Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 22 ( PART 01 )

 

வெற்றிச்செல்வன் செந்தாமரையைப் பஞ்சாபிலேயே விட்டுவிட்டு சேலத்திற்கு புறப்படத் தயாரானான். அவன் அறியாமல், அவள் பார்வை அவன்மீது ஆராய்ச்சியாய் வலம் வந்து கொண்டிருந்தது.

 



Advertisement

‘உன்னை விட்டுவிட்டு இருக்கவே முடியாது’ என்று பினாத்தியவன், இப்பொழுது ‘எத்தனை நாள் இங்கு இருக்க வேண்டும்? எப்பொழுது வந்து அழைத்துச் செல்வான்? என்பது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறான்’ என மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

 

‘சரி நாமாகக் கேட்கக் கூடாது. என்ன சொல்லிவிட்டுப் போகிறான் என்று பார்ப்போம்’ என மனைவி கணவனுக்குச் சோதனையை வைக்க, அந்த சோதனையில் அழகாய் தோற்றுக் கொண்டிருந்தான் மன்னவன்.

Advertisement

 

Advertisement

‘இவ்வளவு தானா டா நீ?’ என சோர்ந்து போய் வழியனுப்பி வைத்தாள். கணவன் நம் மீது பாசமாக இருக்கிறான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், இப்படி… ஒருவித பொறுப்பற்ற நிலை? மனைவியைப் பற்றி யோசிக்காத நிலை? அதிலும் புது மனைவி? இதெல்லாம் தான் அவளைப் புரட்டியது.

 

அவள் வைத்த தேர்வில், சோதனையில் கணவன் குளறுபடி செய்யாமல் வென்றிருந்தால், அவள் இத்தனை அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள். அவனோ இவளது வருகை குறித்து எதையும் பேசாமல் போயிருக்க, அது அவளை வெகுவாக பாதித்தது. அந்த பாதிப்பில், பெரும்பாலான நேரங்களில்… அவள் மனதில் முளையிட்ட சந்தேகங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

Advertisement

 

அதற்குத் தக்க, வெற்றிச்செல்வனும் சேலம் சென்றது முதல் மிகவும் பரபரப்பாகி விட்டான். மாரியப்பன் விஷயத்தில் ஒரு பங்கு வேலை செய்தால், சந்தன பாண்டி விஷயத்தில் பத்து பங்கு வேலைகள் பார்க்க வேண்டியதாய் இருந்தது. இந்த கலவரத்தில் செந்தாமரையிடம் வெகு குறைவான பேச்சு வார்த்தைகளே! அது போதாதா மங்கையவளின் மனதில் சஞ்சலங்களை அதிகரிக்கச் செய்ய… ஆனால், அவனுக்கு இங்கு பற்பல வேலைகள். அதன் கவனத்தில், அவனால் வேறு எதிலும் சிந்தனையைச் செலுத்த முடியாமல் போனது.

 

தன் தந்தை பரமேஸ்வரன், செய்த பெரும் தவறே… சட்டம், ஒழுங்கு, நீதி, நேர்மை என பார்த்து… மிகவும் சிரமப்பட்டு தகவல்கள் சேகரித்து… சட்டப்படி அணுகி தண்டனை வாங்கித்தர முயற்சித்தது தான்! ஆதாரங்கள் குறைவாக இருக்கும்போது நாம் முயற்சி செய்வதே கூடாது என்பது அவன் எண்ணம். போதாக்குறைக்கு அவர்தான் செய்கிறார் என்பது எதிரில் இருப்பவருக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து செய்திருந்தார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

இதுபோன்ற கயவர்களுக்குச் சாதாரண ஆதாரங்கள் மட்டும் போதாதே! அதை உடைத்தெறிய, சட்டத்தை வளைக்க அவர்களுக்கு எளிதாக போய்விடுமே! அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருக்க வேண்டும். அது நியாய, தர்மம் பார்த்துச் சேகரித்தால் கிடைத்திடாது. அதிரடி வேலைகளில் இறங்கினால் மட்டுமே கிடைக்கும். குறிப்பாகத் தேடுதல் வெகு தீவிரமாக இருக்க வேண்டும். அதோடு எந்த விஷயத்தில் மாட்டி விட்டால், நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்!

 

மாரியப்பன் விஷயத்தில் வெற்றி அதைத்தான் செய்தான். பல வலுவான ஆதாரங்களைத் திரட்டினான். வெற்றிதான் செய்கிறான் என்கிற சந்தேகம் எழாமலேயே, அழகாக மாட்டி விட்டான். அவமானம், தண்டனை, நிர்கதியான நிலை என அனைத்து பரிசுகளையும் வாரி வழங்கினான். அதில் துவண்டு தானே அவன் அழிந்தது. வெற்றி சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை. முள்ளை முள்ளால் எடுத்தான் அவ்வளவே!

 

அவமானம், அதுதான் பெரிய மனிதர்களுக்கு மிகப்பெரிய தண்டனை! அங்கிருந்து தான் அழிவை தொடக்க வேண்டும். ஒருவன் பல தொழில்கள் செய்யலாம், பல செல்வாக்குடன் உலா வரலாம், பல பேரைத் தெரிந்து வைத்திருக்கலாம், பல பதவிகளை வகிக்கலாம். அவன் செய்யும் தொழில்களில் பற்பல ஊழல்கள் புதைந்திருக்கலாம். ஆனால், அந்த ஊழல்கள் எல்லாம் அவனுக்கு அவ்வளவு எளிதில் அவமானத்தைப் பரிசளிக்காது. ஆனால், சிறு சலனங்கள், சறுக்கல்கள் வெளியே தெரிந்து விட்டால் போதும்! அதன் விளைவுகள் வரையறைகளைத் தாண்டிப் போய்விடும்.

 

‘நீ இப்படிப்பட்டவனா?’ என்னும் பேச்சு, பார்வை போதும்… மொத்தமும் காலி என்னும் நிலைக்குத் தள்ளிவிடும். இங்கு வெற்றியும் அதில் தான் வேர் பிடிக்க ஆரம்பித்தான்.

 

வெறுமனே சொத்தை ஏமாற்றுவது… அரசாங்கத்தை ஏமாற்றி வரி செலுத்தாமல் இருப்பது இதெல்லாம் சந்தன பாண்டியை முடக்க போதாது. எளிதாக உடைத்து விடுவான். ஆகவே, அவன் பெண்கள் விஷயத்தில் மோசம் என்பது குறித்த ஆதாரங்கள் இன்னும் வலுவாக இருக்கும் எனச் சேகரிக்கச் சொல்லியிருந்தான்.

 

ஓரளவு ஆதாரங்கள் கிடைத்தது. சந்தன பாண்டியருக்குச் சொந்தமாக ஒரு கல்லூரி இருக்கிறது. அங்கு வேலை செய்யும் இளம் பெண்களைச் சீண்டுவதை… அந்த பெண்களைக் கொண்டே வீடியோ எடுக்க வைத்தாயிற்று. ஆனால், வெற்றிக்கு இது மட்டும் போதாது… இன்னும் இன்னும் நிறைய வேண்டும். இப்பொழுது அந்த தேடலிலும், அலைச்சலிலும் அவன்!

 

பரமேஸ்வரன், மாரியப்பனை மாட்டி விட்டது அவனது ஊழல் தொடர்பாக! ஆனால், சந்தன பாண்டியை மாட்டி விட நினைத்தது, ஒரு இளம்பெண்ணைக் காணவில்லை என்னும் விஷயத்தில். அந்த பிரச்சனை பரமேஸ்வரன் தனது வேலையை விட்டுவிட்டு சேலம் வந்த புதிதிலேயே தொடங்கியது. மாரியப்பன் விஷயத்தைக் கூட கிடப்பில் போட்டு விட்டு, இதில் கவனம் செலுத்தி… எதுவுமே அவரால் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட நிற்கதி என்னும் நிலை! அந்த பெண்ணையும் மீட்க முடியவில்லை. அவன்தான் என்னும் ஆதாரமும் கிடைக்கவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

 

அதன் பிறகு என்ன ஆனதோ, பரமேஸ்வரன் சந்தன பாண்டி விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யாமல்… ஊர் விஷயத்திலும், மாரியப்பன் விஷயத்திலும் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். மீண்டும் என்ன நினைத்தாரோ, அதேபோல வேறு ஒரு பெண்ணுக்கும் சந்தன பாண்டி மூலம் ஆபத்து என்று புரிய, அந்த பெண்ணை மீட்பதிலும் அவருக்கு தோல்வியே! அதன் பிறகு, சற்று ஆதாரங்களை மட்டும் வெகு சிரமப்பட்டுத் திரட்டி வைத்திருந்தவரை தான் சந்தன பாண்டியும், மாரியப்பனும் தீர்த்து கட்டியிருந்தனர். இது தான் சமீபத்தில் அவன் பஞ்சாபில் இருந்தபோது அவனுக்கு கிடைத்த செய்தி.

 

ஏற்கனவே சந்தன பாண்டி பெண்கள் விஷயத்தில் மோசம் என்று தெரிந்தது தான். தந்தைக்கும், அவனுக்குமான பகையே அது குறித்து தான் எனப் புரியவும்… வெற்றிச்செல்வன், பெண்கள் தொடர்பான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொல்லிச் சொல்லிவிட்டிருந்தான். அதுபோல இப்பொழுது கிடைத்தும் விட்டிருந்தது.

 

இப்பொழுது மேலும் சேகரிப்பதற்காக, தந்தை என்ன ஆதாரங்கள் சேகரித்தார்? பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என்பது போல, வீட்டிலும், மில்லிலும் அலசிக் கொண்டிருந்தான்.ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தான் வைத்த ஆட்கள் மூலமே, அந்த பெண்கள் யார் என்கிற விவரத்தைச் சேகரிக்கச் சொல்லியிருந்தான்.

 

இப்படி நாட்கள் விரைய, செந்தாமரையை அவன் பெரிதாகத் தேடவில்லை. செந்தாமரை ஆரம்ப நாட்களில், பகலில் மஞ்சுளாவோடு அலைவது, மாலையானதும் முத்து, அவனுடைய நட்பு வட்டத்துடன் அலைவது… நேரம் கிடைக்கும் போது யாரவது ஒருவருடன் புது புது இடங்களைச் சுற்றிப் பார்ப்பது… என வெகு சுவாரஸ்யமாகத் தான் கழித்தாள்.

 

ஆனால், நாட்கள் செல்ல செல்ல… கணவனை வெகுவாக தேடினாள். ஆனால், அவனோ இவளிடம் பேசுவதற்கும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தான். இவளும் எத்தனை நாட்கள் தான் பஞ்சாபிலேயே கடத்த முடியும்? பொறுமை பறந்திருந்தது. ஒருபுறம் சந்தேகம் வேறு படுத்தி எடுத்தது. முன்பே அந்த சம்பவங்கள் குறித்துப் பேசியிருக்க வேண்டுமோ என மனம் அடித்துக் கொண்டது. இப்பொழுது மனம் தேவையில்லாமல் கண்டதையும், அதிகமாக யோசிக்க… இனி இங்கிருப்பது சரிவராது என்று முடிவெடுத்தாள்.

 

வெற்றியிடம் கூட எதுவும் சொல்லாமல், அங்கிருந்து தனியாகவே புறப்படத் திட்டமிட்டு… மஞ்சுளாவிடமும், முத்துவிடமும் சேலம் செல்ல வேண்டும் என்று கூறினாள்.

 

“என்ன அண்ணி, அந்த தடியன் வரட்டும்… நீங்க எப்படி தனியா?” முத்துவின் பேச்சு அவளிடம் சுத்தமாக எடுபடவில்லை.

 

“அவருக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் தம்பி. அதோட இப்ப தானே போனாரு. இதுக்காக மறுபடியும் அலைய வைக்கணுமா?”

 

“என்னம்மா இன்னும் கொஞ்ச நாள் இரேன்” என்று அன்போடு கேட்ட மஞ்சுளாவைச் சமாளிப்பது தான் அவளுக்கு அதிக சிரமமாக இருந்தது.

 

“அத்தை இங்க தானே வர போறேன். சீக்கிரம் அங்க எல்லாத்தையும் சரி பண்ணிட்டு, உங்க மகனோட இங்கேயே வந்துடறேன். முடிஞ்சா உங்க மாமியாரையும் கூட்டிட்டு வந்துடறேன்”

 

மஞ்சுளாவைச் சமாதானம் செய்ய புதுப்புது கதைகளைச் சொன்னாள் இளையவள். “அதெல்லாம் நடக்காது மா. அவங்களுக்கு இங்க இருக்க முடியாது”

 

[the_ad id=”6605″]

 

 

 

“அதெல்லாம் முன்ன… இப்போ தான் நான் வந்திருக்கேன் இல்ல. எதையாவது பேசி அவங்களை நம்ம கூடவே இருக்க வெச்சுடலாம். தனியா விட வேண்டாம் அத்தை” என்றாள் பொறுப்புடன்.

 

கூடவே, “இல்லாட்டி தம்பி உன் படிப்பை முடிச்சதும் நம்ம எல்லாம் அங்க போயிடுவோமா?” என்று மாற்று வழியைக் கூற,

 

“அண்ணி நான் பிசினஸ் செய்யணும்?” என்று செல்லமாக முறுக்கினான் இளையவன்.

 

“ஏன் சேலத்துல பிசினஸ் செய்ய முடியாதா?”

 

“எனக்கு அங்க பழக்கம் இல்லையே அண்ணி…”

 

“பழகிக்கோ” என முத்துக்குக் கூறியவள், “ஏன் அத்தை எதுவும் சொல்ல மாட்டீறீங்க? உங்களுக்கு அங்க வர விருப்பம் இல்லையா?” என மாமியாரிடம் கேட்டாள்.

 

“அப்படி இல்லைடா. அவங்களுக்கு என்னைப் பிடிக்காது. காதல் திருமணம் தான… அந்த கோபம் நிறைய… அதுனால போக்குவரத்து கம்மி தான்” என மஞ்சுளா வெகுவாக தயங்கினார்.

 

“உங்க மகன் கூட தான் கட்டினா என்னைத் தான் கட்டுவேன்னு பிடிவாதம் செஞ்சாரு. உங்க மாமியார் ஏத்துக்கிட்டாங்களே! இப்ப அவங்க முன்ன மாதிரி இல்லை அத்தை” என மாமியாரிடம் கூறியவளின் குரல்… வெற்றியைப் பற்றி, அவன் செய்கையைப் பற்றி பேசும்போது தன்னையும் அறியாமல் மென்மையையும், பெருமிதத்தையும், வெக்கத்தையும் பூசியிருந்தது.

 

அவன் அப்படித்தானே செய்தான்! தான் தான் வேண்டும் என்பதில் தான் எத்தனை உறுதி! இப்படிச் சிறு சிறு வேலைகளில் கவிழ்த்திருந்தவனிடம் அவளுக்கு மயக்கம் நிறையவே இருக்கிறது. என்ன அதையும் கெடுக்க, எதையும் சொதப்பி வைத்து விடுகிறான்.

 

“உன் விஷயம் வேற தாமரை. நீ அவங்க பார்க்காட்டியும், அவங்க இனம் தான். ஆனா, நான் குலம், கோத்திரம் தெரியாத அனாதை” என்று கூறும்போது அவரது குரலில் வலி தெரிந்தது. அதிகமாக இந்த வார்த்தைகளால் காயம் பட்டிருப்பார் என்பதை அவர் சொல்லும்போதே புரிந்து கொள்ள முடிந்தது.

 

ஆதரவாக அவரை அணைத்துக் கொண்டவள், “அத்தை… நான் என்ன இனம்ன்னு அப்ப அவங்களுக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனா, அப்ப அவங்க பார்வையில நான் யாருமில்லாதவ தான். அப்பவும் என்னை ஏத்துக்கிட்டாங்க. முன்னாடி ஏதோ கோபத்துல உங்களைப் பேசி இருப்பாங்க அத்தை. மாமா, அவங்களுக்கு ஒரே மகன் இல்லையா! அந்த கோபமும், ஆதங்கமும் இருக்கத்தானே செய்யும். அதுக்காக இந்த வயசுல… தனியா நின்னுட்ட அவங்களை ஒதுக்கிறது… பாவம் அத்தை தனியா என்ன செய்வாங்க?” என ஆறுதலாக கூறினாள்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!