Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 20 ( PART 02 )

 

“ஹ்ம்ம் நல்லா இருக்கா டி… நீ பிரீயானதும் போன் பண்ணி பேசு அவகிட்ட… ” என மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள்,

 



Advertisement

“சரி அண்ணன் வந்து எங்களை அடிச்சு துரத்தும் முன்ன ஓடி போயிடறோம்… அவரோட பொண்டாட்டியை நாங்களே பிடிச்சு வெச்சிருக்கோம்” எனக் கேலி பேசி கிளம்ப எத்தனித்தவர்களை,

 

“உதை விழும்… சாப்பிட்டு கிளம்புங்க…” என உபசரித்தே அனுப்பி வைத்தாள். என்னதான் இலகுவானதாக நினைத்துக் கொண்டாலும், மனதிற்குள் சந்தேகங்கள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

Advertisement

 

Advertisement

கணவனிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தாள். குழப்ப ரேகைகளுடன் சுற்றித் திரியும் மனைவியை வெற்றிச்செல்வனும் கவனித்தே இருந்தான். ஆனால், அதை கேட்பதற்கும் தனிமை வேண்டுமே… அவளைப் பார்வையால் பின்தொடர்ந்தபடி மட்டுமே இருக்க முடிந்தது. அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.

 

செந்தாமரை ஒருவழியாக, கோபமாக இருக்கிறோம். இத்தனை உணர்ச்சிவசப்பட்ட சமயம் இந்த விஷயத்தைப் பேசத் தொடங்கினால், வீண் வாக்குவாதங்கள் எழலாம் என்னும் முடிவுக்கு வந்து… அந்த விஷயத்தைப் பற்றி தற்பொழுது பேச வேண்டாம் என்று முடிவெடுத்தாள்.

Advertisement

 

இரவின் தனிமையில் வெற்றிச்செல்வன் அவளது சோர்வு, குழப்பம் குறித்துக் கேட்க, “பிரண்ட்ஸ் ஞாபகம்’ங்க…” என்று பேச்சை மாற்றி விட்டாள். புதுமணத் தம்பதிகள் என்பதால், மறு வீடு சென்று வந்த பிறகு, அதிக அலைச்சல். குலதெய்வ கோயில் வழிபாடு, பொங்கல் வைப்பது, தாலி பிரித்துப் போடுவது… என்று நாட்கள் இழுத்துக் கொள்ள, அதன்பிறகு அனைவரும் பஞ்சாப் கிளம்பினார்கள். அங்கு ரிசெப்ஷன் நடக்கவிருந்தது.

 

அங்குப் போனதும், புது இடம், புது மொழி எனச் செந்தாமரை திருதிருவென முழித்தபடியே திரிந்தாள். வெற்றியின் நட்பு வட்டங்கள் வேறு அவளிடம் பேசுவதற்கு ஆர்வமாக இருக்க, இவளுக்கு ஆங்கிலம் ஓரளவு புரிந்தாலும் பேச வராது. ஹிந்தி சுத்தம்.

 

 

திக்கித்திணறி ஆங்கிலத்தில் தான் பதில் சொன்னாள். அவளது தடுமாற்றத்தை யாரும் பெரிது படுத்தாததே அவளுக்கு பெரிய ஆறுதல். வெற்றியோ, முத்துவோ யாரேனும் ஒருவர், அவள் தடுமாறும் போதெல்லாம் உதவுவதற்கென்று அவளுடனேயே இருந்தார்கள். அது அவளுக்கு ஆசுவாசத்தையும், தைரியத்தையும் தந்தது.

 

“தம்பி இப்படி நாலு நாள் பேசினா, நானும் இங்கிலீஸ் பழகிடுவேன் போல!” எனப் புன்னகைத்தபடி முத்துவிடம் செந்தாமரை சொல்ல,

 

“அண்ணி அப்ப ஒன்னு செய்யலாம். இங்க இருந்து வெற்றி மட்டும் போகட்டும். நீங்க எங்களோட கொஞ்ச நாள் இருங்களேன். நானும், அம்மாவும் தனியா தான் இருப்போம் அண்ணி…” என்று இறுதி வார்த்தையைச் சற்று சோர்வாகச் சொல்ல, வளர்ந்த சிறுவன் என அவன் பேச்சிலேயே புரிந்தது. அவனது ஏக்கங்களும், இழப்புகளும் அதிகம். என்ன யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டான். ஆனால், செந்தாமரை மிகவும் பாசமாக, உரிமையாகப் பேச… தன்னையறியாமல் அவளிடம் கேட்கத் தோன்றியது.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவன் கேட்டதும், அந்த பாவனையில் அவளுக்கு மறுக்கத் தோன்றவே இல்லை. ஏன் வெற்றியிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று கூட அவளால் அந்த நேரத்தில் சொல்ல முடியவில்லை. உடனே மண்டையை உருட்டி விட்டாள்.

 

“கண்டிப்பா தம்பி… இங்கேயே கொஞ்ச நாள் இருக்கேன்” என்று சொல்ல,

 

முத்துவின் முகத்தில் அத்தனை பிரகாசம். “அண்ணி, நிஜமாவா… ரொம்ப ஹேப்பி அண்ணி… ஆமா, எப்படியும் நீங்க இங்க தானே கொஞ்ச நாள் அப்பறம் வரணும். இப்பவே இங்க எல்லாம் பழகிக்கலாம்…” என ஆர்ப்பாட்டமாகக் கூறியவன், “இருங்க, அம்மா கிட்டயும், அந்த தடியன் கிட்டயும் சொல்லிட்டு வரேன்” எனச் செல்ல,

 

வெற்றிச்செல்வனிடம் விஷயம் போனதும், முறைப்புடனேயே அவள் முன் வந்து நின்றான்.

 

“என்னடி சொன்ன அவன்கிட்ட…” என முறைக்க,

 

இந்த ‘டி’ அவனிடம் புதிது. அதை எண்ணியபடியே, “கொஞ்ச நாள் தானேங்க…” எனக் கெஞ்சுதலாகக் கேட்க,

 

“கொஞ்ச நாள்’ன்னாலும்… என்னை விட்டுட்டு நீ இருந்தும்பியா? நீ இல்லாம நான் என்ன பண்ணறது…” என்று பொரிந்தவனைக் கண்டு சிரித்தாள்.

 

“என்ன என்ன சிரிப்பு?”

 

“கல்யாணம் முடிஞ்சு பத்து நாள் தான் ஆச்சுங்க. அதுக்கு முன்ன நான் இல்லாம தான் நீங்க எல்லாம் பண்ணிட்டு இருந்தீங்க…” எனச் சொல்லிச் சிரிக்க,

 

முறைத்தவன், எதுவும் பேசாமல் அறைக்குப் போய்விட்டான். கோபம் வந்துடுச்சா… என பின்னாடியே போனவள், சமாதானம் செய்யவே வெகுநேரம் பிடித்தது. அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் முத்துவிற்காக அரை மனதாக ஒப்புக் கொண்டான். சீக்கிரம் வந்துடணும் என்னும் நிபந்தனையோடு.

 

வெற்றிச்செல்வனுக்கு அன்று வந்த ஒரு கைப்பேசி அழைப்பில், ‘சேலம் சந்தனபாண்டியார்’ பற்றி இவன் சேகரிக்கச் சொன்ன விஷயங்கள் கிடைத்திருக்க… கூடுதல் தகவலாக, இவன் தந்தை பரமேஸ்வரன் கொலை தான் செய்யப் பட்டார். அதற்கு மாரியப்பனுக்குத் துணை நின்றது, சந்தனபாண்டி என்னும் தகவலும் கிடைத்திருந்தது. ஆனால், கொலைக்கான காரணம் தான் இன்னும் தெரியவில்லை. வெறும் ஊர்ப்பிரச்சனை மட்டும் காரணமாக இருந்திருக்கும் என அவனால் நம்ப முடியவில்லை.

 

ஏற்கனவே, மாரியப்பன் தான் முடக்கப்பட்டதைத் தாங்க மாட்டாமல் விபத்து போலத் தற்கொலை செய்திருந்தான். ஆம், வேண்டுமென்றே டிரைவரை விடுத்து… தானே வாகனம் ஓட்டி சென்று மலைப் பகுதியிலிருந்து உருண்டு இறந்திருந்தான். மாரியப்பன் விஷயம் முடிந்ததால், அடுத்து அந்த சந்தனபாண்டியைத் தான் கவனிக்க வேண்டும் என்று வெற்றி முடிவெடுத்துக் கொண்டான். தன் தந்தையைக் கொன்றவர்களை அப்படியே விட்டுவிட முடியாது அவனால்! அது எத்தனை செல்வாக்கானார்களாக இருந்தாலும்!

 

[the_ad id=”6605″]

 

 

இங்கிருந்தபடியே மேலும் சில வேலைகளை தந்தவன், அதன்பிறகு இங்கிருந்து செல்லும் நாளுக்காகக் காத்திருந்தான். இந்த சமயத்தில் செந்தாமரை இங்கிருப்பதே நல்லது என்று அவனுக்கும் தோன்றியது. ஏனென்றால் அவன் செய்வதை, அவனின் மாற்றத்தை அவள் தெரிந்து கொண்டால் பிரச்சனை ஆகிவிடும், பயப்படுவாள் என்று நினைத்தான்.

 

இங்கிருந்து எப்பொழுது செல்வோம் என்ற எண்ணம் இருந்ததாலோ என்னவோ அவனால் ரிசப்ஷனிலும் சரி, சிம்லாவிலும் சரி முழு மனதோடு ஒட்ட முடியவில்லை. அவனுடைய செய்கைகளாலும், சிம்லாவில் நடந்த சம்பவத்தாலும்… ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த செந்தாமரைக்கு, அந்த சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.

 

*** தவறை உணர்வதென்ன அத்தனை எளிதா? அதுவும் கொடும் பாதகர்களுக்கு! சிம்லா குழுவால், முதலில் தேர்ந்தெடுத்த பத்து நபர்களும் இங்கு ஆரம்பக் காலத்தில் வந்தவர்கள் என்பதோடு, அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாகத் தரவேண்டிய பணமும், அவர்களின் உழைப்பின் ஊதியத்தில் தயாராகியிருந்தது.

 

கெளதம், மதனின் புண்ணியத்தில் ஏற்கனவே அரசல், புரசலாக அங்கிருப்பவர்களுக்கு இங்கு வந்ததன் காரணம் விளங்கியிருந்தது.

 

இப்பொழுது அந்த பத்து பேரும் தனிமையில்… போதும் போதும் என்றளவில் தண்டனை அனுபவித்து விட்டார்கள். “தெரியாம செய்துட்டோம் சார். தப்பு தான். சபலம் வந்துடுச்சு சார். மன்னிச்சுடுங்க சார். விட்டுடுங்க சார். இனி இப்படி எல்லாம் கனவுல கூட நினைக்க மாட்டோம் சார்” என அவர்கள் கதறிய கதறல்கள் ஏராளம்.

 

இதையெல்லாம் சொல்லி அங்கிருந்த காவல் காரர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, “நம்பவே முடியலை டா…” என்றான் ஒருவன்.

 

“அடி உதைக்குப் பயந்து… திருந்துனதா சொல்லறாங்களோ…” என்று கேட்டான் இன்னொருவன்.

 

“இல்லைடா… இங்க நாம கிட்டத்தட்ட நகரத்தைத் தான் காட்டி அனுப்பறோம். இனியும் திருந்தாட்டி, அவனுங்களை காலத்துக்கும் பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட வேண்டியது தான்… அதுக்கு தான, இந்த முதல்கட்ட ஜெயில் தண்டனையே!”

 

[the_ad id=”6605″]

 

 

“சரியா சொன்ன டா. இவனுங்க எல்லாம் வெளியில நடமாடி என்ன செய்ய போறாங்க பொறுக்கிங்க…” என ஆமோதித்தான் கேள்வி எழுப்பியவன். அவர்கள் அனைவருக்கும் மிகுந்த திருப்தி. ஒரு கட்ட தண்டனை முடிவுக்கு வரவிருக்கிறதே!

 

அந்த கூட்டத்தினரின் முதல் கட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்கள் எண்ணியதன் படியே, ட்ரஸ்ட் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளை, தமிழகத்திலிருந்த குழு மூலம் வழங்கினார்கள்.

 

இங்கு இந்த பத்து போரையும் மூன்று மாதங்கள் சிறப்பு கவனிப்பின் பிறகு, அனுப்பலாம் என எண்ணியவர்களுக்கு, முதல் மாதம் முடியும் தறுவாயிலேயே பொய் கேஸ்கள் தயாராக இருக்க, சரி இப்பொழுதே அனுப்பி விடுவோம் என அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுத்தார்கள்.

 

அங்கிருந்தவர்களிடம், ‘இங்கு மாட்டியதையோ, இவ்விடத்தைப் பற்றியோ யாரிடமும் சொல்லி விடக்கூடாது’ என்று மிரட்டி, ‘உங்களைச் சிறையில் தள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். தண்டனை முடியும் முன்பு, ஜாமீன் அது இதென்று முடிவெடுத்தால், மீண்டும் இங்கேயே கடத்தி வந்து விடுவோம்’ என்று சொல்லி… அவர்களை அங்கிருந்து அனுப்புவதற்காகத் தயார் செய்தார்கள். அனைவரையும் ஆழ்ந்த மயக்கத்தில் வைத்தபடியே ஒவ்வொருவராகத் தமிழகத்துக்குக் கடத்தினார்கள்.

 

தமிழகத்தில் சென்றவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தினரின் திட்டப்படி சிறைத் தண்டனையில் அடைக்கப் பட்டனர்.

 

சபலத்தில் செய்த தவறு, அதெல்லாம் எங்கே தெரியப்போகிறது… யார் தண்டிக்கப் போகிறார்கள் என்று அசால்ட்டாக இருந்தவர்கள் எல்லாம்… கிடைத்த, கிடைத்துக் கொண்டிருக்கிற, கிடைக்கப் போகும் தண்டனைகள்… இதனால் வாழ்க்கையில் இழந்தவைகள்… இனி தங்களின் எதிர்காலம்… என நினைத்து வெகுவாக கலங்கினார்கள்.

 

இந்த கலக்கம் அவர்களின் தவறுகள் உணரப்பட்டதாலோ! தவறுக்குத் தண்டனை என்றால்… அதை அனுபவிக்கவும் முடிந்தால்… நிச்சயம் அந்த தவறுகள் மீண்டும் செய்யத் தோன்றாது தானே! சூடு கண்ட பூனைகளின் நிலையைப் போல!

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!