 

அந்த நேரத்தில் யாரோ வீட்டின் கதவைத் தட்ட, யோசனையோடே சென்றவள், வெளியில் நிச்சயம் தன் பெற்றோரை எதிர்பார்க்கவில்லை.

 

“அம்மா…” கேவலாகக் கூறி தாவி அணைத்திருந்தாள். “அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா… எனக்கு வேற வழி தெரியலைப்பா” என அழுதபடியே தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, சமாதானம் பேசினாள்.

 

“செந்தாமரை…” பெற்றோரின் பின்னிருந்து அதட்டலாகப் பேசியது நம் வெற்றிச்செல்வனே!

 

அந்த அதட்டலில் சற்று தெளிந்தவள், இப்பொழுது பேந்த பேந்த விழித்தாள். ‘பெற்றவர்கள் எப்படி இங்கே? இவன் எப்படி இவர்களுடன்?’ அது புரியாமல் அவள் விழிக்க,

 

அழுது கரைந்த விழிகளோடு இப்படியொரு பாவனையை காட்டியது வெற்றிச்செல்வனை வெகுவாக ஈர்த்தது. மிகவும் ரசனைக்குரிய அந்த காட்சியை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.

 

அம்பிகா மகளிடம், “எப்படி இருக்கத் தாமரை?” என்று கண்ணீருடன் கேட்க, சுத்தம் என்று தோன்றியது வெற்றிக்கு.

 

அவள் தான் வாசலிலேயே நிற்க வைத்துப் பேசுகிறாள் என்று பார்த்தால், இவர்களுக்கும் உள்ளே போகும் எண்ணம் இல்லை போல என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.

 

அந்த நேரத்தில் சரியாக வெற்றிச்செல்வனின் முகம் பார்த்த செந்தாமரைக்கு, அவன் முகம் போன போக்கில் சட்டென்று சூழல் விளங்கிவிட்டது.

 

“அச்சோ… முதல்ல உள்ள வாங்கம்மா…”, “வாங்கப்பா…”, “வாங்க…” என்று ஒவ்வொருவரையும் வரவேற்றவளின் இறுதி வார்த்தை வாயிற்குள் தந்தியடித்தது.

 

‘என்னடா இது? நம்மகிட்ட தயங்கியெல்லாம் பேச மாட்டாளே?’ அவள் வார்த்தையில் அவனுக்கு வெகு ஆச்சரியமாக இருந்தது.

 

நடந்தது இதுதான்… முந்தைய நாள் இரவு, செந்தாமரையிடம் பேசியதை வைத்து அவள் தனது பெற்றோர்களைத் தேடுகிறாளோ என்னும் எண்ணம் வெற்றிச்செல்வனுக்கு வந்திருந்தது. அவர்களை நேரில் சந்தித்து, அழைத்து வர வேண்டும் என்று அப்பொழுதே முடிவெடுத்திருந்தான்.

 

பரமேஸ்வரன் முன்பே செந்தாமரையை பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெற்றிச்செல்வனுக்கு அனுப்பியிருந்ததால், அவளது விலாசம் முதலியவற்றைத் தேட வேண்டிய அவசியம் எப்போதுமே அவனுக்கு இருந்ததில்லை.

 

அதைக்கொண்டே, செந்தாமரை இங்குத் தனித்து வந்த பொழுது, என்னவோ ஏதோ என்னும் பதற்றம்… அவளைக் கண்டு கொண்டவுடனேயே வெகு இயல்பாகவே வந்திருக்க, அவளைப்பற்றி பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜென்சி மூலம் விசாரணை செய்திருந்தான். ஊரில் நடந்த பிரச்சனை முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பே அவள் ஊரை விட்டு வந்திருந்தது வரை அத்தனை விவரங்களும் கிடைத்திருந்தது.

 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

எதுவோ இடிக்க, திருமண பிரச்சனை, அவளுடைய அக்கா இறந்தது குறித்து மேலும் விசாரிக்கச் சொல்லியிருந்தான். அதில் சுந்தரேசன் குடும்பத்தினர் அன்பழகிக்கு செய்த கொடுமைகள் வெட்ட வெளிச்சமாகியிருக்க, வெற்றச்செல்வனால் அதனைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒரு பெண்ணுக்கு நடந்த மிகப்பெரிய அநீதி அல்லவா அது! கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் நேரில் சென்று சுந்தரேசனை நைய்ய புடைத்து விட்டு வந்த பிறகே அவனுக்கு மனம் சற்று ஆறுதலடைந்தது.

 

சுந்தரேசனின் சொந்த ஊரில் பல பேர் முன்னிலையில் வெற்றிச்செல்வனால் வாங்கிய அடி அவனுக்குப் பலத்த அவமானமாகி இருந்தது. அதன்பிறகு வெகு சில நாட்களிலேயே சுந்தரேசன் நம்பியூரிலிருந்து மாயமாகி இருந்தான். அவன் எங்கே என்பது ஊரிலுள்ள யாருக்குமே இன்றுவரை தெரியவில்லை. சிம்லா’வில் சிலரின் தனிப்பட்ட கவனிப்பில் அவன் இருப்பான் என்று யார் தான் நினைக்கக்கூடும்? ஏன் அங்கிருப்பவர்களுக்கே தாங்கள் வசிக்கும் இடம் எதுவென்று தெரியாதே!

 

செந்தாமரை இங்கு வருவதற்கு முன்பு இரண்டு மாதங்கள் எங்கிருந்தாள் என்று வெற்றிச்செல்வனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால் தான், அவள் கர்ப்பம் என்று கூறியதும் அந்த பொய்யை நம்பியிருந்தான்.

 

வெற்றிச்செல்வன் செந்தாமரையின் பெற்றோரைக் காண வேண்டும் என்று முடிவெடுத்திருந்தபடியால், இன்று காலையிலேயே அவனது பாட்டி ராஜேஸ்வரியிடம் ஒப்புதல் வாங்கி அந்தியூர் கிளம்பிச் சென்றிருந்தான். ராஜேஸ்வரி அம்மாவிற்கும் அது தானே கோரிக்கை. ஆகவே, பேரனை முழு மனதோடு அனுப்பி வைத்தார். அவருக்கும் தலை பேரனின் திருமணம் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்னும் ஆசை தானே!

 

ஆனால், திருமணத்தின் பிறகு வரவிருக்கும் சிக்கல்களை அவர் உணர வாய்ப்பில்லையே! ஏன் அங்கிருக்கும் யாருக்கும் தான் வருங்காலம் பற்றித் தெரியப்போகிறது? திருமணத்தின் அடிப்படை நம்பிக்கை, அது பொய்க்கும் பொழுதில்… அங்கே விழும் விரிசல் இயல்புதானே? காலம் இந்த இக்கட்டிலிருந்தும் இருவரையும் மீள வைக்கும் என்று நம்பிக்கை பிறந்தாலும், இந்த இக்கட்டைத் தடுக்க முடியாது என்பதே நிதர்சனம்!

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!